ஒன்பதாவது ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்
(அம்பரீஷனுடைய வம்சத்தைச் சொல்லி முடித்து இக்ஷ்வாகுவின் வம்சத்தைச் சொல்லுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்பரீஷனுக்கு விரூபன், கேதுமான், சம்பு என்று மூன்று பிள்ளைகள். அவர்களில் விரூபனுடைய பிள்ளை, ப்ருஷதச்வன். அவன் பிள்ளை ரதீதரன். அவன் பிள்ளையற்றிருக்கையில், ஸந்ததி அழியாதிருக்கும் பொருட்டு, அங்கிரஸ மஹர்ஷி அவனுடைய பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) ப்ரஹ்மதேஜஸ்ஸுடன் கூடின ஒரு பிள்ளையைப் பிறப்பித்தார். இவர்கள் ரதீதரன் க்ஷேத்ரத்தில் பிறந்தவர்களாயினும், அங்கிரஸ மஹர்ஷியின் பீஜத்திற்குப் (விந்துக்குப்) பிறந்தவர்களாகையால், ஆங்கிரஸர்களுமானார்கள். ஆகையால், ரதீதரனுடைய பிள்ளைகளும், அவர்களுடைய ஸந்ததியில் பிறந்தவர்களும், க்ஷத்ரியகோத்ரமும், ப்ராஹ்மண ப்ரவரமும், உடையவர்களானார்கள்.
வைவஸ்வதமனு தும்மும் பொழுது, அவனுடைய மூக்கினின்றும் இக்ஷ்வாகுவென்று ப்ரஸித்திபெற்ற ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் முதல் மூவர், விகுக்ஷி, நிமி, தண்டனென்பவர்கள். அந்த நூறு பெயர்களில் இருபத்தைந்து பெயர்கள், கிழக்குத் திக்கில் ஹிமவத பர்வதத்திற்கும் (மலைக்கும்) விந்த்யா பர்வதத்திற்கும் (மலைக்கும்) நடுவிலுள்ள ஆர்யாவர்த்தமென்னும் தேசத்தை ஆண்டு வந்தார்கள். இருபத்தைந்து பெயர்கள், மேற்குத் திக்கில் உள்ள ஆர்யாவர்த்த தேசத்தை ஆண்டு வந்தார்கள். முதல் மூவரான விகுக்ஷி முதலியவர்கள், இடையிலுள்ள ஆர்யாவர்த்த தேசத்தை ஆண்டு வந்தார்கள். மற்றவர்கள் தெற்கு, வடக்கு முதலிய திசைகளைப் பாதுகாத்துக்கொண்டு வந்தார்கள். அந்த இக்ஷ்வாகு மன்னவன், ஒருகால் அஷ்டகா ச்ராத்தத்திற்காகத் தன் பிள்ளைகளில் விகுக்ஷி என்பவனைப் பார்த்து, “விகுக்ஷி! பரிசுத்தமான மாமிஸம் கொண்டு வருவாயாக. சீக்ரம் போ. விளம்பிக்க (காலம் தாழ்த்த) வேண்டாம்” என்று கட்டளையிட்டு அனுப்பினான்.
அந்த விகுக்ஷியும், அப்படியே கொண்டு வருகிறேனென்று சொல்லி வனத்திற்குச் சென்று, ச்ராத்தத்திற்குரிய ம்ருகங்களைக் கொன்று, இளைத்துப் பசித்து, “ச்ராத்தத்திற்காகக் கொன்ற மிருகங்களை நாம் பக்ஷிக்கலாகாது” என்னும் புத்தியை மறந்து, வீரனாகிய அந்த விகுக்ஷி அவற்றில் ஒரு முயலைப் பக்ஷித்தான் (உண்டான்). அப்பால் அவன் தான் பக்ஷித்து (உண்டு) மிகுந்த மாம்ஸத்தைத் தன் தந்தையிடம் கொண்டுபோய்ச் சேர்த்தான். இக்ஷ்வாகு, அந்த மாம்ஸத்தை ப்ரோக்ஷித்து, சுத்தி செய்யும்படி தன் குருவுக்குச் சொன்னான். குருவாகிய வஸிஷ்ட மஹர்ஷி “இந்த மாம்ஸம் சாப்பிட்டு மிகுந்ததாகையால், துஷ்டமாயிற்று (வீணாயிற்று). ஆகையால், இது ச்ராத்தத்திற்கு உபயோகப்படாது” என்றார். பிறகு இக்ஷ்வாகு மன்னவன், குருவின் வசனத்தைக் கேட்டு, தன் பிள்ளையாகிய விகுக்ஷி செய்த கார்யத்தை அறிந்து, நியமங்களைத் துறந்து, கோபத்தினால் பிள்ளையைத் தேசத்தினின்றும் துரத்திவிட்டான்.
பிறகு அந்த இக்ஷ்வாகு மன்னவன் தவத்தில் இறங்கி, ப்ராஹ்மணருடன் பகவானுடைய குணங்களைப் பற்றி ஸம்வாதம் (விவாதம்) பண்ணிக்கொண்டிருந்தான். அவன், அதனால் ராஜ்யபோகத்தில் வைராக்யமுற்று (விருப்பம் அற்று) ப்ராரப்த கர்மத்தின் முடிவில் தேஹத்தைத் துறந்து, பரப்ரஹ்மத்தை அடைந்தான். இவ்வாறு தந்தையாகிய இக்ஷ்வாகு மன்னவன் காலஞ்சென்று போகையில், விகுக்ஷி தன் தேசத்திற்கு வந்து, இப்பூமண்டலத்தையெல்லாம் பாதுகாத்துக்கொண்டு யஜ்ஞங்களால் (யாகங்களால்) பகவானை ஆராதித்தான். அவன் ச்ராத்தத்திற்காகக் கொன்ற முயலைப் புசித்த காரணத்தால் சசாதனென்று (முயலை உண்டவன்) என்று பெயர் பெற்றான். அந்த விகுக்ஷியின் பிள்ளை புரஞ்சயன். அவனை இந்த்ரவாஹனனென்றும், ககுத்ஸ்தனென்றும் வழங்கி வந்தார்கள். அவனுக்கு அந்தப் பெயர் அவன் செயல்களால் ஏற்பட்டது. அது ஏற்பட்ட விதம் சொல்லுகிறேன், கேட்பாயாக.
முன்பு தேவதைகளுக்குத் தானவர்களுடன் யுத்தம் நடந்தது. அப்பொழுது, தைத்யர்களிடம் தோல்வியடைந்த தேவதைகள், ஜகதீச்வரனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் வசனத்தினால் (சொல்லால்), புரஞ்சயனைத் தங்களுக்கு ஸஹாயமாக வரும்படி வேண்டினார்கள். புரஞ்சயனும் இந்திரனைத் தனக்கு வாஹனமாயிருக்கும்படி வேண்ட, இந்திரன் பெரிய வ்ருஷபத்தின் (காளையின்) உருவம் தரித்து, அவனுக்கு வாஹனமாயிருந்தான். அப்பால், புரஞ்சயன் அந்தப் பெரிய வ்ருஷபத்தின் மேல் ஏறி, அதன் முசுப்பில் (திமிலில்) உட்கார்ந்து, தேவதைகளால் புகழப்பெற்று, யுத்தம் செய்ய விரும்பிக் கவசம் அணிந்து, திவ்யமான தனுஸ்ஸையும் (வில்லையும்) கூரான பாணங்களையும் எடுத்துக்கொண்டு, மஹானுபாவனான பரம புருஷனுடைய தேஜஸ்ஸினால் (காந்தி, சக்தியினால்) பலம் வளரப்பெற்று, தேவதைகளுடன் மேற்குத் திக்குக்குச் சென்று, தைத்யர்களின் பட்டணங்களை அழித்தான். அப்பால், அந்தத் தைத்யர்களுக்கும் புரஞ்சயனுக்கும் அதிகமான யுத்தம் நடந்தது. அது பார்க்கின்றவர்களுக்கும், கேட்கின்றவர்களுக்கும், மயிர்க்கூச்சம் உண்டாகும்படி மிகவும் பயங்கரமாயிருந்தது.
அந்த யுத்தத்தில், புரஞ்சய மன்னவன் எதிர்த்து வந்த அஸுரர்களையெல்லாம் பல்ல (கூரான) பாணங்களால் (அம்புகளால்) அடித்து, யமலோகத்திற்கு அனுப்பினான். அடிபட்டு மிகுந்தவர்கள், அந்தப் புரஞ்சயனுக்கு எதிரே வந்து, அவனுடைய பாணங்களின் அடி ப்ரளய கால அக்னிபோலப் பொறுக்க முடியாதிருப்பதைக் கண்டு அவனால் அடிக்கப்பட்டு, தங்கள் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) பாதாள லோகத்திற்கு ஓடிப்போனார்கள். அப்பால் அந்த ராஜர்ஷியாகிய புரஞ்சயன், தைத்யர்களை வென்று, பட்டணம், பணம் எல்லாவற்றையும் ப்ரீதியுடன் இந்திரனுக்குக் கொடுத்தான். தைத்யர்களின் பட்டணத்தை ஜயித்தானாகையால், புரஞ்சயனென்றும், வ்ருஷபத்தின் முகப்பில் (காளையின் திமிலில்) உட்கார்ந்தானாகையால் ககுத்ஸ்தனென்றும், இந்த்ரனை வாஹனமாகப் பெற்றானாகையால் இந்தர வாஹனனென்றும், பெயர்களைப் பெற்றுத் தன் தேசத்திற்குத் திரும்பிச்சென்றான்.
புரஞ்சயனுடைய பிள்ளை அனேனஸ் என்பவன். அவனுடைய பிள்ளை பிருது. அவனுடைய பிள்ளை விச்வகந்தன். அவனுடைய பிள்ளை சந்த்ரன். அவன் பிள்ளை யுவனாஷ்வன். அவன் பிள்ளை சாபஸ்தி. அவன் சாபஸ்தியென்னும் பட்டணத்தை நியமித்தான். அவன் பிள்ளை ப்ருஹதஷ்வன். அவன் பிள்ளை குவலயாஷ்வன். அவனுக்கு இருபத்தோராயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். அந்தக் குவலயாஷ்வன், உதங்க மஹர்ஷிக்கு ப்ரியம் செய்ய விரும்பி, துந்துவென்னும் அஸுரனைத் தானும் தன் பிள்ளைகள் இருபத்தோராயிரம் பேர்களுமாகச் சேர்ந்து எதிர்த்து வதித்தான். அதனால், அவன் துந்துமாரனென்றும் பெயர் பெற்றான். அவனுடைய பிள்ளைகள் அனைவரும், துந்துவினுடைய முக அக்னியால் எரிக்கப்பட்டு மாண்டார்கள்.
பரதவம்சாலங்காரனே! அவர்களில் த்ருடாஷ்வன், கபிலாஷ்வன், பத்ராஷ்வனென்று மூன்று பேர்கள் மாத்ரம் மிகுந்தார்கள். த்ருடாஷ்வனுடைய பிள்ளை ஹர்யஷ்வன். அவன் பிள்ளை நிகும்பன். அவன் பிள்ளை பர்ஹிணாஷ்வன் அவன் பிள்ளை க்ருதாஷ்வன். அவன் பிள்ளை ஸேனஜித்து. அவன் பிள்ளை யுவனாச்வன். அவன் ஸந்ததியில்லாமையால் மனவெறுப்புற்று, நூறு பார்யைகளுடன் (மனைவிகளுடன்) வனத்திற்குச் சென்றான். அங்குள்ள முனிவர்கள் அவன்மேல் மன இரக்கமுற்று, அவனுக்கு சந்ததி உண்டாகும் பொருட்டு மனவூக்கத்துடன் இந்த்ரனைத் தேவதையாகவுடைய புத்ரகாமேஷ்டியை நடத்தினார்கள். அப்பொமுது யுவனாஷ்வ மன்னவன் ராத்ரியில் தண்ணீர் தாஹம் உண்டாகப் பெற்று யாகசாலைக்குச் சென்று, அங்கு ப்ராஹ்மணர்கள் படுத்துறங்குவதைக் கண்டு, அவன் பத்னிக்குக் கொடுப்பதற்காக மந்திரித்து வைத்திருக்கும் ஜலத்தை (நீரை) எடுத்துப் பருகினான். அப்பால், அந்த ப்ராஹமணர்கள் விழித்துக் கொண்டு, கலசம் ஜலமின்றிச் (நீரின்றி) சூன்யமாயிருப்பதைக் (காலியாக இருப்பதக்) கண்டு, “மன்னவனே! இது யாருடைய கார்யம்! புத்ர உத்பக்திக்குக் (பிள்ளைப் பேற்றுக்குக்) காரணமான இந்த ஜலத்தை (நீரை) யார் பருகினது?” என்று வினவினார்கள். தெய்வத்தினால் தூண்டப்பட்ட அந்த மன்னவன் தான் அந்த ஜலத்தைப் (நீரைப்) பருகினானென்று தெரிந்து கொண்டு, ரிஷிகள் “ஆ! தெய்வ பலமே முக்யமான பலம். புருஷ பலம் ஒன்றுக்கும் உபயோகப்படாது” என்று சொல்லி, ஈச்வரனுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.
அப்பால், பிள்ளை பிறக்க வேண்டிய காலம் ஸமீபத்திருக்கையில், யுவனாஷ்வனுடைய வல வயிற்றைப்பிளந்து கொண்டு, சக்ரவர்த்தியாகக்கூடிய லக்ஷணங்கள் அமைந்த ஒரு புதல்வன் பிறந்தான். அப்பொழுது ப்ராஹ்மணர்கள் “இந்தக் குழந்தை ஸ்தன்யத்திற்காக (பாலுக்காக) அழுகிறான். இவனுக்கு யார் பால் கொடுப்பார்?” என்று வருந்திச் சொல்லிக்கொண்டிருக்கையில், அந்த யாகத்தில் ஆராதிக்கப்பட்ட தேவேந்திரன் தோன்றி “இந்தக் குமாரனுக்கு நான் பால் தருகிறேன்” என்று சொல்லி, அந்தக் குழந்தையைப் பார்த்துக் “குழந்தாய் அழாதே” என்று மொழிந்து கொண்டு, அம்ருதப் பெருக்குடைய தன் ஆள் காட்டி விரலை அக்குழந்தையின் வாயில் வைத்தான். இந்த்ரன் அந்தக் குழந்தையை நோக்கி “மாந்தாதா” (நான் தருகிறேன்) என்று மொழிந்தானாகையால், அவன் மாந்தாதாவென்று பெயர் பெற்றான். அந்தக் குழந்தையின் தந்தையான யுவனாஷ்வன், ப்ராஹ்மணர்களின் அநுக்ரஹத்தினாலும், தெய்வத்தின் ப்ரஸாதத்தினாலும் (ப்ரஸாதம் – அருள்) மரணம் அடையவில்லை. அப்பால், அவன் அவ்விடத்திலேயே இருந்து தவஞ்செய்து, மோக்ஷ ஸித்தியைப் பெற்றான்.
மன்னவனே! தேவேந்திரன் அந்தக் குமாரனை நோக்கி “ராவணன் முதலிய துஷ்டர்கள் இவனிடத்தில் பயப்படப் போகிறார்கள். ஆகையால் இவன் – த்ரஸதஸ்யுவென்று ப்ரஸித்தி பெறப்போகிறான்” என்று மொழிந்து கொண்டே அவனுக்கு த்ரஸதஸ்யுவென்று பெயர் இட்டான். (த்ரஸந்தி தஸ்யவோ யஸ்மாத் ஸ: த்ரஸதஸ்யு – யஸ்மாத் - எவனிடத்தினின்று தஸ்யவ: – துஷ்டர்கள் த்ரஸந்தி – பயப்படுகிறார்களோ ஸ: - அவன் த்ரஸதஸ்யு) யுவனாஷ்வனுடைய பிள்ளையாகிய அந்த மாந்தாதாவும் ஸமர்த்தனாகையால், சக்ரவர்த்தியாகி ஏழு த்வீபங்கள் அடங்கின பூமண்டலத்தையெல்லாம் தானொருவனே அழிவற்றதான பகவானுடைய தேஜஸ்ஸினால் பாதுகாத்து வந்தான். தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவின் உண்மையை அறிந்த அம்மன்னவன், அளவற்ற தக்ஷிணைகளையுடைய பற்பல யாகங்களால் யஜ்ஞ ஸ்வரூபனும், ஸமஸ்த தேவ ஸ்வரூபனும், ஸர்வாந்தராத்மாவும், ப்ராக்ருதமான இந்த்ரியங்களுக்கு விஷயமாகாதவனுமாகிய, பகவானை ஆராதித்தான். மற்றும், சரு, புரோடாசம் முதலிய த்ரவ்யம், மந்திரம் விதி, யஜ்ஞம், யஜமானன், ருத்விக்குகள், தர்மம், தேசம், காலம் ஆகிய இவையெல்லாம் எவனுடைய உருவங்களோ, அத்தகைய பரம புருஷனை அம்மன்னவன் யாகங்களால் ஆராதித்தான்.
ஸூர்யன் எங்கெங்கு உதித்து எங்கெங்கு அஸ்தமிக்கின்றானோ, அது வரையிலுமுள்ள பூமண்டலம் முழுவதும் யுவனாஷ்வனுடைய பிள்ளையாகிய மாந்தாதாவின் க்ஷேத்ரமென்று சொல்லுகிறார்கள். அம்மன்னவன், சதபிந்துவின் புத்ரியாகிய பிந்துமதியென்கிற தன் பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தனென்று மூன்று பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில், முசுகுந்தன் யோகியாயிருந்தான். அவர்களுக்கு உடன் பிறந்த பெண்பிள்ளைகள் ஐம்பது பெயர்கள். அந்த ஐம்பதின்மரும், ஸௌபரியை மணம் புரிந்தார்கள். பெருந்தவமுடைய அந்த ஸௌபரிமுனிவர், யமுனையின் ஜலத்திற்குள் முழுகித் தவம் செய்துக் கொண்டிருக்கையில், ஆணும் பெண்ணுமாய்க் கலந்து களிக்கும் தன்மையுடைய ஒரு மீனின் ஸுகத்தைக் கண்டு, ப்ராஹ்மண ச்ரேஷ்டராகிய அந்த ஸௌபரி, தானும் மைதுன ஸுகத்தில் (பெண்ணுடன் சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தில்) விருப்பம் உண்டாகப்பெற்று, மாந்தாதா மன்னவனிடம் வந்து, தனக்கு ஒரு பெண் கொடுக்கும்படி வேண்டினார். அம்மன்னவனும், அவருடைய குரூபத்தனத்தையும் (அழகற்ற உருவத்தையும்), கிழத்தனத்தையும் கண்டு “ப்ராஹ்மணரே! ஸ்வயம்வரம் ஏற்படுத்துகிறேன். அதில் உம் இஷ்டப்படி என் பெண்ணை மணம் புரியலாம்” என்றான். ப்ராஹ்மண ச்ரேஷ்டரான அந்த ஸௌபரியும், அதைக் கேட்டு “இம்மன்னவன் “இவன் கிழவன்! இவனுடம்பெல்லாம் சதைகள் மடிந்திருக்கின்றன. மூப்பினால் இவன் தலை நடுங்குகின்றது. ஆகையால், பெண்கள் இவனை விரும்பமாட்டார்கள். ஸ்வயம்வரத்தில் இவனை வரிக்க ப்ரஸக்தியில்லை (வாய்ப்பு இல்லை)” என்று நினைத்து என்னை இவ்வாறு ஸ்வயம்வரமென்னும் வ்யாஜத்தினால் (சாக்கினால்) திரஸ்கரித்தான் (புறக்கணித்தான்). நான் என்னைத் தெய்வ மடந்தைகளும் விரும்பும்படியான அழகுடையவனாக என் யோக ப்ரபாவத்தினால் செய்து கொள்கிறேன். அப்பால் மானிடப்பெண்கள் என்னை மேல் விழுந்து விரும்புவார்கள் என்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ?” என்று தனக்குள் நிச்சயித்துக்கொண்டு ஸமர்த்தராகிய (திறமை உடைய) அந்த ஸௌபரி முனிவர், அப்படியே ஒப்புக்கொண்டு மன்னவனுடைய ஆஜ்ஞையால் ஸூதன் அழைத்துக் கொண்டு போக, ஸம்ருத்திகளெல்லாம் (வளங்கள்) நிறைந்த அந்தப்புரத்திற்குள் சிறந்த ஸௌந்தர்யத்துடன் (அழகுடன்) நுழைகையில், ஐம்பது ராஜகன்னிகளும் அவரொருவரையே தங்களுக்கு மணவாளனாகும்படி வரித்தார்கள். அப்பொழுது, அந்த ராஜ கன்னிகைகள் மிகவும் அழகாயிருக்கின்ற அந்த ஸௌபரியிடத்தில் மனம் குடிகொள்ளப்பெற்று, உடன் தோன்றினமையைப்பற்றி, ஏற்பட்ட ஸ்நேஹத்தையும் மறந்து, “நானே இவரை வரிப்பேன். இவர் எனக்குத்தான் தகுந்த கணவர். உங்களுக்குத் தகுந்தவரன்று” என்று அந்த ஸௌபரிக்காகப் பெருங்கலஹம் செய்தார்கள். பல வேத மந்த்ரங்களை உணர்ந்தவராகிய, அந்த ஸௌபரி எல்லையில்லாததான தன் தவப்பெருக்கின் மஹிமையால் ஏற்பட்ட விலையற்ற பல கருவிகள் நிறைந்து, பலவகையான உத்யானங்களும், நிர்மலமான ஜலமுடைய தாமரைத் தடாகங்களும், செங்கழுநீர்க் காடுகளும் அமைந்து ரமணீயமாயிருக்கின்ற மாளிகைகளில், அப்பெண்மணிகளுடன் க்ரீடித்துக் (உல்லாஸமாக விளையாடிக்) கொண்டிருந்தார்.
அந்த மாளிகைகளில், புருஷர்களும், ஸ்த்ரீகளும், நன்றாக அலங்கரித்து உலாவிக் கொண்டிருந்தார்கள். ப்ராஹ்மணர்களும், வண்டுகளும், ஸ்துதி பாடகர்களும் அங்குப் பாடிக்கொண்டிருந்தார்கள். மற்றும், அம்முனிவர் விலையுயர்ந்த படுக்கைகளும், ஆஸனங்களும், ஆடைகளும், ஆபரணங்களும், குளிப்பதற்கு வேண்டிய கருவிகளும், சந்தனம், குங்குமம், கஸ்தூரி முதலிய அங்கராகங்களும், ஆஹாரங்களும், பூமாலைகளும், மற்றும் பல போக வஸ்துக்களும் உடையவராகி, அப்பெண்மணிகளுடன் க்ரீடித்துக் (உல்லாஸமாக விளையாடிக்) கொண்டிருந்தார். ஏழு தீவுகளோடு கூடின பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவும், ஸார்வபௌமச் செல்வக்கிளர்த்தி உடையவனுமாகிய மாந்தாதா மன்னவன், அந்த ஸௌபரி முனியின் க்ருஹஸ்தாச்ரம (இல்வாழ்க்கை) நிலைமையைக் கண்டு வியப்புற்று, கர்வத்தையெல்லாம் துறந்தான்.
இவ்வாறு, க்ருஹஸ்தாரச்ரம (இல்வாழ்க்கை) ஸுகங்களில் ஆழ்ந்திருக்கிற அந்த ஸௌபரி முனிவர், பல சரீரங்களை ஏற்றுக்கொண்டு, பல இந்த்ரியங்களால் சப்தாதி விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பினும், நெய்த்துளிகள் விடப்பெற்ற அக்னிபோலச் சிறிதும் த்ருப்தி அடையவில்லை. அந்த ஸௌபரி முனி ஒருகால் உட்காந்திருக்கும் பொழுது, மீன்களோடு ஸஹவாஸத்தினால் தமக்கு நேரிட்டிருப்பதும் ஸ்வரூப அனுஸந்தானத்தைத் (ஆத்ம பரமாத்ம சிந்தனையைத்) தடுப்பதுமாகிய விஷய சாபலத்தைப் (ஸம்ஸார விஷயங்களில் ஏற்பட்ட ஆசையாகிற மனக்கலக்கத்தைப்) பற்றி மனத்தில் சிந்தித்தார்.
“ஓ உலகத்தவர்களே! தவத்தில் நிலைநின்று நன்மனத்துடன் வ்ரதங்களைத் திடமாக அனுஷ்டித்துக் கொண்டிருந்த எனக்கு நேர்ந்த வினாசத்தைக் காண்பீர்களாக. நான் ஜலத்திற்குள் (நீருக்குள்) உலாவிக்கொண்டிருந்த மத்ஸ்யத்தினுடைய (மீனின்) ஸஹவாஸத்தினால் (தொடர்பால்), நெடுநாள் த்யானித்துக் கொண்டு வந்த பரப்ரஹ்மத்தை மறந்தேன். மோக்ஷத்தில் விருப்பமுடையவன், மூன்று கரணங்களாலும் தாம்பத்ய தர்மமுடையவர்களுடைய (இல்லற வாழ்வில் இருப்பவர்களின்) ஸஹவாஸத்தைத் (தொடர்பைத்) துறக்க வேண்டும். இந்திரியங்களை (புலன்களை) சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) தொடர விடலாகாது. தனியனாகவே ஸஞ்சரிக்க வேண்டும். ஏகாந்தத்தில் இருந்து, அளவற்ற மஹிமைகளுடைய பகவானிடத்தில் மனத்தை நிலைநிறுத்த வேண்டும். எங்கும் மனப்பற்று செய்யலாகாது. எங்கேனும் மனப்பற்று நேருமாயின், அந்தப் பகவானிடத்தில் மனம் செல்லப் பெற்று, அவன் மனத்திற்கினிய வ்ரதங்களை அனுஷ்டிக்கும் தன்மையரான ஸாதுக்களிடத்தில் மாத்ரமே செய்யலாமன்றி, மற்ற எதிலும் மனப்பற்று செய்யலாகாது.
முதலில் நான் ஸஹாயமின்றித் (வேறு ஒருவர் உதவி இன்றி) தனியனாகவே தவம் செய்துகொண்டு இருந்தேன். அப்பால், நான் ஜலத்தில் (நீரில்) விளையாடிக்கொண்டிருந்த மத்ஸ்யத்தினிடத்தில் (மீனிடத்தில்) மனப்பற்றுதல் செய்தமையால், ஐம்பது பார்யைகளையும் (மனைவிகளையும்) ஒரே ஸமயத்தில் அனுபவிப்பதற்காக ஐம்பது சரீரங்களை ஏற்றுக்கொண்டேன். அப்பால், பிள்ளைகளின் உருவங்களால் ஐயாயிரம் பேர்களானேன். ஆயினும், நான் ஆணும் பெண்ணுமாய்க் கலந்தனுபவிக்கும் ஸுகங்களில் திருப்தி அடையவில்லை. அந்த ஸுகங்களையே மேன்மேலும் பற்பலவாறு அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றும், ப்ரக்ருதியின் குணங்களான மோஹாதிகளால் (மயக்கம், மனக்கலக்கம் முதலியவற்றால்) மதி (புத்தி) கலங்கப்பெற்று சப்தாதி விஷயங்களையே (உலக விஷயங்களையே) பரமபுருஷார்த்தமாக நினைத்திருக்கின்றேன்” என்று ஸௌபரி முனிவர் தன் மனத்திற்குள் சிந்தித்து வெறுத்தார்.
அம்முனிவர் இவ்வாறு இல்லற வாழ்க்கையில் நெடுங்காலம் வஸித்துக் கொண்டிருந்து, அப்பால் அதில் விரக்தி உண்டாகப்பெற்று, காம்ய கர்மங்களை (ஆசைகளை நிறைவேற்றும் செயல்களை) அனுஷ்டிக்குந் தன்மையைத் துறந்து, தவம் செலுத்தும் பொருட்டு வனத்திற்குச் சென்றார். கணவனையே தெய்வமாக நினைத்துக் கொண்டிருக்கிற அந்த ஸௌபரியின் பத்னிகளும், வனத்திற்குச் செல்கின்ற அம்முனிவரைத் தொடர்ந்து சென்றார்கள். அவ்வனத்தில், ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையை ஆராய்வதில் மனவூக்கமுற்றிருக்கிற அம்முனிவர், சரீரத்தை இளைக்கச் செய்வதான கொடுந்தவம் செலுத்தி, ஆஹவனீயாதி அக்னிகளுடன் (தான் வளர்த்து வந்த அக்னிகளுடன்) தன்னைப் பரமாத்மாவினிடத்தில் மறைந்ததாக அனுஸந்தித்து, மோக்ஷத்தை அடைந்தார். அவருடைய பத்னிகளான அப்பெண்மணிகளும், தம் கணவரான அம்முனிவர் பரமாத்ம ஸாரூப்யமாகிற (பகவானைப் போன்ற உருவம் அடைதலாகிற) மோக்ஷ ஸித்தி பெற்றமையை அறிந்து, அக்னி அணையும் பொழுது அதன் ஜ்வாலைகளும் அத்துடன் மறைவது போல, தாங்களும் அவர் செய்த பரமாத்ம உபாஸனத்தின் (த்யானத்தின்) ப்ரபாவத்தினால் அவரையே பின்தொடர்ந்து மோக்ஷ ஸித்தியைப் பெற்றார்கள்.
ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.