சனி, 12 அக்டோபர், 2019

"உன் நாவில் இருப்பேன்" - சாண்டில்யன்

“வைகுண்டேது பரே லோகே ச்ரியஸார்த்தம் ஜகத்பதி : ஆஸ்தே விஷ்ணு : அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ” என்கிற விஷ்ணு புராண ஸ்லோகப்படி ஸ்ரீவைகுண்டத்தில் பக்த பாகவத கோஷ்டிகளுடன் எழுந்தருளியிருக்கிற பகவான் திடீரென்று எதையோ ஸங்கல்பித்துக் கொண்டு சிங்காதனத்திலிருந்து எழுந்து, 

“ஆதிசேஷா  இப்படி என் முன்னால் வா என்று ஆக்ஞாபித்தார்”.

“இருந்தால் சிங்காதனமாம்” என்று அதுவரை சிங்காதனமாயிருந்த ஆதிசேஷனும் உடல் சுருளை நீக்கி நீள் உருக் கொண்டு எதிரில் வந்து தனது ஆயிரம் தலைகளாலும் எம்பெருமான் திருவடிகளில் வணங்கி பகவத் ஆக்ஞையை எதிர்பார்த்து நின்றான்.

“நீ மறுபடியும் பூலோகம் செல்ல வேண்டும்” என்று பகவான் ஆணையிட்டார்.

ஆயிரம் தலைகளும் நீண்ட உடலும் ஒருமுறை நடுங்கின. “பிரபூ! மீண்டும் பூலோகமா!” என்று ஏங்கிக் கேட்டார் ஆதிசேஷன்.

“ஆமாம்” என்றார் எம்பெருமான்.

“எதற்குப் பிரபூ!”

“உலகில் நாஸ்திக வாதம் மிஞ்சிவிட்டது; விதண்டாவாதமும் எல்லை கடந்து விட்டது. அவற்றுக்கு ஒரு எல்லை கட்ட வேண்டும். அஞ்ஞான இருளை ஞான ஒளியால் கிழிக்க வேண்டும்.”

“பிரபூ! அதற்குத் தாங்களே சாஸ்திரம் பண்ணி இருக்கிறீர்களே. பகவத் கீதையை விட எது அஞ்ஞான இருளைக் கிழிக்க முடியும்?”

“ஆம் சாஸ்த்ரம் செய்தேன். அப்போது நீ கூடத்தான் வந்திருந்தாய் என் அண்ணாவாக”.

இப்படிச் சொன்ன பெருமான் புன்முறுவல் கொண்டான். “கீதையைவிட சிறந்த சாத்திரமான திருப்பாவையை பிராட்டி செய்தாள். அவளுக்கும் அண்ணாவானாய் ராமாநுஜனாகி” என்று சொன்னான் எம்பெருமான்.

“ஆண்டாள், எம் அண்ணாவே! என்று அழைத்ததால் அண்ணாவானேனே தவிர உணமையில் பின்னால் தானே பிறந்தேன்” என்றன் ஆதிசேஷன்.

“எப்படியோ எனக்கும் அண்ணாவானாய்; பிராட்டிக்கும் அண்ணாவானாய்”

“இன்னும் யாருக்கு அண்ணாவாக வேண்டும்?” என்று கவலையுடன் கேட்டான் ஆதிசேஷன்.

“உலகத்துக்கு; அஞ்ஞான இருளில் மூழ்கியிருக்கும் ஜனங்களுக்கு ஞான ஒளியளிக்க அண்ணாவாக மீண்டும் போய்வா!” என்றார் பகவான்.

“ராமாநுஜனானேன், மணவாள மாமுனியானேன், அந்த அவதாரங்களில் சொல்லாததை இப்பொழுது மட்டும் என்ன சொல்லி விடுவேன்?”

“அப்போது சாஸ்த்ரஜ்ஞானமுள்ளவர்கள் பெருகியிருந்தார்கள். உனது சாஸ்த்ரங்கள், வாதங்கள் புரிந்தன அவர்களுக்கு இப்போது புரிந்தது போல் எதையும் வாதாடும் ஜனங்கள் பெருகி விட்டார்கள். ஆகவே கங்கையும் காவிரியும் போல உள்ள ஸர்ஸ்க்குத த்ராவிட மஹா கிரந்தங்களை சமந் வயப்படுத்தி, இனைத்து மக்களுக்குத் தெளிவாகச் சொல்லி விட்டுவா”

இதைக்கேட்ட ஆதிசேஷன் சிந்தாக்ராந்தனான். “ப்ரபூ உங்களை விட்டு நான் எப்படிப் போவேன்?” என்று துக்கத்துடன் வினவினான் ஆதிசேஷன்.

“ஆதிசேஷா! உன்னைவிட்டு என்னால் மட்டும் பிரிய முடியுமா? நீ இருக்குமிடத்தில் நானும் இருப்பேன். நீ எங்கெங்கு வேத திவ்யப்ரபந்த விசாரம் செய்து மக்களை பக்தி வேகத்தில் ஆழ்த்துகிறாயோ அங்கெல்லாம் நானுமிருப்பேன்”.

“அங்கு எங்கிருப்பீர்கள் ப்ரபூ? நான் சேவிக்க இயலுமா?” என்று ஆதிசேஷன் கேட்டான்.

“அர்ச்சாவதாரங்களை சேவிக்கலாம். என்னை சேவிக்க முடியாது?”

“ஏன் ப்ரபூ! நான் அத்தனை அபாக்யவானா”

“இல்லை; நானிருக்குமிடத்தை நீ பார்க்க முடியாது”. 

“அப்படிப்பட்ட இடம் எது ப்ரபூ?”

பகவான் ஆதிசேஷனை உற்று நோக்கினார் கருணையுடன், “உன் நாவில் இருப்பேன். வடமொழி வேதங்களும் தமிழ் வேதங்களான திவ்யப்ரபந்தங்களும் அருளிச் செயல்களும் உன் நாவிலிருந்து உதிரும். அந்த ரசத்தை நானும் அனுபவிப்பேன். உன் பேச்சு என் பேச்சாகும். நான் மயர்வற மதி நலம் அருளியதைப் போல் நீயும் நல்லறிவு ஊட்டப் போகிறாய். சாஸ்த்ரவாதிகள் உன்னைப் பார்த்து மகிழ்வார்கள். பிரதிவாதிகளுக்கு நீ பயங்கரமாகத் தோன்றுவாய்” என்று பகவான் அருளிச் செய்து கையை ஆதிசேஷன் மீது வைக்க, ஆதிசேஷன் அந்தர்த்தானமானான்.

காஞ்சியில் பிரதிவாதி பயங்கரர் குடும்பத்தில் ஒரு குழந்தை வீறிட்டு அழுது கொண்டே பிறந்தது. அதற்கு அண்ணா என்று பெயரிட்டார்கள். உலகத்துக்கு ஒரு அண்ணா பிறந்தார். வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு ஒரு ஜகதாசார்யர் தோன்றினார்.

நன்றி - கீதாசார்யன் மார்ச் 1979


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக