ஶ்ரீமத் பாகவதம் - 195

 ஒன்பதாவது ஸ்கந்தம் - மூன்றாவது அத்தியாயம்

(சர்யாதியின் வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மனுவின் பிள்ளையாகிய சர்யாதி என்னும் மன்னவன், வேதங்களின் பொருள்களை ஆராய்ந்தறிவதில் ஊக்கமுடையவனாயிருந்தான். அவன், ஆங்கிரஸர்களின் ஸத்ரத்தில் (நீண்ட நாட்கள் செய்யப்படும் யாகம்) இரண்டாவது நாள் செய்யவேண்டிய கர்மத்தையெல்லாம் சொன்னான். அவனுக்குத் தாமரையிதழ் போன்ற கண்களுடைய ஸுகன்யை என்னும் ஒரு கன்னிகை இருந்தாள். அவன் அக்கன்னிகையுடன் வனத்திற்குச் சென்று, அங்கு சயவனருடைய ஆச்ரமத்திற்குப் போனான். அந்த ஸுகன்யை, ஸகிகளால் (தோழிகளால்) சூழப்பட்டு, வனத்தில் வ்ருக்ஷங்களைத் (மரங்களைத்) தேடிக்கொண்டு திரிகையில், ஒரு புற்றின் வாயில் மின்மினிப்பூச்சிகள் போன்ற இரண்டு தேஜஸ்ஸுக்களைக் (ஒளியைக்) கண்டாள். இளம்பருவமுடைய அந்த ஸுகன்யை, ஸகிகளால் (தோழிகளால்) தூண்டப்பட்டு, அறியாமையினால் அந்தத் தேஜஸ்ஸுக்களை முள்ளால் குத்தினாள். அப்பொழுது, அந்தப்புற்றின் வாயினின்று வெகுவாக ரக்தம் பெருகிற்று. அந்த க்ஷணமே ஸைன்யங்களுக்கெல்லாம் (படைகளுக்கெல்லாம்) மலமூத்ரங்கள் தடைப்பட்டது. அதைக்கண்டு ராஜர்ஷியாகிய சர்யாதி, வியப்புற்று, தன் வேலைக்காரர்களைப் பார்த்து மொழிந்தான்.

சர்யாதி சொல்லுகிறான்:- நீங்கள் பார்க்கவராகிய ச்யவனருக்கு ஏதேனும் அபராதம் (தவறு) செய்தீர்களா? நம்மைச் சேர்ந்த ப்ராணி எதுவாயினும், ஆச்ரமத்திற்கு ஏதேனும் கெடுதி செய்திருக்க வேண்டும். இது நிச்சயம். இல்லாத பக்ஷத்தில் இப்படிப்பட்ட உபத்ரவம் (தீங்கு, துக்கம்) உண்டாகமாட்டாது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு, சர்யாதி மன்னவன் வினவிக் கொண்டிருக்கையில், அவன் பெண்ணாகிய ஸுகன்யை பயந்து, தந்தையைப் பார்த்து மொழிந்தாள்.

ஸுகன்யை சொல்லுகிறாள்:- நான் சிறிது அபராதம் (தவறு) செய்தேன். அது யாதெனில், ஒரு புற்றின் வாயில் இரண்டு தேஜஸ்ஸுக்களைக் கண்டேன். நான் அவற்றை இன்னவையென்று ஆராய்ந்தறியாமல், முள்ளினால் குத்தினேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புதல்வி மொழிந்த அவ்வார்த்தையைக் கேட்டு, சர்யாதி மன்னவன் பயந்து, புற்றில் மறைந்திருக்கின்ற ச்யவன முனிவரை அருள்புரிவித்துக் கொண்டான். அப்பால், அம்முனிவருடைய அபிப்ராயத்தை (எண்ணத்தை) அறிந்து, தன் புதல்வியை அவருக்குக் கொடுத்து, வருத்தம் நீங்கப்பெற்று அம்முனிவரிடம் விடைபெற்றுக்கொண்டு, பரிவாரங்களுடன் பட்டணம் போய்ச் சேர்ந்தான். பிறகு ஸுகன்யை பெருங்கோபமுடைய ச்யவனரைப் பதியாகப் பெற்று, அவருடைய அபிப்ராயத்தை அறிந்து மனவூக்கத்துடன் அனுஸரித்து, அவரை மனக்களிப்புறும்படி செய்தாள். அப்பால் சிலகாலம் கழிகையில், ச்யவன மஹர்ஷி, தன்ஆச்ரமத்திற்கு வந்து, அச்வினி தேவதைகளை நன்கு பூஜித்து, இவ்வாறு மொழிந்தார்.

ச்யவனர் சொல்லுகிறார்:- திறமையமைந்த தேவர்களே! முதுமை மூடிக்கிடக்கிற எனக்கு, நீங்கள் யௌவன வயதைக் (இளமையைக்) கொடுப்பீர்களாக. யஜ்ஞத்தில் (யாகத்தில்) ஸோம பானமற்ற (ஸோமரஸம் கிடைக்கப் பெறாத) உங்களை நான் ஸோம யாகத்தினால் (ஸோம ரஸம் உடைய யாகத்தினால்) ஆராதித்து, உங்களுக்கு ஸோம ரஸம் (யாகத்தின் முடிவில் ஸோமம் என்ற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறு) நிறைந்த பாத்ரத்தைக் கொடுக்கிறேன். ஆகையால், ஸ்த்ரீகள் விரும்பும்படியான யௌவன (இளம்) வயதையும், அவர்கள் மேல்விழுந்து விரும்பும்படியான ஸௌந்தர்யத்தையும் (அழகையும்) எனக்குக் கொடுப்பீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்வர்க்க லோகத்து வைத்ய ச்ரேஷ்டர்களான அந்த அச்வினி தேவதைகள் இவ்வாறு மொழிந்த அம்முனிவருடைய வார்த்தையைக்கேட்டு, அபிநந்தித்து (வரவேற்று, மகிழ்ந்து)  ப்ராஹ்மண ச்ரேஷ்டரை நோக்கி, அப்படியே ஆகட்டுமென்று அங்கீகரித்து, “ஸித்தர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த மடுவில் (நீர் நிலையில்) முழுகுவீராக” என்றார்கள். உடம்பெல்லாம் கிழத்தனம் மூடப்பெற்று, நரம்புகள் மேலே கிளம்பி, மயிர்கள் நரைத்து, சதைகள் சுருங்கி மடிந்து, பார்க்க வழங்காதிருக்கிற அம்முனிவரைப் பிடித்துக்கொண்டு, அந்த அச்வினி தேவதைகளும் அம்மடுவில் (நீர் நிலையில்) இறங்கி முழுகினார்கள். அப்பால், அந்த மடுவினின்று (நீர் நிலையிலிருந்து) மூன்று புருஷர்கள் கிளம்பினார்கள். அவர்கள் மிகுந்த அழகுடையவர்களும், ஸ்த்ரீகளுக்கு ஆசைப்படத் தகுந்தவர்களும், தாமரைமாலை அணிந்து அழகிய ஆடை உடுத்து, குண்டலந்தரித்து, ஒருவரோடொருவர் ஒத்த உருவமுடையவர்களுமாய் இருந்தார்கள். 

ஸர்வாங்க ஸுந்தரியான அந்த ராஜகுமாரத்தி, மடுவினின்றும் (நீர் நிலையிலிருந்து) கிளம்பின புருஷர்கள் மூவரும் ஸூர்யன்போல ப்ரகாசித்துக்கொண்டு, உருவத்தில் ஒத்திருக்கையினால், அவர்களில் தன் கணவன் இன்னானென்று அறியமுடியாமல் தயங்கி, பதிவ்ரதையாகையால் (கணவனே தெய்வம் என்று வழிபடுகிறவளாகையால்), அச்வினி தேவதைகளைச் சரணம் அடைந்தாள். அப்பால், அந்த அச்வினி தேவதைகள், அவளுடைய பாதிவ்ரத்யத்திற்கு ஸந்தோஷம் அடைந்து, அவளுக்குப் பர்த்தாவைத் தெரியும்படி காட்டி, மஹர்ஷியிடம் விடைபெற்றுக் கொண்டு அவரால் துதி செய்யப் பெற்று, ஸ்வர்க்கலோகம் போய்ச் சேர்ந்தார்கள். 

பிறகு, ஒருகாலத்தில் யாகம் செய்ய முயன்ற சர்யாதி மன்னவன், மணவாளராகிய ச்யவன மஹர்ஷியின் ஆச்ரமத்திற்கு வந்து, அவ்விடத்தில் தன் புதல்வியின் பக்கத்தில் ஸூர்யன்போல ஒளியுடன் திகழ்கின்ற புருஷனைக் கண்டான். அப்பொழுது, தன்னைக் கண்ட மாத்ரத்தில் எழுந்து வந்து, தன்பாதத்தில் விழுந்து, வந்தனம்செய்து நிற்கின்ற புதல்வியைக் கண்டும் ஆசீர்வாதம் செய்யாமல், மனத்தில் அவ்வளவு ஸந்தோஷம் உண்டாகப் பெறாதவனாகி, இவ்வாறு மொழிந்தான்.

சர்யாதி சொல்லுகிறான்:- பெண்ணே! இஃதென்ன செய்தாய்? உலகங்களெல்லாம் வணங்கும்படியான மஹிமையுடையவரும், உன் கணவனுமாகிய ச்யவன மஹர்ஷியை நீ ஏமாற்றினாய். ஏனென்றால், கணவன் கிழத்தனம் மூடப்பெற்று, மனத்திற்கு இனியனாயில்லையென்று அவனைத் துறந்து, எவனோ ஒரு வழிப்போக்கனை இவ்வாறு பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, அவனைப் பணிகின்றாய். ஆகையால், நீ கெடுமதியளாய் (கெட்ட புத்தி உடையவளாய்) இருக்கின்றாய். இதைவிட நீ என்ன அக்ருத்யம் (செய்யத்தகாதது) செய்யவேண்டும். நீ ஸத்புருஷர்களின் (சான்றோர்களின்) குலத்தில் பிறந்தவள். உன் புத்தி ஏன் இப்படி விபரீதமாயிருக்கின்றது. உனக்கு இந்த மதிகேடு (புத்திக் கேடு) எப்படி உண்டாயிற்று? வெட்கமின்றிக் கள்ளபுருஷனை அனுஸரித்து இருக்கின்றாயே. இதனால் நீ குலத்தையெல்லாம் பாழ் செய்தாய். மற்றும், தந்தை, கணவன் ஆகிய இருவர் குலத்தையும் நரகத்தில் தள்ளுகின்றாய்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரிசுத்தமான புன்னகையுடைய அந்த ஸுகன்யை சிரித்துக்கொண்டு, இவ்வாறு மொழிகின்ற தந்தையை நோக்கி “தந்தையே! என் பக்கத்திலிருக்கிற இவர், உன் மணவாளரும், பார்க்கவருமான ச்யவன மஹர்ஷியே” என்று மொழிந்தாள். அரசன் மீளவும் “ஆனால் கிழவராயிருந்த அவருக்கு இப்படிப்பட்ட வயதும் உருவமும் எப்படி கிடைத்தது?” என்று வினவ, அவருக்கு வயதும், உருவமும், நேர்ந்த விதத்தையெல்லாம் பின் ஸவிஸ்தரமாகச் (விரிவாகச்) சொன்னாள். அப்பால், சர்யாதி மன்னவன் வியப்புற்று, மிகவும் ஸந்தோஷம் அடைந்து, புதல்வியை அணைத்துக் கொண்டான். பிறகு ச்யவன மஹர்ஷி, வீரனாகிய பர்யாதி மன்னவனுக்கு ஸோம யாகம் (ஸோம ரஸம் உடைய யாகம்) செய்வித்தார். ச்யவனர் தன் ப்ரபாவத்தினால் அந்த யாகத்தில், ஸோம பானமற்ற (ஸோமரஸம் கிடைக்கப் பெறாத) அச்வினி தேவதைகளுக்கு ஸோம ரஸம் (யாகத்தின் முடிவில் ஸோமம் என்ற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறு) நிறைந்த பாத்ரத்தைக் கொடுத்தார். அவ்வாறு, ஸோம யாகத்தினால் அச்வினி தேவதைகளை ஆராதிக்கின்ற சர்யாதி மன்னவன்மேல் இந்த்ரன் கோபமுற்று அவனை வதிக்க வஜ்ராயுதத்தை எடுத்தான். 

அப்பொழுது, ப்ருகு வம்சத்தில் பிறந்தவராகிய ச்யவன மஹர்ஷி, இந்த்ரனுக்குக் கை ஸ்வாதீனமாக வொட்டாமல் (வேலை செய்யாதபடி) அதை ஸ்தம்பனம் செய்தார் (நிறுத்தினார்). அச்வினி தேவதைகள், வைத்யர்களென்று முன்பு யஜ்ஞம் (யாகம்) செய்பவர்களால் ஸோம யாகத்தில் பஹிஷ்காரம் செய்யப் பட்டார்கள் (புறக்கணிக்கப் பட்டார்கள்). ச்யவனர், ஸோம யாகத்தினால் அவர்களை ஆராதித்த அன்று முதல், அவர்களுக்கும் ஸோம ரஸம் (யாகத்தின் முடிவில் ஸோமம் என்ற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறு) கொடுப்பதை எல்லாரும் அங்கீகரித்தார்கள். 

சர்யாதிக்கு உத்தானபர்ஹி, ஆனர்த்தன், பூரிஷேணன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ஆனர்த்தனுக்கு ரைவதனென்பவன் பிறந்தான். அவன், ஸமுத்ரத்தினிடையில் குசஸ்தலியென்னும் பட்டணத்தை ஏற்படுத்தி, அதில் வாஸம் செய்துகொண்டு சத்ருக்களை அழிப்பவனாகி, ஆனர்த்தம் முதலிய தேசங்களை அனுபவித்து வந்தான். அந்த ரைவதனுக்கு, நூறு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் பிறந்தார்கள். பிள்ளைகளில் முதல்வன் ககுத்மியென்று ப்ரஸித்தனாயிருந்தான். அவன் ரேவதியென்னும் பேருடைய தன் பெண்ணை அழைத்துக் கொண்டு அவளுக்கு வரன் யாரென்று ப்ரஹ்மதேவனைக் கேட்கும் பொருட்டுத் தடையில்லாமல் ப்ரஹ்மலோகம் போய்ச் சேர்ந்தான். அங்கு, ப்ரஹ்மாவின் ஸன்னிதானத்தில் ஸங்கீதம் நடந்து கொண்டிருந்தபடியால், கேள்விக்கு அவகாசம் நேரப்பெறாமல் க்ஷணகாலம் வெறுமனே இருந்து, கானத்தின் முடிவில், ஆதிபுருஷனாகிய அந்த ப்ரஹ்ம தேவனை நமஸ்கரித்து, தன் பெண்ணுக்குக் கணவன் யாரென்று தெரிந்து கொள்ளவதற்காகத் தான் வந்திருப்பதை விண்ணப்பம் செய்தான். ப்ரஹ்ம தேவனும் அதைக்கேட்டுச் சிரித்து, ரைவதனைப்பார்த்து மொழிந்தான்.

ப்ரஹ்ம தேவன் சொல்லுகிறான்:- மன்னவனே! நீ வரும்பொழுது எவரெவர்களைப் பார்த்து மனத்தில் உத்தேசித்திருந்தனையோ, அவர்கள் அனைவரும் காலத்தினால் முடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளின் பேரன்மார்களுடைய கொள்ளு பேரன்மார்களின் வம்சங்களும்கூட இப்பொழுது கேள்விப்பட மாட்டாது. என்னுடைய க்ஷண காலத்திற்குள் அவ்விடத்தில் வெகுகாலம் கழிந்து விட்டது. இப்பொழுது, பூலோகத்தில் க்ருதம், த்ரேதா, த்வாபரம், கலியென்கிற இந்நான்கு யுகங்கள் இருபத்தேழுதரம் சுற்றி வந்துவிட்டன. (இருபத்து ஏழு சதுர்யுகங்கள் கடந்தன) ஆகையால், நீ பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. இப்பொழுது, தேவர்களுக்கும் தேவனான பகவானுடைய அம்சமாகிய மஹா பலமுடைய அனந்தன், பலராமனாய் அவதரித்திருக்கிறான். ஆகையால், நீ புறப்பட்டுப்போய், இப்பெண்மணியை மனுஷ்யர்களில் சிறந்த அந்தப் பலராமனுக்குக் கொடுப்பாயாக. கேட்ட மாத்ரத்தில் புண்யத்தை விளைக்கும்படியான நாமஸங்கீர்த்தனத்தை உடையவனும், ப்ராணிகளுக்கு க்ஷேமத்தை விளைப்பவனுமாகிய பகவான், தன்னுடைய அம்சமாகிய பலராமனுடன் பூபாரத்தை நீக்கும் பொருட்டு அவதரித்திருக்கிறான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ரைவத மன்னவன் இவ்வாறு கட்டளையிடப்பெற்று, ப்ரஹ்ம தேவனை நமஸ்கரித்து, தன் பட்டணத்திற்குச் சென்றான். அம்மன்னவனுடைய புதல்வர்களான ககுத்மி முதலிய அண்ணன் தம்பிகள் யக்ஷர்களிடத்தினின்றும் பயந்து, முன்னமே அப்பட்டணத்தைத் துறந்து, திசைகளைப் பற்றியோடிப் போனார்கள். மன்னவனே! ரைவத மஹாராஜன், ஸர்வாங்க ஸுந்தரியான (எல்லா உறுப்புக்களும் அழகுடன் அமைந்தவளான) தன் புதல்வியை, மஹாபலமுடைய பலராமனுக்குக் கொடுத்துத் தான் தவம் செய்ய விரும்பி, பத்ரியென்னும் பேருடைய நரநாராயண ஆச்ரமத்திற்குச் சென்றான். 

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை