தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – ஐம்பதாவது அத்தியாயம்
(ஜராஸந்தாதிகளோடு யுத்தமும், ஸமுத்ரத்தினிடையில் த்வாரகாபுரியை நிர்மித்துத் தன் பந்துக்களை அவ்விடம் கொண்டு போய்ச் சேர்த்தலும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரத ச்ரேஷ்டனே! கம்ஸனுக்கு அஸ்தியென்றும், ப்ராஸ்தியென்றும் இரண்டு பட்ட மஹிஷிகள் (ராணிகள்) இருந்தார்கள். அவர்கள், பர்த்தாவான (கணவனான) கம்ஸன் முடிகையில், துக்கத்தினால் வருந்தித் தந்தையாகிய ஜராஸந்தனுடைய க்ருஹத்திற்குப் போனார்கள். அப்பால், வருத்தமுற்றிருக்கின்ற அந்த கம்ஸ மஹிஷிகள் (ராணிகள்), மகத தேசங்களுக்கு ப்ரபுவும், தங்கள் தந்தையுமாகிய ஜராஸந்தனுக்குத் தங்கள் வைதவ்யத்தின் (விதவையானதன்) காரணத்தையெல்லாம் விஸ்தாரமாகத் தெரிவித்தார்கள்.
அந்த ஜராஸந்தன், அப்ரியமான (விரும்பத்தகாத) அந்தச் செய்தியைக் கேட்டு, சோகம், கோபம் இவைகளுடன் கூடி, பூமியில் யாதவப் பூண்டே இல்லாதபடி செய்யப் பெருமுயற்சி கொண்டான். அவன் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி ஸைன்யங்களைத் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட்படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) திரட்டிக் கொண்டு சென்று, யாதவர்களின் முக்ய பட்டணமாகிய மதுராவை எல்லாத் திசைகளிலும் தகைந்தான் (முற்றுகை இட்டான்). ஸ்ரீக்ருஷ்ணன், கரை புரண்ட ஸமுத்ரம் போன்றிருக்கிற அந்த ஜராஸந்தனுடைய ஸைன்யத்தையும் (படையையும்), அவனால் தன் பட்டணம் தகையப்பட்டிருப்பதையும் (முற்றுகை இடப்பட்டிருப்பதையும்), தன் ப்ரஜைகளெல்லாம் பயந்து, வ்யாகுலம் (வருத்தம்) உற்றிருப்பதையும் கண்டு, பாரத்தை நீக்குகையாகிற காரணத்திற்காக மானிட உருவத்தை ஏற்றுக் கொண்டவனும், தன்னைப் பற்றினவர்களுடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அந்தத் தேச காலங்களுக்குத் தகுந்திருக்கும்படி தன்னுடைய அவதாரத்தின் ப்ரயோஜனத்தை ஆராய்ந்து, இவ்வாறு செய்யவேண்டுமென்று நிச்சயித்துக் கொண்டான்.
“இந்த மாகதன் (மகத நாட்டு அரசன் ஜராசந்தன்) திரட்டிக்கொண்டு வந்திருக்கிற இந்த ராஜாக்களின் ஸைன்யம், பல அக்ஷெளஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட்படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) கணக்குடையது. போர்வீரர்களும், குதிரைகளும், தேர்களும் அளவற்றிருக்கின்றன. இந்த ஸைன்யம் (படை) முழுவதும் பூமிக்குப் பாரமாயிருக்கிறதாகையால், இதை வதித்து (அழித்து) விடுகிறேன். மாகதனை (மகத நாட்டு அரசன் ஜராசந்தனை) மாத்ரம் இப்பொழுது வதிக்கலாகாது (அழிக்கலாகாது). ஏனென்றால், அவனை வதிக்காமல் விட்டு விடுவோமாயின், அவன் மீளவும் ஸைன்யங்களைத் (படைகளைத்) திரட்டிக்கொண்டு வருவான். அவற்றையும் வதிக்கலாம். அவதரித்தது, பூமியின் பாரத்தை நீக்குவதும், ஸத் புருஷர்களைக் காப்பதும், துஷ்டர்களை வதிப்பதும் ஆகிய இவற்றிற்காகவன்றோ? இதுவன்றி, என்னுடைய அவதாரத்திற்கு வேறு சில ப்ரயோஜனங்களும் உண்டு.
ஒருகால், மிகவும் தலையெடுத்து வளர்ந்து வருகின்ற அதர்மத்தை அழிப்பதற்காகவும், தர்மத்தைப் பாதுகாப்பதற்காகவும், நான் தேஹத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்று இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அப்பொழுதே ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியுடையவைகளும், ஸாரதியோடு (தேர் ஓட்டுபவர்) கூடினவைகளும், மற்றும் வேண்டிய பரிகரங்களெல்லாம் (உபகரணங்களெல்லாம்) அமைந்தவைகளுமாகிய இரண்டு ரதங்கள் (தேர்கள்) ஆகாயத்தினின்று இறங்கி வந்தன. அமானுஷங்களான (மனிதர்களுக்கு அப்பாற்பட்ட) பழைய ஆயுதங்களும், திடீரென்று வந்து தோன்றின. அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் அவற்றைக் கண்டு, பலராமனைப் பார்த்து மொழிந்தான்.
ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- பெரியோனே! அண்ணனே! யாதவர்களுக்கு வருத்தம் நேர்ந்திருக்கின்றது. காண்பீராக. இவர்கள் அனைவரும் உம்முடைய பக்தர்களும், ப்ருத்யர்களுமாய் (சேவகர்களுமாய்) இருப்பவர். ஆகையால், இவர்களை உபேக்ஷிக்கலாகாது (ஒதுக்கலாகாது). இதோ உமக்கு இஷ்டமான ரதமும், ப்ரியமான ஆயுதங்களும், வந்திருக்கின்றன. இந்த ரதத்தில் ஏறிக்கொண்டு, இதோ வந்திருக்கின்ற சத்ரு ஸைன்யத்தை (எதிரி படையை) அழித்து, பந்துக்களை ஆபத்தினின்று கரையேற்றுவீராக. நம் பிறவி, சத்ருக்களை அழிப்பதற்காகவும், ஸத் புருஷர்களுக்கு ஸுகத்தை விளைப்பதற்காகவுமன்றோ? இருபத்து மூன்று அக்ஷௌஹிணி (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட்படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) கணக்குடைய ஸைன்யமாகிற பூமியின் பாரத்தை ஒழிப்பீராக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ராம, க்ருஷ்ணர்கள் ஆலோசித்துக்கொண்டு, கவசம் தரித்து, தங்களுக்கு அஸாதாரணமான (தக்களுக்கே உரித்தான) ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, ரதத்தின் மேல் ஏறி, ஸ்வல்ப (குறைந்த) ஸைன்யத்தோடு (படையோடு) கூட மதுராவினின்று புறப்பட்டார்கள். அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் தாருகனைச் சாரதியாகவுடையவனாகி, பாஞ்சஜன்யமென்கிற தன் சங்கத்தை ஊதினான். அந்தச் சங்கத்தின் த்வனியைக் (ஒலியைக்) கேட்ட மாத்ரத்தில், சத்ரு ஸைன்யங்களின் (எதிரி படைகளின்) ஹ்ருதயத்தில் பயமும், நடுக்கமும் உண்டாயின. மகத தேசாதிபதியான ஜராஸந்தன், அந்த ராம, க்ருஷ்ணர்களைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.
ஜராஸந்தன் சொல்லுகிறான்:- ஏ க்ருஷ்ணா! புருஷாதமா (மனிதப்பதரே)! பந்துவைக் கொன்றவனே! நீ கம்ஸனிடத்தினின்று பயந்து, கோகுலத்தில் மறைந்திருந்தாயல்லவா? ஆகையால், நான் உன்னோடு யுத்தம் செய்யமாட்டேன். இளம் பிள்ளையோடு லஜ்ஜையினால் (வெட்கத்தினால்) யுத்தம் செய்ய விருப்பம் உண்டாகாதது போல, உன்னோடு யுத்தம் செய்ய எனக்கு இச்சையுங்கூட உண்டாகவில்லை. ராமனே! உனக்கு யுத்தம் செய்ய வேண்டுமென்னும் ச்ரத்தை உளதாயின், யுத்தம் செய்வாயாக; நிலை நிற்பாயாக. யுத்தம் செய்யத் தொடங்கி ஓடிப்போக வேண்டாம். இப்படியாயின், என் பாணங்களால் பிளக்கப்பட்ட தேஹத்தைத் துறந்து, ஸ்வர்க்கம் போவாய். அல்லது நீயே ஸமர்த்தனாயிருப்பாயாயின், என்னை வதிப்பாயாக.
ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- சூரர்கள் (வீரர்கள்) பலவாறு தங்களைத் தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள். பின்னை என்ன செய்வார்களென்றால், பௌருஷத்தையே (வீரத்தையே, ஆண்மையையே) காண்பிப்பார்கள். ஆகையால், சூரத்தன்மை (வீரம்) அற்றவனும், மரணம் அடைய விரும்புகின்றவனும், ஆதுரம் பிடித்தவனுமாகிய (பலஹீனமானவனுமான) உன்னுடைய வசனத்தை நாங்கள் வெகுமதிக்கமாட்டோம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜராஸந்தன், அந்த ராம, க்ருஷ்ணர்களை எதிர்த்து வந்ததுடன், காற்று மேகங்களால் ஸூர்யனையும், தூட்களால் அக்னியையும், மறைப்பது போலப் பெரிய ஸைன்ய ஸமூஹத்தினால் மறைத்தான். அப்பொழுது, பட்டணத்து மடந்தையர்கள், மேல் மெத்தைகளிலும், உப்பரிகைகளிலும் (மேல் மாடங்களிலும்), கோபுரங்களிலும் ஏறி, யுத்தத்தில் கருட த்வஜத்தினாலும் (கருடக் கொடியினாலும்), தால த்வஜத்தினாலும் (பனைமரக் கொடியினாலும்) அடையாளம் செய்யப் பெற்ற க்ருஷ்ண, ராமர்களின் ரதங்களைக் கண்டு, சோகத்தினால் நிரம்பி, மோஹித்தார்கள் (மயங்கினார்கள்).
ஸ்ரீக்ருஷ்ணன், தன் ஸைன்யமெல்லாம் சத்ருக்களின் (எதிரிகளின்) ஸைன்யங்களாகிற (படைகளாகிற) மேகங்களினின்று வந்து விழுகின்ற பாணங்களாகிற மழையினால் பீடிக்கப்பட்டு வருந்துவதைக் கண்டு, தேவதைகளாலும், அஸுரர்களாலும் வெகுமதிக்கப்பட்டதும், சார்ங்கமெனும் பெயருடையதுமாகிய மேலான தனுஸ்ஸை (வில்லை) நாணேற்றி, ஒலிப்பித்தான். அவன் அம்பறாத்தூணியினின்று (அம்புகள் வைக்கும் இடம்) பாணங்களை எடுத்து, தனுஸ்ஸில் (வில்லில்) தொடுத்து, காது வரையில் இழுத்து, கூரான பாணங்களை நிரை நிரையாக விடுத்து, தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும், காலாட்களையும் ஓயாமல் வதித்துக்கொண்டிருந்தான்.
கொள்ளிக்கட்டையைச் சுற்றினால், அது சக்ரம் போல் தோற்றுவது போல, அவனுடைய தனுஸ்ஸு ஓயாமல் பாண (அம்பு) ப்ரயோகஞ் செய்துகொண்டிருக்கையால் (விடுவதால்), வளைந்து சக்ரம் போல் தோன்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது, யானைகள் கும்ப ஸ்தலங்கள் (மத்தகங்கள்) பிளவுண்டு விழுந்தன. குதிரைகள் பலவும், பாணங்களால் கழுத்து முறியப் பெற்று, விழுந்தன. தேர்கள், குதிரைகளும், த்வஜங்களும் (கொடிகளும்), ஸாரதிகளும், தேர் வீரர்களும் அடியுண்டு சூன்யமாயின (அழிந்தன). காலாட்கள் (தரையில் நின்று போர் புரிபவர்கள்), புஜங்களும், துடைகளும், கழுத்துக்களும் அறுப்புண்டு விழுந்தார்கள். பாணங்களால் சேதிக்கப்படுகின்ற (வெட்டப்படுகிற) காலாட்கள், யானைகள், குதிரைகள் ஆகிய இவற்றின் சரீரங்களினின்று ரத்த நதிகள் பலவும் உண்டாயின.
அந்நதிகளில், அறுந்து விழுந்த புஜங்களாகிற (கைகளாகிற) ஸர்ப்பங்களும், தலைகளாகிற ஆமைகளும், அடியுண்ட யானைகளாகிற தீவுகளும், குதிரைகளாகிற முதலைகளும், கைகளும் துடைகளுமாகிற மீன்களும், மனுஷ்யர்களின் தலை மயிர்களாகிற பாசியும், தனுஸ்ஸுகளாகிற (வில்) அலைகளும், ஆயுதங்களாகிற புதர்களும், தேர் சக்கரங்களாகிற நீர்ச்சுழிகளும், சிறந்த பெரிய ரத்னங்களும், உயர்ந்த ஆபரணங்களுமாகிற பறல்களும் (கூழாங்கற்கள்), பாறைகளும் அமைந்திருந்தன. இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன் யுத்த பூமியில் பயஸ்தர்களுக்குப் (பயப்படுபவர்களுக்கு) பயத்தை விளைப்பவைகளும், தீரர்களுக்கு ஒருவர்க்கொருவர் ஸந்தோஷத்தை விளைப்பவைகளுமாகிய பற்பல ரத்த நதிகளைப் பெருகச் செய்தான்.
மன்னவனே! சத்ருக்களை (எதிரிகளை) அழிக்கும் திறமையாகிற பராக்ரமம் அளவற்றிருப்பவனும், தன் ஆயுதமாகிய உலக்கையினால் சத்ருக்களை வதித்துக் கொண்டிருப்பவனுமாகிய பலராமன், அவ்வாறு அடித்து மிகுந்திருப்பதும், மகத ராஜனால் பாதுகாக்கப்பட்டிருப்பதும், ஸமுத்ரம் போல் நுழைய முடியாததும், பயங்கரமுமாகிய பலத்தை முழுவதும் அழித்து விட்டான்.
அந்த ராம, க்ருஷ்ணர்கள் இருவருமே அத்தனை ஸைன்யங்களையும் அழித்து விட்டார்களேயென்று வியப்புற வேண்டாம். அவர்கள், கேவலம் வஸுதேவ குமாரர்களன்று; ஸர்வேச்வரனுடைய அவதாரம். ஆகையால், அவர்களுக்கு அது விளையாட்டேயன்றி, ஒரு பொருளேயன்று.
அளவற்ற கல்யாண குணங்களையுடைய எவன், இந்த மூன்று லோகங்களையும் காப்பதும், படைப்பதும், அழிப்பதும் ஆகிய இவைகளை விளையாட்டாகவே நடத்துகிறானோ, அப்படிப்பட்ட ஸர்வேச்வரனுக்கு, சத்ரு பக்ஷத்தை (எதிரி பக்கத்தை) அழிப்பதென்பது ஆச்சர்யமன்று. ஆயினும், மானிட உருவத்தை ஏற்றுக் கொண்டு மானிடவர்களைப் போல் நடனம் செய்கிறவன், அமானுஷ்யமான (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) செயலை நடத்துவது ஆச்சர்யமாகையால், அதை வர்ணிக்கிறேனன்றி வேறில்லை.
பிறகு, பலராமன் ஸைன்யங்களெல்லாம் முடிந்து, ரதமுமின்றி ப்ராணன்கள் மாத்ரமே மிகுந்திருக்கின்ற ஜராஸந்தனை, சிங்கம் அற்ப ம்ருகத்தைப் பிடிப்பது போல, பிடித்துக் கொண்டான். அவன், மஹா வீரனாகிய அந்த ஜராஸந்தனைப் பிடித்து, வாருண பாசங்களாலும் (கயிற்றினாலும்), மானுஷ (மனித) பாசங்களாலும் (கயிற்றினாலும்) பந்தனம் செய்கையில் (கட்டுகையில்), ஸ்ரீக்ருஷ்ணன் அவன் மூலமாகக் கார்யம் நடத்த நினைத்திருக்கையால், வேண்டாமென்று தடுத்தான்.
வீரர்களால் புகழப்பட்ட மஹாவீரனாகிய அந்த ஜராஸந்தன், லோக நாதர்களான ராம, க்ருஷ்ணர்களால் விடப்பட்டு, அப்பொழுதே தவஞ்செய்ய வனம் போக விரும்புகையில், சிசுபாலன் முதலிய ராஜாக்கள் வழியில் ஸந்தித்து, விசித்ரமான அர்த்தங்களும், பதங்களும் அமைந்த வாக்யங்களாலும், அற்பர்களான (வலிமையற்ற) யாதவர்களால் மஹா பராக்ரமசாலியான உனக்குப் பரிபவம் (அவமானம்) நேர்ந்ததென்பது கர்மத்தினால் ப்ராப்தமாயிற்றே (ஏற்பட்டதே) அன்றி வேறில்லை என்னும் இது முதலிய லௌகிக ந்யாயங்களாலும் (உலக வழக்குகளாலும்) தடுத்தார்கள்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ருஹத்ரதனுடைய பிள்ளையாகிய ஜராஸந்த மன்னவன், தான் திரட்டிக் கொண்டு வந்த ஸைன்யங்களெல்லாம் முடிகையில், பகவானால் உபேக்ஷிக்கப்பட்டு (ஒதுக்கப்பட்டு), மனவருத்தத்துடன் மகத தேசம் போனான். ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால், தன் ஸைன்யத்தில் சிறிதும் அழியாமலே, சத்ரு (எதிரி) ஸைன்யங்களாகிற (படைகளாகிற) ஸமுத்ரத்தைக் கடந்து, நல்லது நல்லது என்று தேவதைகளால் அவமோதனஞ் செய்யப்பட்டு (பாராட்டப்பட்டு), பூமழை பொழியப் பெற்று, சத்ருக்களின் (எதிரிகளின்) பீடையாகிற (தொந்தரவாகிய) ஜ்வரம் (காய்ச்சல்) நீங்கி, மனக்களிப்புற்ற மதுராப் பட்டணத்து ஜனங்களுடன் கூடி, பௌருஷத்தை (வீரத்தை) எடுத்துரைப்பவர்களான ஸுதர்களாலும், வம்சாவளியைப் பாடுகின்ற மாகதர்களாலும், ஸ்துதி பாடகர்களான வந்திகளாலும், விஜயம் பாடப்பெற்று, பட்டணத்திற்குச் சென்றான்.
ப்ரபுவாகிய பகவான், பட்டணத்திற்குள் நுழையும் பொழுது, சங்கம், துந்துபி, பேரி, வீணை, வேணு, ம்ருதங்கம் ஆகிய இவ்வாத்யங்களும், மற்றும் பல வாத்யங்களும் முழங்கின. பட்டணத்து மார்க்கங்கள், தண்ணீர் தெளித்து விளக்கியிருந்தன. ஜனங்கள் அனைவரும், ஸந்தோஷமுற்றிருந்தார்கள். பட்டணம் முழுவதும் பதாகைகள் (விருது திரைகள்) கட்டி அலங்கரித்திருந்தார்கள். அந்நகரம், வேத கோஷத்தினால் எங்கும் பெரிய நாதமுண்டாகப் பெற்றிருந்தது. ஸ்ரீக்ருஷ்ணன், பட்டணத்திற்குள் ப்ரவேசிக்கையாகிற மஹோத்ஸவத்திற்காகத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பட்டணத்து மடந்தையர்கள், அந்த ஸ்ரீக்ருஷ்ணன் மேல் புஷ்பங்களையும், தயிரையும், அக்ஷதைகளையும் இறைத்தார்கள். பட்டணத்து ஜனங்கள் ப்ரீதியினால் பேராவலுற்ற கண்களுடையவர்களாகி, ஸ்னேஹத்துடன் ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு அந்த மஹானுபாவன் (மிக்க பெருமை பொருந்தியவன்) மதுராக்குள் நுழைந்தான். ஸமர்த்தனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், யுத்த பூமியினின்று கொண்டு வந்த அளவற்ற பணத்தையும், வீரர்களின் பூஷணத்தையும் (ஆபரணங்களையும்), யதுராஜனாகிய உக்ரஸேனனுக்குக் கொடுத்தான். மகத ராஜனாகிய ஜராஸந்தன் இவ்வாறு பதினெட்டுத் தடவைகள் அத்தனை அக்ஷௌஹிணி ஸைன்யங்களுடன் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட்படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) வந்து, ஸ்ரீக்ருஷ்ணனால் பாதுகாக்கப்பட்ட யாதவர்களுடன் யுத்தம் செய்தான். வ்ருஷ்ணிகளென்னும் ப்ரஸித்திபெற்ற அந்த யாதவர்கள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய தேஜஸ்ஸினால் (பேராற்றலால்) அந்த ஸைன்யங்களை (படைகளை) எல்லாம் பாழ் செய்தார்கள்.
இவ்வாறு தன் ஸைன்யமெல்லாம் முடிகையில் ஜராஸந்த மன்னவன், சத்ருக்களால் விடப்பட்டு மீண்டு போனான். பிறகு, பதினெட்டாவது முறை வரப் போகிறதாயிருக்கையில், பதினேழாம் யுத்தத்திற்கும், பதினெட்டாம் யுத்தத்திற்கும் இடையில் காலயவனன் என்னும் மஹாவீரன் நாரத மஹர்ஷியால் அனுப்பப்பட்டு, மதுரை ஜனங்களுக்குப் புலப்பட்டான். மனுஷ்ய லோகத்தில் தனக்கு எங்கும் இணையெதிரில்லாத அக்காலயவனன், யாதவர்கள் தன்னோடொத்த பலமுடையவர்களென்று நாரதர் மூலமாய்க் கேள்விப்பட்டு, மூன்று கோடி ம்லேச்சர்களுடன் வந்து, மதுராப் புரியை எல்லாப் புறங்களிலும் தகைத்தான் (முற்றுகையிட்டான்). ஸ்ரீக்ருஷ்ணன், அந்த யவனனைக் கண்டு, பலராமனிடத்தில் கலந்தாலோசித்தான்.
“அண்ணா! யாதவர்களுக்கு இரண்டு விதத்திலும் பெரிய பயம் நேர்ந்திருக்கின்றது. ஆ! என்ன செய்யலாம்? இப்பொழுது மஹாபலிஷ்டனாகிய (பெரும் பலசாலியான) இந்தக் காலயவனன், நம்முடன் போர் புரிய முற்றுகை இட்டுள்ளான். ஜராஸந்தனும் இன்றைக்கோ அல்லது நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ வரப்போகிறான். இப்பொழுது நாம் இந்த யவனனோடு யுத்தம் செய்து கொண்டிருக்கையில், ஜராஸந்தன் வருவானாயின், அவன் நம் பந்துக்களை வதித்து விடுவான். அல்லது பலிஷ்டனாகிய (பலசாலியான) மன்னவன், அவர்களைத் தன் பட்டணத்திற்காவது கொண்டு போய்விடுவான். ஆகையால், இப்பொழுது நாம் மனுஷ்யர்களுக்கு வருந்தியும் நுழைய முடியாத ஒரு துர்க்கத்தை (கோட்டையை) ஏற்படுத்தி, அதில் பந்துக்களைக் கொண்டு போய் வைத்து, இந்த யவனனைக் கொல்லுவோம்” என்று மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் ஆலோசித்து நிச்சயித்துக்கொண்டு, ஸமுத்ரத்தினிடையில் பன்னிரண்டு யோஜனை (1 யோஜனை = 12.8 கி.மீ.) அளவுள்ள ஒரு துர்க்கத்தையும் (கோட்டையையும்), அதில் ஸமஸ்த ஆச்சர்யங்களும் அமைந்த ஒரு பட்டணத்தையும் ஏற்படுத்தினான்.
அந்தப் பட்டணத்தில் விஸ்வகர்மாவின் (தேவ சிற்பி) விஜ்ஞானத்தை (திறமையை) வெளியிடுகிற சிற்ப ஸாமர்த்யங்கள் (திறமைகள்) பலவும் புலப்படும். அந்நகரத்தில், வாஸ்து சாஸ்த்ரங்களில் நிரூபிக்கப்பட்ட விதியின்படி ராஜவீதிகளும், முற்றங்களும், சிறிய வீதிகளும் நிர்மிக்கப்பட்டிருந்தன. கல்ப வ்ருக்ஷங்களும் (வேண்டியதைத் தரும் மரங்கள்), கல்ப லதைகளும் (கொடிகள்), நிறைந்த உத்யானங்களும் (தோட்டங்களும்), அற்புதமான உபவனங்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஸ்படிக ரத்னமயமான உப்பரிகைகளும் (மேல் மாடங்களும்), கோபுரங்களும் ஸ்வர்ண மயமான சிகரங்கள் அமைந்து, ஆகாயத்தை அளாவி (தொட்டு) இருந்தன. அன்ன சாலை (கூடம்) முதலிய பல சாலைகள் (கூடங்கள்) வெள்ளி, பித்தளை முதலிய லோஹங்களால் (உலோஹங்களால்) இயற்றி, பொன் குடங்கள் வைத்து, அலங்கரிக்கப்பட்டிருந்தன. வீடுகள், ஸ்வர்ணங்களால் நிர்மித்து (கட்டி), பத்மராகம் முதலிய ரத்னங்களால் இயற்றின சிகரங்களும், மரகத ரத்னங்கள் படுத்த அகன்ற தரைகளும் அமைந்திருந்தன.
அந்நகரத்தில், பொதுவாகவும் ஒவ்வொரு வீடுகளிலும் தேவாலயங்களும் (பூஜா அறை), சந்த்ர சாலைகளும் (ஜன்னல்கள்) நிர்மிக்கப்பட்டிருந்தன. ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், வைச்யர், கீழ்சாதியினர் ஆகிய நான்கு வர்ணத்தவர்களும் நிறைந்திருந்தார்கள். அந்நகரம், யாதவர்கள் வஸிப்பதற்குரிய மாளிகைகளால் மிகவும் விளக்கமுற்றிருந்தது. மஹேந்த்ரன், ஸுதர்மை என்னும் தன் ஸபையையும் பாரிஜாத வ்ருக்ஷத்தையும் (மரத்தையும்) ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுத்தனுப்பினான்.
அந்த ஸுதர்மையில் (இந்த்ரனுடைய ஸபை) நுழைவானாயின், மனுஷ்ய தர்மங்களான (மனிதர்களுக்கு இயல்பானவையான) பசி, தாஹம் முதலியவைகளால் தீண்டப்படமாட்டான். வருணன், ஒற்றைக்காது மாத்ரம் கறுத்து உடம்பெல்லால் வெளுத்திருப்பவைகளும், மனோ வேகமுடையவைகளுமான குதிரைகளை அனுப்பினான். குபேரன், தன்னிடத்திலுள்ள எட்டு நிதிகளையும் அனுப்பினான். மற்ற லோக பாலர்களும் (திசைகளுக்குத் தலைவர்களும்) தங்கள் தங்களுக்கு அஸாதாரணமாயுள்ள (தங்களுக்கே உரித்தான) ஐச்வர்யங்களை அனுப்பினார்கள். ஸித்தர் முதலிய மற்றவர்களும், பகவானால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆதிபத்யம் (பொறுப்பை நிர்வஹிக்கும் சக்தி) எவையெவை உண்டோ அதையெல்லாம் அவன் பூலோகத்திற்கு வந்திருக்கையில், அவனுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். மஹானுபாவனாகிய ஸ்ரீ க்ருஷ்ணன், தன் யோக மஹிமையினால், பந்துக்களையெல்லாம் ஒருவர்க்கும் தெரியாதபடி அவ்விடம் கொண்டு போய்ச் சேர்த்து மீண்டு, மதுரைக்கு வந்து, ராமனுடன் கலந்தாலோசித்து, பத்ம (தாமரை) மாலையைத் தரித்து, ஆயுதமொன்றுமில்லாமலே பட்டணத்தின் வாசலினின்று புறப்பட்டான்.
ஐம்பதாவது அத்தியாயம் முற்றிற்று.