ஐந்தாவது ஸ்கந்தம் - பதினைந்தாவது அத்தியாயம்
(பரதனது வம்சத்தில் பிறந்த ராஜாக்களைக் கூறுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரதனுக்கு ஸுமதியென்று சொல்லப்பட்ட ஓர் புதல்வன் உண்டு. அவன் ருஷபன் அனுஷ்டித்த யோக மார்க்கத்தை அனுஸரித்திருப்பதைக் கண்டு சில பாஷண்டிகள் (வேத தர்மத்தில் நம்பிக்கை இல்லாத நாத்திக வழியைக் கடைபிடிப்பவர்கள்) புத்தனென்னும் தேவதையைக் கைப்பற்றி அத்தேவதையே இங்கனம் ஸுமதியாக அவதரித்தானென்று தமது பாபிஷ்ட புத்தியால் கற்பிக்கப் போகிறார்கள். அந்த ஸுமதிக்கு க்ருத்ரஸேனை என்னும் பார்யையிடத்தில் தேவதாஜித் என்னும் புதல்வன் உண்டானான். அவனுக்கு ஆஸுரி என்னும் பார்யையிடத்தில் தேவத்யும்னன் என்னும் பிள்ளை பிறந்தான். அவனுக்குத் தேனுமதி என்பவளிடத்தில் பரமேஷ்டியென்னும் பிள்ளை பிறந்தான். அவனுக்கு ஸுவர்ச்சலை என்னும் பார்யையிடத்தில் ப்ரதீஹனென்னும் பிள்ளை பிறந்தான். இவன் பலருக்கு ஆத்ம வித்யையை உபதேசித்து அதனால் பரிசுத்தமான மனமுடையவனாகிப் பரமபுருஷனை உபாஸித்தான். ஸுவர்ச்சலையின் புதல்வனாகிய ப்ரதீஹனுக்கு ப்ரதிஹர்த்தா, ப்ரஸ்தோதா, உத்காதா என்னும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அம்மூவரும் யாகானுஷ்டானத்தில் நிபுணராய் இருந்தார்கள். அவர்களில் ப்ரதிஹர்த்தாவுக்கு ஸ்துதியென்னும் பார்யையிடத்தில் அஜன், பூமன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். பூமனுக்கு ரிஷிகுல்யையென்னும் பார்யையிடத்தில் உத்கீதனென்னும் பிள்ளை பிறந்தான். அவனுக்குத் தேவகுல்யையிடத்தில் ப்ரஸ்தாரனும், அவனுக்கு விகுத்ஸையிடத்தில் விபுவும், அவனுக்குப் பாரதியிடத்தில் ப்ருதுஷேணனும், அவனுக்கு ஆகூதியிடத்தில் நக்தனும், அவனுக்கு க்ருதியிடத்தில் கயனும் பிறந்தார்கள். அவன் ராஜரிஷிகளில் சிறந்தவன்; பெரும் புகழுடையவன்; ஜகத்தை ரக்ஷிக்கும் பொருட்டுச் சுத்த ஸத்வமயமான திருவுருவங்கொண்ட பகவானுடைய அம்சம்; மனச்சிறப்பு முதலிய அடையாளங்களால் மஹா புருஷனாயிருந்தான். அவன் கர்மபலன்களை விரும்பாமல் ப்ரஜைகளைப் பயத்தினின்று காப்பது அவர்களை அன்னதானாதிகளால் ஸந்தோஷப்படுத்துவது பிள்ளைகளைப்போல் சீராட்டுவது துர்மார்க்கத்தினின்று (கெட்ட வழியிலிருந்து) தடுத்து நல்வழியில் நடத்துவது முதலிய தன் வர்ண தர்மத்தினாலும் பஞ்சமஹா யஜ்ஞாதி கர்மங்களை அனுஷ்டிக்கையாகிற தன் ஆச்ரம தர்மத்தினாலும் ஷாட்குண்யபூர்ணனும் ஸ்வரூபத்தினாலும் குணங்களாலும் எங்கும் நிறைந்தவனும் தலைமையுள்ள ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் தேவனும் மஹாபுருஷனுமாகிய ஸர்வேச்வரனிடத்தில் ஸர்வப்ரகாரத்தாலும் ஆத்ம ஸமர்ப்பணம் செய்கையாகிற முக்யமான அங்கத்தோடு கூடியதும் பரப்ரஹ்மத்தை அறிந்த பெரியோர்களின் பாதஸேவையால் விளைந்து வளர்ந்ததுமாகிய பகவத் பக்தியோகத்தினாலும் மனமலங்களெல்லாம் தீர்ந்து மதிதெளியப் பெற்றுத் தேஹமே ஆத்மாவென்னும் ப்ரமத்தையும் (மனக்கலக்கத்தையும்) துறந்து தனக்கு அந்தராத்மாவான பரமாத்மாவை ஸாக்ஷாத்கரித்துத் தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்) ஸ்வதந்த்ராத்மப்ரமம் (நான் பகவானுக்கு அடிமை அன்று; என் இஷ்டப்படி செயல்பட வல்லவன் என்கிற தவறான எண்ணம்) இவையில்லாமலே இந்தப் பூமியைப் பாதுகாத்து வந்தான்.
பரீக்ஷித்து மன்னவனே! பெரியோர்கள் அவன் புகழை இங்ஙனம் பாடுகிறார்கள். “எந்த மன்னவன்தான் கயனைச் செயல்களால் தொடரவல்லனாவான்?” அவன் வேதங்களில் விதிக்கப்பட்ட யஜ்ஞங்களையெல்லாம் அனுஷ்டித்தவன்; அனைவராலும் வெகுமதிக்கத் தகுந்தவன்; பலபேரிடத்தில் பலவும் கேட்டுணர்ந்தவன்; வர்ணாச்ரம தர்மங்களைப் பாதுகாப்பவன், ஸ்ரீமஹாலக்ஷ்மி அவனை விடாமல் தொடர்ந்திருந்தாள். அவன் ஸத்புருஷர்களின் ஸபைக்குத் தலைவன்; அவர்களைப் பணியும் தன்மையன். பகவானுடைய அம்சமாகிய கயனைத் தவிர மற்ற எவன் இத்தகைய குணங்கள் அமைந்தவன்? எவனுமே இல்லை. நல்லியற்கையுடையவரும் பொய்யாகாத ஆசீர்வாதங்களை அளிக்கும் திறமை உடையவருமாகிய தக்ஷகன்னிகைகள் தம்முடைய தேஜஸ்ஸுக்களால் இவனை அபிஷேகம் செய்தார்கள் (சிறக்கச் செய்தார்கள்.) பூமியாகிற பசு இவனுடைய குணங்களாகிற கன்றிடத்தில் ப்ரீதியால் பால் சுரந்த மடியுடையதாகி, அவன் எதையும் அபேக்ஷிக்காதிருப்பினும் அவனது ப்ரஜைகளின் விருப்பங்களையெல்லாம் கறந்தது. வேதங்களும் வேதங்களில் சொல்லப்பட்ட யஜ்ஞாதி கர்மங்களும் எதையும் விரும்பாத அம்மன்னவனுக்குப் பற்பல கர்மங்களைக் கறந்தன. சத்ரு (எதிரி) ராஜாக்கள் யுத்தத்தில் அவனுடைய பாணங்களால் பூஜிக்கப்பட்டுக் கப்பங்களைக் (பேரரசனுக்கு சிற்றரசர்கள் அளிக்கும் தொகை) கொண்டு வந்து கொடுத்தார்கள்.
ப்ராஹ்மணர்கள், அம்மன்னவனால் தர்மம் தவறாமல் பாதுகாக்கையாலும் தக்ஷிணைகளாலும் பூஜிக்கப்பட்டுப் பரலோகத்தில் அனுபவிக்கக்கூடிய தமது தர்ம பலன்களின் ஆறில் ஒரு பாகத்தை அவனுக்குக் கொடுத்தார்கள். இந்தக் கயனுடைய யஜ்ஞத்தில் இந்திரன் நிரம்பவும் ஸோமபானம் செய்து மதித்திருக்கையில், யஜ்ஞஸ்வரூபியாகிய, பகவான் ச்ரத்தையால் பரிசுத்தமாயிருப்பதும் இடையூறுகளால் தடைபடாததுமாகிய பக்தியோகத்தினால் ஸமர்ப்பிக்கப்பட்ட ப்ரீதியாகிற யாகபலனைத் தானே நேரில் வந்து பெற்றுக்கொண்டான்.
யாகத்தில் பகவான் களிப்புறுவானாயின் ப்ரஹ்மதேவன் முதற்கொண்டு தேவர், திர்யக் (விலங்கு), மனுஷ்யர், கொடி, புல் வரையிலுள்ள ஸமஸ்தமான ஜகத்தும் அபொழுதே களிப்புறும். ஜகத்திற்கெல்லாம் ப்ராணன் போன்ற அந்த பகவான் கய மன்னவனிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனாகி அவனுடைய ப்ரீதியை அங்கீகரித்தான். கயனுக்கு ஜயந்தியிடத்தில் சித்ரரதன், ஸ்வாதி, அவரோதனன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் சித்ரரதனுக்கு ஊர்ஜையிடத்தில் ஸம்ராட் என்பவன் பிறந்தான். அவனுக்கு உத்கலையிடத்தில் மரீசியும், அவனுக்குப் பிந்துமதியிடத்தில் பிந்துமா என்பவனும், அவனுக்கு ஸுஷேணையிடத்தில் மதுவும், மதுவுக்கு ஸுமனஸ் என்பவளிடத்தில் வீரவ்ரதனும், அவனுக்கு ப்ரபோதையிடத்தில் மது, ப்ரமது என்னும் இரண்டு பிள்ளைகளும், அவர்களில் மதுவுக்கு ஸத்யையிடத்தில் பௌமனனும், அவனுக்கு தூஷணையிடத்தில் த்வஷ்டாவும், அவனுக்கு விரோசனையிடத்தில் விரஜனும், அவனுக்கு விஷூசியிடத்தில் சதஜித்து முதலிய நூறு பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இதுவே ப்ரியவ்ரதனுடைய வம்சத்தின் வரலாறு. இதைப்பற்றி இங்கனம் சொல்லுகிறார்கள். “ஸ்ரீமஹாவிஷ்ணு தேவர் கூட்டத்தை அலங்கரிப்பதுபோல், நூறு பிள்ளைகளைப்பெற்ற இவ்விரஜன் இந்த ப்ரியவ்ரத வம்சத்தைத் தன் கீர்த்தியால் மிகவும் அலங்கரித்தான்.”
பதினைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.