ஶ்ரீமத் பாகவதம் - 185

 எட்டாவது ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்

(அதிதி பயோவ்ரதத்தை (இதன் விவரம் 16வது அத்யயத்தில் சொல்லப்பட்டது) அனுஷ்டிக்கையில், பகவான் அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அவளுக்குப் பிள்ளையாகப் பிறந்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தன் பர்த்தாவாகிய கச்யபரால் வ்ரதத்தை அனுஷ்டிக்கும்படி உபதேசிக்கப்பட்ட அந்த அதிதி சோம்பலின்றி மனவூக்கத்துடன் பன்னிரண்டு நாள் அந்தப் பயோவ்ரதத்தை அனுஷ்டித்தாள். அவள் புத்தியாகிற ஸாரதியைக் கொண்டு மனத்தினால் இந்திரியங்களாகிற துஷ்ட (தன் விருப்பப்படி உலக விஷயங்களில் ஈடுபடும்) குதிரைகளை அடக்கி மற்றொன்றிலும் செல்லாத புத்தியினால் மஹாபுருஷனும், ஸர்வேச்வரனுமாகிய வாஸுதேவனையே சிந்தித்துக் கொண்டிருந்து பயோவ்ரதத்தை அனுஷ்டித்தாள். 

அவள், ஸர்வாந்தராத்மாவும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) வாஸுதேவனிடத்தில் மனத்தை மற்றொன்றிலும் செல்லாதபடி புத்தியினால் நிலை நிறுத்தி வ்ரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கையில், பீதாம்பரம் உடுத்திச் சதுர்புஜனாய், சங்கம், சக்ரம், கதை இவை தரித்துத் திகழ்கின்ற ஆதிபுருஷனாகிய வாஸுதேவ பகவான் அவளுக்கு ப்ரத்யக்ஷமாய் வந்து தோன்றினான். அந்த அதிதி அவ்வாறு கண்ணுக்குப் புலப்படுகின்ற வாஸுதேவ பகவானைக் கண்டு விரைந்தெழுந்து ப்ரீதியினால் (அன்பு மிகுதியால்) தழதழத்துச் (ஒன்றும் பேச முடியாதபடி குரல் வெளிவராமல்) சரீரத்தைத் (தன் உடலை) தண்டம் போல் (தடி / குச்சி போல்) பூமியில் சாய்த்து நமஸ்கரித்தாள். அவள் எழுந்து கைகூப்பிக் கொண்டு வெறுமனே நின்றிருந்தாளன்றி, ஆனந்த நீர்களால் கண்கள் கலங்கி உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் நிறைந்து அந்தப் பகவானுடைய காட்சியாகிற மஹோத்ஸவத்தினால் (பெரு விழாவினால்) சரீரத்தில் (உடலில்) நடுக்கம் உண்டாகப்பெற்று ஸ்தோத்ரம் செய்ய முடியாதிருந்தாள். 

குருகுலாலங்காரனே! அனந்தரம் அந்த அதிதி, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும், யஜ்ஞங்களுக்கும், உலகங்களுக்கும் நாதனாகிய பகவானைக் கண்டு கண்களால் பருகுபவள் போன்று ப்ரீதியினால் தழதழத்த உரையுடன் மெல்ல மெல்லத் துதிசெய்யத் தொடங்கினாள்.

அதிதி சொல்லுகிறாள்:- யஜ்ஞங்களுக்கு (யாகங்களுக்குப்) ப்ரபுவே! யஜ்ஞங்களில் (யாகங்களில்) கொடுக்கிற ஹவிஸ்ஸைப் (தேவதைகளுக்காக அக்னியில் கொடுக்கப்படும் நெய்யுடன் சேர்ந்த அன்னம்) புசிப்பவனே! தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாதவனே! கங்காதி புண்ய தீர்த்தங்களுக்கு விளைநிலமான பாதார விந்தங்களும், பரிசுத்தமான புகழும், கேட்ட மாத்ரத்தில் மங்களத்தை விளைக்கவல்ல நாமங்களும், வருந்திச் சரணம் அடைந்தவர்களின் துக்கங்களைப் போக்கவல்ல தோற்றங்களும் உடையவனே! என்னைப்போன்ற தீனர்களுக்கு (புகலற்றவர்களுக்கு) நாதனாயிருக்கின்றனையல்லவா? ஆகையால் எங்களுக்கு ஸுகத்தை விளைப்பாயாக. நீ ஜகத்தையெல்லாம் சரீரமாகவுடையவன். ஆகையால் தான் நீ இவ்விடத்தில் எனக்குத் தோன்றினாய். தன்னைப் பற்றினவர்களுடைய துக்கங்களைப் போக்கும் தன்மையுள்ள உனக்கு நமஸ்காரம். 

ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) நீயே காரணன். அவற்றை நிறைவேற்றும் பொருட்டுப் பலவாறு பரிணமிக்குந்தன்மையுடைய மாயையின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களை உன் இச்சையினால் (விருப்பத்தால்) ஏற்றுக்கொள்கின்றாய். நீ ஸூக்ஷ்மர்களான (அணு அளவிலான, நம் கண்களுக்குப் புலனாகாத, மிகச் சிறிய உருவம் உடைய) ஜீவாத்மாக்களிடத்திலும் அந்தராத்மாவாய் வ்யாபித்திருக்கின்றாய். நீ ப்ரபஞ்சமாகப் பரிணமிக்கினும் (மாறுபாடு அடைந்தாலும்) விகாரங்களெல்லாம் (மாறுபாடுகள் எல்லாம்) உன் சரீரமான ப்ரக்ருதி புருஷர்களைச் சேர்ந்தவைகளேயன்றி உன்னைச் சேர்ந்தவைகளன்று. ஆகையால் என்றும் வேறுபாடின்றி ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும் நீ ஒரே விதமாயிருப்பவன். மற்றும், நீ ஸர்வகாலமும் தோற்றுவதும், கல்யாண குணங்களெல்லாம் நிறைந்திருப்பதும், அளவிறந்த ஆநந்தமே வடிவாயிருக்கப் பெற்றதுமாகிய உன் ஸ்வரூபத்தை எப்பொழுதும் உள்ளபடி அறிந்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றாய். ஆகையால் ஜீவாத்மாக்களுக்குள்ள அஜ்ஞானம் (அறிவின்மை) உனக்கு ஒருகாலும் கிடையாது. இவ்வாறு நித்ய (எப்பொழுதும்) ஜ்ஞான ஆனந்த ஸ்வரூபனாகிய உனக்கு நமஸ்காரம். 

அனந்தனே! ஸந்தோஷமுற்றிருக்கின்ற உன்னிடத்தினின்று ப்ராணிகளுக்கு மேலான ஆயுஸ்ஸு, இணையில்லாத அழகு, பலம் முதலியவை அமைந்த சரீரம், நினைத்த போகங்களை அனுபவிக்கும்படியான செல்வப்பெருக்கு, ஸ்வர்க்கம், பூமி, பாதாளம், அணிமாதியான ஸமஸ்த யோகஸித்திகள் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன - 

1.அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

2.மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

3.லகிமா - லேசாகச் செய்தல் 

4.கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

5.வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

6.ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

7.ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

8.ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை), 

தர்ம, அர்த்த காமங்கள், ஸம்சயமில்லாத (ஸந்தேஹம் இல்லாத) ஞானம் ஆகிய இவையெல்லாம் ஸுலபமாக உண்டாகின்றன. சத்ரு ஜயம் (எதிரிகளை வெல்வது) முதலிய மற்ற வரங்கள் உண்டாவதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! செந்தாமரைக் கண்ணனாகிய பகவான் இவ்வாறு அதிதியால் துதி செய்யப்பெற்று ஸமஸ்த ப்ராணிகளுடைய மனோபாவத்தையும் (மனத்தின் போக்கை) அறிந்தவனாகையால் மேல்வருமாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தேவதைகளின் தாயே! சத்ருக்களாகிய (எதிரிகளான) தைத்யர்களால் (திதியின் பிள்ளைகளான அஸுரர்களால்) செல்வம் பறியுண்டு வாஸஸ்தானத்தினின்றும் (இருப்பிடத்திலிருந்தும்) துரத்தப்பெற்று வருந்துகின்ற உன் புதல்வர்களுக்கு முன்போல ஐச்வர்யம் வர வேண்டுமென்று நீ நெடுநாளாய் விரும்பியிருப்பது எனக்குத் தெரியும். கொடிய மதமுடைய அஸுர வீரர்களை யுத்தத்தில் வென்று ஜயத்தையும் (வெற்றியையும்) செல்வத்தையும் பெற்ற புதல்வர்களுடன் ஓரிடத்தில் வஸிக்க விரும்புகின்றாய். இந்த்ரனை முதன்மையாகவுடைய உன் பிள்ளைகளால் யுத்தத்தில் அடியுண்ட சத்ருக்களின் (எதிரிகளின்) மடந்தையர்கள் (மனைவிகள்) யுத்த பூமிக்கு வந்து வருந்திக் கண்ணீருடன் கதறுவதைக் காண ஆசைப்படுகின்றாய். புகழையும், செல்வத்தையும் சத்ருக்களிடத்தினின்று மீட்டுக்கொண்டு பெரிய ஐச்வர்யத்துடன் ஸ்வர்க்கத்தில் வீற்றிருந்து விளையாடுகின்ற புதல்வர்களைப் பார்க்க விரும்புகின்றாய். 

தேவி! இப்பொழுது அந்த அஸுர வீரர்கள் காலஸ்வரூபனான ஈச்வரன் அனுகூலனாயிருக்கப்பெற்ற அந்தணர்களால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் பெரும்பாலும் ஜயிக்க முடியாதவர்களென்றே எனக்குத் தோற்றுகின்றது. அவர்களிடத்தில் இப்பொழுது நாம் பராக்ரமத்தை (வீரம், சூரத்தனத்தை) உபயோகப்படுத்துவோமானால், அது நமக்கு ஸுகத்தை விளைவிக்காது. ஆயினும் உன்னுடைய வ்ரத அனுஷ்டானத்தினால் (வ்ரதம் செய்ததால்) ஸந்தோஷம் அடைந்த நான் இவ்விஷயத்தில் ஏதேனும் ஒரு உபாயத்தை ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால், என்னைக் குறித்துச் செய்த ஆராதனம் வீணாவதற்குரியதன்று. செய்தவர்களின் ச்ரத்தைக்கு (ஆழ்ந்த நம்பிக்கைக்கு) உரியபடி அவரவர்கள் விரும்பும் பலன்களைக் கொடுத்தே தீரவேண்டும். நீ உன் பிள்ளைகளின் பாதுகாப்பை விரும்பிப் பயோவ்ரதத்தினால் என்னை நன்றாகப் பூஜித்தாய்; நன்றாகத் துதித்தாய். ஆகையால் நான் உன் விருப்பத்தை நிறைவேற்றியே தீரவேண்டும். மற்றும், நான் கச்யபருடைய தவத்திற்குப் பலன் கொடுக்க வேண்டியவனாயிருக்கிறேன். இரண்டுக்கும் பொருந்துமாறு நான் என்னுடைய அம்சத்தினால் உனக்குப் பிள்ளையாகப் பிறந்து உன் பிள்ளைகளைப் பாதுகாக்கிறேன். 

மங்கள ஸ்வபாவமுடையவளே! ஆகையால் நீ உன் பர்த்தாவும் பாபமற்றவருமான கச்யப ப்ரஜாபதியை அனுஸரிப்பாயாக. பர்த்தாவின் மூலமாக நீ திவ்ய உருவங்கொண்ட என்னைக் கர்ப்பத்தில் தரிப்பாய். நான் சொன்ன இந்தத் தேவ ரஹஸயத்தை நீ வருந்தியும் பிறர்க்குச் சொல்லலாகாது. தேவி! தேவ ரஹஸ்யங்களெல்லாம் நன்றாக மறைத்து வைத்துக்கொண்டிருந்தால் தான் பயன்பெறும்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவான் இவ்வளவு மாத்ரமே மொழிந்து அவ்விடத்திலேயே அந்தர்த்தானம் அடைந்தான் (மறைந்தான்). அதிதியும் துர்லபமான பகவானுடைய அவதாரம் தன்னிடத்தில் நேரப்பெற்றுத் தன் ப்ரயோஜனம் கைகூடினதாகப் பாவித்து ச்ரத்தை அமைந்த மேலான பக்தியுடன் பர்த்தாவை அனுஸரித்திருந்தாள். வீணாகாத ஞானக்கண்ணுடைய அந்தக் கச்யப ப்ரஜாபதியும் அதிதி தன்னை அனுஸரிப்பதன் காரணத்தையும் பகவானுடைய அம்சம் தன்னிடத்தில் ஆவேசித்திருப்பதையும் யோக த்ருஷ்டியினால் அறிந்தார். 

மன்னவனே! காற்று எல்லா இடங்களிலும் துல்யமாகவே வீசிக் கொண்டிருப்பினும் மரங்களின் கிளைகளில் வீசும்பொழுது ஒன்றோடொன்று உறையும்படி செய்து காட்டுத் தீயைக் கிளப்புவது போல, அந்தக் கச்யபர் தான் பிள்ளைகளிடத்தில் ஸமமாயிருப்பவராயினும் தவமஹிமையால் நெடுநாளாய் ஸம்பாதித்திருப்பதும் தைத்யர்களை அழிப்பதுமாகிய வீர்யத்தை மனவிருப்பத்துடன் அதிதியிடத்தில் ஆதானம் செய்தார் (வைத்தார்). 

