ஶ்ரீமத் பாகவதம் - 134

ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்தாறாவது அத்தியாயம்


(அதற்குக் கீழுள்ள நரகத்தின் நிலைமையைக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹர்ஷி! இவ்வுலகங்கள் ஸுக துக்கங்களின் தாரதம்யத்தினால் (ஏற்றத்தாழ்வுகளால்) ஒன்றுக்கொன்று விலக்ஷணமாயிருக்கும் (வேறுபட்டிருக்கும்) என்று மொழிந்தீர். அது எப்படிப் பொருந்தும். ஜீவாத்மாக்கள் ஒருவாறாகச் செய்யும் புண்யகர்மங்களால் பூலோகம் முதலிய லோகங்களை அடைகையில், சிலருக்கு ஸுகமேயென்றும், சிலருக்கு துக்கமேயென்றும், சிலருக்கு இரண்டும் கலந்திருக்குமென்றும் சொன்னதற்குக் காரணமென்ன? தெரியவில்லை. அதை மொழிவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனைவரும் பூமி முதலிய லோகங்களைப் பெறுதற்காகச் செய்யும் தர்மங்கள் ஒரேவகையாய் இருந்தாலும், அவற்றைச் செய்யும் ஜீவாத்மாக்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் என்கிற மூன்றுவகை குணங்கள் உடையவர்களாகையால், அவர்களுடைய ச்ரத்தைகளும் அக்குணங்களால் மூன்று வகைப்பட்டிருக்கும் ஆகையால் கர்மங்களின் பலன்களாகிய எல்லா லோகங்களும் எல்லோர்க்கும் தாரதம்யம் (ஏற்றத்தாழ்வுகள்) உடையவைகளாகவே உண்டாகின்றன அங்கனமே சாஸ்த்ரங்களில் இதைச் செய்யலாகாதென்று நிஷேதிக்கப்பட்ட கார்யங்களைச் செய்கையாகிற அதர்மமும் அதைச் செய்பவனும் அவனுடைய ச்ரத்தையும் பலவாறாயிருக்குமாகையால் அந்த அதர்மத்தின் பலனான துக்கமும் தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வுகளை) உடையதாகவே இருக்கும். அநாதியான (ஆரம்பம் இது என்று சொல்ல முடியாமல் தொன்று தொட்டு வரும்) அஜ்ஞானத்தினால் பலன்களை விரும்பிச் செய்யும் பாபகர்மங்கள் பலவாகையால் அவற்றின் பலன்களான கதிகளும் எல்லையற்றிருக்கும். அவற்றில் முக்யமானவற்றைச் சொல்லுகிறோம் கேட்பாயாக.


மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! நரகம் என்பவை பூமியில் அடங்கின சில தேசவிசேஷங்களா? அல்லது மூன்று லோகங்களுக்கும் வெளிப்பட்டவைகளா? அல்லது மத்யத்தில் (நடுவில்) இருக்கின்றனவைகளா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நரகமென்னும் தேசங்கள் மூன்று லோகங்கள் அடங்கின இந்த ப்ரஹ்மாண்டத்திற்குள் தென்திக்கில் பூமியின் கீழ்ப்பாகத்தில் அண்ட  ஜலத்திற்கு (ப்ரபஞ்சத்தைச் சுற்றியுள்ள தன்ணீருக்கு) மேல் இருக்கின்றன. தென் திசையில் அக்னிஷ்வாத்தர் முதலிய பித்ருகணங்கள் தமது கோத்ரங்களுக்கு உண்மையான ஆசீர்வாதங்களைச் செய்துகொண்டு சிறந்த ஸமாதியோகத்துடன் இருக்கிறார்கள். அந்தத் தென் திக்கில் பித்ருக்களுக்கு அதிபதியாகிய யமன் உலகத்தில் மரணம் அடைந்தவர்களைத் தூதர்கள் தன் தேசத்திற்குக் கொண்டு வருகையில், பகவானால் ஆஜ்ஞை செய்யப்பட்டு அதை உல்லங்கனம் செய்ய (மீற) முடியாமல் தன் தூதர்களுடன் கூடி அவர்கள் செய்த பாபகர்மங்களுக்குத் தகுந்தபடி தண்டனை விதித்துக் கொண்டிருக்கிறான். மன்னவனே! சிலர் நரகங்கள் இருபத்தொன்றென்று சொல்லுகிறார்கள். அவற்றின் பேர்களையும் ஸ்வரூபத்தையும் அடையாளங்களையும் க்ரமமாகச் சொல்லுகிறோம். 

தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரௌரவம், மஹாரௌரவம், கும்பீபாகம், காலஸூத்ரம், அஸிபத்திரம், ஸுகாமுகம், அந்தகூபம், க்ரிமிபோஜனம், ஸந்தம்சம், தப்தஸர்மி, வஜ்ரகண்டகம், சால்மலி, வைதரணி, பூபோதம், ப்ராணிரோதம், விசஸனம், லாலாபக்ஷம், ஸாரமேயாதம், அவீசி, அயப்பானம் என்பவைகளாம். மற்றும், க்ஷாரகர்த்தமம், ரக்ஷோகண போஜனம், சூலரோதம், தந்தசூகம், அவடநிரோதனம், பர்யாவர்த்தனம், ஸுசீமுகம் என்னும் இவ்வேழும் சேர்ந்து இருபத்தேழு நரகங்கள். இவை பலவகையான துக்கங்களை அனுபவிக்கும் பூமிகள். 

1. தாமிஸ்ரம்
எவன் இவ்வுலகத்தில் பிறனுடைய பணம், பிள்ளை, பெண்டிர் இவைகளில் ஏதேனுமொன்றைப் பறிக்கிறானோ, அவன் மிகவும் பயங்கரர்களான யமதூதர்களால் யமபாசத்தினால் கட்டுண்டு பலாத்காரமாகத் தாமிஸ்ரமென்னும் நரகத்தில் தள்ளப்படுகிறான். அதில் தள்ளுண்ட புருஷன் பசியெடுத்து ஆஹாரம் நேராமை, தண்ணீர் தாஹம் எடுத்துத் தண்ணீர் நேராமை, தடியடி விரட்டுதல் முதலிய பல யாதனைகளால் (நரக வேதனைகளால்) பீடிக்கப்பட்டு மிகவும் துக்கித்து அப்பொழுதே இருள் மூடிய அவ்விடத்தில் மூர்ச்சை அடைவான். 

2. அந்ததாமிஸ்ரம்
பிறனை வஞ்சித்து அவனுடைய தாரம் (மனைவி) முதலியவற்றை அனுபவிப்பவன் அந்த தாமிஸ்ர நரகத்தில் யமபடர்களால் தள்ளுண்பான். அதில் தள்ளப்பட்ட புருஷன் க்ரூரமான யாதனைகளால் (நரக வேதனைகளால்) பீடிக்கப்பட்டு அந்த வேதனையைப் பொறுக்கமுடியாமல் நினைவு தப்பிக் கண் தெரியாமல் வேரறுந்த வ்ருக்ஷம் (மரம்) போல விழுவான். ஆகையால் அந்நகரத்தை அந்ததாமிஸ்ரம் என்று சொல்லுகிறார்கள்.

3,4 ரௌரவம், மஹாரௌரவம்
உலகத்தில் சரீரத்தை ஆத்மாவென்றும், பிள்ளை பெண்டிர் முதலியவர்களை என்னுடையதென்றும் நினைத்து ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்தே தன் குடும்பத்தை மாத்ரம் தினந்தோறும் போஷிக்கிறவன் தன் குடும்பத்தை இங்கேயே துறந்து தானொருவன் மாத்ரமே அந்தப் பாபகர்மத்தினால் ரௌரவமென்னும் நரகத்தில் விழுகிறான். அவன் இவ்வுலகத்தில் எந்தெந்த ஜந்துக்களை எங்கனம் ஹிம்ஸித்தானோ, அவையெல்லாம் ருருக்களென்னும் ஜந்துக்களாய் வந்து யம யாதனைகளை (நரக வேதனைகளை) அனுபவிக்கின்ற அவனை அங்கனமே ஹிம்ஸிக்கின்றன.
ருருக்களாவன:- ஸர்ப்பங்களைக் காட்டிலும் மிகவும் க்ரூரமான ஜந்துக்கள். ஆகையால் அந்நரகத்தை ரௌரவம் என்கிறார்கள். மஹாரௌரவத்திலும் இப்படியே. அதில் விழுந்த புருஷனுடைய மாமிஸத்தை அந்த ருருக்கள் தாமும் பிடுங்கித்தின்று அவனையும் தன் மாம்ஸத்தைத் தானே தின்னும்படி செய்கின்றன.

5. கும்பீபாகம்
இவ்வுலகத்தில் தன் தேஹத்தை மாத்ரம் போஷிக்கிறவனும் மன இரக்கமின்றிக் கொடுந்தன்மையனாய்ப் பசுக்கள் பக்ஷிகள் முதலிய ப்ராணிகளைப் பக்வம் செய்து (சமைத்து) புசிக்கிறவனும் (உண்பவனும்) புருஷர்களைப் பிடுங்கிப் பக்ஷிக்கும் (உண்ணும்) தன்மையுள்ள ராக்ஷஸர்களால் நிந்திக்கப்பட்டுப் பரலோகத்தில் கும்பீபாக நரகத்தில் காய்ச்சின எண்ணெயில் யமபடர்களால் தள்ளுண்டு பசனம் செய்யப்படுவான் (சமைக்கப்படுவான்). கொதித்துக்கொண்டிருக்கிற எண்ணெய்க் கொப்பறையில் பாகம் (சமையல்) செய்கின்றார்களாகையால் அந்நரகம் கும்பீபாகமென்று பேர்பெற்றது. 

6. காலஸூத்ரம்
இவ்வுலகத்தில் எவன் மாதாவையாவது பிதாவையாவது ப்ராஹ்மணனையாவது வதிக்கிறானோ, அவன் காலஸூத்ரமென்னும் நரகத்தில் பதினாயிரம் யோஜனை சுற்றளவுடையதும் தாம்ரத்தினால் செய்யப்பட்டதும் மேடுபள்ளமில்லாமல் ஸமமாயிருப்பதும் மேலே ஸூர்யனாலும் கீழே அக்னியாலும் தபிக்கப்படுவதுமாகிய ஓரிடத்தில் தள்ளுண்டு பசி தாஹங்களால் சரீரம் உள்ளும் புறமும் தஹிக்கப்பட்டு உட்காருவதும் படுத்துக் கொள்வதும் நிற்பதும் ஓடுவதும் “ஐயோ என்னை விடுவீர்களாக” என்று வேண்டுவதுமாகிப் பசுவின் சரீரத்தில் எத்தனை ரோமங்கள் உண்டோ அத்தனையாயிரம் வர்ஷங்கள் வரையில் அந்நரகத்தில் இருப்பான். துக்க அனுபவ காலம் பலவாயிருக்கையால் அந்த நரகத்திற்குக் காலஸூத்ரமென்னும் பேர் விளைந்தது.

7. அஸிபத்திரம்
இவ்வுலகத்தில் எவன் ஆபத்தில்லாத காலத்தில் வைதிகமான வர்ணாச்ரம ஆசாரத்தினின்று நழுவிப் போகிறானோ, அல்லது வேதங்களிலும் ஸ்ம்ருதிகளிலும் சொல்லப்படாததும் கேவலம் தன் புத்தியினால் கற்பிக்கப்பட்டதும் குத்ஸிதமார்க்கமும் (வெறுக்கத்தக்க வழியும்), ஆபாஸ தர்மமுமாகிய (பொய்யானதும், தவறானதுமான) பாஷண்ட தர்மத்தைக் (வேத வழிமுறையில் நம்பிக்கை இல்லாத வாழ்க்கை முறையைக்) கைப்பற்றுகிறானோ, அவனை யமபடர்கள் அஸிபத்திரமென்னும் நரகத்தில் தள்ளி அதில் நடந்து வரும்படி அடிப்பார்கள். அவன் அவ்வேதனையைப் பொறுக்க முடியாமல் ஓடுவான். இருபுறத்திலும் கூருடைய கத்திகள் போன்ற அந்த பனங்காட்டிலுள்ள பனையோலைகளால் அங்கங்களெல்லாம் அறுப்புண்டு “ஐயோ ஐயோ பாழானேன்” என்று மொழிந்து கொண்டு பெருவேதனையால் அடிக்கடி மூர்ச்சித்து விழுவான் . இங்கனமே தனது வர்ணாச்ரம தர்மத்தைத் துறந்தவன் பாஷண்ட தர்மத்தில் (வேத வழிமுறையில் நம்பிக்கை இல்லாத வாழ்க்கை முறையில்) நுழைந்தவன் அனுபவிக்கும் துக்கத்தையே அனுபவிப்பான்.  இந்நரகத்தில் கத்தி போன்ற இலைகளையுடைய பனங்காடுகள் இருக்கின்றமையால் இதற்கு அஸிபத்ரவனமென்னும் பேர் யதார்த்தமாயிருக்கும். 

8. ஸுகாமுகம் (பன்றியின் முகம்)
இவ்வுலகத்தில் ராஜனாவது ராஜபுருஷனாவது தண்டிக்கத்தகாதவனைத் தண்டிப்பானாயின், அல்லது ப்ராஹ்மணனுக்குச் சரீரதண்டனை விதிப்பானாயின் பாபிஷ்டனாகிய அவன் பரலோகத்தில் ஸுகாமுகமென்னும் நரகத்தில் விழுவான். பன்றியின் முகம் போன்ற முகமுடையவைகளும் பலிஷ்டங்களுமான (அதிக பலமுடைய) ஜந்துக்கள் கரும்புத்தண்டை யானை முறிப்பதுபோல், அவனுடைய அவயவங்களையெல்லாம் பீடிக்கும். அவன் பெருங்குரல் பாய்ச்சிப் புலம்பி, முன்பு இவ்வுலகத்தில் தோஷமில்லாதவர்கள் அவனால் பீடிக்கப்பட்டு வருந்தி எங்கனம் மூர்ச்சித்தார்களோ அங்கனமே மோஹத்தை (மயக்கத்தை) அடைவான். 

9. அந்தகூபம்
இவ்வுலகத்தில் பரமபுருஷனால் வர்ணாச்ரம தர்மங்களுக்குரியபடி கற்பிக்கப்பட்ட ஜீவனமுடையவனும் பிறனுடைய துக்கத்தை நன்குணர்ந்தவனுமாகிய புருஷன் மனுஷ்யனுடைய ரத்தத்தைப் பானம் பண்ணுகை முதலியவற்றையே ஜீவனமாகப் பெற்றவைகளும் பிறனுடைய துக்கத்தை அறியாதவைகளுமான மூட்டைப் பூச்சி கொசு முதலிய ப்ராணிகளை ஹிம்ஸிப்பானாயின், அவன் அங்கனம் ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்த பாபத்தினால் அந்தகூபமென்னும் நரகத்தில் விழுவான். ஐயோ! இவன்தான் முன்பு ஹிம்ஸித்த பசு, பக்ஷி, ஸர்ப்பம், கொசு, பேன், மூட்டைப்பூச்சி, ஈ முதலிய ஜந்துக்களால் நாற்புறத்திலும் ஹிம்ஸிக்கப்பட்டு நித்ரையிலுண்டாகும் ஸுகம் சிறிதுமின்றி ஓரிடத்திலும் நிற்கப்பெறாமல், வ்யாதி முதலியவற்றால் பீடிக்கப்பட்டு ஸஞ்சரிக்க முடியாத சரீரத்தில் அடைப்புண்ட ஜீவன் தூக்கமின்றி  வருந்துவது போலப் பெரிய அந்தகாரத்தில் (இருட்டில்) சுற்றிக்கொண்டிருப்பான். 

10. க்ரிமிபோஜனம்
இவ்வுலகத்தில் தனக்குக் கிடைத்த அன்னாதிகளை அதிதிகளுக்குக் கொடுக்காமல் தானே புசிக்கின்றவனும் (உண்பவனும்) பஞ்சமஹா யஜ்ஞங்களை {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்)} நடத்தாதவனும் வாயஸம் (காக்கை) போன்றவனென்று நிந்திக்கப்பட்டுப் பரலோகத்தில் க்ரிமிபோஜனமென்னும் பாபிஷ்டமான நரகத்தில் விழுவான். அதில் நூறாயிரம் யோஜனையளவுடைய க்ரிமி (புழு) குண்டத்தில் தானும் ஒரு புழுவாய் அங்குள்ள புழுக்களால் பக்ஷிக்கப்பட்டுத் தானும் அந்தப் புழுக்களைப் பக்ஷித்துக்கொண்டு அந்த க்ரிமிகுண்டம் எத்தனை யோஜனை உள்ளதோ அத்தனை வர்ஷங்கள் வரையில் “நான் அதிதிகளுக்குக் கொடாமையாலும் பஞ்சமஹாயஜ்ஞாதிகளை அனுஷ்டிக்காமையாலும் இப்படி அனுபவிக்கிறேன்” என்கிற பரிதாபமுமின்றி துக்கத்தை அனுபவிப்பான். 

11. ஸந்தம்சம்
இவ்வுலகத்தில் எவன் தனக்கு ஆபத்தில்லாத ஸமயத்தில் திருட்டுத்தனத்தினாலாவது பலாத்காரமாயாவது ப்ராஹ்மணனுடைய ஸ்வர்ண ரத்னாதிகளையாவது மற்றவனுடைய ஸ்வர்ண ரத்னாதிகளையாவது அபஹரிக்கிறானோ அவனைப் பரலோகத்தில் யமபடர்கள் ஸந்தம்சமென்னும் நரகத்தில் தள்ளி நெருப்புப்போலப் பழுக்கக் காய்ச்சின இருப்புச் சூலங்களால் குத்துவார்கள். 

12. தப்தஸர்மி
இவ்வுலகத்தில் எந்தப் புருஷனாவது ஸ்த்ரீயாவது புணரத்தகாத (சேர்ந்து அனுபவிக்கத் தகாத) ஸ்த்ரீயை அல்லது புருஷனைப் புணர்கின்றார்களோ (சேர்ந்து அனுபவிக்கின்றார்களோ), அவர்களைப் பரலோகத்தில் தப்தஸர்மியென்னும் நரகத்தில் தள்ளிச் சாட்டையால் அடித்து இரும்பினால் ஆண் போலும் பெண்போலும் இயற்றி நெருப்பில் காய்ச்சப்பட்டு ஜ்வலிக்கின்ற ஸ்தம்பத்தை அணையும்படி செய்வார்கள்.

13. வஜ்ரகண்டகம், சால்மலி
இவ்வுலகத்தில் எவன் பணியத்தகுந்தவரென்றும் தகாதவரென்றும் பாராமல் எல்லோரையும் பணிகின்றானோ அவனைப் பரலோகத்தில் வஜ்ரகண்டகசால்மலி என்னும் நரகத்தில் தள்ளி வஜ்ரம் (இந்த்ரனுடைய ஆயுதம்) போன்ற முட்களையுடைய சால்மலி (ஒரு மரத்தின் பெயர்) வ்ருக்ஷத்தில் (மரத்தில்) ஏற்றி உடம்பெல்லாம் பீறச் செய்வார்கள். எந்த க்ஷத்ரியர்களாவது அவர்களுடைய புருஷர்களாவது தாங்கள் தர்ம மரியாதைகளைக் கடந்து பிறரையும் ஆசரிக்க வொட்டாமல் அவற்றைப் பாழ் செய்கின்றார்களோ அவர்கள் பரலோகம் சென்று வைதரணியென்னும் நரகத்தில் விழுகின்றார்கள். நரகத்திற்கு அகழி (நகரத்தின் பாதுகாப்பிற்காக நகரைச் சுற்றி ஆழமான பள்ளத்தில் நீர் நிரப்பி பாம்பு, முதலை முதலிய கொடிய ஜந்துக்களுடன் கூடிய பாதுகாப்பு வளையம் அகழி எனப்படும்) போன்ற வைதரணியென்னும் அந்நதியில் மகரமீன், முதலை முதலிய கொடிய ஜலஜந்துக்களால் பக்ஷிக்கப்பட்டும் (உண்ணப்பட்டும்) தமது பாபத்தினால் தேஹம் நீங்கப்பெறாமல் ப்ராணன்களோடு கூடி “இது நாம் செய்த பாபகர்மத்தின் பலன்” என்று நினைத்து விஷ்டை, மூத்ரம், சீரக்தம், மயிர், நகம், எலும்பு, மேதஸ்ஸு, மாம்ஸம், மஜ்ஜை இவற்றின் வெள்ளம் நிறைந்த அந்நதியில் வருந்துவார்கள். 

14. வைதரணி
எந்த க்ஷத்ரியர்களாவது அவர்களுடைய புருஷர்களாவது தாங்கள் தர்ம மரியாதைகளைக் கடந்து பிறரையும் ஆசரிக்க வொட்டாமல் அவற்றைப் பாழ் செய்கின்றார்களோ அவர்கள் பரலோகம் சென்று வைதரணியென்னும் நரகத்தில் விழுகின்றார்கள். நரகத்திற்கு அகழி (நகரத்தின் பாதுகாப்பிற்காக நகரைச் சுற்றி ஆழமான பள்ளத்தில் நீர் நிரப்பி பாம்பு,முதலை முதலிய கொடிய ஜந்துக்களுடன் கூடிய பாதுகாப்பு வளையம் அகழி எனப்படும்) போன்ற வைதரணியென்னும் அந்நதியில் மகரமீன், முதலை முதலிய கொடிய ஜலஜந்துக்களால் பக்ஷிக்கப்பட்டும் (உண்ணப்பட்டும்) தமது பாபத்தினால் தேஹம் நீங்கப்பெறாமல் ப்ராணன்களோடு கூடி “இது நாம் செய்த பாபகர்மத்தின் பலன்” என்று நினைத்து விஷ்டை, மூத்ரம், சீரக்தம், மயிர், நகம், எலும்பு, மேதஸ்ஸு, மாம்ஸம், மஜ்ஜை இவற்றின் வெள்ளம் நிறைந்த அந்நதியில் வருந்துவார்கள்.

15. பூபோதம்
இவ்வுலகத்தில் மேன்மையுள்ள ப்ராஹ்மணாதி வர்ணங்களில் பிறந்து பிற வர்ணத்துப் பெண்ணை மணம் புரிந்து ஸ்நானாதி கர்மங்களையும் ஸந்தியாவந்தனாதி ஆசாரத்தையும் பக்ஷ்யாபக்ஷ்யாதி (உண்ணக்கூடியவை, உண்ணக்கூடாதவை முதலிய) நியமங்களையும் துறந்து வெட்கமின்றிப் பசுக்களைப்போல மனம் போனபடி நடக்கின்றவர்கள், பரலோகத்தில் சீவிஷ்ட்டை, மூத்ரம், கோழை, சொள்ளு முதலியவை நிறைந்து ஸமுத்ரம்போல் விஸ்தாரமாயிருப்பதாகிய பூபோதமென்னும் மடுவில் விழுந்து மிகவும் அஸங்க்யமான அந்த விஷ்டை முதலியவற்றைப் புசித்துக் கொண்டிருப்பார்கள். 

16. ப்ராணிரோதம்
இவ்வுலகத்தில் ப்ராஹ்மணாதி வர்ணத்தில் பிறந்தும் நாய், கழுதை முதலியவற்றை வளர்த்துக்கொண்டு தீர்த்தங்களில்லாத இடத்தில் மிருகங்களை வதிப்பார்களாயின், அவர்கள் மரணம் அடைந்து யமபடர்களால் ப்ராணிரோதமென்னும் நரகத்தில் தள்ளுண்பார்கள். யமபடர்கள் அவர்களை ப்ராணன் (உயிர்) ஒடுங்கும் படி பாணங்களால் அடிப்பார்கள். 

17. வைசஸனம்
இவ்வுலகத்தில் ஜனங்களை வஞ்சிக்க முயன்று நாமும் யஜ்ஞம் செய்தோமென்கிற ப்ரஸித்திக்காக யாகங்களைச் செய்யத் தொடங்கிப் பசுக்களை ஹிம்ஸிக்கிறவர்கள் பரலோகத்தில் வைசஸனமென்னும் நரகத்தில் விழுவார்கள். அவர்களை யமபுருஷர்கள் துக்கப்படுத்தி ஹிம்ஸிப்பார்கள்.

18. லாலாபக்ஷம்
இவ்வுலகத்தில் தன் வர்ணத்தில் பிறந்த பார்யையைக் காமத்தினால் மதிமயங்கித் தன் ரேதஸ்ஸைப் (ஆண் விந்து) பானம் செய்விக்கிறவன் பரலோகத்தில் லாலாபக்ஷமென்னும் நரகத்தில் விழுவான். அவனை யமபடர்கள் ரேதஸ்ஸு நிறைந்த கால்வாயில் தள்ளி ரேதஸ்ஸைப் பானம் செய்விப்பார்கள்.

19. ஸாரமேயாதனம்
இவ்வுலகத்தில் எவர்கள் வீடுகளில் நெருப்பை வைத்துக் கொளுத்துகிறார்களோ, எவர்கள் தெரியாமல் விஷங்கொடுத்துக் கொல்லுகிறார்களோ, எவர்கள் தாங்கள் ராஜபடர்களாயிருந்து அதிகாரத்தினால் கொழுத்துக் (பலம் உள்ளவர்களாய்) கருணையின்றிப் பட்டணம் க்ராமம் முதலிய இடங்களிலிருக்கும் ப்ராணிகளையும் மற்ற ஜீவ ஸமூஹங்களையும் ஹிம்ஸிக்கிறார்களோ, அவர்கள் மரணம் அடைந்து ஸாரமேயாதனமென்னும் நரகத்தில் விழுவார்கள். அவர்களை வஜ்ரம் போன்ற கோரைப் பற்களுடையவைகளாகிய எழுநூற்றிருபது நாய்கள் பரபரப்புடன் மேல்விழுந்து பக்ஷிக்கின்றன. 

20. அவீசி
இவ்வுலகத்தில் ஸாக்ஷி (witness) சொல்லும் பொழுதாவது, க்ரய விக்ரயாதி ரூபமான (வாங்குதல், விற்றல் என்கிற) வர்த்தக வ்யாபாரத்திலாவது எவன் பொய் சொல்லுகிறானோ அவன் மரணம் அடைந்து பெருவருத்தத்துடன் அவீசியென்னும் நரகத்தில் விழுவான். அவனை யமபடர்கள் நூறு யோஜனை தூரத்திற்கு மேல் எவ்விதத்திலும் பிடிப்பில்லாத இடத்தினின்று பர்வதத்தின் சிகரத்தில் விழும்படி தலை கீழாய்த் தள்ளுவார்கள். இந்நரகத்தில் தரையெல்லாம் கல்லாயிருக்கும். அது அலையெறிகிற ஜலம் போல் தோற்றும். இந்நரகத்தை அவீசியென்று சொல்லுவார்கள். அங்கனம் உயரத்தினின்று தள்ளுண்ட பாபி எள்ளு ப்ரமாணமான துண்டங்களாய்ச் சரீரம் முழுவதும் சிதறப்பெற்றும் மரணம் அடையமாட்டான். மீளவும் அங்கனமே தூக்கித் தள்ளுவார்கள். 

21. அயப்பானம்
இவ்வுலகத்தில் எந்த ப்ராஹ்மணனாவது ப்ராஹ்மண பத்னியாவது வ்ரதத்திலிருக்கிற மற்ற வர்ணத்தவனாவது ஸுராபானம் (கள், சாராயம் குடித்தல்) செய்கிறார்களோ, எந்த க்ஷத்ரியனாவது வைச்யனாவது மதிமயங்கி ஸோமபானம் (யாகம் செய்யும் புரோகிதர்கள் யாக முடிவில் அருந்தும் ஸோமம் என்ற கொடியைப் பிழிந்து எடுக்கும் சாறு) செய்கிறானோ, அவர்கள் அனைவரும் அயப்பானமென்னும் நரகத்தில் விழுவார்கள். யமபடர்கள் அவர்களைக் கீழ்விழத் தள்ளி மார்பில் காலால் மிதித்துக் கொண்டு உருக்கின இரும்பை அவர்கள் வாயில் கொட்டிக் குடிக்கச் செய்வார்கள்.

22. க்ஷாரகர்த்தமம்
இவ்வுலகத்தில் ஜன்மம் வித்யை ஆசாரம் வர்ணம் ஆச்ரமம் இவைகளால் தாழ்ந்தவனாயிருந்தும் அவற்றால் மேன்மையுற்ற பெரியோர்களை வெகுமதிக்காதிருப்பானாயின், அவன் ஜீவித்திருக்கும் காலத்தில் செத்தாற்போலவேயிருந்து மரணம் அடைந்து க்ஷாரகர்த்தமமென்னும் நரகத்தில் தலைகீழாய் விழுந்து அபாரமான யாதனைகளை (நரக வேதனைகளை) அனுபவிப்பான்.

23. ரக்ஷோகணபோஜனம்
இவ்வுலகத்தில் புருஷர்களை வதித்துப் பலிகொடுத்துப் பத்ரகாளி முதலிய தேவதைகளைப் பூஜிக்கிற புருஷர்களும், நர பசுக்களை வதிக்கிற மடந்தையர்களும் ரக்ஷோகணபோஜனமென்னும் நரகத்தில் விழுவார்கள். அந்தப் புருஷர்களாலும் ஸ்த்ரீகளாலும் முன்பு இவ்வுலகத்தில் நர பசுக்களாகக் கொண்டு வதிக்கப்பட்ட புருஷர்கள் அனைவரும் யம லோகத்தில் ராக்ஷஸக் கூட்டங்களாய் வந்து கொலைக்காரர்போல அவர்களைப் பலவாறு ஹிம்ஸித்துக் கத்தியினால் வெட்டி ரத்தத்தைப் பானம் செய்து, முன்பு அவர்கள் நரபலி கொடுத்த ஸந்தோஷத்தினால் நர்த்தனம் செய்தாற் போலவும் பாட்டுக்கள் பாடினாற் போலவும் நர்த்தனம் செய்து பாட்டுக்கள் பாடுவார்கள். 

24. சூலரோதம்
இவ்வுலகத்தில் க்ராமத்திலாவது, அரண்யத்திலாவது (காட்டிலாவது) நிரபராதிகளாய் (எந்த தவறும் செய்யாது) ஜீவிக்கும் ஜந்துக்களை எவர்கள் விச்வாஸத்தை விளைக்கும் உபாயங்களால் நம்பச்செய்து சூலம், ஸூத்ரம் முதலியவற்றில் மாட்டி விளையாட்டிற்காகப் பீடிக்கின்றார்களோ, அவர்கள் மரணம் அடைந்து சூலரோதமென்னும் நரகத்தில் விழுந்து யம யாதனைகளை (நரக வேதனைகளை) அனுபவித்துச் சூலம், ஸூத்ரம் முதலியவற்றில் கோக்கப்பட்ட சரீரமுடையவர்களாகிப் பசி தாஹங்களால் பீடிக்கப்பட்டு ஊசிபோலக் கூரான முகமுடைய காக்கை, கங்கம், கொக்கு முதலிய ஜந்துக்களால் குத்தப்பட்டுத் தமது பாபத்தை நினைப்பார்கள். 

25. தந்தசூகம்
இவ்வுலகத்தில் க்ரூர ஸ்வபாவமுடைய (கொடிய) ஸர்ப்பங்கள் போன்று ப்ராணிகளைப் பயப்படுத்தும் தன்மையுடையவர்கள் மரணம் அடைந்து பரலோகத்தில் தந்தசூகமென்னும் நரகத்தில் விழுவார்கள்.

26. அவடநிரோதம்
மன்னவனே! இந்நரகத்தில் விழுந்தவனை ஐந்து தலைப் பாம்புகளும் ஏழு தலைப் பாம்புகளும் வந்து எலிகளைப் போல மேல்விழுந்து பிடுங்கும். இவ்வுலகத்தில் எவர்கள் பாலர்களையும் குருடர்களையும் பலஹீனமான மற்ற ப்ராணிகளையும் பள்ளம், கூடு, புதர் முதலிய இடங்களில் தள்ளி வெளியில் போகவொட்டாமல் தடுக்கின்றார்களோ, அவர்களைப் பரலோகத்தில் யமபடர்கள் அந்தப் பள்ளம் முதலிய இடங்களில் தள்ளி விஷத்தோடு கூடின அக்னியாலும் புகையினாலும் வெளிவர வொட்டாமல் தடுப்பார்கள். ஆகையால் இந்நரகம் அவடநிரோதமென்று பேர்பெற்றது.

27. அக்ஷிபர்யாவர்த்தம்
இவ்வுலகத்தில் எவன் தானாகவே வீடேறி வந்த அதிதிகளையும் அப்யாகதர்களையும் (அதிதிகள் - முகம் பழகின விருந்தாளிகள் - அப்யாகதர் - முகந்தெரியாத விருந்தாளிகள்) அடிக்கடி பெருங்கோபத்துடன் தஹிக்க விரும்பினாற் போலப் பாபிஷ்டமான கண்ணால் குறுக்கே பார்க்கிறானோ, அவன் மரணம் அடைந்து பரலோகம் போய் அக்ஷிபர்யாவர்த்தமென்னும் நரகத்தில் விழுவான். அங்குக் கூரான முகமுடைய காக்கை கொக்கு முதலிய பலிஷ்ட ஜந்துக்கள் பலாத்காரமாக மேல் விழுந்து அவன் கண்களைப் பிடுங்கும். 

28. ஸுசீமுகம்
இவ்வுலகத்தில் எவன் பணக்காரனென்று கர்வித்துத் தன்னைச் சிறந்தவனாகப் பாவித்துக் குறுக்குப் பார்வையுடையவனாகிக் குரு முதலியவர்களிடத்திலும் தன் பணத்தைத் திருடுவார்களோ என்னவோ என்று ஸந்தேஹித்துப் பணச்செலவையும் பணம் காணாமல் அழிந்து போவதையும் பற்றிப் பெருஞ்சிந்தையில் ஆழ்ந்து ஹ்ருதயமும் முகமும் வாடி வதங்கப்பெற்றுச் சிறிதும் ஸுகம் நேரப்பெறாமல் பிசாசம்போலப் பணத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் அந்தப் பணத்தை ஸம்பாதிப்பதற்காகவும், அதை வ்ருத்தி செய்வதற்காகவும், அதைப் பாதுகாப்பதற்காகவும் தான் செய்த பாபங்களையெல்லாம் மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு பரலோகத்தில் ஸுசீமுகமென்னும் நரகத்தில் விழுவான். பணத்தைப் பிசாசம் போல் பாதுகாத்துக் கொண்டிருந்தவனும் பாபமே ஒரு புருஷனாக வடிவங்கொண்டு வந்தாற்போல் இருப்பவனுமாகிய அவனை யமபடர்கள் ஊசியில் கோத்த நூலினால் துணி தைப்பவர்கள் போல உடம்பெல்லாம் ஊசியில் கோத்த நூல்களால் தைப்பார்கள். 

இப்படிப்பட்ட நரகங்கள் யமபுரியில் ஆயிரமாயிரமாய் இருக்கின்றன. அந்த நரகங்களில் இங்குச் சொன்ன அதர்மிஷ்டர்களும் மற்றும் பலவகை அதர்மங்களைச் செய்தவர்களும் எல்லோரும் க்ரமமாகப் புகுவார்கள். அங்கனமே தர்மம் செய்தவர்கள் ஸ்வர்க்காதி லோகங்களில் சென்று ஸுகங்களை அனுபவிப்பார்கள். இருவகைப் பட்டவர்களும் அங்கு அனுபவித்த புண்ய பாப சேஷத்தை அனுபவிக்கும் பொருட்டு மீளவும் இந்த மனுஷ்ய லோகத்தில் வந்து பிறப்பார்கள். இங்கனம் ப்ரவ்ருத்தி தர்மத்திலிருப்பவர்களின் (ஸம்ஸாரத்தில் ஈடுபாட்டுடன் இருப்பவர்களின்) மார்க்கத்தை மொழிந்தேன். நிவ்ருத்தி தர்ம நிஷ்டர்களுடைய (இந்த ஸம்ஸார வாழ்விலிருந்து விலகிச் செல்பவர்களின்) மார்க்கம் முதலிலேயே கூறப்பட்டது. ப்ரஹ்மாண்ட கோசம் முழுவதும் இவ்வளவே உள்ளது. மூன்று லோகங்கள் அடங்கின இவ்வண்ட கோசத்தையே புராணங்களில் பதினான்கு லோகங்கள் அடங்கினதாகச் சொல்லுகிறார்கள். அதலாதி லோகங்களைப் பூலோகத்திலும் மஹர்லோகாதியான ஊர்த்வ லோகங்களை த்யுலோகத்திலும் சேர்த்து அந்தரிக்ஷ லோகத்துடன் அண்டகோசம் மூன்று லோகங்கள் அடங்கினதென்று இங்கு மொழியப்பட்டது. அவாந்தர லோகங்களின் பிரிவைப்பற்றிப் புராணாந்தரங்களில் அண்டகோசம் பதினான்கு லோகங்கள் அடங்கினதென்று கூறப்பட்டது. மஹாபுருஷனாகிய ஸ்ரீமந்நாராயணனுக்கு ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வாதிகளால் நிறைந்த ஸ்தூலரூபம் ஒன்று உண்டென்றும், அதுவே இந்த ப்ரஹ்ஹமாண்டமென்றும் முன்னமே மொழிந்தேன். அத்தகைய ப்ரஹ்மாண்டத்தை இப்பொழுது விரிவாகக் கூறினேன்.

பகவானுடைய ஸ்தூல ரூபமாகிய இந்த ப்ரஹ்மாண்டத்தை விரித்துரைக்கிற இப்ரபந்தத்தை ப்ரீதியுடன் படிக்கிறவன் கேட்கிறவன் கேட்பிக்கிறவன் ஆகிய மூவரும் உபநிஷத்துக்களால் அறியத்தகுந்ததும் எல்லாவிடங்களிலும் வியாபித்திருப்பதும் திவ்யமங்கள விக்ரஹத்தோடு (திருமேனியோடு) கூடியதுமாகிய திவ்யாத்ம ஸ்வரூபத்தை ச்ரத்தையாலும் பக்தியாலும் பரிசுத்தமான மதியுடையவர்களாகி நன்றாக அறிவார்கள். 

பகவானுடைய ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்கள் இரண்டையும் உள்ளபடி குரு முகமாகக் கேட்டு முதலில் ஸ்தூல ரூபத்தில் நிலைநிற்கும்படி மனத்தை வசப்படுத்திக்கொண்டு அப்பால் மெல்ல மெல்ல திவ்யாத்ம ஸ்வரூபத்தை விவேகித்து அறிந்த புத்தியால் அம்மனத்தை ஸூக்ஷ்மரூபத்தில் செலுத்தவேண்டும். பூமி அதிலுள்ள த்வீபங்கள் அவற்றிலுள்ள வர்ஷங்கள் அவற்றிலுள்ள பலவகை நதிகள் நதங்கள் (மேற்கு நோக்கி பாய்வன) பர்வதங்கள் அந்தரிக்ஷலோகம், ஸமுத்ரங்கள், பாதாளம் வரையிலுள்ள பூமியின் விவரங்கள், திக்குகள், நரகங்கள், நக்ஷத்ர கணங்கள் அடங்கின த்யுலோகம் ஆகிய இவற்றின் நிலைமைகளையெல்லாம் உனக்குக் கூறினேன். 

மன்னவனே! பூலோகம் முதல் த்யுலோகம் வரையிலுள்ள இந்த ஜகத்தே ஸகல ஜீவ ஸமூஹங்களுக்கும் ஆதாரமான பகவானுடைய ஆச்சர்யமான ஸ்தூலசரீரமாம். 

இருபத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.


பஞ்சம (ஐந்தாவது) ஸ்கந்தம் முற்றுப்பெற்றது.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை