வியாழன், 17 ஜூன், 2021

குரு பரம்பரை வைபவம் - 11 - கோமடம் மாதவாச்சார்யார்

மணம் புரிய மானிடரை மனதாலும் நினையேன்..!


பெரியாழ்வார், திருப்பல்லாண்டின் சாரமான விஷயத்தை வல்லபதேவ பாண்டியனுக்கு உபதேசித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு புறப்பட்டார். பொற்கிழியிலுள்ள பெரும் பணத்தைக் கொண்டு வடபெருங்கோயிலுடையானுக்கு திருப்பணிகளை செய்வித்தார். தான் ஏற்கனவே செய்து வந்த திருநந்தவன கைங்கர்யத்தை தொடர்ந்து செய்பவராக, தினமும் எம்பெருமானுக்கு மாலை கட்டி சமர்ப்பித்து வந்தார். இச்சமயத்தில் கிருஷ்ணாவதார விஷயங்கள் முழுவதையும் ‘பெரியாழ்வார் திருமொழி’களாகப் பாடி பரவசப்பட்டார். அதிலும் கிருஷ்ணனின் வினோத விளையாட்டுகளை யசோதையின் பாவனையில் ஒன்றுவிடாமல் தனக்குள் அனுபவித்தார். இவ்வாறு, பிரபந்தங்களை வெளியிட்டு, தானே பாடி மகிழ்ந்த பெரியாழ்வார், மதுரைக்கு அருகேயுள்ள திருமாலிருஞ்சோலை என்கிற திவ்ய தேசத்தை அடைந்து அங்கிருந்தே பெருமாளின் திருநாட்டுக்கு எழுந்தருளினார். 


இச்சமயத்தில் ஒரு விளக்கம் தர வேண்டியிருக்கிறது. பெரியாழ்வாரும் ஆண்டாளும் வாழ்ந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூரை தற்சமயம் திருவில்லிபுத்தூர் என வழங்கி வருகின்றனர். 

ஸ்ரீ என்ற தாயாரின் பெயராய், அவள் உறையுமிடமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் விளங்குகிறது. ஒருவர் பெயருக்கு முன்னால் மரியாதைக் குறியீடாக ‘திரு’ சேர்த்துக் கொள்வதுபோல அல்ல இது. 

ஸ்ரீ என்கிற மகாலட்சுமி உறையுமிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். தமிழில் திருமகள் என்றால் மகாலட்சுமிதான்; அப்படியானால் திருமகள்வில்லிப்புத்தூர் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்! அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர் என்று சொல்வது சரியல்ல என்பது என் தாழ்மையான அபிப்ராயம். 


தபஸ்விகளும் அந்தணர்களும் நிறைந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூர் சோலைகளால் சூழ்ந்திருந்தது. வண்டுகள் பூக்களை மொய்த்து, தேனை உறிஞ்சிய களிப்பின் மிகுதியால் ‘ஹரீ....’ என்றே திருமால் நாமத்தை ரீங்காரம் செய்துகொண்டு உல்லாசமாகப் பறந்தன. கழனிகள் தோறும் மீன்கள், ‘கயல் உகள’ என்று சொல்லும்படி செருக்குற்று துள்ளித் துள்ளி விளையாடின. வேத விற்பன்னர்கள் செய்யும் யாகத்திலிருந்து கமழும் புகை விண்ணை நிறைத்தது. அங்கு எழுந்தருளியுள்ள பகவானின் கருணைப் பார்வை எல்லோர் மேலும் விழ, நீண்ட ஆயுளுடன் பக்தர்கள் வாழ்ந்தனர். எங்கு நோக்கிலும் மந்த மாருதம் வீசியது. காலத்தில் நல்ல மழை பொழிந்து ஊரையே செழிப்புள்ளதாக மாற்றியது. சிறுவர், சிறுமியரும் மணலில் கோபுரம் கட்டியும் தெப்பம் கட்டியும் பக்தி விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு சத்சங்கமாக இருந்து பக்தியை ஊட்டி வளர்த்தனர்.


இப்படி வளமையான ஸ்ரீவில்லிபுத்தூரில், பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில், அவருடைய நாற்பவதாவது வயதில், துளசி நந்தவனத்தில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த காலத்தில், ‘நள’ என்கிற வருஷத்தில் (கலி பிறந்து தொண்ணூற்றேழு வருடங்கள் கழிந்தபின்) ஆடி மாதம், 6ம் தேதியன்று வளர்பிறை பூரம் நட்சத்திரம், சதுர்த்தியில், செவ்வாய்க்கிழமையன்று, அர்ய மாலை தேவதையாகக் கொண்ட அழகிய நன்னாளில், பகவானின் மூன்று தேவியரில் ஒருவரான நீளா தேவி அம்சமாக பூமிப் பிராட்டியிடம் ஸ்ரீகோதாதேவி என்கிற ஸ்ரீஆண்டாள் அவதரித்தாள். கண்ணபிரான் அவதரித்த காலத்தில் நீளாதேவியின் அம்சமாகத் தோன்றியவள் ஸ்ரீராதை; தெற்கு தேசத்தில், பாண்டிய நாட்டில், ஸ்ரீ கோதை.


மிதிலா தேசத்து ராஜாவாகிய ஜனக மகாராஜனுக்கு குழந்தைப்பேறு இல்லாத காலத்தில் பூமியில் தோன்றிய சீதையைப்போல, ஸ்ரீவில்லிபுத்தூரில், திருநந்தவனத்தில் தோன்றியவளான இக்குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டி ‘‘ஒரு மகள் தன்னையுடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள்போல வளர்த்தேன்’’ என்று தாமே அருளிச் செய்தபடி அருமையாக சீராட்டிப் பாராட்டி ஞானத்தையும் ஊட்டி வளர்த்தார், பெரியாழ்வார். கோதையும் எம்பெருமானிடத்திலே பெருங்காதல் கொண்டு, பிஞ்சிலேயே பக்தியில் பழுத்தவளாய் இருந்தாள். பெருமானது பெருமைகளையே எப்பொழுதும் நினைத்தும் துதித்தும் கிடந்தாள். 


தினந்தோறும் விஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு சாத்துவதற்காக கட்டி வைத்த திருமாலையை, அவரில்லாத சமயம் பார்த்து, தன்குழலிலே தரித்துக்கொண்டு சிறந்த ஆடை ஆபரணங்களையும் அணிந்துகொண்டு, ‘‘அப்பெருமானுக்கு தான் பொருத்தமானவள்தானா?’’ என்று தன் அழகைக் கண்ணாடியிலே கண்டு பெரியாழ்வார் வருவதற்கு முன்பே மலர் மாலையைக் களைந்து முன்போலவே, பூக்கூடையில் கசங்காமல் வைத்து வந்தாள், ஆண்டாள்.


பெரியாழ்வாரும், இக்காரியத்தை உணராமல், அந்த மாலையைக் கொண்டுபோய் பெருமாளுக்கு சாத்தி வர, பெருமாளும் மிக உகப்புடன் ஏற்றுக் கொண்டிருந்தார். ஒருநாள் வெளியே சென்றிருந்த ஆழ்வார், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாலேயே தம் இல்லத்திற்குத் திரும்பியபோது, கோதை பூமாலை சூடியிருப்பதைப் பார்த்து, திடுக்கிட்டு, கோபம் கொண்டார். ‘‘பெண்ணே! நீ செய்த இக்காரியம் எம்பெருமானுக்கு அபசாரமாகாதோ? இனி இவ்வாறு செய்யத் துணியாதே’’ என்று நங்கைக்கு நற்புத்தி சொன்னார். அன்று பெருமாளுக்கு மாலை சாற்றாமல் இடையூறு நேர்ந்ததற்கு மிகவும் மனம் வருந்தியிருந்தார். அன்றிரவு, பெருமாள் ஆழ்வாருடைய கனவிலே தோன்றி, ‘‘இன்று நீர் நமக்கு மாலை கொண்டு சாற்றாததேனோ?’’ என வினவ, ஆழ்வாரும் நடந்ததைக் கூறி, கண்கலங்கினார். அதுகேட்டு ப்பெருமான், ‘‘இனி தினமும் அவள் சூடிக் களைந்த மாலையையே நமக்கு கொண்டு வரக் கடவீர்’’ என்று அருளிச் செய்தான்.


காலையில் கண்விழித்த பெரியாழ்வார், நாம் நந்தவனத்தில் பெற்ற இப்பெண்பிள்ளை, பகவானுடைய தேவிகளில் ஒருத்தியின் அவதாரமே என்று தெளிந்தார். இப்படி அவதார காரணமாக வந்து தம்மை ஆண்டதால் ஆண்டாள் எனவும் திருநாமம் சாற்றினார். மேலும், எம்பெருமானுக்குரிய மலர் மாலையை ஆண்டாள் சூடிக்கொண்டுவிட்டு அவனுக்கு சாற்றியதின் காரணமாக ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்றும் திருநாமமிட்டு அழைத்து வந்தார்.


பெரியாழ்வார் வளர்த்து, உச்சி முகர்ந்த பெண் பிள்ளையாகிற ஆண்டாளின், ஞானம், பக்தி எல்லாம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தன. மணப்பருவம் எய்தினாள். ஆனால், ‘‘மானிடவர்க்குப் பேச்சிப்படில் வாழகில்லேன்’’ என்ற மனவுறுதியுடன் இருந்தாள். அதாவது தன்னைச் சாதாரண மனிதரோடு கல்யாணம் செய்து வைக்கக் கூடாது. மணம் என்று வந்தால் அது எம்பெருமானோடு தான் என்ற மன உறுதியோடு வாழ்ந்து வந்தாள். இத்தருணத்தில், வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்குச் சென்று தன் ஆற்றாமையை சொல்லி அழுதாள். பெருமாள் பேசாதிருந்தான்.

இந்திரன் போன்றவர்களுக்காக அன்றொரு சமயம் உலகளந்ததன் களைப்போ, அன்றி, ராமாவதாரத்தில் சீதையின் பொருட்டு தண்டகாரண்யத்தில் நீண்டு நடந்து சென்ற அயர்ச்சியோ, அந்தச் சோர்வு நீங்கதான் இங்கு வந்து சயனித்திருக்கிறானோ, அதனால்தான் பதிலிறுக்கவில்லையோ என்றும் எண்ணினாள். அவனை ஆரத் தழுவினாள். அப்படியும் முகம் கொடாதிருக்கவே, விசிறி, சாமரம் வீசி கைங்கர்யம் செய்தாள். இப்போதும் பகவான் எழவில்லை. இப்படி முகம் கொடாமல் இருப்பது களைப்பினாலல்ல. நம்மிடம் ஏதோ கோபம்; அதுதான் பேசாது கிடக்கிறான் என எண்ணினாள் ஆண்டாள்.


இப்படி கிடக்கும் இவனை, திருவாய்ப்பாடியில், ஆய்ச்சியர்களான கோபிகைகள் அனுபவித்திருக்கிறார்களே என எண்ணினாள். ஆனால், அது துவாபர யுகத்திலன்றோ நடந்தது; அதை எப்படிப் பார்ப்பது? காலமோ துவாபர யுகம், நிகழ்ந்ததோ நாட்டின் வட பகுதியில் உள்ள பிருந்தாவனம், கோகுலம், கோவர்த்தனம் ஆகிய இடங்களில். அங்கெல்லாம் போவதற்கு பலமுமில்லை. பண வசதியும் இல்லையே என்று மிகவும் வருத்தமுற்றாள்.


கண்ணபிரான் பிருந்தாவனத்தில் உலாவிய அடிச்சுவடும் அவனும் கோபிகைகளும் திளைத்த யமுனையும், கண்ணபிரான் சுண்டு விரலால் தாங்கி நின்ற கோவர்த்தன மலையும் இருக்கும் பட்சத்தில் அவற்றை கண்ணாரக் கண்டு களிப்பெய்தி உயிர் வாழலாமே என்று எண்ணினாள். அப்போது ஒரு எண்ணம் உதயமாயிற்று.


ராசக்ரீடை செய்யும் சமயத்தில் கண்ணன் கோபிகைகள் மத்தியிலிருந்து திடீரென்று மறைந்ததும் கவலைகொண்ட கோபிகைகள், பிரிவாற்றமையாலே, தங்களையே கண்ணனாக பாவித்துக்கொண்டு உயிர் தரித்தனர். ‘‘நான்தான் கிருஷ்ணன்’’ என்றாள் ஒரு கோபிகை. மற்றொருத்தி, ‘‘நான்தான் காளியன் என்ற விஷ பாம்பு, என் மீது ஏறி நர்த்தனமாடு’’ என்றாள். இன்னொருத்தியோ, ‘‘இதோ பார் பூதனை என்ற கொடிய அரக்கியை கொன்ற கண்ணன் நான்தான்’’ என்றாள். இப்படி உன்மத்த நிலையை கோபிகைகள் அடைந்தனர். இதைபோலவே நாமும் செய்யலாமே என எண்ணிய கோதை ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாக மாற்றினால் என்ன என்று யோசிக்கத் தொடங்கினாள். 


நன்றி - தினகரன் ஆன்மிகம் ஜனவரி 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக