சனி, 3 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 197

 ஒன்பதாவது ஸ்கந்தம் - ஐந்தாவது அத்தியாயம்

(அம்பரீஷன் தன்பாதங்களில் விழுந்து வேண்டுகிற துர்வாஸ முனிவரைச் சக்ரத்தினின்றும் விடுவித்து, அவர்ப் பசியாற்றுதலும், கடைசியில் வனத்திற்குப் போதலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– இவ்வாறு பகவானால் உபாயம் உபதேசிக்கப்பெற்ற துர்வாஸ முனிவர், சக்ரத்தினால் தபிக்கப்பட்டவராகவே (எரிக்கப்பட்டவராகவே) அம்பரீஷனிடம் சென்று, மனவருத்தத்துடன் அவனுடைய பாதங்களைப் பிடித்துக்கொண்டார். அம்பரீஷனும் அந்த துர்வாஸருக்கு நேர்ந்த அப்படிப்பட்ட துக்கத்தைக்கண்டு, அவர் தன் பாதங்களைப் பிடித்துக் கொண்டதற்கு மிகவும் வெட்கமுற்று, மன இரக்கத்தினால் மிகவும் பரிதபித்து, ப்ராஹ்மணரைப் பின்தொடர்ந்திருக்கின்ற பகவானுடைய சக்ரத்தை ஸ்தோத்ரம் செய்தான்.

அம்பரீஷன் சொல்லுகிறான்:– ஸுதர்சனமென்றும், ஸஹஸ்ராரமென்றும் பெயர்பெற்ற சக்ரராஜனே! மஹானுபாவனாகிய அக்னியும் நீயே, ஸூர்யனும் நீயே. நக்ஷத்திரங்களுக்கு ப்ரபுவான சந்த்ரனும் நீயே. ஜலம், பூமி, ஆகாயம், காற்று, தன்மாத்ரங்கள், இந்திரியங்கள் இவையெல்லாம் நீயே. அச்சுதனுக்கு அன்பனே! ஸமஸ்தமான அஸ்த்ரங்களையும் அழிக்கும் திறமையுடையவனே! ஜகத்திற்கெல்லாம் ப்ரபுவே! உனக்கு நமஸ்காரம். இந்த ப்ராஹ்மணனுக்கு மங்களத்தை விளைப்பாயாக. நீயே தர்ம ஸ்வரூபன் (தர்ம வடிவானவன்); தர்மத்தை நிறைவேற்றுகின்றவன்; அழிவற்ற தைர்யமும் நீயே. ஸமஸ்த யஜ்ஞங்களுக்கு (யாகங்களுக்கு) நிர்வாஹகனும் (நியமிப்பவனும்), அவற்றால் ஆராதிக்கப்படுகிறவனும் நீயே. யஜ்ஞங்களில் (யாகங்களில்) கொடுக்கின்ற ஹவிஸ்ஸுக்களைப் புசிக்கின்றவனும் அவற்றிற்குப் பலன் கொடுப்பவனும் நீயே. ஸர்வஸ்வரூபனே! (அனைத்துமாய் இருப்பவனே!) நீயே உலகங்களையெல்லாம் பாதுகாக்கின்றாய். சத்ருக்களை அழிக்கும் ஸங்கல்ப ரூபமான (எண்ணமான) பரம புருஷனுடைய ஸாமர்த்யமும் (திறமையும்) நீயே. அழகிய நாபியுடையவனே! உனக்கு நமஸ்காரம். உன்னைத் துதிக்க வல்லனல்லேன். நீ ஸமஸ்த தர்ம மர்யாதைகளையும் பாதுகாக்கின்றாய். அதர்மமே தொழிலாயிருக்கின்ற அஸுரர்களுக்குத் தூமகேதுவைப்போல அநர்த்தங்களை (துக்கங்களை) விளைக்கின்றாய். நீ மூன்று லோகங்களையும் பாதுகாக்கின்றாய். நீ பரிசுத்தமான தேஜஸ்ஸுடையவன். மனத்தின் வேகமுடையவன். உன் செயல்கள் அற்புதமாயிருக்கும். உனக்கு நமஸ்காரம் செய்கிறேன். தர்ம ஸ்வரூபமான உன் தேஜஸ்ஸினால் மஹானுபாவர்களான பெரியோர்களின் ஜ்ஞானத்தைத் தடுப்பதாகிய அஜ்ஞானத்தையெல்லாம் அழித்து ஜ்ஞான ப்ரகாசமும் கொடுக்கப்பட்டது. ஸூர்யன் முதலிய தேஜஸ்ஸுக்களின் ப்ரகாசமும் உன்னுடையதே. மேன்மை, தாழ்மைகளுக்கு இடமாயிருப்பதும், சேதனா சேதன ரூபமுமாகிய, இந்த ஜகத்தெல்லாம் உன்னுடைய உருவமே. வேத வாக்யங்களால் புகழப்படும் பெருமையுடையவனே! இப்படிப்பட்ட உன் மஹிமை எல்லையற்றது. கெட்ட குணங்கள் எவையும் தீண்டப்பெறாத பரம புருஷனால் தூண்டப்பட்டுப் பலிஷ்டர்களான (பலம் உடையவர்களான) தைத்யர்களும், தானவர்களும், நிறைந்த சத்ரு ஸைன்யத்தில் புகுந்து, கை, வயிறு, துடை, கால், கழுத்து இவைகளைச் சேதித்துக்கொண்டு (துண்டித்துக் கொண்டு), யுத்தத்தில் மிகவும் விளங்குகின்றாய். அப்படிப்பட்ட நீ ஸாதுக்களைப் பாதுகாப்பதற்காகவும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், பகவானால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றாய். நீ சரணாகதர்களின் அபராதங்களையெல்லாம் பொறுக்கும் தன்மையன். அப்படிப்பட்ட நீ என் குலத்தின் க்ஷேமத்திற்காக இந்த ப்ராஹ்மணனுக்கு மங்களத்தைச் செய்வாயாக. (இவனை ப்ராணன்களோடு விடுவாயாக) இதுவே நீ எனக்குச்செய்ய வேண்டிய அனுக்ரஹம். நான் தானாதி தர்மங்களையும், யாகாதி தர்மங்களையும், எனக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களையும், நன்றாக அனுஷ்டித்திருப்பேனாயின், எங்கள் குலம் ப்ராஹ்மணர்களையே தெய்வமாக நினைத்திருப்பது உண்மையாயின், இந்த ப்ராஹ்மணன் வருத்தம் தீர்ந்து ஸுகமாயிருப்பானாக. என்னுடைய தானாதி தர்மங்களால் ஸுதர்சன பகவான் ஸந்தோஷமுற்றிருப்பானாயின், ப்ராஹ்மணனை ப்ராண பயத்தினின்றும் பாதுகாப்பானாக. இணையெதிரில்லாதவனும், ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாய் இருப்பவனுமாகிய பகவான், “அவன், ஸமஸ்த பூதங்களுக்கும், அந்தராத்மாவாகையால் அவையெல்லாம் அவனே” என்கிற எண்ணத்துடன் பணிந்து வருகின்ற என்னுடைய மனோபாவத்தினால் (எண்ணம், சிந்தனையினால்) ஸந்தோஷமுற்றிருப்பானாயின், அதனால் இந்த ப்ராஹ்மணன் மனக்கவலை தீர்ந்து ஸுகமாயிருப்பானாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு அம்பரீஷ மன்னவன் ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டிருக்கையில், அந்த விஷ்ணுவின் ஸுதர்சன சக்ரம் நாற்புறத்திலும் ஜ்வாலைகள் அடங்கப்பெற்று, அம்மன்னவனுடைய வேண்டுகோளுக்காகத் துர்வாஸ முனிவரை விட்டுப் போயிற்று. துர்வாஸ முனிவரும், ஸுதர்சன அக்னியின் தாபத்தினால் விடுபட்டு க்ஷேமம் பெற்று மனக்கவலை தீர்ந்து அம்மன்னவனுக்கு மேலான ஆசீர்வாதங்கள் செய்து அவனைப் புகழ்ந்தார்.

துர்வாஸர் சொல்லுகிறார்:- ஆ! பகவானுடைய பக்தர்களின் மஹிமையை நான் இப்பொழுது கண்டேன். அம்பரீஷ மன்னவனே! நான் அபராதம் (தவறு) செய்திருப்பினும் எனக்கு க்ஷேமங்கள் உண்டாக வேண்டுமென்று விரும்புகின்றாய். பகவானுடைய பக்தர்களுக்கு, எதுதான் செய்ய முடியாத கார்யம். நிக்ரஹம் (தண்டனை), அநுக்ரஹம் (ஆசீர்வாதம்) முதலிய அனைத்தும் அவர்களுக்கு அதீனமாகவே (உட்பட்டே) இருக்கின்றது. அவர்களுக்கு எதுதான் துறக்க முடியாதது? நீ எனக்காக தானாதி தர்மங்களையெல்லாம் துறந்தாயல்லவா? தன் பக்தர்களுக்கு அன்பனும், அவர்களுடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவான் அவர்களுக்கு ஸ்வாதீனமாய் இருக்கிறான். ஆகையால், அவர்களுக்கு எதுவும் அஸாத்யமன்று (அடைய முடியாதது அன்று). எவனுடைய நாமத்தைக் கேட்ட மாத்ரத்தில், புருஷன் பாபங்களெல்லாம் தொலைந்து பரிசுத்தனாகிறானோ, எவனுடைய பாதார விந்தங்களினின்றும் கங்காதி புண்ய தீர்த்தங்கள் உண்டாயினவோ, அப்படிப்பட்ட பகவானுடைய பக்தர்களுக்கு எதுதான் கிடைக்க அரிதாயிருக்கும்? மன்னவனே! பெருங்கருணையமைந்த மனமுடைய உன்னால் நான் அநுக்ரஹம் செய்யப்பெற்றேன். நீ என் அபராதத்தையெல்லாம் பொருள் செய்யாமல் மறந்து, என் ப்ராணனைப் பாதுகாத்துக் கொடுத்தாயல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அவர் திரும்பி வருவாரென்று ஆஹாரம் செய்யாமலேயே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்மன்னவன், அந்த துர்வாஸருடைய பாதங்களைப் பிடித்துக்கொண்டு, அவரை அருள் புரிவித்துப் புசிப்பித்தான். துர்வாஸரும் விரும்பத்தகுந்த அறுசுவைகளும் அமைந்து பெரிய ஆதரவுடன் கொண்டு வந்து கொடுக்கப் பெற்றவைகளுமான அம்மன்னவனுடைய விருந்துணவைப் புசித்து, மனக்களிப்புற்று, மன்னவனை நோக்கிப் “புசிப்பாய், புசிப்பாய்” என்று மொழிந்தார்.

துர்வாஸர் சொல்லுகிறார்:- பரமாத்மாவினிடத்தில் நிலைகின்ற மனமுடைய உன்னுடைய விருந்துணவால் நான் மிகவும் திருப்தி அடைந்தேன். பகவத் பக்தனாகிய நீ எனக்கு தர்சனம் கொடுத்து, என்னை உன் பவித்ரமான ஹஸ்தத்தினால் (கையினால்) ஸ்பர்சித்து (தொட்டு), இனிய உரைகளைப்பேசி, என்னை அனுக்ரஹித்தாய். பரிசுத்தமான உன்னுடைய இச்செயலை ஸ்வர்க்கலோகத்தில், தெய்வ மடந்தையர்கள் அடிக்கடி பாடப்போகிறார்கள். மற்றும், மிகவும் பரிசுத்தமான உன் புகழை இப்பூலோகத்தில் உள்ளவர்களும் பாடப்போகிறார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- துர்வாஸ முனிவர் இவ்வாறு அம்பரீஷ மன்னவனைப்புகழ்ந்து, அவனால் பூஜிக்கப்பெற்று, மிகுந்த ஸந்தோஷம் அடைந்து, அம்மன்னவனிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆகாச மார்க்கத்தினால் புறப்பட்டுச்சென்று, தைனந்தின ப்ரளயாதிகளால் (சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல் முடிந்ததும் ஏற்படும் ஊழியில்) அழியாததான ப்ரஹ்மதேவனுடைய லோகம் போய்ச்சேர்ந்தார். த்வாதசியினன்று வந்த துர்வாஸ முனிவர் எவ்வளவு காலம் திசைகளில் ஓடித்திரிந்து, திரும்பி வராதிருந்தாரோ, அவ்வளவில் ஒரு ஸம்வத்ஸர (வருட) காலம் கடந்தது. அம்மன்னவன், அந்த த்வாதசி முதல் துர்வாஸ முனிவர் திரும்பி வரும்வரையில் அம்முனிவருடைய தர்சனத்தையே எதிர்பார்த்துக்கொண்டு, ஜலத்தை ஆஹாரமாக உட்கொண்டிருந்தான். அந்த துர்வாஸ முனிவர் வந்து திரும்பிப்போன பின்பு, அந்த அம்பரீஷ மன்னவன் ப்ராஹ்மணர் புசித்து மிகுந்தமையால் மிகவும் பரிசுத்தமான அந்த அன்னத்தைப் புசித்தான். அப்பால், துர்வாஸ முனிவர்க்குச் சக்ரத்தினால் நேர்ந்த வருத்தத்தையும், அதினின்று அவரை விடுவித்ததையும், தன்னுடைய தைர்யம் முதலிய வீர்யத்தையும் மனத்தில் ஆராய்ந்து எல்லாம் பரம புருஷனுடைய ப்ரபாவமென்று நினைத்தான். இப்படிப்பட்ட பல குணங்களையுடைய அந்த அம்பரீஷ மன்னவன், பரப்ரஹ்மமென்று ஓதப்படும் பெருமையுடைய வாஸுதேவனிடத்தில் தன் வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட பற்பல கர்மங்களால் உதவி செய்யப்பெற்றதும், மற்ற ப்ரயோஜனங்களை எதிர்பாராததுமான பக்தியோகத்தை அனுஷ்டித்துக்கொண்டு வந்தான். அதனால், அவன் ப்ரஹ்ம லோகம் வரையிலுமுள்ள போகங்களை (சுக அனுபவங்களை) எல்லாம் நரக ப்ராயமாக (நரகத்திற்கு ஸமமாக) நினைத்தான். அப்பால், ஜிதேந்தரியனாகிய (புலன்களை வென்ற) அவ்வம்பரீஷ மன்னவன், தன்னோடொத்த சீலமுடைய தன் பிள்ளைகளிடத்தில் ராஜ்யத்தை வைத்து, வனத்திற்குச் சென்றான். அங்கும் அவன் அந்தராத்மாவான வாஸுதேவனிடத்தில் மனத்தை நிலை நிறுத்திக்கொண்டிருந்து, ஸத்வாதி குணங்களின் பரிணாமமான ஸம்ஸாரம் தொலையப்பெற்று, மோக்ஷத்தை அடைந்தான். இவ்வாறு, அம்பரீஷ மன்னவனுடைய சரித்ரமாகிற பரிசுத்தமான இந்த உபாக்யானத்தை மொழிந்தேன். இதைப் பக்தியுடன் வாயால் மொழிந்து, நெஞ்சால் நினைக்கும் புருஷன் பகவானிடத்தில் பக்தியுடையவனாவான். 

ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக