வெள்ளி, 22 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 125

ஐந்தாவது ஸ்கந்தம் – பதினேழாவது அத்தியாயம்

(கங்கை பூமியில் இறங்கி வருதலும், இலா வ்ருதவர்ஷத்தில் ருத்ரன் ஸங்கர்ஷண பகவானை ஆராதித்தலும்) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்யபூர்ணனும் யஜ்ஞமூர்த்தியும் வாமன ரூபியுமான ஸ்ரீமஹாவிஷ்ணு மூன்று லோகங்களையும் மூன்று அடிகளால் அளக்கும் பொழுது அந்தப் பகவானுடைய இடக்கால் கட்டைவிரல் நகத்தினால் அண்டகடாஹம் பிளவுண்டு அந்த த்வாரத்தினால் அதற்கு வெளியிலுள்ள ஆவரண ஜலத்தின் தாரை (ஓட்டம்) உள்ளே நுழைந்து நெடுங்காலமாய் விஷ்ணுபதமென்று கூறப்படுகிற த்யுலோகத்தின் (தேவ லோகம்) நுனியில் இறங்கியிருந்தது. அந்தப் பகவானுடைய பாதாரவிந்தங்களை அலம்புகையால் அப்பாதார விந்தங்களின் செவ்விய தாதுகள் போன்ற குங்குமக்குழம்பு பட்டு அந்த ஜலம் சிவந்திருக்கும். அது, தன்னைத் தொடுகிறவர்களின் ஸமஸ்த பாபங்களையும் போக்கும் திறமையுடையது; ஆயினும் அந்தப் பாபம் தன்மேல் தீண்டப்பெறாமல் பரிசுத்தமாயிருக்கும். அந்த ஜலமே பூமியில் இறங்கின பின்பு ஜாஹ்னவியென்றும் பாகீரதியென்றும் பலபேர்களைப் பெற்றது. அதுவே கங்கை. 

அது பூமியில் இறங்குவதற்கு முன்பு வேறு நாமங்கள் எவையுமின்றிக் கேவலம் பகவத் பதியென்றே கூறப்பட்டிருந்தது. அந்த த்யுலோகத்தில் நினைத்தபடியே நடத்தும்படியான மன உறுதியுடையவனும் உத்தானபாதனது புதல்வனுமாகிய த்ருவன் க்ஷணந்தோறும் வளர்கின்ற பகவத் பக்தியோகத்தினால் மிகவும் மனம் உருகப்பெற்று ப்ரீதியின் மிகுதியால் மெய்ம்மறந்து மொட்டுக்கள் போன்ற கண்களை மூடிக்கொண்டு ஆனந்தநீர் பெருக்கி உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் நிறைந்து “இது நங்குலதேவதையான பகவானுடைய பாதாரவிந்தத்தினின்று பெருகின புண்ய தீர்த்தம்” என்னும் கௌரவத்துடன் அந்தக் கங்காஜலத்தை மூன்று ஸந்திகளிலும் இப்பொழுதும் சிரஸ்ஸில் தரித்துக்கொண்டிருக்கிறான். ஆகையால் ஸப்தரிஷிகள் அந்தக் கங்கா ஜலத்தின் ப்ரபாவத்தை அறிந்து “தவத்தின் ஸித்தியாவது இந்த விஷ்ணுபதியின் ஸேவையே. இவ்வளவேயன்றி இதற்கு மேற்பட்டதில்லை” என்று நினைத்து, ஸர்வாந்தராத்மாவான வாஸுதேவ பகவானிடத்தில் மாறாத பக்தியோகம் உண்டாகப்பெற்று அர்த்த (பொருள்), காம (இன்பம்) முதலான மற்ற புருஷார்த்தங்களையும் கேவலமான ஆத்மஸ்வரூபத்தை அனுபவிக்கையாகிற கைவல்யத்தையும் உபேக்ஷித்து (பொருட்படுத்தாமல் விட்டு) மோக்ஷத்தில் விருப்பமுடையவர் ஸித்தமாய் நேரிட்டிருக்கும் மோக்ஷத்தை வெகுமதிப்பதுபோல் வெகுமதித்து இப்பொழுதும் அந்தக் கங்காஜலத்தைத் தமது ஜடாபாரத்தினால் (தலை முடியினால்) தரித்துக் (தாங்கிக்) கொண்டிருக்கிறார்கள். 

அந்த ஜலம், அவ்விடத்தினின்று அனேகமாயிரம் கோடி விமானங்கள் நிறைந்த ஆகாச மார்க்கத்தினால் கீழே இறங்கிச் சந்த்ர மண்டலத்தை நனைத்து அதினின்று மேரு பர்வதத்தின் (மலையின்) சிகரத்திலுள்ள ப்ரஹ்மாவின் ஸ்தானத்தில் வந்து விழுகின்றது. அவ்விடத்தில் நான்கு வகையாகப் பிரிந்து ஸீதை, அலகாநந்தை, சக்ஷு, பத்ரை என்று நான்கு பேர்களைப் பெற்று நான்கு திசைகளில் பாய்ந்து ஸமுத்ரத்தில் போய் விழுகின்றது. அந்நான்கு ப்ரவாஹங்களில் ஸீதையென்னும் ப்ரவாஹம் ப்ரஹ்மஸதனத்தினின்று கிழக்கு முகமாய்ப் பெருகி கேஸரம், அவஷ்டம்பம் முதலிய பர்வதங்களின் (மலைகளின்) சிகரங்களில் விழுந்து அவற்றினின்று குமுதம், குகுரம் முதலிய பர்வதங்களின் (மலைகளின்) சிகரங்களைக் கடந்து கீழ்ப்பாய்ந்து கந்தமாதன பர்வதத்தின் (மலையின்) சிகரங்களில் விழுந்து பத்ராஸ்வ வர்ஷத்தினிடையில் பெருகிக் கிழக்குத் திக்கிலுள்ள லவண ஸமுத்ரத்தில் போய் விழுகின்றது. அங்கனமே அலகாநந்தையென்னும் ப்ரவாஹம் ப்ரஹ்ம ஸதனத்தினின்று தெற்கு முகமாய்ப் பெருகிப் பல பர்வத (மலை) சிகரங்களைக் கடந்து ஹேமகூடம் ஹிமாலயம் இப்பர்வதங்களின் (மலைகளின்) சிகரங்களில் சிறிதும் தடைபடாத பெருவேகத்துடன் பாய்ந்து பாரதவர்ஷத்தில் நிரம்பவும் பெருகி தென்திசையிலுள்ள லவண ஸமுத்ரத்தில் போய்ச் சேருகின்றது. இங்கனமே சக்ஷு என்னும் ப்ரவாஹம் மேற்கு முகமாய் மால்யவானென்னும் மலையின் சிகரத்தில் பாய்ந்து அதினின்று கீழ் விழுந்து வேகம் குறையாமல் கேதுமால வர்ஷத்தினிடையில் பெருகி மேற்கு ஸமுத்ரத்தில் போய் விழுகின்றது. பத்ரையென்னும் ப்ரவாஹம் மேரு சிகரத்தினின்று வடக்கு முகமாய்ப் பாய்ந்து குமுத பர்வத்தின் (மலையின்) சிகரத்தில் விழுந்து அதினின்றுமேல் நோக்கி நீல பர்வதத்தின் (மலையின்) சிகரத்தில் சேர்த்து அதினின்று கிளம்பி ச்வேத பர்வதத்தின் சிகரத்தைத் தொடாமலே ச்ருங்கவானென்கிற பர்வதத்தில் (மலையில்) விழுந்து அதினின்று கீழ் நோக்கி உத்தர குருதேசங்களில் பாய்ந்து வடதிசையிலுள்ள லவண ஸமுத்ரத்தில் போய்ச் சேருகின்றது. மேரு முதலிய பர்வதங்களினின்று (மலைகளிலிருந்து) பெருகி வருகின்ற மற்றும் பலவகை நதங்களும் (மேற்கு முகமாகப் பாய்வன) நதிகளும் வர்ஷந்தோறும் அனேகமாயிரம் இருக்கின்றன. இந்த ஜம்பூத்வீபத்திலும் பாரதவர்ஷமே கர்ம க்ஷேத்ரமாம். மற்ற எட்டு வர்ஷங்களும் புண்யவசத்தினால் ஸ்வர்க்கலோக போகங்களை அனுபவிப்பவர்கள் புண்யம் கழிந்த பின்பு கீழே விழுந்து புண்யசேஷத்தின் பலனை அனுபவிப்பதற்காக ஏற்பட்ட ஸ்தானங்களாம். அவற்றைப் பூமி ஸ்வர்க்கங்களென்று வழங்குகிறார்கள். அவ்வர்ஷங்களிலுள்ள புருஷர்கள் புருஷனுடைய வாழ்நாளைப் போன்ற பதினாயிரம் வாழ்நாள் வர்ஷங்களை உடையவர்கள்; தேவதைகளோடொத்தவர்கள், பதினாயிரம் யானை பலமுடையவர்கள். அவர்களுடைய சரீரம் வஜ்ராயுதம்போல் திடமாயிருக்கும். அவர்கள் பார்யைகளும் அத்தகைய சரீரமுடையவர்களே. 

ஸ்த்ரீகளும் புருஷர்களும் பலம், வயது, ஆனந்தம் இவைகளால் எப்பொழுதும் களிப்புற்றிருப்பார்கள்; நெடுநாள் ஒரே தாரையாய் (தொடர்ந்து) ஸுரத (உடல் உறவு) ஸுகத்தை அனுபவிக்கும் தன்மையுடையவர்கள். ஸ்த்ரீகள் ஸம்போக அவஸானத்தில் (அனுபவ முடிவில்) ஆயுள் ஒரு வர்ஷம் மிகுந்திருக்கும்பொழுது ஒரு கர்ப்பம் தரிப்பார்கள். அவ்வர்ஷங்களில் தேவச்ரேஷ்டர்கள் தத்தமது சேவகக் கூட்டத் தலைவர்களால் சிறந்த உபசாரங்கள் செய்யப்பெற்று எல்லா ருதுக்களிலும் உண்டாகக் கூடிய பூங்கொத்துகளும் பழங்களும் காய்களும் தளிர்களும் நிறைந்து அவற்றின் நிறைவினால் மிகுதியும் வணங்கின கிளைகளும் கொடிகளும் அமைந்த வ்ருக்ஷங்களால் (மரங்களால்) விளக்கமுற்ற அழகிய வனங்களிலும் ஆச்ரமங்களிலும் பெரிய கட்டடங்களிலும் பலவகைத் தாமரை மலர்கள் மலர்ந்து அவற்றின் வாஸனையால் மனக்களிப்புற்ற ராஜஹம்ஸங்களும், நீர்க்கோழிகளும், நீர்க்காகங்களும், ஸாரஸப்பறவைகளும், சக்ரவாகங்களும் மற்றும் பலவகைப் பறவைகளும் பலவகை வண்டுகளும் கூட்டம் கூட்டமாய்க் கூவப்பெற்று மிகவும் அழகான தாமரைக் குளங்களிலும் அப்ஸர மடந்தையர்களின் காம விலாஸங்களாலும் (விளையாட்டுக்களாலும்) புன்னகை அமைந்த கண்ணோக்கங்களாலும் மனமும் கண்களும் பறியுண்டு (கவரப்பட்டு) ஜலக்ரீடை முதலிய விளையாடல்களால் மனம் போனபடியெல்லாம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். 

இலாவ்ருதம் முதலிய ஒன்பது வர்ஷங்களிலும் அந்தந்த வர்ஷத்திற்கு நாதராகிய மஹாபுருஷர்களால் ஆராதிக்கப்பட்டு அவர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டுக் கல்யாண குணங்கள் நிறைந்திருப்பதும் ஜீவாத்மாக்களுக்குச் சிந்திக்க முடியாததுமாகிய திவ்யமங்கள விக்ரஹத்துடன் பகவான் இப்பொழுதும் ஸந்திதானம் செய்கின்றான் (அங்கு இருக்கிறான்). இலாவ்ருத வர்ஷத்தில் மஹானுபாவனாகிய ருத்ரன் ஒரு புருஷனே வஸிக்கின்றான். மற்றொரு புருஷனும் அதற்குள் நுழைகிறதில்லை. அதில் நுழையும் புருஷன் பெண்ணாய் விடுவான். பார்வதி அதற்கு அங்கனம் சாபங் கொடுத்திருக்கிறாள். ஒருவன் சாபம் உண்டென்பதை அறியாமல் நுழைவானாயினும் அவனுக்கும் அது அங்கனமே பலித்துவிடும். அவ்விஷயத்தை மேல் விவரித்துச் சொல்லுகிறோம். 

அவ்விடத்தில் ருத்ரன் பார்வதியை ப்ரபுவாகவுடைய பலவாயிரம் மடந்தையர்களால் பணியப்பெற்று வாஸுதேவன், ப்ரத்யும்னன், அநிருத்தன், ஸங்கர்ஷணன் என்னும் நான்கு மூர்த்திகளையுடைய பரமபுருஷனுடைய ப்ரக்ருதியை அதிஷ்டானம் செய்கின்ற (நியமிக்கிற) நான்காவதான ஸங்கர்ஷண மூர்த்தியை த்யான யோகத்தினால் ஸாக்ஷாத்கரித்து “ஓம் மஹாபுருஷனும் வாஸுதேவனென்று கூறப்படுகின்றவனும் வேதங்களால் மொழியப்பட்ட ஸமஸ்த கல்யாண குணங்களுடையவனும் அளவிட முடியாதவனும் இந்திரியங்களால் அறிய முடியாதவனுமாகிய பகவானுக்கு நமஸ்காரம்” என்று சொல்லி மீளவும், பரமபுருஷா! அனைவராலும் பணியத்தகுந்தவனே! பக்தர்களுக்கு ரக்ஷகமான பாதார விந்தங்களை உடையவனும் ஞானம் சக்தி முதலிய ஆறுகுணங்களுக்கும் முக்ய ஸ்தானமும் ஜகத்காரணமான தன்னுருவத்தைத் தன் பக்தர்களுக்கு வெளியிடுகின்றவனும் தன்னைப் பணிகிறவர்களுடைய ஸம்ஸார பந்தத்தைப்போக்கும் தன்மையனும் பணியாதவர்களுக்கு ஸம்ஸாரத்தை வளரச் செய்பவனும் ஸர்வேச்வரனுமாகிய உன்னைப் பணிகின்றேன். கோபவேகத்தை அடக்காத நமது ஜ்ஞானம்போல், ஸ்வயமாகவே ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிக்கின்ற ஸர்வேச்வரனுடைய ஜ்ஞானம் ப்ரக்ருதியின் குணங்களான ராகத்வேஷாதிகளால் சிறிதும் தீண்டப்படுகிறதில்லை. ஸம்ஸாரத்தை வெல்ல விரும்புவானாயின், எவன்தான் அந்த ஸர்வேச்வரனை உபாஸிக்கமாட்டான்? 

ப்ரக்ருதியின் பரிணாமமான தேஹத்தையே ஆத்மாவாக அபிமானிக்கின்ற மூட ஜனங்களுக்கு (அறிவற்ற மக்களுக்கு) அஜ்ஞானத்தினால், நீ மதிமயக்கத்தை விளைக்கும் மத்யத்தினால் (கள்ளினால்) சிவந்த கண்களையுடைய மதித்தவன்போல் (கள்ளினால் மயக்கமுற்றவனைப் போன்று) தோற்றுகின்றனை. வாஸ்தவத்தில் நீ சுத்த ஸத்வமயமான திவ்யமயங்கள விக்ரஹமுடையவன். நாக கன்னிகைகள் உனது பாதாரவிந்தங்களை ஸ்பர்சித்துக் காம விகாரத்தினால் மனக்கலக்கமுற்று வெட்கத்தினால் உன்னைப் பூஜிக்க வல்லமையற்று இருந்தார்கள். வேதாந்தங்கள் உன்னைச் சேதனாசேதன ரூபமான இந்த ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் காரணனென்று மொழிகின்றன. நீ ஜகத்காரணனாயினும் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு உட்பட்டவனல்லை. நீ ஸ்வரூபத்தினாலும் ஸ்வபாவத்தினாலும் தேச கால வஸ்து பரிச்சேதமில்லாதவன் (இடம், காலம், பொருள் ஆகியவற்றால் வரையறுக்கப்படாதவன்). ஆயிரம் படங்களையுடைய உன் சிரஸ்ஸினிடையில் ஓரிடத்தில் கடுகு போலிருக்கின்ற பூமண்டலத்தை நீ ஒரு பாரமாக நினைக்காமல் தரிக்கின்றாய்; சரீரங்களிலுள்ள மஹத்தத்வத்திற்கு அபிமானியும் ஜகத்தைப் படைக்கை முதலியவற்றிற்கு வேண்டிய ஜ்ஞானமுடையவனும் ருத்ராதிகளைக் காட்டிலும் முதல்வனும் மஹானுபாவனுமாகிய ப்ரஹ்மதேவன் உன்னிடத்தினின்று உண்டானான். 

தேவமனுஷ்யாதி தேஹங்களில் நீ கொடுத்த ஜ்ஞானத்தினால் ஸாத்விகம் தாமஸம் ராஜஸமென்று மூன்று வகை அஹங்காரங்களை நடத்துகிற நான் அந்த ப்ரஹ்மதேவனிடத்தினின்று உண்டானவன். மஹத்தத்வமும் ஸாத்விகம் தாமஸம் ராஜஸமென்று மூன்றுவகை அஹங்காரமும் ப்ரஹ்மதேவனும் ஆகிய இந்த நாங்கள் அனைவரும் கயிற்றில் கட்டுண்ட பக்ஷிகள் போல் உன் வசத்திலிருந்து உனது அனுக்ரஹத்தினால் இந்த ப்ரஹ்மாண்டத்தையும் இதற்குள்ளிருக்கும் வஸ்துக்களையும் படைக்கின்றோம். இத்தகைய உன்னை எவன்தான் பணியமாட்டான்? இந்த ஜீவன் ஸத்வாதி குணங்களின் பரிணாமமான தேஹம் இந்திரியம் இவற்றின் ஸம்பந்தத்தினால் ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையைப்பற்றின அறிவை இழந்து ஜனன மரணாதியான ஸாம்ஸாரிக தர்மங்களில் மூழ்கி உன்னால் நிர்மிக்கப்பட்டதும் கர்மமாகிற முடிச்சுகளையுடையதுமாகிய ப்ரக்ருதியின் ஸ்வரூபத்தையே அறியாதிருக்க, அதினின்று தன்னை மீட்கும் உபாயத்தை எளிதில் அறியமாட்டான் என்பதைப்பற்றிச் சொல்லவேண்டுமோ? அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தை விளைக்கவும் அதினின்று மீட்கவும் உரிய அறிவுடையவன் நீ ஒருவனே. அத்தகைய உனக்கு நமஸ்காரம்” என்று ஸ்தோத்ரம் செய்கின்றான். 

பதினேழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக