ஐந்தாவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்
(பத்ராச்வ வர்ஷம் முதலிய ஆறுவர்ஷங்களில் பகவான் அங்குள்ளவர்களால் ஆராதிக்கப்படுவதைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தர்மனுடைய புதல்வனாகிய பத்ரச்ரவனென்பவனும் அவனது வம்சத்தில் முக்யர்களான மஹாபுருஷர்களும் பத்ராச்வ வர்ஷத்தில் (உலகின் ஒரு பெரிய பகுதி) ஷாட்குண்யம் நிறைந்த வாஸுதேவனுக்கு ப்ரியமாயிருப்பதும் தர்மஸ்வரூபமும் (தர்மத்தையே – அறத்தையே வடிவாய் உடையதும்) ஹயசீர்ஷன் (குதிரை முகன்) என்னும் பேருடையதுமாகிய அவனது மூர்த்தியைச் சிறந்த ஸமாதியால் (த்யானத்தின் கடைசி நிலையால்) ஸாக்ஷாத்கரித்து (நேரில் பார்த்து) கீழ்கண்டவாறு துதித்தனர்.
பத்ரச்ரவனும் அவனது வம்சத்தவர்களும் துதித்தார்கள்: “ஓம் தர்மஸ்வரூபனும் ஜீவாத்மாக்களை ப்ரக்ருதி ஸம்பந்தத்தினின்று விடுவித்துத் தன்னை அனுபவிக்கையாகிற மஹாநந்தம் (உயர்ந்த இன்பம்) கொடுப்பவனுமாகிய பகவானுக்கு நமஸ்காரம்” என்று சொல்லி, மீளவும் “இவ்வுலகத்திலுள்ள ஜனங்கள் தமது தந்தை முதலியவர்களைக் கொண்டு போகின்ற ம்ருத்யுவைக் (யமனைக்/மரணத்தைக்) கண்டும் தமக்கும் அங்கனமே நேருமென்பதை அறிகிறதில்லை. தாம் சாச்வதமாயிருப்பதாகவே நினைக்கின்றார்கள். இது பகவானுடைய சேஷ்டையே (ஆச்சர்யமான செயல்). ஆ! என்ன விசித்ரம்! அவனுடைய மாயையால் மதிமயங்கியே ஜனங்கள் இங்கனம் தமக்கு வரப்போகிற ம்ருத்யுவை (மரணத்தை) அறியாமல் திரிகின்றார்கள். தந்தை பிள்ளை முதலியவர் மரணம் அடைகையில் அவரது சரீரங்களைக் கொண்டு போய்க் கொளுத்திவிட்டு வாஸ்தவத்தில் (உண்மையில்) ஸுகத்திற்கிடமல்லாத சப்தாதி விஷயங்களை அனுபவிக்க விரும்பிப் பாபங்களைச் செய்யமுயன்று அவர்கள் ஸம்பாதித்ததைக் கொண்டு ஜீவிக்கப் பார்க்கிறார்கள். வேதாந்த வித்யையை உணர்ந்தவரும் ஆத்ம பரமாத்மாக்களை உபாஸித்தவருமான பண்டிதர்கள் இந்த ஜகத்தெல்லாம் அழியக்கூடியது என்று பார்க்கின்றார்களாயினும், உன் மாயையினால் மதிமயங்கிப் புத்ரமரணாதி காலங்களில் சோகிப்பதும் புத்ரோத்பத்தி (புத்ரன் பிறப்பு) முதலிய காலங்களில் ஸூகிப்பதுமாய் இருக்கிறார்கள். ஆகையால் உன் செயல் மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது. அந்த மோஹம் மாறுவதற்காக ஜன்ம மரணாதியான ஸாம்ஸாரிக தர்மங்கள் தீண்டப்பெறாத உன்னைச் சரணம் அடைகின்றோம்.
நீ விசித்ரமான ஜகத்தைப் படைப்பது முதலிய கார்யங்களை நடத்துகின்றவனாயினும் அந்த ஜகத்திலுள்ள தேவ மனுஷ்யாதி பேதங்களெல்லாம் அந்தந்த ஜீவாத்மாக்களின் புண்ய பாப கர்மங்களைப் பற்றினவையாகையால் நீ அவற்றைச் செய்கிறதில்லை. நீ இந்த ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (நீடிப்பு, காத்தல்) ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்துவது யுக்தமே. நீ அவித்யையால் விளையும் ஜ்ஞான ஸங்கோசம் (அறிவு குறைவு) அற்றவன். ஆகையால், ஜீவாத்மாக்களுக்குச் செயல்கள் மேன்மேலும் ஸம்ஸார பந்தத்தை (இவ்வுலக வாழ்வாகிற கட்டை) விளைப்பது போல், இச்செயல்கள் உனக்குப் பந்தத்தை விளைக்க வல்லனையாகமாட்டா. நீ, ஸ்தூலமாயும் ஸூக்ஷ்மமாயுமுள்ள சேதனா சேதனங்களைச் சரீரமாகவுடையவன்; ஸர்வர்க்கும் அந்தராத்மாவாயிருப்பவன்; இயற்கையில் ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்). நீ ஜகத் ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களைச் செய்வது லீலைக்காக. அதுவும் உன் இச்சையாலன்றிக் கர்மத்தினாலன்று. ஆகையால் அது உனக்கு யுக்தமே (பொருத்தமே). இங்கனம் விலக்ஷணனாகிய (சேதன அசேதனங்களைக் காட்டிலும் வேறானவனான) உனக்கு அச்செயல் பந்தத்தை விளைக்காமை ஆச்சர்யமன்று, நீ முன்பு ஒரு தைனந்தின ப்ரளயத்தில் (க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய இவை நான்கும் சேர்ந்தது ஒரு சதுர் யுகம்; 43,20,000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் அல்லது ஒரு கல்பம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; 432 கோடி மனித வருடங்கள். ப்ரஹ்மாவின் ஒரு பகல் முடிந்ததும் ஏற்படும் ப்ரளயம் தைனந்தின ப்ரளயம் எனப்படும்.) தன்னிடத்தினின்று அஸுரன் பறித்துக் கொண்டுபோன வேதங்களை வேண்டுகிற ப்ரஹ்மதேவனுக்கு ஹயக்ரீவ ரூபியாய் அவற்றை மீட்டுக் கொண்டுவந்து கொடுத்தாய். உன் செயல்களெல்லாம் வீணாகாதவை. அத்தகைய உனக்கு நமஸ்காரம்” என்று இங்கனம் ஸ்தோத்ரம் செய்கின்றார்கள். மேருவின் தென்புறத்திலுள்ள ஹரிவர்ஷத்தில் பகவான் நரஸிம்ஹ ரூபியாய் ஸந்நிதானம் செய்கின்றான். அவன் அவ்வுருவம் கொண்டதற்குக் காரணம் மேல் சொல்லப்போகிறோம்.
பகவானுக்கு அவ்வுருவம் மிகவும் அன்பிற்கிடமாயிருக்கும். ப்ரஹ்லாதன் அவ்வர்ஷத்திலுள்ள புருஷர்களுடன் எவ்வகை விக்னங்களாலும் (இடையூறுகளாலும்) தடைபடாத பக்தியோகமுடையவனாகி வேறொரு பலனையும் விரும்பாமல் அந்த நரஸிம்ஹ ரூபியான பகவானை ஆராதிக்கின்றான். அந்த ப்ரஹ்லாதன் மஹாபுருஷனான பகவானுடைய குணங்களுக்கெல்லாம் இருப்பிடம்; பகவானிடத்தில் பக்தியுடையவர்களில் சிறந்தவன்; தைத்யர், தானவர் இவர்களின் குணங்களையெல்லாம் பாவனம் (தூய்மை) செய்யவல்ல நல்லொழுக்கமுடையவன்; யஜ்ஞ, தான, ஹோமாதி ரூபமான தர்மங்களெல்லாம் அமைந்தவன். அவன் “ஓம் நரஸிம்ஹ ரூபியான பகவானுக்கு நமஸ்காரம். நீ தேஜஸ்ஸுக்களுக்கும் தேஜஸ்ஸைக் கொடுப்பவன். நீ ஸ்வயமாகவே ப்ரகாசிக்கும் தன்மையன். வஜ்ர (உறுதியான) நகங்களும் கோரைப் பற்களுமுடையவனே! நீ அடிக்கடி எமக்குத் தோற்றுவாயாக. எமது கர்ம வாஸனைகளைப் போக்குவாயாக. ஸம்ஸாரபயம் நீங்கும்படி உன்னுருவத்தை எங்களுக்குக் காட்டுவாயாக. நாங்கள் உன்னருளால் மிகவும் பயமற்றிருப்போமாக” என்று மொழிந்து மீளவும் “ஜகதீச! ஐகத்திற்கெல்லாம் க்ஷேமம் உண்டாகுக. ஜகத்திலுள்ள துஷ்டர்களெல்லாம் மனம் தெளிந்து கோபத்தைத் துறந்து நன்மதியுடையவராய் இருப்பார்களாக. ப்ராணிகளெல்லாம் ஒன்றுக்கொன்று புத்தியால் க்ஷேமத்தையே நினைத்துக் கொண்டிருக்குமாக. அவற்றின் மனமும் சாந்தி முதலிய நன்மையைப் பெறுமாக. எங்கள் மதியும் (எண்ணமும்) மற்ற ப்ராணிகளின் மதியும் (எண்ணமும்) ஒரு பலனையும் விரும்பாமல் பகவானிடத்தில் ஆவேசித்திருக்குமாக. எமக்கு எதிலும் மனப்பற்று நேராதிருக்குமாக. ஒருக்கால் நேருமாயின், மனை, மனைவி, பிள்ளை, பணம், பந்து இவற்றில் ஒருகாலும் நேராதிருக்குமாக. பகவானுக்கு அன்பர்களான பாகவதர்களிடத்திலேயே எப்பொழுதும் ஸஹவாஸம் (கூடியிருத்தல்) உண்டாகுமாக. அது நேருமாயின் மனம் வேறு விஷயங்களில் செல்லாமல் பகவானிடத்தில் நிலையுற்றிருக்கும். அது ஸம்ஸார துக்கங்களுக்குச் சலிக்கமாட்டாது. அவர்களோடு ஸஹவாஸம் கொண்டிருப்பவன் (கூடியிருப்பவன்) ப்ராணதாரணத்திற்கு (சரீரம் தாங்கப்படுவதற்கு) வேண்டியவற்றை மாத்ரம்பெற்று அவ்வளவில் ஸந்தோஷமுற்றிருப்பான். அவன் சீக்ரத்தில் மோக்ஷஸித்தியைப் பெறுவான். இந்த்ரியங்களின் ப்ரீதிக்காகச் சப்தாதி விஷயங்களில் ஈடுபட்ட எண்ணம் உடையவன் அந்த ஸித்தியைப் பெறவேமாட்டான். என் புத்திக்குப் பகவானை இடைவிடாமல் த்யானிக்கும் திறமை அந்த பாகவதர்களின் ஸஹவாஸத்தினால் (கூடியிருப்பதால்) தான் உண்டாயிற்று. கங்கை முதலிய புண்ய தீர்த்தம் போல் மிகவும் பரிசுத்தமான பகவானுடைய புகழை ஓயாமல் பணிகிறவர்களின் மனத்தில் ஸர்வேச்வரன் அவரது செவியின் வழியாக உள்ளே புகுந்து அம்மனத்திலுள்ள மலங்களையெல்லாம் போக்குவான். அத்தகையனான முகுந்தனுடைய புகழை எவன்தான் துதிக்கமாட்டான்?
ஒருவனுக்குப் பகவானிடத்தில் ஐஹிக (இவ்வுலக) ஆமுஷ்மிக (வேறு உலக) ரூபமான எவ்வகைப் பலன்களையும் பொருள் செய்யாத மேலான பக்தி விளையுமாயின், இந்திரன் முதலிய தேவதைகள் அனைவரும் அவனைத் தொடர்ந்திருப்பார்கள். தர்மாதி குணங்களும் சம தமாதி குணங்களும் தாமே அவனைத் தொடர்ந்து வரும். தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனான பகவானிடத்தில் பக்தியின்றிச் சப்தாதி விஷயங்களில் பெரிய ஆவலுடன் வெளியில் ஓடித்திரிகின்றவர்களுக்கு மஹிமையுள்ள பகவத் பக்தர்களின் குணங்கள் எங்கனம் உண்டாகும்? மீன்களுக்கு ஜலம் தாரகமாய் (உயிர் வாழ அவச்யமாய்), மிகவும் இஷ்டமாயிருப்பது போல், ஜீவாத்மாக்களுக்குப் பகவான் ஒருவனே தாரகனும் (காப்பாற்றுபவனுமாய்) இஷ்டனுமாயிருக்கின்றான். ஆகையால் வயது, உருவம், பசு, அன்னம், பிள்ளை, பணம் முதலியவற்றால் நிறைவாளராயினும் (நிறைந்தவர்களாயினும்) அத்தகைய பகவானைப் பணியாமல் துறந்து கேவலம் இல்லற வாழ்க்கையில் ஆழ்ந்திருப்பார்களாயின், ஆணும் பெண்ணுமாய்ச் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கிற அவர்களுக்கு அவ்வயது முதலியவற்றால் மேன்மையேயொழிய மேலான ஆனந்தத்தை விளைக்கவல்ல ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அனுபவிக்கையால் உண்டாகும் மேன்மை கிடைக்க மாட்டாது. இங்கனம் பகவத்பக்தியே மேலான ஸுகத்தைக் கொடுக்குமாகையாலும் சப்தாதி விஷயங்களில் செய்யும் ப்ரீதி மேலான துக்கத்தையே விளைக்குமாகையாலும் காமம், ராகம், துக்கம், கோபம், அஹங்காரம், ஆசை, பயம் அவற்றால் விளையும் மனச்சோர்வு மனோவியாதி முதலானவற்றிற்கிடமாய் இருப்பதும் ஜனன மரணாதி ரூபமான ஸம்ஸாரம் மாறாதிருப்பதுமாகிய இல்லற வாழ்க்கையைத் துறந்து ஸ்ரீநரஸிம்ஹரூபியான பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பணிகிறவர்களுக்கு எங்கனம் துக்கம் உண்டாகும்?” என்று ஸ்தோத்ரம் செய்கின்றான்.
கேதுமாலவர்ஷத்தில் பகவான் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸம்வத்ஸரனென்னும் ப்ரஜாபதியின் முப்பத்தாறாயிரம் பெண்களுக்கும் அவ்வர்ஷத்திற்கு ப்ரபுக்களான அவரது முப்பத்தாறாயிரம் பிள்ளைகளுக்கும் ப்ரியம் செய்யவிரும்பி ப்ரத்யும்ன ரூபியாய் ஸந்நிதானம் செய்கின்றான். அந்த ப்ரஜாபதியின் பெண்கள் ராத்ரிக்கு அபிமானி தேவதைகள். அவருடைய பிள்ளைகள் பகலுக்கு அபிமானி தேவதைகள்: அப்பெண்கள் கர்ப்பம் தரித்து ப்ரஸவிக்கும் காலத்தில் அஸ்த்ரங்களில் தலைமையுள்ள ஸுதர்சன சக்ரத்தின் தேஜஸ்ஸினால் மனங்கலங்கிக் கர்ப்ப சிசுக்கள் ப்ராணன்களை இழந்து விழப்பெறுகின்றனர். அவ்விடத்தில் ப்ரத்யும்ன பகவான் அழகிய நடையின் விலாஸத்தினால் திகழ்கின்ற புன்னகை அமைந்த கடைக்கண்ணோக்கத்தினால் சிறிது உயர்ந்த புருவத்துடன் கூடி ரமணீயமான தாமரைமலர் போன்ற திருமுக மண்டலத்தின் சோபையால் (அழகால்) ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் களிப்பித்துக்கொண்டு (இன்புறச்செய்து) தன் இந்திரியங்களைக் களிப்பிக்கின்றான் (இன்பம் அடையச் செய்கின்றான்). ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸம்வத்ஸரத்தின் ராத்ரிகளில் ப்ரஜாபதியின் பெண்களோடும் பகல்களில் அவரது கணவர்களும் பகலுக்கு அபிமானி தேவதைகளுமான அந்த ப்ரஜாபதியின் புதல்வர்களோடும் கூடிப் பகவான் தன் ஸங்கல்பத்தினால் ஏற்றுக்கொண்ட அவ்வுருவத்தை ஆராதிக்கிறாள் அந்த மஹாலக்ஷ்மி.
“ஓம் இந்தரியங்களுக்கு நியாமகனும் ப்ரக்ருதி புருஷர்களுக்கு நேரக்கூடாத ஸத்ய ஜ்ஞானாதி குணங்களும், காம்பீர்யாதி (மேன்மை முதலிய) குணங்களும் நிறைந்த ஸ்வரூபமுடையவனென்று வேதாந்தங்களால் ஓதப்படுகின்றவனும் கர்மேந்திரியம் (கை, கால், வாய், மலத்வாரம், ஆண்/பெண் குறி என்கிற செயல் உறுப்புக்கள்), ஜ்ஞானேந்திரியம் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்கிற அறிவு உறுப்புக்கள்), மனம் ஆகிய இவற்றின் வியாபாரங்களுக்கும் ப்ருதிவி முதலிய பஞ்சபூதங்களுக்கும் நியாமகனும் (நியமிப்பவனும்) பஞ்சபூதங்களும் பதினொரு இந்த்ரியங்களுமாகிய பதினாறும் சரீரமாகப் பெற்று அவையே தானென்னும்படி அமைந்திருப்பவனும், வேதஸ்வரூபனும், அன்னமயனும் (வ்யஷ்டிதத்வ ஸ்வரூபனும்), ஜீவாத்மாக்களைச் சரீரமாகவுடையவனும், ஸர்வாத்மகனும், மனோபலம், இந்த்ரியபலம், தேஹபலம் இவற்றிற்குக் காரணனும், மிகுந்த ப்ரீதிக்கிடமாயிருப்பவனும், தன் பக்தர்களிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய உனக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம் செய்வேனாக” என்று மொழிந்து, மீளவும் “ஸ்வயமாகவே (ஸ்வயமாகவே என்பதால் ஒருவனுடைய தூண்டுதலாலன்றென்று வெளியாகின்றது. ஸ்வதந்த்ரனென்று கருத்து) இந்திரியங்களுக்கு ப்ரபுவாகிய உன்னை மடந்தையர்கள் வ்ரதங்களால் ஆராதித்து வேறொருவனைக் கணவனாக விரும்புகிறார்கள். அங்கனம் விரும்பிப்பெற்ற அக்கணவர்கள் அம்மடந்தையர்களின் அன்பிற்கிடமான புதல்வனையும் பணங்களையும் வாழ்நாளையும் பாதுகாத்துக் கொடுக்கவல்லர்களாகிறதில்லை. அவர்கள் கர்மத்திற்கு உட்பட்டவர்களாகையால் அவர்களுக்கு அத்திறமை கிடையாது. எங்கும் புகழ்பெற்ற குணகணங்களையுடைய நீயொருவனே அத்தன்மையுடையவன். நீ கர்மத்திற்கு உட்பட்டவனல்ல. ஆகையால் எவ்விதத்திலும் பயமில்லாதவன். ஆனதுபற்றியே பயத்தினால் வருந்தின ஜனங்களை எல்லாப் பயங்களினின்றும் பாதுகாக்கின்றாய். ஆகையால் பதியென்று கூறப்படும் கணவன் நீயொருவனே. உன்னைப்போன்ற மற்றொருவன் உளனாயின் ராஜாக்களுக்கு ஒருவருக்கொருவர் பயம் உண்டாவதுபோல், உங்களுக்கும் ஒருவருக்கொருவர் பயம் உண்டாகும். ஆகையால் அது இல்லவேயில்லை. நீ ஜீவாத்மாக்களைப் பாதுகாப்பதற்கு “நாம் பரமாத்மாவுக்குச் சேஷப்பட்டவர் (அடிமைப்பட்டவர்)” என்னும் ஜ்ஞானம் அவர்களுக்கு உண்டாவதை மாத்ரம் எதிர்பார்க்கின்றாயேயன்றி மற்றொன்றையும் எதிர்பார்க்கிறதில்லை. ஒருத்தி ஸமஸ்த புருஷார்த்த ஸ்வரூபனாகிய உன்னைப் பொருள் செய்யாமல் கணவன் பிள்ளை பணம் வாழ்நாள் முதலிய மற்ற எல்லா கர்மங்களிலும் விருப்புற்று உன் பாதங்களை ஆராதிப்பாளாயின், அவளுக்கு அந்த அற்ப பலன்களையே கொடுக்கிறாய். வாஸ்தவத்தில் நீயொருவனே ஆசைப்படத் தகுந்த வஸ்துவன்றி மற்ற எதுவும் ஆசைப்படத் தகுந்ததன்று. அங்கனம் ஆவலுடன் வேண்டிப் பெற்றவள் அவை அழிந்து போகையில் பரிதபிக்கிறாள். நீ ஒருகாலும் அங்கனம் அழியுந்தன்மையனல்லை. உன்னைப்பெற்ற நான் ஒருகாலும் அவளைப்போல் வருந்தமாட்டேன். இந்திரியங்களின் ப்ரீதிக்காகச் சப்தாதி விஷயங்களில் மனம் சென்ற ப்ரஹ்மதேவனும், ருத்ரனும், இந்திரன் முதலிய மற்ற தேவதைகளும் என் கடாக்ஷம் பெறுவதற்காக. உன் பாதாரவிந்தங்களைச் சரணம் அடையாமல் கொடிய தவங்களைச் செய்கிறார்கள். அதனால், அவர்கள் என் கடாக்ஷம் பெறுகிறதில்லை. ஏனெனில், ஒருவராலும் வெல்லப்படாதவனே! நான் உன்னிடத்தில் நிலைநின்ற மனமுடையவள்; உன்னைக்காட்டிலும் வேறுபட்டவள் அல்ல. ஆகையால் உன் பாதாரவிந்தங்களைப் பணிகின்றவர்களை நான் தொடர்வேனேயன்றி மற்றவர் எத்தகைய தவம் செய்யினும் அவர்களை நான் கடாக்ஷிக்கமாட்டேன். ஸமஸ்த புருஷார்த்த ஸ்வரூபனாகிய நீ உன்னைப்பற்றினவர்களை ஒருகாலும் கைவிடாதவன். ஸமஸ்த புருஷார்த்தங்களையும் கொடுப்பதென்று அனைவராலும் புகழப்பெற்றதும் தாமரைமலர் போன்றதுமாகிய உன் கரத்தை உன்னிடத்தில் நிலைநின்ற மதியுடைய (புத்தியுடைய) உன் பக்தர்களின் சிரத்தில் வைத்தாற்போல் என் சிரத்திலும் வைப்பாயாக. நீ ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளத்தைப் போல் என்னையும் ஓர் அடையாளமாக மார்பில் தரித்துக்கொண்டிருக்கிறாயன்றி உன் பக்தர்களிடத்தில் செய்யும் அனுக்ரஹத்தை என்னிடத்தில் செய்கிறதில்லை. ஈச்வரனாகிய உன்னுடைய நடத்தையையும் அபிப்ராயத்தையும் எவன்தான் ஊஹிக்க வல்லவன்? உன் பக்தர்களிடத்தில் செய்யும் அனுக்ரஹத்தை நீ என்னிடத்திலும் செய்வாயாகவென்று நான் வேண்டுகிறேன்” என்று ஸ்தோத்ரம் செய்கின்றாள்.
ரம்யகவர்ஷத்தில் அவ்வர்ஷத்திற்கு அதிபதியாகிய மனுவுக்கு முன்பு யுகாந்த (யுகம் முடியும்) ஸமயத்தில் காண்பிக்கப்பட்டதும் பகவானுக்கு மிகவும் பரியமுமாகிய மத்ஸ்யாவதார உருவத்தை அம்மனு இப்பொழுதும் அவ்விடத்தில் மாறாத பக்தியோகத்தினால் ஆராதித்துக் கொண்டிருக்கிறான். அவன் “ஓம் பகவானுக்கு நமஸ்காரம். அவதாரங்களில் முதன்மையான மத்ஸ்ய பகவானுக்கு நமஸ்காரம். சுத்த ஸத்வமூர்த்தியும் ப்ராணன் இந்த்ரியபலம், மனோபலம், தேஹபலம் இவற்றிற்கு அதிஷ்டாதாவும் (இவற்றை நியமிப்பவனும்) உலகத்தில் புலப்படும் மத்ஸ்யங்களைக் (மீன்களைக்) காட்டிலும் விலக்ஷணமான (வேறுபட்ட) மத்ஸ்ய ரூபங்கொண்டவனுமாகிய பகவானுக்கு நமஸ்காரம்” என்று மொழிந்து மீளவும் “நீ லோகபாலர்களால் உள்ளும் புறமும் காணப்படாத உருவமுடையவனும் வேதஸ்வரூபமான பெரிய நாதமுடையவனுமாய்த் திரிகின்றாய். மனிதன் மரத்தினால் செய்த ஓர் பெண் பொம்மையைக் கையிற்கொண்டு ஆட்டுவது போல், சேதனா சேதன ரூபமான இந்த ஜகத்தையெல்லாம் இங்கனம் செய் இங்கனம் செய்யாதே” என்று நியமிக்கிற வேதவாக்கினால் உன் வசத்திற்கொண்டு பாதுகாக்கிறாய். இந்த்ராதிலோக பாலர்கள் அனைவரும் பிறனுடைய மேன்மையைப் பொறாமையாகிற ஜ்வரத்தை (காய்ச்சல்) உடையவர்களாய், உன்னையன்றி, ஒன்று சேர்ந்து எவ்வளவு ப்ரயத்னம் (முயற்சி) செய்யினும் இரண்டுகால் ஜந்துக்கள் நான்குகால் ஜந்துக்கள் ஜங்கமம் (அசைவன), ஸ்தாவரம் (அசையாதன) ஆகிய இவை அமைந்த இந்த ப்ரபஞ்சத்தைப் பாதுகாக்க வல்லராகவில்லை. நீ மிகப் பெரிய அலைகளின் வரிசை அமைந்த ப்ரளய ஸமுத்ரத்தில் கொடிகளும் புதர்களும் அமைந்த இப்பூமியை என்னுடன் தரித்துக்கொண்டு வீர்யத்துடன் உலாவினாய். நீ கர்மத்தினால் விளையும் பிறவியற்றவன்; ஜகத்தில் சரீரங்கள் தோறும் உள்ள ப்ராணஸ்வரூபி. மூன்று அடிகளால் உலகங்களை அளந்தவனே! அத்தகைய உனக்கு நமஸ்காரம்” என்று ஸ்தோத்ரம் செய்கின்றான்.
ஹிரண்மயவர்ஷத்தில் பகவான் கூர்ம (ஆமை) ரூபியாய் வாஸம் செய்கின்றான். அந்தப் பகவானுக்கு மிகவும் பரியமான அவ்வுருவத்தைப் பித்ருகணத்தின் (மூதாதையர்களின்) தலைவனாகிய அர்யமனென்பவன் அவ்வர்ஷத்திலுள்ள புருஷர்களுடன் ஆராதிக்கிறான். அவன் “ஓம் ஷட்குணபூர்ணனும் ஸமஸ்த ஜந்துக்களும் அவற்றின் குணங்களும் தன்னிடத்தில் அமையப்பெற்றவனும் ஸமுத்ரத்திற்குள் மந்தர பர்வதத்தின் (மலையின்) அடியில் இருப்பவனாகையால் பிறர்க்குப் புலப்படாத இருப்பிடமுடையவனும் ப்ராக்ருத சரீரமற்றவனும் மஹிமையுடையவனும் ஆதாரபூதனும் கூர்மரூபியுமான உனக்கு நமஸ்காரம்” என்று மொழிந்து மீளவும் “உன் மாயையினால் ஏற்பட்டதும் போக்யம்போல் தோற்றுவதும் ஜாதி குணம் முதலிய பலவற்றால் நிரூபிக்கத் தகுந்ததும் முழுவதும் கண்டறிய முடியாமையால் கணக்கற்றதுமாகிய இந்த ப்ரபஞ்சத்தை எல்லாம் சரீரமாகவுடையவனும் நித்ய ஜ்ஞானஸ்வரூபனுமாகிய உனக்கு நமஸ்காரம்.
தேவனே! ஜங்கம ஜங்கமம் (அசைவன), ஸ்தாவரம் (அசையாதன) என்று இருவகைப்பட்டதும் ஜராயுஜம் ஸ்வேதஜம் அண்டஜம் உத்பிஜ்ஜமென்று நான்கு வகைப்பட்டதுமாகிய (கர்ப்பப் பையிலிருந்து உண்டாகின்றவை ஜராயுஜம். வேர்வையில் உண்டாகின்றவை ஸ்வேதஜம். முட்டையினின்று உண்டாகின்றவை அண்டஜம். பூமியினின்று மேல் முளைத்துக் கிளம்பும் மரம் செடி கொடி முதலியவை உத்பிஜம்) இந்த ஜகத்தெல்லாம் (உலகெல்லாம்) உன் சரீரமே (உடலே). த்யுலோகம் ஆகாசம் பூமி பர்வதங்கள் நதிகள் ஸமுத்ரங்கள் த்வீபங்கள் சந்தரன் ஸூர்யன் முதலிய க்ரஹங்கள் அச்வினி முதலிய நக்ஷத்ரங்கள் என்னும் இச்சப்தங்களால் நீயே சொல்லப்படுகின்றாய். கணக்கிட முடியாதவைகளும் ஒன்றைவிட ஒன்று விலக்ஷணமாயிருப்பவைகளுமான தேவாதி நாமங்களும் தேவாதி சரீரங்களும் ப்ருதிவி முதலிய த்ரவ்யங்களும் அமைந்த உன்னிடத்தில் இருபத்து நான்கு தத்வங்களென்றும், இருபத்தைந்து தத்வங்களென்றும் சொல்லப்பட்ட இந்த தத்வங்கள் மந்தபுத்திகளுக்கு (குறைந்த அறிவுள்ளவர்களுக்கு) ஸுகமாகத் தெரியும் பொருட்டுக் கபிலர் முதலிய பண்டிதர்களால் ஏற்படுத்தப்பட்டது. அளவற்ற வைபவமுடையவனாயிருக்கும் உனது உண்மையைப் பற்றின அறிவு நேருமாயின் அந்த ஸங்கயை (எண்ணிக்கை, அறிவு) பறந்து போகும். நீ ஸாங்க்ய சாஸ்த்ரத்தினால் (கபில மஹர்ஷி அருளிச்செய்த சாஸ்த்ரம்) அறியத்தகுந்தவன். அத்தகைய உனக்கு நமஸ்காரம்” என்று ஸ்தோத்ரம் செய்கின்றான்.
உத்தரகுரு வர்ஷத்தில் பகவான் வராஹ (பன்றி) உருவங்கொண்டு ஷாட்குண்யபூர்ணனும் யஜ்ஞத்தைச் சரீரமாக உடையவனும் யஜ்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அவற்றின் பலன்களைக் கொடுப்பவனுமாய் இருக்கின்றான். அந்த வராஹபகவானை இப்பூமிதேவி குருவர்ஷத்திலுள்ளவர்களுடன் மாறாத பக்தியோகத்தினால் ஆராதிக்கின்றாள். அவள் “ஓம் மந்த்ரங்களால் கூறப்படுகிற இந்தராதி தேவதைகளைச் சரீரமாகவுடைய பகவானுக்கு நமஸ்காரம். ஸோமமில்லாத யாகங்களையும் ஸோமமுள்ள யாகங்களையும் (யாகத்தின் முடிவில் ஸோமம் என்ற கொடியிலிருந்து பிழிந்த சாற்றைப் பருகுவார்கள்) தனக்குச் சரீரமாகப் பெற்றவனும் அவற்றால் ஆராதிக்கப்பட்டுப் பலன்கொடுப்பவனும் மஹாயாகஸ்வரூபனும் யாகங்களில் உபயோகப்படுமவைகளும் மேன்மையுடையவைகளுமான ஸ்ருக்கு ஸ்ருவம் முதலியவற்றைச் சரீரமாகவுடையவனும் புருஷஸூக்தத்தில் சொல்லப்பட்ட பெருமையுடைய மஹாபுருஷனுமாகிய உனக்கு நமஸ்காரம். பரிசுத்தமான செயலுடையவனும் ஜ்ஞான, பலங்கள், ஐஸ்வர்ய, வீர்யங்கள், சக்தி, தேஜஸ்ஸுக்களென்கிற மூன்று இரட்டைகளுடையவனும் கண்களில் செந்தாமரைமலர் போல் சிவந்தவனுமாகிய உனக்கு நமஸ்காரம்” என்று பரம ரஹஸ்யமான இம்மந்திரத்தை மொழிந்து மீளவும் “தத்வங்களின் உண்மையை அறிந்த பெரியோர்கள், அரணிக்கட்டையில் அக்னி போல் தேவாதி சரீரங்களையுடைய ஜீவாத்மாக்களிடத்தில் அவர்களது கர்மத்தினால் அவர்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிற ஸர்வஜ்ஞனாகிய உன்னுருவத்தைக் காண விரும்பி மனமாகிற மத்தினால் (கடைவதற்கு பயன்படும் கருவி) கடைகின்றார்கள். நீ ஸர்வேச்வரன், ஜீவாத்மாக்களுக்கு நியாமகன். அத்தகைய உனக்கு நமஸ்காரம்.
ஓ பகவானே! ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை நன்குணர்ந்த புருஷர்கள் பஞ்சபூதங்களும் ஜ்ஞானேந்திரியங்களுமாகிய இவற்றின் ஸமுதாயரூபமான சரீரத்தில் உள்ள கர்த்தாக்களான ஜீவாத்மாக்களையும் ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களையும் நிபுண (திறமையான) புத்தியுடன் ஆராய்ந்தறிந்து, நீ இவற்றிற்கெல்லாம் நியாமகனாய் இவையெல்லாம் தானேயென்னும்படி இவற்றுடன் அமைந்திருப்பினும் ப்ரக்ருதியின் கார்யங்கள் எவையும் தீண்டப்பெறாமல் ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷண (வேறான) ஸ்வரூபனாய் இருப்பவனென்பதைக் காண்கிறார்கள். அத்தகைய உனக்கு அடிக்கடி நமஸ்காரம். நீ ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்களால் ஜகத்தின் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்துகின்றாய். ஜீவாத்மாக்களின் க்ஷேமத்திற்காக நீ அச்செயல்களை விரும்புகிறாயன்றி உன் ப்ரயோஜனத்திற்காக விரும்புகிறதில்லை. அயஸ்காந்தத்தின் (காந்தத்தின்) எதிரிலிருக்கும் இரும்பு அதன்வழியே சுற்றுவது போல், ப்ரக்ருதி உன் ஸங்கல்பத்தின்படி ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களை நடத்துகின்றது. ஸத்வாதி குணங்களுக்கும் அனாதியான புண்ய பாப கர்மங்களுக்கும் நீ ஸாக்ஷியாயிருப்பவன். ஆகையால் ஜன்ம ஜரா மரணாதி துக்க ஹேதுவான ஸ்ருஷட்யாதி (படைப்பு முதலிய) கார்யங்களைப் பற்றி உனக்குப் பக்ஷபாதமாவது (ஓரவஞ்சனையோ) தயையில்லாமையாவது நேராது. அத்தகைய உனக்கு நமஸ்காரம். ஜகத்திற்கெல்லாம் காரணனான நீ வராஹ உருவங்கொண்டு என்னை உன் கோரைப்பல்லின் மேல் வைத்துப் பாதாளத்தில் யானை போல் எதிர்த்து வந்த ஹிரண்யாக்ஷனைக் கொன்று அவலீலையாகவே (விளையாட்டாகவே) ப்ரளய ஜலத்தினின்று மேற்கிளம்பினாய். அத்தகைய பெருந்திறமைகள் அமைந்த உனக்கு நமஸ்காரம்” என்று ஸ்தோத்ரம் செய்கிறாள்.
பதினெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.