ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – ஏழாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன், உத்தவனுக்கு ஆத்மஜ்ஞானம் ஸித்திப்பதற்காக, அவதூத வ்ருத்தாந்தத்தில் சொன்ன குருக்களில் தான் முதலிய எட்டுப்பேர்களைக் கூறுதல்)
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மஹாபாகனே! (மிகுந்த பாக்யமுடையவனே!) “நீ இந்தக் குலத்தை முடித்துவிட்டு, இவ்வுலகத்தைத் துறக்கப் போகின்றாய்” என்று யாது மொழிந்தனையோ, அது நான் செய்ய நினைத்திருப்பதுவே.
ப்ரஹ்ம தேவனும், ருத்ரனும் மற்றுமுள்ள லோகபாலர்களும் (உலகைப் பாதுகாக்கும் ப்ரபுக்களும்), நான் இவ்வுலகத்தைத் துறந்து, என் வாஸஸ்தானமான (இருப்பிடமான) வைகுண்ட லோகம் போய்ச் சேர்ந்து, அங்கு நித்ய வாஸம் செய்வதை விரும்புகிறார்கள். நான் ப்ரஹ்மதேவனால் வேண்டப்பட்டு, என்னுடைய அம்சமாகிய பலராமனுடன் இங்கு எதற்காக அவதரித்தேனோ, அத்தகைய தேவ கார்யத்தை முழுவதும் செய்து முடித்து விட்டேன். இந்த யாதவ குலம் ப்ராஹ்மண சாபத்தினாலேயே நன்கு தஹிக்கப்பட்டாற் (எரிக்கப்பட்டது) போலவே ஆய்விட்டது; மற்றும், இனி விரைவிலேயே ஒன்றோடொன்று கலஹம் உண்டாகப் பெற்று, முழுவதும் அழியப்போகின்றது. இது நிச்சயம்.
இன்றைக்கு ஏழாவது நாளில், ஸமுத்ரம் இந்தப் பட்டணத்தை மூழ்கடிக்கப் போகின்றது. நான் எப்பொழுது இவ்வுலகத்தை விட்டுப் போவேனோ, அப்பொழுதே இவ்வுலகம் சீக்ரத்தில் மங்களங்கள் எவையுமின்றியதாய் விடும்; கலியுகம் வந்து மூடிக்கொள்ளும்.
மங்கள ஸ்வபாவனே (நற்குணத்தோனே)! ஆகையால், நானில்லாத இவ்வுலகத்தில் நீ வஸிக்க வேண்டாம். இவ்வுலகத்தில் ஜனங்கள் எல்லாரும் நான் போனவுடனே, கலியுகம் வருகையில் அதர்மத்தில் (அறம் அற்றதில்) ருசியுடையவராய் விடுவார்கள். ஆகையால் நீ இங்கு வஸிக்க வேண்டாம். “ஆனால் என்ன செய்யலாம்? எங்குப் போகலாம்?” என்றால், சொல்லுகிறேன், கேள்.
ஸமஸ்தமான சப்தாதி விஷயங்களில் விருப்பத்தையும், பந்துக்களிடத்திலுள்ள ஸ்னேஹத்தையும் துறந்து, ஸர்வேச்வரனாகிய என்னிடத்தில் நிலை நிறுத்தி, எல்லாம் ப்ரஹ்மாத்மகம் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் அனைத்தும் பகவானான ஸ்ரீமந்நாராயணனை ஆத்மாவாக உடையவை; இவை அனைத்தும் அவனுக்கு சரீரம் – அதாவது பகவானான ஸ்ரீமந்நாராயணனால் தாங்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, அவனுக்கே சேஷமாய் (அடிமையாய், உடைமையாய்) இருப்பன) என்று அனுஸந்திக்கையாகிற (எண்ணுகிற) ஸம த்ருஷ்டி (சம நோக்கு) உடையவனாகி பூமியைச் சுற்றிக்கொண்டிருப்பாயாக. மனம், வாக்கு, கண், காது இவை முதலிய இந்திரியங்களால் எதை எதை அறிகிறோமோ, அதெல்லாம் நச்வரம் (அழியக்கூடியவை); மாயையின் குணங்களுக்கு உட்பட்ட மனத்தினின்று உண்டானதே. ப்ரக்ருதியின் குணமான ஸத்வாதிகளுக்கு உட்பட்ட மனமுடையவர்களுக்கே அந்தச் சப்தாதி விஷய ஸுகம் ரஸிக்குமன்றி, பரிசுத்தமான மனமுடையவர்களுக்கு அது ரஸிக்காது.
ஸர்வாந்தராத்மாவும் (எல்லாவற்றையும் உள் நின்று நியமிப்பவனும்), ஸர்வ சரீரகனுமாகிய (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் அனைத்தையும் தனக்கு சரீரமாக உடைய - அதாவது பகவானான ஸ்ரீமந்நாராயணனால் தாங்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, அவனுக்கே சேஷமாய் (அடிமையாய், உடைமையாய்) இருப்பன) என்னிடத்தில் மனத்தைச் செலுத்தாதவனுக்குப் பற்பலவாறான வஸ்துக்களைப் பற்றின அறிவு உண்டாகும். அது ப்ரமமேயன்றி (மனக்கலக்கமே அன்றி), உண்மையான அறிவன்று. (பரமபுருஷன் எல்லாவற்றிலும் உட்புகுந்து எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டிருக்கிறானாகையால், எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமே (பகவானே) என்னும் அறிவே உண்மையான அறிவாமன்றி, அந்தந்த வஸ்துவை வெவ்வேறாக நினைப்பது உண்மையான அறிவாகாது. அது ப்ராந்தியேயாம் (மனக்குழப்பமே).
ஸர்வாந்தராத்மாவான (எல்லாவற்றிற்கும் ஆத்மாவான) என்னிடத்தில் மனத்தைச் செலுத்துகிறவனுக்கு எல்லாம் ப்ரஹ்மாத்மகம் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள் அனைத்தும் பகவானான ஸ்ரீமந்நாராயணனை ஆத்மாவாக உடையவை; இவை அனைத்தும் அவனுக்கு சரீரம் – அதாவது பகவானான ஸ்ரீமந்நாராயணனால் தாங்கப்பட்டு, நியமிக்கப்பட்டு, அவனுக்கே சேஷமாய் (அடிமையாய், உடைமையாய்) இருப்பன) என்று ஒருவாறாகவே தோற்றுமன்றி, வெவ்வேறாகத் தோற்றாது. அதுவே உண்மையான அறிவு).
எவனுக்கு அந்த ப்ரமம் (மனக்கலக்கம்) தொடர்ந்து கொண்டிருக்கின்றதோ, அவன் புண்ய பாபங்களின் பலனான ஸுக துக்கங்களுக்கிடமாவான். எவனுக்குக் கர்மம் என்றும், அகர்மம் என்றும், விகர்மம் என்றும் பேத (வேறான) புத்தி உண்டாகின்றதோ, அவனுடைய புத்திக்கு ஸுகதுக்கங்கள் விஷயமாகின்றன. (கர்மமாவது, அவச்யம் அனுஷ்டிக்க வேண்டிய நித்ய, நைமித்திகரூப கர்மம். அகர்மமாவது இதைச் செய்யலாகாதென்று சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்பட்ட (விலக்கப்பட்ட) கர்மம். விகர்மமாவது பற்பல பலன்களைக் குறித்து விதிக்கப்பட்ட காம்ய (பலனைக் குறித்துச் செய்யும்) கர்மம்.)
வஸ்துக்கள் ப்ரஹ்மாத்மகங்கள் ஆகாமல் ஸ்வதந்த்ரங்கள் (பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள்) என்றும், தேஹமே ஆத்மா (இந்த உடலே ஆத்மா) என்றும் ப்ரமித்த (தவறான எண்ணம் – மனக்கலக்கம் உடைய) மூடன், விதி (செய்) நிஷேதாதி (செய்யாதே) ரூபமான சாஸ்த்ரத்திற்கு உட்பட்டவனாவான். அவன் அந்த சாஸ்த்ர விதிகளைத் தொடர்ந்து நடப்பானாயின் ஸுகத்தையும், அவற்றைக் கடந்து நடப்பானாயின் துக்கத்தையும், அடைவான்.
இவ்வாறு ப்ரமம் ஜீவனுக்குச் சாஸ்த்ர வச்யதையை (சாஸ்த்ரத்திற்கு உட்பட்டிருத்தலை) உண்டாக்கி, அதன் மூலமாய் ஸுக துக்கங்களை விளைக்கின்றது. (ஆனால், ப்ரஹ்ம ஜ்ஞானிகள் (பரப்ரஹ்மமாகிற ஸ்ரீமந்நாராயனனின் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திவ்ய மங்கள விக்ரஹம்), குண, விபூதிகளை (ஆளுமை) உள்ளபடி அறிந்தவர்கள்) சாஸ்த்ரங்களைக் கடந்து நடக்கலாமோவென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்.
ப்ரஹ்ம ஜ்ஞானிகள், வஸ்துக்கள், ஸ்வதந்த்ரங்கள் என்னும் நினைவு ப்ரமம் (மனக்கலக்கமே) என்று நிச்சயித்துக் கொண்டவர்களாயினும், உடலோடு இருக்கும் வரையில் ஒருகால் ப்ரமம் (மனக்கலக்கம்) தொடரக்கூடுமாகையால் அவர்களும், சாஸ்த்ர விதிகளைக் கடந்து நடக்கலாகாது. மற்றும், அவர்களுக்கு ப்ரமம் (மனக்கலக்கம்) தொடராமற் போயினும், லோக சிக்ஷைக்காக (உலகத்தைத் திருத்துவதற்காக, உலகத்தின் நன்மைக்காக) அவர்களும் சாஸ்த்ர விதிகளை அனுஸரிக்க வேண்டுமேயன்றி, அவற்றைக் கடக்கலாகாது.
அவர்கள் அவற்றைக் கடந்தால் தோஷம் இல்லையாயினும், அவர்களுடைய உண்மையை அறியாத உலகத்தவர்கள், நாமும் இப்படியே நடக்க வேண்டுமென்று சாஸ்த்ர விதிகளைக் கடந்து பாழாய்விடுவார்கள். ஆகையால், அவர்கள் அவற்றைக் கடக்கலாகாது. மற்றும், அவர்கள் தேஹபாதம் வரையில் (தேஹவியோகம் வரையில், அதாவது தேஹம் (உடல்) விழும் வரையில்) கைங்கர்ய புத்தியுடன் சாஸ்த்ரவிதிகளை அனுஷ்டித்துக்கொண்டு வருவார்களன்றி, அவற்றைத் துறக்கமாட்டார்கள்).
இவ்வாறு வஸ்துக்கள் ஸ்வதந்தரங்கள் (பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள்) என்னும் ப்ரமமும் (மனக்கலக்கமும்), தேஹமே ஆத்மா (இந்த உடலே ஆத்மா) என்னும் ப்ரமமும் (மனக்கலக்கமும்), ஸுகதுக்கங்களுக்கிடமான ஸம்ஸாரத்திற்கு ஹேதுவாகையால், நீ இந்த்ரியங்களை எல்லாம் அடக்கிக்கொண்டு, என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி, அசேதனமான (அறிவற்ற ஜடப்பொருட்களான) ப்ரக்ருதியின் பரிணாமங்களாகிய தேவ, மனுஷ்யாதி சரீரங்கள் அடங்கிய இந்த ஜகத்தெல்லாம் ஜீவனிடத்தில் இருக்கிறதென்றும் (ஜீவனால் தாங்கப்படுகிறது என்றும்), அந்த ஜீவாத்மா என்னிடத்தில் வியாபித்திருக்கிறான் என்றும் (என்னால் தாங்கப்படுகிறான் என்றும்) தெரிந்து கொள்வாயாக.
(இப்படி ஸர்வ காலமும் ஆராய்ந்து வருவாயாயின், ஸ்வதந்த்ர வஸ்து ப்ரமமும் (நாம் பகவானான ஸ்ரீமந்நாராயணனின் கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கமும்), தேஹாத்ம ப்ரமமும் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கமும்), அவற்றின் மூலயமாய் விளையும் ஸம்ஸாரமும் நிவர்த்திக்கும் - விலகும்.) (இன்று முதல் நான் அவ்வாறு ஆராய்ந்து வரப் பார்ப்பேனாயின், அனாதி காலமாய் இந்த்ரியங்கள் சப்தாதி விஷயங்களில் செல்லப்பெற்ற என்னுடைய அவ்வாராய்ச்சி இடையில் விக்னங்களால் (இடையூறுகளால்) தடைபடுமே என்பாயாயின், சொல்லுகிறேன்; கேள்.)
ஞான விஜ்ஞானங்கள் அமையப்பெற்று (ப்ருதிவி முதல் ஜீவாத்மா, பரமாத்மா வரையிலுள்ள தத்வங்களின் உண்மை நிலையை அறிந்து) ஸமஸ்த ப்ராணிகளையும் தன்னைப் போலவே பார்க்கும் தன்மையனாகி, ஆத்ம அனுபவத்தினால் (ஆத்மாவை த்யானத்தில் நேராகப் பார்த்து, இன்பமே வடிவான அந்த ஆத்ம தத்வத்தில் திளைத்துக்கொண்டு) மனக்களிப்புற்று இருப்பானாயின், அவன் விக்னங்களால் (இடையூறுகளால்) தடுக்கப்படுகிறதில்லை. அளவற்றதாகிய ஆநந்த ஸாகரத்தில் முழுகினவன், சப்தாதி விஷய அனுபவத்தினால் (உலக விஷயங்களை நுகர்வதால்) விளைகிற அற்ப சுகத்திற்காகச் செய்ய வேண்டிய கர்மங்களாகிற விக்னங்களால் (இடையூறுகளால்) தடுக்கப்படமாட்டான். (அவனுக்கு அவற்றில் ருசியே உண்டாகாது.) அவனுக்கு விக்னங்கள் (இடையூறுகள்) உண்டாகாவாயின், அவன் ஏன் சாஸ்த்ர விதி (செய்) நிஷேதங்களை (செய்யாதே என்பவற்றை) அனுஸரிக்க வேண்டுமென்றால், சொல்லுகிறேன் கேள்.
ஆத்மானுபவத்தினால் ஸந்தோஷமுற்றவன், சப்தாதி விஷய (உலகியல் வாழ்வின்) ஸுக, துக்கங்களைக் கடந்தாவனாயினும், சாஸ்த்ரங்களில் நிஷேதிக்கப்பட்டவை (விலக்கப்பட்டவை) ஆத்ம ப்ராப்திக்கு (பகவானை அடைவதற்கு) விருத்தங்கள் (எதிர்தட்டானவை) என்னும் புத்தியினால் சாஸ்த்ர நிஷேதத்தைக் கடக்க மாட்டான். (சாஸ்த்ரங்களில் செய்யலாகாதென்று விலக்கப்பட்டவற்றைச் செய்யமாட்டான்); மற்றும், ஸ்வர்க்காதி ஸுகங்களுக்கு இடமாமென்னும் புத்தியினால் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட காம்ய (பலனைக் கருதி செய்யும்) கர்மங்களையும் செய்யமாட்டான். நிஷித்த ஆசாரம் (செய்யலாகாதென்று விலக்கப்பட்டவற்றைச் செய்தல்) தோஷத்தை உண்டாக்கி, ஆத்ம அனுபவத்தினின்று நழுவச்செய்வது போல், குண புத்தியாக செய்கிற காம்ய (பலனைக் கருதி செய்யும்) கர்மமும் தனக்கு ஏற்பட்ட பலனை விளைத்து, அதன் மூலமாய் ஆத்மானுபவத்தினின்று நழுவச் செய்யும்.)
இவ்வாறு நிஷித்தங்களையும் காம்யங்களையும் செய்யாமல், நித்ய கர்மங்களை (ஸந்த்யாவந்தனம் முதலியவை) மாத்ரம் செய்து கொண்டு, ஆத்மானுபவத்தினால் ஸந்தோஷமுற்றிருப்பினும், குழந்தை தன் ஸ்வபாவத்தை வெளிக்காட்டாதிருப்பது போல, தன் மஹிமையை வெளிக்காட்டாமல், வெறுமனே இருப்பான். ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனாகிச் சோக (துக்கம்), மோஹாதிகள் (மயக்கம்) இன்றி, வைராக்யம் உடையவனாகி (பற்றற்றவனாகி), ஜ்ஞான விஜ்ஞானங்களில் (ஆத்ம, பரமாத்ம தத்வங்களின் உண்மையான அறிவில்) நிச்சயம் உண்டாகப் பெற்று, ஜகத்தெல்லாம் எனக்குச் சரீரமாகி என்றும் வ்யாபித்து நியமிக்கப்பட்டிருக்கையால் என்னைக்காட்டிலும் வேறுபட்டதன்று, எல்லாம் என் ஸ்வரூபம் என்றே நினைப்பானாயின், அவன் மீளவும் ஸம்ஸாரத்தில் உழல்கையாகிற ஆபத்தை அடைய மாட்டான்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! பகவத் பக்தர்களில் சிறந்த உத்தவன், இவ்வாறு பகவானால் நியமிக்கப்பெற்று, உபாஸ்ய வஸ்து (த்யானிக்கப்பட வேண்டிய பொருள்), உபாஸகன் (த்யானம் செய்பவன்), உபாஸனம் (த்யானம்) இவற்றின் ஸ்வரூபத்தை (இயற்கைத் தன்மையை) உள்ளபடி அறிய விரும்பி, நமஸ்கரித்துத் தன் பக்தர்களைக் கைவிடாமல் காக்கும் தன்மையனான அப்பகவானைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.
உத்தவன் சொல்லுகிறான்:- யோக நிர்வாஹகனே (நியமிப்பவனே)! யோகத்தை உபதேசிப்பவனே! யோகாதாரனே (யோகத்திற்கு ஆதாரமே)! யோகத்தினால் பெறக் கூடிய பலனாயிருப்பவனே! யோக சாஸ்திரத்தை உற்பத்தி செய்தவனே! மோக்ஷத்தின் பொருட்டு எல்லாவற்றையும் துறக்கும்படி மொழிந்தாய். மீளவும் மனப்பற்று இல்லாதபடியல்லவோ துறக்க வேண்டும். (காலபுருஷ தானம் வாங்கினவன், தன் ப்ராணன்களைக் காக்கும் பொருட்டு, தன் சொத்தையெல்லாம் துறந்து, மீளவும் த்ரவ்யார்ஜனம் செய்து (பணம் சம்பாதித்து) ஜீவிக்கப் பார்க்கிறான். இது அப்படியன்றல்லவா? அடியோடு துறந்து, மீளவும் அவற்றை நெஞ்சிலும் நினைக்கலாகாதல்லவா?) ஆனால் என் என்கிறாயோ?
மஹானுபாவனே! சப்தாதி விஷயங்களில் நிலைநின்ற மனமுடையவர், சப்தாதி விஷயங்களை (உலகியல் வாழ்வின் ஈடுபாட்டை) அடியோடு துறப்பதென்பது வருந்தியும் செய்ய முடியாத கார்யம். ஸர்வாந்தராத்மாவான (எல்லோரையும் உள் நின்று நியமிக்கும்) உன்னிடத்தில் பக்தியில்லாதவர்களுக்கோ என்றால் இது முதலே முடியாது. (அவர்கள் இதை நெஞ்சிலும் நினைக்கவல்லவர் அல்லர்) என்று என்னுடைய அபிப்ராயம்.
பக்தியோகம் கைகூடினவர்கள், மஹாநந்த ஸ்வரூபனான (பேரின்ப வடிவான) உன்னை அனுபவிப்பதில் நிலை நின்றிருப்பவராகையால், சப்தாதி விஷயங்களை ஒருகால் துறந்தாலும் துறக்கக்கூடுமன்றி மற்றவர்களுக்கு அது முடியவே முடியாது. சப்தாதி விஷயங்களைத் துறக்க வேண்டுமென்று நீ எவனுக்கு உபதேசித்தாயோ, அத்தகைய நான் உன் மாயையினால் ஏற்பட்டிருக்கின்ற தேஹத்திலும் (உடலிலும்), தேஹானுபந்திகளான (உடலோடு தொடர்புடைய) புத்ர (பிள்ளை), களத்ராதிகள் (மனைவி) இடத்திலும், நானென்றும், என்னுடையதென்றும் அஹங்கார (நான்) மமகாரங்களால் (எனது) மதி மயங்கி, ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கின்றேன். அத்தன்மையுள்ள நான், நீ மொழிந்ததை எல்லாம் எவ்வாறு அனாயாஸமாக (எளிதாக) நிறைவேற்றிக் கொள்வேனோ, அவ்வாறு உன் ப்ருத்யனாகிய (சேவகனாகிய) எனக்கு நீ சொன்னதை எல்லாம் மீளவும் விவரித்துச் சொல்வாயாக. நான் சுருக்கமாகச் சொன்னேன். உனக்கு விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்னும் விருப்பம் உளதாயின், மற்றொருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாயாக என்று கைவிடலாகாது.
ஏனென்றால் (ஜகதீசனே! நீ ஜ்ஞான ஆனந்த மயனாய் (அறிவு மற்றும் இன்ப வடிவானவனாக) இருக்கையாகிற ஸ்வபாவம் என்றும் மாறாதிருக்கப் பெற்றவன்; தன் நிலைமையை என்றும் ஸாக்ஷாத்கரித்து (நேராகப் பார்த்துக்) கொண்டிருப்பவன்; ஜீவாத்மாவுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன். இத்தகைய உன்னைக்காட்டிலும் உபதேசம் செய்யவல்ல மற்றொருவன் தேவதைகளிலுங்கூட எனக்குப் புலப்படவில்லை.
ப்ரஹ்மதேவன் முதலிய ஸமஸ்த தேவதைகளும், உன்னுடைய மாயையினால் மதிமயங்கி, கர்ம அதீனமான (புண்ய, பாப வினைகளுக்கு உட்பட்ட) தேஹங்களை (உடலை) உடையவர்கள்; ஆத்மாவல்லாத தேஹத்தில், ஆத்மாவென்னும் புத்தியுடையவர்கள். எத்தகையர்களேனும் உன் பாதார விந்தங்களின் குணானுபவத்தில் ரஸமறிந்த பாகவதர்களோடு சேராதிருப்பார்களாயின், உபதேசமில்லாமல் கேவல யுக்திகளால் எவ்வளவு வெல்லப் பார்க்கினும், உன் மாயை அவர்களை விடுகிறதில்லை. ப்ரஹ்மாதிகளும் கூட அத்தகைய உன் மாயையினால் மதிமயங்கப் பெற்றவர்களே.
ஆனால், ஸத்துக்களோடு ஸஹவாஸம் (தொடர்பு) செய்யலாமேயென்றால், ஆணும் பெண்ணுமாய்க் கலந்து ஸகிக்குந் தன்மையுடைய க்ருஹஸ்தர்களுக்குள் எவர்கள் ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களால் {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களால்} மனவருத்தமுற்று, சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பம் அடங்கப் பெற்றிருக்கின்றார்களோ, அத்தகையர்களுக்கே ஸத்புருஷர்களோடு ஸஹவாஸம் (தொடர்பு) உண்டாமன்றி, சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் பேராவலுற்றவர்களுக்கு அது உண்டாகாது. உன்னைக் காட்டிலும் வேறு உபதேசம் செய்பவன், தேவதைகளிலும் கூட அகப்படாமையால், ஸம்ஸார துக்கங்களால் பரிதபித்து மனவெறுப்புற்றிருக்கின்ற நான், உன்னையே சரணம் அடைகின்றேன்.
நீ மோஹம் முதலிய தோஷங்கள் தீண்டப் பெறாதவன்; அளவிட்டறிய முடிவாத ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குணங்களை) உடையவன்; ஸமஸ்த வஸ்துக்களையும் ஸாக்ஷாத்கரித்தவன் (நேரில் பார்த்து அறிபவன்); ஸர்வநியாமகன் (எல்லாவற்றையும் நியமிப்பவன்); எவ்விதக் கெடுதியுமில்லாத வைகுண்டமென்னும் ஸ்தானத்தையுடையவன்; நரர்களுக்கு (மனிதர்களுக்கு) ப்ராப்யனும் (அடையப்படக்கூடிய பொருளாகவும்), ப்ராபகனும் (அடைவதற்கு வழியாகவும்), ஆதாரனுமாகையால் நாராயணனென்னும் பெயருடையவன்; நரனுக்கு (ஒரு ரிஷி) நண்பன். (ஆகையால், உன்னிடத்தில் ஆசார்யனாயிருக்கைக்கு வேண்டிய குணங்களெல்லாம் அமைந்திருக்கின்றன.
ஒன்றை மற்றொன்றாக நினைக்கும் தன்மையாகிற ப்ரமமும் (மனக்கலக்கமும்), தெரிந்ததை மறக்கும் தன்மையாகிற ப்ரமாதமும் (கவனக்குறைவும்), மற்றுமுள்ள தோஷங்களும் உனக்குக் கிடையாது. உன்னுடைய அறிவு அளவற்றது. உனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. உன்னறிவு கர்மாதீனமாய் விளைந்ததன்று; இயற்கையாகவே ஏற்பட்டிருப்பது. அவ்வறிவு என்றும் மாறாதது. நீ ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் தத்வோபதேசம் செய்யும் பொருட்டு நாராயணாவதாரம் செய்தாய். அர்ஜுனாதிகளை முன்னிட்டு, தத்வோபதேசம் செய்தாய். ஆகையால், இத்தகையனான உன்னையே நான் சரணம் அடைகின்றேன்).
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உலகத்திலுள்ள வஸ்துக்களுக்கு இயற்கையில் ஏற்பட்ட குணங்களை ஆராய்ந்தறியும் திறமையுடைய பெரியோர்கள், தங்கள் மனத்தை அடக்கிக்கொண்டு, அம்மனத்தினாலேயே தம்மைச் சப்தாதி விஷய வாஸனையினின்று (முன் வினைகளின் ஆழ்ந்த பதிவுகளால் ஏற்படும் உலகியல் இன்ப ஈடுபாடுகளிலிருந்து) கரையேற்றுகிறார்கள். ஆகையால், புருஷனுக்கு ஹிதத்தை (நன்மையை) நடத்தும் குரு, நன்கு சிக்ஷிக்கப்பட்ட (பண்படுத்தப்பட்ட) மனமே (மனுஷ்ய ஜன்மத்தில், மனத்தை அடக்கியாள்கையும், விவேகமும், நன்மையும் ஸுகமாய்க் கிடைக்கக்கூடியவை).
மனுஷ்யனாகப் பிறந்தவன், ச்ருதி, ஸ்ம்ருதிகளால் ஆராய்ந்து நன்மையைப் பெறக்கூடுமல்லவா? மற்ற ஜந்துக்கள் அறியமாட்டாமல் போயினும், மனுஷ்யனாகப் பிறந்தவன், ப்ரத்யக்ஷத்தில் சப்தாதி விஷய ஸுகங்கள் நச்வரங்கள் (அழியக்கூடியவை) என்பதை ஆராய்ந்து, இவ்வாறே ஸ்வர்க்காதி ஸுகங்களும் என்று ஊஹித்து, வைராக்யத்தினால் நன்மையைப் பெறலாமல்லவா?
மனுஷ்ய ஜன்மத்திலேயே சித் (ஜீவாத்மா), அசித் (ஜடப்பொருட்களுக்கு மூலமான மூலப்ரக்ருதி), ஈச்வரன் என்னும் தத்வங்களை ஆராய்ந்து அறிகையாகிற ஸாங்க்யம், பரமாத்ம உபாஸனமாகிற யோகம் (த்யானம்) இவற்றில் நிபுணர்களான பெரியோர்கள் இந்த்ரியங்களை அடக்கிக்கொண்டு, ப்ரக்ருதி புருஷர்களிடத்தில் நேரக் கூடாத ஸர்வஜ்ஞத்வம் (எல்லாவற்றையும் அறிதல்), ஸத்ய ஸங்கல்பத்வம் (நினைத்ததை நடத்தி முடித்தல்) முதலிய ஸமஸ்த சக்திகளும் நிறைந்த என்னை ஸ்பஷ்டமாக (தெளிவாக) அறிகின்றார்கள். ஒற்றைக் காலுடையவைகளும், இரண்டு கால்களுடையவைகளும், மூன்று கால்களுடையவைகளும், நான்கு கால்களுடையவைகளும், பல கால்களுடையவைகளும், காலில்லாதவைகளுமான பல சரீரங்கள் முன்பு படைக்கப்பட்டன.
அவற்றில், இரண்டு பாதங்களையுடைய மனுஷ்ய சரீரமே எனக்கு ப்ரியமானது. (மனுஷ்ய ஜன்மத்திலன்றோ என்னை அறிந்து மோக்ஷமாகிற பெரு நன்மையைப் பெறலாம். ஆனது பற்றி மனுஷ்ய ஜன்மமே எனக்கு ப்ரியமாயிருக்கும்.) ஆனால், மனுஷ்ய ஜன்மத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் உன்னை அறிகின்றார்களா? என்றால், சொல்லுகிறேன்.) எல்லோரும் அறிகின்றதில்லை.
பின்னையோவென்றால், சிலர் மாத்ரமே ஸர்வேச்வரனான என்னை ஆராய்ந்து அறிகின்றார்கள். ப்ரத்யக்ஷத்தினால் (நேராகப் பார்த்து அறிதலால்) அறியப்படுகிற ரூபாதி குணங்களாகிற அடையாளங்களால் என்னை அறியமுடியாது. ப்ரத்யக்ஷ மூலமான (நேராகப் பார்த்து அறிவதை ஆதாரமாகக் கொண்டு) அனுமானத்தினாலும் (ஊஹித்து அறிதலாலும்) அறிய முடியாது. இப்பொழுது நான் சொன்ன இவ்விஷயத்தில் அவதூதனுக்கும் (பற்றுகளைத் துறந்த ஒரு துறவிக்கும்), மஹாதேஜஸ்வியான (சிறந்த புகழை உடைய) யதுவுக்கும், நடந்த ஸம்வாத ரூபமான பழைய இதிஹாஸத்தைச் சொல்லுகிறார்கள். அந்த இதிஹாஸத்தை இதோ சொல்லுகிறேன், கேள்.
தர்மங்களை உணர்ந்த யதுவென்பவன், எண்ணெய் தேய்த்து முழுகுதல் முதலிய தேஹ (உடல்) ஸம்ஸ்காரங்களைத் (தூய்மைப்படுத்தும் செயல்களைத்) துறந்திருப்பவனும், குளிர், காற்று, வெயில் முதலிய எதிலும் பயமின்றித் திரிகின்றவனும், யௌவன (இளம்) வயதுடையவனும், வித்வானுமாகிய (அறிஞனுமாகிய) ஒரு ப்ராஹ்மணனைக் குறித்து மேல்வருமாறு வினவினான்.
யது சொல்லுகிறான்:- அந்தணரே! நீர் இந்த்ரியங்களின் ப்ரீதிக்காகச் செய்ய வேண்டிய கார்யங்கள் எவற்றையும் செய்யாமல் வெறுமனே இருக்கின்றீர். உம்முடைய புத்தியோவென்றால், மிகவும் திறமை அமைந்து, ஸர்வலோக விலக்ஷணமாய் (உலக வழக்கை விட வேறானதாய்) இருக்கின்றது. நீர் இந்த புத்தியைப் பற்றி வித்வானாயிருந்தும் ஒன்றும் தெரியாத இளைஞன் போல் திரிகின்றீர். இத்தகைய புத்தி உமக்கு எந்தக் காரணத்தினால் உண்டாயிற்று?
உலகத்தில் மனுஷ்யர்கள் பெரும்பாலும் தர்ம, அர்த்த, காமங்களைப் பெறுதற்கும், அவற்றிற்கு வேண்டிய ஸாதனங்களை அறிவதற்கும், ஆயுள், புகழ், பொருள் இவற்றிற்காகவும், விருப்பத்துடன் முயற்சி செய்கின்றார்கள். நீரோவென்றால், நல்ல ஸாமர்த்யமுடையவர்; எல்லாம் அறிந்தவர்; எல்லாத் திறமைகளும் அமைந்தவர்; கண்ணுக்கினிய காட்சியுடையவர்; அம்ருதம் போல் இனிதாகவும், ஹிதமாகவும், மிதமாகவும் பேசுத்தன்மையர். ஆகையால், உமக்கு அசக்தியாவது (பலமின்மை), அறிவின்மையாவது, திறமையில்லாமையாவது, கண்ணுக்கு வழங்காமையாவது, துர்ப்பாஷித்வமாவது (கொடுமையான பேச்சாவது) கிடையாது. நீர் நினைத்த கார்யங்களையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள வல்லவர்.
ஆயினும், ஒன்றுமறியாத மூடன் போலவும், பித்தம் பிடித்தவன், போலவும், பிசாசம் போலவும், ஒன்றும் செய்யாதிருக்கிறீர்; விரும்புவதும் கூட இல்லை. உலகத்திலுள்ள ஜனங்கள் அனைவரும், காமம், லோபம், இவையாகிற காட்டுத்தீயினால் தபிக்கப்பட்டு (எரிக்கப்பட்டு) வருந்திக்கொண்டிருக்கையில், காட்டுத் தீயினின்று விடுபட்டு, கங்கா ப்ரவாஹத்தின் இடையிலிருக்கும் யானை போல் அவ்வருத்தமின்றி ஸுகமாயிருக்கின்றீர். ப்ராஹ்மணரே சப்தாதி விஷயங்களின் தீண்டுதலின்றி, தேஹானுபந்திகளும் (உடலோடு தொடர்பு உடையவர்களும்) எவையுமின்றித் தனியராயிருக்கின்ற நீர், மனத்தில் மிகவும் ஆனந்தமுற்றிருப்பதற்குக் காரணம் எதுவோ, அதை வினவுகின்ற எமக்குச் சொல்வீராக.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மிகுந்த பாக்யமுடையவரும், சிறந்த மதியமைந்தவருமாகிய அவ்வந்தணர், ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டிய உபகாரங்களைச் செய்யும் தன்மையனும், மிகுந்த புத்தி உடையவனுமாகிய யதுவினால் வினவி, வெகுமதி செய்யப் பெற்று, மிகுந்த பணிவினால் வணக்கமுற்றிருக்கின்ற அந்த யதுவைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.
ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- எனக்கு என் புத்தியினால் அங்கீகரிக்கப்பட்ட பல குருக்கள் உண்டு. இந்தக் குருக்களிடத்தினின்று அப்யஸித்த (கற்ற) புத்தியை நிலை நிறுத்திக் கொண்டு, ஸம்ஸாரிகளுக்கு ஸஹஜமாய் (சாதாரணமாக) ஏற்படுகின்ற ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களினின்று {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான துன்பங்களிலிருந்து} விடுபட்டு, நான் ஸுகமாய்த் திரிந்து கொண்டிருக்கின்றேன். நான் என் புத்தியினால் அங்கீகரித்த அந்த குருக்களைச் சொல்லுகிறேன், கேட்பாயாக.
பூமி, காற்று, ஆகாசம், ஜலம், அக்னி, சந்த்ரன், ஸூர்யன், புறா, மலைப்பாம்பு, ஸமுத்ரம், விட்டில், வண்டு, யானை, தேன் கூடுகளைப் பறிக்கும் வேடன், மான், மீன், பிங்களை என்னும் பெண்மணி, அழுகுரல்பக்ஷி, சிறுவன், கன்னி கழியாத பெண், இரும்பு வேலை செய்யும் கருமான், பாம்பு, சிலந்திப்பூச்சி, குளவி ஆகிய இவ்விருபத்து நான்கு பேர்களையும், நான் என் புத்தியினால் குருக்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்றேன்.
ராஜனே! இவற்றின் செயல்களைப் பார்த்து, நான் என் மனத்தைச் சிக்ஷித்துக் (பண்படுத்திக்) கொண்டேன். நஹுஷகுமாரனே / புருஷச்ரேஷ்டனே! இவற்றுள் எதினிடத்தினின்று எதெதை எப்படி சிக்ஷித்துக் (கற்றுக்) கொண்டேனோ, அதையெல்லாம் அப்படியே சொல்லுகிறேன்; கேட்டுத் தெரிந்து கொள்வாயாக.
புருஷன், தெய்வத்தினால் தூண்டப்பட்ட பூதங்களால் பீடிக்கப்படினும், அந்த வருத்தங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பூதங்கள் தன்னைப் பீடிப்பதற்குக் காரணம் தன்னுடைய கர்மமேயன்றி அவற்றின் மேல் தோஷமில்லையென்று நினைத்து, தான் நடக்க வேண்டிய மார்க்கத்தினின்று நழுவலாகாது. இந்த விரதத்தை நான் பூமியினிடத்தினின்று கற்றுக் கொண்டேன்.
ஸாதுவாயிருப்பவன், தன் செயல்களெல்லாம் எப்பொழுதும் பிறர்க்கு உபகாரமாகவேயிருக்கப் பெற்று, பிறர்க்கே உபயோகமான பிறவி உடையவனுமாய் இருக்க வேண்டுமென்னும் இன்னிலைமையைப் பிறர்க்கே உபயோகமான அருவி முதலியவற்றையுடைய பர்வதத்தினிடத்தினின்றும், வ்ருக்ஷங்களுக்கு (மரங்களுக்கு) சிஷ்யனாகிப் பராதீனமாயிருக்கையையும் (பிறர்க்கு உட்பட்டு இருத்தலையும்) அப்யஸிக்க (பயில) வேண்டும். (வ்ருக்ஷங்களை வெட்டினாலும், வேரோடு பிடுங்கினாலும், தடையாவது அனுமதியாவது ஒன்றும் செய்யாதிருப்பது போல, பிறர் தன்னை எது செய்யினும், அதற்கெல்லாம் தடையாவது, அனுமதியாவது, எதுவும் செய்யாதிருக்க வேண்டும்).
ப்ராணவாயு ஆஹாராதி மாத்ரத்தினால் நிலை நின்றிருக்கிறது, சப்தாதி விஷயங்களை அபேக்ஷிக்கிறதில்லை (எதிர்பார்ப்பதில்லை). அவ்வாறே முனியாயிருப்பவன், ப்ராண தாரண மாத்ரத்திற்கு (உயிர் உடலோடு சேர்ந்து இருப்பதற்கு மட்டும்) வேண்டிய ஜீவனத்தோடு நிலை நின்றிருக்க வேண்டும்; இந்த்ரியங்களுக்கு ப்ரீதியை விளைக்கின்ற சப்தாதி விஷயங்களை விரும்பலாகாது. ப்ராணதாரணத்திற்கு வேண்டிய ஆஹாரமுங்கூட இல்லாது போமாயின், மனம் தளர்ந்து ஜ்ஞானம் நசித்துப்போகும். ஆகையால், ஜ்ஞானம் நசியாதிருப்பதற்காகவும், மனம் தளராதிருப்பதற்காகவும், அவ்வளவுக்குப் போதுமான ஜீவனத்தை அபேக்ஷிக்க (விரும்ப) வேண்டியது அவச்யமே.
இஷ்டங்களும் (விருப்பமானவை), அனிஷ்டங்களும் (வேண்டாதவை), இருவகைப் பட்டவைகளும், இரண்டு வகையிலும் அடங்காமல் மத்யஸ்தமாய் இருப்பவைகளுமான விஷயங்களை இந்திரியங்களால் அனுபவித்துக் கொண்டிருப்பினும், ப்ரீதியும் (விருப்பு), த்வேஷமுமாகிற (வெறுப்பு) குணதோஷங்களினின்று விடுபட்ட மனமுடையவனாகி, எல்லா விஷயங்களிலும் வாயுவைப் போல் பற்றற்றிருக்க வேண்டும்.
ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்த யோகி, ப்ருதிவி முதலிய தத்வங்களின் பரிணாமமான (மாற்றமான) தேஹங்களில் (உடல்களில்) ப்ரவேசித்து, தேவத்வம், மனுஷ்யத்வம், ஸ்தூலத்வம் (பருமன்), க்ருசத்வம் (இளைப்பு) முதலிய தேஹ தர்மங்களோடு (உடலின் தன்மைகளோடு) கூடினவன் போலத் தோன்றினும், “நான் தேவன். நான் மனுஷ்யன்” என்றும் “நான் பருத்திருக்கிறேன்” “நான் இளைத்திருக்கிறேன்” என்றும் தேஹ தர்மங்களை (உடலின் தன்மைகளை) ஆத்மாவினிடத்தில் நினைக்கமாட்டான்.
காற்று, நல்ல மனமுடையவைகளும், கெட்ட மனமுடையவைகளுமாகிய வஸ்துக்களில் பட்டுக்கொண்டு வரினும், அவ்வஸ்துக்களின் குணங்கள் தீண்டப் பெறாதிருப்பதுபோல, ஆத்மா தேஹத்தின் குணங்கள் தீண்டப் பெறாதவன். ஆத்மாவுக்குள்ள இந்நிலைமையைக் காற்றிடத்தினின்று அப்யஸிக்க (அறிய) வேண்டும்.
பரப்ரஹம ஸ்வரூபத்தை உணர்ந்து, மனனம் செய்பவன், வேதாந்த வாக்யங்களின் நிரூபனத்தினால் ஸமஸ்த வஸ்துக்களும் பரப்ரஹ்ம ஸ்வரூபங்களே என்று ஏற்பட்டிருக்கையால் ஜங்கம (அசைபவை), ஸ்தாவர (அசையாதவை) ரூபமான ஸமஸ்த பூதங்களிலும் இடைவெளியின்றி நிறைந்திருக்கின்ற பரமாத்மா, உள்ளும், புறமும் வியாபித்திருப்பதை ஆராய்ந்து, அவன் ஆகாசத்தைப் போல எங்கும் தடையின்றி ப்ரவேசிக்கும் தன்மையன் என்று பாவிக்க வேண்டும்.
தேஜஸ்ஸு, ஜலம், பூமி ஆகிய இவற்றின் பரிணாமங்களான மேகங்கள் என்னும் பதார்த்தங்கள், காற்றினால் தூண்டப்பட்டு, ஆகாயத்தில் நிறைந்திருப்பினும், அவ்வாகாசம் அம்மேகங்களால் தீண்டப்படாதிருப்பது போல, பரமாத்மா காலத்தை நிமித்த காரணமாகக் கொண்டு தான் படைத்தவைகளும், ஸத்வாதி குணங்களின் பரிணாமங்களுமான ஜங்கம (அசைபவை), ஸ்தாவரங்களுக்கு (அசையாதவை) ஆதாரமாயிருப்பினும், அவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப் பெறுகிறதில்லை. (பரமாத்மா ஸமஸ்த ஜங்கம (அசைபவை), ஸ்தாவரங்களுக்கு (அசையாதவை) ஆதாரமாயிருப்பினும், அவற்றின் தோஷங்கள் தன்மேல் தீண்டப்பெறாமல் பரிசுத்தனாயிருப்பான் என்பதை மேகங்களால் தீண்டப்பெறாத ஆகாசத்தினின்று அறியவேண்டும்.)
பரப்ரஹ்மத்தை த்யானம் செய்யும் முனிவன், நிர்மலனும் (எந்த தோஷமும் – குறையும் இல்லாதவனும்), இயற்கையில் ஸ்னேஹமுடையவனும், மதுரமாயிருப்பவனும், சாஸ்த்ரங்களை உணர்ந்து ப்ராணிகளுக்கு இழியும் துறையுமாகி ஜலத்தைப்போன்று, தர்சனம் (காட்சி), ஸ்பர்சனம் (தொடுதல்), கீர்த்தனம் (பகவானின் புகழைப் பாடுதல்) இவைகளால் புனிதம் செய்கின்றான்.
மிகுந்த அறிவுடையவனும், தவத்தினால் மிகுதியும் விளக்கமுற்றவனும், பிறர்க்கு அணுக முடியாதவனும், உதரத்தையே (வயிற்றையே) அன்னம் வைக்கும் பாத்ரமாக உடையவனுமாகிய முனிவன், அக்னியைப் போல் ஸமஸ்த விதமான ஆஹாரங்களைப் பக்ஷிப்பினும், அவற்றால் தோஷங்களுக்கிடமாகிறதில்லை. அக்னி, ஒருகால் நீறு பூத்து மறைந்திருப்பது போல, ஒருகால் தன் மஹிமையை வெளியிடாமல் மறைந்தும், அவ்வக்னி ஒருகால் நெய் முதலியவற்றால் ஹோமம் செய்யப் பெற்று ஸ்பஷ்டமாய் (நன்றாக) எரிவது போல், ஒருகால் யோக அப்யாஸாதிகளால் (யோகப் பயிற்சியால்) ஸ்பஷ்டனாயும் (பிறர்க்குத் தெளிவாகப் புலப்படுபவனாயும்), ஸ்வர்க்க மோக்ஷாதி ரூபமான நன்மையை விரும்புவர்களுக்கு அக்னியைப் போல உபாஸிக்கத் தகுந்தவனுமாகி, அக்னி, ஹோமம் செய்கிறவர்களின் இஷ்டப்படி ஹவிஸ்ஸை அங்கீகரிப்பது போலவும், அவர்களுடைய பாபங்களைப் போக்குவது போலவும், அன்னம் முதலியன கொடுக்கிறவர்களின் போன பிழைகளையும், புகும் பிழைகளையும் போக்கிக்கொண்டு, அவர்கள் கொடுக்கிற அன்னாதிகளைப் புசிப்பான் (அக்னி, பிறர் கொடுக்கும் பொழுது ஹவிஸ்ஸைப் பெறுவது போல், முனிவனும் ஆஹாரம் கிடைக்கும் பொழுது புசிப்பான்) அக்னி காஷ்டங்களில் (சுள்ளிகளில்) பற்றி அக்காஷ்டங்களின் (சுள்ளிகளின்) உருவமுடையதாய்த் தோற்றுவது போல, பரம புருஷன் தன் மாயையினால் படைத்த சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தில் (உலகில்) ப்ரவேசித்து, அந்த தேவ, மனுஷ்யாதி ரூபனாய்த் தோன்றுகிறான். (அக்னிக்கு ஆதாரமான காஷ்டங்களின் (சுள்ளிகளின்) குணம், அவ்வக்னிக்கு இயற்கையில் ஏற்பட்டது அல்லாதது போல, சரீரங்களைச் சேர்ந்த தேவத்வ, மனுஷ்யத்வாதி தர்மங்கள் அந்தராத்மாவான பரமாத்மாவைச் சேர்ந்தவைகளல்ல.
வளர்தலும், குறைதலும், சந்த்ரனுடைய கலைகளுக்கேயன்றி, சந்த்ரனுக்கு அவை இல்லாதது போல, பிறப்பு முதல் மரணம் வரையிலுள்ள விகாரங்கள் (மாற்றங்கள்) எல்லாம் அறிய முடியாத கதியையுடைய காலத்தினால் தேஹத்திற்கு (உடலிற்கு) ஏற்பட்டவைகளேயன்றி, ஆத்மாவுக்கு அவை கிடையாது. (அக்னியையும் த்ருஷ்டாந்தமாக (உதாரணமாகக்) கொண்டு இவ்விஷயத்தை ஆராய்ந்தறியலாம்). அக்னி இருப்பினும் அதன் ஜ்வாலைகளுக்கே தோற்றமும், மறைதலும் உண்டாகின்றன.
அவ்வாறே பிறத்தல், சாதல் இவை, ப்ரவாஹம் (வெள்ளப் பெருக்கு) போல் நித்யங்கள் (நிலையானவை) ஆயினும், பஞ்ச பூதங்களின் பரிணாமங்களான தேஹங்களுக்கேயன்றி ஆத்மாவுக்கு அவை கிடையாது. அவையும் ப்ரவாஹத்தின் வேகம் போன்ற வேகமுடைய காலத்தினால் உண்டாகின்றன. ஸூர்யன், தன் கிரணங்களால் ஜலத்தை இழுப்பதும், விடுவதும் செய்வது போல, ஜீவன் தகுந்த காலத்தில் விஷயங்களை நிறைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஸமயம் நேரும்பொழுது, விரும்புகிறவர்களுக்கு அவற்றைக் கொடுக்க வேண்டும். ஸம்பாதித்த வஸ்துக்களைத் தான் உபயோகப்படுத்தலாகாது. போக்ய வஸ்துக்களைப் பிறர்க்கே உபயோகப்படுத்தவேண்டும்.
கண்ணுக்குப் புலப்படுகின்ற தேவ, மனுஷ்யாதி தேஹங்களையே ஆத்மாவாக ப்ரமிக்கும் மூடர்கள், தேவ - மனுஷ்யாதி தேஹங்களில் அமைந்திருக்கின்ற ஆத்மாக்களிடத்தில் தேவ, மனுஷ்யாதி பேதம் (வேற்றுமை) இல்லாதிருப்பினும், அவர்களிடத்தில் அந்தப் பேதம் இருப்பதாக நினைக்கின்றார்கள்; தங்களையும் “நான் தேவன், நான் மனுஷ்யன்” என்றும், “நான் இளைத்திருக்கிறேன். நான் பருத்திருக்கிறேன்” என்றும் பார்க்கின்றார்கள். (தேஹத்தைக்காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவை அறிந்தவர்களோவென்றால், தேவத்வ, மனுஷ்யத்வாதி பேதங்களையும், இளைத்தல், பருத்தல் முதலிய தேஹ தர்மங்களையும் ஆத்மாவினிடத்தில் இருப்பதாக நினைக்க மாட்டார்கள்.
ஆகாயத்தில் இருக்கின்ற ஸூர்யன், கண்ணாடி, ஜலம் முதலியவற்றில் ப்ரதிபலிப்பினும், அவற்றின் ஸ்வபாவங்கள் தன்மேல் தீண்டப் பெறாதிருப்பது போல, ஆத்மாவும் தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் அமைந்திருப்பினும், அவற்றின் ஸ்வபாவங்கள் தன்மேல் தீண்டப்பெறாமலே இருக்கின்றான். ஆனால், ஸூர்யன், கண்ணாடி முதலியவற்றில் இல்லாமற்போயினும், இருப்பது போல், தோன்றுகிறான்.
ஆத்மாவோவென்றால், தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் அமைந்திருப்பினும், அவற்றின் ஸ்வபாவங்கள் தன்மேல் தீண்டப் பெறுகிறதில்லை. எவனும் எதினிடத்திலும் ஸ்னேஹத்தை அதிகமாகச் செய்யலாகாது. அப்படி செய்வானாயின், கபோதம் (புறா) போல் மதிகலங்கி வருத்தமுறுவான்.
அரண்யத்தில் (காட்டில்) ஒரு கபோதம் (புறா) மரத்தில் கூடு கட்டிக்கொண்டு பேடையுடன் (பெண் புறாவுடன்) சில வர்ஷங்களாக வஸித்துக் கொண்டிருந்தது. ஆணும் பெண்ணுமாகிய அந்தக் கபோதப் பறவைகள் (புறாக்கள்) ஸ்னேஹ பாசத்தினால் ஒன்றுக்கொன்று மனம் கட்டுண்டு, மைதுன ஸுகத்தை அனுபவித்துக்கொண்டு, ஒன்றோடொன்று கண்ணைக் கண்ணோடும், அங்கத்தை அங்கத்தோடும், புத்தியைப் புத்தியோடும், கலக்கச்செய்தன.
ராஜனே! அவ்விரண்டில் பெண் கபோதம், கருத்தறித்து ஆண் பறவையால் தயை செய்யப் பெற்று, எதெதை விரும்பிற்றோ, அதையெல்லாம் அந்த ஆண் கபோதப் பறவை வருத்தியும், கொண்டு வந்து கொடுத்தது. ஏனென்றால், அவ்வாண் பறவை, காமக் கலவியில் ஆழ்ந்து, இந்திரியங்களை வெல்ல முடியாமல், அவ்வளவு ஸ்னேஹம் உண்டாகப் பெற்றிருந்தது. அவ்விரண்டு பறவைகளும் ஒன்றோடொன்று மிகுந்த விச்வாஸம் (நம்பிக்கை) உண்டாகப் பெற்று, படுத்தல், இருத்தல், திரிதல், நிற்றல், பேசுதல், விளையாடுதல், புசித்தல் முதலிய செயல்களையெல்லாம் காட்டு வரிசைகளில் ஆணும் பெண்ணுமாய்க் கலந்தே நடத்திக் கொண்டிருந்தன.
பெண் கபோதப் பறவை, முதலில் கர்ப்பந்தரித்து, ப்ரஸவ காலம் வரப்பெற்று, கூடின தன் கணவனுடைய அருகாமையிலேயே முட்டைகளை இட்டது.
சிலநாள் செல்லுகையில் அந்த முட்டைகளில் சிந்திக்க முடியாத மஹிமை அமைந்த பகவானுடைய சக்தியாகிய காலத்தினால் அவயவங்கள் (உருப்புக்கள்) ஏற்படப் பெற்றவைகளும், மெதுவான மயிர்களுடையவைகளுமாகிய பறவைக் குட்டிகள் உண்டாயின. குட்டிகளிடத்தில் ப்ரீதியுடைய ஆணும் பெண்ணுமாகிய அந்தக் கபோதப் பறவைகள் இரண்டும், தங்கள் குட்டிகளை ப்ரீதியுடன் வளர்த்துக் கொண்டு வந்தன. மற்றும், அவை அக்குட்டிகளின் குரலைக் கேட்டு, செவிக்கினியவைகளான அந்த சப்தங்களால் ஸந்தோஷம் அடைந்தன. மற்றும், மெதுவான ஸ்பர்சமுடைய அக்குட்டிகளின் சிறைகளாலும், இனிமையான குரல்களாலும், அழகிய சேஷ்டைகளாலும், அவைகள் நன்றாகப் பருத்து வளர்ந்து, மேல் கிளம்பிப் பறப்பதனாலும், தாயும் தந்தையுமாகிய அந்தக் கபோதப் பறவைகள் ஸந்தோஷம் அடைந்தன. ஒன்றுக்கொன்று ஸ்னேஹம் நிறைந்த மனமுடைய அப்பறவைகள், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயையினால் மதிமயங்கி, மன இரக்கத்துடன் குட்டிகளைப் போஷித்துக் (வளர்த்துக்) கொண்டு வந்தன.
குடும்பத்தையுடைய அப்பறவைகள் ஒருகால் குட்டிகளின் ஆஹாரத்திற்காக வெளியில் சென்று, அதைப் பெற விரும்பிக் காடு முழுவதும் நெடுநேரம் திரிந்தன. காட்டில் திரிந்து கொண்டிருந்த ஒரு வேடன், கூண்டின் அருகாமையில் உலாவிக் கொண்டிருந்த அந்தப் புறாக்குட்டிகளைக் கண்டு, வலையைப் பரப்பிப் பிடித்துக் கொண்டான். எப்பொழுதும் குட்டிகளைப் போஷிப்பதில் பேராவலுற்ற ஆணும் பெண்ணுமாகிய அக்கபோதப் பறவைகள், குட்டிகளுக்கு வேண்டிய ஆஹாரத்தை எடுத்துக் கொண்டு, கூண்டிற்கு வந்தன. பெண் கபோதப் பறவை ஒன்றுமறியாத இளம் பருவமுடைய தன் குட்டிகள் வலையில் அகப்பட்டு மிகவும் வருந்தி முறையிடுவதைக் கண்டு, தானும் வருந்தி முறையிட்டுக்கொண்டு, அவைகளை எதிர்த்தோடிற்று.
அப்பெண்பறவை, எப்பொழுதும் ஸ்னேஹபாசத்தினால் கட்டுண்ட மனமுடையதாகையால், தன் குட்டிகள் வலையில் கட்டுண்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், அவைகள் கட்டுண்டிருப்பதைக் கண்டும் பகவானுடைய மாயையினால் நினைவு மாறப்பெற்று (வலையில் நாமும் அகப்பட்டுக் கொள்வோமென்கிற தெளிவு நேரப்பெறாமல்) தானும் வலையில் விழுந்து கட்டுண்டது. அப்பால், ஆண் கபோதப்பறவையும் அவ்விடம் வந்து தன்னைக்காட்டிலும் அன்பிற்கிடமான தன் குட்டிகளும், தன்னோடொத்ததும் தனக்கு அனுரூபமுமாகிய (ஏற்ற) தன் பார்யையும் வலையில் அகப்பட்டு வருந்துவதைக் கண்டு, மிகவும் மனவருத்தமுற்று, புலம்பிற்று.
கபோதம் சொல்லுகிறது:- ஆ! எனக்கு நேரிட்டிருக்கும் அபாயத்தைக் காண்பீர்களாக. நான் சப்தாதி விஷயங்களில் (உலக இன்பங்களில்) ஆழ்ந்த கெடு (கொடிய) மதி (புத்தி) உடையவன். இத்தனை நாள் அவற்றை அனுபவித்தும், திருப்தி உண்டாகப் பெறாதிருக்கின்றேன். ஆனது பற்றியே நான் நினைத்தபடி ப்ரயோஜனம் கைகூடப் பெறாதிருக்கின்றேன். அதற்குக் காரணமென்ன என்றால், நான் சிறிதும் புண்யம் செய்யவில்லை. (என்னுடைய பாபமே, அதற்குக் காரணமாயிற்று). ஆனால், உனக்கு நேரிட்டிருக்கும் அபாயம் யாதெனில், சொல்லுகிறேன்.
தர்மம், அர்த்தம், காமம் என்கிற த்ரி (மூன்று) வர்க்கத்திற்குக் காரணமாகிய எனது இல்லற வாழ்க்கை பாழாய் விட்டது. எனக்கு உரியவளும், அனுகூலையும் (இசைந்தவளும்), கணவனையே தேவதையாக உடையவளுமாகிய என் பார்யை (மனைவி) சூன்யமாயிருக்கின்ற க்ருஹத்தில் என்னைத் துறந்து, நல்லியற்கையுடைய தன் புதல்வர்களுடன் ஸ்வர்க்க லோகம் போகின்றாள். பார்யையும் (மனைவியும்), ப்ரஜைகளும் (குட்டிகளும்) மாளப் (இறக்கப்) பெற்றேன். இனி என் பிழைப்பெல்லாம் துக்கமேயொழிய வேறில்லை. பார்யையும், ப்ரஜைகளுமில்லாமல் சூன்யமாயிருக்கின்ற க்ருஹத்தில், நான் தனியனாகி மனவருத்தத்துடன் எப்படி இருப்பேன்? இவ்வாறு இல்லற வாழ்க்கையை அடியோடு இழந்த நான் ஏதுக்காகப் பிழைத்திருக்க வேண்டும். அந்த ஆசையும்கூட எனக்கு எதுக்காக?
ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- அந்த ஆண் கபோதம், தன் குட்டிகள் வலையில் அகப்பட்டு, ம்ருத்யுவின் (மரணத்தின்) வாயில் விழுந்து, மூர்ச்சித்துத் துடிப்பதைக் கண்டும், அறிவின்மையால் வருந்தி, தானும் அந்த வலையில் விழுந்தது. கொடுந்தன்மையுள்ள வேடன், குடும்பத்தில் விருப்பத்தினால் வலையில் நுழைந்த அந்த ஆண் கபோதப் பறவையையும், அதன் குட்டிகளையும், அதன் பார்யையாகிய (மனைவியாகிற) பெண்கபோதப் பறவையையும் பிடித்துக்கொண்டு, தன் ப்ரயோஜனம் (பயன்) நிறைவேறப் பெற்று வீட்டிற்குப் போனான்.
இவ்வாறு இந்த்ரியங்களை வெல்ல முடியாமல் ஸுக துக்கங்களில் அகப்பட்டு அதனால் பொழுது போக்கும் தன்மையனாகி, குடும்பத்தைப் போஷித்துக் (வளர்த்துக்) கொண்டிருப்பானாயின், மன இரக்கத்திற்கிடமாகி, பிள்ளை, பெண்டிர் முதலிய அனுபந்தங்களோடு (சொந்தங்களோடு) கபோதப் பறவை போல் வருந்துவான். தடையின்றி மோக்ஷத்திற்கு வழிகாட்டுவதாகிய மனுஷ்ய சரீரத்தைப் பெற்றும் எவன் கபோதப் பறவை போல் இல்லற வாழ்க்கையில் ஆழ்ந்திருக்கிறானோ, அவன் ஸன்மார்க்கத்தின் (நல் வழியின்) படியில் ஏறி விழுந்தவனென்று சொல்லுகிறார்கள். விவேகத்திற்கிடமல்லாத திர்யக் (விலங்கு) ஜந்துக்களுக்கு, இத்தகைய நடத்தை யுக்தமே (ஸரியே). ஸமஸ்த புருஷார்த்தங்களையும் ஸாதித்துக் கொடுக்கவல்ல மனுஷ்ய ஜன்மம் பெற்றவர்கள் இவ்வாறு நடப்பது மிகவும் துரத்ருஷ்ட கார்யமே (பாக்யமின்மையே).
ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.