செவ்வாய், 18 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 52

மூன்றாவது ஸ்கந்தம் - ஒன்பதாம் அத்தியாயம்

ப்ரஹ்மா பகவானைத் துதித்தல்

ப்ரஹ்மா பகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்தார். “இறைவா! தேவரீரே உமது அருளாலேயே இப்போது தெரிந்து கொண்டேன். நீர் தியானத்துக்குத்தான் விஷயமாகிறீர். தியானிக்காதவன் உம்மை அறிந்து கொள்ள முடியாது. உம் அருள் இல்லாதவனும் உம்மைத் தெரிந்து கொள்வதற்கு இயலாது. யார் யார் உம்மைத் தியானிக்கிறார்களோ, அவர்களுடைய ஹ்ருதய கமலத்தில் நீர் எப்போதும் வீற்றிருக்கிறீர்.” 

‘விட்டுச் சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்’ - என்பது பெரியாழ்வாருடைய பாடல். பெருமானுக்கு எத்தனையோ இடங்கள் இருந்தாலும், அதாவது வைகுந்தம், திருப்பாற்கடல், சூரிய மண்டலம் போன்ற உயர்ந்த ஸ்தானங்கள் இருந்தாலும், அதில் வாழ்வதற்கு அவனுக்குப் பெரிதான விருப்பமில்லை. அடியார்களுடைய நெஞ்சகத்தேதான் அவன் பெரிதும் விரும்பி வாழ்கிறான். 

பெரியாழ்வார் சொன்னபடிக்கு, ஆதிசேஷன், திருப்பாற்கடல், திருமகள் ஆகிய அனைவரையும் கூட்டிக் கொண்டு பெருமான், பெரியாழ்வாரின் உள்ளத்திலேயே உறைகிறானாம். ஆழ்வாருக்குத்தான் அவனைத் தன் உள்ளத்திலே வைத்துக் கொள்ள எத்தனை ஆசை! 

எத்தனைதான் கருங்கல்லால் மதில் கட்டினாலும், பெருமானுக்கு அது அழகான காவலா? அல்லது ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் கோவில் கொண்டு இருந்தால், பெருமான் ஜாக்கிரதையாக இருப்பானா? ஆழ்வார் சொல்லும்படி பார்த்தால், மதில் காவலை விட, ஆழ்வாரின் உள்ளம்தான் பெருமானுக்குக் காவலாம். 

நம்மாழ்வார் ஒரு பாடலில், நவ திருப்பதியில் ஒன்றான தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதனைப் பற்றிப் பாடுகிறார். 

‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித்
தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்!’
(திருவாய்மொழி 7-3-1) 

பகவான் கருடோத்ஸவம் கண்டருள்கிறார். எங்கு? ஊரில் அல்ல, வீதியில் அல்ல. ஆழ்வாருடைய உள்ளத்திலேயே கருடோத்ஸவம் கண்டருள்கிறானாம். அடியார்களுடைய உள்ளம் பெருமானுக்குப் பெரிய வீதியாகவும், பெரிய கோவிலாகவும் இருக்கிறது போலும். இப்படி பெருமான் அடியார்களுடைய உள்ளத்தை விரும்பி வந்தால், பதிலுக்கு அனைத்துமாக நாம் அவனைத்தானே கொள்ள வேண்டும்? 

ப்ரஹ்மா மேலும் கூறுகிறார்: “எதுவரை உன்னையே தங்களுக்கு உறவாகவும், நீயே எங்களுக்கு ரக்ஷகன் என்றும் புரிந்து கொள்ளவில்லையோ, அது வரை மக்களுக்குப் பயம் ஓயாது. ‘சேலே கண்ணியரும், பெரும் செல்வமும், நன்மக்களும், மேலாத் தாய் தந்தையரும் அவரே இனி என்றாவாரே’ - என்று பாடுகிறார். 

வேதங்களோ, ‘பெற்ற தாயும், பிறப்பித்த தந்தையும், ஆசை மனைவியும், அன்புக்குரிய பெண்களும், பிள்ளைகளும், ஆபத்து வந்தால் காக்கும் சொத்தும், இவை அனைத்தும் பகவானே!’ என்று கூறுகின்றன. 

இந்த உண்மையை யாரெல்லாம் புரிந்து கொள்கிறானோ அவனுக்குப் பயம் விலகுகிறது. அப்படி இல்லாதவன், மரணம், தோற்றம், பிணி, மூப்பு, கொன்று உயிருண்ணும் வியாதி, பகை, பசி, தீயன என்று பலவற்றாலும் துன்பப்படுகிறான். ஆக, பெருமானை யாரெல்லாம் தியானிக்கிறார்களோ அவர்களது துன்பமெல்லாம் விலகுகிறது. இன்பம் அத்தனையும் தழைக்கிறது. ப்ரஹ்மாவிற்கு சிருஷ்டியின் ரகசியமே தியானத்தால்தான் வெளிப்பட்டது என்றால், தியானத்தின் மஹாத்மியம் புரிந்திருக்குமே! 

அடுத்து கூறுகிறார்: “இறைவனே! நீ வெவ்வேறு உருவத்தை எடுத்துக் கொள்கிறாய். அந்தந்தப் பக்தன் உன்னை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறானோ, அப்படியெல்லாம் நீ உருவம் கொள்கிறாய். உதாரணத்திற்கு, ஆங்காங்கு தேவரீர் கோவில்களில் விக்ரஹ வடிவில் எழுந்தருளியுள்ளீர். அதுதான் எவ்வளவு எளிய வடிவம்! அங்கு சென்று நாம் அர்ச்சனை செய்கிறோம். பகவானுடைய நாமங்களை அர்ச்சகர் வாயார வரிசையாகச் சொல்கிறார். நாம் அஷ்டோத்திர ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்கிறோம். அந்த அர்ச்சனை தொடங்கும்போது, அர்ச்சகர் என்ன ஸங்கல்பம் செய்கிறார்? 

‘ஈச்வரனுடைய ப்ரீதிக்காக’, ‘பகவானுடைய கைங்கர்யத்துக்காக’ என்று கூறுவார். ஆக, நாம் நாமங்களைச் சொன்னாலும், அர்ச்சனை செய்தாலும், பூத்தொடுத்துச் சமர்ப்பித்தாலும், எந்தவிதமான கர்மங்களைச் செய்தாலும், அது பக்தியோ எதுவுமே பெருமானுடைய ஆனந்தத்துக்காக அவனுடைய தொண்டாகவே செய்யப்பட வேண்டும். இந்த உண்மையை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களது வாழ்க்கை இனிக்கும். 

கண்ணன் கீதையில் கூறும்போது, 
யத்கரோஷி யதச்னாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்|
யத் தவஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்ப்பணம்||
(ஸ்ரீமத் பகவத் கீதை : 9-27) 

எதைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, என்ன தவம் புரிகிறாயோ, என்ன தானம் செய்கிறாயோ - அனைத்தையும் என் ஆராதனமாகச் செய்து, என்னிடத்திலே சமர்ப்பித்து விடுவாய்- என்கிறார். 

மேலும் ப்ரஹ்மா தோத்திரம் செய்கிறார்: “உன்னுடைய குணங்கள், உன்னுடைய சேட்டிதங்கள் ஆகியவற்றை உன் நாமங்கள் பேசுகின்றன. 

யஸ்ய அவதார குணகர்ம விடம்பநாநி
நாமாநி யேஸுவிகமே விவசா க்ருணந்தி|
தேநைக ஜன்மசமலம் ஸஹஸைவ ஹித்வா
ஸம்யாந்த்யபாவ்ருதம்ருதம் தமஜம் ப்ரபத்யே||
(ஸ்ரீமத் பாகவதம் : 3-9-15) 

யாருடைய திருநாமங்களைச் சொல்வதால், அதே ஜன்மத்தில் பாவங்கள் அனைத்தும் கழிந்து, முக்தி அடைகிறோமோ, பகவானே! அந்த உன்னை நான் வணங்குகிறேன். நீயே உலகுக்கு எல்லாம் ஆதாரமாக, காரணமாக உள்ளாய். அப்படிப்பட்ட உன்னை வணங்குகிறேன். 

ஒரு செடி முளைத்து காய்த்து, பழுக்க வேண்டுமானால், வேர் மிக முக்கியமானது. அதைப் போல பகவான்தான் இவ்வுலகத்துக்கே வேராக இருக்கிறார். அவரிடத்திலிருந்து செடி முளைத்தது போல்தான், மற்ற தேவதைகளாகிய நாங்கள் எல்லாம் தோன்றியிருக்கிறோம். 

ஆக, வேராய், முதலாய், வித்தாய் அனைத்துக்கும் காரணமாக இருக்கும் பகவானே! உம்மை வணங்குகிறேன். எந்தத் தெய்வமும் அவரவர் பணியைச் செவ்வனே செய்தால், பயப்பட வேண்டாம். அப்படியில்லையென்றால், உம்மிடத்திலே பயப்பட்டுத்தானே ஆக வேண்டும்? இப்போது நான் சிருஷ்டிக்கத் தொடங்கப் போகிறேன். 

திருமகளுக்குக் கணவனான நீ, என் சிருஷ்டிக்குத் தேவையான அனைத்து சக்தியையும் கொடுத்தருள வேண்டும். தேவரீருடைய நாபிக் கமலத்திலிருந்து, உன் விஞ்ஞான சக்தியாக நான் உருவாகி இருக்கிறேன். இப்போது படைப்புத் தொழிலில் ஈடுபடப் போகும் எனக்கு, வேதங்களை ஓதும் வாக்கு கெடாமல் இருக்கட்டும். நல்லோர்களை சிருஷ்டிக்கும் தொழில் அழியாமல் இருக்கட்டும் - என்று வேண்டிக் கொள்கிறார். 

நாமும் எந்த ஒரு புதிய செயலைத் தொடங்கினாலும், அது நல்ல செயலாக இருந்து, அதைப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு தொடங்கினால், கண்டிப்பாக தடங்கல் இல்லாமல் நிறைவேறும். இப்படி பலவாறாக துதித்த ப்ரஹ்மா, சோர்வுற்றார். 

தன்னை யார் என்று தெரிந்து கொள்ளவே பெரு முயற்சி எடுக்க வேண்டியதாயிற்று. அடுத்து பெருந்தொழிலாம் சிருஷ்டி வேறு செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக சக்தி வேண்டி நிற்கிறார். அதற்குள் ஆயாசப்பட்டார். பகவான் புன்சிரிப்பு மாறாமல் அவர் முன் தோன்றி, “நான்முகனே! நீர் ஒரு நாளும் சோர்வடைய வேண்டாம். நீர் படைப்பதற்கு வேண்டிய அனைத்து சக்தியையும் உமக்கு அருள்கிறோம். யாரெல்லாம் அனைத்துக்குள்ளும் என்னைப் பார்க்கிறானோ, தனக்குள்ளும் என்னைக் காண்கிறானோ, அவன் சோர்வடைவதில்லை. அனைவருக்கும் நானே அந்தராத்மா. நானே செயல்பட வைக்கிறேன். தானே செயல்படுவதாக ஒருவன் நினைத்தால், அவன் சோர்வடைவான். பகவான் நமக்குள் இருந்து கொண்டு செலுத்துகிறார். அவருக்கு எதுவுமே அரிய செயல் அல்ல. நம்மால் எதுவும் இல்லை என்று புரிந்து கொண்டு செய்தால், அப்போது சோர்வடையாமல் செயல்களை முடித்து விடலாம். 


“யோகிகள், ஞானிகள், தபஸ்விகள் - இவர்கள் எல்லாம், காட்டிலே தனிமையிலே இருந்து கொண்டு, பெரிய செயல்களை எப்படி நிறைவேற்றுகிறார்கள்? இதற்குப் பதில் மிகவும் எளிது. 

“அவர்கள் தாங்கள் செய்வதாக நினைத்தால், நிறைவேற்ற முடியாது. அனைத்தும் மலைப்பாகத் தோன்றும். ஆனால் மலையப்பனான திருவேங்கடமுடையான், ஸ்ரீநிவாசன் நமக்குள் இருந்து, நம்மைச் செய்விக்கிறார் என்று உணர்ந்தோமானால், எதையும் எளிதில் முடித்து விடலாம். இந்த எண்ணம் இல்லாவிடில், மறுபடியும் மறுபடியும் சம்சாரத்தில் உழலப் போகிறோம். 

“ப்ரஹ்மனே! கவலைப்பட வேண்டாம். நம்மை நினைத்துக் கொண்டு, ஆராதித்து, தியானித்து சிருஷ்டிச் செயலைத் தொடங்குவீர். உம்முடைய அனைத்துச் செயல்களும், எனக்கே பிரியத்தை ஏற்படுத்தட்டும். அதனால் நாம் ஆனந்தப்படுகிறோம். உமது துயரத்தையும் நீக்குகிறோம்” என்று சொல்லி, ப்ரஹ்மனுக்கு ஏற்பட்ட ஆயாசத்தை (சோர்வை) நீக்கி, பகவான் மறைந்தார். இனி ப்ரஹ்மா படைப்பைத் தொடங்குகிறார். மேலும் கேட்போம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக