ஹிதம் என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்லுவதை நல்லது என்று தமிழில் அருளிச்செய்தார் நம்மாழ்வார். நமக்கு உண்மையில் எது நலத்தை விளைவிக்குமோ அது ஹிதம், நல்லது. எது நல்லது என்பதைச் சொல்கின்றேன். கேளுங்கள் என்கிறார் ஆழ்வார்: ஆனால் அதைச் சொல்லுவதற்கு முன் ''அது எவரோ சிலர்க்கே நல்லது என்று எண்ண வேண்டாம். எந்த உலகத்தில் இருந்தாலும் யாராயிருந்தாலும் எல்லார்க்கும் நல்லது'' என்கிறார்.
இருங்கற்பகம் சேர்வானத்தவர்க்கும்
அல்லாதவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும்
என்று. இனி அந்த நல்லது எது என்றால் எம்பெருமான், ஸாக்ஷாத் ஸ்ரீமான் நாராயணன், என்கிறார். ஆனால் இப்படி, நேராகச் சொல்லாமல் 'ஞானப்பிரானையல்லால் இல்லை' என்றிப்படிச் சுற்றிச் சொல்லுகிறார். ஞானப்பிரான் நல்லது என்றால் ''மற்ற எவரும் இல்லை'' என்பது ஏற்படாது. அதற்காகத் தனியே '' மற்றவரில்லை'' என வேண்டும், இப்படிச் சொன்னால் இரண்டு வாக்யமாகிறது. ஆகையால் ''அவனையல்லால் இல்லை'' என்று ஒரே வாக்யத்தினால் இரண்டு அம்சங்களையும் விளங்க வைத்தார். 'ஞானப்பிரானையல்லால்' என்றதற்கேற்றபடி ''நான் கண்ட நல்லவனே'' என்னால் அனுகூலன், தயாவான், குணவான் என்றிப்படி ஒரு பொருள் கிடைக்குமேயன்றி உபாயம், ஹிதம், என்ற இப்பொருள் கிடைக்காது. அதனால் 'நல்லது' என்று அஃறினையாகவே வைத்தார்.
எம்பெருமான் நித்யனாகையால் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறான். அவன் உபாயமானால் உலகங்களிலுள்ள ஒவ்வொருவருக்கும் இதுவரையில் உயர்ந்த கதி கிடைத்திருக்க வேண்டும். ஸம்ஸாரத்தில் அகப்பட்டுக்கொண்டு தவிப்பவர் ஒருவரும் இருக்க முடியாது, எனில் இது உண்மையே. பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து அதனால் வசீகரிக்கப்பட்ட அவன் உபாயாமாகிறான் என்பது கருத்து. இது கீழ் ''இமையோர்கள் குழாம் எழுவதும் தொழுவதும் செய்'' என்பதனால் ஸுசிப்பிக்கப்பட்டது. நாம் எதுவும் செய்யாமல் எம்பெருமான் தானே உபாயமாகிப் பலன்களைக் கொடுப்பானாகில் அவன் எல்லா ஜீவராசிகளையும் ஸ்ரீவைகுண்டத்திலேயே வைத்து நித்யமாய்ப் பேராநந்தம் அநுபவிக்கச் செய்து விடலாமாகையால் இந்த ப்ராக்ருத உலகங்களை ஸ்ருஷ்டி, செய்யாமலே இருக்கலாம். ஆகையால் பகவான் உபாயம் என்றால் நாம் செய்யும் அல்ப வ்யாபாரத்தையும் பொருள்படுத்தி நமக்கு வேண்டியதைத் தந்தருள்கின்றான், என்பது கருதப்படுகின்றது. நாம் பெறும் பேற்றைப் பார்க்கும்போது நாம் அநுஷ்டிக்கும் உபாயம் மிக மிகச் சிறியதாகையால் இதை உபாயமென்று கூறாமலேயே எம்பெருமானையே உபாயமென்கிறார்கள். ஆகிலும் ஸாக்ஷாத் உபாயமான அவனுடைய ப்ரஸாதத்தைப் பெறுவதற்காக சாஸ்த்ரங்கள் உபதேசித்த உபாயத்தை நாம் அநுஷ்டிக்க வேண்டுமென்பது கருத்தில் உள்ளது.
சாஸ்த்ரங்கள் உபதேசித்த உபாயம் பக்தி அல்லது ப்ரபத்தி என்பது ப்ரஸித்தம். ப்ரபத்தியும் ஒருவிதமான பக்தியே. இதை ஸாத்ய பக்தி என்பார்கள். எம்பெருமானுடைய ப்ரஸாதத்திற்கு ஸாக்ஷாத் உபாயமான இந்த இரண்டு விதமான பக்தி எளிதில் லபிக்கக் கூடியதன்று. ஆகையால் இதற்கும் ஸாதனமாகப் பல நல்ல கார்யங்கள் உபதேசிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிக ப்ரதானமானது அவதார ரஹஸ்ய ஜ்ஞானம். அதாவது எம்பெருமானுடைய அவதாரங்களைப்பற்றிய உண்மைகளை அறிவது. இவற்றை கீதையில் பகவானே விளக்கிக் கூறி,
“இப்படிச் சிறப்புற்ற என் பிறப்பையும் திவ்ய சேஷ்டிதங்களையும் எவன் உள்ளபடி அறிகின்றானோ அவன் இந்த உடல் நீங்கிய பிறகு மறுபடியும் பிறக்க மாட்டான். என்னை அடைவான்.”
என்று இவற்றை அறிவதனால் உண்டாகும் சிறந்த பலனையும் ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்திருக்கின்றார். மறுபிறவி உண்டாகாமல் இருப்பது மோக்ஷமே ஆகும். இதற்கு பக்தி அல்லது ப்ரபத்திதான் உபாயம் என்று நிச்சயிக்கப்பட்டிருக்கிறபடியால் அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் அதற்கு உபாயம் என்பது எப்படி என்ற கேள்வி இங்கே எழுகின்றது. இதற்கு ஸமாதானம் - அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் பிறந்ததேயாகில் அது அந்த ஜன்மத்திலேயே பக்தியையோ ப்ரபத்தியையோ உண்டாக்கி நிறைவேறச் செய்து அதன் மூலமாக மறுபிறவி அற்றுப்போகச் செய்யும் - என்பது. இங்கு ஒரு விசேஷம், நமக்கு இப்போதுள்ள இந்த ஜன்மத்தைக் கொடுத்த கர்மம் ப்ராரப்தகர்மம் எனப்படுகின்றது. இந்த ப்ராரப்த கர்மம் இந்த ஜன்மத்துடனேயே முடிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. இதோடு முடிந்தாலும் முடியலாம். ப்ரபலமாயிருந்து இன்னும் பல ஜன்மங்களைக் கொடுத்து அதன் பிறகே முடிந்தாலும் முடியலாம். இவ்வித ப்ரபல ப்ராரப்த கர்மம் இருந்தபோதிலும் இந்த ஜன்மத்திற்குப் பிறகு மற்றொரு ஜன்மம் வராமல் நீ என்னை
உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ப்ரார்த்தித்து ப்ரபத்தியை அனுஷ்டித்தால் மறு பிறவியைக் கொடுக்கக் கூடிய ப்ரபல ப்ராரப்த கர்மத்தின் அம்சம் நீங்கிவிடும். ஆனால் பக்திக்கு இந்த மஹிமை கிடையாது. இதனால் மோக்ஷம் கிடைப்பது நிச்சயமானாலும் ப்ராரப்த கர்மத்தின் பலனாக எத்தனை ஜன்மம் எடுக்க வேண்டுமோ அத்தனை ஜன்மங்களையும் எடுத்து அவற்றில் உண்டாகும் ஸுகதுக்கங்களை அனுபவித்தே தீரவேண்டும். பிறகு தான் மறுபிறவி இல்லாமல் மோக்ஷம்.
இப்படி பக்திக்கு இயற்கையாக ப்ராரப்த கர்மத்தின் அம்சத்தை ஒழிக்கும் சக்தி இல்லையேயாகிலும் பக்தியை அனுஷ்டிப்பவர் அவதார ரஹஸ்யங்களை உள்ளபடி அறிந்தாராகில் இந்த அறிவு அவர் அனுஷ்டிக்கும் பக்திக்கு அந்த சக்தியை உண்டாக்கி ப்ராரப்த கர்மசேஷத்தை ஒழிக்கச் செய்து மறுபிறவி இல்லாமல் செய்து விடும். ஆகவே அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் பக்தியின் மூலமாகவே மறு பிறவியில்லாமல் செய்யும் பரம்பரா உபாயங்களுள் மிகச் சிறந்தது. இப்படி ஆழ்வார் 'எம்பெருமானன்றி நல்லதில்லை' என்றவிதனால் அவன் விஷயமாக பக்தி ப்ரபத்திகளைச் செய்வது நல்லதென்றும் அதில் சக்தியற்றவர்களுக்கு அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் நல்லதென்றும் ஸுசனம் செய்தருளினார். 'எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்' என்றாரம்பித்து 'ஏனத் துருவாய் இடந்த பிரான்… ஞானப் பிரானையல்லால்' என்று ஆழ்வார் திருவுள்ளத்தில் அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் நல்லதாகப் பதிந்திருக்கிறது என்பது ஸ்பஷ்டம்.
ஆழ்வாருடைய இந்தத் திருவுள்ளத்தை ஸ்வாமி தேசிகன் தம் திருவுள்ளத்தில் வைத்து தசாவதார ஸ்தோத்திரத்தில் 'இச்சாமீன' என்ற பனிரண்டாவது ச்லோகத்தை ஸாதித்திருக்கின்றார். ''பாவிந்யா தசயா'' என்ற கல்கி விஷயமான ஸ்தோத்ரம் முடிந்த வுடன் ' வித்யோதந்வதி' என்ற பல ச்ருதி ச்லோகமே இருந்திருக்க வேண்டும், ஆகிலும் கீதையில் உபதேசிக்கப்பட்டு ஆழ்வார் முதலான மஹான்களால் போற்றப்பட்டு வந்ததான அவதார ரஹஸ்ய ஜ்ஞானத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுவதற்காகவே 'இச்சாமீன' என்ற ச்லோகம் ஸ்வாமியினால் ஸாதிக்கப்பட்டிருக்கின்றது.
பகவத் அவதாரங்கள் உண்மையாகவே நடந்தவை. இதை ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் 'ஓ அர்ஜுனா. உனக்குப் பல ஜந்மங்கள் கழிந்தன. அப்படியே எனக்கும்' என்று சொல்லி விளக்கியிருக்கிறார். இதைப்பற்றி ஆஸ்திகர்களுக்கு ஸந்தேஹமிராதபடியால் விளக்கம் ஒன்றும் அபேக்ஷிதமன்று. அவதாரங்களைப் பற்றிய மற்ற சிறப்புக்கள் ஐந்து: 1. அவதாரங்களில் எம்பெருமானுடைய ஸ்வபாவத்திற்கு எவ்வித மாறுதலுமில்லை. 2. அவனுடைய திருமேனி அப்ராக்ருதமானது. 3. அவன் இங்கே வந்து பிறப்பதற்குக் காரணம் அவன் ஸங்கல்பமே. 4. தர்மம் குன்றி அதர்மம் ஓங்கி நிற்கும் காலமே அவன் அவதரிக்கும் காலம். 5: ஸாதுக்களை ரக்ஷிப்பது மற்றவரை ஒழிப்பது தர்மத்தை நிலை நாட்டுவது என்ற இவையே அவன் அவதாரங்களுக்கு ப்ரயோஜனம். ஜீவாத்மாக்களுடைய பிறப்புக்கு இல்லாத இந்தச் சிறப்புக்கள் எம்பெருமானுடைய அவதாரங்களில் இருப்பதை நன்றாக அறிவதே அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் எனப்படுகின்றது. இச்சிறப்புக்களில் திருமேனியைப்பற்றியது. 'மஹாபோத்ரின் யத்ருச்சாஹரே' என்ற இவற்றால் குறிப்பிடப்பட்டது. ப்ராக்ருதவராஹ உடல், மேருபர்வதம் அதன் குளப்படியில் ஒரு சிறு தூசியாக இருக்கும்படி அவ்வளவு பெரிதாயிருக்க முடியாது: தூணுக்கு ஒரு சரீரத்தை உண்டாக்கும்படியான சக்தி இல்லை. ஆகையால் இவை அப்ராக்ருத திருமேனி என்பது தோன்றுகிறது. 'இச்சாமீன' என்றவிதனால் அவன் ஸங்கல்பமே அவன் பிறப்புக்குக் காரணம், கர்ம இல்லை என்று காரணத்தைப்பற்றி சிறப்பு குறிப்பிடப்பட்டது. 'கல்க வாஹன தசா' என்ற வித்தால் தர்மம் குன்றி அதர்மம் ஓங்கும் காலம் அது என்று தோன்றும்படி ஒரு அவஸ்தை குறிக்கப்படுகிறதாகையால் அவதார காலம் தோன்றுகிறது. 'ரக்ஷாவாமன' என்றதனால் ஸாதுக்களைக் காத்தலும் ' ரோஷராம' என்றதனால் அஸாதுக்களை ஒழிப்பதும் ப்ரயோஜனம் என்பது அறிவிக்கப்படுகின்றது. இப்படி ஜீவர்களின் பிறப்புக்குப்போல அல்லாமல் பரமாத்மாவின் பிறப்புக்குக் காரணம் வேறு. உடல்வேறு, காலம் வேறு, ப்ரயோஜனம் வேறு, என்றவித்தால் ஜீவாத்மாக்களுக்குப் பிறவியினால், அறிவு குன்றுவது என்கிற ஸ்வபாவமாறுபாடு போல் பரமாத்மாவுக்கு ஸ்வபாவமாறுபாடு இல்லை என்பது கிடைக்கின்றது.
இப்படி அவதாரச் சிறப்புக்களைக் குறிப்பாகக் காட்டிவிட்டு அவற்றின் அறிவின் சிறப்பை மேலே ஸாதிக்கின்றார் - ' இதிப்ரத்யஹம் ஜல்பந்த: புருஷா:' என்று. அறிவு உண்டானவுடன் அது பக்தியை உண்டாக்கி மேல் மேலும் ஸங்கீர்த்தனம் பண்ணத் தூண்டுகின்றது. ஆகையால் தினந்தோறும் இடைவிடாது அவதார நாமஸங்கீர்த்தனம் செய்கின்றார்கள். இவர்களுடைய அறிவினாலேயே இவர்களுடைய புருஷார்த்தம் ஸித்தித்து விடுகின்றதாகையால் இவர்கள் மேல் மேல் செய்யும் அநுஸந்தானம் இவர்களுக்குத் தரக் கூடிய பலன் எதுவுமில்லை. ஸ்வயம் புருஷார்த்தமாகின்ற தத்தனை. ஆனால் இது பிறர்க்குப் பயன்படுகின்றது. அதுபோல் இப்பெரியவர்கள் தசாவதார நாம ஸங்கீர்த்தனங்களாகிற புண்யக் குவியல்கள் சரக்காக அவைகள் நிறைந்த கடைகளாகத் தம்மை ஆக்கிக்கொள்கிறார்கள். புண்யம் பெற ஆசைப்படுகிறவர்கள் அவர்களிடம் போய் ப்ரணாமங்களும் உபசார வார்தைகளுமாகிற விலையைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய அளவு புண்ணியங்களை வாங்கிக் கொள்ளலாம்: அவர்களுடைய ஸேவையினாலும் கடாக்ஷத்தினாலும் இவர்களுக்கு அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் பிறந்தது. பக்திப்ரபத்தி மூலமாய் உத்தம புருஷார்த்தம் கிடைத்துவிடும்; ஆகவே பகவத் அவதார ரஹஸ்ய ஜ்ஞானம் நல்லது. அது யாருக்கு இருக்கிறதோ அவருக்கும் உலகத்திற்கும் க்ஷேமம் உண்டாகின்றது. (புனந்தி புவனம்).
நன்றி - ஶ்ரீந்ருஸிம்ஹப்ரியா 1966