சனி, 12 அக்டோபர், 2019

'கோயில்' கவர்ந்த கவிகள்

(பந்தல்குடி பாரத்வாஜ மாடபூசி ஸ்ரீ. உப. ரெ. திருமலை அய்யங்கார்,  தமிழ் வித்துவான், காரியதரிசி, திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கம்.) 

திருமாலின் திவ்விய தேசங்கள் நூற்றெட்டனுள் பிரதானமானதும், சோழவள நாட்டுத் திருப்பதிகள் ஐயெட்டில் முக்கியமானதும், ' கோயில், திருமலை, பெருமாள் கோயில்' என்று எடுத்தியம்பப் பெறுகின்ற முத்தலங்களுள் முதலதும், 'கோயில்' ( பெரிய கோயில்' ‘பூலோக வைகுண்டம்' ' போக மண்டபம்' என்றிப்புடைகளிலே போற்றப் பெறுவதுமான திருப்பதியே ' திருவரங்கம்' என்பது. இக்' கோயில் ' என்னும் திவ்விய தலம் கவிகளனைவரையும் கொள்ளை கொண்டது. அவர்களில் அழகிய மணவாள தாசர் திருவேங்கட நாதன் என்ற கவிச் சிரேட்டர்க ளிருவருள்ளத்தையுங் கவர்ந்தவாற்றைச் சற்றுக் காண்பாம்.

திருவரங்கத் தந்தாதி, திருரங்கத்து மாலை, திருவரங்கக் கலம்பகம், திருவேங்கட மாலை, திருவேங்கடத் தந்தாதி, அழகரந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி, சீரங்க நாயக ரூசல் என்ற எட்டு நூல்களுக்கும் அஷ்ட பிரபந்தம் என்று பெயர் வழங்கும். இவற்றைப் பாடியவர் அழகிய மணவாளதாச ரென்கிற திவ்விய கவி பிள்ளைப் பெருமாளையங்கார். சீரங்க நாயகரூசலின் ஆறைந்தாம் பாட்டு பின்வருமாறு :

"புண்டரிகத் தவன்றவஞ்செய் திறைஞ்சுங் கோயில்
புரிசடையோன் புராணஞ்செய் தேத்துங் கோயில் 
பண்டிரவி குலத்தரசர் பணிந்த கோயில்
பரிந்திலங்கைக் கோன்கொணர்ந்து பதித்த கோயில் 
மண்டபமுங் கோபுரமு மதிலுஞ் செம்பொன்
மாளிகையுந் தண்டலையு மலிந்த கோயில் 
அண்டர்தொழுந் திருவரங்கம் பெரிய கோயில்
அமர்ந்துறையும் பெருமானா ராடி ரூசல்."

(புண்டரிகத்தவன் - திருமாலின் நாபீ கமலத்தில் தோன்றிய பிரமதேவன்; இறைஞ்சும் - பிரதிஷ்டை பண்ணித் திருவாராதனஞ் செய்து வணங்கின; புரிசடையோன் - முறுக்கிவிட்ட முடியையுடைய சிவபிரான்; ஏத்தும் - துதித்த; இரவி குலம் - சூரிய வமிசம்; இலங்கை கோன் - இலங்கைக்கு அரசனாகிய விபீஷணாழ்வான்; பரிந்து . விரும்பி; செம்பொன் - சிவந்த பொன்; தண்டலை - சோலைகள்; மலிந்த - நிறைந்துள்ள; அண்டர் - தேவர்; அமர்ந்து உறையும் - பொருந்தி நித்தியவாசஞ் செய்கின்ற; பெருமானார் - ஸ்ரீரங்கநாதன்.)

' கோயில்' எனும் பதம் ஆறுமுறை வழங்கப் பெறுகின்றது இப்பாட்டில். ஷாட்குண்ய பரிபூர்ணனான பகவானைக் குறிக்க இங்ஙனம் அய்யங்கார் பாடினார் போலும்.
' எண்குணத்தான் ' எனப் போற்றியுள்ள பெற்றி தோற்றக் ‘கோயில்’ எனும் பதம் எண்முறை வருமாறு யாத்துள்ளார் நந்தூப்புல் திருவேங்கடமுடையான். அப்பாசுரம் ஈதே :

"ஆராத வருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோ னயோத்திமன்னற் களித்த கோயில் 
தோராத தனிவீரன் றொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில் 
சேராத பயனெல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் 
தீராத வினையனைத்தும் தீர்க்குங் கோயில் 
திருவரங்க மெனத்திகழுங் கோயில் தானே"

-தேசிகமாலை, அதிகார சங்கிரகம் 42. 

[ஆராத - அநுபவிக்க வநுபவிக்கத் தெவிட்டாத; அருள் அமுதம் - கருணையே வடிவெடுத்த; அம்புயத்தோன் - தாமரையில் வசிக்கும் பிரமன்; அயோத்தி மன்னன் . இக்ஷ்வாகு; தோராத - அபஜய முறாத; தனி வீரன் - ஸ்ரீராமபிரான்; தொழுத - ஆரா தித்த; வீடணன் - விபீஷணன்; சேர்க்கும் - அடைவிக்கும்; செழுமறை - சிலாக்கியமான வேதம்; முதல் எழுத்து - பிரணவம்; தீராத - நீங்காத; கோயில் - திவ்ய தேசம்.]

பிரணவாகார விமானத்திற் பள்ளிகொண் டெழுந்தருளியுள்ள மூல மந்த்ர ப்ரதிபாத்யனான முழு முதல்வன் பெருங்கோயிலை எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தப் பாவாற் பாடி யநுபவித்துத் தமிழர் பெற்றின்புறுமாறு தந்த தூப்புல் வள்ளல் எனுஞ் சந்தமிகு தமிழ் மறையோனுக்கு இவ்வையகம் யாது கைம்மா றியற்ற முடியும்?

நாராயணாய வாழ்க! நாதன்றாள் வாழ்க!

நன்றி - ஶ்ரீந்ருஸிம்ப்ரியா 1945

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக