ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 194

ஒன்பதாவது ஸ்கந்தம் - இரண்டாவது அத்தியாயம்

(கரூஷகன் முதலிய மனுபுத்ரர்கள் ஐவரின் வம்சங்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் பிள்ளையாகிய ஸுத்யும்னன் வனத்திற்குப்போகையில், வைவஸ்வதமனு, பிள்ளைகள் பிறக்க வேண்டுமென்று விரும்பி, யமுனா நதிக்கரையில் நூறாண்டுகள் தவம்செய்தான். அப்பால் அந்தமனு, பிள்ளைக்காக ஸர்வேச்வரனும், ஸ்வதந்த்ரனும், தேவதேவனும், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானை ஆராதித்தான். அனந்தரம் தன்னோடு ஒத்தவர்களான இக்ஷ்வாகு முதலிய பத்துப் பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் வ்ருஷத்ரனென்பவன் தன் குருவினால் பசுக்களைப் பாதுகாக்கும்படி ஏற்படுத்தப்பட்டான். அவனும் அப்படியே ராத்ரியில் வீராஸனத்தில் உட்கார்ந்து, மனவூக்கத்துடன் கையில் கத்தியை ஏந்தி, புலி முதலிய துஷ்ட (கொடிய) ஜந்துக்களிடத்தினின்று பசுக்களைப் பாதுகாத்து வந்தான். 

இப்படியிருக்கையில், ஒருநாள் ராத்ரியில் மேகம் மழைபெய்து கொண்டிருக்க, ஒரு பெரும் புலி தொழுவத்தில் நுழைந்தது. அப்பொழுது, அதைக்கண்டு படுத்துக் கொண்டிருக்கும் பசுக்கள் பயந்து, எழுந்து தொழுவத்தில் திரியத் தொடங்கின. பலிஷ்டமாகிய (பலம் பொருந்திய) அந்தப்புலி, ஒரு பசுவைப் பிடித்துக்கொண்டது. பிடியுண்ட பசு, வருந்திக் கதறலிட்டது. வ்ருஷத்ரன் அந்தப் பசுவின் கதறலைக்கேட்டு, அருகே சென்றான். ராத்ரியில் மேகங்கள் மூடிக்கொண்டிருந்தபடியால், நக்ஷத்ரங்களும் தோன்றாமல், மறைந்திருக்கும் தருணத்தில், அவன் இது பசுவென்றும் இது புலியென்றும் அறியாமல், புலியென்னும் எண்ணத்தினால் கபில (சிவப்பு) நிறமுடைய, பசுவின் தலையைக் கத்தியைக்கொண்டு பலத்தினால் வெட்டினான். பசுவின் தலையில் கத்தியை நோக்கி அடிக்கும்பொழுது, அந்தக் கத்தியின் நுனியானது பட்டு, புலியின் காது அறுப்புண்டது. புலி அதனால், மிகவும் பயந்து, வழியெல்லாம் ரத்தத்தைப் பெருக்கிக்கொண்டு, தொழுவத்தின்றும் ஓடிப்போயிற்று. 

அப்பால், சத்ரு வீரர்களை அழிக்கும் திறமையமைந்த வ்ருஷத்ரன், புலி அடியுண்டு மாண்டதென்று நினைத்துக் கொண்டிருக்கையில், பொழுதுவிடிந்து உதயமானபின்பு, தன்னால் அடியுண்டு மாண்டு விழுந்திருக்கின்ற பசுவைக்கண்டு மிகவும் வருந்தினான். அவன் செய்ய வேண்டுமென்ற எண்ணமின்றி அறியாமையால் அபராதம் (தவறு) செய்திருப்பினும், குலாசார்யரான வஸிஷ்டர் அவனைப் பார்த்து “நீ க்ஷத்ரியாதமன் (க்ஷத்ரியர்களில் மிகவும் தாழ்ந்தவன்). இனி, க்ஷத்ரியாதமனாகவும் கூட நீ இருக்கமாட்டாய். நீ இந்தப் பாபத்தினால், கீழ்மகனாகக் கடவாய்” என்று சபித்தார். 

இவ்வாறு தன் குருவினால் சபிக்கப்பட்ட வ்ருஷத்ரன், கைகளைக்குவித்து, அப்படியே அந்தச் சாபத்தைப் பெற்றுக்கொண்டான். அப்பால், வீரனாகிய வ்ருஷத்ரன், ஜிதேந்திரியனாகி (இந்த்ரியங்களை வென்று), முனிவர்களுக்கு இஷ்டமான பகவத் உபாஸனமாகிற வ்ரதத்தை ஏற்றுக்கொண்டான். அவன் சில நாட்களில் ஸர்வ பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவனும், ஸமஸ்த தோஷங்களும் தீண்டப்பெறாதவனும், பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனுமாகிய, பரமபுருஷனிடத்தில் சிறந்த ஜ்ஞான நிஷ்டை (உறுதியான அறிவு) உண்டாகப் பெற்று, ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனாகி, ஸுக, துக்கங்கள் இரண்டையும் துல்லியமாகப் பாவிக்கும் தன்மையனானான். இஹலோக (இந்த உலகத்து) போகங்களிலும் (இன்பங்களிலும்), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய மற்ற உலக) போகங்களிலும் (இன்பங்களிலும்) பற்றற்று, ராகம் (விருப்பு, வெறுப்பு) முதலிய தோஷங்களால் மனம் கலங்கப்பெறாமல், இந்த்ரியங்கள் (புலன்கள்) எல்லாம் நினைத்தபடி அடங்கப்பெற்று, தேஹத்தை ஒழிய (தன் உடலைத் தவிர) அதைச்சேர்ந்த மற்ற பரிக்ரஹங்கள் (சுற்றம், சொத்து, வேலைக்காரர்கள்) எவையுமின்றி, தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளால் (உணவினால்) தேஹதாரணம் (உடலை நிலைநிறுத்தி) பண்ணிக் கொண்டிருந்து பரமாத்மாவினிடத்தில் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, தான் பரமாத்மாவுக்கு சேஷப்பட்டவனென்றும் (அடிமை என்றும்), தன்னுடைய ஸத்தாதிகளெல்லாம் (இருப்பு, நீடிப்பு, செயல் அனைத்தும்) அந்தப் பரமாத்ம அதீனமென்றும் (பகவானுக்கு உட்பட்டது என்றும்) அனுஸந்தித்து, மஹானந்த ரூபமான பகவத் உபாஸனமாகிற ஜ்ஞானத்தினால் ஸந்தோஷம் அடைந்து, மற்ற விஷயங்களில் சிறிதும் விருப்பின்றி மனவூக்கமுற்று, மாறாத பக்தியோகத்தில் நிலைநின்று, மூடர், குருடர், செவிடர் இவர்களின் ஆகாரம் (வடிவு) உடையவனாகி, இப்பூமியில் திரிந்து கொண்டிருந்தான். 

இத்தகைய நடத்தையோடிருந்த முனிவனாகிய அந்த வ்ருஷத்ரன், சரீர அவஸான காலம் (மரண காலம்) நேரப்பெற்று, ஒருகால் காட்டுக்குள் நுழைந்து, அங்குக் கிளர்ந்தெரிகின்ற காட்டுத்தீயைக் கண்டு, அதில் ப்ரவேசித்து, அந்த அக்னியால் கை, கால் முதலிய கரணங்களெல்லாம் தக்தமாகப் பெற்றுப் (எரியப்பெற்று) பரப்ரஹ்மத்தை அடைந்தான். இக்ஷ்வாகு முதலிய மனு புத்ரர்கள் அனைவர்க்கும் பின் பிறந்தவனாகிய கவியென்பவன், சப்தாதி விஷயங்களில் (ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்கிற ஐந்து விஷயங்களில்) விருப்பமின்றி ராஜ்யம், பந்துக்கள், க்ருஹம் இவை எல்லாவற்றையும் துறந்து, ஸ்வயம்ப்ரகாசனும் (தானே தோன்றுபவனும்) இயற்கையில் ஏற்பட்ட பேரொளியுடையவனுமாகிய பரமபுருஷனை மனத்தில் நிறுத்திக்கொண்டு, இளமையிலேயே பரமகதியான மோக்ஷத்தை அடைந்தான். 

மனுவின் பிள்ளையாகிய கரூஷனுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். க்ஷத்ரிய ஜாதியர்களான அம்மூவரும், காரூஷர்களென்று பெயர்பெற்று, உத்தர (வடக்கு) தேசங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ப்ராஹ்மணர்களிடத்தில் பக்ஷபாதமுடையவர்கள் (அனுகூலமாய் இருந்து அவர்களை மதித்துக் காப்பவர்கள்). அவர்கள் விரும்பினவற்றை நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையர்கள்; தர்மத்திற்கு அனுகூலமான வாத்ஸல்யம் உடையவர்கள். திருஷ்டனுக்குத் தார்ஷ்டர்களென்னும் சில க்ஷத்ரியர்கள் பிறந்தார்கள். அவர்கள் பரப்ரஹமத்தை உபாஸித்து மோக்ஷத்தை அடைந்தார்கள். ந்ருகனுக்கு ஸுமதி என்பவன் பிறந்தான். ஸுமதிக்குப் பூதஜ்யோதி என்பவன் பிறந்தான். பூதஜ்யோதிக்கு வஸுவும், வஸுவுக்கு ப்ரதீகனும், ப்ரதீகனுக்கு ஓகவானும் பிறந்தார்கள். அந்த ஓகவானுக்கு, ஓகவானென்று பேருடைய ஒரு பிள்ளையும், ஓகவதி என்னும் பெண்ணும் பிறந்தார்கள். அந்த ஓகவதியை ஸுதர்சனன் என்பவன் மணம் புரிந்தான். மனுபுத்ரர்களில் ஒருவனாகிய நரிஷ்யந்தனுக்குச் சித்ரஸேனனும், சித்ரஸேனனுக்குத் தக்ஷனும், தக்ஷனுக்கு மீட்வானும், மீட்வானுக்குக் கூர்ச்சனும், கூர்ச்சனுக்கு இந்த்ரஸேனனும், இந்த்ரஸேனனுக்கு வீதிஹோத்ரனும், வீதிஹோத்ரனுக்கு ஸத்யச்ரவஸ்ஸும், ஸத்யச்ரவஸ்ஸுக்கு உருச்ரவஸ்ஸும், அவனுக்குத் தேவதத்தனும் பிறந்தார்கள். அந்தத் தேவதத்தனுக்கு, அக்னிபகவான் தானே பிள்ளையாகப் பிறந்தான். அவன் கானீனனென்று ப்ரஸித்திபெற்ற மஹர்ஷியானான். அவனுக்கு அக்னிவேச்யனென்றும், ஜாதுகர்ண்யனென்றும் வேறு இரண்டு பெயர்கள் உண்டு. அந்தக் கானீன மஹர்ஷியிடத்தினின்று, ப்ராஹ்மண குலம் உண்டாயிற்று. அந்த ப்ராஹ்மண குலம், அக்னிவேச்ய கோத்ரமென்று வழங்கி வந்தது. இவ்வாறு, நரிஷ்யந்தன் முதலியவர்களைச் சொன்னேன். இனி, மனுபுத்ரனாகிய திஷ்டனுடைய வம்சத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

த்ருஷ்டனுடைய பிள்ளை நாபாகன். இவன் க்ருஷி, கோரக்ஷம், வாணியம் முதலிய தொழிலினால் வைச்யத் தன்மையை அடைந்தான். மனுவின் பெயரனாகிய நாபகனைக் காட்டிலும் இவன் வேறுபட்டவன். நாபாகனுடைய பிள்ளை ஹலந்தனன். அவனுடைய பிள்ளை வத்ஸப்ரீதி. அவனுடைய பிள்ளை ப்ராம்சு. அவன் பிள்ளை ப்ரமிநி. அவன் பிள்ளை கமித்ரன். அவன் பிள்ளை சக்ஷஷன். அவன் பிள்ளை விவிம்சதி. அவன் பிள்ளை தம்பன். அவன் பிள்ளை கனிநேத்ரன். அவன் தார்மிகனாயிருந்தான் (தர்மத்தில் ஈடுபாடு உடையவனாய் இருந்தான்). அவன் பிள்ளை கரந்தமன். அவன் மஹாராஜனாயிருந்தான். அவனுடைய பிள்ளை அவிக்ஷத் என்பவன். அவனுடைய பிள்ளை மருத்தன். அவன் சக்ரவர்த்தியாயிருந்தான். அங்கிரஸ்ஸின் புதல்வரும் மஹா யோகியுமாகிய ஸம்வர்த்தரென்பவர் அந்த மருத்தனுக்கு யாகம் செய்வித்தார். மருத்தனுடைய யாகம் போன்ற யாகம், இப்பூமண்டலத்தில் ஒருவனும் செய்யவில்லை. அவனுடைய யாகத்தில் வேண்டிய கருவிகளெல்லாம் ஸ்வர்ண (தங்க) மயமாய் இருந்தன. அந்த யாகத்தில், இந்த்ரன் ஸோம ரஸத்தைப் (யாகத்தின் முடிவில் ஸோமம் என்ற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாற்றைப்) பருகி, மிகவும் ஸந்தோஷம் அடைந்தான். ப்ராஹ்மணர்களும், தக்ஷிணைகளால் ஸந்தோஷம் அடைந்தார்கள். மற்றும், அந்த யாகத்தில் மருத்துக்கள் புசிக்கின்றவர்களுக்கு அன்னாதிகளை எடுத்துப் பரிமாறினார்கள். விச்வதேவதைகள், ஸபிகர்களாய் (யாகத்தைக் காப்பவர்கள்) இருந்தார்கள். 

மருத்தனுடைய பிள்ளை தமன். அவன் பிள்ளை ராஜவர்த்தனன். அவன் பிள்ளை ஸுத்ருதி. அவன் பிள்ளை நரன். அவனுக்கு ஸௌத்ருதேயனென்று மற்றொரு பேரும் உண்டு. அவன் பிள்ளை பிந்து. அவன் பிள்ளை தருணபிந்து. அவன் பெரிய மன்னவனாயிருந்தான். அவன் பணிவதற்குரிய பல நற்குணங்கள் அமைந்தவன். அப்ஸர மடந்தைகளில் சிறந்தவளும், இந்த்ரனுக்கு இனியவளுமாகிய, அலம்புஸையென்னும் அப்ஸர மடந்தை அம்மன்னவனை அநுஸரித்திருந்தாள். அந்த தருண பிந்துவுக்கு, அவ்வலம்புஸையிடத்தில் சில பிள்ளைகளும், இலபிலையென்னும் ஒரு கன்னிகையும் பிறந்தார்கள். அந்த இலபிலையிடத்தில், விச்ரவஸ்ஸு குபேரனைப் பிள்ளையாகப்பெற்றான். அந்த தருணபிந்து, யோகேச்வரரும் ரிஷியுமாகிய தன் தந்தையிடத்தினின்று மேலான வித்யையைப் பெற்றான். தருணபிந்துவுக்கு விசாலன், சூன்யபந்து, தூம்ரகேது என்று மூன்று பிள்ளைகள். அவர்களில் விசாலன், மன்னவன் வம்சத்தை வளர்ப்பவனாகி, வைசாலியென்னும் பட்டணத்தை நிர்மித்தான். அந்த விசாலனுடைய பிள்ளை ஹேமசந்த்ரன். அவனுடைய பிள்ளை தூம்ராக்ஷன். அவன் பிள்ளை ஸஹதேவன். அவன் பிள்ளை க்ருஸாஸ்வன். அவன் பிள்ளை ஸோமதத்தன். அவன் அச்வமேத யாகங்களால் ஆராதிக்கத் தகுந்தவனும், ஜகத்திற்கெல்லாம் ப்ரபுவுமாகிய, பரமபுருஷனை ஆராதித்து யோகேச்வரர்கள் ப்ரார்த்திக்கிற பரமகதியாகிய மோக்ஷத்தை அடைந்தான். ஸோமதத்தனுடைய பிள்ளை ஸுமதி. அவன் பிள்ளை ஜனமேஜயன். விசாலனுடைய வம்சத்தில் பிறந்த இம்மன்னவர்கள், தங்கள் கூடஸ்தனாகிய தருணபிந்துவுக்குப் புகழை வளர்க்கும் தன்மையர்கள். 

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக