இரண்டாவது ஸ்கந்தம் - நான்காம் அத்தியாயம்
உலக சிருஷ்டியைப் பற்றிய பரீக்ஷித்தின் கேள்வி
கண்ணனே பரமாத்மா என்ற உண்மையில் உறுதி கொண்டிருந்தான் பரீக்ஷித். மேலும் மேலும் அவனைப் பற்றிக் கேட்டால்தானே பக்தி வளரும். அப்போதுதானே, உபாஸனம் (இடையறாத சிந்தனை) செய்யலாம்! உபாஸனம் செய்தால்தானே, நம்முடைய அனாதி காலமான பாபங்கள் விலகும்! பாபங்கள் விலகினால் முக்தி பெறுதல் எளிதாகும். எனவே, கண்ணனுடைய கதைகளைக் கேட்பதிலும், அவன் குணங்களை அனுபவிப்பதிலுமே உயர்ந்தோர்கள் ஈடுபடுகிறார்கள். பரீக்ஷித் முதலில் ஒரு கேள்வி கேட்டான். ‘பெருமான் அனைத்துலகுக்கும் ஒரே கடவுள். அவனே பரமாத்மா என்று கூறுகிறீரே! உலகம் அனைத்தையும் அவன்தான் படைத்தான்; ஜகத்துக்கே காரணம்; ஆகையால் அவன் ஒருவன்தான் அனைவரிலும் உயர்ந்தவன்; பரமாத்மா என்றெல்லாம் கூறுகிறீரே! பகவான் எப்படிப் படைக்கிறார்? படைத்த உலகத்தை எப்படிக் காக்கிறார்? கடைசியாக எப்படித் தன்னுள் லயிக்கச் செய்கிறார்? ச்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் – படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் பகவான் எப்படிச் செய்கிறார்? இதையும் தாங்களே கூற வேண்டும்.
பூய ஏவ விவித்ஸாமி பகவான் ஆத்ம மாயயா
யதேதம் ஸ்ருஜதே விச்வம் துர்விபாவ்ய மதீச்வரை:
(ஸ்ரீபாக : 2-4-6)
‘பகவானே அவதரித்து எத்தனையோ சாஸ்திரங்களை உபதேசிக்கிறார். நம்மோடு விளையாடுகிறார். மேலும் அனைத்து தேவதைகளுக்கும் அந்தர்யாமியாக இருந்து, அவரவர்களைச் செயல்புரிய வைக்கிறார். இவை அனைத்தையும் பெருமான் எப்படிச் செய்கிறார்? எதைக் கருவியாகக் கொண்டு சிருஷ்டிக்கிறார்? சிருஷ்டிக்கும்போது எது மூலப் பொருள்? பகவான் எந்த இடத்தில் இருந்து கொண்டு சிருஷ்டிப்பார்? அவருடைய படைப்பின்பயன் யாது? இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தப் ப்ரகிருதியில் ஸத்வம், தமஸ், ரஜஸ் - என்ற முக்குணங்கள் இணைபிரியாமல் உள்ளனவே! இவற்றைப் படைக்கும் பெருமானுக்கும், அவை உண்டோ? ப்ரகிருதியின் குணங்களாகிய இந்த மூன்று குணங்களை பெருமானும் தன்னிடத்தில் கொண்டிருக்கிறாரா? இதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்’ என்று கேட்டான்.
சூத பௌராணிகர் கூறுகிறார் : ‘இப்படி, பரீக்ஷித் கேட்க ஆனந்தப்பட்ட சுகாசாரியர், ரிஷிகேசனான பெருமானின் கதையைக் கூற முற்பட்டார். சுகர் கூறுகிறார்:
ஸங்கரஷ்ணன், ப்ரத்யும்னன், அனிருத்தன்
– என்ற மூன்று நிலைகளை எடுத்துக் கொண்டு பெருமான் முறையே அழிக்கிறான், காக்கிறான், படைக்கிறான். அவனை முதற்கண் வணங்குகிறேன். பகவானுடைய கதையைக் கூறும்போது, அவன் அருள் இல்லாமல் என்னால் பேசுவதற்கு இயலாது. பரமஹம்ஸர்களான முற்றும் துறந்த முனிவர்களாலே தேடப்படுபவன் எம்பெருமான். அவனை வணங்கி வேண்டுகிறேன். ‘அகலில் அகலும், அணுகில் அணுகும்’ – பக்தர்கள் அணுகி வந்தால், பெருமான் மெய்யே அருள் புரிகிறான். மன உறுதியில் விலகிப் போனால், அப்படிப்பட்டவர்களிடத்திலிருந்து விலகி விடுகிறான்.இப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குகிறேன். வாக்கினால், மனத்தினால், செயலினால், தெரிந்தும், எழுதியும், வாசித்தும், பூஜித்தும், நோற்றும், நாம் யாரைத் தொழ வேண்டுமோ அப்படிப்பட்டவனான பெருமானை நமஸ்கரிக்கிறேன்.
இந்த எம்பெருமான் நமது அனாதிகால பாவங்களைத் தொலைத்து, இந்த ஸம்ஸாரத்தையே விலக்கி, நமக்கு முக்தி கொடுக்கும் சிறப்புடையவன். மோக்ஷம் நல்கும் அந்த முகுந்தனை வணங்கிக் கொள்கிறேன். இவ்வுலகத்தில் எந்த தர்மம் செய்யப்பட்டாலும், பெருமானிடத்தில் ஸமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையேல், அது பயனற்றதாகிப் போகும். இப்படி அனைத்து தர்மங்களையும், நற்செயல்களையும், ஸ்தோத்திரங்களையும் தன் அருட்பார்வையில் வைத்துக் கொண்டிருக்கும் முழு முதற் கடவுளான எம்பெருமானை வணங்குகிறேன். அவனே ‘ஸ்ரீ’ என்று அழைக்கப்படும் திருமாமகளின் மணாளன். ஸ்ரீயப்பதியாய், யக்ஞங்களுக்கு எல்லாம் தலைவனாய், பிரஜைகளுக்கெல்லாம் பதியாய் இருக்கும் எம்பெருமானே, அடியேன் நன்கு பேசும்படி அருளட்டும். பெருமானுடைய அருள் இருந்தால்தானே, நினைக்கவே முடியும். அருள் இருந்தால்தானே நினைத்ததைப் பேச முடியும். அருளாலேதானே பேசுவது, மற்றவர்களுக்குப் புரியும். ஆதியில் பகவான் ப்ரஹ்மாவை சிருஷ்டிக்க எண்ணினான். தன் உள்ளத்தாலே ஸங்கல்பித்து, நான்முகனாகிய பிரமனைப் படைத்தான். பின் அவன் மூலமாக உலகனைத்திலும், வேதங்கள் பரவ வேண்டும் என்பதற்காக அவனுடைய மனைவியாக, ஸரஸ்வதி தேவியையும் படைத்தான். அவர்களுடைய அருளும் அடியேனுக்கு இருந்து இந்த உயர்ந்த கதையைப் பேசக்கடவேன்.
நமஸ்தஸ்மை பகவதே
வாஸுதேவாய வேதஸே|
பபுர்ஜ்ஞானமயம் ஸௌம்யாயன்
முகாம்புருஹாஸவம்:||
(ஸ்ரீ பாக : 2-4-24)
அந்த பகவானான வாஸுதேவனை வணங்குகிறேன். எவன் வேத உருவினனாய் அனைவருக்கும் ஞானத்தை ஊட்டுகிறானோ, தாமரை மலரைப் போன்ற தன் திருவாயால், உபதேசிக்கின்றானோ அவ்வெம்பெருமானது உபதேசங்கள் என் உள்ளத்தில் நிற்கட்டும். அதையே உமக்குக் கூறக் கடவேன். நம் முன்னோர்கள் கூறிய முறைப்படிக்கு, உனக்குச் சொல்கிறேன்.
ஸ்ரீ மஹாவிஷ்ணு முதலில் ப்ரஹ்மாவுக்கு உபதேசிக்க, ப்ரஹ்மா நாரதருக்கு உபதேசிக்க, நாரதர் வியாஸருக்கு உபதேசித்தார். அந்த மரபு மாறாமல் அனைத்துக் கதைகளையும் உமக்குக் கூறுகிறேன். இதை இடையூறின்றி பகவானே நடத்திக் கொடுக்கவேண்டும். நாக்கில் அமர்வதும், உள்ளத்தைத் தூண்டி விடுவதும், உடலில் சக்தியைக் கொடுப்பதும் இறைவனே. நாம் எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், பெருமான் இச்செயலை நன்கு குறைவின்றி முடித்துக் கொடுக்கட்டும் என்று அவரை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும். முயற்சி நம்முடையதாக இருக்க வேண்டும். ஆனால் அருளோ அவனுடையது. நம் முயற்சியால் மட்டும் செயல்கள் வெற்றி பெறாது. நாம் முயற்சி செய்யாமல் அவன் அருளைக் கோருவதும் நியாயமாகாது. ஆகவே, நம் முயற்சியும் இருக்கட்டும். இந்த முயற்சியே அவனது அருளுக்கு ஏங்குவதாக அமையட்டும். இப்படிப்பட்ட அடியவர்களுக்கு நிச்சயமாக கண்ணன் அருள்கிறான். சுகாசாரியரையா விட்டுக் கொடுப்பான்? மேலும் கேட்போம்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்