முதல் ஸ்கந்தம் – பதினாறாம் அத்தியாயம்
பரீக்ஷித் கண்ட பசுவும், எருதும்
ஸூத பௌராணிகரிடத்தில், சௌனகர் முதலான முனிவர்கள் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஸூதர் கூறலுற்றார் : “உத்தரையினுடைய கர்ப்பத்தில் பரீக்ஷித் பிறந்தான். அவன், தன் மாமனான
உத்தரனுடைய பெண்ணான இராவதியைக் கல்யாணம் செய்து கொண்டான். அவர்களுக்கு ஜனமேஜயன் முதலான
நான்கு புதல்வர்கள் பிறந்தார்கள். ஒருமுறை அவன் அனைத்து நாடுகளையும் ஜயித்துக் கொண்டு
வர, தேரில் ஏறிப் புறப்பட்டபோது, ஒரு வியப்பூட்டும் நிகழ்ச்சியைக் காண்கிறான். ஓர்
எருது, ஒரு பசு மாடு அருகருகே நிற்கின்றன. அந்த எருது ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறது.
அருகில் உள்ள பசு தேம்பித் தேம்பி அழுகிறது. இவ்விரண்டையும் அரச வேடம் பூண்டிருந்த
ஒரு சாமான்ய மனிதன், தன் கையில் இருக்கும் கோலால் அடித்துக் கொண்டிருக்கிறான். இதைக்
கண்ட பரீக்ஷித் கோபமுற்றான். பசுவைக் காப்பாற்றப் புகுந்தான்....”
பிறகு என்ன நடந்தது? – என்பதைத்தான் ஸூதர் இங்கு கூற வருகிறார். சௌனகர் கேட்கலுற்றார்.
“இது
என்ன கதை? ஏன் பசுவும், எருதும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் ஒரு மனிதன்
அவற்றைப் போய் அடிக்க வேண்டும்? புரியவில்லையே! இதிலே கண்ணனின் மர்மமான திருவிளையாடல்
ஏதோவொன்று இருக்கிறது போலும்! மந்தமான புத்தியும், குறைவான ஆயுளும் உடைய நம் போன்றவர்களுக்கு
மோட்சம் அடைய வேண்டும் என்ற விருப்பம் இருக்குமானால், கண்ணனுடைய கதையைக் கேட்பதுதான்
ஒரே வழி!
கஷுத்ர ஆயுஷாம் ந்ருணாம் அங்க
மர்த்யாநாம் ருதம் இச்சதாம்
இஹ உபஹுத: பகவான் ம்ருத்யு:
சாமித்ர கர்மணி
வேறு புகலுற்றவர்களான நம் போன்றவர்களுக்கு, தன் திவ்ய சரிதத்தையும்,
அதைக் கேட்பதையும் புகலாகக் கொடுத்து முக்தி அருள்வதற்கே கண்ணன் அவதரித்தான். அவனுடைய
இந்தக் கதையைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஸூதரே சொல்லும்!” என்றார் சௌனகர்.
ஸூதர் பதில் கூறலுற்றார்: “பரீக்ஷித் தன் நாட்டின் ஏதோவொரு மூலையில்,
கலி புருஷன் புகுந்தான் என்று கேள்விப்பட்டான். கண்ணன் புறப்பட்டதால், கலி இனி தலைவிரித்தாடத்
தொடங்கி விடும். அதனை நாட்டில் விடக் கூடாது, ஓட்டி விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு
தேரில் ஏறி அமர்ந்தான். கவசத்தை தரித்து, நீண்ட வில்லை எடுத்துக் கொண்டு பரீக்ஷித்
புறப்பட்டான். பத்ராச்வம், கேதுமாலம் முதலான நாடுகளை எல்லாம் ஜயித்துக் கொண்டு வந்தான்.
அவ்விடங்களில் எல்லாம் மக்கள், பரீக்ஷித்தினுடைய புகழைப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
அவற்றைக் கேட்டுக் கொண்டு, ஒவ்வொரு நாடாகக் கடந்து வந்தான் பரீக்ஷித். அப்போதுதான்
ஒரு காளை மாடு தன் ஒரு காலால் மட்டுமே நிற்பதைக் கண்டான். ‘இது ஏன் இப்படி நிற்கிறது?’
என்று வியப்படைந்தான்.
இனி எருதும், பசுவும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்போம். எருது பசுவைப்
பார்த்து, ‘பசுவே! ஏன் அழுகிறாய்? வெகு தூரத்தில் இருக்கும் பந்துக்களில் யாரையாவது
இழந்து விட்டாயா? அல்லது நான்கு கால்களில் நிற்க வேண்டிய யான், ஒரு காலில் நிற்கிறேனே!
அதை நினைத்து துன்பப்படுகிறாயா? நாட்டில் மழை பொய்த்து விட்டதே என்று வருத்தமா? அல்லது
கணவன்மார்கள், மனைவியைக் காப்பாற்ற மறுத்து விடுகிறார்களா? அல்லது சிசுக்களைக் காக்க
வேண்டிய பெரியோர்கள் அதற்கு பால் கொடுக்காமலோ, உரிய வயதில் படிப்பு கொடுக்காமலோ ஏமாற்றுகிறார்களா?
எத்தனை விதமான சிசுக் கொலை! எத்தனை வகையான பெண் கொலை இவ்வுலகில்? இதற்காகப் பசுவே நீ
வருந்துகிறாயா? பூபாரம் தீர்க்கப் பிறந்த கண்ணன், உன் பாரத்தை எல்லாம் போக்கிவிட்டு,
திரும்ப வைகுண்டத்தை அடைய நம்மைப் பிரிந்தான் என்பதை நினைத்து துக்கப்படுகின்றாயா?
அல்லது எதனாலும் சமாளிக்க முடியாத வலிமையான காலத்தின் கொடுமையைக் கண்டு துன்பப்படுகிறாயா?
ஏன்...? கூறுவாயாக....!’ என்று பேசிற்று.
அதற்கு, பசு உருவில் இருந்த பூமித்தாய் பதில் கூறுகிறாள். இவ்விடத்தில்
ஒன்றை நாம் நோக்க வேண்டும். இங்கே நிற்கும் எருதுதான் தர்ம தேவதை! அழுது கொண்டிருக்கும்
பசுதான் பூமி மாதா! இப்போது பசு, பதில் பேசலுற்றது:
‘ஆம்!
அழுகிறேன். உண்மை, தூய்மை, தயை, பொறுமை, தியாகம், திருப்தி, நேர்மை, புலன்களை அடக்குதல்,
சமநோக்கு, மெய்யறிவு, பற்றின்மை, வள்ளல் தன்மை, வீரம், ஒளி, பலம் – போன்ற எத்தனை நற்பண்புகள்
பகவானிடத்தில் குடிகொண்டிருந்தன! இந்தப் பண்புகள் எல்லாம் பரவி இருந்தால்தானே பூலோகத்தில்
மனிதர்கள் வாழ்வாங்கு வாழ முடியும்? ஆனால், அந்தோ! இந்தப் பண்புகளின் கொள்கலமான கண்ணன்
எம்பெருமான் இவ்வுலகத்தை விட்டுப் புறப்பட்டான். ஆகவே, கலி சூழத் தொடங்கி விட்டது.
இனி, இந்தக் கலி தேவர்களையும், பித்ருக்களையும், ரிஷிகளையும், சாதுக்களையும், மக்களையும்,
ஏன், தர்மமாகிய உன்னையும் என்ன பாடுபடுத்துமோ – என்பதைப் பற்றிதான் கவலை கொள்கிறேன்.
இப்போது என்னைப் பற்றி கூறுகிறேன். ப்ரஹ்மாவும் கூட, தான் நன்கு இருப்பதற்காக, ஸ்ரீமஹாலக்ஷ்மியின்
திருவடிகளை துதிப்பவர். அந்த லக்ஷ்மி தேவியோ, பெருமானுடைய திருவடிகளையே விரும்பி இருப்பவள்.
அந்தத் திருவடி எப்போதெல்லாம் பூமியான என் மேல் படுகிறதோ, அப்போது நான் உள்ளம் சிலிர்க்க
ஆனந்தப்படுவேன். அந்தத் திருவடி என்னை விட்டு வைகுண்டத்தை அடைந்து விட்டதாமே? அந்தப்
பிரிவாற்றாமையால்தான் நான் துக்கப்படுகிறேன்’ என்றது.
இப்படியாய் எருதும், பசுவும் பேசிக் கொண்டிருந்தபோது, குருக்ஷேத்திரத்தில்
ஸரஸ்வதி நதிக்கரைக்கு பரீக்ஷித் வந்து சேர்ந்தான். இனி, அவன் அவற்றிற்கு என்ன நன்மை
செய்கிறான் என்று பார்ப்போம்.
முதல் ஸ்கந்தம் – பதினேழாம் அத்தியாயம்
கலிக்குக் கிலி தந்த பரீக்ஷித்
தர்மம் ஓர் எருதின் வடிவத்திலும், பூமித் தாய் ஒரு பசுவின் வடிவத்திலும்
அழுது கொண்டு, நின்று கொண்டிருந்தபோது, ஒரு மனிதன் அரச வேடத்தை இட்டுக் கொண்டு, இவை
இரண்டையும் அடித்துக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் வேட்டைக்காக வெளியேறிய பரீக்ஷித்,
தன் நாட்டின் ஒரு மூலையில் கலி புகுந்து விட்டது என்பதைத் தெரிந்து கொண்டு, அவ்விடத்தை
அடைந்தான். எருதும், பசுவும் அடிபடுவதைக் கண்டான். அதைக் கண்டு கோபமுற்று, மேகம் இடிப்பதைப்
போன்ற குரலில் கேட்டான்:
“தீயவனே!
எதற்காக மாடுகளை அடிக்கின்றாய்? வேஷத்தில் அரசனைப் போல இருந்தாலும், தீய செயலைப் புரிகிறாயே!
கண்ணன் இவ்வுலகத்தை விட்டுப் போய் விட்டதால், அவனைத் தொடர்ந்து அர்ஜுனனும் புறப்பட்டுப்
போனதால் உலகில் காப்பதற்கு மன்னன் இல்லை என்று நினைத்து அத்து மீறுகிறாயா? அர்ஜுனனின்
வழித் தோன்றலாகப் பிறந்த நான் உள்ளேன். பாண்டவர்களுடைய குலத்தில் பிறந்த ஒவ்வொரு அரசனும்,
தனது காக்கும் கடமையை நன்கு அறிந்திருக்கிறான். எந்தப் பிரஜைக்குத் துன்பம் நேரிட்டாலும்,
அது விலங்கினமாயினும் கூட, யாம் நிச்சயமாக வந்து காப்போம். இது புரியாமல் நீ குற்றம்
புரிகிறாய். பசுத் தாயே! உயர்ந்த தேவதைகள் அனைவரும் உன் உடலில் உறைந்திருக்க, எதற்காக
இப்படித் தேம்பித் தேம்பி அழுகிறாய்? எருதே! நான்கு கால்களில் நிற்க வேண்டிய நீ, ஏன்
மூன்று கால்களை இழந்து, ஒரு காலில் நிற்கிறாய்? இவனைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்.
உங்கள் துன்பத்தின் காரணத்தைக் கூறுங்கள். நான் உடனே அதை நிவர்த்தி செய்து கொடுக்கிறேன்.
பிரஜைகளின் தர்மத்தை அறிந்து, அவர்களை காப்பாற்ற வேண்டியது அரசனான என்னுடைய கடமை. தர்மம்
தவறாமல் வாழ்பவர்களை அவசியம் அரசன் காப்பான்” என்று கூறினான். உடனே எருது வடிவில் இருந்த தர்மதேவதை பேசலுற்றது:
“பாண்டவர்களின் குலத்தில் பிறந்த நீ, அப்பெருமைக்கு ஏற்ப நேர்மையோடு பேசுவது திருப்தி
அளிக்கிறது. ஆனால், நீ கேட்ட கேள்விக்கு என்னால் நேரே பதில் கூற இயலாது. எங்கள் துன்பத்துக்கு
யார் காரணம் என்று நீதான் கண்டுபிடிக்க வேண்டும். துன்பத்துக்குக் காரணம் ஆத்மாவே என்று
சிலரும், கடவுள் என்று பலரும், நாம் செய்திருக்கின்ற கர்மங்களின் பலன் என்றோ அல்லது
நம்முடைய இயல்பே துன்பப்படுவதுதான் என்றோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைக் கூறுகிறார்கள்.
இதில் எது சரியானது? நாங்கள் ஏன் துன்பப்படுகிறோம்? – என்பதை நீயே யூகித்து அறிந்து
கொள்வாயாக!”
என்றது.
இதனைக் கேட்ட அரசன் ஆழ்ந்து சிந்திக்கலுற்றான். தன்னுடைய தவ வலிமையால்
எருதும், பசுவும் யார் என்பதைப் புரிந்து கொண்டான். தர்ம தேவதையே, எருதின் வடிவத்திலும்;
பூமித் தாயே, பசுவின் வடிவத்திலும் நிற்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். அதோடு
மட்டுமல்லாமல், இந்த எருது, கிருதயுகத்தின் தொடக்கத்தில் நான்கு கால்களில் நின்றிருந்தது.
தவம், தூய்மை, தயை, உண்மை கூறுதல் – ஆகியவையே அதன் நான்கு கால்கள்.
தவ: சௌசம் தயா ஸத்யமிதி
பாதா: க்ருதே க்ருதா:
அதர்மாம் சைஸ்த்ரயோ வக்நா:
ஸ்மய ஸங்க மதைஸ்தவ
ஆனால், பின்னர் அதர்மத்தினுடைய ஆயுதங்களான கர்வம், ஆசை, மதம் ஆகிய மூன்று
தீமைகளும் முறையே எருதின் முதல் மூன்று கால்களான தவம், தூய்மை, தயை ஆகியவற்றை ஒவ்வொரு
யுகமாக வெட்டிக் கொண்டே வந்தது. இப்போது கடைசி யுகமான கலியுகத்தில் ‘உண்மை கூறுதல்’ என்னும் கடைசிக் காலில் தர்மத்தின்
வடிவான காளை நின்று கொண்டிருக்கிறது. இதோ அழுது கொண்டிருக்கும் பசுதான் பூமி மாதா.
கண்ணன் இருந்தபோது எவ்வளவு ஆனந்தமாக இருந்தவள், அவன் புறப்பட்டுப் போன பிற்பாடு, நம்மை
யார் காப்பார்கள்? நாம் இனி துன்பப்பட வேண்டியதுதான் – என்று அழுது கொண்டிருக்கிறாள்.
இவர்களை உடனே காக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்ட பரீக்ஷித், தன் வாளை உருவிக்
கொண்டு, அவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த மனிதனை நோக்கி ஓடி வந்தான். அரசன் வருவதைக்
கண்ட கலி புருஷனோ உடனே பயந்து போய், பரீக்ஷித்தினுடைய கால்களில் விழுந்து, தன்னைக்
கொல்லாமல் இருக்குமாறு மன்றாடினான். “தீனவத்ஸலனான அரசனே! சரணாகதி புரிந்தவர்களைத் தாங்கள்
கொல்ல மாட்டீர்களே! என்னைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கெஞ்சினான்.
அப்போது அரசன் கலியைப் பார்த்துக் கூறினான்: “காலில் விழுந்து விட்டாய்.
தப்பித்துப் போ! ஆனால், எனது ஸாம்ராஜ்யமான ப்ரஹ்மா வர்த்த தேசத்திலே உனக்கு இடம் இல்லை.
நீ இருக்கும் இடத்தில் துஷ்டர்களாகிய உன் அடியாட்கள் – அதாவது பேராசை, பொய் கூறுதல்,
திருட்டு, தாழ்செயல்கள், செல்வமின்மை, கபடம், கலகம், செருக்கு – இவை அத்தனையும் வாழும்.
பகவானைக் குறித்து ஹோமங்களும், நாம ஜபங்களும் செய்யப்படும் என் நாட்டில், இவற்றுக்கெல்லாம்
இடம் கிடையாது. ஆகவே, உடனே நீ வெளியேறிவிட வேண்டும்” என்று கூறினான்.
அப்போது கலி புருஷன், பயந்து போய் பதில் கூறினான் : “நீ சொன்னது போல
நான் வெளியேறி விடுகிறேன். ஆனால், பகவான்தான் என்னையும் படைத்தான்! கலியாகிய நான் கொடுமை
மிக்கவனாக இருப்பதோ, தீமை செய்வதோ என் விருப்பத்தால் அல்ல. முதல் மூன்று யுகங்களை உருவாக்கிய
கடவுள்தானே என்னையும் படைத்தான்! ஆகவே, நான் இருப்பதற்கு இடம் கொடு. என்னிடத்திலும்
சில நன்மைகள் உண்டு. அதைப் புரிந்து கொண்டு, எனக்கு இருப்பதற்கு இடம் கொடு” என்று வேண்டி நின்றான்.
பௌராணிகர் கூறுகிறார்: “இதைக் கேட்ட பரீக்ஷித் சற்றே சிந்தித்து, ‘சரி!
உனக்கு நான்கு இடங்களைக் கொடுக்கிறேன். சூதாடுதல், கள் குடித்தல், பெண்களை அவமரியாதை
செய்தல், பிராணிகளைத் துன்புறுத்துதல் ஆகிய நான்கு அதர்மங்கள் எங்கெங்கு இருக்குமோ
அங்கெல்லாம் நீ இருக்கலாம்” என்று மறுமொழி கூறினான். இதைக் கேட்ட கலி, “நான் மிகவும்
பருத்தவன். இந்த நான்கு இடங்கள் எனக்குப் போதாது. மேலும் இடங்களைக் கொடு!”
என்றான்.
“அரசன்
ஐந்தாவதாக, பேராசையூட்டும் தங்கத்தில் பெரு விருப்பம் உள்ளவர்கள் மனதையே இடமாகக் கொடுத்தான்.
ஆனால், கலிக்கு அதுவும் போதவில்லை. அரசன் மேலும் ஐந்து இடங்களைக் கொடுக்கிறான். பொய்
கூறுதல், செருக்கு, பேராசை, கோபம் அதாவது ரஜோ குணம், பகைமை ஆகிய தீய குணங்கள் புழங்கும்
இடங்களைக் கொடுத்தான். ஆக, மொத்தத்தில் இந்தப் பத்து இடங்களும் கலியின் முழு ஆளுகைக்கு
உட்பட்டவை.
“எனினும்,
இது கலியுகமாயிற்றே என்று பயப்படத் தேவையில்லை. பரீக்ஷித், இந்தப் பத்தே இடங்களை கலி
வாழ்வதற்குக் கொடுத்திருக்கிறபடியால், நாம் இந்தப் பத்து இடங்களுக்கோ, அதற்குரிய பழக்கங்களின்
அருகில் கூட போகாமலோ இருந்தால் கலி, நமக்கு எந்தத் துன்பமும் கொடுக்காது. இப்படி, கலியை
அனுப்பி வைத்த மன்னவன், தன் நாட்டில் சிறந்த ஹோமங்களைச் செய்தும், நிறைந்த ஆசாரங்களை
அனுஷ்டித்தும் காளை இழந்த கால்களான தவம், தூய்மை, தயை ஆகிய மூன்றையும் மீட்டுக் கொடுக்க
முற்பட்டான். இப்படியாக, மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான் அவன். ரிஷிகளே! இப்படிப்பட்ட
பரீக்ஷித்தின் தேசத்தில்தான் நீங்கள் இப்போது ‘ஸத்திர யாகம்’ செய்து கொண்டிருக்கிறீர்கள்!”
– என்று சொல்லி, கலி புருஷனை பரீக்ஷித் விரட்டியதைப் பற்றி நினைவு கூர்ந்தார் பௌராணிகர்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்