ஒன்பதாவது ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்
(ரோஹிதனுடைய வம்சமும், ஸகர புத்ரர்கள் யாகக்குதிரையைத் தேடிச்சென்று கபிலரால் பஸ்மமாவதும் (சாம்பலாவதும்), அம்சுமான் குதிரையைத் திருப்பிக்கொண்டு வருதலும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ரோஹிதனுடைய பிள்ளை ஹரிதன். அவன் பிள்ளை சம்பன். அவன் சம்பையென்னும் பட்டணத்தை நிர்மித்தான். அவன்பிள்ளை ஸுதேவன். அவன் பிள்ளை விஜயன். அவன் பிள்ளை பேருகன். அவன் பிள்ளை வருகன். அவன் பிள்ளை பாஹுகன். அவன், சத்ருக்களால் பூமியும், ராஜ்யமும் பறியுண்டு, பார்யையுடன் (மனைவியுடன்) வனத்திற்கு சென்றான். கிழவனாகிய பாஹுகன் அங்கேயே மரணம் அடைகையில் அவன் பத்னி (மனைவி) அனுமரணஞ் செய்ய (அவனுடன் தானும் இறக்க) முயன்றிருக்கையில், அவள் கர்ப்பிணியாயிருப்பதை அறிந்த ஒளர்வ மஹர்ஷி வேண்டாமென்று தடுத்தார். அவளுடைய சக்களத்திகள், அவள் கர்ப்பிணியென்பதை அறிந்து, அவளுக்கு அன்னத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்தார்கள். அப்பால், அவளுக்கு அந்த விஷத்தோடு கூடவே பிள்ளை பிறந்தான். அதனால், அவன் ஸகரனென்று பெயர் பெற்றான். அவன் ஏழு தீவுகளுக்கும் ப்ரபுவாகிப் பெரும் புகழனாயிருந்தான். அவனுடைய பிள்ளைகள் தான் ஸமுத்ரத்தைத் தோண்டினார்கள். ஸகரர்கள் தோண்டினதால், ஸமுத்ரம் ஸாகரமென்று பெயர் பெற்றது.
அந்த ஸகரன், தாலஜங்கசர், சகர், ஹைஹயர், பர்ப்பர் என்னும் பேருடைய மிலேச்சர்களை ஆசார்யரான ஒளர்வருடைய வசனத்தினால் வதிக்காமல் விரூபர்கள் ஆக்கிவிட்டான் (உருவத்தைச் சிதைத்தான்). சிலரை மொட்டைகளாகவும், சிலரைத் தாடி, மீசைகள் மட்டும் தரிப்பவர்களாகவும், சிலரை விரி தலையர்களாகவும், சிலரைப் பாதித்தலை மொட்டைகளாகவும், சிலரை அரைத்துணி இல்லாதவர்களாகவும், சிலரை மேல்துணி இல்லாதவர்களாகவும் செய்தான். மற்றும், அந்த ஸகரன் ஆசார்யராகிய ஒளர்வரால் உபாயம் உபதேசிக்கப்பெற்று, ஸமஸ்த வேத ஸ்வரூபனும், ஸமஸ்த தேவதா ஸ்வரூபனும், ஸர்வாந்தராத்மாவும், ஸர்வ நியாமகனுமாகிய, பகவானை அச்வமேத யாகங்களால் ஆராதித்தான். அவன் நூறாவது யாகம் செய்யும்பொழுது, பூப்ரதக்ஷிணத்திற்கு (பூமியை வலம் வர) விட்டிருந்த மேலான அச்வத்தை (குதிரையை) இந்திரன் பறித்துக்கொண்டு போனான். ஸகரனுக்கு ஸுமதியென்றும், கேசினியென்றும் இரண்டு பார்யைகள் (மனைவிகள்). அவர்களில் ஸுமதிக்கு, அறுபதினாயிரம் பிள்ளைகள். அவர்கள், பலத்தினால் கொழுத்தவர்கள். அவர்கள், தந்தையினால் கட்டளையிடப்பெற்று, அதை நிறைவேற்றும் பொருட்டு யாகக்குதிரையைத் தேடிக்கொண்டு சென்று, எங்கும் காணாமல் நாற்புறத்திலும் பூமியைத் தோண்டினார்கள். கிழக்குத் திக்கு முதலாக நாற்றிசைகளிலும் பூமியைத் தோண்டிக்கொண்டு போகிற அந்த ஸகர புத்ரர்கள் வடகிழக்கு மூலையில் பாதாளத்தில் இருக்கிற கபிலருடைய அருகாமையில் இந்திரனால் கொண்டு விடப்பெற்று, மேய்ந்து கொண்டிருக்கின்ற குதிரையைக் கண்டார்கள்.
அப்பால், அவர்கள் நம்முடைய குதிரையைப் பறித்துக்கொண்டு போன திருடன் இவனே. ஆயினும், இவன் ஒன்றுமறியாதவன் போலக் கண்களை மூடிக்கொண்டிருக்கிறான். ஆகையால், பாப புத்தியுடைய இவனைக் “கொல்லுங்கள், கொல்லுங்கள்” என்று சொல்லிக்கொண்டு அந்த ஸகரபுத்ரர்கள் அறுபதினாயிரம் பேர்களும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, அம்முனிவரை எதிர்த்தார்கள். அப்பொழுது, அந்தக் கபில முனிவர், கண்களைத் திறந்தார். அந்த ஸகரபுத்ரர்கள் மஹேந்த்ரனால் மனம்பறியுண்டு, மஹானுபாவரான கபிலரிடத்தில் அபராதப்பட்டமையால் அழியமுயன்று, தங்கள் சரீரத்திலேயே உண்டான அக்னியினால் க்ஷணத்திற்குள் பஸ்மமானார்கள் (சாம்பலானார்கள்). சிலர், கபிலருடைய கோபாக்னியால் கொளுத்தப்பட்டார்களென்று சொல்லுகிறார்கள். அவர்கள், உண்மையை அறிந்தவர்களல்லர். அவர்கள் சொல்லுவது நற்பேச்சு அன்று. அவர்கள் தம்முடைய அபராதத்தினால் எரிந்து போனார்களென்பதே உண்மை.
ஏனெனில், கேவல சுத்த ஸத்வ குணத்திற்கு இடமாயிருப்பவரும், ஜகத்தையெல்லாம் புனிதம் செய்யவல்ல தேஹமுடையவருமாகிய, அந்தக் கபில முனிவரிடத்தில் கோபமாகிற தமோகுணம் உண்டாவதற்கு என்ன ப்ரஸக்தி (வாய்ப்பு) உண்டு? பூமியின் துகள் ஆகாயத்தில் படியுமோ? பூமியினின்று கிளம்பின துகள் ஆகாயத்தில் படிந்தாற்போலத் தோன்றுமேயன்றி உண்மையில் படியாது. மீளவும் அது பூமியிலேயே வந்து சேர்ந்துவிடும். அவ்வாறே ஸகரர்களின் அபராதம் கபிலரிடத்தில் உள்ளது போலத் தெரியாதவர்களுக்குத் தோன்றுமேயன்றி உண்மையில் அவரிடத்தில் தோஷத்திற்கு ப்ரஸக்தியே (வாய்ப்பே) கிடையாது. மற்றும், இந்தக் கபில முனிவர் இவ்வுலகத்தில் ஸாங்க்ய சாஸ்த்ரமாகிற திடமான ஓடத்தை (படகை) உண்டாக்கினார். ஸம்ஸார பந்தத்தினின்று விடுபடவேண்டுமென்று விரும்புகிறவர்கள் தாண்ட முடியாததும், மிருத்யு (மரண) பயத்தை விளைப்பதுமாகிய ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தை, இந்த ஓடத்தினால் தாண்டுகிறார்கள். இத்தகைய மஹானுபாவரும், ஸர்வஜ்ஞரும், பிறரை அனுக்ரஹிப்பதிலேயே நிலைநின்ற மனமுடையவருமாகிய அம்முனிவர்க்கு, சத்ருவென்றும், மித்ரனென்றும் பேதபுத்தி எவ்வாறு உண்டாகும்?
ஸகரனுக்குக் கேசினியிடத்தில் பிறந்தவன் ஒரு புதல்வன் இருந்தான். அவனை, அஸமஞ்ஜஸனென்று வழங்குவார்கள். அவனுடைய பிள்ளை அம்சுமானென்று ப்ரஸித்தி பெற்றிருந்தான். அந்த அம்சுமான் தன் பாட்டனுடைய நன்மையில் ஊக்கமுற்றிருந்தான். அஸமஞ்சஸன் பூர்வஜன்மத்தில் யோகியாயிருந்து, பற்றுதலால் யோகத்தினின்று நழுவினான். அந்த யோக மஹிமையினால், இந்த ஜன்மத்தில் பூர்வஜன்மத்தைப் பற்றின நினைவு நேரப்பெற்று, மீளவும் நாம் கெட்டுப்போகலாகாது என்று நினைத்து, பற்றுதலை விலக்கும் பொருட்டு, தான் நற்புத்தியனாயினும், தன்னை துர்ப்புத்தி உடையவனாக, அனைவரும் நினைக்கும்படி நடக்க முயன்று, உலகத்தவர்களால் நிந்திக்கத் (பழிக்கத்) தக்கதும் பந்துக்களுக்கு அனிஷ்டமுமான (விருப்பமற்றதுமான) கார்யங்களைச் செய்வதும், ஜனங்களைப் பயப்படுத்துவதுமாயிருந்து, விளையாடுகின்ற இளம் பிள்ளைகளைப் பிடித்து ஸரயூ நதியில் போட்டுக் கொண்டிருந்தான். அவன், அவ்வாறு நடத்திக் கொண்டிருப்பதைக்கண்டு, தந்தையாகிய ஸகரன், அவனிடத்தில் ஸ்நேஹத்தைத் துறந்து, அவனை ஊரை விட்டுப் போகும்படி துரத்தி விட்டான். அவன் தான் ஆற்றில் போட்ட பிள்ளைகளையெல்லாம் தன் யோக மகிமையால் காண்பித்து, மன்னவனுடைய கட்டளைப்படியே ஊரை விட்டுப் போனான். அப்பொழுது, அயோத்யையிலுள்ளவர் அனைவரும், தங்கள் பிள்ளைகள் எல்லாரும் மீண்டு வரக்கண்டு வியப்புற்றார்கள். மன்னவனே! ஸகர மஹாராஜனும் “ஆ! நான் இவன் மஹிமையை அறியாமல் துரத்தி விட்டேனே” என்று பரிதபித்தான். பிறகு, அம்சுமான் ஸகர மன்னவனால் குதிரையைத் தேடிக்கொண்டு வரும்படி அனுப்பப்பட்டு, தன் சிற்றப்பன்மார்கள் தோண்டின வழியைத் தொடர்ந்து சென்று, கடைசியில் அவர்கள் பஸ்மமாய் (சாம்பலாய்) இருப்பதையும் அருகாமையில் குதிரையையும் கண்டான். அங்கு பகவானுடைய அவதாரமாகிய கபில முனிவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அம்சுமான் மிகுந்த மதி (புத்தி) உடையவனாகையால், அவருக்கு நமஸ்காரம்செய்து, கைகுவித்து, மனவூக்கத்துடன் ஸ்தோத்ரம் செய்தான்.
அம்சுமான் சொல்லுகிறான்:- ஜனங்கள் அந்தராத்மாவான (உள் இருந்து நியமிப்பவனான) உன்னுடைய உண்மையை ஸமாதி (த்யானம்) முதலிய உபாயங்களால் நன்றாக அறியமாட்டார்கள். அவ்வாறு யோகிகளாலும் அறிய முடியாத உன்னை மற்ற நாங்கள் எப்படி அறிவோம்? நாங்கள் உன் மனம், சரீரம், புத்தி இவைகளால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட (உண்டாக்கப்பட்ட) ப்ரஹ்ம தேவன் முதலியவர்களால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள் (உண்டாக்கப்பட்டவர்கள்). தேஹாத்ம விவேகம் அற்றவர்கள் (உடல், ஆத்மா இவற்றின் உண்மையை அறியாதவர்கள்); தேஹம் (உடல்) உடையவர்கள் அனைவரும் ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களுக்கு உட்பட்டுச் சப்தாதி விஷயங்களையும் ப்ரக்ருதியின் பரிணாமமான சரீரத்தையும் நினைத்துக் கொண்டிருப்பார்களன்றி, தமக்கு அந்தராத்மாவாயிருக்கின்ற உன்னை அறியமாட்டார்கள். அவர்கள் உன் மாயையால் மதிமயங்கி மற்ற விஷயங்களையே அறிவார்கள். நீ கேவல ஜ்ஞான ஆனந்த ஸ்வருபன். பிறந்தநாள் முதற்கொண்டே தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானம் (அறியாமை) தீண்டப்பெறாத ஸனந்தனாதி முனிவர்களும் உன்னை வெறுமனே த்யானித்துக் கொண்டிருக்க வேண்டுமன்றி ஸாக்ஷாத்கரிக்க (நேராகப் பார்த்து உன் உண்மை நிலையை அறிய) மாட்டார்கள். அப்படிப்பட்ட உன்னை மஹா மூடனாகிய (பெரும் முட்டாளாகிய) நான் எவ்வாறு மனத்தினால் ஆராய்ந்து அறியவல்லனாவேன்? ஆகையால், நான் உன்னை வெறுமனே நமஸ்கரிக்கிறேன்.
நீ ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களும், காமத்தினால் விளையும் சரீரமுமற்றவன். உனக்கு ஜாதி முதலிய தர்மங்களும், அவற்றைப் பற்றி வருகிற நாமங்களும், கிடையாது. நீ சுப (நல்ல) அசுப (தீய) பலன்களற்றவன்; சேதனா சேதனங்களுக்கு (ஜீவர்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களுக்கு) அந்தராத்மாவாயிருப்பினும், அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாதவன். நீ ஜ்ஞான உபதேசத்திற்காக இத்திருவுருவத்தை உன் ஸங்கல்பத்தினால் ஏற்றுக் கொண்டிருக்கின்றாயன்றி ஸுக துக்கங்களை அனுபவிப்பதற்காக அன்று. நீ புராணபுருஷன். உனக்கு நமஸ்காரம்.
இவ்வுலகத்திலுள்ளவர் காமம் (ஆசை), லோபம் (பேராசை), அஸுயை (பொறாமை), மோஹம் (மயக்கம், மனக்கலக்க்கம்) இவைகளால் மதி (புத்தி) மயங்கி உன்மாயையால் நிர்மிக்கப்பட்ட வீடு முதலியவற்றைத் தங்கள் போகத்திற்குரிய (அனுபவத்திற்குரிய) கருவிகளென்று ப்ரமிக்கிறார்கள். ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் இருப்பவனே! ஷாட்குண்ய பூர்ணனே! இப்பொழுது உன்னுடைய காட்சியால் எனக்குச் சப்தாதி விஷயங்கள் (உலக விஷயங்கள்) அவ்விஷயங்களில் விருப்பம், புண்ய பாப கர்மங்கள், இந்திரியங்கள் ஆகிய இவற்றிற்கு மூலகாரணமான தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானம் (அறியாமை) என்கிற திடமான பாசம் (கயிறு) அறுந்து போயிற்று.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு துதிக்கப்பட்ட ப்ரபாவமுடையவரும் மஹானுபாவருமான அந்தக் கபில முனிவர், அந்த அம்சுமானை மனத்தினால் அனுக்ரஹித்து இவ்வாறு மொழிந்தார்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- குழந்தாய்! அம்சுமானே! இந்தக் குதிரை உன் பாட்டனுடைய யாகப்பசு. இதை நீ கொண்டு போவாயாக. இதோ உன் தந்தைமார்கள் சாம்பலாயிருக்கிறார்கள். இவர்களுக்குக் கங்கை நீர் கொண்டு, ஸகல கார்யங்களையும் நடத்தவேண்டுமேயன்றி, மற்ற ஜலத்தினால் (நீரினால்) செய்யலாகாது.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்சுமான், இவ்வாறு மொழிந்த கபில முனிவரை ப்ரதக்ஷிணம் செய்து, சிரஸினால் நமஸ்கரித்து, குதிரையைக்கொண்டு வந்தான். ஸகரனும் அந்தப் பசுவைக்கொண்டு குறை யாகத்தை முடித்தான். அப்பால் ராஜ்யத்தை அம்சுமானிடத்தில் வைத்து, தேஹத்திலும், அதைத் தொடர்ந்தவர்களிடத்திலும், அஹங்கார, மமகாராதிகளைத் துறந்து, ஒளர்வ முனிவர் உபதேசித்த ஜ்ஞான மார்க்கத்தினால் சிறந்த கதியாகிய மோக்ஷத்தைப் பெற்றான்.
எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.