ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – ஆறாவது அத்தியாயம்
(ப்ரஹ்மாதி தேவதைகள் வந்து பரமபதத்திற்கு எழுந்தருளலாம் என்று விண்ணப்பம் செய்ய, உத்தவன் ஸ்ரீகிருஷ்ணனைப் பிரியமுடியாமல் வருந்தி, விண்ணப்பம் செய்தல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, ப்ரஹ்மதேவன் தவப்பெருக்கினால் திகழ்கின்ற மரீசி முதலிய ப்ரஜாபதிகளாலும் (ப்ரஹ்மவால் உண்டாக்கப்பட்ட ப்ரபுக்கள்), ஸனகர், ஸனந்தனர் முதலிய புதல்வர்களாலும் சூழப்பட்டு, த்வாரகைக்கு வந்தான். பகவானுடைய அனுக்ரஹத்தினால், பூத பவ்யங்களுக்கு (நடந்தவைகளுக்கும், நடக்கப் போகிறவைகளுக்கும்) ப்ரபுவாயிருக்கையாகிற அதிகாரம் பெற்ற ருத்ரனும், பூத கணங்களால் சூழப்பட்டு, த்வாரகைக்கு வந்தான். மற்றும், தேவதைகளோடு கூட மஹானுபாவனான தேவேந்த்ரனும், த்வாதச (12) ஆதித்யர்களும், அஷ்ட (8) வசுக்களும், அச்வினி தேவதைகளும் (தேவ வைத்யர்கள்), அங்கிரஸ ரிஷிகளும், ஏகாதச (11) ருத்ரர்களும், விச்வேதேவர்களும், ஸத்யர்களும், கந்தர்வர்களும், அப்ஸர ஸ்த்ரீகளும், நாகர்களும், ஸித்தர்களும், சாரணர்களும், குஹ்யகர்களும், ரிஷிகளும், பித்ருக்களும், வித்யாதரர்களும், கின்னரர்களும் ஆகிய அனைவரும் ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்க்க விரும்பி த்வாரகைக்கு வந்தார்கள்.
மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், எந்த உருவத்துடன் கூடி ஜகத்திற்கெல்லாம் மனோஹரனாகி (மனதைக் கவர்ந்து இழுப்பவனாய்) ஸமஸ்த லோகங்களிலுமுள்ள பாபங்களை எல்லாம் போக்கவல்ல தன் புகழை எங்கும் பரவச் செய்தானோ, அத்தகைய உருவத்துடன் கூடி, எல்லா ஸம்ருத்திகளும் (வளமும்) நிறைந்து விளங்குகின்ற அந்த த்வாரகையில், அற்புதமான காட்சியுடன் வீற்றிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனை ப்ரஹ்மாதி தேவதைகள் அனைவரும் எவ்வளவு காணிலும் போதுமென்னும் த்ருப்தி உண்டாகப் பெறாத கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் ஸ்வர்க்கத்தின் உத்யானத்தில் (தோட்டத்தில்) உண்டான புஷ்பங்களை அந்த ஸ்ரீக்ருஷ்ணன் மேல் பெய்து, அவனை மறைத்து, ஆச்சர்யமான பதங்களும் (சொற்களும்), பொருள்களும் அமைந்த உரைகளால் இவ்வாறு துதித்தார்கள்.
தேவதைகள் சொல்லுகிறார்கள்:- நாதனே! நாங்கள் புத்தி, இந்திரியங்கள், ப்ராணன்கள், மனம், வாக்கு ஆகிய இவற்றுடன் உன் பாதார விந்தத்தை வணங்குகிறோம். கர்மமாகிற (புண்ய, பாபம் என்கிற) உறுதியான பாசத்தினின்று (கட்டிலிருந்து) விடுபட விரும்புகிறவர்கள், பக்தியுடன் தங்கள் ஹ்ருதய கமலத்தினிடையில் உன் பாதார விந்தத்தை த்யானிக்கிறார்களல்லவா? (அத்தகைய உன் பாதார விந்தத்தை நாங்கள் இப்பொழுது மாம்ஸ (ஊனக்) கண்களால் ஸாக்ஷாத்கரித்து (நேராகப் பார்த்து), மூன்று கரணங்களாலும் (மனது, சொல், உடலால்) வணங்கினோம். சேரக் கூடாத இது எங்களுக்குச் சேர்ந்தது; எங்கள் பாக்யமே).
பிறரால் இத்தகையதென்று சிந்திக்கவும் முடியாத ஸ்தூல (பெயர், உருவங்களுடன் கூடிய, கண்ணுக்குப் புலப்படக்கூடிய) சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ஜகத்தை (உலகை) எல்லாம் நீ ஸத்வாதி (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற) குண மாயையினால் (ஆச்சர்ய சக்தியால்) உன்னிடத்தில் படைப்பதும், காப்பதும், அழிப்பதும் செய்கின்றாய். அவ்வாறு செய்யும் பொழுது, ஸத்வாதி குணங்களை அதிஷ்டானம் செய்து கொண்டு (நியமித்துக் கொண்டு) நடத்துகின்றாயன்றி ப்ராக்ருதர்களைப் (ஸாதாரண மனிதர்களைப்) போல் அக்குணங்களுக்கு உட்பட்டு நடத்துகிறதில்லை. ஒருவராலும் பரிபவிக்க (அவமதிக்க) முடியாத ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குனங்களை) உடையவனாகையால், அஜிதனென்னும் பெயர் பெற்றவனே! நீ இந்த ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹார (அழித்தல்) ரூபமான கார்யங்களைச் செய்யினும், அவற்றால் நீ தீண்டப்படுகிறதில்லை. (அச்செயல்கள் உனக்கு லீலா (விளையாட்டு) ரூபங்களேயன்றிப் புண்ய, பாப, ரூப கர்மங்கள் அன்றாகையால், கர்மவச்யத்வமாவது (புண்ய, பாப வினைகட்கு உட்படுதல்), அதனால் வருகிற துக்கங்களுக்கு இடமாயிருக்கையாவது உனக்குக் கிடையாது).
ஏனென்றால், நீ உனக்கு அஸாதாரணமாயிருப்பதும், அளவற்றதுமாகிய ஆநந்தத்தில் ஆழ்ந்திருப்பவன்; ஜீவர்களைப் போல விஷய ஸுகங்களில் தாழ்ந்தவனல்லை. சப்தாதி விஷய ஸுகங்களில் கால் தாழ்ந்தவர்கள், அந்த ஸுகத்திற்காகச் செய்யும் கர்மங்கள், புண்ய, பாப ரூபங்களாயிருக்குமாகையால், அவர்கள் அவற்றைப் பற்றின ஸுக, துக்காதிகளுக்கு இடமாகிறார்கள். நீ அத்தகையனல்லையாகையால், உனக்குக் கர்ம வச்யத்வமாவது (புண்ய, பாப வினைகட்கு உட்படுதலாவது), அதைப் பற்றின ஸுக, துக்கங்களாவது கிடையாது.
உன்னை உபாஸிக்கிறவர்களுக்கும்கூட கர்ம வச்யத்வாதி (புண்ய, பாப வினைகட்கு உட்பட்ட) ஹேய (தீயவற்றின்) ஸம்பந்தம் (தொடர்பு) உண்டாகிறதில்லை. உனக்கு அது எவ்வாறு உண்டாகும்? (நீ ஹேயங்கள் (தீமைகள்) தீண்டப் பெறாதிருக்கை மாத்ரமேயன்றி, உன்னைப் பணிகிறவர்களுக்குங்கூட அத்தன்மையை விளைக்கின்றாய்).
துதிக்கத்தகுந்தவனே! ஸத்வ குணம் நிறைந்த மனமுடையவர்களுக்கு நாயகனே! சப்தாதி விஷயங்களில் தாழ்ந்து அதனால் துஷ்டமான மனமுடையவர்கள், வேதமோதுதல், அதன் பொருளைக் கேட்டுணர்தல், அதனால் உண்டான அறிவு, உபவாஸம் முதலிய தவம், வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டிக்கை ஆகிய இவை அமைந்திருப்பினும், உன் கதைகளைக் கேட்கையால் வளர்ந்திருக்கின்ற உன் புகழிலுண்டான ப்ரீதியினால் எவ்வளவு சுத்தி (தூய்மை, புனிதத்தன்மை) உண்டாகுமோ, அவ்வளவு சுத்தி (தூய்மை, புனிதத்தன்மை) அவர்களுக்கு அவைகளால் உண்டாகிறதில்லை. (உன் கதையைக் கேட்ட மாத்ரத்தினால் பாபிஷ்டர்களுக்கும் கூட மிகுந்த சுத்தி (தூய்மை, புனிதத்தன்மை) உண்டாகிறதென்றால், உன்னை உபாஸிக்கிறவர்களுக்குப் பாபங்களெல்லாம் தொலைந்து, சுத்தி (தூய்மை, புனிதத்தன்மை) உண்டாகுமென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?)
நாதா! உன் பாதார விந்தம், எங்கள் பாப வாஸனைகளுக்குத் தூமகேதுவைப் (வால் நக்ஷத்ரம்) போன்றதாகி அவற்றை அழிக்குமாக. (வால் நக்ஷத்ரம் ப்ராணிகளுக்கு தீமையை விளைக்குமல்லவா? அவ்வாறே உன் பாதமாகிற வால் நக்ஷத்ரம் எங்கள் பாப வாஸனைகளுக்கு தீமையை விளைத்து, அவை அழியும்படி செய்யட்டும்).
முனிவர்கள் தங்களுக்கு ஸம்ஸார (பிறப்பு, இறப்பு மாறி மாறி வரும் இந்த உலகியல் தொடர்பாகிற) பயம் நீங்குகையாகிற க்ஷேமம் உண்டாகும் பொருட்டு பக்தியின் வெள்ளத்தினால் நனைந்த மனத்துடன் அத்தகைய உன் பாதத்தை த்யானிக்கின்றார்கள். ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை உணர்ந்து, பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களில் விதித்த பகவத் ஆராதன க்ரமங்களை அறிந்த பெரியோர்கள், நச்வரமான (அழியக்கூடிய) ஸ்வர்க்காதி லோகங்களைக் கடந்து, நித்ய விபூதியான பரமபதத்தை அடைந்து, அங்கு உன்னோடொத்த ஐச்வர்யத்தை அனுபவிக்க விரும்பி, வாஸுதேவாதி (வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன் என்கிற) வ்யூஹ உபாஸனத்தில் (த்யானத்தில்) இழிந்து, மூன்று ஸந்த்யைகளிலும் (காலை, நண்பகல், மாலை) உன் பாதங்களை ஆராதிக்கின்றார்களல்லவா? (அத்தகைய உன் பாதார விந்தம், எங்கள் நமஸ்காரங்களுக்கு விஷயமாகி எங்கள் அசுபங்களைப் போக்குமாக.)
மற்றும், ஜகதீசனே! வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களை அனுஷ்டிப்பதிலேயே நிலை நின்ற பரிசுத்தமான கைகளையுடைய வைதிகர்கள் (வேதத்தில் விதித்தபடி நடத்தை உள்ளவர்கள்), வேதங்களில் சொல்லப்பட்ட விதியின்படி சரு (அக்னியில் அர்ப்பணிக்கப்படும் அன்னம் போன்ற ஹோம த்ரவ்யம்), புரோடாசம் (அக்னியில் அர்ப்பணிக்கப்படும் மாவினால் ஆன பண்டம்) முதலிய ஹவிஸ்ஸை (யாகத்தில் தேவதைகளுக்காக அக்னியில் கொடுக்கப்படும் பொருளை) ஏந்திக் கொண்டு, ஆஹவனீயம் (இல்லறத்தில் இருப்பவன் வேதத்தில் விதிக்கப்பட்ட ஹோமம் முதலிய அக்னி கார்யங்களைச் செய்வதற்கு மூன்று அக்னிகளை எப்பொழுதும் இல்லத்தில் வைத்து வளர்த்து பூஜிக்க வேண்டும்.)
1. கார்ஹபத்ய அக்னி என்பது மேற்கு திசையில் இருக்கும் அக்னி; ஹோமம் செய்யும் போது மனைவி கார்ஹபத்ய அக்னியின் அருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்;
2. ஆஹவனீய அக்னி என்பது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட, ப்ரதான ஹோமம் செய்வதற்கான, கிழக்கு திசையில் இருக்கும் அக்னி;
3. தக்ஷிணாக்னி என்பது தெற்கு திசையில் இருக்கும் அக்னி;
முதலிய யாக அக்னியில் எதை த்யானிக்கிறார்களோ, மற்றும், ஆத்ம மாயையை அறிய விரும்பின ஸாங்க்ய யோக நிஷ்டர்களும் (ஞான யோக, கர்ம யோகங்களில் நிலை நின்றவர்களும்), பகவானிடத்தில் பக்தியுடையவர்களில் சிறந்த பரமை காந்திகளும், ஆத்ம த்யான ஸமயங்களில் எதைப் பெற விரும்புகிறார்களோ, அத்தகைய உன் பாதார விந்தம் எங்கள் பாப வாஸனையைப் போக்குமாக.
ப்ரபூ! ஸ்ரீமஹாலக்ஷ்மி உன் மார்பில் நித்ய வாஸம் செய்பவளாயினும், உன் பாதார விந்தங்களில் தொங்குகின்ற வனமாலையுடன் சக்களத்திப் (கணவனுடைய மற்றொரு மனைவி என்கிற) பொறாமையுடையவளாகி உறைந்து கொண்டு, அப்பாதார விந்தங்களில் வந்து விழுகின்றாள்; (உன் பாதங்கள் மிகவும் போக்யங்களாய் (இனிமையாய்) இருக்கின்றமையால், உன் திருமார்பை விட்டகன்று உன் திருவடிகளைப் பணிகின்றாள்) மற்றும், இந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி கொண்டு வந்து ஸமர்ப்பிக்கிற பூஜா த்ரவ்யங்களை எது பெற்றுக் கொள்கின்றதோ, அத்தகைய உன் பாதார விந்தம் எப்பொழுதும் எங்கள் பாப வாஸனைகளுக்குத் தூமகேதுவாய் (வால்நக்ஷத்ரமாய்) இருக்குமாக.
உன் பாதங்கள் மூன்று அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்தன. அம்மூன்றடிகளில் இரண்டாமடியிடும் பொழுது, ஸத்யலோகம் சென்ற உன் பாதம் உயரத் தூக்கி நிறுத்தப்பட்ட விஜய த்வஜம் (வெற்றிக்கொடி) போன்று மூன்று வகையாகப் பிரிந்து விழுகின்ற கங்கையாகிற பதாகையை (விருதுக்கொடியை) உடையதாயிருந்தது. (கங்கை ஜகத்தை எல்லாம் புனிதம் செய்யவல்லது. அத்தகைய கங்கைக்கும் உத்பத்தி ஸ்தானமாகிய உன் பாதார விந்தத்தின் சுத்தியைப் (புனிதத்தைப்) பற்றிச் சொல்ல வேண்டுமோ?)
மற்றும், உன் பாதார விந்தம் அப்பொழுது அஸுர ஸேனைகளுக்கு பயத்தையும், தேவ ஸேனைகளுக்கு அபயத்தையும் (பயமின்மையையும்) விளைத்தது. மற்றும், அப்பாதார விந்தம் ஸாதுக்களுக்கு (நல்லோருக்கு) ஸுகத்தையும், அஸாதுக்களுக்கு (தீயோருக்கு) துக்கத்தையும் விளைக்கும் தன்மையது. பகவானே! அத்தகைய உன் பாதார விந்தம் பணிகின்ற எங்கள் பாபத்தைப் போக்குமாக.
ப்ரஹ்மதேவன் முதலிய ப்ராணிகள் அனைவரும் ஒருவர்க்கொருவர் சிலர் ப்ரபுக்களும், சிலர் அவர்கள் கீழ் அடங்கி நடப்பவர்களுமாயிருப்பினும், மூக்குக் குத்திக் கயிறு கோர்க்கப்பெற்ற எருதுகள் போல, உனக்கு அதீனமாய் (உட்பட்டு) இருக்கின்றார்கள். நீ, ப்ரஹ்மாதிகளையும் தன் வசமாக்கி நடத்தும் திறமை உள்ள காலத்தையும் சரீரமாகக் கொண்டு, அதற்கும் நியாமகனாய் (நியமிப்பவனாய்) இருப்பவன்; ப்ரக்ருதி (அசேதனமான மூலப்ரக்ருதி), புருஷர்களைக் (ஜீவாத்மாக்களைக்) காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்); ஸர்வேச்வரன்; புருஷோத்தமன். இத்தகையனான உன்னுடைய பாதார விந்தம் எங்களுக்கு ஸுகத்தை விளைக்குமாக.
ஸ்தூல சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ப்ரபஞ்சத்தினுடைய (உலகினுடைய) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) நீயே காரணன். ப்ரக்ருதி (அசேதனமான மூலப்ரக்ருதி); நித்யர் (ஸம்ஸார ஸம்பந்தமே இல்லாத, ஸ்ரீவைகுண்டத்தில் பகவானுக்கு நித்ய கைங்கர்யம் செய்பவர்) என்றும், முக்தர் (ஸம்ஸாரத்தின் துன்பத்திலிருந்து விடுபட விழைந்து, ஸதாசார்யன் மூலம் பகவானான ஸ்ரீமந்நாராயணனின் திருவடித் தாமரைகளில் சரணாகதி செய்து, மீண்டும் பிறவி அற்று, ஸ்ரீவைகுண்டம் அடைந்து, பகவானுக்குக் கைங்கர்யம் செய்பவர்) என்றும், பத்தர் (ஸம்ஸாரத்தில் உழல்பவர்) என்றும் மூன்று வகைப்பட்ட சேதனர்கள் (ஜீவாத்மாக்கள்); ப்ரக்ருதியின் பரிணாமங்களான மஹத்து முதலிய தத்வங்கள் ஆகிய இவை எல்லாவற்றிலும் நீ சிறந்தவனாகையால், புருஷோத்தமனென்று கூறப்படுகின்றாய்.
ஒன்றோடொன்று ஸமமாயிருக்கை, ஒன்றை விட ஒன்று குறைந்திருக்கை, ஒன்றைவிட ஒன்று அதிகமாயிருக்கை ஆகிய இவ்வகைகளால் மூன்று வகைப்பட்ட அஹோராத்ரங்களையும் (பகல், இரவுகளையும்), மூன்று சாதுர்மாஸ்யங்களையும் (ஒரு வருடத்தில் மூன்று நான்கு மாதங்கள்) நாபியாகவுடையதும், இந்த ஜகத்தை எல்லாம் பாழ்செய்ய முயன்றிருப்பதும், ஒருவராலும் தடுக்க முடியாத கம்பீரமான வேகமுடையதும், வார, பக்ஷ, மாஸ, ஸம்வத்ஸராதி ரூபமுமான காலத்திற்கும் நீயே நியாமகனாகையால் (நியமிப்பவனாகையால்), உன்னைக் கால ஸ்வரூபனென்று சொல்லுகிறார்கள்.
ஸங்கல்ப மாத்ரத்தினால் ஜகத்தையெல்லாம் படைக்கையாகிற வீர்யம் தடைபடாதிருக்கப் பெற்ற அநிருத்தனென்னும் புருஷன் வ்யூஹங்களுக்கெல்லாம் மூல பூதனாகிய உன்னிடத்தினின்று ஆவிர்பவித்து, இந்த ஜகத்தையெல்லாம் படைக்கும் பொருட்டுப் புருஷன் ஸ்த்ரீயிடத்தில் கர்ப்பத்தை ஆதானம் செய்வது (வைப்பது) போல எந்த ப்ரக்ருதியைக் கொண்டு மஹத்தத்வமென்னும் வீர்யத்தை ஆதானம் செய்தானோ (வைத்தானோ), அந்தப் புருஷ ஸ்வரூபமான அந்த மஹத் தத்வம் அந்த ப்ரக்ருதியினால் தொடரப்பெற்றுத் (தன் காரணமான ப்ரக்ருதியைப் போல் தானும் ஸத்வாதி குணங்களோடு கூடியதாகி) ஸ்வர்ணமயமாயிருப்பதும் வெளியில் ஜலம் (நீர்) முதலிய ஏழு ஆவரணங்களோடு (சுற்று மதிள்) கூடியதுமாகிய அண்டகோசத்தைப் (அண்டத்தைப்) படைத்தது.
(உன்னுடைய வ்யூஹ அவதாரமான அநிருத்த புருஷன், தன் சரீரமான ப்ரக்ருதியிடத்தினின்று மஹத் தத்வத்தையும் அதினின்று அஹங்கார, தன்மாத்ராதிகளையும் (மஹாபூதங்களின் ஸூக்ஷ்மமான நிலை) அவற்றினின்று ஏழு ஆவரணங்களோடு (சுற்று மதிள்களோடு) கூடிய ப்ரஹ்மாண்டத்தையும் படைத்தான்).
இவ்வாறு ஜகத்தைப் படைத்த அநிருத்த ஸ்வரூபனான நீயே ஜங்கம (அசைபவை), ஸ்தாவர (அசையாதவை) ரூபமான இந்த ஜகத்திற்கெல்லாம் ப்ரபு. (சேதனா சேதனங்களில் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களில்) புகுந்து நியமித்துக்கொண்டு, மனுக்களாகவும், மன்வந்தரங்களில் விஷ்ணு முதலிய அவதாரங்களாகவும் தோன்றி, ப்ராணிகளின் இஷ்டங்களை (விருப்பங்களை) நிறைவேற்றிக் கொடுத்து, அனிஷ்டங்களைப் (தீமைகளைப்) போக்கி இவ்வாறு ஸ்திதியை (காக்கும் செயலை) நடத்துகிறவன் நீயே).
ஸமஸ்த வஸ்துக்களிலும் உள்ளே புகுந்து நியமித்துக் கொண்டு, அந்தர்யாமியாயிருக்கின்ற நீ ஜீவாத்மாக்களின் கர்மங்களை அனுஸரித்த உன் ஸங்கல்பத்தினால் ஏற்பட்டதும், ஸத்வாதி குணங்களின் பரிணாமமுமாகிய இந்திரியங்களின் வியாபாரத்தினால் நேர்ந்த சப்தாதி விஷயங்களை ஜீவன் மூலமாய் அனுபவித்துக் கொண்டிருப்பினும், அதனால் விளையக் கூடிய புண்ய பாபங்களால் ஸ்பர்சிக்கப்படாதவனாகவே (தீண்டப்படாதவனாகவே) விளங்குகின்றாய்.
நீ இந்த்ரியங்களுக்கு ப்ரபு; (இந்த்ரியங்களுக்கு உட்படாமல் அவற்றைத் தன் வசமாக்கி நடத்தும் தன்மையன்). உன்னை ஒழிந்த மற்ற ஜீவாத்மாக்கள் அனைவரும் யோகிகளாயிருப்பினும், சப்தாதி விஷயங்களைத் துறந்திருப்பினும், அவற்றினின்று பயப்படுகின்றார்கள் (விஷய வாஸனா மாத்ரத்தினால் (முன் வினைகளின் ஆழ்ந்த பதிவுகளால்) கட்டுண்டு வருந்துகிறார்கள்.) (நீ இந்திரியங்களை அடக்கியாள்பவனேயன்றி அவற்றிற்கு உட்பட்டவனல்லையென்பது இந்த அவதார வ்ருத்தாந்தங்களாலேயே (கதைகளாலேயே) ஸ்பஷ்டமாய் (தெளிவாக) வெளியாகின்றதல்லவா!)
காம தந்த்ரங்களில் (காதல் லீலைகளில்) வல்லவர்களான உன் பத்னிகள் பதினாறாயிரம் பேர்களும் புன்னகையினால் திகழ்கின்ற கடைக் கண்ணோக்கங்களை விடுத்து, அவற்றால் தங்கள் மனக்கருத்தை வெளியிட்டு, அக்கருத்தினால் அழகாயிருக்கின்ற புருவ வட்டங்களால் தூண்டப்பட்ட கலவி (சேர்க்கை) பேச்சுக்களாகிற மன்மதனுடைய மோஹனமான பாணங்களாலும், மற்றும் பலவகைப்பட்ட காம (காதல்) கலைகளாலும் உன் மனத்தை வசப்படுத்த வல்லவராகவில்லையே. (இதனாலேயே உன்னுடைய ஜிதேந்த்ரியத்வம் (இந்த்ரியங்களை வசப்படுத்தியது) வெளியாகவில்லையோ?)
அம்ருதம் போன்ற உன் கதைகளாகிற நதிகளும், உன் பாதத்தை அலம்பின ஜலத்தின் (நீரின்) ப்ரவாஹ (பெருக்கு) ரூபமான கங்கை முதலிய நதிகளுமே மூன்று லோகங்களிலுமுள்ள பாபங்களையெல்லாம் போக்க வல்லவைகளாயிருக்கின்றன. ஆகையால் ஆத்ம சுத்தியை விரும்பும் புருஷர்கள், வேதங்களால் வெளியிடப்பட்ட உன் கீர்த்தியாகிற புண்ய தீர்த்தத்தை ச்ரவண இந்திரியங்களாலும் (காது), உன் திருவடியினின்று வெளியான கங்கையென்னும் புண்ய தீர்த்தத்தை ஸ்னானாதிகளாலும், பணிகின்றார்கள். (ஆத்ம சுத்தியை விரும்புகிறவர்கள் உன் புகழ்களைக் கேட்பதும், உன் ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையில் ஸ்னானம் முதலியன செய்வதும் நடத்துகிறார்கள். ஆனபின்பு நீ சப்தாதி விஷயங்களை அனுபவிக்கிலும், அவற்றின் தோஷங்களால் தீண்டப்படுகிறதில்லையென்றும், நீ இந்திரியங்களுக்கு உட்பட்டவனல்லை என்றும் நிரூபிக்க வேண்டுமோ?)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மதேவன் தேவதைகளோடு கூட ஆகாயத்தில் நின்றிருந்து, இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனை ஸ்தோத்ரம் செய்து நமஸ்கரித்து, அன்னவனைக் குறித்து மொழிந்தான்.
ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- ஸகல சேதனா சேதனங்களுக்கும் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களுக்கும்) அந்தராத்மாவாயிருப்பவனே! (உள் நின்று நியமிப்பவனே)! ப்ரபூ! முன்பு நாங்கள் உன்னிடத்தில் வந்து, பூமியின் பாரத்தை நீக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்தோம். அதை அப்படியே நீ நடத்தி முடித்தாய். ஸத்ய ஸந்தர்களான (உண்மை வழியில் நிற்பவர்களான) ஸத்புருஷர்களிடத்தில் (நல்லோரிடத்தில்) தர்மத்தையும் ஸ்தாபித்தாய். ஸமஸ்த லோகங்களுடைய பாபங்களையும் போக்கவல்ல உன்புகழை எல்லா திசைகளிலும் பரவச் செய்தாய். நீ யதுவின் வம்சத்தில் அவதரித்து, மிகவும் சிறந்த உருவத்தை ஏற்றுக் கொண்டு, ஜகத்தின் ஹிதத்திற்காக உதாரமான (சிறந்த) சரித்ரங்கள் அடங்கப்பெற்ற பல செயல்களைச் செய்தாய்.
ஜகதீசனே! கலியுகத்தில் தங்கள் நன்மையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும் புருஷர்கள், எவர் உன்னுடைய சரித்ரங்களைக் கேட்பதும் சொல்லுவதும் செய்கிறார்களோ, அவர்கள் உன் ஸங்கல்பத்தினால் ஏற்பட்ட ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அனாயாஸமாகத் தாண்டுவார்கள்.
புருஷோத்தமா! ப்ரபூ! யது வம்சத்தில் அவதரித்த உனக்கு இப்பொழுது நூற்று இருபத்தைந்து ஸம்வத்ஸரங்கள் கடந்தன. ஸகல ஜகத் ஆதாரனே! (எல்லா உலகுக்கும் ஆதாரமாய் இருப்பவனே!) இப்பொழுது தேவ கார்யத்தில் செய்ய வேண்டிய குறை ஒன்றும் இல்லை. எல்லாம் செய்து முடித்தாய். இந்த யது குலமும் ப்ராஹ்மண சாபத்தினால் முடிந்தாற் போலவேயாய் விட்டது. இவ்வாறு இந்த அவதாரத்தின் ப்ரயோஜனம் முடிந்ததாகையால், உனக்குத் திருவுள்ளமாயின், பரமபதத்திற்கு எழுந்தருளலாம். நாங்கள் உன்னை நியமிக்கவல்லரல்லோம்.
வைகுண்டனே! உனக்குப் பணிக்காரர்களாகி, உலகங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிற எங்களையும், உலகங்களையும் பாதுகாப்பாயாக. (நாங்கள் உனது கிங்கரர்கள் (சேவகர்கள்). நீ எங்களை லோக பாலர்கள் (உலகைப் பாதுகாக்கும் ப்ரபுக்கள்) என்று ஏற்படுத்தி இருக்கின்றாய். நாங்கள் விண்ணப்பம் செய்ததை ஏற்றுக்கொண்டு, எங்களைப் பெருமைப்படுத்திப் பாதுகாப்பாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! ஜகதீச்வரனும், மாயையினால் மானிட உருவம் பூண்டவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், இவ்வாறு ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகளால் விண்ணப்பம் செய்யப் பெற்று, அவர்களைப் புகழ்ந்து மறுமொழி கூறினான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தேவதைகளுக்கு ப்ரபுவாகிய ப்ரஹ்மதேவனே! நீ யாது மொழிந்தனையோ, அவ்விஷயத்தை நானும் விசாரித்து, நிச்சயித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கார்யம் முழுவதும் செய்து முடித்தேன். பூமியின் பாரத்தையும் நீக்கினேன். ஆயினும், இந்த யாதவ குலம் பிறரை அவமதிக்கும் திறமையாகிற வீர்யம், யுத்த பூமியில் தன் வீட்டில் நுழைவது போல் நுழைகையாகிற சௌர்யம், தனம் (பணம்) முதலிய ஸம்பத்து (செல்வம்) இவைகளால் கொழுத்து, உலகத்தையெல்லாம் நாசம் செய்ய முயன்றிருக்கின்றது; ஸமுத்ரம் கரையினால் தடைப்பட்டிருப்பது போல் என்னால் தடைபட்டிருக்கின்றது. மிகவும் கொழுத்திருக்கின்ற இந்த யாதவர்களின் குலம் மிகவும் விஸ்தீர்ணமாய் (விரிந்து) இருக்கின்றது. இதை முடிக்காமல் நான் போவேனாயின், கரையைக் கடந்த ஸமுத்ரத்தினால் உலகமெல்லாம் பாழாவது போல், மர்யாதையைக் கடந்து நடக்கத் துணிந்த இக்குலத்தினால் உலகமெல்லாம் பாழாய்விடும். (ஆகையால், நான் இதை முடித்து விட்டே போகவேண்டும். ஆனால், எப்பொழுது முடிக்கப் போகிறாயென்றால், சொல்லுகிறேன்).
இப்பொழுதே ப்ராஹ்மண சாபத்தினால் இந்த வம்சத்திற்கு விநாசம் (அழிவு) ஆரம்பித்துவிட்டது. இனி நிற்காது; சீக்ரத்திலேயே அழிந்து போய்விடும். பாபமற்றவனே! ப்ரஹ்மதேவ! இந்தக் குலம் முடிந்தவுடனே நான் வைகுண்ட லோகம் போவேன். அப்பொழுது உன் பவனத்திற்கு வருவேன்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு லோகநாதனாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் மொழியப் பெற்ற ப்ரஹ்ம தேவன், அம்மஹானுபாவனைப் பணிந்து, தேவக் கூட்டங்களோடு கூடத் தன்னுலகம் போய்ச் சேர்ந்தான். பிறகு, ஸ்ரீக்ருஷ்ண பகவான் த்வாரகையில் மஹத்தான பல உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) உண்டாவதைக் கண்டு தன்னிடம் வந்திருக்கின்ற யது வ்ருத்தர்களைக் (பெரியோர்களைக்) குறித்து மொழிந்தான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- இங்கு எல்லாப்புறங்களிலும் பெரிய உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) பலவும் இதோ உண்டாகின்றன. நம் குலத்திற்கு, ப்ராஹ்மணர்களிடத்தினின்று எவ்விதத்திலும் கடக்க முடியாத சாபமும் நேரிட்டிருக்கின்றது. (நமக்கு ப்ராஹ்மண சாபம் நேரிட்டபடியால் பற்பல உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) புலப்படுகின்றன) பெரியோர்களே! நாம் பிழைக்க வேண்டுமென்று விரும்புவோமாயின், இனி இப்பட்டணத்தில் இருக்கலாகாது. நாம் இப்பொழுதே ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் போவோம். தாமதம் செய்யவேண்டாம். அது மிகவும் பரிசுத்தமானது; புண்ய தீர்த்தங்களில் சிறந்தது.
சந்த்ரன், தக்ஷருடைய சாபத்தினால் க்ஷயரோகம் (தேய்தல்) உண்டாகப் பெற்று அதனால் வருந்தி, இந்த ப்ரபாஸ தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து, க்ஷயரோக (தேய்தல் என்கிற வியாதியின்) ஹேதுவான (காரணமான) பாபத்தினின்று விடுபட்டு, உடனே மீளவும் தன்னுடைய கலைகளை எல்லாம் பெற்றான். ஆகையால், நாமும் அந்த ப்ரபாஸ தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து, அறுசுவைகளும் அமைந்த அன்னத்தினால் மேன்மையுள்ள அந்தணர்களைப் புசிப்பித்து, நல்ல நிலங்களில் விதைகளை விதைப்பது போல், ஸத் பாத்ரங்களாகிய (தானத்தைப் பெறுவதற்கு சிறந்த தகுதி உடையவர்களான) அவ்வந்தணர்களுக்குப் பற்பல தானங்களைச் செய்து, ஓடங்களால் ஸமுத்ரத்தைத் தாண்டுவது போல, அத்தானங்களால் நம்முடைய பாபங்களைத் தாண்டுவோம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருவம்சத்திற்குக் களிப்பை விளைக்கும் குமாரனே! இவ்வாறு பகவானால் ஆஜ்ஞை செய்யப்பெற்ற யாதவர்கள், ப்ரபாஸ தீர்த்தத்திற்குப் போக மனம்கொண்டு, ரதங்களைப் பூட்டினார்கள்.
ராஜனே! உத்தவன் இவ்வாறு பகவான் மொழிந்ததைக் கேட்டும், அவர்கள் செய்கிற முயற்சியைக் கண்டும், பயங்கரமான பற்பல உத்பாதங்களைக் (தீய அறிகுறிகளைக்) கண்டும், ஸர்வ காலமும் ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்திருப்பவனாகையால், உலகங்களுக்கு ப்ரபுக்களென்று வழங்கி வருகிற ப்ரஹ்ம, ருத்ராதிகளுக்கும் ப்ரபுவான அம்மாஹானுபாவனை ஏகாந்தத்தில் (தனிமையில்) கிட்டி, அவனுடைய பாதங்களைச் சிரத்தினால் வணங்கி, கைகளைக் குவித்துக் கொண்டு, மொழிந்தான்.
உத்தவன் சொல்லுகிறான்:- தன் தேஜஸ்ஸினால் திகழ்பவனே! தேவதைகளான ப்ரஹ்ம, ருத்ராதிகளுக்கும் நியாமகனே (நியமிப்பவனே)! யோகத்திற்கு நிர்வாஹகனே (நியமிப்பவனே)! கேட்கிறவர்களுக்கும், சொல்லுகிறவர்களுக்கும் புண்யத்தை விளைக்கவல்ல ச்ரவண கீர்த்தனங்களையுடையவனே! நீ இந்தக் குலம் முழுவதும் ஸம்ஹரித்து விட்டு, உடனே இவ்வுலகத்தைத் துறக்கப்போகின்றாய். இது நிச்சயம்.
திறமைகளெல்லாம் அமைந்தவனே! ஏனென்றால், நீ ப்ராஹ்மண சாபத்தைத் தடுக்க வல்லவனாயிருந்தும், அதைத் தடுக்காமலேயிருந்தாய் அல்லவா? (ஆகையால், ப்ராஹ்மண சாபமென்னும் வியாஜத்தினால் (சிறு சாக்கை இட்டு) இந்த வம்சத்தையெல்லாம் ஸம்ஹரித்து (அழித்து) வைகுண்ட லோகம் போக முயன்றாய். இது நிச்சயம்). ஆனால் என்னென்கிறாயோ? கேசவனே! நான் அரை க்ஷணமும் உன் பாத கமலத்தை விட்டுப் பிரிந்திருக்கப் பொறேன். நாதனே! என்னையும் உன் ஸ்தானமாகிய வைகுண்ட லோகத்திற்கு அழைத்துக் கொண்டு போவாயாக.
ஸாதாரண ஜனங்களுங்கூட, காதுகளுக்கு அம்ருதம் போன்றதும், மிகுந்த மங்களங்களை விளைப்பதுமாகிய உன் விளையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தே தேஹத்திலும், தேஹ அனுபந்திகளிடத்திலும் (இந்த உடலைத் தொடர்ந்து இருப்பவர்களிடத்திலும்), சப்தாதி விஷயங்களிலும் விளைகிற விருப்பத்தைத் துறக்கின்றார்கள். துறந்து உன்னையே பற்றுகிறார்கள்) அப்படியிருக்க, உன் பக்தர்களாகிய நாங்கள் படுத்தல், உட்காருதல், திரிதல், நிற்றல், குளித்தல், புசித்தல் முதலிய எல்லாச் செயல்களிலும் கூடவேயிருப்பவனும், மிகுந்த அன்பனும் அந்தராத்மாவுமாகிய உன்னை எவ்வாறு விட்டுப் பிரிந்திருப்போம்?
நீ உபயோகப்படுத்தித் துறந்த பூமாலை, சந்தனம், ஆடை, ஆபரணம் இவைகளால் அலங்காரம் செய்து கொண்டு, நீ புசித்து மிகுந்த அன்னத்தைப் புசிக்குத் தன்மையர்களும், உன் தாஸர்களுமாகிய நாங்கள், உன் மாயையை வெல்லுவோம். இது நிச்சயம். (நாங்கள் உன் மாயையைக் கடப்பதற்காக இனி யத்னம் (முயற்சி) செய்ய வேண்டியதில்லை. ஆகையால், உன்னை விட்டுப் பிரிந்திருக்க முடியாமல் வருந்துகிற என்னை உன்னுடன் அழைத்துக்கொண்டு போக வேண்டுமென்று வேண்டுகிறேனன்றி, ஸம்ஸார பயத்தினால் வேண்டவில்லை.)
காற்றையே அரைநாண் மாலையாக உடையவர்களும் (அரையில் கௌபீன (கோவணம்) மாத்ரமே (மட்டுமே) தரித்துத் திகம்பரர்களாயிருப்பவர்களும் (திசையையே ஆடையாக உடையவர்களும் – வேறு ஆடை அணியாதவர்களும்), உபவாஸம் முதலிய வ்ரதங்களால் ச்ரமப்படும் தன்மையர்களும், ஊர்த்வ ரேதஸ்ஸுக்களும் (எக்காலத்திலும் ரேதஸ்ஸு (விந்து) நழுவப் பெறாதவர்களும்), ராக (விருப்பு) த்வேஷாதிகள் (வெறுப்பு) இன்றி சாந்தர்களும், பரிசுத்தர்களும், ஸந்யாஸாச்ரமத்தில் இருப்பவர்களுமாகிய ரிஷிகள் ப்ரஹ்மலோகமென்னும் பெயருடைய உனது லோகத்தை அடைகின்றார்கள்.
மஹா யோகியே! (ஆச்சர்ய சக்தியுடையவர்களில் சிறந்தவனே!) இந்த ஸம்ஸாரத்தில் புண்ய பாப கர்மங்களால் ஸம்பாதிக்கப்பட்ட ஸுக துக்கங்களில் உழன்று கொண்டிருக்கிற நாங்களோ என்றால், உன் பக்தர்களோடு கூடி, உன் கதைகளை அனுஸந்தித்த (படித்தல், கேட்டல்) மாத்ரத்தினால் பிறர்க்கு வருந்தியும் கடக்க முடியாத ஸம்ஸாரத்தை அனாயாஸமாகக் கடப்போம். நீ மனுஷ்ய லோகத்தை அனுஸரித்துச் செய்த உன் செயல்களையும், பேச்சுக்களையும், நடை, புன்னகை, நோக்கம், பரிஹாஸம் (கேலி) இவைகளையும் நாங்கள் நினைப்பதும், பிறர்க்கு நினைவு மூட்டுவதும் செய்து, உன் மாயையை அனாயாஸமாகத் (எளிதாகத்) தாண்டுவோம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தேவகியின் புதல்வனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு உத்தவனால் விண்ணப்பம் செய்யப் பெற்று, தன்னை ஒழிய மற்றொன்றை அறியாமல் தன்னையே பணியும் தன்மையனும், அன்பனும், ப்ருத்யனுமாகிய (சேவகனுமாகிய) அவ்வுத்தவனைக் குறித்து மேல்வருமாறு மொழிந்தான்.
ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.