ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 192

 எட்டாவது ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

மத்ஸ்யாவதார வ்ருத்தாந்தம் 

(ஸத்யவ்ரத மன்னவன் மேன்மேலும் உருவம் வளர்ந்து வரப்பெற்ற மத்ஸ்ய (மீன்) ரூபியான பகவானை ஸ்தோத்ரம் செய்தல்) 

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! அற்புதமான செயல்களையுடைய பகவானுடைய முதல் அவதாரத்தின் சரித்ரத்தைக் கேட்க விரும்புகிறோம். அவன் முதலில் ஆச்சர்யமான ஒரு மத்ஸ்யம் (மீன்) போலத் தோன்றினானென்று கேள்வி. தான் ஸர்வேச்வரனாயிருந்தும் காமத்திற்கு உட்பட்ட ஜீவன் போலத் தமோகுணமே இயற்கையாயிருப்பதும், பெருங்கோபமுடையதும் உலகங்களால் நிந்திக்கப்படுவதுமான மத்ஸ்ய (மீன்) உருவத்தை எந்த ப்ரயோஜனத்திற்காகக் (பயனுக்காகக்) கொண்டானோ, அதைக் கேட்க விரும்புகிறோம். ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்த முனிவரே! இவற்றையெல்லாம் எங்களுக்கு உள்ளபடி மொழிவீராக. உத்தமச்லோகனான பகவானுடைய சரித்ரம் ஸமஸ்தலோகங்களின் பாபத்தையும் போக்குமல்லவா?

ஸுதர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனால் இவ்வாறு வினவப்பெற்ற ஸ்ரீசுகமுனிவர் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மத்ஸ்ய (மீன்) அவதார வ்ருத்தாந்தத்தை மொழிந்தார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஈச்வரன் பசுக்களையும், ப்ராஹ்மணர்களையும், தேவதைகளையும் ஸாதுக்களையும், வேதங்களையும் பாதுகாக்கும் பொருட்டும், தர்மம், அர்த்தம் முதலிய புருஷார்த்தங்களை அவர்களுக்கு நிறைவேற்றிக்கொடுக்கும் பொருட்டும் மத்ஸ்யாதி (மீன் முதலிய) உருவங்களை ஏற்றுக்கொள்கிறான். அவன் மேன்மையும் தாழ்மையுமுடைய தேவ மனுஷ்யாதி பூதங்களில் பிறந்து அவற்றைப்போலச் செயல்களைச் செய்துகொண்டிருப்பினும் கர்மத்தினால் விளைகின்ற தேவ மனுஷ்யாதி தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வுகளை) ஏற்றுக்கொள்கிறதில்லை. காற்று எல்லா இடங்களிலும் வ்யாபித்திருப்பினும் அவ்வவற்றின் தோஷங்கள் தீண்டப் பெறாதிருப்பதுபோல ஈச்வரனும் தேவ மனுஷ்யாதி யோனிகளில் (குலங்களில்) பிறந்து அவற்றோடொத்த உருவம் செயல் முதலியன உடையவனாயினும் அவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப் பெறுவதில்லை. அவன் ஸமஸ்த கல்யாண குணங்களும் அமைந்து ப்ராக்ருதமான ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமற்றவனுமாயிருப்பான். 

முன் கல்பத்தின் முடிவில் ப்ராஹ்மமென்னும் நைமித்திக ப்ரளயம் (சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல் முடிந்து இரவு நேரத்தில் ஏற்படும் அழிவு) உண்டாயிற்று. அப்பொழுது பூலோகம் முதலிய மூன்று லோகங்களும் ஸமுத்ரத்தில் முழுகின. பகற்பொழுது முடிந்து ராத்ரிகாலம் நேரிட்டமையால் உறக்கம் நேரிட்டுப் படுத்துக்கொள்ள விரும்புகின்ற ப்ரஹ்மதேவனுடைய முகத்தினின்றும் நழுவின வேதங்களை அருகிலிருந்த ஹயக்ரீவனென்னும் தானவேந்த்ரன் பறித்துக் கொண்டு போயினான். அப்பொழுது தானவ ச்ரேஷ்டனாகிய ஹயக்ரீவன் செய்த கார்யத்தை அறிந்து ஸர்வேச்வரனான பகவான் அவ்வஸுரனைக் கொன்று வேதங்களை ப்ரஹ்மாவுக்கு மீட்டுக்கொடுக்கும் பொருட்டு மத்ஸ்ய (மீன்) உருவம் கொண்டான். 

கீழ் நடந்த அந்தக் கல்பத்தில் ஸத்யவ்ரதனென்னும் ஒரு ராஜர்ஷி இருந்தான். அவன் கோபமில்லாமை முதலிய ஆத்ம குணங்களெல்லாம் நிறைந்து ஸ்ரீமந்நாராயணனையே பரமகதியாகப் பற்றி ஜலத்தையே ஆஹாரமாகக் கொண்டு தவம்புரிந்து வந்தான். அந்த ஸத்யவ்ரதனென்னும் ராஜர்ஷியே இந்த மஹாகல்பத்தில் விவஸ்வானுக்குப் பிள்ளையாகப் பிறந்து ச்ராத்ததேவனென்னும் பெயர் பெற்றுப் பகவானால் மனுவாயிருக்கும் அதிகாரத்தில் ஏற்படுத்தப்பட்டான். அந்த ஸத்யவ்ரதன் ஒருகால் க்ருதமாலையென்னும் (வைகை) நதியில் ஜலதர்ப்பணம் பண்ணிக்கொண்டிருக்கையில், அவன் கைஜலத்தில் ஒரு மத்ஸ்யம் (மீன்) தோன்றிற்று. அப்பால் த்ரமிட (தமிழ்) தேசத்து அரசனாகிய அந்த ஸத்யவ்ரதன் தன் கையிலிருக்கும் அம்மத்ஸ்யத்தை (மீனை) ஜலத்துடன் நதி ஜலத்தில் விட்டான். அவன் மிக்க மன இரக்கமுடையவன். அந்த மன்னவனை நோக்கி அந்த மத்ஸ்யம் (மீன்) மிகவும் மன இரக்கத்திற்கிடமான இந்த வார்த்தைகளைச் சொல்லிற்று.

மத்ஸ்யம் (மீன்) சொல்லுகின்றது:- ராஜனே! தீனரக்ஷகனே! (புகலற்றவர்களைக் காப்பவனே!) ஜலஜந்துக்கள் தங்கள் ஜ்ஞாதிகளையே (கூட்டத்தைச் சேர்ந்தவர்களையே) பக்ஷித்து (உண்டு) ஹிம்ஸிக்கும் (துன்புறுத்தும்) தன்மையுடையவை. அப்படிப்பட்ட ஜல ஜந்துக்களிடத்தில் நான் பயந்து மனவருத்தமுற்றிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை ஜலஜந்துக்கள் பலவும் நிறைந்த இந்த நதி ஜலத்தில் என் விடுகிறாய்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சொல்லிய அந்த வார்த்தையைக் கேட்ட ஸத்யவ்ரதன் ஒன்றான பகவானே தன்னைப் பாதுகாக்கும் பொருட்டு மத்ஸ்ய (மீன்) உருவங்கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் தானே அம்மத்ஸ்யத்தை (மீனை) ரக்ஷிப்பதாக (காப்பதாக) மனங்கொண்டான். கருணாநிதியான அம்மன்னவன் மிகவும் மன இரக்கத்திற்கிடமான அந்த மத்ஸ்யத்தின் (மீனின்) வார்த்தையைக் கேட்டு அதைக் கமண்டலு ஜலத்தில் எடுத்துவிட்டுத் தன் ஆச்ரமத்திற்குக் கொண்டு போனான். அம்மத்ஸ்யம் (மீன்) அந்தக் கமண்டலுவில் ஒரு ராத்ரியில் வளர்ந்து அதிலிருக்கத் தனக்கு இடம் போதாமல் மன்னவனைப் பார்த்து இவ்வாறு மொழிந்தது.

மத்ஸ்யம் (மீன்) சொல்லுகின்றது:- இந்தக்கமண்டலு ஜலத்தில் பேருருவத்தத்துடன் வாஸஞ்செய்ய இஷ்டமில்லை ஆகையால் நான் ஸுகமாயிருக்கும்படி எனக்குப் பெரிய இடம் ஏற்படுத்திக்கொடுப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பால் அம்மன்னவன் அந்த மத்ஸ்யத்தைக் (மீனைக்) கமண்டலுவினின்றும் எடுத்துப் பெரியதான ஓர் கொப்பறையில் ஜலம் சேர்த்து அதில் விட்டான். அதில் விடப்பட்ட அம்மத்ஸ்யமும் (மீனும்) ஒரு முஹூர்த்த காலத்திற்குள் மூன்று முழம் வளர்ந்தது. அது மீளவும் மன்னவனை நோக்கி மொழிந்தது.

மத்ஸ்யம் (மீன்) சொல்லுகின்றது:- ராஜனே! எனக்கு இந்த இடம் ஸுகமாக வசிக்கப் போதவில்லை. இதை விடப் பெரிய இடம் எனக்குக் கொடுப்பாயாக. நான் உன்னைச் சரணம் அடைந்தேனாகையால் நீ என்னைப் பாதுகாக்க வேண்டுமல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சொல்லப்பட்ட ஸத்யவ்ரதன் அந்த மத்ஸ்யத்தைக் (மீனைக்) கொப்பறையினின்றும் எடுத்துப் பெரியதொரு தாமரைத்தடத்தில் விட, அது அந்தத் தடம் முழுவதும் நிரம்பிப் பெரிய மீனாக வளர்ந்து விட்டது. மீளவும் அது மன்னவனைக் குறித்து மொழிந்தது.

மத்ஸ்யம் (மீன்) சொல்லுகின்றது:- மன்னவனே! ஜலத்தையே இருப்பிடமாகவுடைய எனக்கு இந்தத் தடத்து ஜலம் ஸுகமாக வாஸம் செய்யப்போதவில்லை. ஆகையால் என்னைப் பாதுகாக்கும் பொருட்டு வற்றாத ஜலமுடைய பெரிய மடுவில் கொண்டுபோய் விடுவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சொல்லப்பட்ட அம்மன்னவன் அந்த மத்ஸ்யத்தை (மீனை) ஒன்றைவிட ஒன்று பெரியதும் வற்றாத ஜலமுடையதுமான பெரிய மடுக்கள் தோறும் கொண்டுபோய் விட்டான். மீளவும் அம்மடு ஜலம் முழுவதும் நிரம்பி வளர்ந்த அம்மத்ஸயத்தை (மீனை) ஸமுத்திரத்தில் கொண்டுபோய் விட்டான். அவ்வாறு ஸமுத்ரத்தில் விட முயன்ற அம்மன்னவனை நோக்கி மத்ஸ்யம் (மீன்)  இவ்வாறு மொழிந்தது.

மத்ஸ்யம் (மீன்) சொல்லுகிறது:- ஓ வீரனே! இந்த ஸமுத்ரத்தில் மகரமீன் முதலிய மஹாபலிஷ்டமான ஜலஜந்துக்கள் இருக்கின்றனவாகையால் அவை என்னைப் புசித்து விடும். ஆகையால் நீ என்னை இந்த ஸமுத்ரத்தில் விடலாகாது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு அழகிய மொழிகளைப் பேசுகின்ற மத்ஸ்ய (மீன்) ரூபியான பகவானால் மதி (புத்தி) மயங்கப்பெற்ற ஸத்யவ்ரதன் அந்த மத்ஸ்யத்தைப் (மீனைப்) பார்த்து மொழிந்தான்.

ஸத்யவ்ரதன் சொல்லுகிறான்:- என்னை மத்ஸ்ய (மீன்) உருவத்தினால் மதி (புத்தி) மயங்கச் செய்கிற நீ யார்? இப்படிப்பட்ட ப்ரபாவமுடைய மத்ஸ்யத்தை (மீனை) நான் பார்த்ததுமில்லை. கேட்டதுமில்லை. நீ ஒரு பகலில் நூறு யோஜனை தூரம் நாற்புறமும் வ்யாபித்து வளர்ந்தாய். ஆகையால் நீ ஸாதாரண மத்ஸ்யம் (மீன்) அன்று. நீ தேவனே. மற்றும், நீ ப்ரஹ்மாதி தேவர்களில் ஒருவனுமல்லை. விகாரம் (மாறுபாடு) அற்றவனும், ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்) தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய ஸாக்ஷாத் நாராயணனே. இது நிச்சயம். உனக்கு இந்த உருவம் இயற்கையில் ஏற்பட்டதன்று; ப்ராணிகளை அனுக்ரஹிக்கும் பொருட்டு மத்ஸ்யத்தின் (மீனின்) உருவத்தைத் தரித்திருக்கின்றாய். புருஷோத்தமனே! ஜகத்தின் ஸ்ருஷ்டி(படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) காரணனே! ப்ரபூ! உன் பக்தர்களும் உன்னையே சரணம் அடைந்தவர்களுமாகிய எங்களுக்கு நீயே நாயகன். எங்களுக்கு நீ அந்தராத்மாவாய் இருக்கின்றாய். உன்னை அடைவதற்கு நீயே உபாயமன்றி வேறொரு உபாயம் கிடையாது. இத்தகைய உனக்கு நமஸ்காரம். 

மற்றவர்க்கு நேரக்கூடாத உன் ப்ரபாவத்தினால் நீ நாராயணனேயென்று நிச்சயித்தேன். நீ லீலையினால் கொள்ளும் அவதாரங்களெல்லாம் தேவர் முதலிய ப்ராணிகளின் நன்மைக்காகவே என்பதும் தெரியும். நீ எந்த ப்ரயோஜனத்திற்காக இந்த மத்ஸ்ய (மீன்) உருவம் தரித்தனையோ அதை அறிய விரும்புகிறேன். தாமரைக் கண்ணனே! உன் பாதார விந்தங்களைப் பணிவது ஆத்மாக்கள் ஸ்வதந்தர்களென்று (தன் விருப்பம் போல் செயல்பட வல்லவர்கள் என்று) அபிமானித்திருக்கிற (தங்களைப் பெருமையாக நினைத்திருக்கிற)  மற்றவர்களின் பாதங்களைப் பணிவதுபோல வீணாகாது. நீ அனைவர்க்கும் நண்பனாபிருப்பவன்; ப்ரீதிக்கிடமானவன்; மற்றும் அந்தராத்மாவாயிருக்கின்றாய். மற்றவர்கள் அத்தன்மையர் அல்லராகையால் அவர்களைப் பணிவது வீணே. உன்னைப் பணிவது பொய்யாகாதென்பதை நானே ப்ரத்யக்ஷமாக அனுபவித்தேன். எப்படியென்றால், அற்புதமான இந்த மத்ஸ்ய (மீன்) உருவத்தை உன் பக்தனான எனக்கு நீ காட்டினாயல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தன் பக்தர்களுக்கு நண்பனும், ப்ரபுவுமாகிய மத்ஸ்ய (மீன்) ரூபியான பகவான் ப்ரளய ஸமுத்ரத்தில் விளையாட விரும்பி இவ்வாறு மொழிகின்ற ஸத்யவ்ரதனைப் பார்த்துத் தான் செய்ய நினைத்திருப்பதை மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- சத்ருக்களை அழிக்கும் திறமையுடைய ஸத்யவ்ரதனே! பூலோகம், புவர்லோகம் முதலிய இந்த மூன்று லோகங்களும் இன்றைக்கு ஏழாவது நாள் ப்ரளய ஸமுத்ரத்தில் முழுகப்போகின்றன. அவ்வாறு முழுகும்பொழுது என்னால் படைக்கப்பட்ட அகன்ற ஓர் ஓடம் உன்னிடம் வரப்போகின்றது. அப்பொழுது நீ ஸமஸ்தமான ஓஷதிகளையும் பலவகைப்பட்ட விதைகளையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு ஸப்தரிஷிகளுடன் கூடி ஸமஸ்த ஜந்துக்களாலும் சூழப்பட்டுப் பெரியதான அந்த இடத்தில் ஏறி மனத்திற் சிறிதும் கலக்கமின்றி ஸூர்யன் முதலிய எவ்வகை வெளிச்சமுமின்றிக் கேவலம் ரிஷிகளின் தேஜஸ்ஸினால் மாத்ரமே விளங்குவதும் ஒரே வெள்ளமாயிருப்பதுமாகிய ப்ரளய ஸமுத்ரத்தில் லஞ்சரிக்கப் போகின்றாய். அப்பொழுது பெருங்காற்று வீசி ஓடத்தை நடுங்கச்செய்யும். அந்த ஓடத்தை அருகாமையில் வந்திருக்கின்ற என் கொம்பில் வாஸுகியென்னும் மஹாஸர்ப்பமாகிற கயிற்றினால் கட்டுவாயாக. ரிஷிகளோடு கூடின பெரிய அவ்வோடத்தை நான் ப்ரளய ஸமுத்ரத்தில் ப்ரஹ்மாவின் ராத்ரி நடக்கும் வரையில் இழுத்துக்கொண்டு ஸஞ்சரிப்பேன். அப்பொழுது பரப்ரஹ்மமென்று சொல்லப்படுகின்ற என் மஹிமையை நான் உபதேசிக்க நீ கேட்டுத் தெரிந்துகொள்ளப் போகின்றாய். இடையிடையில் ஸந்தேஹங்களையும் கேள்விகளால் தெளிவித்துக்கொண்டு என் மஹிமையை விசதமாக (தெளிவாக) மனத்தில் நிறுத்திக்கொள்வாய்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மத்ஸ்ய (மீன்) ரூபியான பகவான் இவ்வாறு மன்னவனுக்குக் கட்டளையிட்டு அவ்விடத்திலேயே மறைந்தான். ஸத்யவ்ரதனும் பகவான் நிரூபித்த அக்காலத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ராஜரிஷியாகிய அந்த ஸத்யவ்ரதன் தர்ப்பங்களைக் கிழக்கு நுனியாகப்பரப்பி மத்ஸ்ய (மீன்) ரூபியான பகவானுடைய பாதாரவிந்தங்களை த்யானித்துக் கொண்டு அந்தத் தர்ப்பங்களின் மேல் வடகிழக்கு முகமாக உட்கார்ந்தான். அப்பால் ஸமுத்ரம், மழை பெய்கின்ற மஹாமேகங்களால் வளர்ந்து, கரைபுரண்டு நாற்புறத்திலும் பூமியை முழுகிக்கொண்டு வரப் புலப்பட்டது. அப்பொழுது ஸத்யவ்ரதன் மத்ஸ்ய (மீன்) ரூபியான பகவானுடைய கட்டளையை நினைக்கையில், பெரிய ஓடமொன்று அருகாமையில் வரக்கண்டான். 

பிறகு ஓஷதிகளையும், விதைகளையும் எடுத்துக் கொண்டு ஸப்தரிஷிகளுடன் அந்த ஓடத்தில் ஏறிக்கொண்டான். அனந்தரம் ஸப்தரிஷிகள் அந்த மன்னவனை நோக்கி “ராஜனே! கேசவனை த்யானிப்பாயாக. அவனன்றோ நம்மை இந்த ஸங்கடத்தினின்றும் ரக்ஷித்து நமக்கு ஸுகத்தை விளைக்கப்போகிறான்?” என்றார்கள். அம்மன்னவனும் அப்படியே பகவானை த்யானிக்க, ஒற்றைக் கொம்புடையவனும், ஸ்வர்ணமயமான உருவமுடையவனும், பதினாயிரம் யோஜனை அளவுள்ளவனும், மத்ஸ்ய (மீன்) ரூபியுமான பகவான் அந்த மஹார்ணவத்தில் (கடலில்) உடனே வந்து தோன்றினான். அப்பால் முன்பு பகவான் சொன்ன ப்ரகாரமாகவே ஸர்ப்பராஜனாகிய வாஸுகியாகிற கயிற்றால் அவ்வோடத்தைப் பகவானுடைய கொம்பில் கட்டி மனக்களிப்புடன் அந்த மதுஸூதனனை ஸ்தோத்ரம் செய்தான்.

மன்னவன் சொல்லுகிறான்:- அநாதியாகத் தொடர்ந்து வருகின்ற தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின அறிவை அடியோடு இழந்து அந்த அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) விளையும் ஸம்ஸார தாபங்களால் வருந்துகின்ற ஜனங்கள் இந்த ஸம்ஸாரத்தில் யாத்ருச்சிக (எதிர்பாராத விதமாக ஏற்படும்) ஸுக்ருதத்தின் (நற்செயலின்) மூலமாய் நேரிட்ட உன் கருணையால் ஸதாசார்யன் (நல்ல குருவின்) மூலமாக உன்னைப் பற்றுகையில், நீ அவர்களுக்கு மோக்ஷம் கொடுக்கின்றாய். அப்படிப்பட்ட நீயே எங்களுக்குப் புகலிடமாயினாய். நீ ஸ்வயமாகவே (தானாகவே) என்னைத் தத்வங்களைக் கேட்கும்படி தூண்டி ஹிதத்தை (நன்மையை) உபதேசித்து அஜ்ஞானத்தைப் (அறியாமையைப்) போக்குகையால் நான் உன்னைப் பெறுகைக்கு நீயே உபாயமுமாயினாய். 

பிறத்தல், சாதல் முதலிய விபத்துக்களில் அகப்பட்ட ஜீவ வர்க்கம் ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறியாமல் தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) குடிகொண்டு புண்ய, பாபரூபமான கர்மத்திற்கு உட்பட்டுச் சப்தாதி விஷய ஸுகங்களை விரும்பி ஸுகத்திற்கிடமல்லாத கார்யங்களைச் செய்கின்றன. அந்த ஜீவாத்மாக்கள் உன்னைப் பணிந்து தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்மாபிமானம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலிய தங்கள் துர்ப்புத்தியை (கெட்ட புத்தியை) உதறுகிறார்கள். நீயே ஆசார்ய ரூபியாய் அவர்களுடைய அஜ்ஞானத்தைப் (அறியாமையைப்) போக்கி அவர்களை அங்கீகரிக்கின்றாய். அப்படிப்பட்ட நீ எங்கள் அஜ்ஞானமாகிற (அறியாமையாகிற) ஹ்ருதய க்ரந்தியை (முடிச்சை) அறுப்பாயாக. பொன்னும், வெள்ளியும் அக்னியின் ஸம்பந்தத்தினால் அழுக்கெல்லாம் தொலைந்து தமக்கு இயற்கையில் ஏற்பட்ட நிறத்தைப் பெறுவதுபோல, மோக்ஷத்தில் விருப்பமுடைய புருஷன் உன்னைப் பணிவானாயின், இருள் வஸ்த்துக்களைத் தெரியவொட்டாமல் மறைப்பது போல, ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை மறைக்கின்ற புண்யபாபரூபமான கர்மத்தையெல்லாம் துறந்து தனக்கு இயற்கையில் ஏற்பட்ட அபஹதபாப்மத்வம் (பாப ஸம்பந்தம் இல்லாமை) முதலிய குணங்கள் தோன்றப் பெறுவான். அப்படிப்பட்ட ஸர்வேச்வரனான நீ எங்கள் அஜ்ஞானத்தைப் (அறியாமையைப்) போக்கியருள்வாயாக. 

நீயே குருவுக்கும் குரு. நீயே குருவாகத் தோன்றி ஜீவாத்மாக்களை அங்கீகரிக்கின்றாய். உன்னைத் தவிர மற்றொரு குருவுமில்லை. உன்னைப் பணியாத புருஷனுக்கு மற்ற தேவதைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஹிதம் (நன்மை) உபதேசிக்கும் குருக்களாகி அவனைக் கரையேற்றப் பார்க்கினும், அவனுக்கு “உன்னுடைய அனுக்ரஹத்தின் பதினாயிரத்தில் ஒரு பாகத்தையும் செய்யமாட்டார்கள். அத்தகைய ஸர்வேச்வரனான உன்னையே நான் சரணம் அடைகின்றேன். கண் தெரிந்தவன் கண்தெரியாதவனுக்கு முன்னின்று வழி காட்டுவது போல, தம்மைக் காத்துக்கொள்வதற்கு வேண்டிய அறிவுமற்றிருக்கிற ப்ரஹ்மதேவன் முதலிய ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் நீயே அஜ்ஞானத்தைப் (அறியாமையைப்) போக்கும் குரு. நீ ஸூர்யகிரணம் போன்ற அறிவுடையவன். ஒளியுடைய வஸ்துக்களுக்கும் நீயே ஒளி கொடுக்கின்றாய். நற்கதியை அறிய விரும்புகின்ற நாங்கள் அத்தகைய உன்னையே குருவாகப் பற்றினோம். எங்களை அருள்வாயாக. 

ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதிகளில் வருந்துகிற ஸம்ஸாரி ஜீவன் தன்னைத் தான் குருவாகப் பாவித்துக்கொண்டு தன்னைப்போன்ற மற்றொரு ஸம்ஸாரி ஜீவனுக்கு அர்த்த (பொருள்), காமாதிகளைக் (இன்பங்களைக்) கைகூட்டுவிக்கவல்ல ஆபாஸ (பொய்யான) உபாயங்களை உபதேசிக்கிறான். அவன் அந்த உபாயத்தினால் கடைசியில் கடக்கமுடியாததும் ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை மறைப்பதுமாகிய ஸம்ஸாரமாகிற இருளையே மேன்மேலும் விளைத்துக்கொள்கிறான். நீயோவென்றால், அழிவற்றதும் மஹானந்தரூபமுமான மோக்ஷமாகிற பெரும்பயனைத் தவறாமல் விளைவிக்கவல்ல ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின ஜ்ஞானத்தை உபதேசிக்கின்றாய். அந்த ஜ்ஞானம் பெற்ற ஸம்ஸாரி ஜனங்கள் ஸுகமாக உன் ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகின்றார்கள். நீ ஸமஸ்த லோகங்களுக்கும் ஹிதத்தைத் தேடுபவன்; ப்ரீதிக்கிடமானவன்; உள்ளே புகுந்து நியமித்துக் கொண்டிருப்பவன்; ஹிதோபதேசம் செய்பவன்; ஜ்ஞானத்திற்கு ப்ரவர்த்தகன் (வளர்ப்பவன்); அபீஷ்ட ஸித்தியைக் (விரும்பும் பலனைக்) கொடுப்பவன். இப்படிப்பட்ட நீ ஸமஸ்த ப்ராணிகளுடைய ஹ்ருதய கமலங்களிலும் வாஸம் செய்கின்றாய். ஆயினும், உலகத்திலுள்ளவர் அனைவரும் தேஹம் தேஹத்தைத் தொடர்ந்த பந்துக்கள் அர்த்தம், காமம் ஆகிய இவற்றையே புருஷார்த்தமாக நினைத்துச் சப்தாதி விஷயங்களைப் பெறவிரும்பி அத்தகைய உன்னை அறிகிறதில்லை. 

அப்படிப்பட்ட மஹானுபாவனும், தேவர்களுக்கும் மேலான தேவனும் வேண்டிப் பெறத் தகுந்தவனுமாகிய உன்னை நான் ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறிய விரும்பிச் சரணம் அடைகின்றேன். பகவானே! ஆகையால் பரமபுருஷார்த்த ரூபமான பரமாத்ம ஸ்வரூபத்தை வெளியிடுகின்ற உரைகளால் என் ஹ்ருதயத்திலுள்ள தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானங்களாகிற (அறியாமையாகிற) முடிச்சுகளை அறுத்து உன் ஸ்வரூபத்தை எனக்கு வெளியிடுவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்) ஆதிபுருஷனுமாகிய மத்ஸ்ய (மீன்) பகவான் இவ்வாறு ப்ரார்த்திக்கின்ற மன்னவனுக்கு ப்ரளய ஸமுத்ரத்தில் விளையாடிக்கொண்டே தத்வங்களை வெளியிடுகின்ற புராணத்தை உபதேசித்தான். தேவச்ரேஷ்டனாகிய தன் ஸ்வரூபத்தை அறிவிப்பதும் தன்னால் இயற்றப்பட்டதும் ப்ரக்ருதியைக்காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் பகவத் பக்தியோகத்தையும் நித்யம் (தினமும் செய்யும் கர்மங்கள்), நைமித்திகம் (சில முக்ய தினங்களில் செய்யும் கர்மங்கள்) முதலிய கர்மயோகத்தையும் தெளிவுற வெளியிடுவதுமாகிய மத்ஸ்ய (மீன்) புராண ஸம்ஹிதையையும், தன்னுடைய ரஹஸ்யத்தையும் முழுவதும் ஸத்யவ்ரதனுக்கு உபதேசித்தான். 

இவ்வாறு பகவான் உபதேசித்த ஜீவாத்ம ஸ்வரூபத்தையும் ஸநாதன ப்ரஹ்மமாகிய அந்தப் பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தையும் ரிஷிகளுடன் ஓடத்தில் உட்கார்ந்திருக்கின்ற ஸத்யவ்ரதன் ஸம்சயங்களெல்லாம் (ஸந்தேஹங்கள் எல்லாம்) தீரும்படி கேட்டான். அப்பால் அந்த மத்ஸ்ய (மீன்) பகவான் கீழ்நடந்த ப்ரளயத்தின் முடிவில் உறங்கியெழுந்த ப்ரஹ்மதேவனுக்கு ஹயக்ரீவாஸுரனைக் கொன்று வேதங்களை மீட்டுக்கொடுத்தான். அப்பால் அந்த ஸத்யவ்ரதன் ஜ்ஞான (தத்வங்களைப் பற்றிய அறிவு), விஜ்ஞானங்கள் (அவற்றின் அனைத்து ப்ரகாரமான அறிவு) அமையப்பெற்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தினால் இந்தக் கல்பத்தில் வைவஸ்வத மனுவானான். (விவஸ்வானுக்குப் பிள்ளையாகப்பிறந்து ச்ராத்ததேவனென்னும் பெயர் பெற்றானென்று முன்னமே மொழிந்தேனல்லவா?) தன் ஸங்கல்பத்தினால் அற்புதமான மத்ஸ்ய (மீன்) உருவங்கொண்ட பகவானுக்கும் ஸத்யவ்ரதனென்கிற ராஜரிஷிக்கும் நடந்த ஸம்வாத ரூபமான இந்தப் பெரிய இதிஹாஸத்தைக் கேட்கும் புருஷன் ஸமஸ்த பாபத்தினின்றும் விடுபடுவான். இந்தப் பகவானுடைய மத்ஸ்யாவதார வ்ருத்தாந்தத்தைத் தினந்தோறும் கீர்த்தனம் செய்பவனுடைய மனோரதங்களெல்லாம் (மன விருப்பங்கள் எல்லாம்) ஸித்திக்கும். தேஹாவஸானத்தில் (இந்த பிறவியின் முடிவில்) அவன் பரமகதியான மோக்ஷத்தையும் பெறுவான். உறக்கம் தலைக் கொண்டமையால் ஸ்ருஷ்டிக்குந் திறமை மறையப்பெற்ற ப்ரஹமதேவனுடைய முகத்தினின்றும் வேதங்களைப் பறித்துக் கொண்டு போன ஹயக்ரீவாஸுரனைக் கொன்று ப்ரஹ்மதேவனுக்கு அவ்வேதங்களை மீட்டுக்கொடுத்தவனும் ஸத்யவ்ரதனுக்கும், ரிஷிகளுக்கும் பரப்ரஹ்மமாகிய தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவிப்பதான மத்ஸ்ய புராணத்தை உபதேசித்தவனும் ஸகல ஜகத்காரணனும் மாயையினால் மத்ஸ்யத்தின் (மீனின்) உருவம் கொண்டவனுமாகிய பகவானை வணங்குகின்றேன்.

இருபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

அஷ்டம (எட்டாவது) ஸ்கந்தம் முற்றுப்பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக