ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்தைந்தாவது அத்தியாயம்
(பாதாளத்தினடியில் பூமியைத் தரித்துக் கொண்டிருக்கிற ஆதிசேஷனுடைய நிலைமையைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தப் பாதாள விவரத்தின் (பிளவின்) அடிப்பாகத்தில் முப்பதினாயிரம் யோஜனைகளுக்கு அப்புறத்தில் தாமஸாஹங்காரத்தை (பகவான் ஸ்ருஷ்டி செய்யும்போது மூலப்ரக்ருதியை பலவாறாக மாறுபாடு அடையச் செய்கிறான். மூலப்ரக்ருதி முதலில் மஹத் என்னும் தத்வமாக மாறியது. மஹத் தத்வத்திலிருந்து அஹங்காரம் என்னும் தத்வம் உண்டாயிற்று. அஹங்காரம் ஸாத்விக அஹங்காரம், ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம் என்று மூன்று வகைப்படும். ஸாத்விக அஹங்காரத்திலிருந்து பதினோறு இந்த்ரியங்கள் தோன்றின; தாமஸ அஹங்காரத்திலிருந்து பஞ்ச பூதங்கள் தோன்றின. ராஜஸ அஹங்காரம் மற்ற இரண்டு அஹங்காரங்களுக்கும் உதவியாய் இருக்கும்) அதிஷ்டானம் (நியமனம்) செய்யும் பகவானுடைய அம்சமாகிய அனந்தன் இருக்கிறான். இந்திரியங்களுக்குப் புலப்படாத வஸ்துக்களைப் பற்றின அறிவையும் ஜீவாத்மாக்களுக்கு விளைப்பதாலும், ஆத்மாவினிடத்தில் “நான்” என்னும் சித்தவ்ருத்தியை (எண்ணத்தின் தொடர்ச்சியை) உண்டாக்குவதாலும் அவனை ஸங்கர்ஷணனென்று ஸாத்வதமென்கிற பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தை அறிந்த பெரியோர்கள் சொல்லுகிறார்கள். அவன் அளவிடமுடியாத பெரிய சரீரமுடையவன். ஷாட்குண்யபூர்ணன். ஆயிரம் தலைகளுடையவன். பூமண்டலமெல்லாம் அவனுடைய ஒரு சிரஸ்ஸில் தரிக்கப்பட்டுக் கடுகு போல் புலப்படுகின்றன. ஆகையால் அவனுக்கு அனந்தனென்னும் பேர் யதார்த்தமானது. அந்த ஸங்கர்ஷண பகவான் த்விபரார்த்தம் (இரண்டு பரார்த்தங்களும்) முடிந்து {ப்ரஹ்மாவின் ஆயுளின் அளவு த்விபரார்த்தம் எனப்படும். க்ருதயுகம் 1728000 மனித வருடங்கள் த்ரேதாயுகம் 1296000 மனித வருடங்கள் த்வாபரயுகம் 864000 மனித வருடங்கள் கலியுகம் 432000 மனித வருடங்கள். ஆக இவை நான்கும் சேர்ந்த ஒரு சதுர்யுகம் 4320000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; அது போல் மற்றுமொரு 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு இரவு; ஆக 2000 சதுர்யுகங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். அதாவது 4320000 * 2000 = 864,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். 864,00,00,000 * 360 = 311040,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு வருடம். ப்ரஹ்மாவின் ஆயுள் 100 வருடங்கள்; அதாவது 3,11,04,000 கோடி மனித வருடங்கள். இதுவே த்விபரார்த்தம் எனப்படும்.}
ப்ரளயகாலம் வருகையில் உலகங்களையெல்லாம் ஸம்ஹரிக்க விரும்பிக் கோபத்தினால் புருவங்களைக் கோணலாக நெரித்தான். அதினிடையினின்று முக்கண்ணர்களும் திரிசூலத்தை மேல் தூக்கிக் கொண்டிருப்பவர்களுமாகிய ஏகாதச (பதினொன்று) ருத்ரர்களின் கூட்டம் உண்டாயின. அது ஸங்கர்ஷணமென்னும் பற்றுடையது. தலைமையுள்ள ஸர்ப்பங்கள் ஸாத்வத ச்ரேஷ்டர்களுடன் கலந்து அந்த ஸங்கர்ஷண பகவானுடைய தாமரை மலர்போன்ற இரண்டு பாதங்களிலுள்ள சிவந்த நகங்களாகிற ரத்ன ஸமூஹங்களின் மண்டலங்களில் மாறாத பக்தியுடன் வணங்கி ஜ்வலிக்கின்ற அழகிய குண்டலங்களால் அலங்காரம் செய்யப்பெற்ற தமது கபோலஸ்தலங்கள் (கன்னங்கள்) அவற்றில் ப்ரதிபலிக்கையில் மனக்களிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நாகராஜ கன்னிகைகள் புருஷார்த்தங்களை விரும்பித் தோள்வளைகளால் திகழ்பவைகளும், நிர்மலங்களும் (அழுக்கற்றவைகளும்), நீண்டு மென்மைக்கிடமாய் இருப்பவைகளும், ஸுந்தரங்களுமான (அழகானவைகளுமான) ஸங்கர்ஷண பகவானுடைய புஜங்களாகிற (தோள்களாகிற) வெள்ளிக் கம்பங்களில் குங்குமம் கலந்த சந்தனக்குழம்பைப் பூசி அந்தப் புஜங்களைத் (தோள்களைத்) தொட்ட மாத்ரத்தினால் மனம் கலங்கி மன்மத விகாரமுற்று (காமத்தில் ஈடுபட்டு) அதனால் அழகிய புன்னகையுடையவர்களாகி, தன் பக்தர்களிடத்தில் அனுராகத்தினாலும் (அன்பினாலும்) தன்னைத் தான் அனுபவிக்கையால் உண்டான ஸந்தோஷத்தினாலும் மலர்ந்து மதத்தினால் (மயக்கமுற்று) சுழல்கின்றவைகளும், சிறிது சிவந்தவைகளும், கருணாகடாக்ஷம் நிறைந்தவைகளுமான கண்கள் அமைந்த செந்தாமரை மலர்போன்ற அவருடைய முகத்தை வெட்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஸங்கர்ஷணனென்று பேர்பெற்றவனும் அளவிறந்த கல்யாண குணங்களுடையவனும் ஆதிதேவனுமாகிய அவ்வனந்தன் பொறுக்கமுடியாத கோபவேகத்தை அடக்கிக்கொண்டு லோகங்களின் க்ஷேமத்திற்காக வீற்றிருக்கிறான். தேவர், அஸுரர், உரகர், ஸித்தர், கந்தர்வர், வித்யாதரர், முனிவர் ஆகிய இவர்கள் கூட்டங் கூட்டமாயிருந்து அம்மஹானுபாவனை த்யானிக்கின்றார்கள். அவன் ஸர்வகாலமும் தன்னைத் தான் அனுபவிக்கையாலுண்டான ஸந்தோஷத்தினால் தழதழத்துச் சுழலமிடுகின்றவை போன்ற கண்களுடையவன். மிகவும் அழகியதும் உட்கருத்தை வெளியிடுவதுமாகிய புன்னகையினாலும் அம்ருதம் போன்ற வசனத்தினாலும் தன் பரிவாரங்களையும் தேவர்கூட்டத் தலைவர்களையும் களிப்பித்துக் கொண்டு மாறாத செவ்வியையுடைய (அழகும் புதுமையும் உடைய, ever fresh & beautiful) புதிய துழாய் (துளஸி) வாஸனையாலும் அதிலுள்ள மதுவாகிற (தேனாகிற) மத்யத்தினாலும் (கள்ளினாலும்) மதித்து (போதையில் மயங்கி) மேல்விழுகின்ற வண்டினங்களின் இனிய பாடல்களால் அழகான வைஜயந்தியென்னும் பேருடைய தன் வனமாலையைத் தரித்தவனும் கறுத்த வஸ்த்ரங்களை உடுத்திருப்பவனும் ஒற்றைக் குண்டலம் அணிந்தவனும் மேன்மையும் அழகுமான தன் புஜத்தைக் கலப்பையின் பின்புறத்தில் வைத்துக் கொண்டிருப்பவனும் கம்பீரமான விலாஸங்கள் (விளையாட்டுக்கள்) உடையவனுமாகிய அந்த ஸங்கர்ஷண பகவான் தேவேந்திரனுடைய யானையாகிய ஐராவதம் ஸ்வர்ணமயமான இடைக்கச்சையை தரிப்பது போல, ஸ்வர்ணமயமான இடுப்புப் பட்டையை தரிக்கிறான். மோக்ஷத்தில் விருப்பமுடையவர்கள் ஸங்கர்ஷண பகவானுடைய ஸ்வரூபத்தைக் குருமுகமாகக் கேட்டு த்யானிப்பார்களானால், அந்த பகவான் அவருடைய ஹ்ருதயத்தில் ஸந்நிதானம் செய்து அநாதிகாலமாக ஸத்வ ரஜஸ் தமோ குணங்களின் ஸம்பந்தத்தினால் உண்டான கர்ம வாஸனைகளால் அறுக்க முடியாமல் வேரூன்றியிருக்கிற தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்) முதலிய அஞ்ஞானமாகிற முடிச்சை விரைவில் அறுத்து விடுகிறான். அந்த ஸங்கர்ஷண பகவானுடைய மஹிமையை ப்ரஹ்ம புத்ரராகிய நாரதமுனிவர் தும்புருவும் தானுமாய் ப்ரஹ்மாவின் ஸபையில் வர்ணிக்கிறார்.
ஜகத்தின் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களுக்குக் காரணங்களான ஸத்வ ரஜஸ் தமோ குணங்கள் அவனுடைய ஸங்கல்பத்தினால் அந்த ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களை நிறைவேற்ற வல்லவையாயின. தேவமனுஷ்யாதி நாம ரூபங்களின்றித் தன்னிடத்தில் மறைந்திருப்பதும் நித்யமுமாகிய ப்ரக்ருதி புருஷர்களாகிற தன் சரீரத்தைத் தன் ஸங்கல்பத்தினால் தேவமனுஷ்யாதி நாமரூபங்களால் பலவாறு பிரிவுற்றதாகச் செய்கிறான். அப்படிப்பட்ட மஹானுபாவனுடைய லோகவிலக்ஷணமான (உலகத்தில் காண்பவைகளை விட வேறுபட்ட) ஸ்வரூபத்தை என்னைப் போன்றவன் எங்கனம் அறிவான்?
சேதனாசேதன ரூபமான ஜகத்தெல்லாம் அவனிடத்தில் விளங்குகின்றது. அந்தப் பகவான் நம்மிடத்தில் க்ருபையால் ரஜஸ் தமஸ்ஸுக்களால் தீண்டப்படாத சுத்த ஸத்வமயமான திவ்யமங்கள விக்ரஹத்தைத் தரித்தான். ஸிம்ஹம்போலக் கம்பீரமான வீர்யமுடையவனும், உலகத்தில் மேன்மையையுடைய ப்ரஹ்மாதி தேவதைகளுக்கு ப்ரபுவும், ஜகத் ஸ்ருஷ்டி முதலிய மஹாஸாமர்த்யங்கள் உடையவனுமாகிய அந்த ஸர்வேச்வரன் தன் பக்தர்களான நமது மனத்தைத் தன் வசமாக்கும் பொருட்டு, நாகராஜ கன்னிகை முதலியவர்களுக்கும் எளிதில் ஆராதிக்கத் தகுந்தவனாயிருக்கை, பூமண்டலத்தைத் தரிக்கை முதலிய திருவிளையாடல்களை ஏற்றுக்கொண்டான். அவை அவனுக்குக் கர்மத்தினால் விளைந்தவையன்று. அவனுடைய ஸங்கல்பத்தினாலேயே ஏற்பட்டவைகள். ஆகையால், அவன் நம்மை அனுக்ரஹிப்பதற்காகவே அவ்வுருவத்தைத் தரித்தானென்பதில் ஸந்தேஹம் உண்டோ? ரோகாதிகளால் பீடிக்கப்பட்டவனும் மஹாபாதகனாயிருப்பவனும் (மிகப்பெரும் பாபங்களைச் செய்தவனாயிருப்பினும்) கூட அவ்வநந்தனுடைய நாமத்தைச் சொல்லுவானாயின், தெய்வாதீனமாயாவது பரிஹாஸத்தினாலாவது அவனுடைய நாமத்தைக் கேட்பானாயின், அவன் ரோகங்களாலும் (வ்யாதிகளாலும்) பாதகங்களாலும் (துன்பங்களாலும்) விடுபட்டுத் தன்னைச் சேர்ந்த மற்றவர்களுடைய பாபத்தையும் போக்குவான். ஆகையால், மோக்ஷத்தில் விருப்பமுடையவன் அந்த ஆதிசேஷனைத் தவிர மற்ற எவனையும் ஆச்ரயிக்கமாட்டான்?
பர்வதங்களும் நதிகளும் ஸமுத்ரங்களும் பலவகை ஜந்துக்களும் நிறைந்த பூமண்டலம் முழுவதும் ஆயிரம் தலைகளையுடைய அவ்வனந்தனுடைய தலையில் அணுபோல் இருக்கின்றன. அவன் அளவிட முடியாத ஸ்வரூபங்களுடையவன். ஆகையால், அவனுடைய ப்ரபாவத்தை ஒருவராலும் அறிய முடியாது. அவ்வனந்தனுடைய வீர்யங்களை ஆயிரம் நாக்குடையவனாயினும் எவன்தான் இவ்வளவென்று கணக்கிட வல்லவனாவான்?
மஹாப்ரபாவங்களுடையவனும், அனந்தனென்ற யதார்த்தமான பெயர் பூண்டவனும், எல்லையில்லாத வீர்யம் அத்தகைய பலம் பலவகைக் குணங்கள் அவற்றின் ப்ரபாவங்கள் இவையுடையவனுமாகிய அந்த ஸங்கர்ஷண பகவான் ஸ்வதந்த்ரன்; தானொருவனே ஜகத்தின் ரக்ஷணத்திற்காகப் பூமண்டலத்தை அவலீலையாகத் தரிக்கிறான்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- காமங்களை விரும்புகிற புருஷர்களால் அடையத்தகுந்தவைகளும் பலபோகத்திற்காக ஏற்பட்டவைகளுமான உலகங்கள் இவ்வளவே. அவரவர் கர்மங்களை அனுஸரித்து இந்த ப்ரஹ்மாண்டத்தில் ஈச்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் பெரியோர்களிடத்தில் கேட்டபடி உனக்கு மொழிந்தேன். மன்னவனே! ஸாம்ஸாரிக புருஷனுக்குக் காமங்களோடு கூடின ப்ரவருத்தி ரூபமான தர்மத்திற்குப் பலனாக ஏற்படும் கதிகள் பலவாறாயிருக்கும். ஸுகதுக்கங்களின் தாரதம்யத்தினால் (ஏற்றத்தாழ்வுகளால்) ஒன்றைவிட ஒன்று விலக்ஷணமாயிருக்கும். அவையெல்லாம் இவ்வளவே. நீ கேட்டபடி அவற்றை உனக்குக் கூறினேன். இன்னும் என்ன சொல்லவேண்டுமோ அதைக் கேட்பாயாக.
இருபத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.