சனி, 6 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 130

ஐந்தாவது ஸ்கந்தம் - இருபத்து இரண்டாவது அத்தியாயம்

(சந்த்ர சுக்ராதிகளின் ஸ்தானத்தைக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- பகவத் ஸ்வரூபனாகிய ஸூர்யன் மேருவையும் த்ருவனையும் ப்ரதக்ஷிணமாய்ச் சுற்றுகிறானென்றும், நக்ஷத்ரங்களுக்கு எதிர்முகமாய் ராசிகளில் ஸஞ்சரிக்கிறானென்றும் சொன்னீர். இவ்விரண்டும் ஒன்றோடொன்று பொருந்தவில்லை. இது பொருந்தும் விதத்தை அறிய விரும்புகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குயவனுடைய சக்ரம் சுற்றும் பொழுது அதிலிருக்கிற எறும்பு முதலியவைகளும் அதனுடன் சுழலுகின்றன. அதுவன்றித் தாமும் போகின்றன. ஓரிடத்தில் இருக்கின்றவை சிறிது நேரத்துக்குள் மற்றோரிடத்தில் புலப்படுகின்றனவாகையால் சக்ரத்துடன் சுற்றுவது தவிர அவற்றிற்கு வேறு நடையாட்டமும் உண்டென்பதில் ஸந்தேகமில்லை. இங்கனமே நக்ஷத்ர ராசிகளோடுகூட த்ருவனையும் மேருவையும் ப்ரதக்ஷிணமாய்ச் சுற்றுகிற காலசக்ரத்துடன் அதிலுள்ள ஸூர்யன் முதலிய க்ரஹங்கள் சுற்றிக்கொண்டிருப்பினும் ஒரு நக்ஷத்ரத்திலும் ஒரு ராசியிலுமிருக்கிற அவை மற்றொரு நக்ஷத்ரத்திலும் மற்றொரு ராசியிலும் புலப்படுகின்றனவாகையால் அவற்றிற்கு வேறு கதியும் உண்டென்பதில் ஸந்தேஹமில்லை. ஷாட்குண்ய பூர்ணனும் ஆதிபுருஷனுமாகிய ஸாக்ஷாத் நாராயணனே இந்த ஸூர்ய ஸ்வரூபனாய் வேதங்கள் தன் ஸ்வரூப குணாதிகளை விவரித்துச் சொல்லவும் பண்டிதர்கள் தன்னை உபாஸிக்கவும் பெற்றுக் கர்மங்களின் சுத்திக்காகத் தன்னைப் பன்னிரண்டு விதமாகப் பிரித்து இவ்வுலகங்களின் க்ஷேமத்திற்காக வஸந்தம் முதலிய ஆறு ருதுக்களில் குளிர், வெய்யில், காற்று, மழை, முதலிய ருது குணங்களை விளைக்கின்றான். உலகத்திலுள்ளவர்கள் வேத சாஸ்த்ரத்தில் சொன்ன வர்ணாச்ரம ஆசாரங்களை அனுஸரித்து யஜ்ஞாதி கர்மங்களாலும் அத்தகைய உபாஸன விசேஷங்களாலும் இந்த ஆதித்ய ஸ்வரூபனாகிய பகவானை ஆராதித்து அனாயாஸமாகச் சீக்ரத்தில் ஸ்வர்க்க மோக்ஷாதி ரூபமான நன்மையைப் பெறுகிறார்கள். 


ஓ மன்னவனே! லோகங்களுக்கு அந்தராத்மாவாகிய பகவான் இந்த ஆதித்ய ஸ்வரூபனாயிருந்து த்யுலோகத்திற்கும் பூலோகத்திற்கும் இடையில் அந்தரிக்ஷ லோகத்தின் மத்யத்திலுள்ள சிம்சுமார சக்ரமென்கிற காலசக்ரத்தில் அடங்கின மேஷம் முதலிய ராசிகளில் நக்ஷத்ரங்களுக்கு எதிர்முகமாய் ஸஞ்சரிக்கையில் ஒவ்வொரு ராசியில் ஸஞ்சரிக்கும் காலம் ஒரு மாதம் விதமாக ஸம்வத்ஸரத்தின் (வருடத்தின்) அவயவங்களான பன்னிரண்டு மாதங்கள் ஏற்படுகின்றன. அவையே ராசிகளென்னும் பேருடையவை. இரண்டு பக்ஷங்கள் ஒருமாஸமென்றும் இரண்டேகால் நக்ஷத்ரம் ஒரு அஹோராத்ரமென்றும் (பகல் இரவு என்றும்) சொல்லுகிறார்கள். ஸூர்யன் பன்னிரண்டு ராசிகளின் ஆறில் ஒரு பாகமாகிய இரண்டு ராசிகளில் எவ்வளவு காலத்தில் ஸஞ்சரிக்கிறானோ அக்காலம் ருதுவென்று கூறப்படும். அது ஸம்வத்ஸரத்தின் ஆறில் ஒரு பாகம். அவன் எவ்வளவு காலத்தில் ஆறு ராசிகளில் ஸஞ்சரிக்கிறானோ, அக்காலம் அயனமென்கிறார்கள்; அது ஸம்வத்ஸரத்தின் இரண்டில் ஒரு பாகம்: ஆகாசமண்டலத்திற்கும் பூமண்டலத்திற்கும் இடையிலுள்ளதும் பன்னிரண்டு ராசிகள் அடங்கினதுமாகிய அந்தரிக்ஷலோகம் முழுவதும் மந்தகதி (மெதுவாகச் செல்லுதல்), சீக்ரகதி (வேகமாகச் செல்லுதல்), ஸமகதி (இடைப்பட்ட வேகம்) ஆகிய இம்மூன்று கதிகளால் எவ்வளவு காலத்தில் ஸஞ்சரிக்கிறானோ அக்காலம் ஸம்வத்ஸரமென்றும் பரிவத்ஸரமென்றும் இளாவத்ஸரமென்றும் அனுவத்ஸரமென்றும் இத்வத்ஸரமென்றும் வழங்கி வருகிறதென்று சொல்லுகிறார்கள். 

ஸூர்யமண்டலத்தினின்று லக்ஷயோஜனைகளுக்கு மேல் சந்திரன் புலப்படுகிறான். அவன் வெகுவேகமாக ஸஞ்சரிப்பவன். ஆகையால் உக்ரசாரியென்று கூறப்படுவான். ஸூர்யன் ஒரு ஸம்வத்ஸரத்தில் ஸஞ்சரிக்கிற அந்தரிக்ஷ மண்டலத்தைச் சந்தரன் இரண்டு பக்ஷங்களடங்கின ஒரு மாதத்திற்குள் ஸஞ்சரிக்கிறான். ஸூர்யன் ஒரு மாதத்தில் ஸஞ்சரிக்கும் மார்க்கத்தைச் சந்த்ரன் அவன் இரண்டேகால் நக்ஷத்ரங்களில் ஸஞ்சரிக்கும் காலத்திற்குள் ஸஞ்சரிக்கிறான். அவன் ஒரு பக்ஷத்தில் ஸஞ்சரிக்கும் மார்க்கத்தை இவன் ஒரு தினத்தில் ஸஞ்சரிக்கிறான். 

ஓ மன்னவனே! சந்த்ரன் வளர்வதும் தேய்வதுமான கலைகளால் சுக்லபக்ஷ க்ருஷ்ணபக்ஷங்களை விளைத்துப் பித்ருக்களுக்குப் பகலும் இரவுமாகிய தினத்தை ஏற்படுத்திக்கொண்டு ஸமஸ்த ப்ராணிகளுடைய ப்ராணன்களுக்கும் த்ருப்தியை விளைத்து ஜீவன ஹேதுவாய் முப்பது முஹூர்த்தங்களுக்குள் ஒரு நக்ஷத்ரத்தில் ஸஞ்சரிக்கின்றான். பதினாறு கலைகளையுடைய இந்தச் சந்த்ரரூபியான பகவான் மனத்திற்கு அதிஷ்டான தேவதையாகையால் மனோமயனென்றும் ஓஷதிகளுக்கு ப்ரபுவாகையால் அன்னமயனென்றும் ஸமஸ்த ப்ராணிகளுடைய ஜீவனத்திற்கும் காரணனாகையால் அம்ருதமயனென்றும் தேவதைகள் பித்ருக்கள் மனுஷ்யர்கள் பூதர்கள் பசுக்கள் பக்ஷிகள் ஆகிய அனைவரின் ப்ராணன்களுக்கும் திருப்தியை விளைக்கின்றமையால் ஸர்வமயனென்றும் சொல்லுகிறார்கள். அந்தச் சந்திரமண்டலத்தினின்று மூன்று லக்ஷயோஜனைகளுக்கு மேல் அபிஜித்துடன் சேர்ந்து இருபத்தெட்டு நக்ஷத்ரங்கள் கால சக்ரத்தில் அந்தராத்மாவான ஈச்வரனால் தூண்டப்பட்டு மேருவுக்குத் தென்புறத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஸூர்யாதிகளைப்போல் அவற்றிற்குக் கால சக்ரத்துடன் சுற்றுவதொழிய வேறுகதி கிடையாது. அந்த நக்ஷத்ர மண்டலத்தினின்று இரண்டு யோஜனைகளுக்கு அப்புறத்தில் சுக்ரன் புலப்படுகிறான். அவன் ஸூர்யனுக்கு முன்னும் பின்னும் கூடவும் ஸஞ்சரிக்கிறான். ஸூர்யனோடு கூட ஸஞ்சரிக்கும் பொழுது அவனைப்போலவே மந்தம், சீக்ரம், ஸமம் என்கிற மூன்று கதிகளால் ஸஞ்சரிக்கிறான். அவன் எப்பொழுதும் உலகங்களுக்கு அனுகூலனாகவே இருப்பான். க்ரமமாயிருக்கிற நக்ஷத்ரம் முதலியவற்றைக் கடந்து போகையாகிற கதிவிசேஷத்தினால் பெரும்பாலும் மழை ஊஹிக்கப்படுகின்றது. அவன் மழையை நிறுத்தும் க்ரஹத்தையும் தடுத்து மழை பெய்விக்கும் தன்மையுடையவன். அந்தச் சுக்ரனுடைய கதியை நிரூபித்துச் சொன்னதால் புதனுடைய கதியும் கூறப்பட்டதாம். சுக்ர மண்டலத்திற்கு மேல் இரண்டு லக்ஷயோஜனையில் சந்திரனது புதல்வனாகிய புதன் புலப்படுகின்றான். அவன் பெரும்பாலும் உலகங்களுக்கு அசுபத்தையே விளைத்துக் கொண்டிருப்பான். அவன் ஸூர்யனைப் பிரிந்து ஸஞ்சரிக்கும் பொழுது பெருங்காற்று அதிக மழை மழையில்லாமை முதலிய பயத்தை அறிவிப்பான். அந்தப் புதமண்டலத்திற்கு மேல் இரண்டு லக்ஷ யோஜனையில் அங்காரகன் (செவ்வாய்) புலப்படுகின்றான். அவன் வக்ரமாக ஸஞ்சரிப்பானாயின் ஒவ்வொரு ராசியையும் மும்மூன்று பக்ஷங்களில் ஸஞ்சரிப்பான். இல்லாத பக்ஷத்தில் பன்னிரண்டு ராசிகளையும் க்ரமமாகவே ஸஞ்சரிப்பான். அவன் பெரும்பாலும் அசுபக்ரஹம், துக்கத்தையே தெரிவிப்பான். அவ்வங்காரக (செவ்வாய்) மண்டலத்திற்கு மேல் இரண்டுலக்ஷ யோஜனையில் மஹானுபாவராகிய ப்ருஹஸ்பதி இருக்கிறார். அவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஸம்வத்ஸரம் ஸஞ்சரிக்கிறார். அவர் வக்ரசாரமில்லாதிருப்பரானால், ப்ராஹ்மண குலத்திற்குப் பெரும்பாலும் அனுகூலராகவேயிருப்பார். அந்த ப்ருஹஸ்பதி மண்டலத்திற்குமேல் இரண்டுலக்ஷ யோஜனை தூரத்தில் சனி தோற்றுகிறான். ஒவ்வொரு ராசியிலும் முப்பது மாதங்கள் மெல்ல மெல்ல ஸஞ்சரித்துக்கொண்டு எல்லா ராசிகளையும் க்ரமமாகவே சுற்றி வருகின்றான். ஜன்மராசிக்கு முன்னும் பின்னும் ஜன்மராசியிலும் ஸஞ்சரிக்கும் காலத்தினால் ஏற்படுகின்ற ஏழரை வர்ஷங்களில் அவன் அனைவர்க்கும் அசுபத்தையே விளைவிப்பான். அந்தச் சனிமண்டலத்திற்கு மேல் பதினொரு யோஜனை தூரத்தில் ஸப்தரிஷிகள் புலப்படுகின்றார்கள். அவர்கள் உலகங்களுக்கு க்ஷேமத்தை விளைத்துக் கொண்டு ஷாட்குண்ய பூர்ணனாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சிறந்த ஸ்தானமாகிய த்ருவமண்டலத்தை ப்ரதக்ஷிணமாய்ச் சுற்றுகின்றார்கள்.

இருபத்து இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக