செவ்வாய், 1 ஜனவரி, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 27

இரண்டாவது ஸ்கந்தம் - மூன்றாம் அத்தியாயம்

‘நாராயணா’ என்னாத நாவென்ன நாவே!

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்
ச்ரியம் இச்சேத் ஹுதாசனாத்
சங்கராத் ஜ்ஞானம் இச்சேத்
மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தனாத் 

– என்ற ச்லோகம் சாஸ்திரப் பிரஸித்தம். 

இந்த ச்லோகத்திலிருந்து இவ்வுலக வாழ்வில் எதை எதை நாம் எந்தெந்தத் தேவைக்காக, எந்தெந்த தேவதையை ஆராதிக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. ஆரோக்கியத்துக்கு ஸூர்ய பகவானையும், செல்வச் செழிப்புக்கு அக்னி தேவனையும், ஞானம் பெருக ருத்ரனையும், முக்தி கிட்டுவதற்கு ஜனார்த்தனனையும் பிரார்த்திக்க வேண்டும். வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அந்தந்தப் பயனுக்காக, அவ்வவற்றுக்குரிய தேவதைகளை வேண்டுகிறோம். ஆனால், இந்த வாழ்க்கை முடியும் தருவாயில் எதைக் கேட்க வேண்டும்? எதை விரும்ப வேண்டும்? எதைக் கடைப்பிடிக்க வேண்டும்? – இதுவே பரீக்ஷித்தின் உள்ளத்தில் எழுந்த கேள்வி. 

சுகாசாரியர் பதில் கூறுகிறார் : “பரீக்ஷித் மஹாராஜனே! மரிக்கும் தருவாயில் உள்ளவன் எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டாய். நல்ல கேள்வி. இன்னின்ன விஷயத்தை வேண்டுபவன், இன்னின்னதை இன்னின்ன தேவதையிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். ப்ரஹ்ம தேஜஸை அடைய விரும்புபவன், நான்முகக் கடவுளையும்; குலங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன் இந்திரனையும்; உணவும், கேளிக்கையும் நன்றாக இருக்க வேண்டுபவன் அதிதி தேவியையும்; செழிப்பாக இருக்க நினைப்பவன் அக்னி பகவானையும்; நீண்ட ஆயுளை வேண்டுபவன், அஸ்வினி தேவர்களையும்; அழகை ஆசைப்படுபவன் கந்தர்வர்களையும்; அனைவருக்கும் தலைவனாக இருக்க நினைப்பவன், ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்வரூபனான பகவானையும்; இறுதியாக வைராக்கியத்தை விரும்புபவன் பரம புருஷனான ஸர்வேச்வரன் ஸ்ரீமன் நாராயணனையும் பூஜிக்க வேண்டும். 

“இவை ஒவ்வொன்றும் அவரவர் சிரத்தையைப் பொறுத்து ஒவ்வொரு பலனைக் கொடுக்கலாம். ஆனால், இவற்றை விட ஸாது ஸமாகமம் – அதாவது பக்தர்களுடைய குழுமத்தில் இருத்தல், மிக மிக உயர்ந்தது. அப்படி இருந்தால், அதுவே நம்முடைய உள்ளத்தில் மெதுமெதுவே பக்தியை வளர்க்கும். பக்தியின் மஹாத்மியத்தாலே, விருப்பையும், வெறுப்பையும் வெற்றி கொள்கிறோம். விருப்பு, வெறுப்புகள் அற்ற உள்ளம் தூய்மை அடையும். 

“சித்த சுத்தி ஏற்படுமானால், அந்தத் தூய உள்ளத்தில்தான் பெருமான் எப்போதும் உகப்புடன் வீற்றிருக்கிறார். ஆகவே, ஸாதுக்களோடே கூடியிருத்தல் – அனைத்தையும் விட முக்கியமாகிறது. அவர்களோடு உண்டான தொடர்பு ஒரு ரஸ குளிகையால் எந்த உலோகத்தைத் தொட்டாலும், அது எவ்வாறு பொன்னாக மாறுமோ, அதே போல, அவர்களோடு உண்டான தொடர்பு நம்மையும் புனிதப்படுத்த வல்லது.

“பரீக்ஷித்தே! தாங்கள் இப்போது பல ஸாதுக்களோடே அமர்ந்திருக்கிறீர். உமக்கு பகவத் கதையைச் சொல்ல ஆசைப்பட்டோம். சொல்கிறோம்” என்றார் ஸ்ரீ சுகர். இவ்விடத்தில் சௌனகர் முதலான ரிஷிகள், சுகாசாரியாருடைய பெருமையைக் கூறுகிறார்கள். கூடவே, இவ்வுலகத்தில் நாம் பெரியது, உயர்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்தும் எவ்வளவு தாழ்ந்தவை, எது உண்மையில் உயர்ந்தது என்பதையும் கூறினர். 

பரீக்ஷித் சிறு பிராயம் முதலே பகவானுடைய திருநாமங்களைச் சொல்லி வளர்ந்தவன்.வேறு பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடாமல், பெருமாளுடைய விக்ரஹங்களையே வைத்துக் கொண்டு விளையாடியவன். எப்படி இலக்குவனுக்கு அவன் பிறந்த நாள் முதலாகவே ராம பக்தியோ, நம்மாழ்வாருக்குப் பிறந்த நாள் தொடங்கியே கிருஷ்ண பக்தியோ, ஆண்டாள் அவதரித்த போதிலிருந்தே, சிறு குழந்தையாக இருந்த காலத்திலேயே, எப்படி பெருமானை அடையத் துடித்தாளோ, அதே போல பிறக்கும்போதே, பக்தியோடு பிறந்தான் பரீக்ஷித். இப்போது அவனுடன் அவனுடைய பக்தியும் வளர்ந்து விட்டது.

ஆனால், இந்த ஸம்ஸாரத்தில் கர்மங்களுக்கு வசப்பட்டு இருந்தபடியால், முனிவரிடத்தில் அபசாரப்பட்டான். அதே காரணத்துக்காக முனி குமாரனிடத்தில் சாபம் பெற்றான். ஆனால், உடனே தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து வருந்தினான். அதுதான் பக்தி நமக்குக் கொடுக்கும் பண்பாடு. இவ்வுலகத்தில் இருக்கும் வரை நாம் அறியாமல் சில குற்றங்களைப் புரியலாம். ஒரு பக்தன் அதை உணர்ந்து கொண்டு, தன்னைத் திருத்திக் கொள்கிறான்.திருந்தி தன் செயலுக்கு வருந்துபவனை பெருமான் உடனே மன்னிக்கிறான். ஆனால் பக்தியில்லாமல் போகுமானால், நம் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கு எளிதில் வாராது. 

மேலும் சௌனகர் கூறுகிறார் : 

“ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் நூறு ஆண்டுகள். அதையும் முழுமையாக நாம் வாழ இயலவில்லை. இருக்கும் நேரத்துக்குள் நாம் பகவானது திவ்யமான கதைகளைக் கேட்க வேண்டும். பகவான் நமக்குத் தன்னைப் பற்றிய கதைகளைப் பேசவும், கேட்கவும் நாக்கையும், காதுகளையும், அவனைப் போற்றித் துதிப்பதற்கு நாவினையும், அவனுக்கும் அவனது அடியார்களுக்கும் தொண்டு புரிவதற்கு கைகளையும், கால்களையும், அருளியுள்ளார். ஒருவேளை காதுகள் பெருமானுடைய வைபவங்களைக் கேட்காமலே போகுமானால், அவை பாம்புப் புற்றுக்குச் சமமானவை. நம்முடைய நாக்கு, பகவானைப் பற்றிப் பேசாமல் இருக்குமானால், அது தவளை நாக்குக்குச் சமமானது. நம் தலை பெருமானை வணங்காமல், ஆனால் பல்வகை பட்டுத் தலைபாகைகளையும், தங்கக் கிரீடத்தையும் சூடிக் கொள்ளுமானால் அவை தலைக்குப் பாரமாக இருக்குமே தவிர, உண்மையான அலங்காரமாக இருக்காது. நம் கைகள் பெருமானை நோக்கிக் குவியவில்லையானால், பிணத்தின் கைகளே அவை. நம் கண்கள், கண்ணனுடைய வடிவழகை சேவிக்கவில்லையானால், மயிற் பீலியில் இருக்கும் கண்கள் போல் பயனற்றவை. நம் கால்கள் பெருமான் ஸன்னிதானத்தை நோக்கி நடக்கவில்லையானால், அவை நகரவியலா மரத்தின் வேர்களே. நம்முடைய மூக்கு பகவான் திருவடியில் அர்ச்சிக்கப் பெற்ற துளஸியின் நறுமணத்தை முகராமல் போனால், அது இருந்தே பயனில்லை. அது சுவாசம் இழந்த பிணத்தின் மூக்கிற்குச் சமமானது. 

பெருமானுடைய கதைகளைக் கேட்டு, “ஆடி ஆடி, அகங்கரைந்து, இசை பாடிப் பாடி, கண்ணீர் மல்கி, நாடி நாடி ‘நரசிங்கா’ என்று வாடி வாடும்இவ்வாள் நுதலே” – என்று நம்மாழ்வார் பாடியபடியே, கண்களிலிருந்து நீர் பெருக, கால்கள் தள்ளாட, உள்ளம் உருக, பகவானிடத்தில் ஈடுபட வேண்டும். நம் கை கால் முதலானவை பெருமானையே நாடி அவனது பேரன்பில் ஈடுபட்டால், அவன் கதைகளைக் கேட்கும்போதே, உள்ளம் உருகி நிற்போம். 

திருமங்கையாழ்வார், 
நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிகண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே 
– என்று பெரிய திருமொழியில் (11-7-2) அருள்கிறார். உலகைத் தாவி அளந்த திருவிக்கிரப் பெருமானுடைய கதைகளைக் கேட்கும் செவிகளே செவிகள். அன்றேல் அவை வெறும் துளைகள்தான் என்று வெறுத்தோதுகிறார். அதனால்தான் குலசேகரப் பெருமாளும் தன்னுடைய ‘முகுந்த மாலை’யில் –

“ஏ நாக்கே! கேசவனைப் பாடு. மனமே! முராரியைப் போற்று. இரு கரங்களே! அச்சுதனை நன்கு அர்ச்சிப்பாயாக! செவிகளிரண்டே! அச்சுதனின் அழகிய கதைகளைக் கேட்பாயாக! இரு கண்களே! கண்ணனையே எங்கும் காண்பாயாக! கால்களிரண்டே! பெருமான் ஸன்னிதானத்தை நோக்கி நடப்பாயாக! மூக்கே! ஹரியின் ஆலயத்தை அலங்கரிக்கும் துளஸியை முகர்வாயாக. தலையே! புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவனான பகவான் அதோக்ஷஜனை வணங்குவாயாக!” என்னும் பொருள் தரும் ச்லோகமாக – 

ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முரரிபும் 
சேதோ பஜ ஸ்ரீதரம்
பாணித்வந்த்வ! ஸமர்ச்சய அச்யுதகதா
ச்ரோத்ர த்வய த்வம் ச்ருணு

க்ருஷ்ணம் லோகய லோசனத்வய!
ஹரேர் கச்சாங்க்ரி யுக்மாலயம் 
ஜிக்ர க்ராண! முகுந்தபாத துளஸீம் மூர்த்தன்!
நம அதோக்ஷஜம் 

– என்று பாடியருளினார். ஆக, பெரியோர்கள் அனைவரும் நமக்குச் சொன்னது பகவத் கதையைக் கேட்க, கண்ணனைக் காண, அவன் துளஸியை நுகரவே நமக்குப் புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதே! இந்தத் தத்துவத்தை உள்ளபடி உணர்ந்து கொண்ட பரீக்ஷித், தன் புலன்கள் அனைத்தையும் பெருமானிடத்தில் செலுத்த வேண்டும் என்கிற விருப்பத்தாலே, சுகரிடத்தில் வினவுகிறான். ‘நீர், உம்முடைய முன்னோர்களிடத்தில் கேட்ட அந்தக் கதைகளை அப்படியே சொல்வீராக! அவற்றைக் கேட்க ஆவலாக உள்ளேன்’ என்றான். சுகாசாரியாருக்கோ, பேரானந்தம். இப்படி ஆர்வமே உருவான ஒரு சீடன் கிடைத்தானே! இனி அவர் விடுவாரா? பக்தி வெள்ளமிடும் பகவத் கதை அவர் மனக்கண் முன் விரிகிறது. 

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக