ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்
(ஸூர்யனுக்குக் கீழுள்ள ராஹு முதலியவர்களின் நிலைமையையும், பூமிக்குக் கீழுள்ள அதலாதிலோகங்களின் நிலைமையையும் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸூர்யனுக்குக் கீழ் பதினாயிரம் யோஜனை தூரத்தில் ராஹு நக்ஷத்ரம் போல் ஸஞ்சரிக்கிறானென்று சிலர் சொல்லுகிறார்கள். இவன் பகவானுடைய அனுக்ரஹத்தினால் தேவத்வத்தையும் க்ரஹமாயிருக்கையையும் பெற்றான். இவன் ஸிம்ஹிகையின் புதல்வன். பாப புத்தியுள்ள அஸுரர்களிலும் அதமனாயிருப்பவன் (மிகக் கீழ்பட்டவனாயிருப்பவன்). இவன் அத்தன்மை பெறுதற்கு உரியவனல்லன். ஆயினும் பகவானுடைய க்ருபையினால் பெற்றான். இவனுடைய பிறவியையும் செயலையும் பற்றி மேல் சொல்லப் போகிறோம். நமக்கு ப்ரத்யக்ஷமாய் எரிகின்ற ஸூர்யனுடைய மண்டலம் பதினாயிரம் யோஜனை விஸ்தாரமுடையதென்றும், சந்த்ர மண்டலம் பன்னீராயிரம் யோஜனை விஸ்தாரமுடையதென்றும், ராஹுமண்டலம் பதின்மூவாயிரம் யோஜனை விஸ்தாரமுடையதென்றும் சொல்லுகிறார்கள். இந்த ராஹு அம்ருதபான ஸமயத்தில் ஸூர்யனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நுழைந்து மறைந்தான். ஆகையால் அவர்கள் அவனைக் காட்டிக்கொடுத்தார்கள். அதனால் அவன் அவர்களிடத்தில் மாறாத வைரம் (பகைமை) உடையவனாய் இருக்கிறான்.
ஒருகால் பர்வத்தில் ஸூர்யனோடும் சந்த்ரனோடும் கலஹத்திற்காக (சண்டைக்காக) அவர்களை எதிர்த்தோடுகிறான். பகவான் அதைக் கண்டு அவ்விருவரையும் பாதுகாக்கும் பொருட்டு ஸுதர்சனமென்னும் பேருடையதும் தனக்கு ப்ரியமாயிருப்பதும் தேஜஸ்ஸினால் பொறுக்க முடியாததுமாகிய தன் சக்ராயுதத்தை ப்ரயோகிக்கிறான். தேஜஸ்ஸினால் ஜ்வலித்துக்கொண்டு அடிக்கடி சுழலமிடுகின்ற அவ்வஸ்த்ரத்தைக் கண்டு ராஹு முஹூர்த்தகாலம் எதிரே நின்று பயந்து மனநிலைமை இல்லாமல் தூரத்திலேயே திரும்பிவிடுகிறான். அவன் ஓடும் பொழுது அவனுடைய மண்டலத்தினால் ஸூர்ய சந்த்ரர்களின் மண்டலம் மறைகின்றது. நேராகப்போவானாயின் முழுவதும் மறைகின்றது. வக்ரமாகப் (இடமாகப், anti clock wise) போவானாயின் பாதியாகவும் ஏற்றக்குறைவாகவும் மறைகின்றது. ஜனங்கள் அதையே க்ரஹணமென்று சொல்கிறார்கள்.
அந்த ராஹு மண்டலத்திற்குக் கீழ் பதினாயிரம் யோஜனையில் ஸித்தர், சாரணர், வித்யாதரர் இவர்களின் ஸ்தானங்கள் இருக்கின்றன. அதற்குக் கீழ் யக்ஷர், பிசாசர், ப்ரேதர், பூதர் ஆகிய இவர்கள் விளையாடுமிடமாகிய அந்தரிக்ஷலோகம் (பூமிக்கும் ஸ்வர்க லோகத்திற்கும் இடைப்பட்ட ஆகாசம்) இருக்கின்றது. அது, காற்று எதுவரையில் மிகவும் வேகமாய் வீசுகின்றதோ மேகங்கள் எதுவரையில் புலப்படுகின்றனவோ அது வரையில் வ்யாபித்திருக்கின்றது. அதற்குக் கீழ் நூறுயோஜனை தூரத்தில் இப்பூமண்டலம் இருக்கின்றது. ஹம்ஸம், பாஸம், பருந்து, கருத்மான் முதலிய சிறந்த பறவைகள் எதுவரையில் பலத்துடன் பறக்கின்றனவோ அதுவரையில் பூலோகமென்று கூறப்படும். இப்பூமியின் நிலைமையை உள்ளபடி மொழிந்தேன். பூலோகத்திற்குக்கீழ் பூமியிலேயே ஏழு விவரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் பதினாயிரம் யோஜனை விஸ்தாரமும் அவ்வளவு உயரமும் உடையது. ஒவ்வொன்றும் போகத்தில் தாரதம்யம் (ஏற்றத்தாழ்வு) உடையதாயிருக்கும். அவை அதலம், விதலம், ஸுதலம், ரஸாதலம், தலாதலம், மஹாதலம், பாதாலம் என்னும் பேருடையவை. அவற்றைப் பிலஸ்வர்க்கமென்றும் கூறுகிறார்கள். அவற்றில் ஸ்வர்க்கத்தைக் காட்டிலும் மேற்பட்ட காமபோகம் (இன்ப நுகர்ச்சி) ஐச்வர்யாநந்தம் (ஆளுமை இன்பம்) ஸம்பத்து (செல்வம்,சொத்து) பரிஜன பரிவாரங்கள் (உடன் இருக்கும் வேலையாட்கள் கூட்டம்) இவை நிறைந்த வீடுகளும் உத்யானங்களும் விளையாடுமிடங்களும் ஸ்த்ரீ ஸம்போகத்திற்குரிய இடங்களும் விளக்கமுற்றிருக்கும். அத்தகைய உலகங்களில் தைத்யர்களும், தானவர்களும், காத்ரவேயர்களும், நித்யஸந்தோஷமுற்று மிக்க அனுராகமுடைய மனைவிகளும், பிள்ளை பெண்டிர்களும், பந்துக்களும், நண்பர்களும், வேலைக்காரர்களும் உடையவர்களாகி இல்லற வாழ்க்கையில் மகிழ்ந்து ஈச்வரனிடத்திலும் தமது மனவிருப்பம் தடைபடப் பெறாமல் மாயையால் விநோதமுற்று வாஸம் செய்கிறார்கள்.
ஓ மஹாராஜனே! பிலஸ்வர்க்கங்களென்கிற இந்த அதலாதி லோகங்களில் மாயாவியான மயனென்னும் அஸுரனால் நிர்மிக்கப்பட்ட (உண்டாக்கப்பட்ட) ஆச்சர்யமான பட்டணங்கள் பல இருக்கின்றன. அப்பட்டணங்கள் சிறப்புடைய பலவகை ரத்னங்களால் இயற்றப்பட்ட ஆச்சர்யமான வீடுகளும் ப்ராகாரங்களும் (கோட்டைகளும்) கோபுரங்களும் ஸபைகளும் தேவாலயங்களும் முற்றங்களும் மற்றும் பலவகை இடங்களும் நிறைந்து இணையிணையான புறாக்களும் கிளிகளும் பலவாறு ஒலிக்கப்பெற்றுத் தொழில் முற்றுப்பெற்ற மாடகூடங்கள் அமைந்த விவரேச்வரர்களின் சிறப்புடைய மாளிகைகளும் அமைந்து அலங்காரமுற்று விளங்குகின்றன. பூங்கொத்துக்களும் காய்க்கொத்துகளும் தளிர்களும் நிறைந்து அவற்றின் பாரத்தினால் வணங்கின அழகான கொடிகளையுடைய வ்ருக்ஷங்கள் அடர்ந்த உத்யானங்கள், மனத்தையும் மற்ற இந்த்ரியங்களையும் களிக்கச் (இன்பறச்) செய்கின்ற (பூமியின் கீழ் பிளவுகள் போன்றிருக்கையால் அதலாதி லோகங்களை விவரமென்று சொல்லுகிறார். விவரம் - பிளவு அவற்றின் ப்ரபுக்கள் விவரேச்வரர்கள்) விவரேச்வர ஸ்த்ரீகளின் ஸஞ்சாரத்தினாலும், பலவகையான பறவைக்கூட்டங்கள் கோலாஹலம் செய்யப்பெற்று நிர்மலமான தண்ணீர் நிறைந்த ஜலாதாரங்களில் மீன்களின் துள்ளல்களால் அசைகின்ற தாமரை ஆம்பல் நெய்தல் செங்கழுநீர் கருநெய்தல் செந்தாமரை முதலிய பூங்காடுகளில் பலவாறு விளையாடுகின்ற வண்டினங்களின் பலவகை மதுரஸ்வராதிகளாலும் ஸ்வர்க்கலோகத்தின் சோபையைக் கடக்கின்றன. அவ்வுலகங்களிலுள்ளவர்கள் நீண்ட வாழ்நாளுடையவர்கள் ஆகையால் அவர்களுக்குக் காலத்தின் பிரிவுகளான அஹோராத்ராதிகள் (பகல் இரவு) கடப்பதனால் சிறிதும் பயம் புலப்படுகிறதில்லை. அங்குப் பெருமையுடைய ஸர்ப்ப ச்ரேஷ்டங்களின் (சிறந்த பாம்புகளின்) சிரங்களிலுள்ள ரத்னங்கள் இருள்களைப் பறக்கடிக்கின்றன. அவ்வுலகங்களில் வாஸம் செய்பவர்கள் திவ்யமான ஒளஷதங்களையும் (மூலிகைகள்) திவ்யமான ரஸாயனங்களையும் (மருந்து) திவ்யமான ஆஹாரங்களையும் உபயோகிக்கிறார்கள்; திவ்யமான ஜலங்களில் ஸ்நானம் செய்கிறார்கள். மற்றும் பலவும் அவர்களுக்குத் திவ்யமாயிருக்கின்றன. ஆகையால் அவர்களுக்கு மனோவ்யாதிகள் சரீரவ்யாதிகள் சதைச் சுருக்கம் மயிர் நரைத்தல் கிழத்தனம் பல்விழுதல் முதலியவைகளும் நிறம் மாறுதல் துர்க்கந்தம் வேர்வை இளைப்பு உத்ஸாஹமில்லாமை முதலிய வயதினால் விளையும் பலவகை அவஸ்தைகளும் உண்டாகிறதில்லை. பூமியின் பிலங்களான அவ்வுலகங்களில் துக்கமின்றி க்ஷேமமாய் வாஸம் செய்கின்றவர்களுக்கு ஸுதர்சனமென்னும் சக்ராயுதமாகிய பகவானுடைய தேஜஸ்ஸைத் தவிர மற்ற எதினின்றும் ம்ருத்யு (மரணம்) உண்டாகமாட்டாது. இப்பூமி விவரங்களில் (பிளவுகளில்) ஸுதர்சனாஸ்த்ரம் ப்ரவேசிக்குமாயின், அஸுர ஸ்த்ரீகளின் கர்ப்பங்கள் அந்தப் பயத்தினால் ஸ்ரவிக்கின்றன (அழிகின்றன); நிறைந்திருக்குமாயின் விழுகின்றன.
ஓ மன்னவனே! அதலமென்னும் விவரத்தில் (பிளவில்) மயனின் புத்ரனாகிய பலனென்னும் அஸுரன் வஸிக்கிறான். அவன் தொண்ணூற்றாறு மாயைகளைப் படைத்தான். அவற்றில் சில மாயைகளை இப்பொழுதும் சில மாயாவிகள் தரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் கொட்டாவி விடும்பொழுது அவனுடைய முகத்தினின்று மூன்று பெண்கள் கூட்டங்கள் உண்டாயின. அவர்களுக்கு ஸ்வைரிணிகள் என்றும், காமினிகளென்றும், புன்சலிகளென்றும் பெயர். அவர்கள் பிலமார்க்கத்தில் நுழைந்த புருஷனை ஹாடகமென்னும் ரஸாயனத்தினால் தம் வசப்படுத்திக்கொண்டு அவனைப் போகஸமர்த்தனாகச் செய்து தமது விலாஸங்களோடு கூடின கண்ணோக்கத்தினாலும், ஸ்நேஹம் வழியப்பெற்ற புன்னகையினாலும், ரஹஸ்யமான பேச்சுக்களாலும், ஆலிங்கனம் முதலிய மற்றும் பலவகையான போகாரம்பங்களாலும் யதேஷ்டமாக மனங்களிக்கச் செய்வார்கள். அவர்கள் கொடுக்கும் ரஸாயனத்தை உட்கொண்ட புருஷன் தன்னைப் பதினாயிரம் யானைப் பலமுடையவனாக நினைத்து மதாந்தன் போன்று நான் ஈச்வரனென்றும் நான் ஸித்தனென்றும் தன்னை ஸ்லாகித்துக் கொள்வான் (புகழ்ந்து கொள்வான்). அதற்குக் கீழுள்ள விதலமென்னும் விவரத்தில் (பிளவில்) மஹானுபாவனாகிய ருத்ரன் ஹாடகேச்வரனென்று பேர்பூண்டு ப்ரஹ்மதேவனால் ஸ்ருஷ்டியை வளர்க்கும்படி நியமிக்கப்பட்டுப் பார்வதியுடன் சேர்ந்திருக்கிறான். அந்தப் பார்வதீ பரமேச்வரர்களின் வீர்யத்தினால் ஹாடகினியென்னும் ஒரு நதி அவ்விடத்தில் உண்டாயிருக்கிறது. ஹாடகமென்று சொல்லப்படுகிற ஸுவர்ணத்தை உண்டாக்கினானாகையால் அவன் ஹாடகேச்வரனென்று பெயர் பெற்றான். அந்த ஹாடகினியென்னும் நதியில் அக்னி காற்றினால் வளர்க்கப்பட்டுத் தன் பலத்தினால் ஹாடகினியைப் பருகினான். அவ்வக்னியால் கக்கப்பட்டதெல்லாம் ஹாடகமென்னும் ஸுவர்ணமாயிற்று. அந்த ஸுவர்ணத்தை விவர வாஸிகளான அஸுர ச்ரேஷ்டர்களின் அந்தப்புரத்திலுள்ள ஸ்த்ரீகளும் புருஷர்களும் ஆபரணங்களாகச் செய்து தரிக்கின்றார்கள். அதற்குக் கீழுள்ள ஸுதலமென்னும் விவரத்தில் (பிளவில்) பெரும் புகழுடையவனும் புண்யச்லோகனும் பாகவதர்களில் சிறந்தவனும் விரோசனனுடைய புதல்வனுமாகிய பலியென்பவன் இப்பொழுதும் இருக்கிறான். முன்பு ஒரு காலத்தில் அவன் இந்திரனைத் தோற்பித்து மூன்று லோகங்களையும் பறித்துக்கொண்டு போகையில், பகவான் அவ்விந்த்ரனுக்கு ப்ரியம் செய்ய விரும்பி அதிதியிடத்தில் அவதரித்து வடுவாமனனாய்ச் சென்று மூன்று லோகங்களையும் உபாயத்தினால் மீட்டு இந்த்ரனுக்குக் கொடுத்தான். முதலில் அங்கனம் ஐச்வர்யம் பறிக்கப்பெற்ற அப்பலி மீளவும் பகவானுடைய அனுக்ரஹத்தினாலேயே இந்த்ராதிகளுக்கும் கிடைக்க அரியதும் மிகவும் ஸம்ருத்தியுடையதுமான ஸம்பத்தைப் (செல்வத்தைப்) பெற்று நிர்ப்பயனாகி அந்தப் பகவானைத் தனக்குரிய தர்மத்தினால் ஆராதித்துக் கொண்டிருக்கிறான். பிலஸ்தானத்தில் (பூமியின் கீழ் இருக்கும் குஹை போன்ற பிளவில்) அவன் அத்தகைய ஐச்வர்யத்தைப் பெற்றமை பரமபுருஷனுக்குச் செய்த பூதானத்தின் பலனென்று சங்கிக்கலாகாது. ஏனெனில், ஷாட்குண்யபூர்ணனும், ஸமஸ்த பூத ஸமூஹங்களிலுமுள்ள ஜீவாத்மாக்களுக்கும் அந்தராத்மாவாய் இருப்பவனும், மிகவும் பரிசுத்தனும், தானத்திற்குரிய ஸத்பாதரனுமாகிய வாஸுதேவன் ஸமீபித்து வருகையில் அவனிடத்தில் மிகுந்த ச்ரத்தையுடன் நிலைநின்ற மனமுடைய பலிசக்ரவர்த்தி அம்மஹானுபாவனுக்குச் செய்த பூமிதானத்திற்கு ஸாக்ஷாத் மோக்ஷமன்றோ பலனாக வேண்டும். இருமல், தும்மல், விழுதல், தடுக்குதல் முதலிய தசைகளில் அந்தப் பகவானுடைய நாமத்தை ஒருகால் மெய்ம்மறந்து சொல்லுவானாயினும், அப்புருஷன் அனாயாஸமாகக் கர்மபந்தத்தைத் துறப்பான். மோக்ஷத்தில் விருப்பமுடைய பெரியோர்கள் கர்மயோக ஞானயோகாதிகளால் அக்கர்ம பந்தத்தை விடுவிக்கும் உபாயத்தை ஆராய்ந்தறிகின்றார்கள். அவனுடைய நாமவைபவம் அப்படியிருக்க, ஸர்வாந்தராத்மாவும், பாகவதர்களுக்குத் தன்னைக் கொடுப்பவனும், ப்ரியனுமாகிய பகவானிடத்தில் செய்த பூதானத்திற்கு விவரைச்வர்யம் (பூமிக்குக் கீழ் உள்ள லோகத்தின் ஆளுமை) பலனென்று சொல்லலாகாது. ஈச்வரன் அவனுக்குத் தன் நினைவை மறைப்பதும் தன் மாயையினால் ஏற்பட்டதுமாகிய போகரூபமான ஐச்வர்யத்தைக் கொடுத்தானன்றி, அப்பொழுதே அநுக்ரஹிக்கவில்லை. இது நிச்சயம். மோக்ஷம் கொடுக்கையன்றோ அவன் செய்யும் அனுக்ரஹமாம். பலி பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவனாயிருந்தான். அவன் இந்த்ரனை ஜயித்து த்ரிலோகராஜ்யத்தைப் பறித்தமைக்காகப் பக்தனாகிய அவனைத் தண்டிக்க முடியாமையாலும், வேறு உபாயம் ஏற்படாமையாலும், பகவான் அவனிடம் சென்று யாசித்து மூன்று லோகங்களையும் பிடுங்கிக் கொண்டு அவன் சரீரத்தை மாத்ரமே மிகுத்திவிட்டுத் (விட்டுவிட்டு) தான் வேண்டினபடி மூன்றடி நிலங்கள் கொடுக்கிறேனென்று ஒப்புக்கொண்டும் மூன்றாவது அடிக்கு நிலமில்லாமையால் செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றாமைக்காக அவனை வருணபாசங்களால் கட்டிப் பர்வத குஹையில் எறிந்தான். அங்கனம் எறியப்பட்ட பலி பகவானைப் பார்த்து "ஆ! என்ன வருத்தம்? மஹானுபாவனாகிய இவ்விந்த்ரன் தெரிந்தவனாயினும் புருஷார்த்தங்களின் தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வுகளை) அறிந்தவனல்லன். இது நிச்சயம். இவனால் ஏகாந்த மந்தராலோசனைகளில் ஸஹாயமாக வரிக்கப்பட்ட ப்ருஹஸ்பதியும் புருஷார்த்தங்களின் தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வுகளை) நன்றாக அறிந்தவனல்லன். இதுவும் நிச்சயம்.
பரமபுருஷார்த்த ஸ்வரூபனாகிய பகவானை உபேக்ஷித்துத் (பொருட்படுத்தாமல்) தனக்குத் தம்பியாய் அவதரித்த வாமன ரூபனான பகவானைக் கொண்டு இந்திரன் என்னிடத்தில் மூன்று லோகங்களை யாசித்தான். அந்தப் பகவானுடைய தாஸ்யத்தை (அடிமையாயிருத்தலை) வேண்டிப் பெறவில்லை. காலம் மிகவும் கம்பீரமான வேகமுடையது. அது போய்க்கொண்டே இருக்குமாயினும் போவது தெரியாது. மூன்று லோகங்களும் காலத்திற்கு உட்பட்டவை. அவை மன்வந்தரம் வரையிலுமே இருப்பவை. அதற்கு மேல் அழியப்போகின்றன. அத்தகைய லோகங்களுக்கு ப்ரபுவாயிருக்கையாகிற ஐச்வர்யம் எவ்வளவு? அது ஒரு பொருளாக மாட்டாது. அற்பமான ஐச்வர்யத்தை எவன் யாசிப்பான்? அதை அபேக்ஷித்த (விரும்பி வேண்டிய) இந்திரன் புருஷார்த்தங்களை நன்குணர்ந்தவனல்லன். எங்கள் பாட்டனாகிய ப்ரஹ்லாதன் பகவானுடைய தாஸானுதாஸத்வத்தையே வேண்டினான். நரஸிம்ஹ ஸ்வரூபியாகிய பகவான் தன் தந்தையாகிய ஹிரண்யகசிபுவைக் கொன்று அவனுடைய ராஜ்யத்தைத் தனக்குக் கொடுக்கினும், அது அற்பமென்று நினைத்து அதை அபேக்ஷிக்கவில்லை (விரும்பவில்லை). எவ்விதத்திலும் பயத்திற்கிடமல்லாத மோக்ஷத்தையே அபேக்ஷித்தான் (வேண்டினான்). கர்மபந்தம் தீராதவனும் பகவானுடைய அனுக்ரஹம் க்ஷணிக்கப் (குறையப்) பெற்றவனுமாகிய என்னைப்போன்ற புருஷன் மஹானுபாவனாகிய அந்த ப்ரஹ்லாதனுடைய வழியை எங்கனம் தொடர விரும்புவான்?” என்று மொழிந்தான். அவனுடைய சரித்ரத்தை மேல் விஸ்தாரமாகச் சொல்லப் போகிறோம்.
ஸமஸ்த லோகங்களுக்கும் குருவும் ஸர்வ சேஷியுமாகிய நாராயணன் தன் பக்தர்களிடத்தில் மிக்க மன இரக்க முடையவனாகையால் அந்தப் பலிசக்ரவர்த்தியின் வீட்டு வாசலில் கதாபாணியாய் (கதையை கையில் ஏந்தியவனாய்) இருக்கிறான். முன்பு ஒரு காலத்தில் ராவணன் திக்விஜயம் செய்து கொண்டு பலியின் வாசலில் நுழைய, அப்பலியின் வாசற்காப்பவனாகிய பகவான் கால்கட்டை விரலால் அவனை லக்ஷயோஜனை தூரத்திற்கு அப்புறத்தில் விழத்தள்ளினான். அதற்குக் கீழுள்ள தலாதலமென்னும் விவரத்தில் (பிளவில்) மயனென்னும் தானவச்ரேஷ்டன் வாஸம் செய்கிறான். அவன் முன்பு மூன்று பட்டணங்களுக்கு ப்ரபுவாயிருந்தான். அப்பட்டணங்களுடன் ஆகாயத்தில் பறந்து லோகங்களுக்குப் பயத்தை விளைத்துக்கொண்டிருந்தான். ருத்ரன் உலகங்களின் க்ஷேமத்திற்காக அம்மூன்று பட்டணங்களையும் கொளுத்தித் தலாதலமென்னும் விவரத்தை (பிளவை) அவனுக்கு வாஸஸ்தானமாக அனுக்ரஹித்துக் கொடுத்தான். அவன் மாயைகளின் நுட்பங்களை அறிந்து பிறர்க்கும் உபதேசிக்கும் திறமையுடையவனாகையால் மாயாவிகளுக்கெல்லாம் ஆசார்யனாயிருப்பவன். ஸுதர்சனனிடத்தில் பக்தியுடைய மஹாதேவனால் பாதுகாக்கப்பெற்று ஸுதர்சன பயமின்றித் தலாதலத்திலுள்ள புருஷர்களால் வெகுமதிக்கப் பெற்றிருக்கிறான்.
அதற்குக் கீழ் மஹாதலமென்னும் விவரத்தில் (பிளவில்) பல சிரங்களையுடையவைகளும் கத்ருவின் பிள்ளைகளுமான ஸர்ப்பங்களின் கூட்டங்கள் க்ரோதவசமென்று பேர்பெற்று வாஸம் செய்கின்றன. குஹகன், தக்ஷகன், காளியன், ஸுஷேணன் முதலிய ஸர்ப்பங்கள் அந்தக் கூட்டத்தில் முக்கியமானவை. பெரிய உடலுடையவை. மஹாபுருஷனுடைய வாஹனமும் பக்ஷிராஜ்ய (பறவைகளின் ராஜ்யத்தில்) ச்ரேஷ்டனுமாகிய (சிறந்தவனுமாகிய) கருத்மானிடத்தில் (கருடனிடத்தில்) எப்பொழுதும் பயப்படும் தன்மையுடையவை. அவை பெண்டிர், பிள்ளை, நண்பர் முதலிய குடும்பத்தில் மனம் செல்லப்பெற்று மதிமயங்கி அவ்விடத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றன.
அதற்குக் கீழ் ரஸாதலமென்னும் விவரத்தில் (பிளவில்) தைதேயர்களும் தானவர்களும் பணிகளென்று ப்ரஸித்தர்களான தேவசத்ருக்களும் வாஸம் செய்கிறார்கள். அவர்களில் பணிகள் சிவாதகவசரென்றும் காலகேயரென்றும் ஹிரண்யபுர நிவாஸிகளென்றும் மூன்று வகைப்பட்டவர்கள். அவர்கள் பிறக்கும் பொழுதே மஹாபலசாலிகள். ஸாஹஸமான கார்யங்களைச் செய்வதில் ஈடெதிரில்லாதவர்கள். அவர்களுடைய ப்ராபவம் ஸமஸ்த லோகங்களிலும் தடைபடாமல் செல்லும். அவர்கள் தேஜோமயமான பகவானுடைய ஸுதர்சனாஸ்த்ரத்தினாலும் தடைபடாத பல கர்வமுடையவர்கள். ஸர்ப்பங்கள் போல அந்த விவரத்தில் (பிளவில்) வஸிக்கிறார்கள். அவர்கள் இந்த்ரனுடைய தூதியாகிய பெண் நாய் மொழிந்த மந்த்ரவர்ண ரூபமான வாக்யங்களைக் கேட்டு இந்த்ரனிடத்தில் பயப்படுகின்றார்கள். அதற்குக் கீழ்ப் பாதாளமென்னும் விவரத்தில் ஸர்ப்பலோகங்களுக்கு ப்ரபுக்களும் வாஸுகியைத் தலைவனாக உடையவைகளுமான சங்கன், குளிகன், மஹாசங்கன், ஸ்வேதன், தனஞ்சயன், த்ருதராஷ்ட்ரன், சங்கசூடன், கம்பளன், அவதரன், தேவதத்தன் முதலிய மஹாஸர்ப்பங்கள் வஸிக்கின்றன. அவை பெருங்கோபமுடையவை. அவற்றில் சில ஐந்து தலையுடையவை; சில ஆறு தலையுடையவை; சில ஏழுதலையுடையவை; சில பத்துத் தலையுடையவை; சில நூறுதலையுடையவை; சில ஆயிரம் தலையுடையவை. அவற்றின் படங்களிலுள்ள பேரொளியுடைய மஹாரத்னங்கள் பாதாள விவரத்திலுள்ள அந்தகாரத்தையெல்லாம் (இருட்டையெல்லாம்) தமது தேஜஸ்ஸினால் த்வம்ஸம் செய்கின்றன.
இருபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.