அப்பால் ப்ரஹ்மதேவன், அதிதியின் கர்ப்பத்தில் ஆதிதேவனாகிய பரமபுருஷன் ப்ரவேசித்திருப்பதை அறிந்து அருகாமையில் வந்து பரப்ரஹ்மமென்று கூறப்படுகிற அப்பகவானுடைய அஸாதாரணமான குணங்களை வெளியிடுகிற நாமங்களால் ஸ்தோத்ரம் செய்தான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- பகவானே! மேன்மையுடையவர்களால் பாடப்பெற்றவனே! நீ எல்லாரிலும் மேன்மையுற்றிருப்பாயாக, நீ அதிதிக்குப் புதல்வனாகப் பிறந்து மூன்று அடிகளால் உலகங்களையெல்லாம் அளக்கப் போகின்றாய். அதனால் நீ உருக்ரமன் என்று பெயர் பெறப் போகின்றாய். உனக்கு நமஸ்காரம். ப்ராஹ்மணர்களுக்கு அனுகூலர்களாகி அவர்களுக்கு ஹிதம் செய்யும் தன்மையுள்ளவர்களுக்கு நீ ப்ரபுவாயிருப்பவன். நீ இயற்கையாகவே ப்ராஹ்மணர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்து அதனால் மனக்களிப்புற்றுப் பேரொளியுடன் ப்ரகாசிப்பவன். உனக்கு நமஸ்காரம். ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) வேண்டிய ரஜஸ், ஸத்வ, தமோ குணங்களை நீ நியமித்துக்கொண்டிருக்கின்றாய். உனக்கு அடிக்கடி நமஸ்காரம். 

இந்த அதிதியே முன் ஜன்மத்தில் ப்ருச்னியென்னும் பெயர் பூண்டு பிறந்திருந்தாள். அப்பொழுது நீ அவளுக்குப் பிள்ளையாகப் பிறந்தாய். அத்தகைய உனக்கு நமஸ்காரம். வேதங்கள் உன்னிடத்தினின்றே வெளியாயின. உன்னையே அவை முழுவதும் கூறுகின்றன. ஆகையால் அவ்வேதங்களுக்குக் கர்ப்பம் போன்றிருக்கின்றாய். நீயே உலகங்களையெல்லாம் படைக்கின்றாய். மூன்று லோகங்களும் உன் நாபியில் இருக்கின்றன. நீ மூன்று லோகங்களுக்கும் அப்புறத்திலிருக்கின்ற பரமபதத்தில் வாஸம் செய்பவன். நீ ஜீவாத்மாக்களுக்குள் அந்தர்யாமியாய்ப் புகுந்திருக்கின்றாய். நீ எங்கும் நிறைந்திருப்பவன். உனக்கு நமஸ்காரம். இந்த ப்ரபஞ்சத்தின் ஆதி (முதல்), நடு (இடை), அந்தங்களுக்கு (முடிவு) நீயே காரணன். உன்னையே அளவிறந்த சக்திகளையுடைய பரமபுருஷனென்று சொல்லுகிறார்கள். ஆழமுள்ள ப்ரவாஹம் தன்னிடத்தில் விழுந்த த்ருணம் (புல்) முதலியவற்றை அடித்துக் கொண்டு போவதுபோல, நீயே காலத்தைச் சரீரமாக உடையவனாகி உலகங்களையெல்லாம் தூண்டுகின்றாய். ப்ரஜைகளையும், ப்ரஜாபதிகளையும் மற்றுமுள்ள ஜங்கம (அசையும்) ஸ்தாவரங்களையும் (அசையாதவைகளையும்) நீயே படைத்துப் பாதுகாக்கின்றாய். இத்தகைய நீ ஜீவனைப்போல் கர்மத்தினால் ஜன்மாதிகளைப் (பிறப்பு, மரணம்) பெறுபவனல்லை. ப்ரஜைகளின் (மக்களின்) க்ஷேமத்திற்காகவே (நன்மைக்காகவே) நீ உன் ஸங்கல்பத்தினால் அவதரிக்கின்றாய். தேவனே! ஜலப்ரவாஹத்தில் அகப்பட்டுக் கொண்டு முழுகுகிறவனுக்கு ஓடம் போல, ஸ்வர்க்கத்தினின்று நழுவி வருந்துகின்ற தேவதைகளுக்கு நீயே மேலான கதி. ஆகையால் அந்தத் தேவதைகளை முன் போலவே ஸ்வர்க்கத்தில் ஸ்தாபிப்பாயாக. 

பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.

2 கருத்துகள்

  1. இந்த அத்தியாயத்தில் அணிமாதி ஸித்திகள் என்ற தலைப்பில்
    நிணைத்த என்று தவறாக உள்ளது...... அதனை நினைத்த என்று சரியாக திருத்தவும்

    ண - தவறானது ன - சரியானது

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக
புதியது பழையவை