சனி, 26 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 193

 நவம (ஒன்பதாவது) ஸ்கந்தம் – முதல் அத்தியாயம்

(வைவஸ்வத மனுவின் பிள்ளையான ஸுத்யும்னன் ஒரு வனத்தில் ப்ரவேசித்துப் பெண்ணுருவம் பெறுதலும், அவ்வனத்தில் ப்ரவேசித்தவர் அனைவரும் பெண்ணுருவம் பெறுதற்குக் காரணம் கூறுதலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! மன்வந்தரங்களையெல்லாம் கேட்டேன். அளவற்ற வீரச்செயல்களையுடைய பகவான், அம்மன்வந்தரங்களில் செய்த வீர்யங்களையும் சொல்லக் கேட்டேன். ஸத்யவ்ரதனென்னும் ராஜர்ஷி த்ரமிடதேசங்களுக்கு ப்ரபுவாயிருந்தானென்றும், அவன் முன்கல்பத்தின் முடிவில் பரமபுருஷனைப் பணிந்து, ஜ்ஞானம் பெற்றானென்றும், அவன் இக்கல்பத்தில் விவஸ்வானுடைய பிள்ளையாகப் பிறந்து, ச்ராத்த தேவனென்னும் பெயர் பெற்று, மனுவாயிருக்கும் அதிகாரத்தைப் பெற்றானென்றும், அவனே வைவஸ்வதமனுவென்றும் வழங்கி வருகிறானென்றும், இக்ஷ்வாகு முதலிய மன்னவர்கள் அவனுடைய பிள்ளைகளென்றும், நீர் சொல்லக் கேட்கலானேன். 

ப்ரஹ்மரிஷியே! தனித்தனியே அவர்களுடைய வம்சங்களையும் அவ்வம்சங்களைத் தொடர்ந்த சரித்ரங்களையும், எங்களுக்குச் சொல்ல வேண்டும். மஹாபாகரே! நாங்கள் அதனைக் கேட்கவேண்டுமென்று விருப்பமுற்றிருக்கிறோம். அந்த வைவஸ்வத மனுவின் வம்சத்தில் புண்யமான புகழுடையவர்களும், பெரியவர்களுமாக முன்பு எவரெவர் கழிந்தார்களோ, இனி எவரெவர் பிறக்கப்போகிறார்களோ, இப்பொழுது எவரெவர் இருக்கிறார்களோ, அவர்களுடைய ஸமஸ்தமான விக்ரமங்களையும் எங்களுக்குச் சொல்வீராக.

ஸ்ரீஸூதர் சொல்லுகிறார்:- ப்ரஹ்ம வித்துக்களான அந்தணர்களின் ஸபையில் மேலான தர்மங்களை அறிந்த மஹானுபாவராகிய சுகமுனிவர் பரீக்ஷித்து மன்னவனால் இவ்வாறு வினவப்பெற்று, மேல்வருமாறு கூறினார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சத்ருக்களை அழிக்கும் தன்மையனே! வைவஸ்வத மனுவின் வம்சத்தைப் பெரும்பாலும் சொல்லுகிறேன். கேட்பாயாக. விஸ்தாரமாகச் சொல்ல வேண்டுமென்றால், பல நூறு வர்ஷங்கள் வரையில் சொல்லினும் சொல்லி முடியாது. இதோ புலப்படுகின்ற ஸ்தூல (பெயர், உருவத்துடன் கூடிய), சேதனா சேதன ரூபமான (அறிவு உடைய மற்றும் அறிவு இல்லாத) ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி, புழு வரையிலுமுள்ள ப்ரபஞ்சமெல்லாம் கல்பத்தின் முடிவில் (ப்ரளய காலத்தில்), மேன்மையும் தாழ்மையுமுள்ள பலவகையான பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவனும், ப்ரக்ருதியைக் (அறிவற்றதான மூலப்ரக்ருதியைக்) காட்டிலும் விலக்ஷணனுமான (வேறானவனுமான), பரம புருஷ ஸ்வரூபமாகவே இருந்தது. அப்பொழுது, அப்பரமபுருஷனைத் தவிர மற்றொன்றும் புலப்படவில்லை. அவனைப்போன்ற மற்றொரு காரண வஸ்துவும் இல்லை. அவனொருவனே இருந்தான். காரண தசையை (நிலையை) அடைந்திருக்கின்ற அந்தப் பரம புருஷனுடைய நாபியினின்றும் ஸ்வர்ணம்போல மிகுந்த ஒளியுடன் விளங்குகின்ற ப்ரபஞ்சரூபமான (உலகம் போன்ற) ஒரு தாமரைமலர் தோன்றிற்று. 

மஹாராஜனே! அதினின்றும் பூதங்களைப் படைக்கும் தன்மையனான ப்ரஹ்ம தேவன் உண்டானான். அவனுடைய மனத்தினின்று மரீசியும், அந்த மரீசிக்குக் கச்யபரும் பிறந்தார்கள். அந்தக் கச்யபருக்கு, தக்ஷருடைய புதல்வியும், கச்யபருடைய மனைவியுமாகிய அதிதியிடத்தில் விவஸ்வானென்னும் புதல்வன் உண்டானான். அப்பால், அந்த விவஸ்வானுக்குத் அவனது மனைவியாகிய ஸம்ஜ்ஞையிடத்தில் ச்ராத்த தேவனென்னும் பிள்ளை பிறந்தான். அவனே வைவஸ்வத மனுவானான். அந்த வைவஸ்வத மனு தன் பார்யையாகிய (மனைவியாகிய) ச்ரத்தையிடத்தில், இக்ஷ்வாகு, ந்ருகன், சர்யாதி, திஷ்டன், த்ருஷ்டன், கரூஷகன், நரிஷ்யந்தன், வ்ருஷத்ரன், நபகன், கவி என்னும் பத்துப் புதல்வர்களைப் பெற்றான். இந்த இக்ஷ்வாகு முதலியவர் பிறப்பதற்கு முன்பு ஸந்ததியற்றிருந்த வைவஸ்வத மனுவுக்கு ஸந்ததி உண்டாகும் பொருட்டு அம்மனுவின் ஆசார்யராகிய வஸிஷ்ட முனிவர் மித்ரா வருணர்களைத் தேவதையாகவுடைய ஒரு யாகத்தை நடத்தினார். அந்த யாகம் நடந்துகொண்டிருக்கையில், பாலையே ஆஹாரமாகப் புசித்து நியமத்துடனிருக்கிற மனுவின் பத்னியாகிய ச்ரத்தை, ருத்விக்குக்களில் ஒருவராகிய ஹோதாவினிடம் (யாகத்தில் ரிக்வேத மந்த்ரங்களை ஓதுபவர்) சென்று நமஸ்கரித்து, எனக்குப் பெண் பிறக்கும்படி யாகம் செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டாள். அனந்தரம் அத்வர்யுவால் (யாகத்தில் யஜுர்வேத மந்த்ரங்களை ஓதுபவர்) தூண்டப்பட்ட ஹோதா அவள் ப்ரார்த்தித்ததை நினைத்து, மனவூக்கத்துடன் வாயால் வஷட்காரத்தை உச்சரித்துக்கொண்டு, கையிலெடுத்த ஹவிஸ்ஸை ஹோமம் செய்தான். ஹோதா அவ்வாறு யஜமானனுடைய எண்ணத்திற்கு விபரீதமாக நினைத்து ஹோமம் செய்த அபசாரத்தினால், இளையென்று ப்ரஸித்தி பெற்ற ஒரு பெண் பிறந்தாள். அதைக் கண்டு மன்னவன் தான் நினைத்தபடி பிள்ளை பிறவாமையால் அதிக ஸந்தோஷம் அடையாமல், குருவாகிய வஸிஷ்டரை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.

மனு சொல்லுகிறான்:- மஹானுபாவரே! ப்ரஹ்ம வித்துக்களான நீங்கள் செய்த கார்யம் ஏன் இப்படி விபரீதமாயிற்று? இதென்ன வருத்தம்? மந்த்ரங்களின் சக்தி இப்படி விபரீதமாகக் கூடுமா? நீங்கள் மந்த்ரங்களின் ஸ்வரூபத்தையும், அவற்றின் உபயோகத்தையும், அவற்றின் பொருள்களையும் அறிந்தவர்கள். மனவூக்கத்துடன் கார்யம் செய்யும் தன்மையுடையவர்கள். தவத்தினால் பாபங்கள் பஸ்மமாகப் (சாம்பலாகப்) பெற்றவர்கள். தேவதைகளிடத்தில் பொய் பிறப்பது போல, அப்படிப்பட்ட உங்கள் நினைவு இப்படி ஏன் விபரீதமாயிற்று?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- எங்கள் கொள்ளு பாட்டனாராகிய வஸிஷ்ட முனிவரும், அந்த மனுவின் வசனத்தைக் கேட்டு ஜ்ஞானாதி குணங்களெல்லாம் நிறைந்தவராகையால், ஹோதா விபரீதமாக நினைத்து ஹோமம் செய்த அபசாரத்தினால் விளைந்ததென்பதை அறிந்து, வைவஸ்வத மனுவைக் குறித்து மொழிந்தார்.

வஸிஷ்டர் சொல்லுகிறார்:- மனுவே! ஹோதாவின் தவறினால் உன் நினைவுக்கு விபரீதமான பலன் உண்டாயிற்று. ஆயினும், நான் அதை என் தவ மஹிமையினால் மாற்றி, உனக்கு நற்பிள்ளை உண்டாகும்படி செய்கிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! பெரும்புகழுடையவரும், மஹானுபாவருமாகிய, அந்த வஸிஷ்ட முனிவர் இவ்வாறு நிச்சயித்துக்கொண்டு, இளையென்னும் அப்பெண்ணுக்கு ஆண்மை உண்டாக விரும்பி ஆதிபுருஷனாகிய பகவானை ஸ்தோத்ரம் செய்தார். அப்பால், ஸர்வேச்வரனும் தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவான், அவருடைய ஸ்தோத்ரத்தினால் ஸந்தோஷம் அடைந்து, கருணை கூர்ந்து, அவருடைய இஷ்டத்தை நிறைவேற்றினான். அதனால், அந்த இளையென்னும் பெண், ஸுத்யும்னனென்னும் பேர் பூண்ட சிறந்த புருஷனானான். 

மஹாராஜனே! வீரனாகிய அந்த ஸுத்யும்னன், ஒருகாலத்தில் வேட்டையாடுவதற்காக வனம் செல்ல விரும்பிச் சில மந்திரிகளுடன் கூடி, ஸிந்துதேசத்தில் பிறந்த சிறப்புடைய குதிரையின்மேல் ஏறி, உறுதியும், அழகும் அமைந்த வில்லையும் மிகவும் அற்புதமான பாணங்களையும் தரித்துக் கவசம் பூண்டு, மிருகத்திற்காக வடதிசையில் சென்றான். இவ்வாறு திரிகின்ற அந்த ராஜகுமாரனாகிய ஸுத்யும்னன், மேரு பர்வதத்தின் அடிவாரத்திலுள்ள ஒரு வனத்திற்குள் நுழைந்தான். அவ்வனத்தில், ருத்ரன் பார்வதியுடன் கலந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். சத்ருக்களை அழிக்கும் திறமையுடைய அந்த ஸுத்யும்னன், அவ்வனத்தில் நுழைந்த மாத்ரத்தினால் தான் பெண்ணாகவும், தன் குதிரை பெண் குதிரையாகவும், இருக்கக் கண்டான். அப்பொழுது, அந்த ஸுத்யும்னனைத் தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் பெண்ணுருவமாகிவிட்டார்கள். அவர்கள் அதைக்கண்டு “ஆ! இதென்ன! நமக்கு இப்படி நேர்ந்ததே!” என்று மனவருத்தமுற்றார்கள்.

பரீக்ஷித்து சொல்லுகிறான்:- மஹானுபாவரே! இப்படித் தன்னிடத்தில் நுழைந்த மாத்ரத்தில் புருஷனைப் பெண்ணாக்கவல்ல தேசம் எப்படி உண்டாயிருக்கக்கூடும்? ஒருகால் உண்டாயிருப்பினும், அது யாவரால் ஏற்படுத்தப்பட்டது? இப்படியும் ஓரிடம் உண்டாயிருக்குமென்று எமக்குத் தோற்றவில்லை. ஆகையால், அதைப்பற்றிக் கேட்கிறோம். இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறுவீராக. எங்களுக்கு இவ்விஷயத்தில் பெரும் குதூஹலம் (ஆர்வம்) உண்டாயிருக்கின்றது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மனவுறுதியுடன் அழகிய வ்ரதங்களை அனுஷ்டிக்கும் தன்மையரான முனிவர்கள், ருத்ரனைக் காண விரும்பித் தங்கள் தேஹ காந்தியினால் (ஒளியினால்) திசைகளையெல்லாம் இருளற்று விளங்கும்படி செய்து கொண்டு, இளாவ்ருத வர்ஷத்திலுள்ள அவ்வனத்திற்குச் சென்றார்கள். அங்கு தன் கணவனுடன் கலந்து ஆடையின்றியிருக்கும் பார்வதி, ரிஷிகள் வந்திருப்பதைக் கண்டு மிகவும் வெட்கி, பர்த்தாவான ருத்ரனுடைய மடியினின்றும் விரைவுடன் எழுந்து, வஸ்த்ரத்தை உடுத்திக் கொண்டாள். ரிஷிகளும், க்ரீடித்துக் (விளையாடிக்) கொண்டிருக்கின்ற பார்வதீ பரமேச்வரர்கள் ஸம்போக ஸுகத்தில் (ஒருவரோடு ஒருவர் இணைந்த மகிழ்ச்சியில்) மிகவும் ஆழ்ந்திருப்பதை ஆலோசித்து, அவ்வனத்தினின்றும் திரும்பி, நரநாராயணாச்ரமத்திற்குச் சென்றார்கள். அப்பொழுது, மஹானுபாவனாகிய ருத்ரன், தன் காதலியான பார்வதிக்கு ப்ரியத்தைச் செய்ய விரும்பி “இவ்விடத்தில் நுழைகின்றவன் பெண்ணாகக் கடவன்” என்று மொழிந்தான். அந்த ருத்ர சாபத்திற்குப் பின்பு, அவ்விடத்தில் புருஷர்கள் நுழைவதில்லை. இது ப்ரஸித்தம்.

பெண்ணுருவம் பெற்ற அம்மன்னவனும் தன்னைப் போலவே பெண்ணுருவம் பெற்ற தன் பரிவாரங்களுடன் அவ்விடத்தில் காடு காடாகத் திரிந்து கொண்டிருந்தான். அப்பால், சந்திரனுடைய பிள்ளையும் மஹானுபாவனுமாகிய புதன், தன் ஆச்ரமத்திற்கு அருகாமையில் பல மடந்தைகளுடன் உலாவுகின்ற அம்மடந்தையர் மணியைக் கண்டு அவளைப் புணர (சேர) விரும்பினான். அழகிய புருவங்கள் அமைந்த அப்பெண்மணியும், அவ்வாறே ஸோமராஜன் பிள்ளையாகிய புதனைக் கண்டு புணர (சேர) விரும்பினாள். அதனால், அந்தப் புதன் அவளுடன் கலந்து, அவளிடத்தில் புரூரவஸ்ஸென்னும் பேருடைய ஒரு புதல்வனைப் பெற்றான். இவ்வாறு, பெண்ணுருவம் பெற்ற மனுவின் புதல்வனாகிய ஸுத்யும்னன் தன் குலாசார்யராகிய வஸிஷ்டரை நினைத்தானென்று கேள்விப்பட்டிருக்கிறோம். வஸிஷ்டரும் அவனுக்கு அத்தகைய நிலைமை நேரிட்டிருப்பதைக் கண்டு, க்ருபையினால் மிகவும் வருந்தி, அவனுக்கு ஆண் தன்மை உண்டாக வேண்டுமென்று விரும்பி ருத்ரனை ஸ்தோத்ரம் செய்தார். மஹானுபாவனாகிய அந்த ருத்ரனும், அவருடைய ஸ்தோத்ரத்தினால் ஸந்தோஷம் அடைந்து, வஸிஷ்டருக்கு ப்ரீதியை விளைக்கவும், தன் வார்த்தையை ஸத்யமாகச் செய்யவும் முயன்று இவ்வாறு மொழிந்தான்.

ருத்ரன் சொல்லுகிறான்:- இந்த ஸுத்யும்ன மன்னவன் உம்முடைய தவ மஹிமையால் ஒரு மாதம் புருஷனாகவும், என் வார்த்தை மெய்யாவதற்காக ஒரு மாதம் பெண்ணாகவும் இருக்கப் போகிறான். இவ்வாறு பெண் தன்மையும், ஆண் தன்மையும், மாறிமாறி நிலைநின்றிருக்கப் பெற்று யதேஷ்டமாகப் பூமியைப் பாதுகாத்து வருவானாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு, ஆசார்யரான வஸிஷ்டருடைய அநுக்ரஹத்தினால், ஸுத்யும்னன் தான் ஆசைப்பட்ட ஆண் தன்மை ஒருமாதம் விட்டு ஒரு மாதமாக மாறிமாறி வருகையாகிற நிலைமையைப் பெற்று உலகத்தைப் பாதுகாத்து வந்தான். ஆயினும், அவன் இடையிடையில் ஒருமாதம் பெண்ணுருவம் பெற்று வெட்கத்தினால் மறைந்திருந்தானாகையால், ப்ரஜைகள் (மக்கள்) அவன் மன்னவனாயிருப்பதை அவ்வளவாக அபிநந்திக்கவில்லை (விரும்பவில்லை). அம்மன்னவனுக்கு, உத்கலன், கயன், விமலன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள்.

தர்மத்தில் மிகுதியும் விருப்பமுடைய அவர்கள் மூவரும் தக்ஷிண தேசங்களுக்கு ப்ரபுக்களாயிருந்தார்கள். அப்பால், சில காலம் செல்கையில் பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாகிய ஸுத்யும்னன், ஜிதேந்திரியனாயிருந்து (இந்த்ரியங்களை வென்று) தான் பெண்ணாயிருந்த பொழுது தனக்கு புதனிடத்தினிருந்து பிறந்த பிள்ளையாகிய புரூரவஸ்ஸுக்குப் பூமண்டலத்தையெல்லாம் கொடுத்துத் தான் தவம் செய்ய விரும்பி வனத்திற்குச் சென்றான்.

முதல் அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக