சனி, 30 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 127

ஐந்தாவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்

(கிம்புருஷ வர்ஷம் பாரத வர்ஷம் இவற்றில் பகவான் எழுந்தருளியிருக்கும் விதத்தையும், பாரத வர்ஷத்தின் மேன்மையையும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கிம்புருஷ வர்ஷத்தில் ஆதிபுருஷனாகிய பகவான் லக்ஷ்மணனுக்குத் தமையனும் ஸீதையின் மனத்திற்கினியனுமாகிய தாசரதி ராமனாய் வாஸம் செய்கிறான். அவனுடைய பாதாரவிந்தங்களில் மிக்க விருப்பமுடையவனும் பாகவதர்களில் சிறந்தவனுமாகிய ஹனுமான் அந்த கிம்புருஷ வர்ஷத்திலுள்ளவர்களுடன் அந்த ஸ்ரீராமபிரானை மாறாத பக்தியினால் ஆராதிக்கின்றான். கிம்புருஷ வர்ஷத்திலுள்ள புருஷர்களில் சிறந்த ஆர்ஷ்டிஷேணரும் கந்தர்வர்களும் அந்த ஸ்ரீராமபிரானுடைய மிக்க மங்களமான கதையை அருகாமையில் நின்று பாடிக்கொண்டிருக்கையில் ஹனுமான் பக்தியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறான். தானும் “ஓம் உலகத்தில் சிறந்த ப்ரஹ்மாதிகளால் துதி செய்யப் பெற்றவனும் சிறந்த புகழுடையவனும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய ஸ்ரீராமனுக்கு நமஸ்காரம். பெரியோர்கள் ஆதரிக்கும் அடையாளங்களையும் நடத்தைகளையும் வ்ரதங்களையும் உடைய ஸ்ரீராமபகவானுக்கு நமஸ்காரம். மன அடக்கமுடையவனுக்கு நமஸ்காரம். உலகங்களை அனுஸரித்திருக்கும் தன்மையனுக்கு நமஸ்காரம். ஸாதுவென்னும் ப்ரஸித்திக்கு உறைகல் (தங்கத்தை உறைத்துப் பார்த்து அதன் தரத்தை நிர்ணயிக்க உதவும் கல்) போன்றவனுக்கு நமஸ்காரம். ப்ராஹ்மணர்களின் விருப்பத்தை ஈடேற்றும் ப்ரபுவும் வேதாந்தவேத்யனும் கர்ம ஸம்பந்தமின்றித் திகழ்கின்றவனும் கல்யாண குணங்களெல்லாம் அமைந்த மஹாபுருஷனும் ராஜாதிராஜனுமாகிய ஸ்ரீராமனுக்கு நமஸ்காரம்” என்று ஜபித்து மீளவும் ராகாதி தோஷங்களால் தீண்டப்படாமல் கேவல ஜ்ஞானஸ்வரூபனும் என்றும் குறுகாத (குறைவில்லாத) ஜ்ஞான ப்ரகாசத்தினால் ரஜஸ்ஸு முதலிய குணங்களும் அவற்றால் விளையும் உற்பத்தி ஸ்திதி மரணங்களென்கிற மூன்று அவஸ்தைகளும் தீண்டப்பெறாதவனும் தனக்குத் தானே தோன்றும் தன்மையனும் யோக பரிசுத்தமான புத்தியால் அடையத் தகுந்தவனும் தேவாதி நாமரூபங்களற்றவனும் புருஷோத்தமனுமாகிய ஸ்ரீராமனைச் சரணம் அடைகிறேன்.


ஸர்வசக்தியாகிய பரமபுருஷனே ராமனென்னும் பேர்பூண்டு மனுஷ்யனாய் அவதாரம் செய்தமை, மனுஷ்யர்களுக்கு ஸம்ஸாரத்தின் தோஷங்களை அறிவித்துத் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் ஸாது ஜனங்களைப் பாதுகாப்பதற்குமேயன்றி ராக்ஷஸ வதத்திற்காக மாத்ரமேயன்று. அப்படி இல்லாத பக்ஷத்தில் ஸர்வேச்வரனும் மஹாநந்த ஸ்வரூபனான தன்னைத்தான் அனுபவிக்கையால் நித்ய ஸந்துஷ்டனுமாகிய அப்பரமபுருஷனுக்கு ஸீதையைப் பிரிந்தமை முதலியவற்றால் உண்டான வருத்தங்களெல்லாம் எங்கனம் கூடும்? ஸ்ரீராமரூபியான அப்பரமபுருஷன் ஸாம்ஸாரிக தர்மங்களையெல்லாம் உதறின சிறந்த மனமுடைய ஸனகாதிகளுக்கும் அந்தராத்மாவாய் இருப்பவன்; தன்னைப் பற்றினவர்களிடத்தில் மிகுந்த நட்புடையவன்; அவர்களுக்கு மிகவும் ப்ரியமானவன்; ஷாட்குண்ய பூர்ணன்; எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பினும் அவ்வவற்றின் தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாமல் நித்ய சுத்தனாய்த் திகழும் தன்மையன்; எல்லாம் தன்னிடத்தில் அமையப்பெற்றவன்; மூன்று லோகங்களிலுள்ள எத்தகைய சப்தாதி விஷயங்களிலும் பற்றுடையவனல்லன்; ஆகையால் பெண்மணியைப் பிரிந்தமையாலுண்டாகும் துக்கத்தை அடையமாட்டான். மனுஷ்யர்களுக்குக் கற்பிக்கும் பொருட்டு ஸம்ஸாரிக புருஷர்களின் நடத்தையை அனுஸரித்துக் காட்டினானன்றி வேறில்லை. மேன்மையை உடைய ஸ்ரீராமபிரானுக்குச் சிறப்புடைய ப்ராஹ்மணாதி ஜாதியில் பிறவியாவது அழகாவது புத்தியாவது ஜாதியாவது ஸந்தோஷத்தை விளைக்காது. லக்ஷ்மணனுக்குத் தமையனான அந்த ஸ்ரீராமன் கீழ்ச்சொன்னவற்றில் எதுவுமில்லாத திர்யக்கு ஜாதியில் பிறந்த வானரங்களாகிய எங்களோடு ஸ்நேஹம் செய்தான். ஆ! என்ன ஆச்சர்யம்? இவனுடைய சீலம் இத்தகையதென்று யாவரால் சொல்ல முடியும்? ஸ்ரீராமனாய் அவதரித்த இந்தப் புருஷோத்தமன் முன்பு உத்தர கோஸலத்திலுள்ள புல்லெறும்பு முதலிய எல்லாவற்றையும் வானுலகம் ஏறச்செய்த மஹானுபாவன்; பிறர்செய்த உபகாரத்தை ஒன்று பத்தாக நினைக்கும் தன்மையன்; புருஷோத்தமன். மனுஷ்ய ரூபனாய் அவதரித்த இந்த ஸ்ரீராமபிரானைத் தேவனாவது, அஸுரனாவது, நரனாவது (மனிதனாவது), வானரனாவது பணிவாயினான், அவ்வளவில் அவன் அனுக்ரஹிப்பான்” என்று ஸ்தோத்ரம் செய்கின்றான்.

பாரத வர்ஷத்தில் பகவான் பதரிகாச்ரமத்தில் நாராயணனென்று பேர்பூண்டு கருணை மேற்கொண்டு மோக்ஷத்தில் விருப்பமுடையவர் இங்கனம் தவம் செய்ய வேண்டுமென்று தெரிவித்து அவ்வழியில் அவர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டுத் தர்மம், ஜ்ஞானம், வைராக்யம் அணிமாதி ஐச்வர்யம் வெளியிந்திரியங்களை வெல்லுகை முதலிய ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு வேண்டிய கருவிகளெல்லாம் நிரம்பப்பெற்றுத் தன் கதி பிறர்க்குத் தெரியாதபடி கல்பாவஸானம் (கல்பம் முடியும்) வரையில் தவம் செய்து வருகிறான். பகவானுடைய அனுபவத்தை விவரித்துச் சொல்லுகிற பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தை ஸாவர்ணி மனுவுக்கு உபதேசிக்கப்போகிற மஹானுபாவராகிய நாரதமுனிவர் வர்ணாச்ரம தர்மங்களை அனுஸரிக்கும் தன்மையுடைய பாரதவர்ஷத்து ப்ரஜைகளுடன், பகவான் மொழிந்த கர்மயோக ஜ்ஞானயோகங்களால் உதவி செய்யப்பெற்ற பக்தியோகத்தினால் ஆராதிக்கின்றார். அவர் “ஓம் இந்த்ரியங்களை அடக்கும் தன்மையனும் மிகுந்த ஸௌசீல்ய முடையவனும் ஆத்மாவில் வேறுபட்ட தேஹத்தின் தர்மங்களான பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் தீண்டப்பெறாதவனும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய பரமபுருஷனுக்கு நமஸ்காரம். தமக்கென்று யாசித்துப் பெறவேண்டியது ஒன்றுமில்லாத முமுக்ஷுக்களுக்கு நிதி போன்றவனும் நர நாராயணனாய் அவதரித்த பரமஹம்ஸனும் கல்யாண குணகணங்கள் நிறைந்தவனும் தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாதவனும் ஹிதோபதேசம் (நன்மையை உபதேசம்) செய்பவர்களில் சிறந்தவனும் அபரிச்சின்ன (வரையறுக்க முடியாத, அளவற்ற) ஜ்ஞானாநந்த ஸ்வரூபனான தன்னைத் தான் அனுபவிக்கையில் ஆழ்ந்தவனும் ஸமஸ்த பூதங்களுக்கும் அதிபதியுமாகிய பரமபுருஷனுக்கு நமோ நம:” என்று இம்மந்திரத்தை ஜபித்து மீளவும் “சேதனாசேதன ரூபமான இந்த ஜகத்தின் ஸ்ருஷ்டி முதலியவற்றிற்குத் தான் கர்த்தாவாயினும் ஈச்வரன், ஜீவாத்மாக்களுடைய தேவமனுஷ்யாதி சரீரங்கள் உண்டாவதற்கு அவரவருடைய கர்மங்களே ப்ரதான காரணமாகையால் தன்னை அதற்குக் கர்த்தாவாக (செய்பவனாக) அபிமானிக்கிறதில்லை (நினைப்பதில்லை). தேவ மனுஷ்யாதி தேஹங்களில் அந்தராத்மாவாய இருப்பினும் அவற்றின் ஸம்பந்தத்தினால் விளையும் ஸுகதுக்கங்கள் அவனைத் தீண்டுகிறதில்லை. அவன் ப்ரக்ருதியைச் சரீரமாக உடையவனாயினும் அதன் குணங்களான ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களால் ஜ்ஞானஸங்கோசம் (அறிவில் குறைவு) உண்டாகப் பெறுகிறதில்லை. ஆகையால் ராகாதி தோஷங்களற்றவனும் இணை (ஸமமானவரும்) எதிர் (எதிரியாயிருப்பவரும்) இல்லாதவனும் சேதனாசேதன ரூபமான ஜகத்திற்கு ஸாக்ஷியுமாகிய பகவானுக்கு நமஸ்காரம். 

ஓ யோகேச்வர! ஜீவன், பலவகைத் துக்கங்களுக்கிடமாகையால் நிந்தைக்கிடமான தேஹத்தையும் தேஹானுபந்திகளையும் (சரீரத்தோடு கூட இருப்பவைகளையும்) உபேக்ஷித்துப் (பொருட்படுத்தாமல்) பிறந்தநாள் முதல் அவஸான (ஆயுள்  முடியும்) காலம் வரையில் த்யானயோகத்தினால் மனத்தை உன்னிடத்தில் நிலைநிறுத்த வேண்டுமென்னும் இவ்வளவே யோகசாஸ்த்ர அப்யாஸத்தினால் (யோகப் பயிற்சியால்) விளையும் திறமையாம். இதையே ப்ரஹ்மதேவன் எனக்குச் சொன்னான். ஜீவன் உன்னிடத்தில் பக்தியின்றி இவ்வுலகத்திலுள்ள பிள்ளை பசு அன்னம் முதலிய போகங்களிலும் (அனுபவங்களிலும்) பரலோகத்திலுள்ள ஸ்வர்க்காதி போகங்களிலும் விருப்பமுற்று அவற்றைப் பெறுதற்குரிய உபாயங்களைச் சிந்தித்துக் கொண்டிருப்பானாயின் பலவகைச் சாஸ்த்ரங்களை ஓதியுணர்ந்த பண்டிதனாயினும் நிந்திக்கத் தகுந்த இச்சரீரத்தைத் துறக்கையாகிற மரணத்தினின்று பயப்படுவான். அவன் செய்த சாஸ்த்ராப்யாஸாதி (வேத சாஸ்த்ரத்தில் கூறியபடி செய்த செயல், பயிற்சிகள்) ரூபமான யத்னங்கள் (முயற்சிகள்) எல்லாம் பயனற்றதேயாம். 

ப்ரபூ! அதோக்ஷஜனே! (இந்த்ரியங்களின் அறிவுக்கு அப்பாற்பட்டவனே!) ஆகையால் நீயே உன்னிடத்தில் வேறு கர்மங்களை விரும்பாத ஸ்வாபாவிகமான பக்தியோகத்தை எங்களுக்கு விளைப்பாயாக. பல துக்கங்களுக்கிடமாகையால் நிந்திக்கத்தகுந்த இச்சரீரத்தில் எங்களுக்கு உன் மாயையால் விளைந்ததும் வேறு உபாயங்களால் எவ்வகையிலும் போக்க முடியாததும் அஹங்கார மமகார ரூபமுமான அவித்யையை அந்த பக்தியோகத்தினால் சீக்ரத்தில் துறப்போமாக. உன் அனுக்ரஹத்தினால் உன்னிடத்தில் உண்டாகும் பக்தியோகமே அந்த அவித்யையைப் போக்கும் உபாயமன்றி மற்றொன்றுமன்று. ஆகையால் எங்களை அனுக்ரஹிப்பாயாக” என்று ஸ்தோத்ரம் பண்ணுகிறார். இந்தப் பாரதவர்ஷத்திலும் பல நதிகளும் பல பர்வதங்களும் (மலைகளும்) இருக்கின்றன. மலயம், மங்களப்ரஸ்தம், மைனாகம், த்ரிகூடம், ருஷபம், கூடரம், கோல்லம், ஸஹ்யம், வேதகிரி, ருச்யமூகம், ஸ்ரீசைலம், வேங்கடம், மஹேந்தரம், வாரித்தரம், விந்தயம், சுக்திமான், ருக்ஷகிரி, பாரியாத்ரம், த்ரோணம், சித்ரகூடம், கோவர்த்தனம், ரைவதகம், ககுபம், நீலம், காகமுகம், இந்தரகீலம், ராமகிரி என்னும் இப்பர்வதங்களும் (மலைகளும்) மற்றும் அனேகம் ஆயிரம் பர்வதங்களும் (மலைகளும்), அவற்றின் தாழ்வரைகளிலிருந்து உண்டான கணக்கில்லாத நதங்களும் (மேற்கு நோக்கி பாய்வன), நதிகளும் இருக்கின்றன. இந்நதிகளின் ஜலம் பாரதவர்ஷத்திலுள்ள ப்ரஜைகளைத் தமது பேரைச்சொன்ன மாத்ரத்தில் பாவனமாக்குகின்றன (தூய்மை ஆக்குகின்றன). அத்தகைய ஜலத்தை அந்த ப்ரஜைகள் சரீரத்தினாலும் ஸ்பர்சிக்கிறார்கள் (தொடுகிறார்கள்). ஆகையால் அவர்கள் மேல் பாபம் எங்கனம் தங்கும். சந்தரமஸை, தாம்ரபாணி, அவடோதை, க்ருதமாலை, வைஹாயஸி, காவேரி, வேணி, பயஸ்வினி, பயோதை, சக்ராவர்த்தை, துங்கபத்ரை, க்ருஷ்ணவேணி, பீமரதி, கோதாவரி, நிர்விந்த்யை, பயோஷணி, தாபிரேவைசிலை, ஸரஸை, நர்மதை, சர்மண்வதி என்னும் நதிகளும், ஸிந்து சோணம் என்னும் நதங்களும், மஹாநதி, வேதஸ்ம்ருதி, ருஷிகுல்யை, தரிஸமை, கௌசிகி, மந்தாகினி, யமுனை, ஸரஸ்வதி, த்ருஷத்வதி, கோமதி, ஸரயு, போகவதி, ஸஷமை, சதத்ரு, சந்தரபாகை, மருதவருதை, விதஸ்தை, வியவை என்னும் மஹாநதிகளும் இவ்வர்ஷத்தில் விளங்குகின்றன. இவ்வர்ஷத்தில் பிறந்த புருஷர்கள் ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்று மூன்று வகையான தாம் செய்த கர்மத்தினால் திவ்யம், மானுஷம், நாரகம் என்று மூன்று வகையான கதிகளைப் பெறுகிறார்கள். வர்ணாச்ரமங்களுக்கு உரிய தர்மங்களை அனுஷ்டித்து அதனால் பக்தியோகம் வளரப்பெற்று மோக்ஷத்தையும் அடைகிறார்கள். 

வர்ணாச்ரம தர்மானுஷ்டானத்தினால் ஸ்வர்க்காதி கதிகளை விளைக்கும்படியான புண்யபாப கர்மங்களாகிற முடிச்சுகள் தொலைந்து பகவானிடத்தில் வேறு ப்ரயோஜனங்களை எதிர்பாராத பக்தியோகமென்னும் மனப்பற்று விளையுமாயின், அப்பொழுதுதான் அம்மோக்ஷம் உண்டாகும். பகவானிடத்தில் விளையும் மனப்பற்று ஸ்வர்க்காதி கதிகளைத் தடுத்து மோக்ஷத்தையே விளைக்கும். அத்தகைய மனப்பற்று மஹாபுருஷர்களுக்கு நிலைநின்றிருக்கும். பகவான் ஸர்வபூதங்களுக்கும் அந்தராத்மாவாகையால் அவனை உபாஸிப்பதற்குத் தேடிக்கொண்டு போகவேண்டிய அவசியமில்லை. தத்தமது ஹ்ருதயங்களில் எப்பொழுதும் அவன் பேராமல் வீற்றிருப்பவன், சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டவன்; சரீரங்களின் தர்மங்கள் எவையும் தீண்டப்பெறாதவன்; தேவமனுஷ்யாதி நாமரூபங்களால் சொல்லப்படாதவன், தனக்குத் தானே ஆதாரமன்றி வேறு ஆதாரத்தை எதிர்பாராதவன்; பரமாத்மாவென்றும் வாஸுதேவனென்றும் கூறப்படுகிறவன். இந்தப் பாரத வர்ஷத்திலுள்ளவர்கள் இத்தகைய பரமபுருஷனிடத்தில் பக்தியோகம் செய்து மோக்ஷத்தைப் பெறுகின்றார்கள். ஆனது பற்றியே தேவதைகள் இவ்வர்ஷத்தைப் புகழ்ந்து பாடுகிறார்கள். “இவர்கள் என்ன ஸுக்ருதம் (நல்ல கார்யம்) செய்தார்களோ? ஆ! அல்லது இவர்களுக்குப் பகவான் ஸ்வயமாகவே அருள்புரிந்தானோ? 

பாரதவர்ஷத்தில் முகுந்தனைப் பணிதற்குரிய மானிடப்பிறவியைப் பெற்றவர்களின் பெருமையை என்னவென்று சொல்லலாம்? நமக்கு இப்பிறவியில் மனோரதமே. ஆயினும் இது நமக்குக் கிடைக்கவில்லை. வருந்தியும் அனுஷ்டிக்கமுடியாத யாகங்களாலும் தவங்களாலும் வ்ரதங்களாலும் தானாதி தர்மங்களாலும் அற்பமும் (அளவோடு இருக்கக்கூடியதும்), அஸ்திரமுமான (நீடிக்காததுமான)  ஸ்வர்க்காதி போகத்தைப் பெறுவதனால் என்ன உபயோகம்? ஸ்வர்க்காதி லோகங்களில் இந்த்ரியங்களுக்கு வேண்டிய ஸுகங்களெல்லாம் நிரம்பவும் கிடைக்குமாகையால் அதில் மனம் சென்று ஸ்ரீமந்நாராயணனுடைய பாதாரவிந்தங்களைப் பற்றின நினைவு அடியோடு அழிந்துபோய்விடும். கல்பாவஸானம் (கல்பம் முடியும்) வரையில் ஸுகங்களை அனுபவித்து மீளவும் பிறக்கும்படியான ஊர்த்வலோகத்தைக் (மேல் உலகத்தைக்) காட்டிலும் அல்பமான ஆயுளையுடைய மானிடர் வஸிக்கும்படியான பாரதபூமியில் பிறப்பது மேலானது. பாரதவர்ஷத்தில் பிறந்த மானிடர்கள் நிலையற்றதான மனுஷ்ய சரீரத்தினால் செய்யும் செயல்களைப் பகவானிடத்தில் அர்ப்பணம் செய்து மனச்சிறப்புடன் அவனை உபாஸித்து ஜன்ம ஜரா மரணாதி பயங்களுக்கிடமில்லாத அவ்விஷ்ணுவின் ஸ்தானமாகிய வைகுண்டலோகத்தை அடைகிறார்கள். ப்ரஹ்மலோகத்தில் அந்த பகவானுடைய கதைகளாகிற அம்ருத நதிகள் கிடைக்க மாட்டாது. அந்நதிகளைப் பணியும் தன்மையரும் ஸாதுக்களின் லக்ஷணம் அமைந்தவருமாகிய பாகவதர்கள் கிடைக்கமாட்டார்கள். யஜ்ஞேச்வரனான பகவானுடைய பக்ஷோத்ஸவ (ஒவ்வொரு பதினைந்து நாளிலும் கொண்டாடப்படுபவை) மாஸோத்ஸவாதி (ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுபவை) விபவங்களும் (பெருமைகளும்) மஹோத்ஸவங்களும் (பெரும் திருவிழாக்களும்) அவனுடைய ஆராதனரூபமான யஜ்ஞங்களும் நடக்கமாட்டாது. அத்தகைய ப்ரஹ்மலோகத்தை எவன்தான் ப்ராப்யமாக (அடைய வேண்டியதாக) நினைப்பான்? ஜீவாத்மாக்கள் இந்தப் பாரதவர்ஷத்தில் பஞ்சபூதங்களும் கர்மேந்திரியங்களும் ஜ்ஞானேந்திரியங்களும் ஆகிய இவற்றின் ஸமுதாயம் நிறைந்த மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்றும் மோக்ஷத்திற்கு யத்னம் செய்யார்களானால், காட்டுப்பறவைகள் வேடனால் கட்டுண்பதுபோல மீளவும் ஸம்ஸார பந்தத்தையே பெறுவார்கள். இப்பாரத வர்ஷத்திலுள்ள மானிடர்களால் யாகத்தில் சாஸ்த்ரங்களில் சொல்லிய விதியின்படி ச்ரத்தையுடன் மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்யப்பட்டதும் சருவென்றும் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற த்ரவ்யம்), புரோடாசமென்றும் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் மாவினால் ஆன பண்டம்) பலவாறு போதித்திருப்பதும் அக்னிக்கென்றும் இந்த்ரனுக்கென்றும் பாகம்பாகமாய்ப் பிரிக்கப்பட்டதுமாகிய ஹவிஸ்ஸைப் பகவான் தானொருவனேயாயினும் அக்னியென்றும் இந்த்ரனென்றும் பல வடிவங்களைக் கொண்டு அந்தந்த நாமங்களால் அழைக்கப்பெற்றுத் தான் அவாப்த ஸமஸ்தகாமனாயினும் (எல்லா விருப்பங்களும் நிறைவேறப் பெற்றவனாயினும்) புருஷார்த்தங்களை எல்லாம் கொடுக்கும் ப்ரபுவாகையால் யாகம் செய்கிறவர்களுக்கு வேண்டிய பலன்களைக் கொடுக்கும் பொருட்டு அங்கீகரிக்கிறான். பகவான் அந்தந்த புருஷார்த்தங்களை விரும்பும் ஜனங்களால் ப்ரார்த்திக்கப்பட்டு அவர்கள் வேண்டுகின்றவற்றைக் கொடுக்கிறானென்பது வாஸ்தவம் (உண்மையே); ஆயினும் பரமபுருஷார்த்தமான மோக்ஷத்தைக் கொடுக்கிறதில்லை. ஜனங்கள் தாங்கள் வேண்டின புருஷார்த்தங்களைப் பெற்றபின்பும் “வேறொரு புருஷார்த்தத்தை வேண்டுகிறார்கள். ஆகையால் மோக்ஷத்தையொழிய மற்ற புருஷார்த்தங்களை விரும்புகின்றவர்களுக்கு விருப்பம் என்றும் முடிகிறதில்லை. அவர்கள் நித்யதரித்ரர்களே. ஒன்றையும் விரும்பாமல் தன்னைப் பணிகின்றவர்களுக்கு விருப்பங்களை எல்லாம் நிறைக்குந்தன்மையுள்ள தளிர்போன்ற தன் பாதத்தைத் தானே கொடுக்கின்றான். நாம் குறைவறச் செய்த யாகம் ப்ரவசனம் முதலிய புண்யகர்மம் ஸ்வர்க்க ஸுகத்தைக் கொடுத்து மிகுந்திருக்குமானால், அப்புண்ய கர்மத்தினால் நமக்குப் பாரதவர்ஷத்தில் பகவானை நினைக்கும்படியான மனுஷ்யஜன்மம் உண்டாகுமாக. பகவான் அந்நினைவுடன் தன்னைப் பணிகிறவர்களுக்கு மோக்ஷஸுகத்தைக் கொடுக்கிறானல்லவா?” என்கிறார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! சில பெரியோர்கள் ஜம்பூத்வீபத்திற்கு எட்டு உபத்வீபங்கள் உண்டென்னும், அவை யாகக்குதிரையைத் தேடும் பொழுது இப்பூமண்டலத்தை ஆங்காங்குத் தோண்டிப் போன ஸகர புத்ரர்களால் ஏற்படுத்தப்பட்டவையென்றும் சொல்லுகிறார்கள். அவை ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரசுக்லம், ஆவர்த்தனம் , ரமணகம், மந்தேஹாருணம், பாஞ்சஜன்யம், ஸிம்ஹளம், லங்கை என்னும் பேருடையவை. பரதவம்ச அலங்காரனே! இங்கனம் ஜம்பூத்வீபத்திலுள்ள வர்ஷங்களை க்ரமமாக விவரித்துச் சொன்னேன். 

பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக