செவ்வாய், 18 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 53

மூன்றாவது ஸ்கந்தம் - ஒன்பதாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

பள்ளிகொண்ட பரமனின் பேரழகு

விதுரரும் மைத்ரேயரும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ப்ரஹ்மா படைக்கப்பட்டதைப் பற்றி மைத்ரேயர் உபதேசித்து வருகிறார். திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து நான்முகன் தோன்றி, நூறு ஆண்டுகள் தவம் புரிந்து, பெருமானையே நேரே கண்டு, தன்னுடைய பிறவியின் ரகசியத்தையும், அதன் பயனையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 

‘மேற்கொண்டு இவ்வுலகை சிருஷ்டிக்க வேண்டும். அதற்குண்டான சக்தியைக் கொடு’ - என்று பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமானிடத்தே வேண்டிக் கொண்டார். தன்னுடைய மிக அழகான சயனத் திருக்கோலத்தோடே நான்முகனுக்கு பகவான் காட்சி கொடுத்தார். அதன் மூலமும், தான் செய்த உபதேசங்களின் மூலமும், ப்ரஹ்மாவுக்கு வேண்டிய சக்தி அத்தனையையும் பகவான் வழங்கினார். இவ்விடத்தில் நாம் ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இவ்வுலகத்தில் வேண்டிய அனைத்து சக்திகளையும் பகவானே அருள்கிறார். தர்ம காரியங்கள், புண்ணிய காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கும், பக்தியை வளர்த்துக் கொள்வதற்கும், மேலும் மேலும் ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும், பெருமானிடத்திலிருந்துதான் சக்தி பெற ப்ரார்த்திக்க வேண்டும். 

அனைவரையும் படைக்கும் கடவுள், அவசியம் காக்கிறார். ஆகவே, ‘அடியேனைக் காக்க வேண்டும். அடியேனை எதற்காகப் படைத்தீரோ, அந்தக் காரியம் ஸித்தி அடைவதற்குண்டான அனைத்து சக்திகளையும், தேவரீரே அருள வேண்டும்’ - என்று அவனிடமே தினமும் ப்ரார்த்தித்துக் கொள்ளலாம். பகவானுடைய சயனத் திருக்கோலத்தை ப்ரஹ்மா தரிசித்தார் என்று கூறினேன் அல்லவா? 108 திருத்தலங்களுள் சில இடங்களில், நின்ற திருக்கோலத்திலும், சில இடங்களில் வீற்றிருந்த திருக்கோலத்திலும், மேலும் சில இடங்களில் சயனத் திருக்கோலத்திலும் பெருமான் தரிசனம் கொடுக்கிறார். 27 திருத்தலங்களில் சயனத் திருக்கோலம். அதே போல 21 க்ஷேத்திரங்களில் பெருமான் வீற்றிருந்து தரிசனம் அளிக்கிறார். 60 புண்ணிய பூமிகளில் நின்ற திருக்கோலத்தில் பெருமான் காட்சி கொடுக்கிறார். 

ஆழ்வார்களுடைய பாடல்களின்படி அவர் நின்றதை விட, வீற்றிருந்ததை விட, சயனத் திருக்கோலத்தில் அவர்கள் மிகவும் ஈடுபட்டுள்ளனர். 27 திருத்தலங்களில் சயனத் திருக்கோலத்தில் இருக்கும் பெருமான், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக படுத்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாக ஸ்ரீரங்கம் முதலான க்ஷேத்திரங்களில் புஜங்க சயனம் என்று கூறுவார்கள். அதாவது, ஆதிசேஷ படுக்கையில் ஆனந்தமாக, உலகத்தை எப்படிக் காக்கலாம் என்கிற சிந்தனையோடே சயனித்துக் கொண்டிருக்கும் நிலையை ஸேவிக்கலாம். 

இரண்டாவது - திருக்குடந்தை, அதாவது கும்பகோணத்தில் ஆராவமுதனுடைய சயனம், உத்தியோக சயனம் அல்லது உத்தான சயனம் என்பர். அர்த்த சயனம் என்றும் சொல்லலாம். திருமழிசை ஆழ்வாருடைய வேண்டுகோளுக்கிணங்க, அவரோடு பேசுவதற்காக எழுந்தார் பகவான். ஆனால், ஆழ்வாரோ, ‘இந்த ஏழை கூப்பிட்ட குரலுக்குப் போய் நீர் எழுந்திருந்து பேசுவதாவது, வேண்டாம்! அப்படியே படுத்துக் கொண்டே பேசுவீர்!’ - என்று வேண்ட, முழுவதுமாக சயனமாகவும் இல்லாமல், வீற்றிருந்த கோலமும் இல்லாமல், பாதி எழுந்த நிலையிலேயே பகவான் உள்ளார். ஆழ்வாருடைய வேண்டுகோளுக்கிணங்க, இறைவனும் நடப்பான் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. 

மூன்றாவது - பால சயனம். சிறு வடிவத்தோடே, க்ருபா சமுத்திரமாய் சிறுபுலியூர் என்னும் க்ஷேத்திரத்தில், பகவானுடைய திருக்கோலமே இது. பாற்கடலில் பள்ளிகொண்ட அருட்கடல் இவர்!

நான்காவது - போக சயனம். தில்லை நகர் திருச்சித்திரகூடத்தே தன் ஆனந்த நிலையை அனுபவித்துக் கொண்டே சயனித்துக் கொண்டிருக்கிறார் பெருமான். அனைத்துப் போகங்களையும் இங்கு துய்க்கிறார்; ஆனந்த வடிவனாக! 

ஐந்தாவது - வீர சயனம். திருவிந்தளூர், மயிலாடுதுறைக்குள்ளேயே இருக்கும் திருத்தலம். அங்கு சங்கு சக்கரங்களைப் பிடித்துக் கொண்டே பகவான் சயனித்திருக்கிறபடியால், இது வீர சயனமாயிற்று. 

ஆறாவது - மாணிக்க சயனம். திருநீர்மலையில் எழுந்தருளியிருக்கும் பகவான் தனது பல திருக்கோலங்களுக்குள் சயனத் திருக்கோலத்திலும் காட்சி தருகிறார் மாணிக்க வண்ணனாக! 

அடுத்து - தர்ப்ப சயனம். திருப்புல்லாணி. அதாவது ராமேச்வரத்துக்குச் சற்றே முன் இருக்கும் இத்திருத்தலத்தே ராமர், கடல் அரசனிடத்தே சேது கட்டுவதற்கு வழி கேட்பதற்காக, சரணாகதி செய்தபோது, தர்ப்பங்களைப் பரப்பி இங்குதான் சயனித்தார். ஆகவே, இது தர்ப்ப சயனம். 

அடுத்து - ஸ்தல சயனம் - பெருமான் பாற்கடலில் சயனித்து, ஆதிசேஷப் படுக்கையில் பள்ளி கொண்டிருப்பதைப் பல கோவில்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், திருக்கடல்மல்லை அதாவது மகாபலிபுரத்தே புண்டரீகர் என்னும் ஒரு பக்தர், கடலுக்குள் படுத்திருக்கும் பகவானைச் சேவிப்பதற்காக தன் கைகளையே ஒரு பாத்திரமாகப் பயன்படுத்தி, கடல்நீரை இறைத்துக் கொட்டி விட்டு, தரையில் நடந்து போய் சேவிக்க வேண்டும் என்று ஆசை கொண்டாராம். நமக்கு ‘இது என்ன மூடத்தனமான நம்பிக்கை’ என்று தோன்றும். ஆனால், தன் பக்தியின் மிகுதியால் பக்தன் இப்படித்தான் செயல்படுகிறான். ஆனால், பெருமான், இவனைவிடப் பித்துப் பிடித்தவர். தன்னுடைய ஆதிசேஷப் படுக்கையையும், பாற்கடலையும் துறந்து, திருக்கடல்மல்லைக்கு வந்து இவருக்குக் காட்சி கொடுப்பதற்காக நிலத்திலேயே படுத்துக் கொண்டார். ஆகவே, இது ஸ்தல சயனம். 

அடுத்து - வடபத்ர சயனம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஓர் ஆல் இலைத் தளிரிலே, திருப்பாற்கடலிலே சயனித்துக் கொண்டிருப்பவராக காட்சி தருகிறார் எம்பெருமான். ஆண்டாளாலேயே பாடப்பட்ட பரமன் இவர்! பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோருடைய அவதார ஸ்தலம் இது! 

இறுதியாக - அனந்த சயனம். திருவனந்தபுரத்தே, தன்னுடைய திருவடிகளையும், திருக் கைகளையும் நீட்டிக் கொண்டு பெரிய திரு உருவத்தோடே அடியார்களான நமக்கு ஒரு வாயில் மூலம் திருவடியைத் தரிசிக்கும்படியாகவும், ப்ரஹ்மா முதலான தேவர்களுக்கு அடுத்த வாயில் மூலம் நாபிக்கமலத்தைத் தரிசிக்கும் படியாகவும், நித்ய சூரியர்களுக்கு மூன்றாவது வாயிலின் மூலம் திருமுகத்தையும், திருமுடியையும் சேவித்துக் கொள்ளும்படியாகவும், இப்படி மூன்று வாசற்படிகளால் அனைவருக்கும் காட்சி கொடுக்கும் திருக்கோலம், அனந்த சயனம்! 


இப்படி பல வடிவங்களோடே பகவான் சயனித்துள்ளார். அவருடைய சயனத்தைச் சேவித்தால், ‘கிடந்ததோர் கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன், ஏழையேன் ஏழையேனே!’ என்ற தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரம்தான் ஞாபகத்துக்கு வரும். அவர் சயனத் திருக்கோலத்தைச் சேவித்து விட்டு, அந்தத் திருத்தலத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டு வருவதற்கு யாருக்கேனும் மனம் வருமா? உள்ளம் உருகி, அந்தக் கோவில்களை விட்டு வெளியே வர முடியாமல் திரும்பத் திரும்ப அவரையே நம் மனக் கண்ணால் தரிசித்துக் கொண்டிருந்தோம் இத்தனை நேரம்! 

ஆனால், நாம் பாகவத புராணத்தில் முன்னேற வேண்டுமே, அதனால் அடுத்த அத்தியாயத்தை அடைவோம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக