ஞாயிறு, 31 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 128

ஐந்தாவது ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்

(ப்லக்ஷம் முதலிய ஆறு த்வீபங்கள் அவற்றைச் சூழ்ந்த ஸமுத்ரங்கள் லோகாலோக பர்வதம் ஆகிய இவற்றின் நிலைமையைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இனிமேல் ப்லக்ஷம் முதலிய த்வீபங்களிலுள்ள வர்ஷங்களின் பிரிவுகளையும் அவற்றின் பரிமாணத்தையும் லக்ஷணத்தையும் ஆகாரத்தையும் க்ரமப்படி விவரித்துச் சொல்லுகிறேன். ஜம்பூத்வீபம் தான் எவ்வளவு விஸ்தாரமுடையதோ அவ்வளவு விஸ்தாரமுடைய லவண ஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருப்பது போலவும், அந்த த்வீபத்தினிடையிலுள்ள மேருபர்வதம் ஜம்பூத்வீபத்தினால் சூழப்பட்டிருப்பது போலவும் லவண ஸமுத்ரமானது, பட்டணத்தைச் சுற்றியிருக்கும் அகழி தனக்கு வெளியிலுள்ள உத்யான வனத்தினால் சூழப்பட்டிருப்பது போல், தன்னைக் காட்டிலும் இருமடங்கு அதிக விஸ்தாரமுடைய ப்லக்ஷ த்வீபத்தினால் சூழப்பட்டிருக்கின்றது. அந்த த்வீபத்தினிடையிலுள்ள ப்லக்ஷ வ்ருக்ஷம் ஜம்பூ வ்ருக்ஷத்தின் அளவுடையது. அதைப் பற்றியே அந்த த்வீபத்திற்கு ப்லக்ஷ த்வீபமென்னும் பேர் விளைந்தது. அந்த வ்ருஷம் ஸ்வர்ணம் போல் பளபளவென்று விளக்கமுற்றிருக்கும். அந்த வ்ருக்ஷத்தின் அடியில் ஏழு ஜ்வாலைகளையுடைய அக்னி இருக்கின்றது அந்த த்வீபத்திற்கு ப்ரியவ்ரதனுடைய பிள்ளையாகிய இத்மஜிஹ்வன் அதிபதி. அவன் அந்த த்வீபத்தை ஏழு வர்ஷங்களாகப் பிரித்து அவ்வர்ஷங்களின் பெயர்களையே பேராகவுடைய தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தான் ஆத்மயோகத்தினால் ஸம்ஸாரத்தினின்று மோக்ஷத்தை அடைந்தான். அவ்வர்ஷங்கள் சிவம், யசஸ்யம், ஸுபத்ரம், சாந்தம், க்ஷேமம், அபயம், அம்ருதமென்னும் பேருடையவை. அவ்வர்ஷங்களில் ஏழு பர்வதங்களும், ஏழு நதிகளும் பேர்பெற்றவை. எல்லையைத் தெரிவிக்கிற அப்பர்வதங்கள் ஏழும் மணிகூடம், வஜ்ரகூடம், இந்த்ரஸேனம், ஜ்யோதிஷ்மான், தூம்ரவர்ணம், ஹிரண்யக்ரீவம், மேகமாலமென்னும் பேருடையவை. அங்குள்ள மஹாநதிகள் அருணை, ஸ்ருமனை, ஆங்கிரஸி, ஸாவித்ரி, ஸுப்ரபாதை, ருதம்பரை, ஸத்யம்பரை என்னும் பேருடையவை. அந்நதிகளின் ஜலத்தில் ஸ்நான (நீராடுதல்) பான (பருகுதல்) முதலியவற்றைச் செய்கையால் ரஜஸ் தமஸ்ஸுக்கள் கழியப் பெற்றவர்களும் ஆயிரமாண்டு வாழ்நாள் உடையவர்களும் தேவதைகளோடொத்த காட்சியமைந்த ஸந்தானமுடையவர்களும் ஹம்ஸர், பதகர், ஊர்த்வாயனர், ஸத்யாங்கர் என்னும் பேர்களுடையவர்களுமான நான்கு வர்ணத்தவர்கள் வேதோக்தமான கர்மயோகாதிகளாலும் அவ்வேதத்தை ஒட்டின ஸ்ம்ருதி முதலியவற்றில் சொன்ன வழிகளாலும் ஷாட்குண்ய பூர்ணனும் வேத ப்ரதிபாத்யனும் (வேதத்தினால் அறியப்படுபவனும்) ஸூர்யனைச் சரீரமாகவுடையவனுமாகிய பரமாத்மாவை ஆராதிக்கிறார்கள். “அனாதியும் நிர்விகாரனும் புண்ய கர்மங்களின் பலன்களைக் கொடுப்பவனும் தன்னைப் பற்றினார்க்கு மோக்ஷத்தைக் கொடுப்பவனும் பற்றாதவர்க்கு ஸம்ஸாரத்தை விளைப்பவனும் பரப்ரஹ்மமென்று கூறப்படுகின்றவனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்குச் சரீரபூதனான ஸூர்யனென்னும் ஜீவனைச் சரணம் அடைகிறோம்” என்னும் இம்மந்திரத்தை அவர்கள் ஜபிக்கின்றார்கள். 

ப்லக்ஷம் முதலிய ஐந்து த்வீபங்களில் ஸாமான்யமாய் ஸமஸ்த புருஷர்களும் ஆயுள், மனோபலம், இந்த்ரியபலம், தேஹபலம், புத்திபராக்ரமம் ஆகிய இவற்றின் பெருமை ஸ்வபாவஸித்தமாய் (இயற்கையாக) இருக்கப்பெற்றவர்கள். ப்லக்ஷ த்வீபம் இக்ஷு ஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருப்பது போல, அதைக்காட்டிலும் இருமடங்கு அதிகமான விஸ்தாரமுடைய சால்மலி த்வீபமும் தன்னோடொத்த விஸ்தாரமுடையதும் வட்டமாயிருப்பதுமாகிய ஸுரா ஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருக்கின்றது. அந்த த்வீபத்தில் சால்மலி வ்ருக்ஷம் ப்லக்ஷ வருக்ஷத்தோடொத்த பரிமாணமுடையதாயிருக்கின்றது. வேதங்களால் துதி செய்யப்பட்ட பக்ஷிராஜனாகிய (பறவைகளின் அரசனான) கருத்மானுடைய வாஸஸ்தானம் (இருப்பிடம்) அந்த வ்ருஷத்தில் ஏற்பட்டிருக்கிறதென்று சொல்லுகிறார்கள். அந்த வருக்ஷத்தைப் பற்றியே அந்த த்வீபம் சால்மலி த்வீபமென்று கூறப்படுகின்றது. ப்ரியவ்ரதனுடைய பிள்ளையாகிய யஜ்ஞபாஹு என்பவன் அந்த த்வீபத்திற்கு அதிபதி. அவனுக்கு ஏழு பிள்ளைகள். அவன் அந்த த்வீபத்தை ஏழு வர்ஷங்களாகப் பிரித்துத் தன் பிள்ளைகளின் பேர்களை இட்டு அவர்களுக்குக் கொடுத்தான். அவை ஸுரோசனம், ஸௌமனஸ்யம், ரமணகம், தேவபர்ஹம், பாரியர்ஹம், ஆப்யாயனம், அபிஜ்ஞாதமென்னும் பேருடையவை. அவற்றில் ஏழு பர்வதங்களும் ஏழு நதிகளும் ப்ரஸித்தமானவை. பர்வதங்கள் ஸ்வரஸம், சதச்ருங்கம், வாமதேவம், குமுதம், முகுந்தம், புஷ்பவர்ஷம், சதச்ருதி என்னும் பேருடையவை. நதிகள் அனுமதி, ஸினீவாலி, ஸரஸ்வதி, குஹுரஸனி, நந்தை, ராகை என்னும் பேருடையவை. ச்ருததரர், வித்யாதரர், வஸுந்தரர், ஈஷந்தரர் என்னும் பேருடைய அவ்வர்ஷங்களிலுள்ள புருஷர்கள் வேதங்களால் ஓதப்படுகின்ற பகவத் ஸ்வரூபனான ஸோமனென்னும் தேவனை ஆராதிக்கிறார்கள். “தன் கிரணங்களால் சுக்லபக்ஷத்தில் தேவதைகளுக்கும் க்ருஷ்ணபக்ஷத்தில் பித்ருக்களுக்கும் அன்னத்தைப் பங்கிட்டுக்கொடுக்கிற சந்தரன் தன் ப்ரஜைகளாகிய எங்கள் அனைவர்க்கும் அம்ருதம்போல் ஸுகத்தை விளைப்பானாக” என்ற இம்மந்திரத்தை அவர்கள் ஜபிக்கிறார்கள். 

அந்த சால்மலித்வீபம் போல, ஸுரா ஸமுத்ரத்திற்கு வெளியில் அதைக் காட்டிலும் இருமடங்கு அதிகமான விஸ்தாரமுடைய குசத்வீபமும் தன்னோடொத்த பரிமாணமுடைய  க்ருத (நெய்) ஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருக்கிறது. அந்த த்வீபத்தில் பெரிய தாளுடைய ஒரு  குசம் (தர்ப்ப விசேஷம்) ப்ரஹ்மதேவனால் நிர்மிக்கப்பட்டுள்ளது. அது மற்றொரு அக்னிபோல் பேரொளியுடன் ப்ரகாசிக்கின்றது. அதைப்பற்றி அந்த த்வீபத்திற்குக் குசத்வீபமென்று பெயர். அந்த குசம் தன் அவயவங்களான புற்களின் ஒளியினால் பத்துத் திசைகளையும் விளங்கச் செய்கின்றது. அந்த குசத்வீபத்திற்கு ப்ரபு ப்ரியவ்ரதனுடைய பிள்ளையாகிய ஹிரண்யரேதன் என்பவன். அவன் தனது த்வீபத்தை ஏழு வர்ஷங்களாகப் பிரித்துத் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தவஞ்செய்யச் சென்றான். அவனுடைய பிள்ளைகள் வஸுதானன், த்ருடருசி, நாபிகுப்தன், ஸ்துத்யவரதன், விப்ரன், வாமதேவன் என்னும் பேருடையவர்கள். அந்த வர்ஷங்களும் அதே பெயர் உடையன. அவற்றில் ஏழு எல்லைப் பர்வதங்களும் ஏழு நதிகளும் ப்ரஸித்தி பெற்றவை. பர்வதங்கள் பப்ரு, சதுச்ருங்கம், கபிலம், சித்ரகூடம், தேவானீகம், ஊர்தவரோமம், த்ரவிணம் என்னும் பேருடையவை. மஹாநதிகள் ரஸகுல்யை, மதுகுல்யை, க்ருதவிந்தை, தேவகர்ப்பை, க்ருதச்யுதை, மந்தரமாலை என்னும் பேருடையவை. குசலர், கோவிதர், அபியுக்தர், குலகர் என்னும் பேருடைய அந்த த்வீபத்திலுள்ளவர்கள் அந்நதிகளின் ஜலத்தை உபயோகப்படுத்துவதினால் மனமலங்கள் கழியப்பெற்று அக்னியைச் சரீரமாகவுடைய பகவானை யஜ்ஞாதிகர்மங்களில் தமக்குள்ள திறமையினால் ஆராதிக்கிறார்கள்.  “ஓ அக்னியே! நீ பரப்ரஹ்மத்தோடு ஸாக்ஷாத் ஸம்பந்தமுடையவன். நீ யாகங்களில் பகவத் ஸ்வரூபர்களான இந்த்ராதிகளுக்குக் கொடுக்கும் ஹவிஸ்ஸைக் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கும் அதிகாரமுடையவன். பரமபுருஷனுக்குச் சரீரபூதர்களான இந்திராதி தேவதைகளைக் குறித்துச்செய்யும் யஜ்ஞத்தினால் அவர்களுக்கு அந்தராத்மாவான பரமாத்மாவை ஆராதிப்பாயாக” என்னும் இம்மந்திரத்தை அவர்கள் ஜபிக்கிறார்கள். 

குசத்வீபத்திற்கு வெளியிலிருக்கிற க்ரௌஞ்சத்வீபமும் அதைக்காட்டிலும் இருமடங்கு அதிகமான விஸ்தாரமுடையது அது தன்னோடொத்த விஸ்தாரமுடைய ததிஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருக்கின்றது. அந்த த்வீபத்திற்கு அந்த பேர் விளைந்ததற்குக் காரணமாக க்ரௌஞ்சமென்னும் மஹாபர்வதம் அதில் இருக்கின்றது. அந்தப் பர்வதம் முன்பு ஸுப்ரஹ்மண்யனுடைய ஆயுதத்தினால் தன் தாழ்வரைகளும் குகைகளும் பிளவுண்டு ததி ஸமுத்ரத்தில் மறைந்து வருணனால் காக்கப்பெற்று நிர்ப்பயமாயிற்று. அந்த த்வீபத்திற்கு ப்ரியவ்ரதனுடைய பிள்ளையாகிய க்ருத ப்ருஷ்டனென்பவன் அதிபதி. அவன் தன் த்வீபத்தை ஏழு வர்ஷங்களாய்ப் பிரித்து அவற்றிற்குத் தன் பிள்ளைகளின் பேர்களை வைத்து அவர்களை அவற்றிற்கு ப்ரபுக்களாக ஏற்படுத்தி மிக்க மங்களமான புகழுடையவனும் ஸர்வாந்தராத்மாவும் தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பெற்றான். 

க்ருதப்ருஷ்டனுடைய பிள்ளைகள் ஆமோதன், மதுவஹன், மேகப்ருஷ்டன், ஸுதாமன், ருஷிஜ்யன், லோஹிதார்ணன், வனஸ்பதியென்னும் பேருடையவர்கள். அவ்வர்ஷங்களில் சுக்லம், வர்த்தமானம், போஜனம், உபபர்ஹணம், ஆநந்தம், நந்தனம், ஸர்வதோபத்ரம் என்னும் ஏழு பர்வதங்களும், அபயை, அம்ருதெளகை, ஆர்யகை, தீர்த்தவதி, த்ருப்திருபை, பவித்ரவதி, சுக்லை என்னும் ஏழு நதிகளும் ப்ரஸித்தமானவை. அவ்வர்ஷத்திலுள்ள புருஷர்கள் நிர்மலமும் பரிசுத்தமுமான அந்நதிகளின் ஜலத்தை உபயோகப்படுத்துகிறார்கள். குருக்கள், ருஷபர், த்ரவிணகர், தேவகர் என்னும் பேருடைய அவர்கள் ஜலத்தைச் சரீரமாகவுடைய பகவானை ஜலம் நிறைந்த அஞ்சலியினால் ஆராதிக்கிறார்கள். “ஜலங்களே! நீங்கள் பரமபுருஷனுடைய சக்திரூபமாய் இருப்பவர்கள். பூலோகம், புவர்லோகம், ஸ்வர்லோகமென்ற மூன்று லோகங்களையும் பரிசுத்தம் செய்பவர்கள். ஆகையால் பாபங்களைப் போக்கும் திறமையுடையவர்களும் பரமாத்மாவினிடத்தினின்று உண்டானவர்களுமாகிய நீங்கள் உங்களை ஸ்பர்சிக்கின்ற எங்கள் ஜன்மத்தை  பவித்ரம் (தூய்மை) செய்வீர்களாக” என்னும் இம்மந்திரத்தை அவர்கள் ஜபித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ததிஸமுத்ரத்திற்கு அப்புறத்தில் ஏற்பட்டிருக்கின்ற சாகத்வீபம் முப்பத்திரண்டு லக்ஷ யோஜனை விஸ்தாரமுடையது. அது தன்னோடொத்த விஸ்தாரமுடைய க்ஷீரஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருக்கிறது. அந்த த்வீபத்தில் சாகமென்னும் வ்ருக்ஷம் இருக்கின்றது. அதைப்பற்றியே அந்த த்வீபத்திற்குச் சாகத்வீபமென்று பேர் விளைந்தது. அதன் வாஸனை உயர்ந்தது. அது அந்த த்வீபத்தையெல்லாம் பரிமளிக்கச் செய்கின்றது. அதற்கும் ப்ரியவ்ரதனுடைய புதல்வனே அதிபதி; அவன் மேதாதிதியென்னும் பேருடையவன். அவனும் அந்த த்வீபத்தை ஏழுவர்ஷங்களாகப் பிரித்துத் தன் புதல்வர்களுடைய நாமங்களை வைத்து புரோஜவன், மனோஜவன், வேபமானன், தூம்ரானீகன், சித்ரரதன், பஹுரூபன், விச்வவாரன் என்னும் பேருடைய தன் புதல்வர்களை அவ்வர்ஷங்களுக்கு அதிபதிகளாக ஏற்படுத்தி, தான் அபரிச்சின்ன (வரையறுக்க முடியாத, அளவற்ற) ஆநந்த ஸ்வரூபனாகிய பகவானிடத்தில் மனம் செல்லப் பெற்றுத் தபோவனத்திற்குச் சென்றான். அவற்றில் ஈசானம், உருச்ருங்கம், பலபத்ரம், சதகேஸரம், ஸஹஸ்ரஸ்ரோதம், தேவபாலம், மஹானஸம் என்னும் ஏழு எல்லைப் பர்வதங்களும், அனகை, ஆயுர்த்தை, உபயஸ்ருஷ்டி, அபராஜிதை, பஞ்சபரி, ஸஹஸ்ரஸ்ருதி, நிஜத்ருதி என்னும் ஏழு மஹாநதிகளும் ஏற்பட்டிருக்கின்றன. ருதவ்ரதர், ஸத்யவ்ரதர், தானவ்ரதர், ஸுவ்ரதர் என்னும் பேருடைய அவ்வர்ஷத்திலுள்ள புருஷர்கள் ப்ராணாயாமத்தினால் ரஜஸ் தமஸ்ஸுக்களை உதறி வாயுவைச் சரீரமாகவுடைய பகவானை த்யான யோகத்தினால் ஆராதிக்கிறார்கள். “முக்யப்ராண ரூபனாகி உள்ளே புகுந்து தனது அடையாளங்களான ப்ராணம் அபானம் முதலிய பஞ்சவருத்திகளால் (ஐந்து வியாபாரங்களால்) ஸமஸ்த ப்ராணிகளையும் தரிக்கின்றவனும் ஜகத்தெல்லாம் தன் வசத்திலிருக்கப் பெற்றவனும் ஸர்வாந்தர்யாமியுமாகிய ஸாக்ஷாத் ஸர்வேச்வரன் எங்களைப் பாதுகாப்பானாக” என்னும் இம்மந்திரத்தை அவர்கள் ஜபிக்கின்றார்கள். 

க்ஷீரஸமுத்ரத்திற்கு அப்புறத்தில் அதைக்காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான விஸ்தாரமுடைய புஷ்கரத்வீபம் ஏற்பட்டிருக்கின்றது. அது தன்னோடொத்த விஸ்தாரமுடைய சுத்தஸமுத்ரத்தினால் சூழப்பட்டிருக்கின்றது. அந்த த்வீபத்தில் அக்னிஜ்வாலைகள் போல நிர்மலமான பதினாயிரம் பொன்னிதழ்களையுடைய ஒரு தாமரைமலர் இருக்கின்றது. அங்குள்ளவர்கள் அதைப் பகவானுடைய அம்சமாகிய ப்ரஹ்மதேவனுக்கு ஆஸனமாக த்யானிக்கிறார்கள். அந்த த்வீபத்தினிடையில் ஒரு பர்வதம் இருக்கின்றது. அது மானஸோத்தரமென்னும் பேருடையது. அது தனக்கு உள்ளும் புறமும் உள்ள வர்ஷங்களுக்கு எல்லைப் பர்வதமாயிருக்கின்றது; பதினாயிரம் யோஜனை உயரமும் அவ்வளவு விஸ்தாரமும் உடையது. அந்தப் பர்வதத்தின்மேல் நான்கு திக்குக்களிலும் இந்திரன் முதலிய நான்கு லோகபாலர்களின் பட்டணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மேருவைச் சுற்றுகின்ற ஸூர்யரதத்தின் ஸம்வத்ஸர ரூபமான சக்ரம் அப்பர்வதத்தின்மேல் தேவதைகளின் பகலும் இரவுமாகிய உத்தராயண தக்ஷிணாயனங்களால் லோகத்திலுள்ள சக்ரம்போல் சுழல்கின்றது. அந்த த்வீபத்திற்கு அதிபதி ப்ரியவ்ரதனுடைய பிள்ளையாகிய வீதிஹோத்ரனென்பவன். அவன் அந்த த்வீபத்தை இரண்டு வர்ஷங்களாகப் பிரித்துத் தன் பிள்ளைகளின் பேர்களை இட்டு, ரமணனென்றும் கதாகதகனென்றும் பேருடைய அவர்களை அவ்வர்ஷங்களுக்கு ப்ரபுக்களாக (அரசர்களாக, தலைவர்களாக) ஏற்படுத்தித் தான் தமையனாகிய மேதாதிதியைப் போலப் பகவதாராதன ரூபமான கர்மங்களைச் செய்துகொண்டிருந்தான். அவ்வர்ஷங்களிலுள்ள புருஷர்கள் கர்மபந்தத்தைப் போக்குவதற்காகக் கர்மயோகத்தோடு கூடின த்யானயோகத்தினால் ப்ரஹ்மதேவனைச் சரீரமாகவுடைய பகவானை ஆராதிக்கிறார்கள். “வர்ணாச்ரமாதி பேதங்களையுடைய ஜனங்கள் ப்ரஹ்மத்திற்குச் சரீரமாயிருப்பவனும் வேதங்களால் அறியத் தகுந்தவனும் ஜகத் ஸ்ருஷ்டியாகிற கார்யத்தையே நடத்தும் தன்மையனுமாகிய எவனை, ஜகத்தெல்லாம் இவனேயென்னும் அபேத புத்தியுடன் (இந்த சேதனாசேதனங்கள் அனைத்தும் பகவானுக்கு சரீரம் என்பதால் அவனது அம்சமே என்கிற வேறுபாடு இல்லாத புத்தியுடன்) மாறாமல் ஆராதிக்கின்றார்களோ அப்படிப்பட்ட மாஹானுபாவனாகிய ப்ரஹ்மதேவனுக்கு நமஸ்காரம்” என்னும் இம்மந்திரத்தை ஜபிக்கிறார்கள். 

அந்தச் சுத்த ஸமுத்ரத்திற்கு அப்புறத்தில் ஜனஸஞ்சாரமுள்ள உள்பாகத்திற்கும் ஜன ஸஞ்சாரமில்லாத வெளிப்பாகத்திற்கும் இடையில் சுற்றிலும் லோகாலோகமென்னும் பர்வதம் ஏற்பட்டிருக்கின்றது. மானஸோத்தர பர்வதத்திற்கும் மேருபர்வதத்திற்கும் இடையில் எவ்வளவு பூமி இருக்கின்றதோ அவ்வளவு பூமி சுத்தஸமுத்ரத்திற்கு அப்புறத்தில் இருக்கின்றது. அதற்கப்புறமுள்ள பூமி ஸ்வர்ணமயமாய்க் கண்ணாடிப்புறம் போன்றிருக்கும். அப்பூமியில் வைத்த பொருள் எதுவும் மீளவும் புலப்படுகிறதில்லை. ஆகையால் அந்தப் பூமி ஒரு ப்ராணியுமின்றிச் சூன்யமாயிருக்கிறது. அதை அலோகமென்கிறார்கள். தன்வரையிலுமுள்ள பூமி லோகமென்றும் தனக்கு வெளியிலுள்ள பூமி அலோகமென்றும் கூறப்படுகின்றனவாகையால் இடையிலுள்ள பர்வதம் லோகாலோகமென்று பேர்பெற்றது. அப்பர்வதம் மூன்று லோகங்களுக்கும் வெளியில் சுற்றிலும் ஈச்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. ஸுர்யன் முதல் த்ருவன் வரையிலுள்ள ஜ்யோதி ஸமூஹங்களின் ஒளிகள் கீழிருக்கின்ற பூலோகம் முதலிய மூன்று லோகங்களையும் விளங்கச் செய்கின்றன. லோகாலோக பர்வதம் தடுக்கின்றமையால் அதற்கு வெளியில் சென்று விளக்கம் செய்யமாட்டாது. அப்பர்வதம் த்ருவனையும் மறைக்கும்படியான அவ்வளவு உயரமும் விஸ்தாரமும் உடையது. இப்பூமண்டலத்தின் நிலைமை இவ்வளவே அளவோடும் அடையாளத்தோடும் ஆகாரத்தோடும் பண்டிதர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இந்த லோகாலோகபர்வதம் ஐம்பது கோடி யோஜனை விஸ்தாரமுடைய பூமியின் நான்கில் ஒருபாகமாகிய பன்னிரண்டரை கோடி யோஜனை உயரமும் அவ்வளவு விஸ்தாரமுமுடையது. அப்பர்வதத்தின் மேல் நான்கு திக்குக்களிலும் ஸமஸ்த லோகங்களுக்கும் குருவாகிய ப்ரஹ்மதேவனால் லோகக்ஷேமத்தின் பொருட்டு ருஷபம், புஷ்கரசூடம், விமானம், அபராஜிதம் என்னும் பேருடைய மேலான யானைகள் நான்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த யானைகளுக்கும் தனது அம்சபூதர்களான இந்தராதி லோகபாலர்களுக்கும் பலவகையான ஸாமர்த்யங்கள் வளர்கைக்காகவும் ஸமஸ்த லோகங்களின் க்ஷேமத்திற்காகவும் தன் மாயையால் ஏற்பட்ட பலவகை லோக யாத்ரைகளைப் பாதுகாப்பதற்காகவும் பெரிய மேன்மைக்கிடமான கல்யாண குணங்கள் நிறைந்தவனும் நித்யவிபூதி லீலாவிபூதி ஆகிய இரண்டு விபூதிகளுக்கும் ப்ரபுவும் ஸர்வாந்தராத்மாவுமாகிய ஸர்வேச்வரன் சுத்தஸத்வ மயமாயிருப்பதும் கர்மயோகம் ஜ்ஞானயோகம் வைராக்யம் இவைகளால் உதவி செய்யப்பெற்ற அணிமாதி அஷ்டைச்வர்ய ஸித்திபர்யந்தமான உபாஸனத்தினால் காணத் தகுந்ததுமாகிய திவ்யமங்கள விக்ரஹத்துடன் கூடி விஷ்வக்ஸேனர் முதலிய தன் பரிஜனங்களால் சூழப்பட்டுச் சங்கு சக்ரம் முதலிய தன் ஆயுதங்களால் திகழ்கின்ற பாஹுதண்டங்கள் விளங்கப்பெற்றுக் கல்பாவஸானம் வரையில் அந்த லோகாலோக பர்வதத்தில் நாற்புறத்திலும் வீற்றிருக்கிறான். 

மன்னவனே! லோகாலோகத்திற்கு வெளியிலுள்ள அலோகமென்னும் பூமி லோகத்தோடொத்த விஸ்தாரமுடையது. அதற்கு அப்புறத்தில் பரிசுத்தமான யோகப்ரபாவமுடைய யோகீச்வரர்களின் ஸஞ்சாரமேயன்றி மற்ற ஜனங்களின் நடையாட்டம் கிடையாது. அண்டத்தினுடைய அடிபாகத்திற்கும் மேல் பாகத்திற்கும் இடையில் ஸுர்யன் இருக்கிறான். ஸுர்யனுக்கும் அண்டப் பித்திக்கும் இடையில் இருபத்தைந்து கோடி யோஜனைகள் இருக்கின்றன. இந்த ஸுர்யன் நிலையற்றதாகிய இவ்வண்டத்தின் இடையில் இருக்கிறானாகையால் மார்த்தண்டனென்று கூறப்படுகிறான். ஸ்வர்ணம்போல் ரமணீயமான இவ்வண்டத்திற்குள் கர்ப்பம் போன்றிருக்கிறான் ஆகையால் ப்ரஹ்மதேவன் ஹிரண்யகர்ப்பனென்று பேர்பெற்றான். கிழக்கு முதலிய திசைகளும் ஆகாயம் த்யுலோகம் பூமி என்னும் பேதங்களும் ஸ்வர்க்கமும் மோக்ஷஸ்தானமும் நரகங்களும் அதலம் முதலிய பாதாள லோகங்களும் ஆகிய இவையெல்லாம் ஸுர்யனால் தான் பிரிக்கப்படுகின்றன. பகவத் ஸ்வரூபனாகிய இந்த ஸுர்யன் தேவர்கள் திர்யக்குகள் மனுஷ்யர்கள் ஸர்ப்பங்கள் பறவைகள் கொடிகள் செடிகள் ஆகிய ஸமஸ்தமான ஜீவஸமூஹங்களுடைய சக்ஷுரிந்திரியங்களையும் விளங்கச் செய்கிறான்.

இருபதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக