ஶ்ரீமத் பாகவதம் - 265

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நாற்பத்தொன்பதாவது அத்தியாயம்

(அக்ரூரன் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று ஸமாசாரம் (செய்தி) தெரிந்து கொண்டு வந்து ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சொல்லுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த அக்ரூரன் கௌரவேந்த்ரர்களுடைய புகழ்களை வெளியிடுகிற தேவாலயம் முதலியவைகளால் அடையாளம் செய்யப் பெற்ற ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று, அங்கு பீஷ்மருடன் கூடியிருக்கின்ற த்ருதராஷ்ட்ரனையும், விதுரனையும், குந்தியையும், பாஹ்லிகனையும், அவன் பிள்ளையாகிய ஸோமதத்தனையும், க்ருபாசார்யரையும், த்ரோணாசார்யரையும், கர்ணன், துர்யோதனன் அச்வத்தாமா இவர்களையும், பாண்டவர்களையும், மற்றுமுள்ள நண்பர்களையும் கண்டான். 

அவ்வக்ரூரன், உரியபடி பந்துக்களைக் கிட்டி, அவர்களால் க்ஷேமம் விசாரிக்கப் பெற்று, தானும் அவர்களை க்ஷேமம் வினவினான். துஷ்டர்களான பிள்ளைகளுடையவனும், மனோதைர்யம் அற்பமாயிருக்கப் பெற்றவனும், அற்ப புத்திகளான கர்ணாதிகளின் அபிப்ராயத்தை அனுஸரிக்கும்  தன்மையனுமாகிய ராஜனான த்ருதராஷ்ட்ரனுடைய நடத்தையை ஆராயும் பொருட்டு, அவ்விடத்தில் சிலமாதங்கள் வஸித்திருந்தான். யுதிஷ்டிரனிடத்தில் ப்ரஜைகளுக்கு ப்ரீதி உண்டாயிருப்பதையும், அவர்களுடைய தேஜஸ்ஸு (பராக்ரமம்), ஓஜஸ்ஸு (ஆயுதங்களைத் தாங்கும் திறன்), பலம் (உடல் வலிமை), வீர்யம்  (வீரம்), வணக்கம் (அடக்கம்), நாட்டு மக்களிடம் அன்பு முதலிய குணங்களையும், பொறுக்க முடியாதிருக்கின்ற த்ருத்ராஷ்ட்ரன் பிள்ளைகளான துர்யோதனாதிகள் செய்த விஷம் கொடுத்தது முதலிய கொடுஞ் செயல்களும், இன்னும் அவர்கள் செய்ய நினைத்திருப்பதும் ஆகிய எல்லாவற்றையும் ப்ருதையும் (குந்தியும்), விதுரனும் அக்ரூரனுக்குச் சொன்னார்கள். ப்ருதை (குந்தி) முன்னமே தன் ப்ராதாவான அக்ரூரன்  வந்திருப்பதைக் கண்டு, அவனிடம் சென்று, பிறந்த அகத்தை நினைத்துக் கொண்டு, கண்ணும், கண்ணீருமாய் அந்த அக்ரூரனைக் குறித்து இவ்வாறு மொழிந்தாள்.

ப்ருதை சொல்லுகிறாள்:- நல்லியற்கையுடையவனே! என் தாய் தந்தைகளும், சகோதரர்களும், சகோதரிகளும், சகோதரர்களின் புத்ரர்களும், உறவுப் பெண்களும், தோழிகளும் எங்களை  நினைக்கின்றார்களா? எங்கள் ப்ராதாவாகிய வஸுதேவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தவனும், சரணம் அடையத் தகுந்தவனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), பக்தர்களுடைய தோஷங்களைப் பாகையாகக் கொள்ளும் (பாகை - உபஹாரம்) தன்மையனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனும், தாமரைக்கண்ணனாகிய பலராமனும், அத்தையின் பிள்ளைகளான யுதிஷ்டிராதிகளை நினைக்கிறார்களா? 

செந்நாய்களிடையில் அகப்பட்ட மான் பேடை (பெண் மான்) போல், சத்ருக்களின் (எதிரிகளின்) இடையில் அகப்பட்டு வருந்துகின்ற என்னையும், தந்தையற்றவர்களான என் பிள்ளைகளையும், அந்த ராம, க்ருஷ்ணர்கள் வந்து, நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்துவார்களா? இவ்வாறு குந்தி அக்ரூரனைப் பார்த்து மொழிந்து, ஸ்ரீக்ருஷ்ணனை நினைத்து, புத்தியில் தோன்றுகிற அந்தப் பகவானை வேண்டுகிறாள்.  

ஸ்ரீக்ருஷ்ணா! எல்லாம் அறிந்தவனே! அறிஞர்களில் உனக்கு மேற்பட்டவர்கள் உண்டோ? அனைவர்க்கும் அந்தராத்மாவாயிருப்பவனே! எங்கள் வருத்தம் உனக்குத் தெரியவில்லையா? ஜகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இப்பூமியில் அவதரித்தவனே! குழந்தைகளுடன் வருத்தமுற்று உன்னையே சரணம் அடைகின்ற என்னைப் பாதுகாப்பாயாக.  

ம்ருத்யு ரூபமான ஸம்ஸாரத்தினின்று பயப்படுகின்ற ப்ரம்ஹ, ருத்ராதிகளுக்கும், உன் பாதார விந்தமே மோக்ஷம் கொடுக்கின்றது. நீயே ஸர்வேச்வரன். ஆகையால், ப்ராணிகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பது, உன் பாதார விந்தங்களேயன்றி, மற்றொன்றும் அன்று. (ப்ரஹ்மாதிகளும், எங்களைப் போல உன்னைச் சரணம் அடைய வேண்டியவர்களேயன்றி, சரணம் அடையத் தகுந்தவர்களல்லர்). ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய தோஷங்களற்றவனும், அளவற்ற ஸ்வரூப, ரூப குணாதிகளையுடையவனும், அனைத்திற்கும் அந்தராத்மாவாயிருந்து நியமித்துக் கொண்டிருப்பவனும், யோகேச்வரனும், யோக ஸ்வரூபனும், ஸர்வவித பந்துவும், இஹ (இந்த உலக), பர லோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகங்களையும், மோக்ஷ ஸுகத்தையும் கொடுப்பவனுமாகிய  உனக்கு நமஸ்காரம். இத்தகையனாகிய உன்னை நான் சரணம் அடைந்தேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! உன் கொள்பாட்டியாகிய ப்ருதை என்னும் குந்தி இவ்வாறு ஜகதீச்வரனாகிய  ஸ்ரீக்ரூஷ்ணனையும், மற்றுமுள்ள பந்துக்களையும் நினைத்து வருந்தி கண்ணீர் பெருக்கினாள். அவளோடொத்த ஸுக துக்கங்களையுடைய அக்ரூரனும் சுக துக்கங்களிரண்டையும் துல்யமாக பாவிக்கும் ஞானியும், பெரும்புகழனுமாகிய விதுரனும், அவள் பிள்ளகளின் பிறவிக்குக் காரணர்களான யமன், வாயு முதலிய தேவதைகளின் மஹிமையைச் சொல்லி, “உனக்கு ஒரு குறையும் இல்லை” என்று சமாதானப்படுத்தினார்கள். 

அக்ரூரன் மதுராவிற்குத் திரும்பிப் போக முயன்று, பிள்ளைகளிடத்தில் பெரு விருப்பமுடையவனும், ப்ராதாவின் பிள்ளைகளான யுதிஷ்ட்ராதிகளிடத்தில் விஷம புத்தியனும் (தீய மனம் கொண்டவனும்) ஆகிய த்ருதராஷ்ட்ர மன்னவனிடம் சென்று, பந்துக்களான க்ருஷ்ணாதிகள் சொல்லியனுப்பின ஸமாசாரத்தை (நன்மை நாடும் செய்தியை) உற்றார், உறவினர், நண்பர்கள் நிறைந்த ஸபையில் இவ்வாறு மொழிந்தான்.

அக்ரூரன் சொல்லுகிறான்:- விசித்ர வீர்யனுடைய பிள்ளையாகிய த்ருதராஷ்ட்ரனே! கெளரவர்களின் புகழை வளரச் செய்பவனே! உன் ப்ராதாவன பாண்டு ஸ்வர்க்கம் அடைந்த பின்பு, இப்பொழுது நீ ராஜ ஸிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கின்றாய். தர்மம் தவறாமல் பூமியைப் பாதுகாப்பவனும், பக்ஷபாதமின்மை (ஓரவஞ்சனை இல்லாதிருத்தல், ஏற்றத்தாழ்வு இன்றி நடந்து கொள்ளுதல்) முதலிய நல்லியற்கையால் ப்ரஜைகளைக் களிப்புறச் செய்பவனும், தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரிடத்திலும் வைஷம்யமின்றி (வேறுபாடின்றி) ஒரு வகையனுமாயிருப்பாயாயின், நன்மையையும் புகழையும் பெறுவாய். வேறு விதமாக நடப்பாயாயின், உலகங்களால் பழிக்கப்பட்டு, நரகத்தை அடைவாய். ஆகையால், பாண்டவர்களிடத்திலும், உன் பிள்ளைகளிடத்திலும், வைஷம்யமின்றி (வேறுபாடின்றி) ஏகரூபனாயிருப்பாயாக. 

இவ்வுலகத்தில், ஒருவன் மற்றொருவனோடு என்றும் பிரியாமல் கலந்திருக்கிறான் என்பது கிடையாது. (ப்ராணிகள், தங்கள் புண்ணிய பாப கர்மங்களுக்கு உட்பட்டு, ஒன்றோடொன்று சேருவதும்,  பிரிவதுமாயிருக்கும்). ராஜனே! தன் தேஹத்தோடும் கூட என்றும் பிரியாமல் சேர்ந்திருக்கிறான் என்பது கிடையாது. ஆன பின்பு, தேஹ அனுபந்திகளான (உடலோடு உடன் வருபவர்களான) மனைவி, மகன் முதலியவைகளோடு என்றும் கலந்திருக்க முடியாது என்பதைப் பற்றிச்  சொல்லவும் வேண்டுமோ? ஜந்து தான் ஒருவனாகவே பிறக்கின்றான். பிள்ளை, பெண்டிர்களோடு கூடவே பிறக்கிறான் என்பது இல்லை. அவ்வாறு ஒருவனாகவே மரணம் அடைகின்றான். மரணம் அடைகின்றவனோடு அவன் மனைவி முதலியவர்களும் மரணம் அடைவதில்லையல்லவா? அவன் ஜீவித்திருக்கும் போதும், தன் தேஹத்தை பற்றின ஸுக, துக்கங்களை தான் ஒருவனே அனுபவிக்கின்றான். 

மத்ஸ்யத்தின் ஜீவனமான ஜலத்தை அதன் குட்டிகள் பறிப்பது போல, மதி கெட்டுத் தர்ம மார்க்கத்தைத் தவிர்த்து, அதர்ம வழியில் இழிந்து, ஸம்பாதித்து வைத்த பணத்தை, பேரன்மார்கள், போஷிக்கத் தகுந்தவர்கள், கூட அனுபவிக்க வேண்டியவர்கள் என்கிற சாக்குகளைக் காட்டி, பிள்ளை, பெண்டிர் போன்ற உறவினர்களே பறித்துக் கொண்டு போகிறார்கள். தான் புத்தி பூர்வமாக அதர்மத்தைத் தொடர்ந்து எவைகளை போஷிக்கிறானோ, அந்த ப்ராணன்களும் (தேஹமும்), பணங்களும், பிள்ளை, பெண்டிர் முதலியவர்களும், அவ்வாறு போஷித்தவன் அவற்றால் பெற விரும்பின போகங்களை அனுபவிக்காமலே மரணம் அடைகையில், அவனைத் துறக்கின்றன. (போகங்களை அனுபவிக்க விரும்பித் தன் தேஹத்தை போஷித்துப் பணம் ஸம்பாதிக்க முயன்று, க்ரமமான வழியில் (நேரான வழியில்) பணம் கிடைக்காமையால் அதர்ம மார்க்கத்தில் (தவறான வழியில்) இழிந்து, பணத்தைச் சம்பாதித்து, அதை வளர்த்து, பெண்டிர், பிள்ளை, முதலியவர்களைப் போஷித்துக் கொண்டு வருகையில், அவன் தான் பணம் ஸம்பாதிப்பதற்காகச் செய்த பாபகர்மங்களால் ஆயுள் க்ஷீணிக்கப் (குறையப்) பெற்று, விரும்பின போகங்களை அனுபவிக்கப் பெறாமலே மரணம் அடைகின்றான்). 

தானே தனக்கு அனர்த்தங்களை (கெடுதிகளை) விளைத்துக் கொள்வதில் ஸமர்த்தனாகிய அம்மனிதன், மரணம் அடைந்த பின்பு, தான் போஷித்து வந்த ப்ராணன் முதலியவைகளால் துறக்கப்பட்டு, தான் செய்த பாப கார்யங்களை எடுத்துக் கொண்டு, தன் விருப்பம் நிறைவேறப் பெறாமலே தன்னுடைய வர்ணாச்ரமங்களுக்கு ஏற்பட்ட தர்மங்களில் விமுகனாய் (ஈடுபடாமல்) இருந்தானாகையால், அந்ததாமிஸ்ரம் என்னும் நரகத்தை அடைகின்றான். 

(ஐந்தாவது ஸ்கந்தம் 26வது அத்யாயத்தில் அந்ததாமிஸ்ரமென்னும் நரகம் பற்றிக் கூறப்பட்டுள்ளதைக் காண்க)

ப்ரபூ! ராஜனே! உண்மை இதுவாகையால், தேஹம் (உடல்), தேஹத்தைத் தொடர்ந்தவை (உடலோடு தொடர்புடையவை) முதலிய இவ்வுலகமெல்லாம் ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற வஸ்துக்களைப் போலவும் ஆச்சர்யமான மனோரதத்தில் (கற்பனையில்) அனுபவிக்கிற வஸ்துக்களைப் போலவும்  நச்வரங்கள் (அழியக்கூடியவை) என்று நிச்சயித்துத் தன் புத்தியினால் தன்னை அடக்கிக் கொண்டு,  எல்லாவற்றிலும் ஸமபுத்தியனாகி, ராக (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலியவையின்றி இருப்பாயாக.

த்ருதராஷ்ட்ரன் சொல்லுகிறான்:- தானபதீ! (தானஞ் செய்யும் தன்மையனே!) மஹோதாரனே! (பெரும் வள்ளலே!) மூடனையும் கூட ஜ்ஞான உபதேசத்தினால் (அறிவைக் கற்பிப்பதால்) பிழைப்பிக்க வேண்டுமென்று விரும்புகிற உன்னுடைய ஒளதார்யம் (வள்ளல் தன்மை) மற்ற எவர்க்கும் உண்டாகாது. நீ மங்களகரமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கையில், எவ்வளவு கேட்கினும் எனக்குச் சிறிதும் த்ருப்தி உண்டாகவில்லை. மரணம் அடையும் தன்மையுள்ளவன், அம்ருதத்தைப் புசித்து, எவ்வாறு த்ருப்தி அடைய மாட்டானோ, அவ்வாறே நானும் உன் வார்த்தைகளால் த்ருப்தி அடையாதிருக்கின்றேன். 

நல்லியற்கையுடையவனே! உன் வாக்கு இனிதும், அமுதமுமாயிருக்கின்றது. ஆயினும், அது பிள்ளைகளிடத்திலுண்டான அனுராகத்தினால் (பாசத்தினால்) வைஷம்யமுடையதும் (ஏற்றத்தாழ்வுடையதும்), நிலையற்றதுமாகிய என் மனதில் மின்னல் போல்  நிலை பெறாமல், உடனே மறைகின்றது. பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டு, யது குலத்தில் அவதரித்த ஸர்வேச்வரனுடைய  நினைவை எவன்தான் வேறு விதமாக மாற்ற வல்லவனாவான்? (என் பிள்ளைகளைக் கொன்று முடிக்க விரும்புகிற பகவானுடைய ஸங்கல்பத்திற்குத் தகுந்தபடி என் புத்தி அவன் மாயையால் மயங்கி, எவ்வளவு இழுத்துப் பார்க்கினும் திரும்பி வராமல், கோண வழியிலேயே நடக்கின்றது). 

எவன் பிறரால் வருந்தியும் அறிய முடியாத  தன் மாயையினால் இந்தப் ப்ரபஞ்சத்தையெல்லாம் படைத்து, ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி, புழு வரையிலுள்ள எல்லா சரீரங்களிலும் ஜீவாத்மாக்களுக்கு அந்தராத்மாவாய்ப் புகுந்து, அந்த ப்ரஹ்மாதிகளுக்கு சப்தாதி விஷயங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறானோ, அத்தகைய ஸர்வேச்வரனுடைய லீலா விபூதியாகிய (விளையாட்டிற்கான, பொழுதுபோக்கிற்கான) ஸம்ஸார சக்கரத்தின் கதி ஒருவராலும் அறிய முடியாது. அப்பரமபுருஷனுக்கு நமஸ்காரம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- யாதவனாகிய அந்த அக்ரூரன் இவ்வாறு த்ருதராஷ்ட்ர மன்னவனுடைய அபிப்பராயம் அறிந்து கொண்டு, நண்பர்களாகிய பாண்டவர்களால் நன்கு அனுமதி கொடுக்கப் பெற்று, யாதவர்களின் பட்டணமாகிய மதுராபுரிக்குத் திரும்பி வந்தான். கௌரவ ச்ரேஷ்டனே! பாண்டவர்கள் விஷயத்தில் த்ருதராஷ்ட்ரன் என்னென்ன நடத்தினானோ, தான் எதைத் தெரிந்து கொண்டு வரப் போனானோ, அதையெல்லாம் அந்த அக்ரூரன் ஸ்ரீகிருஷ்ண, ராமர்களுக்கு மொழிந்தான். 

நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

பத்தாவது ஸ்கந்தத்தின் பூர்வபாகம் முற்றுப்பெற்றது.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை