ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 50

மூன்றாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம்

விதுரரின் சந்தேகங்கள்!

‘உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர் அன்னவருக்கே சரண் நாங்களே’ என்று - கம்ப நாட்டாழ்வார், தன்னுடைய கம்பராமாயணத்தின் தொடக்கத்தில், கடவுள் வாழ்த்துப் பாடலாக, திருமாலை வணங்கி, அவன் உலகுக்கெல்லாம் காரணமாக இருக்கிறான் - என்று வர்ணிக்கிறார். 

‘அனைத்துலகத்தையும் தானே படைத்து, காத்து, தன்னுள் இழுத்துக் கொள்ளும் கடவுள் உலகத்துக்கே தலைவன். இச்செயல்களை அவர் விளையாட்டாகச் செய்கிறார். இப்படிப்பட்ட முதல்வரையே நாம் அனைவரும் தெய்வமாக வணங்குவோம். அவருடைய திருவடிகளையே புகலாகப் பற்றுவோம்’ - என்று கூறுகிறார். பகவான் படைக்கிறான் என்பதை நாம் கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகிறோம். தற்போது விதுரர், பராசரருடைய சீடரான மைத்ரேயரிடத்தே, உலகப் படைப்பைப் பற்றிச் சில ஐயங்களை எழுப்புகிறார். தன்னுடைய விளையாட்டுக்காகப் பகவான் படைக்கிறான் என்றால்,அவருக்கு அதன் தேவை என்ன? பகவானுக்கோ கர்மங்கள் கிடையாது. ஆகவே, அதன் காரணமாக அவர் படைக்க இயலாது. அவருக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆக, படைப்பதால் ஒரு பயனும் அவருக்கு இல்லை. 

நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோம் என்றால், அதன் மூலம் நமக்குப் பயன் கிட்டுகிறது. ஒரு துணியை நெய்தாலோ, சங்கிலி பண்ணினாலோ, பானை செய்தாலோ அதனால் செய்பவருக்கும் பலன், வாங்குபவர்களுக்கும் பயன். ஆனால், பகவானுக்கு அதைப் போல் ஒரு காரியத்தைச் செய்து, எந்த ஒரு பயனையும் அடையத் தேவையில்லையே, பின் எதற்காகப் படைக்கிறான்? 

மேலும், முக்குணங்கள் நம்மிடத்தில் இருக்கிறபடியால் நாம் எத்தனையோ மாறுதல்களை அடைகிறோம். ஆனால் பகவானுக்கோ, ஸத்வ, ரஜஸ், தமஸ் என்று முக்குணக் கலவை கிடையாது. அவர் தூய்மையான ஸத்வ குணத்தோடே விளங்குபவர். ஆகையால், அவருக்குச் செயலே தேவையில்லையே! ஆக, எப்படிப் பார்த்தாலும் பெருமான், அவனுடைய பயனுக்காகவோ, இன்பத்துக்காகவோ, இவ்வுலகைப் படைப்பது ஒவ்வாது. ஒரு குழந்தை மண் வீடு கட்டி விளையாடுகிறார் போலே, பகவானும் இவ்வுலகத்தைப் படைத்து விளையாடுவது என்று சொன்னால், அந்தக் குழந்தைக்கு நிறைவேறாத ஆசை உள்ளது என்று பொருள். அதற்கு விருப்பம் இருக்கிறபடியாலே மண் வீடு கட்டுகிறது. தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. கர்மங்களோ, முக்குணங்களோ இருந்தால்தான், விருப்பு வெறுப்புகளே வரும். ஒரு ஜீவனே, சிறந்த யோக மார்க்கத்தால் முக்கணங்களை, கர்மங்களைத் தாண்டும்போது, அவனே விருப்பு வெறுப்புகளைத் தாண்டி விடுகிறான். பின் பரமாத்மாவுக்கா விருப்பு, வெறுப்புகள் இருக்கும்? ஆகவே, ஒரு குழந்தையைப் போலே அவன் விளையாடுகிறான் என்று சொல்வதும் பொருந்தாது. இனி, நம் பக்கம் வருவோம். 

ஒருவேளை ஒரு ஜீவாத்மாவுக்காக பகவான் படைக்கிறானோ! ஜீவன் இன்பத்தையும்,துன்பத்தையும் அனுபவிக்கட்டும். அதற்காக இந்த உலகத்தில் நிறைய இடங்களையும், பொருள்களையும் காலத்தையும் கொடுப்போம் என்பது பெருமானுடைய நோக்கமாக இருக்குமா என்றால், நாம் இவ்வுலகத்தில் எவற்றோடெல்லாம் தொடர்பு கொண்டிருக்கிறோமோ, அவையெல்லாம் நமக்கு இயற்கையான தொடர்பே அல்ல. கண்ணால் பார்க்கிறோம், காதால் கேட்கிறோம், உணவு உண்கிறோம், கல்யாணம் செய்து கொள்கிறோம், குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோம், வேலை பார்க்கிறோம். இவை அத்தனையுமா ஒரு ஜீவனுக்கு இயற்கையானவை. எளிய நமக்கே இவையெல்லாம் இயற்கையல்ல, கர்மத்தால் செயற்கையால் ஏற்பட்டவை என்பது நன்கு விளங்குகிறது. அப்படி இருக்கும்போது, இயற்கையான நன்மை எதுவோ, அதைத்தானே பகவான் ஜீவனுக்குக் கொடுக்க வேண்டும்? கர்மங்களின் அடிப்படையில் செயற்கையாய் நாம் இன்பம் என்று நினைத்து ஏமாந்து போகும் இன்பத்தை அனுபவிக்கவா, ஒரு ஜீவனுக்காக உலகைப் பகவான் படைப்பான்? இதுவும் பொருந்தவில்லையே? 

ஒரு தாய், குழந்தை விரும்புகிறது என்பதற்காக, மண்ணைக் கொடுக்க மாட்டாள். அந்தக் குழந்தைக்குக் கசந்தாலும், நல்ல மருந்தைத் தான் ஊட்டுவாள். நாமோ குழந்தை! பகவானோ தாய்! நமக்கு உலக இன்பத்தில் எத்தனையோ இன்பம் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் உண்மையான இன்பமா? நமக்கு நல்லது செய்யுமா? செய்யாது. ஆகவே, அவற்றை நம்மை அனுபவிக்கச் செய்வதற்காக, ஒரு நாளும் பகவான் இவ்வுலகத்தைப் படைக்க மாட்டார். ஒரு தாய் போல அன்பு கொண்டவர், நமக்குக் கசந்தாலும் நல்லதைத்தான் கொடுப்பாரே தவிர, தீய உலகத்தை படைத்து, அதை அனுபவிக்க வைத்து, மேலுமா பாவங்களைச் சேர்க்க வைப்பார்? இதுவும் பொருந்தவில்லை. ஆக, பெருமானுடையகண்ணோட்டத்திலே பார்த்தாலும், நம்முடைய கண்ணோட்டத்திலே பார்த்தாலும், இருவருக்கும் பயனில்லாத படைப்புத் தொழில் எதற்காகச் செய்யப்படுகிறது? இதுவே விதுரருக்கு ஏற்பட்ட ஐயம். இதை மைத்ரேயரிடம் கேட்கிறார். 

“இந்தச் சந்தேகம் என்னை மிகவும் துன்பப்படுத்துகிறது. நீர்தான் உம்முடைய புத்திக் கூர்மையாகிற பெரும் கோடரியால், களை போன்று பரவி, விஷச் செடியாய் இருக்கும் என் ஐயத்தைப் போக்க வேண்டும்” - என்று ப்ரார்த்திக்கிறார். சிரித்துக் கொண்டே மைத்ரேயர், அவருக்குப் பதில் கூறுகிறார். “விதுரரே! நல்ல கேள்வி கேட்டீர். பகவானுக்கு ஒரு நாளும் கர்மத்தின் தொடர்பு இல்லை. முக்குணத்தின் தொடர்பும் இல்லை. பின் எதற்காகப் படைக்கிறார் என்கிறீரா? பகவான் தன் விளையாட்டுக்காகப் படைக்கிறான் என்பது உண்மை. ஆனால், அது நிறைவேறாத ஆசை இல்லையே? பின் எதற்காக விளையாட வேண்டும்? – என்று கேட்டீர். 

“பகவானுக்கு ஒரு ஆசை உள்ளது. பூலோகத்தில் இருக்கும், அல்லது இந்த மாறி மாறி படைப்பு, அழிப்புக்களுக்கு உள்ளாகும் லீலாவிபூதியில் இருக்கும் அனைத்து ஜீவர்களும் தன்னோடே சேர்ந்து வைகுண்டத்தில் அனுபவிக்க வேண்டும். இது பெருமானுடைய நெடுநாள் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத்தான், உலகத்தைப் படைக்கிறான். ஸ்ரீ மகாலக்ஷ்மி, பூதேவி, நீலாதேவி, ஆதிசேஷன்,விஷ்வத்சேனர், கருடன் இவர்கள் எல்லோரும் எப்போதும் வைகுண்டத்தில் பெருமானோடே இன்பம் துய்க்கிறார்கள். அவர்களுக்கு எத்தøனை உரிமை உண்டோ, நம் ஒவ்வொருவருக்கும் பெருமானை அனுபவிக்க அத்தனை உரிமை உண்டு. அவர்கள் எப்படிப் பெருமானுக்குக் குழந்தைகளோ, இந்த உலகத்திலிருந்து துன்பப்படும் நாமும் அவனுக்குக் குழந்தைகள்தான். மூன்று குழந்தைகள் இருக்கும் ஒரு தாயார், இருவர் தன்னோடு இருந்து, ஒருவர் மட்டும் வெளியே தவித்துக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொள்வாளா? அந்தக் குழந்தையும் தன்னோடு இருக்க வேண்டும் என்றுதானே ஆசைப்படுவாள்? அதே போலப் பெருமானும், இந்த உலகத்தில் தவிக்கும் பக்த ஜீவர்கள், அனைவரும் தன்னை வந்து அடைந்து விட வேண்டும். இதுதான் அவனுடைய ஆசை”. 

இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் இறைவன் படைக்கிறான். இந்த ஆசையை நாம் புரிந்து கொண்டு, இதே பயனுக்காக நாம் வாழத் தொடங்கினோமானால், ஆனந்தமாக இருக்கலாம். ஏனெனில் நாம் படைக்கப்பட்டது இதற்காக. அதைப் புரிந்து கொண்டு விட்டால், நாம் வேலை பார்க்கும் இடத்தில் முதலாளி என்னை எதற்காக வேலைக்கு வைத்திருக்கிறாரோ அந்த இலக்குப் புரிந்து விட்டால், நான் அதை நோக்கி நடப்பேன். எனக்கும் திருப்தி. முதலாளிக்கும் ஆனந்தம். 

ஆனால், அவர் ஒரு காரணத்திற்காக என்னை வேலைக்கு வைக்க, நான் பிறிதொரு பயனுக்காக வேலை பார்த்துக் கொண்டிருந் தால், அப்பொழுது இருவருக்கும் அலைவரிசை ஒத்துப் போகாது. எனக்கு எப்படி அந்த வேலை வாய்ப்பில் முன்னேற்றம் கிடைக்கும்? அதே ஆபத்துத்தான் இங்கும். இதைப் புரிந்து கொள்ளும். பெருமான் தன் விளையாட்டுக்காகத்தான் படைக்கிறார். அது சிறந்த விளையாட்டு. அந்த விளையாட்டின் பயனே, ஜீவாத்மாக்கள் முக்தி அடைய வேண்டும் என்பதற்காக! இது அவருடைய கோணத்திலிருந்து! இனி மைத்ரேயர் கூறுகிறார்.“ஒரு ஜீவனுடைய கோணத்திலிருந்து பார்த்தால், இவன் வெகுகாலமாக மாறி மாறிக் கர்மங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான். இந்தக் கர்மங்கள் யாவற்றையும் அழித்தாக வேண்டும். கர்மங்களைப் போக்குவதற்குக் கர்ம யோகம், ஞான யோகம் – இவற்றால் ஏற்படும் பக்தி யோகம்தான் வழி வகுக்கும். நாம் விடாமல் நம் கர்மங்களைச் செய்து கொண்டு வந்தால், அதனால் நம் பாபங்கள் அனைத்தும் அழிந்து போகும். பக்தி யோகத்தின் மகாத்மியத்தாலே நம் பாபங்களே உருமாய்ந்து போகும்.” 

ஆண்டாள் பாசுரத்தில் ‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்’ - என்று கூறுகிறாள். நாம் செய்திருக்கிற அனைத்து பாபங்களையும் பெருமான் திருவடிகளில் பக்தி செய்யச் செய்ய அனைத்தும் தீயிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போகும் என்று சாதிக்கிறாள். அதே விஷயத்தை, மைத்ரேயர் விதுரருக்கு உபதேசிக்கிறார். புரிந்து கொள்ளும். “பகவான் வழியில் பார்த்தாலும், விளையாட்டுத்தான் சிறந்த விளையாட்டு. ஒரு ஜீவனுடைய கோணத்திலிருந்து பார்த்தாலும், தன் கர்மங்களைத் தொலைத்தால்தான் முக்தி அடைய முடியும். அதைத் தொலைக்க பக்தி செய்ய வேண்டும். பக்தி செய்யத்தான் அவன் படைக்கவே படுகிறான். இது இவனுடைய கோணத்திலிருந்து! 

“மேலும், நாம் இவ்வாழ்க்கையில் எதை எதையோ அனுபவிப்பதாக நினைக்கிறோமே, இவை அனைத்தும் நம்மை நாமே கனவில் கண்டு கொள்வது போல. நமக்கு ஏன் கனவு வருகிறது? நமக்கு நிறையப் பாபங்கள் இருந்தால், நிஜ வாழ்க்கையிலே புலி துரத்தும், பாம்பு கடிக்கலாம். குறைவான பாபங்கள் இருந்தால், கனவு வாழ்க்கையில் புலி துரத்தும், பாம்பு கடிக்கலாம். நமக்கு நிஜ வாழ்க்கையில் நிரம்பப் புண்ணியங்கள் இருக்குமானால், நிஜ வாழ்க்கையிலே நமக்குப் பெருத்த செல்வம் கிடைக்கும், பட்டாபிஷேகமே நடக்கும். ஆனால், குறைவாகப் புண்ணியங்கள் இருக்குமானால், கனவு வாழ்க்கையில் பட்டாபிஷேகம் நடக்கும். கனவு வாழ்க்கையில் தங்கக் குடம் கிடைக்கும். இவ்வளவே! 

“பெருமானின் கருணையைப் பாருங்கள், ஒரு கனவின் மூலம் கூட நாம் சேர்த்து வைத்திருக்கும் பாபங்களைத் தொலைக்க துணை புரிகிறார். அதுதான் அவனிடத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. ஆனால், இந்தக் கனவில் கண்டது அத்தனையும் எவ்வளவு உண்மையாகும்? நம் கர்மத்தினாலே கனவு காண்கிறோம். அதே போலத்தான் இந்தப் பிறப்பு, இறப்பு ஆகிய வாழ்க்கை அனைத்தும் நம் கர்மத்தாலே!இந்தக் கர்மங்களைத் தொலைத்து விட்டால், எப்படி விழித்தெழுந்தவனுக்குக் கனவு இல்லையோ, அதே போல கர்மத்தைத் தொலைத்து விழித்து எழுந்த நமக்கு, இந்தப் பிறப்போ, இறப்போ, அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களோ, ஒரு நாளும் பாதிக்காது. 

“ஒரு சந்திரனைக் குளத்தில் பார்க்கிறோம். குளத்து நீர் அசைந்தால், சந்திரன் அசைவது போல் தோற்றம் அளிக்கிறது. உண்மையில் சந்திரனா அசைகிறது? குளத்து நீர் என்பது ஒரு காரணம். அந்தக் காரணத்தால் சந்திரன் அசைவது போலிருக்கிறது. அதே போல, கர்மம் என்பது ஒரு காரணம். கர்மத்தால், பிறக்கிறோம், இறக்கிறோம். ஆனால், இந்தக் கர்ம சம்பந்தம் இல்லாத ஒரு ஜீவன் - முக்த ஜீவன், இயற்கையான நிலையில் இருக்கும் ஜீவனைப் பார்த்தால், அவனுக்கு எந்த அசைவும் கிடையாது. சலனமும் கிடையாது. அவனுக்கு விருப்பு வெறுப்புகள் கிடையாது. முக்குணங்களோ, கர்மங்களோ தீண்டாது.அந்த நிலையை நாம் அடைய வேண்டுமானால், பெருமானுடைய திருவடிகளில் பக்தி பண்ண வேண்டும். அந்தப் பக்தி செய்யச் செய்ய மெதுவே நம் பாபங்கள் அனைத்தும் கழன்றே போகும்.” 

மற்றொன்றைப் பார்ப்போம். நமக்குத் தூக்கம் வரவில்லை என்பதற்காக மாத்திரை சாப்பிடுகிறோம். அதனால் தூங்கப் பார்க்கிறோம். இது நிஜமான தூக்கமா? இது ஆரோக்கியமான தூக்கமா?அதே போல் உலகத் துன்பங்களை மறக்க வேண்டும் என்பதற்காக, வேறு எதிலோ மனத்தை ஈடுபடுத்துகிறோம். இது மாத்திரை சாப்பிட்டு, தூக்கத்தை, கனவை வரவழைப்பது போலே! ஆனால், அது உண்மையான தூக்கமாகாது, இன்பமாகாது. ஆரோக்கியக் கேடு. ஆத்மாவின் ஆரோக்கியத்துக்குக் கேடு. பின் உண்மையான தூக்கம் எது? “நம்முடைய புலன்கள் அனைத்தும், பெருமானுடைய திருவடிகளையே நினைத்து, மனத்தால் அவனையே தியானித்து, அவனுக்காக நிறைந்த உழைப்போடே பல கைங்கரியங்களை, தொண்டுகளைப் புரியப் புரிய நம் இந்திரியங்கள் எல்லாம் அவனுடைய கைங்கரியத்திலேயே சோர்வடைந்து, நன்கு தூங்கும். தூங்கி எழுந்தவர், எப்படி புத்துணர்ச்சியோடு இருக்கிறாரோ, அதே போல் பெருமானைப் பற்றிய தியானத்திலும், அவனுடைய தொண்டுகளிலும் ஈடுபட்டால், நம் புலன்கள் அனைத்தும் மறுபடியும் புத்துணர்ச்சியோடே,ஆனந்தமாக இருக்கும். இதுதான் உண்மை. இதுதான் படைப்பின் ரகசியம். விதுரரே, புரிந்து கொள்ளும்” - என்று மைத்ரேயர் கூறினார். 

விதுரருக்கு மிகுந்த மகிழ்ச்சி. “நம்முடைய பெருத்த ஐயத்தை உம்முடைய உபதேசம் என்கிற கோடரியாலே வெட்டிச் சாய்த்து விட்டீர். இப்போது ஒன்று புரிந்தது. பரமாத்மா சுதந்தி ரன். அவன்தான் முதலாளி. அவனே தலைவன். அவனுக்கு ஒவ்வொரு ஜீவாத்மாவும் தொண்டர்கள். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டேன். தன் தொண்டர்கள் தன்னை அடைய வேண்டும் என்பதற்காக, இவர்கள் எல்லோரும் முக்தி அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பெருமான் படைக்கிறான். அந்தப் படைப்பின் ரகசியத்தைத் தெரிந்து கொண்டு, நானும் தொண்டு புரிந்து, என் இறைவனுக்கும் மகிழ்ச்சி கொடுத்து, நான் இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாகவும், இவ்வுலக வாழ்வு முடிந்த பிற்பாடு கர்மங்களைத் தொலைத்து, அவ்வுலகில் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இதைத் தெரிந்து கொண்டேன். 

“ஆனால், ஒன்று புரிந்தது. எந்த ஞானமும் இல்லாத அறிவிலியும் திருப்தியாக இருக்கிறான். மிகுந்த ஞானியும் திருப்தியாக இருக்கிறான். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நாம்தான் தவித்துக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தையே திறக்காவிட்டாலும் ஐயம் வாராது. புத்தகத்தையே படித்து முடித்து விட்டாலும் ஐயம் போய் விடும். ஆனால், பாதியாக இருந்தால்தானே ஐயம் ஏற்படும். எனக்கு அந்த ஐயம் தீர்ந்தது. இப்போது மேலும் எனக்கு உபதேசிக்க வேண்டும். பகவான் சிருஷ்டித்தான் என்று சொன்னீர், புரிந்தது. யார் யாரை சிருஷ்டிக்கிறார்? விராட் புருஷன் என்பது யார்? அவர் ஆயிரம் கைகள், ஆயிரம் தொடைகள், ஆயிரம் கால்களோடே இருப்பாராமே? அவர் பத்து வித சிருஷ்டி செய்தாராமே! இவற்றையெல்லாம் விளக்க வேண்டும். 

“மேலும், சிருஷ்டிக்கப்பட்ட தேவர்கள், ரிஷிகள் இவர்களுடைய வம்சம், அவருடைய பிள்ளைகள், பேரன்கள், ஆகியோருடைய கதையைக் கூற வேண்டும். பூ உலகம் எப்படி இருக்கும்? ஈரேழு பதினான்கு உலகங்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். ரிஷிகள், வேதங்கள், அவர்கள் செய்த யக்ஞம், யோகம், உலகத்தில் இருக்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு புருஷார்த்தங்கள், இவை எல்லாவற்றையும் கூறும். சிராத்தம் செய்வது எப்படி? பிதுர்க்களுக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும்? கிரஹங்கள், நக்ஷத்திரங்கள் இவை எல்லாம் என்னைப் பாதிக்குமா? நான் ஏன் தானம் செய்ய வேண்டும்? தபஸ் புரிய வேண்டும்? – இவையெல்லாவற்றையும் சொல்லும். ஒரு குரு தன் சிஷ்யன் என்ன சந்தேகத்தைக் கேட்டாலும், அதை ஆனந்தமாகச் சொல்கிறார். மேலும், மேலும் அவர் கேட்கக் கேட்கக் குருவுக்குத் திருப்தி. அதைப் போல நீரும் கூற வேண்டும். 

“ஞானம்தான் சிறந்த சாதனம். முக்தி அடைவதற்கு ஞானமே சிறந்த சாதனம் என்று தெரிந்து கொண்டேன். பெருமானைப் பற்றியும், பக்தர்களைப் பற்றியும் சொல்லும். ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டினால், அதனால்தானே நமக்கு உய்வே கிட்டும். மைத்ரேயரே! என்னிடத்தில் கருணையோடு கூறும்” என்று விதுரர் வினவ, சிஷ்யன் கேட்டதற்கு புன்சிரிப்பு மாறாமல் மைத்ரேயர் பதில் கூறத் தொடங்குகிறார், நாமும் கேட்போம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை