சனி, 12 அக்டோபர், 2019

பரமாணு பராமர்சம்

(வங்கீபுரம் ஸ்ரீ உப. காளி வரதாசார்யர், அட்வொகெட், திருக்குடந்தை)

பாச்சாத்யர்கள் பரமாணுவைப் பராமர்சித்தார்கள். அணுவைத் துளைத்து ஒரு குண்டு உண்டாக்கினார்கள். அதை விடுத்து இரு நகரங்களை இருந்தவிடம் தெரியாதபடி அழித்து, அவற்றை உயிர்வாழ முடியாத பாலைவனமாகச் செய்துவிட்டார்கள். அஸுரச் செய்கையென்று அதனை அறிஞர்கள் கண்டிக்கின்றார்கள்.

ஆனால் அஸுரர்களும் இவ்வாறு செய்ய இசைந்ததாகக் காணோம். அவர்களும் அணுவைத் துளைத்து, அதன் உட்பொருளைத் துருவினதுண்டு, அவர்களில் ஒருவன், பஞ்சபூதங்களின் தன்மையையும் பாகுபடுத்திக் கண்டான். அவைகளால் உலப்படாத் தன்மையையும் தன் அருந்தவத்தால் அடைந்தான். சந்த்ர லோகமும் சென்று தனியரசு நடத்தினான். தத்வதர்சிதான் அவன்.

“வேதங் கண்ணிய பொருளெலாம் விரிஞ்சனே யீந்தான்
போதங் கண்ணிய வரமெலாம் தரக்கொண்டு போந்தான் 
காதுங் கண்ணுதல் மாலயன் கடைமுறை காணாப் 
பூதங் கண்ணிய வலியெலாம் ஒருதனி பொறுத்தான்”
(கம். ராமா. இரணி. வதைப்படலம்-1)

ஆயினும் கனகன் அவன். பொருளையே போற்றுபவன். யாவையுந் தன் வயப்படுத்திக் கொண்டு, தான் தனியரசு நடத்தவேண்டுமென்ற அவா மேலிட்டவன். அவனுக்கு நேர் மாறானவன் ஒருவன். அவன் புதல்வனே தான். ஆயினும் அவனது தத்துவ ஆராய்ச்சி வேறுபட்டது.

“அடியா ரடியே னெனுமார் வமலால் 
ஓடியா வலியா னுடையே னுளெனோ 
கொடியாய் குறியாய் குணமே துமிலாய் 
நெடியா யடியே னிலைகேர் குதியோ?”
(கம். ராமா. இரணி. வதைப்படலம்-104)

அணுவுக்கும் அணுவாய் வர்த்திக்கும் ஒரு பொருளைக் கண்டுகொண்டவன் இவன். அப்பொருள் இருப்பதால் தான் ஒவ்வொரு பொருளும் ‘பொருள்' என்னும் தன்மைவாய்ந்து தனியாகத் திகழ்கிறது என்றும் கண்டு கொண்டவன். 'கொம்பொடு அடைபூ கனிகாய் எனினும் மரம் ஒன்றே' என்றும், பொருள்கள் பலவற்றுக்குள்ளும் உறைபவன் ஒருவனே யென்றும், 'ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் அவன்' என்றும், 'தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான்' என்றும், 'வேலையும் திரையும்போல் வேறுபா டிலான்' என்றும் கண்டறிந்தவன். அடிக்கடி, 'உன்னிற் பிறிதாயினவோ உலகம், பொன்னிற் பிறிதாகில பொற்கலனோ' என்று ஆடிப்பாடி அகங்கரைவான். அப்பரம்பொருளைத் தன்னுள் கொண்டதனாலேயே சாவையும் வென்றவன். தந்தையின் ஆராய்ச்சிக்கு மேம்பட்ட ஆராய்ச்சி செய்து, அதை அநுபவ ஸாத்யமாகச் செய்துகொண்டு விட்டான்.

தநயனின் ஆராய்ச்சித் திறனைக் காணத் தந்தை விழைகின்றான். காட்டு மேல் காட்சிகொள்வான். ' என் கண்ணால் நோக்கிக் காண்டற்கு எங்கும் உளன் காண் ' என்கிறான் புதல்வன் ப்ரஹ்லாதன். ' அது ஆராய்ச்சி யாகாது ; என் கண்ணால் காணும்படி காட்டு ; கள்வன் என மறைந்திருப்பானேன்?' என்று வினாவுகிறான் கனகன். ' கள்வனல்லன் ; காப்பவன் அவன் ; அவன் நின்று நிரப்பிக்கொண்டிருத்தலால்தான் பொருள்கள் நிலைகொள்கின்றன' என்று மறு மொழி கூறுகிறான் குமரன்.

“… …. ….
ஒன்றலில் பொருள்க ளெல்லா மொருவன்புக் குறைவ னென்றாய் 
நன்றது கண்டு பின்னர் நல்லவா புரிதும் தூணில்
நின்றுள னென்னிற் கள்வ னிரப்புதி நிலைமை யென்றான்.”
(கம். ராமா. இரணி. வதைப்படலம்-123)

ஆராய்ச்சித் துறையே அதுதான். ஏற்றுக்கொண்டான் தயங்காமல்.

“சாணினு முளனோர் தன்மை யணுவினைச் சத கூறிட்ட 
கோணினு முளன்மா மேருக் குன்றினு முளனிக் நின்ற 
தூணினு முளனீ சொன்ன சொல்லினு முளனித் தன்மை 
காணுதி விரைவி னென்றா னன்றெனக் கனகன் சொன்னான்.”
(கம். ராமா. இரணி. வதைப்படலம்-124) 

ஆம் ; கோணினும் காட்டவேண்டும்.; தூணிலும் தான் காட்டவேண்டும். என்? சொல்லிலும் கூடக் காட்டவேண்டும். சொல்லினின்றும் அணு குண்டு தயாரிக்கக் கற்ற காலம் அது. ப்ரஹ்லாதனும் தன் ஆராய்ச்சிப்பயனைக் காட்டத் தயாராகிவிட்டான். கனகனும் அதைக் காணத் தயாராகி நின்றான். ஆனால் அவன் மனத்தில் தோன்றும் உணர்ச்சி அலைகள் தான் அவனைக் கெடுக்கின்றன. அணுவைப் பிளந்து பார்க்க முன்வந்தவன், ஆராய்ச்சி முறை தவறி ஆத்ரத்துக்கு ஆட்பட்டுக் கொல்வதிலும் குடிப்பதிலும் மனம் செலுத்துகிறான். 

“உம்பர்க்கு முனக்கு மொத்திவ் வுலகெங்கும் பரந்து ளானைக் 
கம்பத்தின் வழியே காணக் காட்டுதி காட்டி டாயேற் 
கும்பத்தின் கரியைக் கோண்மாக் கொன்றென நின்னைக் கொன்றுன் 
செம்பொத்த குருதி தேக்கி யுடலையுக் தின்பெ னென்றான்.”
(கம். ராமா. இரணி. வதைப்படலம்-125)

அணுவைப் பிளந்து காணவேண்டிய பொருளைச் சிங்க உருவிலா காண அவனுக்கு விருப்பம் வரவேண்டும்? ப்ரஸந்த வதநனான புண்டரீகாக்ஷனை ப்ரஹ்லாதன் காட்டக் கூடும். ஆனால் ஹிரண்யன் கண்கள் கோளரியைத்தான் காணக் காத்துக்கொண்டிருக்கின்றன. தொழுது ஏற்கவேண்டிய பொருளை உதைத்து உருப்படுத்துகிறான்.

“…
விசைதிறந் துருமு வீழ்ந்த தென்னவோர் தூணின் வென்றி 
இசைதிறந் துயர்ந்த கையா லெற்றின னெற்ற லோடும்
திசைதிறக் தண்டங் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்.”

இகழ்ச்சிச் சிரிப்புடன் எற்றினான் இரணியன். இகழ்ச்சிச் சிரிப்புடனே தோன்றியது தத்வம். இவன் எண்ணின உருவம் போலவே சிங்கமாக மன்னுயிர்க்குத் தாய்போல் அன்பினனான ப்ரஹ்லாதன் காணும்படியல்ல ; இகழ்ச்சி நிறைந்த ஹிரண்யன் காணும்படி.

“பிளந்தது தூணு மாங்கே பிறந்தது சீயம் பின்னைக்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது மேலும் கீழும்.” 
(கம். ராமா. இரணி. வதைப்படலம்-130)

வான் தரு வள்ளல்தான். ஆனால் இரணியன் கண்டது தன் வயிர மார்பில் வெள்ளை வள்ளுகிர். ' ஊன்றலும் உதிரவெள்ளம் பரந்துள துலக மெங்கும்' என்கிறார் கவி. நாசகாரியின் வேலை அது. அணுவைப் பிளக்கும் முறைகள் பல. ஹிரண்யன் முறையில் இன்று உலகம் ஈடுபட்டுள்ளது. 

என்று ப்ரஹ்லாதன் முறையில் இறங்குமோ? அறியோம்.

நன்றி - ஶ்ரீந்ருஸிம்ஹப்ரியா 1945

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக