திங்கள், 5 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 199

 ஒன்பதாவது ஸ்கந்தம் - ஏழாவது அத்தியாயம்

(மாந்தாதாவின் வம்சமும், அவ்வம்சத்தில் பிறந்த புருகுத்ஸ ஹரிச்சந்த்ரர்களின் உபாக்யானமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாந்தாதாவின் பிள்ளைகளில் அம்பரீஷனென்பவன் ஒருவனென்று முன்னமே மொழிந்தேன். அவன் சிறப்புடையவனாயிருந்தான். அவனை அவன் பாட்டனாகிய (தாத்தாவாகிய) யுவனாஷ்வன், தனக்குப் பிள்ளையாக ஸ்வீகரித்தான் (ஏற்றான்). ஆதலால்தான் அந்த அம்பரீஷனுடைய பிள்ளை, யுவனாஷ்வனென்னும் பெயர் பெற்றான். யுவனாஷ்வனுடைய பிள்ளை ஹரிதன். இந்த அம்பரீஷ-யுவனாஷ்வ-ஹரிதர்கள் மாந்தாதாவின் ஸந்ததியைச் (வம்சத்தைத்) சேர்ந்தவர்கள். நாகர்களின் உடன் பிறந்தவளான நர்மதை என்பவள், தன் ப்ராதாக்களால் (ஸகோதரர்களால்) புருகுத்ஸனுக்குக் கொடுத்து மணம் செய்விக்கப்பட்டாள். அவள், தன் ப்ராதாக்களால் (ஸகோதரர்களால்) தூண்டப்பட்டு, புருகுத்ஸனைப் பாதாளத்திற்கு அழைத்துக்கொண்டு போனாள். அவன், பகவானால் பலம் கொடுக்கப்பெற்று, ஒருவர்க்கும் வதிக்கமுடியாத கந்தர்வர்களை வதித்தான். நாகேந்திரன் அதற்கு ஸந்தோஷம் அடைந்து “இந்த உன் வ்ருத்தாந்தத்தை நினைப்பவர்களுக்கு ஸர்ப்பத்தினின்று பயம் உண்டாகாது” என்று புருகுத்ஸனுக்கு வரம் கொடுத்தான். 

புருகுத்ஸனுடைய பிள்ளை த்ரஸதஸ்யு. அவன் பிள்ளை அனரண்யன். அவன் பிள்ளை ஹர்யஷ்வன். அவன் பிள்ளை அருணன். அவன் பிள்ளை த்ரிபந்துரன். அவன் பிள்ளை ஸத்யவ்ரதன். அவனே த்ரிசங்குவென்று ப்ரஸித்தி பெற்றவன். அவன், தன் குருவான வஸிஷ்ட மஹர்ஷியின் சாபத்தினால், சண்டாளத் தன்மையை (தாழ்ந்த ஜாதியை) அடைந்தான். பின்பு, விச்வாமித்ரருடைய தவமஹிமையால், சரீரத்துடன் ஸ்வர்க்கம்சென்று, இப்பொழுதும் ஆகாயத்தில் நக்ஷத்ரரூபியாய்ப் புலப்படுகின்றான். வஸிஷ்ட சாபத்தினால் சண்டாளத்தனம் (தாழ்ந்த ஜாதியை) அடைந்த அந்த த்ரிசங்குவை, விச்வாமித்ரர் தன் தவமஹிமையால் ஸ்வர்க்கத்திற்கு ஏற்றும்பொழுது, அவன் அங்குள்ள தேவதைகளால் தலைகீழாகத் தள்ளுண்டு விழ, மீளவும் விச்வாமித்ரர் தன் தவமஹிமையினால் தானே பலாத்காரமாக அவனை ஆகாயத்திலேயே நிலைநிற்கும்படி செய்தார். 

த்ரிசங்குவின் பிள்ளை ஹரிச்சந்த்ரன். அவன் நிமித்தமாக விச்வாமித்ரரும், வஸிஷ்டரும் ஒருவர்க்கொருவர் சாபமிட்டுக் கொண்டு, பக்ஷிகளாகிப் பலவாண்டுகள் வரையில் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஹரிச்சந்த்ரன், பிள்ளையில்லாமையால் வருந்தி நாரதருடைய உபதேசத்தினால் வருணனைச் சரணம் அடைந்தான். “ப்ரபூ! எனக்குப் பிள்ளை பிறக்க வேண்டும். அவ்வாறு அனுக்ரஹம் செய்வாயாக. மஹாராஜனே! எனக்கு வீரனாகிய புதல்வன் பிறப்பானாயின், அவனையே நர பசுவாகக் (யாகத்தில் பலி கொடுக்கப்படும் ம்ருகமாகக்) கொண்டு உன்னை ஆராதிக்கிறேன்” என்று அம்மன்னவன் வருணனை வேண்டிக்கொண்டான். அவ்வருணனும் அப்படியே ஒப்புக்கொண்டு, அவனுக்குப் பிள்ளை பிறக்கும்படி அனுக்ரஹம் செய்தான். அதனால், அந்த ஹரிச்சந்த்ரனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன் ரோஹிதனென்று ப்ரஸித்தனாயிருந்தான். 

அப்பால், வருணன் அம்மன்னவனை நோக்கி “உனக்குப் பிள்ளை பிறந்தான். அவனை நர பசுவாக (யாகத்தில் பலி கொடுக்கப்படும் ம்ருகமாகக்) கொண்டு என்னை ஆராதிப்பாயாக” என்றான். அதைக் கேட்ட ஹரிச்சந்த்ரனும் “பசு பிறக்குமாயின், பத்து நாள்கள் கழிந்த பின்புதான் அது பரிசுத்தமாகும். அப்பால்தான் அதைக்கொண்டு யாகம் செய்யலாம்” என்றான். வருணனும் அதற்கு ஒப்புக்கொண்டு பத்து நாட்கள் கழிந்த பின்பு மீளவும் வந்து மன்னவனைப் பார்த்து, யாகம் செய்வாய்” என்றான். ஹரிச்சந்திரன் “இந்த நரபசுவுக்கு (யாகத்தில் பலி கொடுக்கப்படும் ம்ருகத்திற்கு) பற்கள் முளைக்குமாயின், அப்பொழுது தான் பரிசுத்தமாகும்” என்றான். அப்பால் வருணன் அப்படியே ஆகட்டுமென்று பற்கள் முளைத்த பின்பு, மீளவும் வந்து, இவனுக்குப் பற்கள் முளைத்தன. யாகம் செய்யலாம்” என்றான். அதற்கு ஹரிச்சந்திரன் “இந்த நரபசுவுக்கு (யாகத்தில் பலி கொடுக்கப்படும் ம்ருகத்திற்கு) பற்கள் எப்பொழுது விழுகின்றனவோ, அப்பொழுதுதான் இது பரிசுத்தமாகும்” என்றான். வருணன் அப்படியே ஆகட்டுமென்று மொழிந்துபோய், அப்புதல்வனுக்குப் பற்கள் விழக்கண்டு, மீளவும் வந்து, “இவனுக்குப் பற்கள் விழுந்து, மீளவும் முளைத்தன. எனக்கு யாகம் செய்வாயாக” என்றான். அப்பால் ஹரிச்சந்திரன், வருணனைப் பார்த்து “ஓ வருணராஜனே! இவன் க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்தவன். இவன் ஆயுதமெடுத்துச் சண்டை செய்வதற்கு உரியவனாவானாயின், அப்பொழுது தான் யாக பசுவாயிருப்பதற்குரிய சுத்தியுடையவனாவான்” என்றான். 

இவ்வாறு பிள்ளையினிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனாகி, அந்த ப்ரீதியினால் மனம் இழுக்கப்பெற்று, அவ்வப்பொழுது சொன்ன காலங்களையெல்லாம் ஏமாற்றிக்கொண்டு வருகிற ஹரிச்சந்தர மன்னவன் மொழிந்ததைக் கேட்டு வருணதேவன், அப்படியே அவன் பிள்ளைக்கு ஆயுதமெடுக்கும் நிலை நேரிடுங்காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இப்படியிருக்கையில், அப்பொழுது ரோஹிதன் தன் தந்தை தன்னைப் பசுவாகக் கொண்டு வருணனுக்கு யாகம் செய்யப் போகிறானென்பதை அறிந்து, ப்ராணன்களோடு தப்பித்துக்கொள்ள விரும்பி, கையில், தனுஸ்ஸை ஏந்திக்கொண்டு வனத்திற்குச் சென்றான். அப்பால் வருணன் கோபித்து, ஹரிச்சந்த்ர மன்னவனுக்கு மஹோதர (வயிறு பெருக்கும்) வ்யாதியை உண்டாக்கினான். தந்தை வருணனிடம் அகப்பட்டு வ்யாதியினால் வருந்துவதைக் கேட்டு, ரோஹிதன் ஊருக்குப் போக முயன்றான். இந்திரன், அவனைப் போக வேண்டாமென்று தடுத்துப் புண்ய தீர்த்தங்களையும், புண்ய க்ஷேத்ரங்களையும் ஸேவித்துக் கொண்டு, பூமியெல்லாம் சுற்றிப் பொய் பேசின தோஷத்தினால் தந்தைக்கு நேர்ந்திருக்கிற மஹோதர (வயிறு பெருக்கும்) வ்யாதியைப் போக்கும்படி சொன்னான். ரோஹிதனும், இந்த்ரன் சொன்னபடி புண்ய தீர்த்தங்களையும் புண்ய க்ஷேத்ரங்களையும் ஸேவித்துக்கொண்டு, சில வர்ஷங்கள் அரண்யத்தில் ஸஞ்சரித்துக்கொண்டிருந்தான். இந்த்ரன் இரண்டாம் வர்ஷம், மூன்றாம் வர்ஷம், நான்காம் வர்ஷம், ஐந்தாம் வர்ஷம் ஆகிய வர்ஷங்கள் தோறும் ஒரு கிழ ப்ராஹ்மணனாய் வந்து “ஊருக்குப் போக வேண்டாம். பூமண்டலத்தில் ஸஞ்சரித்துக் கொண்டிருப்பாயாக” என்று தடுத்தான். 

அப்பால் ரோஹிதன், ஆறாம் வர்ஷம் திரிந்து திரும்பிப் பட்டணம் போகும் பொழுது, பார்க்கவ வம்சத்தில் பிறந்த அஜீகர்த்தரிடத்தினின்று அவர் பிள்ளைகளில் நடுப்பிள்ளையாகிய சுனச்சேபனை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்து, அவனைத் தனக்குப் பதில் பசுவாகத் தன் தந்தையாகிய ஹரிச்சந்திரனுக்குக் கொடுத்து, வணங்கி நின்றான். அப்பால், பெரும்புகழனும், மஹாரதனுமாகிய (10000 வில்லாளிகளுடன் தனித்துப் போர் செய்யும் வீரனுமாகிய) ஹரிச்சந்திரன், புருஷமேத யாகத்தினால் வருணன் முதலிய தேவதைகளை ஆராதித்து, மஹோதர (வயிறு பெருக்கும்) வ்யாதியினின்று விடுபட்டான். அந்தப் புருஷமேத யாகத்தில் விச்வாமித்ரர் ஹோதாவாயிருந்தார். ப்ருகு வம்சத்தில் பிறந்தவரும், ஜிதேந்திரியருமாகிய ஜமதக்னி முனிவர் அத்வர்யுவாகவும், வஸிஷ்டர் ப்ரஹ்மாவாகவும், அயாஸ்ய முனிவர் உத்காதாவாகவும்  இருந்தார்கள். {யாகத்தில் ருத்விக்குகள் யஜமானனால் நியமிக்கப்பட்டு, யஜமானனுக்காக யாகத்தைச் செய்கிறார்கள். “ஹோதா” என்கிற ருத்விக் ரிக் வேத மந்த்ரங்களைக் கூறி, யாகத்தில் குறிக்கப்பட்ட தேவதைகளை அழைக்கிறார். “அத்வர்யு” என்கிற ருத்விக் “ஹோதா”வால் அழைக்கப்பட்ட ஒவ்வொரு தேவதைக்கும் யஜுர் வேத மந்த்ரங்களைச் சொல்லி அந்தந்த தேவதைக்கு யாக குண்டத்தில் ஹோமம் செய்து, அந்தந்த தேவதை, ஹோமம் செய்யப்பட்ட த்ரவ்யத்தை (பொருளை) ஏற்றுக்கொள்ளும்படிச் செய்கிறார். “உத்காதா” என்கிற ருத்விக் ஸாமகானம் செய்து, அந்த தேவதைகள் மகிழ்ச்சி அடையும்படிச் செய்கிறார். “ப்ரஹ்மா” என்கிற ருத்விக் யாகம் ஸரியான முறையில் நடக்கிறதா என்று மேற்பார்வை செய்பவர்.}

இவ்வாறு மஹர்ஷிகள் சேர்ந்து செய்வித்த புருஷமேத யாகத்தினால் ஆராதிக்கப்பட்ட தேவேந்த்ரன், ஸந்தோஷம் அடைந்து, ஹரிச்சந்திரனுக்கு ஸ்வர்ண (தங்க) மயமான ரதத்தைக் கொடுத்தான். சுனச்சேபனுடைய மஹிமையை மேல் சொல்லப்போகிறேன். 

பார்யையோடு (மனைவியோடு) கூடிய அந்த ஹரிச்சந்த்ர மன்னவன், ஸத்யத்தில் நிலைநின்று, மனவுறுதி மாறாதிருப்பதைக்கண்டு, விச்வாமித்ரர் மிகவும் ஸந்தோஷம் அடைந்து, அவனுக்கு மனவூக்கத்துடன் ஆராய்ந்து அனுஷ்டிக்க வேண்டிய ஜ்ஞான யோகத்தை உபதேசித்தார். ஹரிச்சந்திரனும், விச்வாமித்ரர் உபதேசித்த ஜ்ஞான யோக நிஷ்டையின் மஹிமையினால், மனம் பூமியிலும், பூமி ஜலத்திலும், அந்த ஜலம் தேஜஸ்ஸிலும் (நெருப்பிலும்), தேஜஸ்ஸு (நெருப்பு) வாயுவிலும், வாயு ஆகாசத்திலும், ஆகாசம் தாமஸ அஹங்காரத்திலும், அது மஹத் தத்வத்திலும், அது ப்ரதானத்திலும் (மூலப்ரக்ருதியிலும்) பாவித்துப் பகவத் உபாஸன ரூபமான (பகவானை த்யானிப்பதான) வித்யையில் ஊன்றியிருக்கிற ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மாவை, அந்த ப்ரதானத்தில் (மூலப்ரக்ருதியில்) அனுஸந்தித்து, அந்த வித்யையினால் தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானத்தைப் போக்கி, உபாஸனத்தை நிறுத்தி, புண்ய பாபங்களாகிற பந்தங்களெல்லாம் தீரப்பெற்று, கேவல ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபமாயிருப்பதும், இத்தகையதென்று நிரூபிக்க முடியாததும், தேவன், மனுஷ்யன் முதலிய விகல்பங்களுக்கு (வேறுபாடுகளுக்கு) இடமல்லாததும், அபஹதபாப்மத்வம் (பாப ஸம்பந்தம் இல்லாமை) முதலிய குணங்கள் அமைந்ததுமாகிய, தன் ஸ்வரூபம் தோன்றப்பெறுகையாகிற மோக்ஷத்தைப் பெற்றான். 

ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக