ஶ்ரீமத் பாகவதம் - 196

 ஒன்பதாவது ஸ்கந்தம் - நான்காம் அத்தியாயம்

(மனுவின் பேரனான நரபாகனுடைய வ்ருத்தாந்தமும் (கதையும்), அவன் பிள்ளையான அம்பரீஷனுடைய வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வைவஸ்வத மனுவின் பிள்ளைகளில் ஒருவனாகிய நபகனுடைய பிள்ளை நரபாகனென்பவன். அவனுக்கு மற்றும் பல புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில், நரபாகன் அனைவர்க்கும் பின் பிறந்தவன். அவன், வெகுகாலம் குருகுலவாஸம் செய்து வந்தான். அவனுடைய ப்ராதாக்கள், அவன் ப்ரஹ்மசாரியும், ஜ்ஞானியுமாய் இருக்கிறானென்று நினைத்து, தந்தை ஸம்பாதித்து வைத்திருக்கும் சொத்தை, அவனுக்குக் கொடுக்காமல் தாங்கள் மாத்திரம் பங்கிட்டுக் கொண்டார்கள். அப்பால், நரபாகன் தன் ப்ராதாக்களை நோக்கி “எனக்கு எதைப் பங்கிட்டுக் கொடுத்தீர்கள்” என்று வினவினான். அவர்கள், “அப்பொழுது நாங்கள் மறந்து போனோம். இப்பொழுது நாங்கள் பங்கிட்டுக் கொடுக்க முடியாது. உனக்கு விருப்பம் உள்ளதாயின், பங்கிட்டுக் கொடுக்க வேண்டியவராகிய தந்தையிடம் போவோம். பங்கிட்டுக் கொடுங்களென்று அவர் சொல்வாராயின், பாகம் கொடுக்கிறோம்” என்றார்கள். அப்பால் நரபாகன் தந்தையிடம் சென்று “அப்பனே! என் ஜ்யேஷ்ட ப்ராதாக்கள் (மூத்த சகோதரர்கள்) எனக்கு என்ன பங்கிட்டுக் கொடுத்தார்கள்?” என்று வினவினான். அதற்குத் தகப்பனும் “பிள்ளாய்! நீ அந்தப் பாகத்தில் விருப்பம் செய்யவேண்டாம். இதோ சிறந்த மதியுடைய (புத்தியுடைய) அங்கிரஸர்கள் இப்பொழுது ஸத்ரயாகம் (நீண்ட நாட்கள் செய்யும் யாகம்) செய்கின்றார்கள். அவர்கள் ஆறாவது நாளில் செய்ய வேண்டிய கார்யத்தில் கை தெரியாமல் தடுமாறுவார்கள். அறிஞனே! வைச்வதேவ கர்மத்தில் விச்வதேவ தேவதைகளை அறிவிப்பவைகளான இரண்டு ஸூக்தங்கள் அவர்களுக்குத் தெரியாது. மிகுந்த மதியுடையவர்களாயினும், அந்த ஸூக்தங்களை அறியாமல் தடுமாறுகிற அவர்களுக்கு, நீ அவற்றைச் சொல்லுவிப்பாயாக. அப்பால், யாக கார்யம் முடிந்த பின்பு, ஸ்வர்க்கம் போகிற அவ்வங்கிரஸர்கள், தங்கள் ஸத்ரயாகத்தில் மிகுந்த பணத்தை உனக்குக் கொடுப்பார்கள். ஆகையால், நீ அவ்விடம் செல்வாயாக” என்றான். 

அப்பால், நரபாகனும் தந்தை சொன்ன வண்ணமே செய்தான். பிறகு, ஆங்கிரஸர்களும், ஸத்ரத்தில் மிகுந்த பணத்தையெல்லாம் அந்த நரபாகனுக்குக் கொடுத்து, ஸ்வர்க்கம் போனார்கள். அதன் பிறகு, நரபாகன் அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்கையில், கறுத்த உருவமுடைய ஒரு புருஷன் வடதிசையினின்றும் வந்து “யஜ்ஞபூமியில் இருக்கிற இந்தப் பணம் என்னுடையது” என்றான். அப்பொழுது நரபாகனும் “ரிஷிகளாகிய அங்கிரஸர்கள் இந்தப் பணத்தை எனக்கே கொடுத்தார்கள்” என்றான். மீளவும் “அப்புருஷன் ஆனால் இவ்விஷயத்தை உங்கள் தந்தையைக் கேட்போம்” என்றான். அப்பால் நரபாகன் தந்தையிடம் சென்று கேட்கத் தந்தையும், “யாக பூமியில் இருப்பதும் யாகத்தில் மிகுந்ததுமாகிய தனம் முழுவதும் ருத்ரனுடைய பாகமென்று ஒரு காலத்தில் ரிஷிகள் ஏற்படுத்தினார்கள். ஆகையால், அவை யாவும் அவனுக்கே சேரவேண்டும்” என்றான். 

அப்பால் நரபாகன் தந்தையின் வார்த்தையைக் கேட்டு, அந்தப் பணத்தைத் தான் எடுத்துக்கொள்ள வேறு உபாயம் ஒன்றும் தோன்றாமல், ருத்ரனை நமஸ்கரித்து, “ஓ ஈசனே! என் தந்தை யஞ்ஜ பூமியிலுள்ள பணம் உன்னுடையதென்றே மொழிந்தார். ஆயினும், ப்ராஹ்மணனே! உன்னை நான் தலையால் வணங்கி வேண்டுகிறேன்” என்றான். அதைக் கேட்ட ருத்ரனும், அந்த நரபாகனைப் பார்த்து “உன் தந்தை தர்மத்தையே மொழிந்தானாகையாலும், அதை நீயும் அப்படியே ஒளிக்காமல் ஸத்யம் பேசினையாகையாலும், உன்னிடத்தில் நான் ஸந்தோஷம் அடைந்தேன். வைச்வதேவ மந்த்ரங்களை அறிந்த உனக்கு, ஸனாதன ப்ரஹ்ம ஜ்ஞானத்தை உபதேசிக்கிறேன். ஆகையால், எப்படிப்பட்ட ஆபத்து நேரிடினும், ஒருகாலும் பொய் பேசலாகாது. நான் ஸத்யத்தினால் ஸந்தோஷம் அடையும் தன்மையன். ஸத்யம் பேசுகிறவன் எனக்கு இஷ்டனாவான். யாகத்தில் மிகுந்த பணத்தை உனக்குக் கொடுத்தேன். எடுத்துக் கொள்வாயாக” என்று மொழிந்து ஸத்யத்தில் ப்ரீதியுடைய மஹானுபாவனான அந்த ருத்ரன், அவ்விடத்திலேயே மறைந்தான். 

எவன் இந்த உபாக்யானத்தைக் (கதையை) காலை, மாலை இரண்டு வேளைகளிலும் மனவூக்கத்துடன் நினைக்கின்றானோ, அவன் சாஸ்த்ரஜ்ஞானம் உடையவனாகி மந்திரங்களை உணர்ந்து, ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையையும் உணர்வான். நரபாகனிடத்தினின்று அம்பரீஷன் பிறந்தான். அவன் மஹாபாகவதனாயிருந்தான்; அபராதம் செய்தவர்களுக்கும் உபகாரம் செய்யும் தன்மையன். ஓரிடத்திலும் ஒருகாலும் தடைபடாத ப்ராஹ்மண சாபம்கூட அவனைத் தீண்டவில்லை.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! மிகுந்த மதியுடையவனும், ராஜரிஷியுமாகிய அந்த அம்பரீஷனுடைய வ்ருத்தாந்தத்தைக் கேட்க விரும்புகிறேன். “ப்ராஹ்மணனால் ஏற்படும் தண்டம் (தண்டனை) ஒருவராலும் கடக்க முடியாதது. அதுவும்கூட அவனைப் பாதிக்க முடியவில்லை” என்றீர்கள். ஆகையால், அவனுடைய சரித்ரத்தைக் கேட்க விரும்புகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மிகுந்த மதியுடையவனும், மஹா பாக்யசாலியுமாகிய, அம்பரீஷ மன்னவன் ஏழு த்வீபங்களோடு கூடின பூமண்டலத்தையும், அழிவற்ற செல்வத்தையும், நிகரில்லாத ஐச்வர்யத்தையும் பெற்று அவற்றையெல்லாம் பாதுகாத்து, மேன்மேலும் வளர்த்திக் கொள்ள வல்லவனாயினும், ஐச்வர்யங்களெல்லாம் அழியும் தன்மையுடையவை என்றும், நரகத்தில் கொண்டு போய்த் தள்ளவல்லவையென்றும் அறிந்தவனாகையால், பிறர்க்கு வருந்தியும் கிடைக்க முடியாத அந்த விபவங்களையெல்லாம் (பெருமைகளை எல்லாம்) ஸ்வப்னத்தில் (கனவில்) கண்ட வஸ்துக்களைப்போல நினைத்தான். மற்றும், அவன் ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷனிடத்திலும், ஸாதுக்களான அவன் பக்தர்களிடத்திலும், பக்திரூபமான நல்ல பாவனை உண்டாகப் பெற்றிருந்தான். அதனால், அவன் இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் ஒரு மண்ணாங்கட்டி போல நினைத்திருந்தான். அவன் 

1.மனத்தை ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதாரவிந்தங்களிலும், 

2.வாக்கை அவன் குணங்களைச் சொல்லுவதிலும், 

3.கைகளை அந்தப் பகவானுடைய ஆலயங்களை மெழுகி விளக்குவது முதலிய வியாபாரங்களிலும், 

4.காதுகளை ஆச்சர்யமான அவனுடைய ஸத்கதைகளைக் கேட்பதிலும், 

5.கண்களை அவனுடைய திருவுருவங்கள் அவன் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் ஆகிய இவற்றைக் காண்பதிலும், 

6.தன் த்வகிந்தரியத்தை (தோல் இந்த்ரியத்தை) அவன் பக்தர்களின் தேஹத்தைத் தொடுவதிலும், 

7.க்ராணேந்தரியத்தை (நுகரும் மூக்கு இந்த்ரியத்தை) அவன் பாதாரவிந்தங்களின் ஸ்பர்சத்தினால் மிகுந்த பரிமளமுடைய அழகிய துளஸியை முகருவதிலும், 

8.ரஸனேந்தரியத்தை (சுவைக்கும் நாக்கு இந்த்ரியத்தை) அவனுக்கு நிவேதனம் செய்த அன்னாதிகளிலும், 

9.பாதங்களைத் திருவேங்கடம் (திருப்பதி) முதலிய திவ்யக்ஷேத்ரங்களுக்குப்போகும் வழிநடப்பதிலும், 

10.தலையை அவன் பாதங்களைப் பணிவதிலும், 

உபயோகப்படுத்திக் கொண்டிருந்தான். பகவானுக்கு உபயோகப்படுத்திக் களைந்த சந்தனம், புஷ்பம் முதலியவற்றைத் தாஸ்யத்திற்காக (தான் பகவானுக்கு அடிமை என்பதால்) அங்கீகரித்தானேயன்றி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பத்தினால் அங்கீகரிக்கவில்லை. அவன், இவற்றையெல்லாம் உத்தம ச்லோகனான (பெருமை பொருந்திய) அந்தப் பகவானுடைய பக்தர்கள் வரையில் ப்ரீதி வளர்ந்து வருமாறு நடத்திக்கொண்டு வந்தான். இவ்வாறு அவன் ஸர்வகாலத்திலும் தான் செய்யும் கர்மங்களையெல்லாம் மன, வாக்கு, காயங்களென்கிற மூன்று கரணங்களாலும் யஜ்ஞங்களுக்கு நிர்வாஹகனும் (நியமிப்பவனும்), ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), இந்திரியங்களுக்கு விஷயமாகாதவனுமாகிய, பரமபுருஷனிடத்தில் அர்ப்பணம்செய்து, அவன் ஸர்வாந்தராத்மாவாய் இருப்பதையும் மாறாமல், அனுஸந்தித்துக் கொண்டு, அந்தப் பரம புருஷனிடத்தில் நிலைநின்ற மனமுடைய வஸிஷ்டாதிகளான (வஸிஷ்டர் முதலிய) அந்தணர்கள் சொல்லும்படி இந்தப் பூமண்டலத்தையெல்லாம் பரிபாலித்து வந்தான். இவ்வாறு, பெரிய ஐச்வர்யம் அமைந்திருக்கையால், அங்கங்களும், தக்ஷிணைகளும், வளர்த்தி நடத்தப் பெற்றவைகளும், வஸிஷ்டர், அஸிதர், கௌதமர் முதலிய மஹர்ஷிகள் முன்னின்று நடத்துகையால் குறைவற்றவைகளுமான அச்வமேத யாகங்களால் யஜ்ஞ (யாகத்தின்) நிர்வாஹகனான (நியமிப்பவனாகிய) ஸர்வேச்வரனை ஆராதித்தான். 

அத்தேசம் ஜலம் (நீர்) அற்றிருக்கையால், யாகம் செய்வதற்காக அவன் ஸரஸ்வதி நதிக்குப் போனான். அவனுடைய அச்வமேத யாகங்களில் ஸபிகர்களும், ருத்விக்குக்களும் மற்ற ஜனங்களும் தேவதைகளோடொத்த உருவமுடையவர்களாகப் புலப்பட்டார்கள். இந்த்ரன் முதலிய தேவதைகள், அழகிய ஆடையாபரணம் முதலியன உடையவர்களாகப் புலப்பட்டார்கள். அந்த மன்னவனோடு ஸம்பந்தமுடைய ஜனங்களெல்லாம் உத்தம ச்லோகனான (பெருமை பொருந்திய) பகவானுடைய சரித்ரங்களைக் கேட்பதும், பாடுவதுமாயிருந்து கொண்டு, தேவதைகளுக்கு ப்ரியமான ஸ்வர்க்கத்தையும்கூட விரும்பவில்லை. போக (இன்ப அனுபவங்களையும்) மோக்ஷங்களைக் கொடுக்கவல்ல பரமபுருஷனை மனத்தில் உபாஸித்துக் கொண்டிருக்கிற அவனுடைய ஜனங்கள், யோகீச்வரர்களுக்கும் கிடைக்க அரியவைகளான அணிமாதி ஸித்திகள் 

(அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன - 

1.அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

2.மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

3.லகிமா - லேசாகச் செய்தல் 

4.கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

5.வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

6.ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

7.ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

8.ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை) 

பரப்ரஹம ஸ்வரூபனான ஆத்மாவின் அனுபவத்தினால் நேர்ந்திருப்பினும், அவற்றால் சிறிதும் ஸந்தோஷம் அடையவில்லை. அணிமாதி ஸித்திகளும்கூட அவர்களுக்கு ஸந்தோஷத்தை விளைக்கவில்லையென்றால், ஸ்வர்க்கத்தில் அவர்களுக்கு விருப்பம் உண்டாகவில்லை என்பதைப்பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

அப்படிப்பட்ட மஹானுபாவனாகிய அந்த அம்பரீஷ மன்னவன், ஞானயோகத்தினாலும், தன் வர்ணாச்ரம  தர்மங்களை அனுஷ்டிக்கையாகிற கர்மயோகத்தினாலும், பக்தியோகத்தினாலும், பகவானை ஆராதித்துக் கொண்டிருந்து மெல்ல மெல்லப் பற்றுக்களை (ஆசைகளை) எல்லாம் துறந்தான். வீடு, பெண்டிர், பிள்ளை, பந்துக்கள், யானை, தேர், குதிரை, காலாட்கள் முதலியவற்றிலும் அழிவற்ற ஆடை, ஆபரணம், ஆயுதம் முதலியவற்றிலும் அளவிறந்த பொக்கிஷங்களிலும் இவையெல்லாம் அநித்யங்கள் (நிலையற்றவை) துறக்கத்தக்கவைகள் என்னும் மதி (புத்தி) உண்டாகப் பெற்றான். தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையுடைய பகவான், அனன்யப்ரயோஜனமான (பகவானைத் தவிர வேறு எதையும் விரும்பாத) அவனுடைய பக்தியோகத்திற்கு ஸந்தோஷம் அடைந்து, பயந்தவர்களைப் பாதுகாப்பதும், தன்னைப் பற்றினாருடைய சத்ருக்களுக்குப் பயத்தை விளைப்பதுமாகிய, ஸுதர்சன சக்ரத்தை அவனுக்குக் கொடுத்தான்.

மனவுறுதியுடைய அவன் பகவானை ஆராதிக்க விரும்பித் தன்னோடொத்த ஸ்வபாவமுடைய பார்யையுடன் (மனைவியுடன்) கூடி, ஒரு ஸம்வத்ஸரம் (வருடம்) வரையில் த்வாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்தான். இவ்வாறு ஒரு ஸம்வத்ஸரம் (வருடம்) நடத்தி விரதத்தின் முடிவில் கார்த்திகை மாதத்தில் நவமி, தசமி, ஏகாதசி ஆகிய மூன்று இரவுகள் உபவாஸமிருந்து த்வாதசியினன்று யமுனையில் ஸ்நானம் செய்து, மதுவனத்தில் ஆராதனத்திற்கு வேண்டிய கந்தம், புஷ்பம், தூபம், தீபம் முதலிய கருவிகளெல்லாம் அமையப்பெற்ற மஹாபிஷேக விதியின்படி பகவானுக்கு அபிஷேகம் செய்து, சிறந்த ஆபரணம், சந்தனம், பூமாலை, அர்க்யம் முதலியவற்றால் அவனை ஆராதித்தான். 

அவன் ப்ரஹ்ம, ருத்ராதிகளுக்கு ப்ரபுவும் அழகிய அங்கங்களுடையவனுமாகிய பகவானையும், பகவத் பக்தியால் ப்ரயோஜனம் கைகூடப்பெற்று மஹாபாக்யசாலிகளாயிருக்கிற ப்ராஹ்மணர்களையும், மிகுந்த பக்தியுடன் பூஜித்தான். மற்றும், கொம்புகளில் பொன்னாலும் கால்களில் வெள்ளியாலும் அலங்காரம் செய்யப்பெற்றவைகளும் அழகிய ஆடைகளால் போர்வையிடப் பெற்றவைகளும், நன்றாகப் பால் கறப்பவைகளும், நல்லியற்கை உடையவைகளும், வயது, உருவம் இவை அமைந்தவைகளும், கன்றோடு கூடினவைகளும், பால் கறக்கும் பாத்ரம் முதலிய கருவிகள் நிறைந்து, ஸம்ருத்திகளெல்லாம் பொருந்தினவைகளுமான அறுபது கோடி பசுக்களை ப்ராஹ்மணர்களுக்குக் கொடுத்தான். அப்பால், நல்ல ருசியுடையதும், அறுசுவைகளும் அமைந்து மனத்திற்கினியதுமான அன்னத்தினால் முதலில் ப்ராஹ்மணர்களைப் புஜிப்பித்து, துணை முதலியவைகளால் விருப்பங்களெல்லாம் நிறைவேறப் பெற்ற அந்த ப்ராஹ்மணர்களால் அனுமதி கொடுக்கப் பெற்று, பாரணை (விரதத்தை முடித்து உணவு அருந்துதல்) செய்யத் தொடங்கினான். 

அப்பொழுது, மஹானுபாவராகிய துர்வாஸமுனிவர் அந்த அம்பரீஷ மன்னவனுக்குத் தெய்வாதீனமாக அதிதியாய் (விருந்தினராய்) வந்து எதிரே நின்றார். அவ்வாறு வந்திருக்கின்ற அதிதியை (விருந்தினரை) எதிர்கொண்டு, ஆஸனம் அளித்து, அர்க்யம் முதலியவற்றால் நன்கு பூஜித்து, பாதங்களில் விழுந்து நமஸ்கரித்துப் போஜனம் செய்ய வேண்டுமென்று ப்ரார்த்தித்தான். அப்பால் அந்த துர்வாஸ முனிவரும் அவனுடைய ப்ரார்த்தனையை அபிநந்தித்து (வரவேற்று, மகிழ்ந்து), அவச்யமாக அனுஷ்டிக்க வேண்டிய நித்ய கர்மங்களை முடித்துக் கொண்டு வருவதற்காகச் சென்று, பரிசுத்தமான யமுனையின் ஜலத்தில் பெருமை அமைந்த பரப்ரஹ்மத்தை த்யானித்துக்கொண்டு, நெடுநேரம் முழுகியிருந்தார். அப்பொழுது, தர்மத்தை அறிந்த அம்பரீஷ மன்னவன் த்வாதசி அரை முஹூர்த்த காலமே மிகுந்திருப்பதையும், அதற்குள் பாரணை (விரதத்தை முடித்து உணவு அருந்துதல்) செய்ய வேண்டியதையும், துர்வாஸ முனிவர் வருவதற்குள் த்வாதசி தவறிப்போகும் போலிருப்பதையும், அவருக்கு முன்னே தான் பாரணை (விரதத்தை முடித்து உணவு அருந்துதல்) செய்யக்கூடாமையையும், தனக்குள் நினைத்து, பாரணை (விரதத்தை முடித்து உணவு அருந்துதல்) விஷயத்தில் நேர்ந்த ஸங்கடத்தைப் பற்றி ப்ராஹ்மணர்களுடன் கலந்தாலோசித்தான்.

அம்பரீஷன் சொல்லுகிறான்:- அதிதியாக (விருந்தினராக) வந்த ப்ராஹ்மணரைப் போஜனத்திற்கு அழைத்து, அவர் வருவதற்கு முன்னமே அவரை அநாதரித்து (புறக்கணித்து) நான் புஜிப்பேனாயின், அது பெருந்தோஷமாம். த்வாதசி கடப்பதற்குள் பாரணை (விரதத்தை முடித்து உணவு அருந்துதல்) செய்யாது போவேனாயின், வ்ரதம் கெட்டுப் போமாகையால், அதுவும் தோஷமே. எனக்கு இப்படிப்பட்ட ஸங்கடம் நேர்ந்திருக்கின்றது. எப்படிச் செய்தால் எனக்குத் தர்மம் நேருமோ, அதர்மமும் என்னைத் தீண்டாதிருக்குமோ, அப்படிப்பட்ட உபாயத்தை எனக்குச் சொல்வீர்களாக. நான் வெறும் ஜலத்தினால் (நீரினால்) பாரணை (விரதத்தை முடித்து உணவு அருந்துதல்) செய்கிறேன். இதனால் வ்ரதத்திற்கும் கெடுதியில்லை. போஜனம் செய்யாமையால் அதிதியை (விருந்தினரை) அநாதரித்த (புறக்கணித்த) தோஷமும் நேரிடாது. ஓ அந்தணர்களே! ஜலத்தைப் (நீரைப்) பருகுவது சாப்பிட்டாற் போலவும், சாப்பிடாதது போலவும் ஆகுமென்று ச்ருதிகள் சொல்லுகின்றனவல்லவா? ஆகையால் நான் அவ்வாறு செய்கின்றேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருஸ்ரேஷ்டனே! ராஜர்ஷியாகிய அவ்வம்பரீஷன், ப்ராஹ்மணர்களுடன் கலந்து ஆலோசித்து, இவ்வாறு நிச்சயித்துக்கொண்டு மனத்தில் அச்சுதனை த்யானித்துக்கொண்டு, ஜலத்தைப் (நீரைப்) புசித்து, ப்ராஹ்மண ச்ரேஷ்டரான துர்வாஸருடைய வரவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்பால், துர்வாஸ முனிவர், தினக்கடன்களைச் செய்து முடித்து, யமுனைக் கரையினின்று வர, அம்பரீஷ மன்னவனும் முனிவரை அபிநந்திக்க (வரவேற்க) முனிவர் ஸூக்ஷ்ம (நுட்பமான) புத்தியால் அவன் ஜலபாரணை செய்த (நீரை அருந்தி விரதத்தை முடித்த) செய்தியை அறிந்துகொண்டார். பிறகு அம்முனிவர் கோபத்தினால் உடம்பெல்லாம் சலிக்கவும், புருவ நெருப்புக்களால் முகம் குடிலமாகவும் (கோணலாகவும்) பெற்று, மிகவும் பசியுடையவராகித் தன்னெதிரில் அஞ்சலித்துக்கொண்டு நிற்கின்ற மன்னவனைக் குறித்து மொழிந்தார்.

துர்வாஸர் சொல்லுகிறார்:- ஓ ஜனங்களே! இந்த க்ஷத்ரியன் தர்மத்தைக் கடந்து செய்த கார்யத்தைக் கண்டீர்களா? இவன் கொடும் தன்மையுடையவன். செல்வப்பெருக்கினால் கர்வம் கொண்டிருக்கிறான். இவன் உண்மையில் விஷ்ணுவிடத்தில் பக்தியுடையவனல்லன்; ஆயினும் தானே தன்னை அவனுக்குப் பக்தனாகப் பாவித்துக் கொண்டிருக்கிறான். இவன் அதிதியாக (விருந்தினராக) வந்த என்னை விருந்துண்ணும்படி அழைத்து, எனக்குக் கொடாமலே தான் புசித்துவிட்டான். இதுவே இவன் செய்த தர்மக்கேடு. அடா மூடனே! நீ செய்த அறக்கேட்டின் (தர்மம் மீறிய செயலின்) பலனை உனக்கு இப்பொழுதே காட்டுகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்முனிவர் இவ்வாறு மொழிந்து கொண்டே கோபத்தினால் ஜ்வலிக்கின்ற தன் ஜடையை அவிழ்த்து, அதினின்றும் அம்பரீஷனைக்கொல்லும் பொருட்டு ப்ரளயகால (ஊழி கால) அக்னி (நெருப்பு) போல ஜ்வலிக்கின்ற ஒரு தேவதையை, நிர்மித்தார். உருவின கத்தியைக் கையிலேந்தி, அடிவைப்பினால் பூமியை நடுங்கச் செய்துகொண்டு வருவதும் ஜ்வலிப்பதுமாகிய அந்தத் தேவதையை நன்றாகக் கண்டும், அம்மன்னவன் சிறிதும் சலியாதிருந்தான் (நகராதிருந்தான்). அப்பொழுது, தன் ப்ருத்யர்களைப் பாதுகாப்பதில் ஆழ்ந்த மனமுடைய பரமபுருஷன், தன் ஸுதர்சன சக்ரத்தைத் தூண்ட, அதுவும் அவ்விடம் வந்து காட்டுத்தீ கோபித்துக் கொண்டிருக்கின்ற ஸர்ப்பத்தைத் தஹிப்பது போல துர்வாஸரால் நிர்மிக்கப்பட்ட அந்தத் தேவதையை கொளுத்திப் பஸ்மம் செய்துவிட்டது. அப்பால், துர்வாஸமுனிவர் அந்த ஸுதர்சன சக்ரம் அவ்வளவோடு போகாமல், தன்னை எதிர்த்து வருவதையும் தன் ப்ரயாஸம் (முயற்சி) வீணானதையும் கண்டு பயந்து, ப்ராணனோடு தப்பித்துப் பிழைக்க விரும்பி, திசைகளைப்பற்றி ஓடினார். 

ஜ்வாலைகள் (நெருப்புக் கொழுந்துகள்) மேற்கிளம்பி எரியப்பெற்ற காட்டுத்தீ ஸர்ப்பத்தைத் தொடர்ந்தோடுவது போலப், பகவானுடைய ஸுதர்சன சக்ரம், அவ்வாறு பயந்தோடுகிற அந்தத் துர்வாஸரைத் தொடர்ந்தோடிற்று. அப்பொழுது அம்முனிவர், மேருபர்வதத்தின் குஹையில் போய்ப் புகுந்து கொள்ள விரும்பி ஓடினார். மற்றும், அவர் திசைகளையும், ஆகாயத்தையும், அதலாதி லோகங்களையும் (கீழ் உலகங்களையும்), ஸமுத்ரங்களையும், லோகபாலர்களோடு கூடின லோகங்களையும், ஸ்வர்க்கத்தையும் குறித்தோடினார். அம்முனிவர் தான் எங்கெங்கு ஓடிப்போனாரோ, அவ்வவ்விடங்களிலெல்லாம் வருந்தியும் பொறுக்க முடியாத அந்த ஸுதர்சன சக்ரம் தன்னைத் தொடர்ந்து வரக் கண்டார். அப்பால், அந்தத் துர்வாஸ முனிவர் எங்கும் தன்னைப் பாதுகாக்கும் கதி நேரப்பெறாமல், பயந்த மனமுடையவராகி, தனக்கு ரக்ஷகனை விரும்பி ப்ரஹ்ம தேவனிடம் சென்று “ப்ரஹ்ம தேவனே! ஸ்வயம்புவே! பகவானுடைய தேஜஸ்ஸாகிய ஸுதர்சன சக்ரத்தினின்றும் என்னைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- அந்தணனே! இந்த என் வாஸஸ்தானமாகிய ஸத்யலோகமும் மற்றுமுள்ள இந்த ப்ரபஞ்சமும் ஆகிய இவையெல்லாவற்றையும் ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களாகிற தன் விளையாட்டை முடிக்க விரும்பி இரண்டு பரார்த்தங்கள் அடங்கின கல்பத்தின் கடைசியில் ஸம்ஹரிக்க முயன்றவனும், காலத்தைச் சரீரமாக உடையவனுமாகிய எவனுடைய புருவ நெரிப்பு மாத்ரத்தினால் ஒரே காலத்தில் அழியப்போகின்றனவோ, அப்படிப்பட்ட பகவானுடைய தேஜஸ்ஸினின்று உன்னைப் பாதுகாக்க நான் வல்லவனல்லேன். நீ அவனையே சரணம் அடைவாயாக. நான், ருத்ரன், தக்ஷர், ப்ருகு முதலியவர், மரீசி முதலிய ப்ரஜாபதிகள், பூதபதிகள், இந்த்ரன், முதலிய தேவதைகள் ஆகிய நாங்கள் அனைவரும் எவனுடைய ஆஜ்ஞையைப் பெற்று உலகங்களுக்கெல்லாம் ஹிதமான அதைத் தலையால் தாங்கி, எங்கள் கார்யத்தை நடத்துகின்றோமோ, அப்படிப்பட்ட பகவானுடைய தேஜஸ்ஸினின்றும் நாங்கள் அனைவரும் உன்னைக் காக்க வல்லவர்களல்லோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு ப்ரஹ்ம தேவனால் கைவிடப்பெற்று, ஸ்ரீவிஷ்ணு சக்ரத்தினாலும் தபிக்கப்பெற்று (எரிக்கப்பட்டு) வருந்துகின்ற துர்வாஸ முனிவர், கைலாஸ பர்வதத்தில் வாஸம் செய்கின்ற ருத்ரனிடம் சென்று அவனைச் சரணம் அடைந்தார்.

ருத்ரன் சொல்லுகிறான்:- அப்பா! நாங்கள் பகவானுடைய சக்ரத்தினின்று உன்னைக் காக்க வல்லவர்களல்லோம். ஏனென்றால், எங்களுக்கும் அவன் சரணம் அடையத்தகுந்தவன். மற்றும் புழுக்கள் போலச் சுற்றுகின்ற இந்த ப்ரஹ்மாண்டம் போன்ற பலவாயிரம் ப்ரஹ்மாண்டங்கள் அவன் ஸ்ருஷ்டிக்க வேண்டுமென்று ஸங்கல்பிக்கும் பொழுது, அவனிடத்தினின்றும் உண்டாகின்றன; அழிக்க வேண்டுமென்று ஸங்கல்பிக்கும் பொழுது அவனிடத்தில் மறைகின்றன. நான், ஸனத்குமாரர், மஹானுபாவராகிய நாரதர், மேன்மையுடைய ப்ரஹ்மதேவன், கபிலர், அபாந்தரதமர், தேவலர், தர்மர், ஆஸுரி, மரீசி முதலியவர்கள் ஸர்வஜ்ஞர்களான மற்றுமுள்ள ஸித்தஸ்ரேஷ்டர்கள் ஆகிய நாங்களனைவரும் பகவானுடைய மாயையினால் மதி (புத்தி) மயங்கப்பெற்று, அவனை அறிய முடியாமல், அந்த ப்ரஹ்மாண்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட மஹிமையுடையவனும், ஸர்வேச்வரனுமாகிய அந்தப் பகவானுடைய அஸ்திரமான இந்த ஸுதர்சன சக்ரம், எங்களுக்கும்கூடப் பொறுக்க முடியாதது. பொறுக்கவும்கூட வல்லரல்லாத நாங்கள் அதை எவ்வாறு தடுக்கவல்லர்களாவோம். ஆகையால் மிகுந்த மஹிமைகள் அமைந்தவனும், சரணாகத ரக்ஷகனுமாகிய, அந்தப் பகவானையே சரணம் அடைவாயாக. சரணம் அடைந்தவர்களின் துக்கங்களைப் போக்கவல்ல அந்தப் பகவான் உனக்கு ஸுகத்தை விளைப்பான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சங்கரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் துர்வாஸ முனிவர், ஆசையற்றுக் கைலாஸ பர்வதத்தினின்றும் புறப்பட்டு, ஸ்ரீநிவாஸனாகிய பகவான் ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் நித்யவாஸம் செய்யப் பெற்ற விஷ்ணுலோகத்திற்குச் சென்றார். பகவானுடைய ஸுதர்சன அஸ்த்ரத்தின் ஜ்வாலையால் தஹிக்கப்பட்டு (எரிக்கப்பட்டு) வருந்துகின்ற துர்வாஸ முனிவர் அவ்விடம் சென்று, பயத்தினால் உடம்பெல்லாம் நடுங்கப்பெற்று, அந்தப் பகவானுடைய பாதங்களில் விழுந்து மேல்வருமாறு கூறினார்.

துர்வாஸர் சொல்லுகிறார்:- அச்சுதனே! (பற்றினவர்களைக் கைவிடாதவனே!) அளவற்ற மஹிமையுடையவனே! பக்தர்களுக்கு மிகவும் அன்பனே! தன்னைப் பற்றினவர்களுடைய வருத்தங்களைப் போக்கவல்லவனே! சரணம் அடைந்தவர்களின் அபராதங்களைப் (தவறுகளைப்) பாராமல், அவர்களைப் பாதுகாக்கும் தன்மையனே! சேதனா சேதன (ஜீவத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள்) ரூபமான ப்ரபஞ்சத்தையெல்லாம் படைப்பவனே! அபராதம் (தவறு) செய்து வருந்துகின்ற என்னைப் பாதுகாக்க வேண்டும். அளவற்றதாகிய உன் ப்ரபாவத்தை அறியாமல், நான் உன் பக்தர்கள் விஷயத்தில் அபராதம் செய்தேன். அந்த அபராதத்தைப் பொறுத்து, என்னைப் பாதுகாக்க வேண்டும். உன் பேரைச் சொன்ன மாத்ரத்தில், நரகத்தில் விழுந்து துக்கங்களை அனுபவிக்கின்ற பாபிஷ்டனும், அந்தப் பாபத்தினின்றும் விடுபடுவான். இனி நேரே உன்னைச் சரணம் அடைந்தவனுடைய பாபம் போவதற்குச் சொல்ல வேண்டுமோ?

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ அந்தணனே! நான் பக்த பராதீனன் (பக்தனுக்கு அடிமைப்பட்டவன்). நான் ஸ்வதந்தரனல்லேன் (என் விருப்பப்படி செயல்பட வல்லவன் அல்லன்). என் ஹ்ருதயம் மனது, வாக்கு, காயங்களென்கிற மூன்று கரணங்களாலும் எனக்கு உபகாரம் செய்கிற என் பக்தர்களுக்கு உட்பட்டிருக்கின்றது. என் பக்தர்கள், எனக்கு மிகவும் அன்பிற்கிடமாய் இருப்பவர்கள். நானும் அவர்களுக்கு மிகவும் அன்பிற்கிடமாய் இருப்பவன். ப்ராஹ்மணனே! பக்தர்களுக்கு அன்பனாகிய நான் ஸாதுக்களான என் பக்தர்களைப் பிரிந்து என் சரீரத்தையாவது, அளவற்ற ஐச்வர்யத்தையாவது, என்றும் என்னை விட்டுப் பிரியாத ஸ்ரீமஹாலஷ்மியையாவது விரும்ப மாட்டேன். அவர்கள், என்னையே மேலான கதியாக நினைத்திருப்பவர்கள். என்னையொழிய மற்ற எவற்றையும் உபாயமாக நினைக்கமாட்டார்கள். என்னையொழிய மற்றொன்றையும் தங்களுக்குப் புருஷார்த்தமாகவும் (அடைய வேண்டிய பொருளாகவும்) விரும்ப மாட்டார்கள். மற்றும், அவர்கள் பெண்டிர், வீடு, பிள்ளை, ப்ராணன், பணம், இஹலோக (இந்த உலக) ஸுகம், பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகம் ஆகிய இவையெல்லாவற்றையும் துறந்து என்னையே சரணம் அடைந்தவர்கள். ஆகையால், நான் அவர்களை எப்படி விடவல்லவனாவேன்? 

என்னிடத்தில் அவர்களுடைய மனம் அன்பு வெள்ளத்தினால் கட்டுண்டிருக்கின்றது. அவர்கள் தம்மை அழித்தாயினும், பிறர் கார்யத்தை நிறைவேற்றும் தன்மையுடையவர்கள்; அவர்கள் எல்லாம் என்னுடைய உருவங்களேயென்னும் புத்தியால் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையர்கள். பதிவ்ரதைகளான பெண்டிர்கள் தங்கள் உபசாரங்களினால் குணமுள்ள தங்கள் கணவர்களை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டிருப்பது போல, அவர்கள் என்னைத் தங்கள் பக்தியினால் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த என் பக்தர்கள் எனக்குச் சேஷமாயிருந்து (அடிமையாய், உடைமையாய் இருந்து) என்னையே அனுபவிக்கையாகிற பக்தியினால் மனக்களிப்புற்று, அந்தப் பக்தியோக மஹிமையினால் நேரிட்டிருக்கின்ற ஸாலோக்யம் (பகவான் இருக்கும் அதே இடத்தை அடைதல்), ஸாமீப்யம் (பகவானுக்கு அருகாமையை அடைதல்), ஸாயுஜ்யம் (பகவான் அனுபவிக்கும் பொருட்களையே தானும் அனுபவித்தல் – அதாவது அனுபவிக்கப்படும் பொருள் ஒன்றே), ஸார்ஷ்டிதா ( ஒரே பொருளை பகவானும் தானும் அனுபவிப்பதால் ஏற்படும் ஆனந்தமும் – மகிழ்ச்சியும் ஒன்றாய் இருத்தல்) என்கிற மோக்ஷங்களையுங்கூட விரும்பமாட்டார்கள் என்றால், காலக்ரமத்தில் அழியக்கூடிய இந்த்ராதிகளின் ஐச்வர்யத்தை எவ்வாறு விரும்புவார்கள்? 

என் பக்தர்கள் எனக்கு ஹ்ருதயம் போன்றவர்கள். நானும் அவர்களுக்கு ஹ்ருதயம் போன்றவன். அவர்கள் என்னைக் காட்டிலும் மற்றொன்றையும் ப்ரியமாக நினைக்க மாட்டார்கள். நானும் அவர்களைக் காட்டிலும் மற்றொன்றையும் சிறிதும் ப்ரியமாக நினைக்க மாட்டேன். ஆகையால் அவர்கள் விஷயத்தில் பட்ட அபராதத்தை நான் பொறுக்க மாட்டேன். அந்தணனே! உனக்கு ஒரு உபாயம் சொல்லுகிறேன். கேட்பாயாக. நீ எவனிடத்தில் இந்த அபராதத்தைச் செய்தாயோ, அந்த அம்பரீஷ மன்னவனையே சரணம் அடைவாயாக. உலகத்தில் நல்லியற்கை உடையவர்களான என் பக்தர்களிடத்தில் ஒருவன் தன் திறமையை உபயோகப்படுத்துவானாயின், அது அவர்களிடத்தில் பலிக்காமல் உபயோகப்படுத்தினவனுக்கே கெடுதியை விளைவிக்கும். தவம் வித்யை இவையிரண்டும் வணக்கமுடைய அந்தணர்களுக்கே நன்மையை விளைக்கும். வணக்கமில்லாதவன் தவம் வித்யை முதலியவைகள் அமைந்திருப்பினும், நிரபராதிகளிடத்தில் அபராதப்படுவானாயின், அவை அவனுக்கே அநர்த்தத்தை (துக்கத்தை) விளைக்கும். ப்ராஹ்மண ச்ரேஷ்டனே! ஆகையால் நரபாகனுடைய பிள்ளையாகிய அம்பரீஷ மன்னவனிடத்திற்கே போவாயாக. உனக்கு க்ஷேமம் உண்டாகும். பிறருடைய அபராதங்களில் கண் வையாத மஹானுபாவனாகிய அம்மன்னவனையே உன் அபராதத்தைப் பொறுக்கும்படி வேண்டிக்கொள். உனக்கு ஸுகம் உண்டாகும். 

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை