செவ்வாய், 18 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 54

மூன்றாவது ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

பத்து வகைப் படைப்புகள்

இப்போது பத்து விதமான சிருஷ்டிகளைப் பார்க்கப் போகிறோம். மைத்ரேயர் கூறுகிறார். “ப்ரஹ்மா நூறு ஆண்டுகள் தவம் புரிந்து, தன் நிலையை உணர்ந்து கொண்டார். இனி, தான் அமர்ந்திருக்கும் அழகிய தாமரையிலிருந்து கொண்டு உலகத்தைப் படைக்க ஆரம்பிப்போம் என்று அண்டத்தை மூன்றாகப் பிரித்தார்.” 

இனி சிருஷ்டியை விளக்குகிறார். 

ப்ராக்ருத சிருஷ்டி, வைக்ருத சிருஷ்டி, தேவ சிருஷ்டி என்று மூன்று வகைகள். இதில் ப்ராக்ருத சிருஷ்டியில் ஆறு படைப்புகள் உண்டு. சற்றே விளக்குகிறேன். கூர்மையாகக் கவனிக்கவும். 

“முதலில் மூலப் ப்ரக்ருதி மாறி, மகான் என்று ஆகிறது. மகானிடத்திலிருந்து அஹங்காரம் உருவாகிறது. அஹங்காரத்திலிருந்து பஞ்ச பூதங்கள், அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாயின. 

“பின்னால் பத்து புலன்கள் அதாவது இந்திரியங்கள் உருவாயின. 

“அடுத்து மனம் உருவாயிற்று. இறுதியாய் அறிவை மறைக்கும் திரையாகிற அவித்யை, அதாவது அறிவின்மை என்பதும் சேர்த்தே உருவாயிற்று. இவை ஆறும் ப்ராக்ருத சிருஷ்டியாகச் சொல்லப்படுகின்றன. இவை திருமாலாலேயே படைக்கப்பட்டு, ப்ரஹ்மாவுக்கும் முன்னாலே ஏற்பட்டு விடும். 

“அடுத்து ப்ரஹ்மா படைக்கத் தொடங்கி, மூன்று வைக்ருத சிருஷ்டி செய்கிறார். அதில் முதலாவது - ஸ்தாவர சிருஷ்டி. அதாவது அசையாமல் இருக்கும் மரம், செடி, கொடி ஆகியவை. இவற்றில் ஆறு வகைகள் உண்டு. பூப் பூக்காமலே காய்க்கும் அரசி, அரசு, அத்தி, பலா முதலியவை. 

“இரண்டாவது - ஒரு முறை பலனளித்து ஓய்ந்து விடும் கோதுமை, நெல், பயறு முதலான பயிர் வகைகள். 

“மூன்றாவது - பூப்பதே முக்கியமாக இருக்கும் மல்லிகைக் கொடி முதலானவை. 

“நான்காவது - பட்டையில் பலமுள்ள மூங்கில் முதலான மர வகைகள். 

“ஐந்தாவது - படரும் கொடி வகைகள். 

“ஆறாவது - பூப்பூத்துக் காய் காய்க்கும் ஏனைய மரங்கள். 

“வைக்ருத சிருஷ்டியில் இரண்டாவது வகை - திர்யக்குகள். அதாவது நிலத்திலும் நீரிலும் செல்லக் கூடிய ஜந்துக்களைப் படைக்கிறார். அதில் பசு, ஆடு,எருமை, பன்றி, ஒட்டகம் முதலான இரண்டு குளம்புகள் கொண்ட ஒன்பது வகை மிருகங்கள். 

“அடுத்தது - கழுதை, குதிரை முதலான ஒரு குளம்புள்ள ஆறு வகை மிருகங்கள். 

“மூன்றாவது நாய், நரி, புலி, பூனை, முயல், சிங்கம், யானை, ஆமை முதலான ஐந்து நகங்களைக் கொண்ட பன்னிரண்டு வகை விலங்குகள். 

“அடுத்து மீன் வகைகள். 

“அதற்கு மேல் கழுகு,பருந்து, கொக்கு, மயில், காகம், கோட்டான் முதலான 28 வகைப் பறவைகள். இவை எல்லாவற்றையும் படைத்து முடிக்கிறார். 

“மேலே மனிதர்களைப் படைக்கிறார். இதோடு வைக்ருத சிருஷ்டி முடிந்தது. 


“கடைசியாய், தேவ சிருஷ்டியில் தேவ கணங்களையெல்லாம் படைத்து விடுகிறார். அவர்கள் பத்து வகைப்பட்டவர்கள். தேவர்கள், பித்ருக்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், சித்தர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், சாரணர்கள், பிசாசங்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள். 

“இவர்கள் எல்லோரையும் படைத்து முடித்த பிறகு, மேலும் வம்சங்கள், மன்வந்த்ரங்கள். அந்தந்த மன்வந்த்ரத்தில் ஆளக்கூடிய மன்னர்கள், இவர்கள் எல்லாம் படைக்கப்படுகிறார்கள். இந்தந்தச் சமயத்தில் நடந்த கதைகள். அந்தக் கதைகளுக்குண்டான குறிப்புகள், இவற்றையெல்லாம் விதுரரே, உமக்கு மேலே தெளிவாகக் கூறுகிறேன்” என்று ஓரிடத்தில் நிறுத்தினார் மைத்ரேயர். 

அடுத்து விதுரர் கேட்கிறார். “படைப்பைப் பற்றிக் கூறினீர். ஆனால், இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமே?” என்றார். 

காலம் எவ்வளவு முக்கியமானது? நம் அனைவருக்குமே ஒரு கஷ்டம். ஐந்து வயதுக் குழந்தை முதல் எண்பது வயது முதியவர் வரை, இன்று யாருக்கும் நேரமே இல்லை. வேகமான உலகம். பரபரப்பான வாழ்க்கை. இதில் காலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதை நன்கு நம் வசத்தில் வைத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆகையால், நாம் அடுத்த முறை சந்திக்கும்போது, காலம் என்னும் தத்துவத்தைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக