ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்தோராவது அத்தியாயம்
(ஸூர்யகதியை நிரூபித்தல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பூமண்டலத்தின் நிலைமை இவ்வளவுதான். த்யுலோகத்தின் பரிமாணமும் இவ்வளவேயென்று அதை அறிந்த பெரியோர்கள் சொல்லுகிறார்கள். கோதுமை முதலியவற்றை அறைக்கும் பொருட்டுச் செய்த கல் யந்திரத்தின் அடிப்பாகத்தின் அளவைச் சொன்னால் அதனோடொத்த அதன்மேல் பாகத்தின் அளவையும் அறியலாமல்லவா? இன்னமும் இரண்டு பாகமாயிருக்கின்ற உளுந்து பயறு முதலியவற்றின் அடிப்பாகம் இவ்வளவென்று தெரிந்தால் அதன் மேல்பாகமும் அவ்வளவென்று தெரிந்து கொள்ளலாமல்லவா? அங்கனமே ப்ரஹ்மாண்டத்தின் அடிபாகமாகிய பூமண்டலத்தின் அளவைச்சொன்ன மாத்ரத்தினால் அதன் மேல்பாகமாகிய த்யுலோகத்தின் அளவையும் சொன்னாற் போலவேயாகின்றது. அந்தப் பூமண்டலத்திற்கும் த்யுமண்டலத்திற்கும் இடையில் அந்தரிக்ஷலோகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவ்வந்தரிக்ஷலோகம் அவ்விரண்டு லோகங்களிலும் கீழும் மேலும் ஸம்பந்தித்திருக்கின்றது. எரியுந்தன்மையுள்ள அக்னி முதலிய வஸ்துக்களில் சிறந்த மஹானுபாவனாகிய ஸூர்யன் அவ்வந்தரிக்ஷ லோகத்தினிடையில் இருந்துகொண்டு வெயிலால் மூன்று லோகங்களையும் எரிக்கிறான்; தன்னொளியால் விளங்கவும் செய்கிறான். அத்தன்மையுள்ள அந்த ஸூர்யன் உதகயனம், தக்ஷிணாயனம், வைஷுவதமென்னும் பேருடைய மந்தகதி (மெதுவாகச் செல்லுதல்), சீக்ரகதி (வேகமாகச் செல்லுதல்), ஸமகதி (இடைப்பட்ட வேகம்) என்னும் மூன்று கதிகளால் ஆரோஹணம் (மேலே ஏறுதல்) அவரோஹணம் (கீழே இறங்குதல்) ஸமவஸ்தானம் (ஸமநிலை) என்று சொல்லப்படுகிற மகரம் முதலிய ராசிகளில் ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்ட காலத்தின்படி ஏறுவதும் இறங்குவதுமாய்ச் சென்று அஹோராத்ரங்களை (பகல் இரவுகளை) வளர்ந்தவைகளாகவும் குறுகினவைகளாகவும் ஸமங்களாகவும் செய்கிறான். ஸூர்யன் மேஷம் துலா முதலிய ராசிகளில் இருக்கும் பொழுது அஹோராத்ரங்கள் (பகல் இரவு) ஸமங்களாயிருக்கின்றன. வ்ருஷபம் முதலிய ஐந்து ராசிகளில் ஸஞ்சரிக்கும் பொழுது பகல் மாத்ரமே வளர்கின்றது. ராத்ரிகளில் மாஸந்தோறும் ஒவ்வொரு நாழிகை குறைகின்றது. வ்ருச்சிகம் முதலிய ஐந்து ராசிகளில் இருக்கும்பொழுது ராத்ரிகள் வளர்கின்றன. பகல்களில் மாஸந்தோறும் ஒவ்வொரு நாழிகை குறைகின்றது. தக்ஷிணாயனம் வரையில் பகல் வளர்ந்து கொண்டே வரும். உத்தராயணம் வரையில் ராத்ரி வளர்ந்து கொண்டே வரும். மானஸோத்தர பர்வதத்தில் இருந்து கொண்டு மேருவைச் சுற்றி வருகின்ற ஸூர்யன் தினமும் ஒன்பது கோடியே ஐம்பத்தோரு லக்ஷம் யோஜனைகள் (ஒரு யோஜனை = 12.8 கி.மீ) சுற்றுகிறானென்று பெரியோர்கள் சொல்கிறார்கள். அம்மானஹோத்தர பர்வதத்தில் மேருவுக்குக் கிழக்கில் தேவதானியென்கிற இந்த்ர பட்டணம் (நகரம்) உள்ளதென்றும், அதற்கு வடக்கில் ஸம்ஸயமனி என்கிற யம பட்டணம் உள்ளதென்றும், அதற்கு மேற்கில் நிம்லோசனி என்கிற வருண பட்டணம் உள்ளதென்றும், அதற்கு வடக்கில் விபாவரியென்கிற ஸோம (சந்த்ர) பட்டணம் உள்ளதென்றும் சொல்லுகிறார்கள். மேருவுக்கு நான்கு புறங்களிலுமுள்ள அந்தத் தேவதானி முதலிய நான்கு பட்டணங்களில் கால விசேஷத்தினால் பூமண்டலத்திலுள்ள ப்ராணிகளின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்குக் காரணங்களான ஸூர்யோதயம் மத்யாஹ்னம் ஸூர்யாஸ்தமயம் நிசீதம் (இரவு) முதலியன உண்டாகின்றன. (மேருவுக்குத் தென்புறத்திலிருப்பவர்க்கு இந்த பட்டணமான தேவதானியில் ஸூர்யோத்யமும் யமபட்டணமான ஸம்யமனியில் மத்யாஹ்னமும், வருணபட்டணமான நிம்லோசனியில் அஸ்தமயமும், ஸோமபட்டணமாகிய விபாவரியில் நிசீதமும் உண்டாகின்றன. உதயம் மத்யாஹனம் அஸ்தமயம் இவை ப்ராணிகளின் ப்ரவ்ருத்தி காலங்கள் (நடையாட்டமுள்ள காலங்கள்). அப்பொழுது பிராணிகள் தொழில் செய்கின்றன. நிசீதமும் அதற்கு முன் பின்பாகங்களும் நிவ்ருத்தி காலங்கள் (நடையாட்டமில்லாத காலங்கள்). அப்பொழுது ப்ராணிகள் உறங்குகின்றன. மேருவுக்கு மேற்கிலிருப்பவர்களுக்கு ஸம்யமனியைத் தொடங்கிக் கிழக்கு முதலிய திக்குக்கள் ஏற்படுகின்றன. ஸூர்யோதயாதிகளும் அந்த க்ரமத்திலேயே உண்டாகின்றன. மேருவுக்கு வடக்கிலிருப்பவர்களுக்கு நிம்லோசனியைத் தொடங்கிக் கிழக்கு முதலிய திக்குகளும் உதயாதிகளும் ஏற்படுகின்றன. மேருவுக்குக் கிழக்கிலிருப்பவர்களுக்கு விபாவரியைத் தொடங்கிக் கிழக்கு முதலிய திக்குகளும் உதயாதிகளும் ஏற்படுகின்றன). மேருவிலிருப்பவர்களுக்கு உதயாதிகள் கிடையாது. ஸூர்யன் அவர்களுக்கு எப்பொழுதும் மத்யாஹ்னத்திலேயே இருந்து ப்ரவ்ருத்தியை விளைத்துக்கொண்டு வருகிறான். ஸூர்யன் ஆகாயத்தில் திரியும்பொழுது தன்னை எதிர்முகமாகப் பார்க்கும் ஜனங்களுக்கு மேரு இடப்பக்கத்திலும் தனக்கு வலப்பக்கத்திலும் இருக்கும்படி செய்வான்.
ஸூர்யனை நாம் எவ்விடத்தில் உதிக்கக் காண்கிறோமோ அதுவே நமக்குக் கிழக்கு. அப்பொழுது நமக்கு மேருபர்வதம் இடப்பக்கத்திலிருக்கின்றது; ஸூர்யனுக்கு வலப்பக்கத்திலிருக்கின்றது. ஸூர்யன் எவ்விடத்தில் உதிக்கிறானோ அவ்விடத்திற்கு நூல் பிடித்தாற்போல நேரான இடத்தில் வந்து சேரும்பொழுது கண்ணுக்குத் தெரியாமல் மறைகிறான். அதுவே அஸ்தமயம். ஸூர்யன் எவ்விடத்தில் இருந்துகொண்டு வேர்வை உண்டாகும்படி மத்யாஹ்ன வேளையை விளைத்து எரிக்கிறானோ அவ்விடத்திற்கு நூல் பிடித்தாற்போல் நேரான இடத்தில் போய்ச் சேரும்பொழுது அர்த்த ராத்ரியாய் ப்ராணிகள் உறங்கும்படி செய்கிறான். ஸூர்யனுடைய உதயத்தையும் அஸ்தமயத்தையும் பார்க்கிறவர்கள் தமக்கு அர்த்தராத்ரியை விளைக்கும் ஸூர்யனைப் பார்க்கமாட்டார்கள். (யமதிக்கில் இருக்கிறவர்களுக்கு ஸூர்யோதயமாகும் பொழுது இந்தர திக்கிலிருக்கிறவர்களுக்கு மத்யாஹ்னமாயிருக்கும். வருண திக்கில் அர்த்தராத்ரியாயிருக்கும். யமதிக்கில் மத்யாஹ்னமாகும் பொழுது இந்த்ர திக்கில் அஸ்தமயம். வருண திக்கில் உதயம். ஸோமதிக்கில் அர்த்தராத்ரம். யமதிக்கில் அஸ்தமயமாகும் பொழுது இந்தர திக்கில் அர்த்தராத்ரம். வருண திக்கில் மத்யாஹ்னம். ஸோமதிக்கில் ஸூர்யோதயம். யம திக்கில் அர்த்தராத்ரமாகும் பொழுது இந்த்ர திக்கில் உதயம். வருண திக்கில் அஸ்தமயம். ஸோமதிக்கில் மத்யாஹனம். ஸூர்யன் இந்த்ர பட்டணத்தினின்று புறப்பட்டுப் பதினைந்து நாழிகைக்குள் இரண்டு கோடியே முப்பத்தேழு லக்ஷத்து எழுபத்தையாயிரம் யோஜனைகள் கடந்து யமபட்டணம் சேருவான். யமபட்டணத்தினின்று புறப்பட்டு அதே நாழிகைக்குள் அவ்வளவு யோஜனைகள் கடந்து வருணபட்டணம் சேருவான். அங்கனமே ஸோம பட்டணத்திற்கும் இந்த்ர பட்டணத்திற்கும் போவான். அங்கிருந்து மீளவும் முன்போலவே சுற்றிக்கொண்டு வருவான். மற்ற சந்திரன் முதலிய க்ரஹங்களும் அச்வினி முதலிய நக்ஷத்ரங்களும் மற்ற ஸாதாரண நக்ஷத்ரக் கூட்டங்களும் அங்கனமே உதிப்பதும் அஸ்தமிப்பதுமாய் இருக்கின்றன.
வேதஸ்வரூபமாக உபாஸிக்கத் தகுந்த ஸூர்யரதம் ஒரு முஹூர்த்த காலத்தில் முப்பத்து நான்கு லக்ஷத்து எண்ணூறு யோஜனை தூரம் தேவதானி முதலிய நான்கு பட்டணங்களிலும் சுற்றுகின்றது. அந்த ரதத்தின் ஒரு சக்ரம் பன்னிரண்டு இலைகளும் ஆறு கட்டுகளும் மூன்று நாபிகளும் உடையது. அதை ஸம்வத்ஸர ஸ்வரூபமாகவும், பன்னிரண்டு இலைகளைப் பன்னிரண்டு மாதங்களாகவும், ஆறு கட்டுகளை ஆறு ருதுக்களாகவும், மூன்று நாபிகளைச் சாதுர்மாஸ்யங்களாகவும் உபாஸிக்கிறார்கள். அந்த ரதத்தின் இருசில் (அச்சில்) ஒரு நுனி மேருவின் நுனியில் கட்டுண்டிருக்கின்றது. மற்றொரு நுனி மானஸோத்தர பர்வதத்தில் ஐம்பதினாயிரம் யோஜனைகளுக்கு மேல் கட்டுண்டிருக்கின்றது. ஸூர்ய ரதத்தின் சக்ரம் அந்த மற்றொரு பாகத்தில் கோர்க்கப்பெற்றுத் எண்ணெய் ஆட்டும் செக்கு போல் மானஸோத்தர பர்வதத்தின் மேல் சுற்றுகின்றது. இரண்டாவது அச்சில் இருக்கும் கட்டை அந்தச் சக்ரத்தின் ஓரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்.
முதல் கட்டை மேருவினின்று மானஸோத்தரம் வரையில் நீண்டிருக்கும்; அது ஒரு கோடியே ஐம்பத்தேழு லக்ஷத்து ஐம்பதினாயிரம் யோஜனை அளவுடையது. இரண்டாவது கட்டை அதில் நான்கில் ஒரு பாகமுடையது (முப்பத்தொன்பது லக்ஷத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு யோஜனை அளவுடையது). அதன் மேல்பாகம் த்ருவனிடத்தில் தைலயந்தரத்தின் (எண்ணெய் ஆட்டும் செக்கின்) ஏர்க்கால் (கட்டை) போலக் கட்டுண்டிருக்கின்றது. அந்த ரதத்தில் ரதிகன் உட்காருமிடம் முப்பத்தாறு லக்ஷயோஜனை நீண்டிருக்கும். அதில் நான்கில் ஒரு பாகமாகிய ஒன்பது லக்ஷயோஜனை விஸ்தாரமுடையது. அந்த ஸூர்ய ரதத்தின் நுகத்தடியும் ஒன்பது லக்ஷயோஜனை நீளமுடையது. அதில் ஏழு குதிரைகள் அருணனால் கட்டப்பட்டிருக்கின்றன. அவை காயத்ரி முதலிய சந்தங்களின் நாமங்களுடையவை. ஸூர்யனை அவன் போகவேண்டிய இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. அருணன் ஸூர்யனுக்கு முன்னே மேற்குமுகமாய்க் குதிரைகளை நடத்தும் வ்யாபாரத்தில் இருக்கிறான். அங்கனமே கட்டை விரல் கணுவின் உயரமுடைய வாலகில்யரென்று ப்ரஸித்தர்களான அறுபதினாயிரம் ரிஷிகள் நல்லுரைகளைச் சொல்லும்படி நியமிக்கப்பட்டு ஸூர்யனுக்கு முன்னே அந்த ரதத்தில் இருந்து கொண்டு அவனை ஸ்தோத்ரம் செய்கிறார்கள். அங்கனமே மற்ற ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்த்ரீகள், நாகர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், தேவர்கள் என்கிற இவ்வேழு கூட்டத்தவர்களும் ஒவ்வொரு கூட்டத்திலும் இரண்டிரண்டு பேர்களாய்ச் சேர்ந்து பதினான்கு பேர்கள் வெவ்வேறு நாமங்கள் பூண்டு பரமாத்ம ஸ்வரூபனும் வெவ்வேறு நாமங்களுடையவனும் மஹானுபாவனுமாகிய ஸூர்யனை மாஸந்தோறும் தனித்தனி வ்யாபாரங்களால் உபாஸிக்கின்றார்கள். இப்பூமண்டலம் ஒன்பது கோடியே ஐம்பத்தோரு லக்ஷம் யோஜனை சுற்றளவுடையது. அதில் ஸூர்யன் ஒரு க்ஷணத்தில் இரண்டாயிரம் யோஜனைகளும் இரண்டு கூப்பிடு தூரமும் போகிறான்.
இருபத்தோராவது அத்தியாயம் முற்றிற்று.