புதன், 20 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 124

ஐந்தாவது ஸ்கந்தம் – பதினாறாவது அத்தியாயம்


(மேருவின் நிலைமையைக் கூறுதல்)


பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- “ஸுர்யன் எதுவரையில் வெயில் காய்கிறானோ, சந்த்ரன் நக்ஷத்ரங்களோடு எதுவரையில் புலப்படுகிறானோ, அதுவரையிலுள்ள பூமண்டலத்தின் விஸ்தார விசேஷத்தை மொழித்தீர். அதிலும் ப்ரியவ்ரதனுடைய தேர் சக்கரம் படிந்த பள்ளங்களால் ஏழு ஸமுத்ரங்கள் ஏற்பட்டதையும், அவற்றால் இப்பூமியில் எழு தீவுகள் எற்பட்டதையும் ஸூசனையாகச் (குறிப்பாகச்) சொன்னீர். இவற்றின் அளவையும் அடையாளத்தையும் எனக்குச் சொல்வீராக. ஸத்வாதி குணங்களின் பரிணாமமான இந்த ஜகத்தெல்லாம் பகவானுடைய ஸ்தூலரூபமென்றும் அதில் மனத்தைச் செலுத்தி அனுஸந்தித்தால் ஸத்வாதி குணங்களின் ஸம்பந்தமின்றிச் சுத்த ஸத்வமயமாயிருப்பதும் ஸ்வயம்ப்ரகாசமும் பரப்ரஹ்மம் பகவான் வாஸுதேவன் இவை முதலிய சப்தங்களால் கூறப்படுவதுமாகிய பரமாத்மாவின் ஸூக்ஷ்ம ரூபத்தில் அம்மனம் ஸுகமாகப் பற்றுமென்று சொன்னீர். அஜ்ஞான அந்தகாரத்தைப் (இருளைப்) போக்கும் குருவே! ஆகையால் பகவானுடைய ஸ்தூலரூபம் இப்பூண்டலத்தின் அளவு முதலியவற்றை அறியவிரும்புகிற எனக்கு அவற்றை விவரித்து மொழியவேண்டும்.


ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! ஒருவன் தேவதைகளைப்போல் நீண்ட ஆயுளுடையவனாயினும் பகவானுடைய லீலாவிபூதியிலுள்ள ஸ்தான விசேஷங்களின் ஸ்வரூபத்தையும் பேரையும் முழுவதும் வாயால் சொல்லவாவது மனத்தினால் நினைக்கவாவது வல்லனாகமாட்டான். ஆகையால் முக்யமான பூகோள விசேஷத்தின் ஸ்வரூபத்தையும் பேரையும் அடையாளத்தையும் சொல்லுகிறோம். த்வீபங்களில் ப்ரஸித்தமான இந்த ஜம்பூத்வீபம் பூமண்டலமாகிற தாமரை மலரின் இதழ் வட்டங்கள் போன்ற த்வீபங்களில் உள்ளிதழ் வட்டம் போன்றிருக்கும்; லக்ஷயோஜனை (1 யோஜனை = 12.8 கி.மீ.) விஸ்தாரமுடையது; தாமரை இலைபோல் ஏற்றக்குறைவின்றி வட்டமாயிருக்கும். இதில் ஒன்பது வர்ஷங்கள் (கண்டங்கள்) உண்டு. ஒவ்வொன்றும் ஒன்பதினாயிரம் யோஜனை விஸ்தாரமுடையது. இவ்வொன்பது வர்ஷங்களும் எல்லையை அறிவிக்கிற எட்டு குல பர்வதங்களால் (மலைகளால்) தனித்தனியே பிரிந்திருக்கின்றன. அவற்றில் இலாவ்ருதமென்னும் வர்ஷம் இடையில் இருக்கின்றது. குலபர்வதங்களில் தலைமையுள்ள மேருபர்வதம் இதினிடையில் இருக்கின்றது; ஜம்பூத்வீபத்தின் விஸ்தீர்ணம் எவ்வளவோ அவ்வளவு (லக்ஷ யோஜனை) உயரமுடையது; இப்பூமண்டலமாகிற கமலத்திற்குக் கர்ணிகை (தாமரை மலரின் நடுப்பகுதி) போலிருக்கும். அம்மேருவின் முடி முப்பத்திரண்டு யோஜனை விஸ்தாரமுடையது. அதன் அடி பதினாறாயிரம் யோஜனையுடையது; பதினாறாயிரம் யோஜனை பூமிக்குள் மறைந்திருக்கின்றது. இலாவ்ருத வர்ஷத்திற்கு வடபாகத்தில் வரிசையாக நீலம், ச்வேதம், ச்ருங்கவான் என்னும் மூன்று மலைகள் இருக்கின்றன. அவை ரம்யகம், ஹிரண்மயம், குரு என்னும் வர்ஷங்களுக்கு எல்லைப் பர்வதங்கள் (மலைகள்). அவை மூன்றும் கிழக்கே நீண்டிருப்பவை; இருபுறத்திலும் லவண ஸமுத்ரத்தை எல்லையாகவுடையவை. ஒவ்வொன்றும் இரண்டாயிரம் யோஜனை விஸ்தீர்ணமுடையது. ஒன்றைவிட ஒன்று நீட்சியில் மாத்ரம் பத்து மடங்குக்கு மேல் குறைந்திருக்கும். இங்கனமே இலாவ்ருத வர்ஷத்திற்குத் தென்பாகத்தில் சிஷதம், ஹேமகூடம், ஹிமாலயம் என்று மூன்று மலைகள் இருக்கின்றன. இவையும் கிழக்கே நீண்டிருப்பவை. நீலம் முதலிய வடக்கு மலைகளைப்போலவே இரண்டாயிரம் யோஜனை விஸ்தீர்ணமும் பதினாயிரம் யோஜனை உயரமும் உடையவை. இவை ஹரிவர்ஷம், கிம்புருஷ வர்ஷம், பரதவர்ஷம் இவைகளுக்கு எல்லைப் பர்வதங்கள் மலைகள்). அங்கனமே இலாவ்ருத வர்ஷத்திற்கு மேல்பாகத்தில் மால்யவானென்றும் கீழ்ப்பாகத்தில் கந்தமாதனமென்றும் இரண்டு மலைகள் இருக்கின்றன. இவையிரண்டும் வடக்கில் நீலபர்வதம் வரையிலும் தெற்கில் நிஷதபர்வதம் வரையிலும் நீண்டிருப்பவை. இரண்டாயிரம் யோஜனை விஸ்தீர்ணமுடையவை. இவை கேதுமாலம், பத்ராச்வம் என்னும் வர்ஷங்களுக்கு எல்லைப் பர்வதங்கள் (மலைகள்). மந்தரம், மேரு மந்தரம், ஸுபார்ச்வம், குமுதம் என்னும் நான்கு மலைகள் மேருவுக்கு நான்கு புறங்களிலும் அரைநாண் (இடுப்புக் கயிறு) மாலைபோல் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இவை பதினாயிரம் யோஜனை விஸ்தீர்ணமும் உயரமும் உடையவை. அவற்றுள் மந்தரபர்வதத்தில் மேலான மா மரமும், மேருமந்தர பர்வதத்தில் சிறந்த காவல் மரமும், ஸுபார்ச்வ பர்வதத்தில் ச்லாக்யமான கடப்ப மரமும், குமுத பர்வதத்தில் ச்ரேஷ்டமான ஆலமரமும் அம்மலைகளுக்கு த்வஜங்கள் (கொடிகள்) ஏற்பட்டிருக்கின்றன. அவை நான்கும் ஆயிரத்து நூறுயோஜனை உயரமும் அவ்வளவு விஸ்தீர்ணமும் உடையவை. அங்கனமே மந்தரத்தில் பால்மடுவும், மேருமந்தரத்தில் தேன்மடுவும், ஸுபார்ச்வத்தில் கருப்பஞ்சாற்று மடுவும், குமுதத்தில் சுத்தஜல மடுவும், ஆக நான்கு மடுக்கள் இருக்கின்றன. பரதச்ரேஷ்டனே! இம்மடுக்களில் ஸ்நான பானாதிகளைச் செய்யும் கந்தர்வர்கள் இயற்கையாகவே அணிமாதி (அணிமாதி ஸித்திகள் -  அணிமா முதலிய எட்டு பலன்கள்) – அவையாவன - 


அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 
மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 
லகிமா - லேசாகச் செய்தல் 
கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 
வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 
ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 
ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 
ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை


யோகைச்வர்யங்களைத் தரித்துக் கொண்டிருக்கின்றனர். நந்தனம் சைத்ரரதம் வைப்ராஜிகம் வில்வதோபத்ரம் என்று நான்கு தேவ உத்யானங்களும் (தோட்டங்களும்) ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் சிறப்புடைய தேவதைகள் கந்தர்வர்களால் பாடப்பட்ட மஹிமையுடையவர்களாகி அப்ஸரஸ்த்ரீகளுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மந்தர மலையின் தாழ்வரையில் பதினொரு யோஜனை உயரமுடைய தெய்வ மாமரத்தின் நுனியினின்று பர்வத சிகரம்போல் பருத்து அம்ருதம்போல் ருசியுடைய பழங்கள் பழுத்து விழுகின்றன. அங்கனம் கீழ் விழுந்துடைகின்ற மாம்பழங்களின் ரஸம் மிக்க மதுரமும் இயற்கை வாஸனையோடு மற்ற வாஸனை வஸ்துக்களின் பரிமளத்தினால் மிகுந்த வாஸனையுடையதும் சிவந்த நிறமுடையதுமாகி அருணோதை என்னும் நதியென்று பேர் பெற்று மந்தர பர்வதத்தின் சிகரத்தினின்று பெருகி இலாவ்ருதவர்ஷத்தின் கீழ்ப்பாகத்தில் பாய்கின்றது. இந்நதியின் ஜலத்தைப் பானம் செய்வதனால் நன்மணமுடைய பார்வதியின் தாஸிகளுடைய சரீரத்திலும் புண்யஜன ஸ்த்ரீகளின் சரீரத்திலும்பட்டு மிக்க பரிமளத்துடன் வீசுங்காற்று நாற்புறத்திலும் பத்து யோஜனை தூரம் ஸுகந்தமாகச் செய்கின்றது. 


மேரு மந்தர பர்வதத்திலுள்ள நாவல்மரத்தின் பழங்கள் யானையின் உடல்போல் பருத்து மிகவும் ஸூக்ஷ்மமான கொட்டைகளை உடையவைகளாயிருக்கும். வெகு தூரத்தினின்று கீழ் விழுகையினால் உடைந்த அந்த நாவற் பழங்களின் ரஸம் ஜம்பூநதியென்று பேர்பெற்றுப் பதினாயிரம் யோஜனை உயரமுடைய அம்மேருமந்தரத்தின் சிகரத்தினின்று பூமியில் விழுந்து இலாவ்ருத வர்ஷத்தின் தென்பாகத்தில் பாய்கின்றது. அந்நதி எவ்வளவு தூரம் பாய்கின்றதோ அவ்வளவும் இரண்டு கரைகளிலுமுள்ள மண்ணெல்லாம் அந்நதியின் ஜலம்பட்டு கரைந்து காற்றும் வெயிலும் படுவதால் ஒருவிதமான பரிணாமத்தை அடைந்து ஜாம்பூதமென்ற ஸுவர்ணமாகித் தேவலோகத்தினுள் உள்ளவர்களுக்கு ஆபரணத்திற்கு உபயோகப்படுகின்றது. தேவஜாதியில் சேர்ந்தவர்கள் அனைவரும் அவரது மடந்தையர்களும் இந்த ஸுவர்ணத்தை எடுத்துக் கிரீடம் கைவளை அரைநாண்மாலை (இடுப்பு கயிறு) முதலிய ஆபரணங்களாகச் செய்து தரிக்கிறார்கள். 


ஸுபார்ச்வ மலையில் முளைத்திருக்கின்ற பெரிய கடப்ப மரத்தின் பொந்துகளினின்று ஐந்து மார்பு அகலமுடைய தேன் தாரைகள் பெருகி ஸுபார்ச்வ மலையின் சிகரத்தினின்று விழுந்து இலாவ்ருதவர்ஷத்தின் மேற்குப் பாகத்தில் நன்மணத்துடன் பாய்கின்றது. அவ்விடத்தில் வீசுங்காற்று அத்தேன் தாரைகளைப் பருகும் ஜனங்களின் முக வாஸனையால் பரிமளமுடையதாகி நாற்புறத்திலும் நூறு யோஜனை தூரம் பரிமளிக்கச் செய்கின்றது. 


குமுதமலையில் முளைத்திருக்கும் ஆலமரம் சதவலிசமென்னும் பேருடையது. அம்மரத்தின் கிளைகளினின்று பால், தயிர், நெய், தேன், வெல்லம், அன்னம் முதலியகைளும் ஆடை, படுக்கை, ஆஸனம், ஆபரணம் முதலியவைகளுமாகிய ஸமஸ்தமான விருப்பங்களையும் கறக்கவல்ல நதங்கள் (மேற்கில் பாயும் ஆறுகள்) பெருகிக் குமுத மலையினின்று இலாவ்ருத வர்ஷத்திற்கு வடபாகத்தில் பாய்ந்து அங்குள்ளவர்களைக் களிக்கச் செய்கின்றன. இவற்றின் ஜலத்தை உபயோகப்படுத்தும் ப்ரஜைகளுக்குச் சதைச் சுருக்கம், மயிர்கரைத்தல், இளைப்பு, வேர்வை, துர்நாற்றம், கிழத்தனம், மரணம், வ்யாதி, அபம்ருத்யு (கொடிய மரணம்), குளிர், வெப்பம், நிறம்மாறுதல் இவைகளும் ஸுகம், துக்கம், ராகம், த்வேஷம் முதலிய உபஸர்க்கங்களும் (வியாதிகளும்) மற்றுமுள்ள எவ்வகை உபத்ரவங்களும் ஒருகாலும் உண்டாகிறதில்லை. ஜீவித்திருக்கும் வரையில் மேலான ஸுகத்தையே அனுபவிப்பார்கள். குரங்கம், குராம், குஸும்பம், வைகங்கதம், த்ரிகூடம், சிசிரம், பதங்கம், ருசகம், நிஷதம், ஸிதிவாஸம், கபிலம், சங்கம், வைடூர்யம், ஜாருதி, விஹங்கம், ஹம்ஸம், ருஷபம், நாகம், காலஞ்சரம், நாரதம் முதலிய பர்வதங்கள் (மலைகள்) தாமரைக்காய் போன்ற மேருவின் அடிப்பாகத்தில் தாதுகள் போல் அதைச்சுற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை கேஸர பர்வதங்களென்று (மலைகள்) கூறப்படுகின்றன. 


மேருவுக்குக் கீழண்டையில் அதன் அடிவாரத்தினின்று ஆயிரம் யோஜனை தூரத்திற்கு அப்புறத்தில் ஜடாமென்றும் தேவகூடமென்றும் இரண்டு பர்வதங்கள் (மலைகள்) இருக்கின்றன. அவை வடக்கில் பதினெண்ணாயிரம் யோஜனை நீண்டு இரண்டாயிரம் யோஜனை அகலமும் அவ்வளவு உயரமும் உடையவை. இங்கனமே அம்மேருவுக்கு மேலண்டையில் பவனமென்றும் பாரியாத்ரமென்றும் இரண்டு பர்வதங்கள் (மலைகள்) இருக்கின்றன. அவை கிழக்கே நீண்டவை. ஜடர தேவகூடங்களைப் போலவே நீளமும் அகலமும் உயரமும் உடையவை. அம்மேருவின் தென்னண்டையில் த்ரிச்ருங்கமென்றும் மகரமென்றும் இரண்டு பர்வதங்கள் (மலைகள்) இருக்கின்றன. இங்கனம் எட்டுப் பர்வதங்களால் சூழப்பட்ட மேருபர்வதம் தர்ப்பங்களால் சூழப்பட்ட அக்னிபோல் நாற்புறத்திலும் திகழ்கின்றது. மேருவின் முடியில் மத்யத்தில் ப்ரஹ்மாவின் பட்டணம் சாதகெளம்பியென்று பேர்பெற்றுப் பதினாயிரம் யோஜனை விஸ்தாரமுடையதும் சதுரமுமாயிருக்குமென்று சொல்லுகிறார்கள். அந்தப் பட்டணத்தைச் சுற்றிக் கிழக்கு முதலிய எட்டுத் திக்குக்களில் இந்த்ரன் முதலான லோக பாலர்களின் பட்டணங்கள் எட்டும் ஏற்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரண்டாயிரத்து ஐந்நூறு யோஜனை விஸ்தாரமுடையவை. அமராவதி, தேஜோவதி, ஸம்யமனி, க்ருஷ்ணாங்கனை, ச்ரத்தாவதி, கந்தவதி, மஹோதயை, யசோவதி என்று பேர் பெற்றவை.

பதினாறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக