எட்டாவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்
(பகவான் வாமனனாக அவதரித்துப் பலியின் யாகபூமிக்குப்போக, அவன் பகவானை ஸத்கரித்தல் [கெளரவித்தல்])
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு ப்ரஹ்மதேவனால் துதிக்கப்பட்ட செயல்களும் ப்ரபாவங்களுமுடையவனும், கர்மத்தினால் விளையும் மரணம், பிறவி இவை அற்றவனும், மோக்ஷம் கொடுப்பவனுமாகிய பகவான் நான்கு புஜங்கள் (கைகள் / தோள்கள்) அமைந்து சங்கம், கதை, தாமரை, மலர், சக்ரம் இவை தரித்துப் பீதாம்பரம் உடுத்தித் தாமரையிதழ் போல் மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட கண்கள் விளங்கப்பெற்று அதிதியிடத்தில் ஆவிர்ப்பவித்தான் (தோன்றினான்). அப்பரமபுருஷன் கறுத்து நிர்மலனாகிக் (அழுக்கற்று) காதுகளில் அணிந்த மகரகுண்டலங்களின் சோபையால் (அழகால்) ஒளிப்பெருக்குடன் திகழ்கின்ற முகாரவிந்தமும் (முகத் தாமரையும்), மார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் திருமருவும், திகழ்கின்ற கைவளை, தோள்வளை, கிரீடம், அரைநாண்மாலை, முத்துமாலை, சிலம்பு, தண்டை இவைகளும் திகழப் பெற்றிருந்தான். வண்டினங்கள் முரலப் (மொய்க்கப்) பெற்றதும் தனக்கு அஸாதாரணமாயிருப்பதும் மிக்க அழகு பொருந்தியதுமாகிய வனமாலையால் விளக்கமற்ற ஸர்வஜ்ஞனாகிய (அனைத்தும் அறிந்தவனான) அப்பரமபுருஷன் கச்யபப்ரஜாபதியின் க்ருஹத்திலுள்ள அதிகாரத்தையெல்லாம் தன்னுடைய தேஹ காந்தியால் போக்கிக்கொண்டு கழுத்தில் அணிந்த கௌஸ்துபமணியுடன் ப்ரகாசித்தான். அப்பொழுது திசைகளும், ஜலங்களும் பிராணிகளின் மனங்களும் தெளிந்தன. ப்ரஜைகள் ஸந்தோஷம் அடைந்தன. வர்ஷருது முதலிய ருதுக்கள் தத்தம் குணங்கள் அமைந்திருந்தன. த்யுலோகம் (தேவ லோகம்), அந்தரிக்ஷலோகம் (இடைப்பட்ட ஆகாசம்), பூலோகம் ஆகிய மூன்று லோகங்களும், தேவதைகளும், அக்னி ஜ்வாலைகளும், பசுக்களும், ப்ராஹ்மணர்களும், பர்வதங்களும் (மலைகளும்) ஸந்தோஷம் அடைந்தன. பாத்ரபத (ஆவணி / புரட்டாசி) மாஸத்தின் சுக்லபக்ஷத்தில் த்வாதசியினன்று ச்ரவண நக்ஷத்ரத்தில் அபிஜித் என்கிற முஹூர்த்தத்தில் ஸர்வேச்வரன் அதிதியிடத்தில் ஆவிர்ப்பவித்தார் (தோன்றினார்). அச்வினி முதலிய ஸமஸ்த நக்ஷத்ரங்களும், குரு, சுக்ரன் முதலிய க்ரஹங்களும் அந்தப் பகவானுடைய ஜன்மத்தை மேன்மை பெறும்படி செய்தன.
அந்த த்வாதசியினன்று பகலில் பகவான் ஆவிர்ப்பவிக்கும் (தோன்றும்) பொழுது ஸூர்யன் ஆகாயத்தின் இடையில் வந்திருந்தான். என்று பகவான் அவதரித்தானென்று சொல்லுகிறார்களோ அந்த த்வாதசி திதி விஜயை என்று கூறப்படுகின்றது. அப்பொழுது சங்கம், துந்துபி, ம்ருதங்கம், பணவம், ஆனகம் முதலிய பல வாத்யங்கள் முழங்கின. நானாவிதமான வாத்யங்களின் த்வனிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெருங்கோஷம் உண்டாயிற்று. அப்ஸர மடைந்தையர்கள் மனக்களிப்புற்று ஆடினார்கள். சிறப்புடைய கந்தர்வர்கள் பாடினார்கள். முனிவர்களும், தேவர்களும், மனுக்களும், பித்ருக்களும், அக்னிகளும், ஸித்தர், வித்யாதரர், கிம்புருஷர், கின்னரர், சாரணர், யக்ஷர், ராக்ஷஸர், ஸுபர்ணர், நாகர் ஆகிய இவர்களும் கூட்டம் கூட்டமாயிருந்து ஸ்தோத்ரம் செய்தார்கள்.
உபதேவதைகள் ஆடல் பாடல்களைச் செய்து அந்தப் பரமனைப் புகழ்ந்தார்கள். ஆதித்யர்கள் அந்த ஆச்ரமம் முழுவதும் புஷ்பங்களால் இறைத்தார்கள். அதிதி அவ்வாறு தன் கர்ப்பத்தினின்று உண்டான அந்தப் பரமபுருஷனைக் கண்டு வியப்புற்று ஸந்தோஷம் அடைந்தாள். தன்னுடைய ஆச்சர்யமான சக்தியோகத்தினால் திவ்யமங்கள விக்ரஹம் கொண்டிருக்கிற பகவானைக் கண்டு ப்ரஹ்மதேவனும் வியப்புற்று “ஜய விஜயீ பவ” என்றான்.
கௌஸ்துபம் முதலிய ஆபரணங்களோடும், சங்கு சக்கரம் முதலிய ஆயுதங்களோடும் கூடின எந்த உருவம் தனக்கு அஸாதாரணமாய்த் (அவனுக்கே உரியதாய்த்) திகழ்கின்றதோ, ப்ரக்ருதி புருஷர்களைச் சரீரமாகவுடைய அந்தப் பகவான் எந்த உருவத்தை நித்ய விபூதி (ஸ்ரீவைகுண்டம்) முதலிய இடங்களில் ஏற்றுக்கொண்டிருக்கிறானோ, அப்படிப்பட்ட உருவத்துடனே தோன்றின அப்பரமன் தாய், தந்தைகள் பார்த்துக் கொண்டேயிருக்கையில், கூத்தாடி ஒரு வேஷத்தைக் களைந்து, மற்றொரு வேஷம் பூண்டு வருவதுபோல, அவ்வுருவத்தை மறைத்து வாமன வடிவாய்த் தோன்றினான். வாமன ரூபியான அந்தப் பகவானைக் கண்டு மஹர்ஷிகள் ஸந்தோஷம் அடைந்து கச்யப ப்ரஜாபதியை முன்னிட்டுக்கொண்டு ஜாதகர்மம் முதலிய கார்யங்களை நடத்தினார்கள். அந்த வாமனனுக்கு உபநயன ஸம்ஸ்காரம் நடக்கையில் ஸூர்யன் ஸாவித்ரியை உபதேசித்தான். லோகநாதனும், அழிவற்றவனுமாகிய அந்த வாமனனுக்கு ப்ருஹஸ்பதி ப்ரஹ்மஸூத்ரத்தையும் (யஜ்ஞோபவீதம்), காச்யபர் மேகலையையும் (ஒட்டியானம்), பூமிதேவி க்ருஷ்ணாஜினத்தையும் (மான் தோல்), வனங்களுக்கு ப்ரபுவாகிய சந்த்ரன் தண்டத்தையும் (பலாச மர குச்சி), தாய் கௌபீனம் (கோவணம்) வஸ்த்ரம் இவைகளையும், த்யுதேவதை குடையையும், வேத கர்ப்பர் கமண்டலுவையும், ஸப்தரிஷிகள் குசங்களையும் (தர்பங்கள்), ஸரஸ்வதி அக்ஷமாலையையும் கொடுத்தார்கள்.
இவ்வாறு உபநயனம் செய்யப்பெற்ற வாமனனுக்குக் குபேரன் பிக்ஷா பாத்ரம் (பிச்சை வாங்கும் பாத்ரம்) கொடுத்தான். பதிவ்ரதையும், மஹானுபாவையும், உமை அம்பிகையென்று பெயர்பெற்றவளுமாகிய பார்வதி தானே நேரில் வந்து பிக்ஷை கொடுத்தாள். இவ்வாறு வெகுமதிக்கப்பெற்றவனும் மேன்மைக்கு இடமுள்ளவனுமாகிய ப்ரஹ்மசாரி வாமனன் ப்ரஹ்ம தேஜஸ்ஸினால் ப்ரஹ்மரிஷிகள் நிறைந்த அந்த ஸபையை மிகவும் விளங்கச் செய்தான். ஸமர்த்தராகிய கச்யபர் ஜ்வலித்துக் கொண்டிருக்கிற உபநயனாக்னியை ருஜுவாக்கிப் (வளர்த்து) பரிஸ்தரணம் இட்டு (சுற்றி சுத்தி செய்து) நன்கு பூஜித்து ஸமித்துக்களால் ஹோமம் செய்தார். பிறகு மஹானுபாவனாகிய அவ்வாமனன், பலிசக்ரவர்த்தி ப்ருகு வம்சத்தவர்களைக் கொண்டு அச்வமேத யாகங்கள் செய்கிறானென்றும், பிறரால் எதிர்க்க முடியாமல் மஹாபலிஷ்டனாய் இருக்கிறானென்றும் கேள்விப்பட்டு எல்லா பலங்களும் நிறைந்து பாரத்தினால் பூமியை அடிக்கடி வணங்கச் செய்துகொண்டு அவ்விடம் சென்றான்.
நர்மதா நதியின் வடகரையில் ப்ருகுவத்ஸமென்னும் க்ஷேத்ரத்தில் யாகங்களில் சிறந்த அச்வமேத யாகத்தை நடத்துகின்ற பலியின் ருத்விக்குகள், அருகாமையில் உதித்த ஸூர்யன் போல் வருகின்ற வாமன பகவானைத் தூரத்திலேயே கண்டார்கள்.
மன்னவனே! யஜமானனும், ருத்விக்குகளும், ஸபையிலுள்ள மற்றவர்களும் வாமனனுடைய தேஜஸ்ஸினால் ஒளி பறிக்கப் பெற்றவர்களாகி, “ஸுர்யன் வருகிறானா? அல்லது அக்னி வருகிறானா? அல்லது ஸனத்குமாரர் யாகத்தைப் பார்க்க விரும்பி வருகிறாரா?” என்று பலவாறு ஸந்தேஹித்தார்கள். இவ்வாறு ஆசார்யர்களாகிய ப்ருகுக்களும் சிஷ்யனாகிய பலியும் ஸந்தேஹித்துக் கொண்டிருக்கையில் அந்த வாமன பகவான் தண்டத்தையும், குடையையும், ஜலம் நிறைந்த கமண்டலுவையும் தரித்துக்கொண்டு அச்வமேத யாகம் நடக்கும் இடத்திற்குள் நுழைந்தான். முஞ்சப் புற்களால் பின்னிய மேகலையை (ஒட்டியானத்தை) அரையில் தரித்து உபவீதத்தின் மேல் க்ருஷ்ணாஜினத்தை (மான் தோலை) உத்தரீயமாகப் போர்த்து ஜடைகளும் குடுமியும் அமைந்து மாயையினால் மாணிக்குறள் (சிறிய) உருவம் கொண்ட பகவான் யஜ்ஞபூமியில் நுழைந்துவரக் கண்டு யஜமானனாகிய பலியும் யாகம் செய்விக்கிற ப்ருகுக்களும் அக்னிகளுடன் அந்தப் பகவானுடைய தேஜஸ்ஸினால் ஒளி மழுங்கப்பெற்று எழுந்து அவனை ஸத்கரித்தார்கள் (கெளரவித்தார்கள்).
யஜமானனாகிய பலி, உருவத்திற்குத் தகுந்த அவயவங்கள் அமையப் பெற்றவனும், மனத்திற்கினியனும் ஆயிரம் கண்கள்கொண்டு காணத் தகுந்தவனுமாகிய வாமனரூபியான பகவானைக் கண்டு அவனுக்கு ஆஸனம் கொண்டு வந்தான். அப்பால் பலி அவ்வாமனனை நல்வரவு ஆகுக என்று விசாரித்து அவனுடைய பாதங்களை அலம்பிப் பற்றற்ற யோகிகளின் மனத்தில் விளையாடுபவனாகிய அந்தப் பகவானை ஆராதித்தான். தன்னுடைய தர்மத்தை அறிந்த பலி கலிதோஷங்களையெல்லாம் போக்கும் திறமையுள்ளதும் மிக்க மங்களமுமாகிய அந்தப் பகவானுடைய பாதாரவிந்தங்களின் ப்ரக்ஷாளன (திருவடிகளைக் கழுவிய) ஜலத்தைத் தன் தலையில் தரித்தான். தேவர்களுக்கும் தேவனாகிய ப்ரஹ்மதேவனும், சந்த்ரமௌலியாகிய ருத்ரனும் பெரிய பக்தியுடன் அவனுடைய பாதங்களை அலம்பிப் பெருகின ஜலமாகிய கங்கையைச் சிரஸா வஹித்தார்கள். ஆகையால் தேவதேவர்களாலும் தலை மேல் தாங்கி வெகுமதிக்கத் தகுந்த அந்தப் பகவானுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைப் பலி சிரத்தில் தரித்தது ஒரு பெருமையன்று. பலி இவ்வாறு பூஜித்து அவனைக் குறித்து மேல் வருமாறு கூறினான்.
பலி சொல்லுகிறான்:- ப்ராஹ்மணனே! உனக்கு நல்வரவாகுக? உனக்கு நமஸ்காரம். உனக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? உன் ப்ருத்யர்களாகிய எங்களைக் கொண்டு உன் கார்யத்தை நிறைவேற்றிக் கொள்வாயாக. சிறந்த உருவமுடைய உன்னைக் கண்டால் ப்ரஹ்மரிஷிகளின் தவமே இவ்வாறு ப்ரத்யக்ஷமாக ஒரு வடிவங்கொண்டு வந்ததோ என்று தோற்றுகிறது. மஹானுபாவனாகிய நீ எங்கள் க்ருஹம் தேடி வந்தனையாகையால் எங்கள் பித்ருக்கள் திருப்தி அடைந்தார்கள். குலமும் பரிசுத்தமாயிற்று. இந்த யாகமும் விதிப்படி அனுஷ்டிக்கப்பட்டதாயிற்று. இப்பொழுது என்னுடைய அக்னிகளும் விதியின்படி நன்கு ஹோமம் செய்யப்பெற்றன.
ப்ராஹ்மண குமாரனே! உன் பாதங்களை அலம்பின ஜலத்தினால் பாபங்களெல்லாம் தொலையப் பெற்ற என்னுடையதாகிய இப்பூமியும் சிறியவைகளான உன்னடிகளால் பரிசுத்தமாயிற்று. ப்ராஹ்மண குமாரனே! நீ ஏதோ ஒன்றை யாசிக்க வந்தவன் போலத் தோற்றுகின்றாய். மாணீ (சிறிய உருவம் உடையவனே)! ஆகையால் பசு, ஸுவர்ணம் எல்லாக்குணங்களும் அமைந்த வீடு, அறுசுவையும் அமைந்த அன்னம், கன்னிகை, செல்வப் பெருக்குடைய க்ராமங்கள், குதிரைகள், யானைகள், மேலான ரதங்கள் ஆகிய இவற்றுள் நீ எதை விரும்புகின்றாயோ அதை என்னிடத்தினின்று பெற்றுக்கொள்வாயாக. பூஜிக்கத்தகுந்தவர்களில் சிறந்தவனே! மற்றும் நீ எதை விரும்புகின்றாயோ அதையெல்லாம் நான் கொடுக்க ஸித்தமாயிருக்கின்றேன். வேண்டிப் பெற்றுக் கொள்வாயாக.
பதினெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.