செவ்வாய், 9 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 131

ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(த்ருவமண்டலத்தின் ஸ்வரூபத்தைக் கூறுதலும், சிம்சுமார சக்ரஸ்வரூபனாகிய பரமபுருஷனுடைய நிலைமையை விவரித்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ரிஷி மண்டலத்திற்கு மேல் பதின்மூன்று லக்ஷம் யோஜனை தூரத்தில் ப்ரஸித்தி பெற்றதும் சிறப்புடையதுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஸ்தானமென்று சொல்கிறார்கள். உத்தானபாதனுடைய பிள்ளையும் மஹாபாகவதனுமாகிய த்ருவன் அவ்விஷ்ணுவின் ஸ்தானத்தில் இருக்கிறான். அக்னி, இந்த்ரன், கச்யப ப்ரஜாபதி, யமன் ஆகிய இவர்கள் ஒரே காலத்தில் சேர்ந்து அவனை இப்பொழுதும் வெகுமதியுடன் ப்ரதக்ஷிணம் செய்கிறார்கள். அவன் கல்பாந்த ஜீவிகளான புருஷர்களுக்கு ஆச்ரயமாயிருப்பவன். அவனுடைய ப்ரபாவத்தை முன்னமே மொழிந்திருக்கிறோம். அவன், கண்கொட்டாமல் விழித்துக் கொண்டிருப்பதும் அறியக் கூடாத வேகமுடையதும் பகவத் ஸ்வரூபமுமாகிய கால சக்ரத்தினால் சுற்றப்படுகிற ஸமஸ்தமான ஸாதாரண நக்ஷத்ரக் கூட்டங்களுக்கும் ஸூர்யன் முதலிய க்ரஹங்களுக்கும் அச்வினி முதலிய விசேஷ நக்ஷத்ரங்களுக்கும் மற்றுமுள்ளவற்றிற்கும் மொட்டை மரம்போல் அசையாத ஆதாரமாய் ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டு ஸர்வகாலமும் விளங்குகிறான். 

புணையடிக்குமிடத்தில் (நெல் பயிரிலிருந்து நெல் மணிகளைப் பிரிக்க மாடுகளைக் கட்டி ஓட்டும் இடம்) எருதுமாடுகள் புணைக்கம்பத்தில் கட்டுண்டு தத்தம் இடத்தை விட்டு மாறாமலே அந்தப் புணைக்கம்பத்தைச் சுற்றி வலம் வருவதுபோல, நக்ஷத்ரக்கூட்டங்களும் ஸூர்யாதி க்ரஹங்களும் கால சக்ரத்தில் உள்ளும் புறமும் கட்டுண்டு வாயுவாகிற பாசத்தினால் தரிக்கப்பட்டுக் கல்பாவஸானம் (கல்பம் முடியும்) வரையில் த்ருவனையே ப்ரதானமாய்க் கொண்டு அவனைச் சுற்றி வருகின்றன. மேகங்களும் பருந்து முதலிய பறவைகளும் காற்றாகிற பாசத்திற்குட்பட்டுக் கர்மத்தை ப்ரதானமாகக் கொண்டு கீழே விழாமல் ஆகாயத்திலேயே சுழலமிடுவது போல, நக்ஷத்ரக்கூட்டங்களும் கர்மமூலமாய் ப்ரக்ருதிக்கும் தமக்கும் உண்டான ஸம்பந்தத்தினால் அனுக்ரஹம் செய்யப் பெற்று நக்ஷத்ர சரீரங்களுடையவையாகி ஆகாயத்தில் ஸஞ்சரிக்கும்படியான தமது கர்மத்தினால் ஆகாச கதியைப் பெற்றுக் கீழே விழாதிருக்கின்றன. இந்த க்ரஹ நக்ஷத்ரக்கூட்டங்களுக்கு ஆதாரமான சிம்சுமாரமென்னும் காலசக்ரத்தை ஸமஸ்த சேதனாசேதன ரூபமான ஜகத்திற்கெல்லாம் தாரகனும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய வாஸுதேவ ஸ்வரூபமாக தயானிக்க வேண்டுமென்று சில வேதபாகங்களும் வைதிகரான சில பெரியோர்களும் சொல்லுகிறார்கள். 

சிம்சுமார சக்ரத்தைச் சரீரமாகவுடைய வாஸுதேவ பகவானைப் பற்றின யோகதாரணையில் (த்யானத்தில்) இந்த நக்ஷத்ரகணத்தைச் சில யோகிகள் ஸாக்ஷாத்கரிக்கிறார்கள். ஸர்ப்பம் போல் சுற்றிக்கொண்டிருக்கிற சரீரமுடையதும் கீழ்முகமாயிருப்பதுமாகிய இந்தச் சிம்சுமார சக்ரத்தின் வால் நுனியில் த்ருவன் இருக்கிறான். அதன் கீழ்ப்பாகத்தில் ப்ரஜாபதி, அக்னி, இந்த்ரன், தர்மன் என்னும் இந்நால்வர் இருக்கிறார்கள். அதன் அடியில் தாதா விதாதா என்னும் இருவர்களும், இடையில் ஸப்தரிஷிகளும் இருக்கிறார்கள். அந்தச் சிம்சுமார சக்ரத்தின் அவயவங்களில் எவ்வெவ்விடங்களில் எவரெவர் இருக்கின்றார்களோ, அவரவர்களோடு அந்தந்த அவயவத்தைச் சில யோகிகள் த்யானித்தார்கள். அங்கனமே இப்பொழுதும் த்யானிக்க வேண்டும். ஸர்ப்பம்போல் சரீரத்தை ப்ரதக்ஷிணமாய்ச் சுற்றிக் கொண்டிருக்கிற அந்தச் சிம்சுமார சக்ரத்தின் வலப்பக்கத்தில் உத்தராயண நக்ஷத்ரங்களான அபிஜித்து முதல் புனர்வஸு வரையிலுள்ள பதினான்கு நக்ஷத்ரங்களும், இடப்பக்கத்தில் தக்ஷிணாயன நக்ஷத்ரங்களான புஷ்யம் முதல் உத்திராடம் வரையிலுள்ள பதினான்கு நக்ஷத்ரங்களும் இருக்கின்றன. சுற்றிக்கொண்டிருக்கிற ஸர்ப்பம் போன்ற சிம்சுமார சக்ரத்தின் இரண்டு பக்கங்களிலுள்ள அவயவங்களும் ஸமமான அளவுடையவை. அதன்பின் பாகத்தில் அஜவீதி. 

அஜவீதியாவது ஸூர்யன் சீக்ரமாய்ச் செல்லும் மார்க்க விசேஷம். அதுவே தக்ஷிணாயனமென்று கூறப்படும். அதன் மத்யத்தில் ஆகாசகங்கை இருக்கிறது. உத்தராயண நக்ஷத்ரங்களில் கடைசியாகிய புனர்வஸு நக்ஷத்ரம் வலது நிதம்பத்திலும், தக்ஷிணாயன நக்ஷத்ரங்களில் முதன்மையாகிய புஷ்ய நக்ஷத்ரம் இடது நிதம்பத்திலும், திருவாதிரை வலக்காலிலும், ஆச்ரேஷை இடக்காலிலும், அபிஜித்து வலமூக்கிலும், உத்திராடம் இடமூக்கிலும், திருவோணம் வலக்கண்ணிலும், பூராடம் இடக்கண்ணிலும், அவிட்டம் வலக்காதிலும், மூலம் இடக்காதிலும், மகம் முதல் தக்ஷிணாயன நக்ஷத்ரங்கள் எட்டு இடப்பக்கத்து முகங்களிலும் த்யானிக்கத்தக்கவை. அங்கனமே ம்ருகசீர்ஷம் முதலிய உத்தராயண நக்ஷத்ரங்கள் வலப்பக்கதில் ப்ரதிலோமமாக த்யானிக்கத்தக்கவை. சதயம் வலத்தோளிலும், கேட்டை இடத்தோளிலும், த்யானிக்கத்தக்கவை. அகஸ்த்ய நக்ஷத்ரம் மேல்கன்னத்திலும், யமநக்ஷத்ரம் அடிக்கன்னத்திலும், முகத்தில் அங்காரகனும் (செவ்வாய்), சனி உபஸ்தத்திலும், ப்ருஹஸ்பதி பிடரியிலும், மார்பில் ஸூர்யனும், ஹ்ருதயத்தில் நாராயணனும், நெஞ்சில் சந்திரனும், நாபியில் சுக்ரனும், ஸ்தனங்களில் அச்வினி தேவதைகளும், ப்ராண அபானங்களில் புதனும், கழுத்தில் ராஹுவும், கேது நக்ஷத்ரங்கள் ஸமஸ்த அங்கங்களிலும், மயிர்க்கால்களில் மற்ற எல்லா நக்ஷத்ரக்கூட்டங்களும் த்யானிக்கத் தக்கவை. ஸர்வதேவதாமயமான அந்தக்கால சக்ரம் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையனான பகவானுடைய உருவம். அதைத் தினந்தோறும் ஸந்த்யாகாலத்தில் பரிசுத்தனாய் மௌனத்துடன் பார்த்துக் கொண்டு “காலத்திற்கு ஆதாரமாயிருப்பதும் ப்ரஹ்மாதி தேவதைகளுக்கு ப்ரபுவும் மஹாபுருஷனுடைய சரீரமுமாகிய காலசக்ரமென்கிற ஜ்யோதிர்லோகத்திற்கு நமஸ்காரம்” என்னும் மந்தரத்தைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்யவேண்டும். ஸூர்யாதி க்ரஹங்களும் அச்வினி முதலிய நக்ஷத்ரங்களும் மற்ற ஸாதாரண நக்ஷத்ரங்களும் அடங்கப்பெற்றுத் தேவதைகளுக்கு மேற்பட்டிருப்பதும் பகவானுடைய உருவமுமாகிய சிம்சுமாரமென்னும் காலசக்ரத்தை மூன்று காலங்களிலும் நமஸ்கரித்தாலும் நினைத்தாலும் மந்திரத்தை ஜபித்தாலும் பாபங்கள் சீக்ரத்தில் பறந்து போகும். 

இருபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக