மூன்றாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம்
நான்முகன் தோன்றிய வரலாறு
பராசரருடைய சீடரான மைத்ரேயரோடு, விதுரர் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்னுள்ள அத்தியாயத்தில், இவ்வுலகம் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றி பல புதிய கேள்விகளை விதுரர் எழுப்பினார்.
அவற்றுக்குப் பதில் கூற முற்படும் மைத்ரேயர், “விதுரரே! நீர் கேட்டிருக்கும் கேள்விகள், பல புதிய கருத்துக்களை உலகத்துக்கு வெளிப்படுத்தப் போகிறது. மக்களின் விருப்பமே, அன்றாடம் புதியது புதியதாக பலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் - என்பதுதான். அப்போதுதான் வாழ்க்கை, வாழ்வதற்கே இனிமையாகிறது.
“அந்த விஷயங்களும் எதைப் பற்றியோ இல்லாமல், ஆத்மாவைப் பற்றியோ, நமக்குள்ளே உறையும் பரமாத்மாவைப் பற்றியோ, நாம் படைக்கப்பட்டிருக்கும் ரகசியத்தைப் பற்றியோ இருந்தாலும், இன்னும் எவ்வளவு சிறப்பாக இனிமையாக இருக்கும்! ஆக, உன் கேள்விகள் உலகத்திற்கே நன்மை செய்யப் போகின்றன. சொல்கிறேன் கேள்.
“ஒருமுறை சனகன் முதலானோர், பாதாள லோகத்திற்குச் சென்று ஆதிசேஷன் வடிவத்தில் இருக்கும் சங்கர்ஷணரிடத்தில் சிருஷ்டியைப் பற்றி வினவினார்கள். அப்போது சங்கர்ஷண பகவான், சனத்குமாரருக்கு உபதேசித்தார். சனத்குமாரர் சாங்கியாயனருக்கும், அவர் மறுபடியும் பராசரருக்கும், பிரகஸ்பதிக்கும் உபதேசித்தார். புலஸ்திய மகரிஷியின் அருள் பெற்ற அடியேனுக்கு சிருஷ்டியின் ரகசியத்தை பராசர மகரிஷி உபதேசித்தார். அதைப் பராசரர், ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் எழுதி வைத்தார். அதை உமக்குக் கூறுகிறேன்.
ஸ்ரீமந் நாராயணன், க்ஷீரோதகசாயி எனும் பெயருடன் ஆயிரம் சதுர் யுகங்களாக நீண்ட ஆழமான தண்ணீர் கடலில் சயனித்துக் கொண்டிருந்தார். பின்பு அவருடைய சங்கல்பத்தாலும், சக்தியாலும், அவருடைய நாபியிலிருந்து கமல புஷ்பம் வெளிப்பட்டு, அதில் நான்முகனாகிய ப்ரஹ்மா தோன்றினார்.
அப்போது அந்தப் பெருமானின் அழகு வர்ணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. ஆண்டாள் ஒரு பாசுரத்தில், குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில் எழு கமலப் பூவழகர், என் அரங்கத் தின்னமுதர் - என்று பாடுகிறார். கொப்பூழ் என்பது நாபியைக் குறிக்கும். அதிலிருந்து பேரழகான தாமரை தோன்றி, ப்ரஹ்மா படைக்கப்பட்டார். நான்கு புறமும் சுற்றிச் சுற்றி பார்த்த ப்ரஹ்மா, ‘தான் எங்கிருந்து தோன்றியிருக்கிறோம்? ஏன் பிறந்திருக்கிறோம்?’ என்பதெல்லாம் தெரியாமல் அயர்ந்து போனார்.
பின் தான் பிறந்த தாமரையின் நாளத்தின் வழியே கீழே சென்று பார்த்தார். அப்போதும் ஏதும் கிடைக்கவில்லை. பகவானின் வலக்கரத்தில் பிடிக்கப்பட்டிருக்கும் சக்கரத்தை மட்டும், கால சக்கர வடிவத்தில் கண்டார். ‘சரி, நான் ஏன் பிறந்தேன்?’ என்று தெரிந்து கொள்ள, நூறு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார்.
அப்போது எம்பெருமான் அவர் உள்ளத்திலேயே தன்னை வெளிப்படுத்தி, தான் யார், ப்ரஹ்மாவை எதற்காகப் படைத்திருக்கிறோம் என்பது அனைத்தையும் புரிய வைத்தார். அப்போது அவருக்கு காட்சிக் கொடுத்த பகவான், பேரழகு வாய்ந்தவனாக இருந்தான்.
‘பச்சை மாமலை போல் மேனி,
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தே
என்னும்’ - என்று தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையிலே பாடியது போல, மரகதப் பச்சை வடிவத்தோடு, தாமரை போன்ற திருவாய், திருக்கண்கள், திருக்கைகள், திருவடிகள் ஆகியவற்றோடும், உயர்ந்த பீதாம்பரத்தைத் தரித்துக் கொண்டு, நீண்ட திருமேனியோடு பெருமான் காட்சி கொடுத்தார்.
நாகப்பட்டினத்தில் சௌந்திரராஜப் பெருமான் சேவை சாதிக்கிறார். அவருடைய திருமேனியைக் கண்ட திரு மங்கையாழ்வார், ‘பொன்னிவர் மேனி, மரகதத்தின் பொங்கிலஞ் ஜோதி அகலத் தாகம்’ - என்று தொடங்கி ‘அச்சோ ஒருவர் அழகியவா, இது என்ன, அழகு என்ன அழகு, என்னால் சொல்ல இயலாது’ - என்று தன் கண்ணே பட்டு விடுமோ - என்று பயந்தார்.
அப்படிப்பட்ட பேரழகு வாய்ந்த எம்பெருமானை ப்ரஹ்மா தரிசித்தார். இவரே ஹரி என்பதைத் தெரிந்து கொண்டார். அப்போது ப்ரஹ்மாவிற்கு பகவானின் நாபி, அதிலிருக்கும் தாமரை, தண்ணீர், ஆகாயம், காற்று இந்த ஐந்து பொருள்களே கண்ணில் பட்டன. இதைக் கொண்டு சிருஷ்டிக்க வேண்டும். அதற்காக பெருமானிடமே வேண்டத் தொடங்கினார்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்