ஞாயிறு, 20 ஜூன், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 314

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – எட்டாவது அத்தியாயம்

(ப்ராஹ்மணன் அஜகரம் (மலைப்பாம்பு) முதலிய ஒன்பது வஸ்துக்களினிடத்தினின்று தெரிந்து கொண்ட விஷயங்களை யதுவுக்குக் கூறுதல்)

ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- ராஜனே! இந்த்ரிய ஸுகங்கள் ப்ராணிகளுக்கு ஸ்வர்க்கத்திலும், நரகத்திலும் ப்ராரப்த கர்மத்தின்படி (பலன் கொடுக்க ஆரம்பித்த முன் வினையின் படி) தானே உண்டாகின்றன. (நரகத்தில் ஸுகம் உண்டோவென்றால், அங்கும் அன்ன பானாதிகளால் விளையும் ஸுகம் சிறிது உள்ளதே. ஸ்வர்க்கத்தில் விளையும் ஸுகமும், அதைப் போன்றதேயன்றி வேறன்று. பூர்வ கர்மத்தின் பலனாக எப்படி துக்கம் உண்டாகின்றதோ, அப்படியே ஸுகமும் தானே உண்டாகின்றது). ஆகையால், ஸுக, துக்கங்களிரண்டும் ப்ராரப்த கர்ம மூலம் (பலன் கொடுக்க ஆரம்பித்த முன் வினையின் படி) என்பதை அறிந்தவன், ஸுகத்திற்காக ப்ரயத்னம் (முயற்சி) செய்யலாகாது. (நாம் விரும்பாதிருப்பினும், துக்கங்கள் தானே உண்டாகின்றன அல்லவா? அவ்வாறே ஸுகமும் தானே உண்டாகக் கூடும். ஆகையால், துக்கத்தைப் போல ஸுகத்தையும் விரும்பலாகாது). 

அஜகரத்தின் (மலைப்பாம்பின்) செயல் போன்ற செயலுடையவனாகி, ஆஹாரம் நல்ல ரஸமுடையதாயினும், விரஸமாயினும் (சுவை அற்றதாயினும்), நிறைவாயினும், குறைவாயினும், தெய்வாதீனமாய்க் கிடைத்ததைப் புசிக்க வேண்டுமன்றி, அதற்காக ப்ரயத்னம் செய்யலாகாது. 

ஆஹாரம் தெய்வாதீனமாய்க் கிடைக்காது போமாயின், அப்பொழுது அஜகரம் போல் ஆஹாரம் கிடைப்பதற்குத் தடையான பாபத்தை அனுபவித்துக் கொண்டு ஆஹாரமில்லாமலே அதற்காக ஒரு முயற்சியும் செய்யாமலே பல நாட்களாயினும், பேசாமல் படுத்திருக்க வேண்டும். 

இந்த்ரிய (புலன்களின்) பலம், மனோ (மனதின்) பலம், தேஹ (உடலின்) பலம் இவை அமைந்த தேஹம் (உடல்) உடையவனாயினும், இஹலோக (இந்த உலக) போகங்களைப் பற்றின முயற்சி எதுவும் செய்யாமல், பேசாமலே படுத்திருக்க வேண்டும். வேலை செய்வதற்குரிய இந்த்ரியங்கள் (புலன்கள்) அமைந்தவனாயினும், நித்ரையின்றி (உறக்கம் இன்றி) தத்வங்களின் (ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய) ஆராய்ச்சியில் மனவூக்கமுற்று, தேஹ ஸுகத்தை மனத்திலும் விரும்பலாகாது. இனி, அதற்காக யத்தனித்தல் (முயற்சி செய்தல்) ஆகாது என்பதைப்பற்றிச் சொல்ல வேண்டுமோ?

முனியாயிருப்பவன், அசையாமல் நிலை நின்ற ஜலமுடைய ஸமுத்ரம் போல், வெளியில் தெளிந்தும், உள்ளே கம்பீரனும் இத்தகையனென்று நிச்சயித்துச் சொல்லவும், இவனென்ன ஒரு மனுஷ்யனாவென்று அலக்ஷயம் செய்யவும் (ஒதுக்கவும்), கலக்கவும் முடியாமல், கரையற்றிருக்க வேண்டும். ஸமுத்ரம் வர்ஷா (மழைக்) காலத்தில் நதிகள் வந்து விழுகையால் வெள்ளம் நிறைந்திருப்பினும், கரையைக் கடந்து போகிறதில்லை; வெயில் காலத்தில் அந்த வெள்ளம் இல்லாமற் போயினும், உலர்ந்து போவதுமில்லை. அவ்வாறே ஸ்ரீமந்நாராயணனையே எல்லாவிதத்திலும் முக்யமாகப்பற்றின முனிவன், காமங்கள் (ஆசைகள்) நிறைந்திருப்பின், ஸந்தோஷம் அடைவதும், அவை இல்லாதிருப்பின் வருத்தமுறுவதும் செய்யலாகாது. 

விட்டில் பூச்சி விளக்கொளியின் வர்ணத்தைப் பார்த்துத் தின்பண்டமென்று மயங்கி, அதில் விழுந்து மாண்டு போவது போல், இந்த்ரியங்களை அடக்கியாளமாட்டாத புருஷன், பகவானுடைய மாயையைப் போல் மதிமயங்கச் செய்யும் தன்மையுள்ள மடந்தையைக் கண்டு, அவளுடைய விலாஸங்களால் (கண்ணோக்கங்களால்) மனம்பறியுண்டு, நரகத்தில் விழுகிறான். 

பகவானுடைய மாயையினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட மடந்தையிடத்திலும், அவளுடைய ஸ்வர்ணமயமான ஆபரணங்களிலும், ஆடைகளிலும், மற்றுமுள்ள பூமாலை, சந்தனம் முதலிய வஸ்துக்களிலும், போக்ய (அனுபவிக்கத்தக்க வஸ்து என்கிற) புத்தியினால் (எண்ணத்தினால்) மனம் கலங்கி, மதிகெட்டு, விவேகமற்று, விட்டில் போல் நாசம் அடைகின்றான். (மடந்தையர், பணம், ஆபரணம், ஆடை முதலிய வஸ்துக்களை ஈச்வரன் தன் மாயையினால் படைத்து வைத்திருக்கிறான். விவேகமில்லாத மூடர்கள், அவைகளைப் போக்யம் (அனுபவிக்கத்தக்க வஸ்து) என்று ப்ரமித்து, விட்டில்பூச்சி விளக்கொளியைக் கண்டு, அதைத் தின்பண்டமென்று ப்ரமித்து, அதில் விழுந்து நசிப்பது போல், அவைகளில் அகப்பட்டு நசித்துப் போகிறார்கள். விவேகமுடையவர், விட்டிலின் தசையைக் (நிலையைக்) கண்டு, மடந்தையர் முதலியவற்றில் போக்ய புத்தி (அனுபவிக்கத்தக்க வஸ்து என்கிற எண்ணம்) கொள்ளலாகாது. 

முனிவன், தன் தேஹம் எவ்வளவு ஆஹாரம் உட்கொண்டால் தரித்திருக்குமோ அவ்வளவு ஆஹாரத்தையே அபேக்ஷிக்க (ஆசைப்பட) வேண்டும். அதிலும், மதுகரம் (தேனீ) புஷ்பங்களைக் கசக்காமல், அவற்றினின்று கொஞ்சம் கொஞ்சமாகத் தேன்களை எடுத்துக் கொள்வது போல, பிறரை வருந்தச் செய்யாமல் பலரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகவே ஆஹாரத்தை அபேக்ஷிக்க (விரும்ப) வேண்டும். (இல்லையாயின், ஒரே தாமரை மலரில் தேன் பருகவேண்டும் என்னும் ஆசையால் பற்றின மதுகரம் (தேனீ), அது மூடிக் கொள்கையில், அதினின்று வெளிவர முடியாமல் கட்டுண்டு வருந்துவது போல், முனிவன் குணங்களில் மனம் தாழ்ந்து, ஒரே க்ருஹத்தில் நெடுநாள் ஆஹாரம் உட்கொள்வானாயின், அங்கு மனப்பற்று நேரப்பெற்று வருந்துவான்). மற்றும், மதுகரம் (தேனீ) சிறிதென்றும், பெரிதென்றும் பாராமல் எல்லாப் புஷ்பங்களினின்றும் ஸாரமான (ரஸமான) தேனை எடுப்பது போல், திறமையுள்ள மனிதன் அற்பம் (சிறியது) என்றும், மஹத் (பெரியது) என்றும் பேதம் (வேற்றுமை) பாராமல், ஸமஸ்த சாஸ்த்ரங்களினின்றும் ஸாரமான பொருளை ஆராய்ந்தறிய வேண்டும். அவ்வாறே பெரியோர்களென்றும், சிறியோர்களென்றும் பாராமல், எல்லோரிடத்தினின்றும் நற்குணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். 

குவித்த கைகளையே அன்னம் புசிக்கும் இலையாகவும், வயிற்றையே அன்னம் வைக்கும் பாத்ரமாகவும் கொண்டு, பிச்சையெடுத்த அன்னத்தை அவ்வப்பொழுது புசிக்க வேண்டுமன்றி, ஸாயங்கால ஆஹாரத்திற்கென்றாவது, நாளை ஆஹாரத்திற்கென்றாவது, தேனீயைப் போல் சேர்த்து வைத்துக் கொள்ளலாகாது. பிச்சையெடுத்துப் புசிப்பவன், ஸாயங்காலத்திற்கு வேண்டுமென்றாவது, நாளைக்கு வேண்டுமென்றாவது, அன்னாதிகளைப் பிச்சையெடுத்துச் சேர்த்து வைத்துக் கொள்வானாயின், தேன்களைச் சேர்த்து வைத்துக்கொள்ளும் தேனீ அந்தத் தேன்களுடன் நசிப்பது போல், அவ்வன்னாதிகளுடன் நசித்துப் போவான். 

மரத்தினால் செய்த பெண் பொம்மையாயினும், அதைப் பாதத்தினாலும் கூட ஸ்பர்சிக்கல் (தொடுதல்) ஆகாது. ஸ்பர்சிப்பானாயின் (தொடுவானாயின்), பள்ளம் வெட்டி அதை மண், புல், கட்டை முதலியவற்றால் மறைத்து, அதன் மேல் வைத்த மரப் பெண்யானையைக் கண்ட யானை, அதன் அங்கத்தைத் தொட முயன்றோடி அப்பள்ளத்தில் விழுந்து கட்டுண்டது போல், அவ்வளவு மாத்ரத்தினால் மதிமயங்கி, ஸம்ஸாரமாகிற பள்ளத்தில் விழுந்து கட்டுண்பான். 

விவேகமுள்ளவன், தனக்கு ம்ருத்யுவைப் (மரணத்தைப்) போன்ற மடந்தையை அணுகலாகாது. அப்படி அணுகுவானாயின், பெண் யானையை அணுகின யானை, தன்னைக் காட்டிலும் மிகுந்த பலமுள்ள வேறு யானைகளால் அடியுண்டு மாள்வது போல, மிகுந்த பலமுடைய வேறு புருஷர்களால் அடியுண்டு மாள்வான். 

தேன்கூடுகளைப் பறிப்பவன், தேனீக்கள் சேர்த்து வைத்த தேனை அந்த ஈக்களைக் கொன்று பறித்துக் கொண்டு போய் புசிப்பது போல், லோபம் (பேராசை) உடையவர்கள் தாங்களும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடாமல், வருந்திச் சேர்த்து வைத்த பணத்தை, உபாயமறிந்த (எடுத்துச் செல்லும் வழி அறிந்த) மற்றொருவன் கொண்டு போய் அனுபவிக்கிறான். அவனும் அதைப் பிறர்க்கும் கொடாமல் தானும் அனுபவிக்காமல் சேர்த்து வைப்பானாயின், அவனைக் காட்டிலும் பலிஷ்டனாகிய (பலசாலியான) மற்றொருவன் அதைப் பறித்துக் கொண்டு போய் புசிப்பான். (ஆகையால் தேனீக்களைப் போல் சேர்த்து வைக்கலாகாது.) 

தேனீக்கள் மிகவும் வருந்திச் சேர்த்து வைத்த தேனைத் தேன் பறிப்பவன் கொண்டு போய்ப் புசிப்பது போல், மிகவும் வருந்திப் பணங்களைச் சேர்த்து வைத்து இல்லற வாழ்க்கையில் விளையும் அன்ன பானாதி ஸுகங்களை அனுபவிக்க விரும்பும் க்ருஹஸ்தர்களுக்கு முன்பு ஸன்யாஸி அவ்வன்ன பானாதி ஸுகத்தை அனுபவிக்கின்றான். (ஆகையால் தேன் பறிப்பவன், தான் ஒரு முயற்சியும் செய்யாமல் தேனைப் புசிப்பது போல், ஸன்யாஸி தான் ஒரு முயற்சியுமின்றியே போஜனத்தைப் பெறுவான்.) 

ஸன்யாஸி, பகவத் விஷயத்தில் இழியாத அவிவேகிகள் (பகவானைப் பற்றிய அறிவற்றவர்கள்) ஆதரிக்கிற க்ஷுத்ரமான (தாழ்ந்த) கானங்களைக் கேட்கலாகாது. இந்நிலைமையை வேடனுடைய கானத்தைக் கேட்டு மதிமயங்கி அகப்படுகிற மிருகத்தினிடத்தினின்று அப்யஸிக்க (அறிய) வேண்டும். (மான், வேடனுடைய கானத்தைக் கேட்டு மயங்கி, அவனால் பிடியுண்டு, நசிப்பது போல, ஸன்னியாஸியும் க்ராம்ய (காம ஆசையைத் தூண்டும்) கீதங்களைக் கேட்பானாயின், மதி மயங்கி அந்த க்ராம்யர்களுடன் (மடந்தையருடன்) கலந்து நசிப்பான். ஆகையால், அதைக் கேட்கலாகாது. 

க்ராம்ய (காம ஆசையைத் தூண்டும்) கானங்களைக் கேட்கலாகாதேயன்றி, பகவத் விஷயமான கானங்களை அவச்யம் கேட்க வேண்டும். பெண் மானுடைய பிள்ளையாகிய ருஷ்யச்ருங்கர் பெண்டிர்கள் நடத்தின க்ராம்யமான கூத்து, வாத்யம், பாட்டு இவைகளைக் கேட்டு, அவற்றில் ருசியுற்று, அப்பெண்டிர்களுக்கு விளையாட்டுக் கருவி போல் வசப்பட்டார். (ஆகையால், அவற்றைச் சிறிதும் பொருள் செய்யலாகாது). மிகவும் வசப்படுத்தி வருந்தச் செய்கிற நாக்கினால், ரஸங்களில் இழுக்கப்பட்டு, மயங்கி மதிகெட்டு, மத்ஸ்யம் (மீன்) மாம்ஸம் தொடுத்த தூண்டு முள்ளைக் கண்டு மாம்ஸத்தைப் புசிக்க முயன்று அதில் பிடியுண்டு நசிப்பது போல், ம்ருத்யுவைப் பெறுவான் (மேன்மேலும் ஸம்ஸார பந்தத்தைப் பெறுவான்). 

இந்திரியங்களை ஜயிக்க விரும்பின விவேகிகள், ஆஹாரங்களைத் துறக்கையாகிற உபாயத்தினால், ரஸனேந்தரியம் (சுவைக்கும் நாக்கு) தவிர மற்ற இந்திரியங்களை எல்லாம் சீக்ரத்தில் ஜயிப்பார்கள். ரஸனேந்தரியத்தை (சுவைக்கும் நாக்கை) மாத்ரம் ஜயிக்க முடியாது. ஜயிக்க முடியாமை மாத்ரமே அல்லாமல், ஆஹாரங்களைத் துறந்திருப்பவனுக்கு, ரஸனேந்தரியம் (சுவைக்கும் நாக்கு) மேன்மேலும் வளர்ந்து வரும். மற்ற இந்திரியங்களை ஜயிக்கினும், ரஸனேந்தரியத்தை (சுவைக்கும் நாக்கை) ஜயிக்காத வரையில், ஜிதேந்தரியனாக (புலன்களை வென்றவனாக) மாட்டான். ரஸனேந்தரியத்தை (சுவைக்கும் நாக்கை) ஜயிப்பானாயின், இந்திரியங்களையெல்லாம் ஜயித்தாற் போலவே.

முன்பு விதேஹ நகரத்தில் பிங்களையென்னும் வேச்யை இருந்தாள். ராஜகுமாரனே! அவளிடத்தினின்று நான் கற்றுக் கொண்டது சிறிதுண்டு. அதைச் சொல்லுகிறேன். கேட்டுணர்வாயாக. 

அவள் ஒரு நாளைக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு, பர புருஷர்களோடு (வேறு ஆண்களோடு) புணரும் தன்மையள். அவள் ஒருகால் ஸங்கேதத்தின்படி (ஏற்பாட்டின்படி) பரபுருஷனுடன் புணர விரும்பி, சிறந்த ஆடையாபரணங்களால் நன்கு அலங்கரித்துக் கொண்டு, தகுந்த ஸமயத்தில் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். 

புருஷ ச்ரேஷ்டனே! மார்க்கத்தில் வரும் புருஷர்களைக் கண்டு, அவர்கள் பணமுடையவர்களாயினும் தன்னோடு ஸம்போகிப்பதற்குப் (புணருவதற்குப்) பணம் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளினும், அவர்கள் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பணத்தைக் காட்டிலும் அதிகமான பணத்தைப் பெற விரும்பி, அவர்களை ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வாறு வந்த புருஷர்களெல்லோரும் புறப்பட்டுப் போகையில், பரபுருஷர்களோடு (வேறு ஆண்களோடு) புணர்ந்து பணம் வாங்கி ஜீவிக்கும் தன்மையுடைய அப்பிங்களை, தன்னுடைய ஏற்பாட்டின்படி நிறையப்பணம் கொடுக்கத் தகுந்த பணக்காரனாகிய மற்றொருவன் எவனேனும் வரக்கூடும் என்னும் கெட்ட எண்ணத்தினால் உறக்கமின்றி வாசலில் நின்று கொண்டு இடையிடையில் உள்ளே போவதும், வெளி வருவதுமாயிருக்கையில், அர்த்தராத்ரம் (நடு இரவு) ஆகிவிட்டது.

பணத்தாசையினால் முகம் உலர்ந்து, மனம் வாடி நிற்கிற அப்பிங்களைக்குப் பெரிய மனவெறுப்பு உண்டாயிற்று. ஆனால், அது அவளுக்கு ஸுகத்தை விளைப்பதும், மேல் விவரிக்கப்படும் சிந்தைக்கு ஹேதுவுமாய் (காரணமுமாய்) இருந்தது. அப்பொழுது மன வெறுப்புற்ற அப்பிங்களை மொழிந்ததை உள்ளபடி சொல்லுகிறேன், கேட்பாயாக. (வெறுப்புற்றவள் சொன்ன வார்த்தையைக் கேட்பதனால் என்ன ப்ரயோஜனம் (பயன்) என்று நினைக்க வேண்டாம்.) 

மனவெறுப்பு என்பது புருஷனுடைய ஆசாபாசங்களுக்குக் கத்தியாயிருக்கும். (கத்தி கயிற்றை அறுப்பதற்குக் கருவியாயிருப்பது போல், புருஷனுடைய ஆசைகளைப் போக்குவதற்கு, மனவெறுப்பே முதன்மையான ஸாதனம்.) ஓ யது மன்னவனே! மனவெறுப்பு உண்டாகப் பெறாதவன், தேஹத்திலும், தேஹானுபந்திகளிடத்திலும் (உடலைத் தொடர்ந்து வருபவர்களிடத்திலும்), ஆசாபந்தத்தைத் துறக்க மாட்டான். ஆகையால், அதை அவச்யம் கேட்க வேண்டும்.)

பிங்களை சொல்லுகிறாள்:- மனத்தை வெல்ல முடியாதிருக்கின்ற எனக்கு, மேன்மேலென அபாரமாய் விளைந்திருக்கும் மோஹத்தைக் (மயக்கத்தைக்) காண்பீர்களாக. அம்மோஹத்தினால் (மயக்கத்தினால்) அன்றோ நான் என்னால் வரிக்கப்படாத காதலனிடத்தினின்று என் விருப்பம் ஈடேற வேண்டுமென்று விரும்புகிறேன். ஆகையால், நான் விவேகமற்றவள். ஸர்வேச்வரன் ஸர்வகாலமும் ஹ்ருதயத்தில் அமைந்திருக்கிறானாகையால், அவன் எப்பொழுதும் ஸமீபத்திலேயே இருக்கின்றான். அவன் எல்லாவற்றிலும் மேலான அன்பிற்கிடமாயிருப்பவன். “அவனிடத்தில் அன்பு உண்டானாலன்றோ, அவன் அன்பிற்கிடமாவான். அதுவே இல்லாதிருக்க, அவன் எப்படி அன்பிற்கிடமாவான்” என்றால், தன் விஷயமான ப்ரீதியைத் தானே விளைக்குந்தன்மையன். “அர்த்த காமாதிகளை விரும்புகிறவளுக்கு, அவனிடத்தில் ப்ரீதியினால் ஆகவேண்டியது என்ன? எனில், அப்படியன்று”. அவன் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்கிற நான்கு புருஷார்த்தங்களையும் (மனிதர்கள் விரும்பி அடையும் அறம், பொருள், இன்பம், வீடு) வேண்டினவர்களுக்குக் கொடுக்கும் திறமையுடையவன். ஆகையால், அர்த்த காமங்களை ஏன் கொடுக்கமாட்டான்? இத்தன்மைகளுடன் என்றும் அவன் அழியாதிருப்பவன். இத்தகையனாகிய அந்தப் பகவானை விட்டு, அவனுக்கு நேர் விபரீதமாகத் துக்கமாயிருக்கின்ற நரனைப் (மனிதனைப்) பணியப் பார்க்கிறேனே.

இந்த நரன் (மனிதன்) தர்ம, காமாதிகளைக் கொடுக்க வல்லவனல்லன்; பின்னையோ என்றால் துக்கம், பயம், மன வியாதி, சோகம், மோஹம் இவைகளைக் கொடுப்பவன். இத்தகையனான நரனைப் (மனிதனைப்) பணிகின்ற நான், ஒன்றும் அறியாத மதி கேடி (புத்தி கெட்டவள்) அன்றோ? நான் “இத்தனை பணம் கொடுத்தால் ஸம்போகிப்பேன்” என்னும் ஏற்பாடு செய்து கொண்டு, அதனால் ஜீவித்து வந்தமை மிகவும் நிந்தைக்கு (பழிக்கு) இடமான செயலன்றோ? இவ்வாறு நிந்தைக்கு (பழிக்கு) இடமான கார்யத்தைச் செய்து, நான் என் மனத்தை வீணாகப் பரிதபிக்கும்படி செய்து கொண்டேன். ஆ! இதென்ன வருத்தம். 

நான் இத்தனை நாள் ஸ்ரீலோலனும் (பெண் ஆசை கொண்டவனும்), பணத்தாசையுடையவனும் “இப்படியும் ஒருவன் உண்டோ?” என்று பெரியோர்களால் சோகிக்கத் தகுந்தவனுமாகிய ஒரு நரனுக்கு (மனிதனுக்கு) என் தேஹத்தை விலைக்குக் கொடுத்து, அவனிடத்தினின்று ஸம்போகத்தையும் (சேர்த்தியையும்), பணத்தையும் விரும்பிக் கொண்டிருந்தேனல்லவா? தேஹமென்பது எலும்புகளால் ஏற்படுத்தப்பட்ட நெடுமோட்டுச்சரம், சரப்பட்டை, தூலம், கைத்துண்டு, வலிச்சல் (மேற்கூரை வேய குறுக்கும் நெடுக்குமாகப்  போடப்படும் மரச்சட்டங்கள்) இவைகளையுடையதும், தோல், மயிர்கள், நகங்கள் இவைகளாகிற மேல் கூரைகளால் மூடப்பட்டதும், பெருக்குடன் கூடிய நவத்வாரங்கள் (ஒன்பது வாசல்கள்) உடையதுமாகிய ஒரு க்ருஹமாயிருக்கின்றது. அதற்குள் மல, மூத்ரங்களே நிறைந்திருக்கின்றன. இத்தகைய மனுஷ்ய சரீரத்தை, என்னைத் தவிர மற்ற எவள் தான் போக்ய (அனுபவிக்கும்) புத்தியுடன் பணிவாள்?

விதேஹ மன்னவர்களுடையதாகிய இந்நகரத்தில் நானொருத்தியே ஒன்றுமறியாத மூடை (முட்டாள்). ஏனென்றால், நான், விரும்பினவர்களுக்குத் தன்னையும் கொடுக்க வல்லவனாகிய அச்சுதனைத் துறந்து, வேறொரு காதலனை விரும்புகிறேனல்லவா? ஆகையால், நான் துர்ப்புத்தி (கெட்ட புத்தி) உடையவள். இந்த அச்சுதன், ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன்; ஆகையால், மிகவும் அன்பிற்கிடமானவன்; ஹிதத்தை விரும்பும் நண்பனும், நாதனுமாயிருப்பவன். அத்தகைய பரமாத்மாவை ஆத்ம ஸமர்ப்பணத்தினால் (தன்னையே அவன் திருவடிகளில் அர்ப்பணிக்கும் சரணாகதியினால்) ஸ்வாதீனப்படுத்திக்கொண்டு, ஸ்ரீமஹாலக்ஷ்மியைப்போல் அவனுடன் விளையாடலுற்றிருக்க வேண்டும்.

உற்பத்தி (தோன்றுதல்), விநாசங்களை (அழிதல்) உடைய சப்தாதி விஷயங்களும், அந்த விஷய ஸுகங்களைக் கொடுக்கிற புருஷர்களும், தேவதைகளும், காலத்தினால் துரத்தப்பட்டவர்கள். அவர்கள், தம்மைப் பணிகின்ற பார்யைக்கு (மனைவிக்கு) என்ன ப்ரியம் செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை. ஆகையால், (இஹத்திலாவது (இந்த உலகத்திலாவது), பரத்திலாவது (வேறு உலகத்திலாவது) அச்சுதனைத் தவிர மற்ற எவனும் பணியத் தகுந்தவனல்லன்). ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீமஹாவிஷ்ணு, ஏதோ ஒரு அஜ்ஞாத (நமக்கே தெரியாமல்) ஸுக்ருதத்தினால் (செய்த நற்செயலினால்) என் விஷயத்தில் அன்புற்றிருக்கின்றான். நிச்சயம். ஏனென்றால், துராசையுடைய (கெட்ட ஆசை உடைய) எனக்கு, ஸுகத்தை விளைக்கவல்ல இத்தகைய மன வெறுப்பு உண்டாயிற்றல்லவா? அவனுடைய அனுக்ரஹமில்லாத பக்ஷத்தில், எனக்கு இந்த மனவெறுப்பு எப்படி உண்டாகும்?

பகவான், இவ்வாறு என் விஷயத்தில் ப்ரீதியுற்றிரானாயின், மனவெறுப்புக்கு ஹேதுக்களான வருத்தங்கள் மந்தபாக்யையாகிய (பாக்கியம் அற்ற) எனக்கு நேரிடமாட்டாது. “மனவெறுப்பு மாத்ரத்தினால் என்ன உபயோகம்?” என்றால், அப்படியன்று. புருஷன், மன வெறுப்பினால் தேஹத்தில் நானென்னும் அபிமானத்தையும் (அஹங்காரத்தையும்), தேஹானுபந்திகளிடத்தில் (உடலோடு தொடர்பு உடையவர்களிடத்தில்) என்னுடையதென்னும் அபிமானத்தையும் (மமகாரத்தையும்) பாசங்களை அறுப்பது போல், அறுத்து மனத்தெளிவை அடைகின்றான். ஆகையால், அத்தகைய பகவான் செய்த உபகாரமான மனவெறுப்பை, சிரஸாவஹித்து (தலையால் ஏற்று) விவேகமற்ற மூடர்களோடு ஸங்கதிகளையும், துச்சமான சப்தாதி விஷயங்களில் விளைகிற துராசைகளையும் (வீண் ஆசைகளையும்) துறந்து, ஈச்வரர்களுக்கும் மேற்பட்ட ஈச்வரனாகிய அந்தப் பகவானையே சரணம் அடைகின்றேன். 

பகவானைப் பணிகையாகிற கார்யத்தில் மனவூக்கமுற்று, பணம் முதலியன கிடைக்காமற் போயினும், அதனால் ஸந்தோஷமின்றி வருந்தும் தன்மையைத் துறந்து, தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஜீவிப்பவளாகி, அந்தராத்மாவும் அளவற்ற அன்பிற்கிடமுமாகிய இந்தப் பகவானோடு கூடவே நான் விளையாடலுற்றிருக்கின்றேன். இது நிச்சயம். 

“தேவதைகள் பலரும் கிடக்க இவனோடு கூடவே விளையாடலுற்றிருக்கிறேனென்று ஏன் நிச்சயிக்க வேண்டும்?” என்றால், சொல்லுகிறேன். 

ஸம்ஸாரமாகிற கிணற்றில் விழுந்து, சப்தாதி விஷயங்களால் விவேகம் பறியுண்டு, காலமாகிற ஸர்ப்பத்தினால் கடியுண்டவனுமாகிய ஆத்மாவை, காப்பதற்குப் பரமபுருஷனைத் தவிர மற்ற எவனும் ஸமர்த்தன் (திறமை உள்ளவன்) ஆகமாட்டான். எப்பொழுது எல்லா விஷயத்தினின்று மனவெறுப்புற்று, ஊக்கம் தவறுதலின்றி இந்த ஜகத்தெல்லாம் காலமாகிற ஸர்ப்பத்தினால் பிடியுண்டிருப்பதென்று நிச்சயித்துத் தெரிந்து கொள்கிறானோ, அப்பொழுது அவ்வாறு தெரிந்துகொண்ட புருஷனுக்கு ரக்ஷகன் (பாதுகாவலன்) பரமாத்மாவே அன்றி மற்றெவனுமல்லன்.

ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- அவ்வேச்யை இவ்வாறு திடமாகப் புத்தியில் நிச்சயித்து, காதலன் விஷயமான அபிலாஷத்தினால் (ஆசையினால்) உண்டான துராசையைத் துறந்து, மனத்தெளிவை ஏற்றுக்கொண்டு, படுக்கையில் படுத்துறங்கினாள். ஆகையால், ஆசையென்பது மிகவும் துக்கம்: ஆசையற்றிருக்கை மிகவும் ஸுகம். இதற்கு த்ருஷ்டாந்தம் (உதாரணம்) இப்பொழுது சொன்ன பிங்களையே. காதலன் விஷயத்தில் ஆசையால் துக்கமுற்றிருந்த பிங்களை, அவ்வாசையைத் துறந்து, உடனே ஸுகமாகத் தூங்கினாள்.

எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக