ஞாயிறு, 17 மே, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 122

ஐந்தாவது ஸ்கந்தம் – பதினான்காவது அத்தியாயம்


(மறைத்துச் சொன்ன ஸம்ஸாரத்தின் கொடுமையை விவரித்துக் கூறுதல்)


ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸர்வேச்வரனாகிய பகவானுடைய வசத்திலிருக்கும் மாயையால் தேஹாத்மாபிமானிகள் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கிடமாகச் செய்யும் நல்லதும் தீயதும் இரண்டும் கலந்ததுமான பலவகைக் கர்மங்களால் விளைகிற தேவ மனுஷ்யாதி தேஹ பரம்பரைகளைப் பெறுகையும் அவற்றைத் துறக்கையுமாகிற ஸம்ஸாரத்தின் அனுபவத்திற்குக் காரணமான செவி, வாய், கண், மூக்கு, தோல், மனம் என்கிற ஆறு இந்திரியங்களின் கூட்டத்தினால், ஜீவாத்மாக்களைக் கொண்ட  இந்த உலகமானது, நுழையமுடியாத காட்டுவழி போன்ற கர்ம மார்க்கத்தில் விழுந்து பணம் ஸம்பாதிக்க முயன்ற வர்த்தகர் கூட்டம்போல், தாம் செய்த கர்மங்களின் பலன்களை அனுபவித்துக்கொண்டு தாம்செய்யும் ப்ரயத்னங்களெல்லாம் (முயற்சிகளெல்லாம்) வீணாவதும் விக்னங்களால் (இடையூறுகளால்) தடைபடுவதுமாகப் பெற்று, ச்மாசனம் (மயானம்) போல் அமங்களமான ஸம்ஸார மார்க்கத்தில் சென்று, அதில் விளையும் தாபங்களைப் போக்குவதும் பாகவதர்களால் அனுஷ்டிக்கப்படுவதுமாகிய பக்தி மார்க்கத்தை, இன்னம் கைப்பற்றாமலே வருந்துகின்றது. இந்த ஸம்ஸார மார்க்கத்தில் ஆறு இந்த்ரியங்களே திருடர்களாகக் கூறப்பட்டன. 


வர்த்தகர் முதலிய ஜனங்கள் மிகவும் ப்ரயாஸப்பட்டு (முயற்சி செய்து) ஸம்பாதித்ததும் தர்மத்திற்கு உபயோகப்படக்கூடியதுமாகிய தனத்தை அவர்கள் மன ஆக்கமற்றிருக்கையில் திருடர்கள் திருடிக்கொண்டு போவதுபோல், இந்திரியங்கள், ஜீவாத்மாக்களைப் பார்த்தல், தொடுதல், கேட்டல், சுவைத்தல், முகருதல், நினைத்தல், நிச்சயித்தல் ஆகிற தன்னுடைய செயல்களால் இல்லற வாழ்க்கையில் உண்டாகும் அற்பமான ஸுகங்களில் மூட்டி மதியைக் (அறிவைக்) கெடுத்து, தம்மை வெல்ல முடியாமல் ஊக்கமற்றிருக்கையில், அவர்கள் நெடுநாளாய் வருந்தி அனுஷ்டித்ததும் பரலோகத்தில் நன்மையை விளைவிப்பதுமாகிய வர்ணாச்ரம தர்மத்தையும் பகவத் ஆராதன ரூபமான தர்மத்தையும் பாழ் செய்கின்றன. பெரியோர்கள் ஜீவாத்மாவுக்கு வர்ணாச்ரம தர்மங்களால் உதவி செய்யப்பெற்ற பகவத் ஆராதன ரூபமான தர்மத்தையே தனமாகக் (செல்வம் என்று) கூறுகிறார்கள். அதை இவ்விந்திரியங்களாகிற திருடர்கள் பறிக்கின்றார்கள். 


ஜீவன் பிள்ளை பெண்டிர் முதலியவர்களிடத்தில் மனப்பற்றைத் துறக்க முயன்றிருப்பினும், அரண்யத்தில் (காட்டில்) நரிகளும் செந்நாய்களும் ஆட்டைப் பறிப்பதுபோல் அவர்கள் என் தகப்பனென்றும் என் பர்த்தாவென்றும் சொல்லிக்கொண்டு மேல்விழுந்து அவனைத் தம் வசம் இழுக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் செந்நாய்களாகவும் நரிகளாகவும் கூறப்பட்டனர். உலகத்தில் பயிர் செய்பவர் வருஷந்தோறும் நிலங்களில் முளைத்த செடி கொடிகளையும் புற்பூண்டுகளையும் பிடுங்கி மீளவும் வேரூன்றவொட்டாமல் நெருப்பை இட்டுக் கொளுத்திச் சீர்திருத்தம் செய்யினும், அவற்றின் வேர்கள் சாகாதிருந்து, உழுது விதை விதைத்தபின்பு பயிர்களோடுகூட அவையும் முளைத்து நிலம் முழுவதும் சூழ்வதுபோல், இல்லற வாழ்க்கையில் கர்மங்கள் எவ்வளவு அழிக்கப்பார்க்கினும் வேருடன் அழியமாட்டா. கற்பூரபரணியில் கற்பூரம் இல்லாமற் போயினும் அதன் வாஸனை மாறாதிருப்பதுபோல், இதில் கர்மங்கள் அனுபவத்தினால் க்ஷணிக்கினும் (அழிந்தாலும்) அதன் வாஸனை மாறாது. இந்த க்ருஹஸ்தாச்ரமம் காமங்களுக்கெல்லாம் விளை நிலமாயிருக்கும். ஜீவாத்மாக்கள் இதில் அகப்பட்டுக் காட்டு ஈக்கள் போலவும், கொசுக்கள் போலவும், தடுக்க முடியாமல் உபத்ரவம் (தொந்தரவு) செய்கின்ற அற்பஜனங்களால் பீடிக்கப்பட்டு வருந்துவார்கள். மற்றும், இவர்கள் தன தான்யாதிகளை வெளியில் ஸஞ்சரிக்கும் ப்ராணன்களென்று சொல்லும்படி மிகவும் அன்புடன் பாதுகாத்து வருகையில், விட்டில்களும், பக்ஷிகளும், திருடர்களும், எலிகளும் அவற்றைப் பறித்துக் கொண்டு போகப்பெற்று வருந்துவார்கள். இந்த ஸம்ஸாரத்தில் ஓரிடத்தில் சுழன்று கொண்டிருக்கிற ஜீவன் அஹங்கார, மமகாரங்களாலும் சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பத்தினாலும் புண்ய பாப கர்மவாஸனையாலும் மனம் கலங்கப்பெற்றுக் கந்தர்வ நகரம் போல நிலையற்ற தன் சரீரத்தையும் பிள்ளை பெண்டிர் முதலியவர்களின் சரீரத்தையும் ப்ரமத்தினால் (மனக்கலக்கத்தினால்) நிலை நின்றிருப்பதாக நினைப்பான். 


தண்ணீர் தாஹமுடையவன் காட்டில் கானல் (வெயிலில் தரையில் நீர் ஓடுவது போன்ற தோற்றம்) ஓடுவதைக் கண்டு ஜலம் இருப்பதாக ப்ரமித்து (மனம் கலங்கி) அங்கு ஓடுவது போல், ஜீவன் அந்த மனுஷ்ய சரீரத்தில் இருந்துகொண்டு ஸுகத்திற்கு இடமல்லாமை மாத்ரமேயன்றித் துக்கத்தையும் விளைக்கவல்ல சப்தாதி விஷயங்களை அனுபவிக்க விரும்பி அவற்றைத் தேடிக்கொண்டு ஓடுவான். குடிப்பது, சாப்பிடுவது, ஸம்போகிப்பது முதலிய ஸாம்ஸாரிக ஸுகங்களில் விருப்புற்று, குளிரில் அடிபட்டவன் கொள்ளிவாய்ப் பிசாசத்தைக் (வாயில் தீ பிழம்போடு இருக்கும் ஒரு வகை பிசாசைக்) கண்டு நெருப்பென்று ப்ரமித்து அதனிடம் போவதுபோல், ரஜோ குணத்தினால் மதிமயங்கின ஜீவன் ஸமஸ்த தோஷங்களுக்கும் இடமாயிருப்பதும் அக்னியின் விஷ்டையுமாகிய (மலமாகிய) ஸ்வர்ணத்தை (தங்கத்தை) விரும்புவான். நெருப்புக்காகக் கொள்ளிவாய்ப் பிசாசத்திடம் ஓடியோடிப்போயினும் அது கிட்டமாட்டாமல் வருந்திக் கடைசியில் கிட்டினும் அதனால் விரட்டப்பட்டுப் பயந்து மரணம் அடைவதுபோல், ஸ்வர்ணத்தைப் பெற விரும்பி எவ்வளவு ப்ரயாஸப்பட்டும் (முயற்சி செய்தும்) அது கிடைக்காமல் வருந்தி, அவ்வளவோடு நிற்காமல் எவ்விதத்திலாவது அதைப் பெறவேண்டுமென்னும் பிடிவாதத்துடன் நெஞ்சிலும் நினைக்க முடியாத பாபகர்மங்களையும் செய்து மிக்க வருத்தத்துடன் அதைப்பெறினும் பண்ணின பாபத்தினால் ஆயுள் க்ஷணிக்கப்பெற்று (குறைந்து, முடிந்து) ஆசைப்பட்ட போகங்களை அனுபவிக்காமலே மரணம் அடைந்து நரகத்திற்குச் சென்று பற்பல யாதனைகளை (நரக வேதனைகளை) அனுபவிப்பான். இங்கனம் சரீரம் நிலையற்றதாகையால் கந்தர்வ நகரமாகவும், ஸுகத்திற்கிடம்போல் தோன்றிக் கடைசியில் துக்கத்திற்கே இடமாயிருக்குமாகையால் சப்தாதி விஷயங்கள் கானலாகவும், அனர்த்தத்தை (கெடுதியை) விளைப்பதாகையால் ஸுவர்ணம் கொள்ளிவாய்ப் பிசாசமாகவும் கூறப்பட்டன.


இருப்பிடம் குடிநீர் பணம் முதலிய பல போக ஸாதனங்களை விரும்பி அவற்றை ஸம்பாதிக்கும் பொருட்டு அபிநிவேசத்துடன் (மிகுந்த ஈடுபாட்டுடன்) இங்குமங்கும் திரிவான். ராத்ரியில் இருள்போல் ஒன்றும் தெரியவொட்டாமல் மறைக்கிற சுழற்காற்றில் அகப்பட்டவன் கண்களில் தூள் படியப்பெற்றுத் திக்கு தெரியாமல் தடுமாறுவதுபோல், மடந்தையர் மடியில் அகப்பட்டவன் அக்காலம் தலையெடுத்த காம மோஹத்தினால் மதிமயங்கி மரியாதைகளையெல்லாம் தவிர்ந்து ப்ராணிகளின் நடத்தைகளுக்கு ஸாக்ஷிகளான திக்தேவதைகளையும் காணமாட்டான். ஒருகால் சப்தாதி விஷயங்கள் பயனற்றவை என்பதை அனுபவித்து அறிந்தவனாயினும் தேஹ சிந்தையினால் ஆத்மாவின் நினைவை இழந்து கானலில் தோற்றும் நீரோட்டம் போன்ற அந்த சப்தாதி விஷயங்களையே விரும்பியோடுவான். ஒருகால் கோட்டான்களுடைய கோஷம்போல் மிகவும் கர்ணகடோரமாய்ப் (கேட்கமுடியாத கொடிய வார்த்தைகளால்) பரபரப்புடன் பேசுகிற ராஜபடர்களின் (அரசாங்க சேவகர்களின்) விரட்டல்களால் ப்ரத்யக்ஷத்தில் காதுகளிரண்டும் பிளவுண்டாற்போல் வருந்துவான். 


சுவர்க்கோழிகளின் கோஷம்போல் மிகவும் க்ரூரமாயிருப்பதும் உத்ஸாஹத்தினால் பெரிய பரப்பரப்புடன் கூடியதுமாகிய சத்ருக்களின் விரட்டல்களை மறைவில் கேட்டு ஹ்ருதயம் பிளவுண்டாற்போல் வருந்துவான். பூர்வஜன்மத்தில் புண்யம் செய்திரானாயின், ஒன்றுக்கும் உபயோகப்படாத எட்டி, விஷத்தும்பை முதலிய மரம் செடி கொடிகள் போலவும் விஷக்கிணறு போலவும் இருவகை ப்ரயோஜனங்களுக்கும் (இந்த உலகத்து ப்ரயோஜனமும் வேறு உலகத்து ப்ரயோஜனமுமாகிய இருவகை ப்ரயோஜனங்களுக்கும்) இடமில்லாத பணங்களையுடையவர்களும் ஜீவித்திருந்தும் செத்தாற்போல் இருப்பவர்களுமான பாபிஷ்டர்களை அடுத்துப் பிழைக்கப் பார்ப்பான். 


ஒருகால் அஸத்துக்களின் ஸஹவாஸத்தினால் வஞ்சிக்கப்பட்டு மதிகெட்டு (அறிவு அழிந்து) தண்ணீர் தாஹமுடையவன் ஜலமில்லாத ஆற்றில் இறங்க முயன்று பள்ளத்தில் விழுந்து தண்ணீர் பெறாமை மாத்ரமேயன்றி மண்டை உடையப்பெற்றுப் பின்பும் தலைநோய் தொடர்ந்து வருந்துவதுபோல் இஹலோகத்திலும் பரலோகத்திலும் துக்கத்தைக் கொடுக்கிற பாஷண்ட மார்க்கத்தைக் (வேத தர்மத்தில் நம்பிக்கை இல்லாத நாத்திக வழியைக்) கைப்பற்றி வருந்துவான். ஒருகால் பிறரை வருத்தியும் ஆஹாரம் கிடைக்காமல் தந்தை பிள்ளை முதலியவரைச் சேர்ந்த தருணமாயினும் எவரிடத்தில் புலப்படுமோ அவர்களைப் பக்ஷிக்கத் (உண்ணத்) தொடங்குவான். 


ஒருகால் காட்டுத்தீ போல் போக்ய (அனுபவிக்கக்கூடிய) வஸ்துக்கள் எவையுமின்றி மேன்மேலும் துக்க பரம்பரைகளுக்கே இடமான க்ருஹஸ்தாச்ரமத்தில் இழிந்து அதில் தான் விரும்புகின்றவை கிடைக்காமையாலும் தனக்கு வேண்டாதவை பலவும் நேர்ந்து நீங்காமையாலும் சோகமாகிற அக்னியால் தஹிக்கப்பட்டு (எரிக்கப்பட்டு) “ஆ! நான் பூர்வஜன்மத்தில் நல்லது செய்யவில்லை. ஆகையால் இப்பொழுது பாக்யமற்று வருந்துகிறேன்” என்று மிகவும் மனவெறுப்புறுவான். ஒருகால் ராஜகுலத்திலுள்ளார் காலக்கொடுமையால் ப்ரதிகூலராகி, தான் ப்ராணன்களைப்போல் மிகுந்த ப்ரீதியுடன் பாதுகாத்து வருகிற தனங்களை ராக்ஷஸர்போல் மேல்விழுந்து பறித்துக்கொண்டு போகையில், ஸந்தோஷம் முதலிய ஜீவலக்ஷணங்களெல்லாம் தொலைந்து, மரணம் அடைந்தாற்போலிருப்பான். ஒருகால் விழித்துக்கொண்டிருக்கையில் ஆசைப்பட்டபடி ஸ்வப்னத்தில் (கனவில்) தந்தை பாட்டன் முதலிய பந்து வர்க்கத்தைக் கண்டு அடுத்த க்ஷணத்தில் புலப்படாத அந்தப் பந்து வர்க்கத்தைச் சாச்வதமாக நினைத்து க்ஷணகாலம் ஸுகத்தை அனுபவிப்பான். ஸ்வப்னத்தில் (கனவில்)  புலப்படும் வஸ்துக்கள் அக்காலத்தில் அந்தந்த ஜீவாத்மாக்கள் மாத்ரமே அனுபவிக்குமாறு ஈச்வரனால் ஸ்ருஷ்டிக்கப்படுகின்றன. அவை விழித்துக்கொண்ட பின்பு புலப்படமாட்டாது. ஆனதுபற்றி கந்தர்வ நகரமென்று கூறப்பட்டன. முடவன் பெரிய உயரமான மலையின் மேல் ஏற விரும்புவது போல், மிக்க பணச் செலவாலும், சரீர (உடல்) ஆயாஸத்தினாலும் (முயற்சியினாலும்) அனுஷ்டிக்க வேண்டிய வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க விரும்பி, மலைமேல் ஏறுகிறவன் முள் போன்ற பரல் கற்களால் பாதங்கள் துளைக்கப்பெற்று வருந்துவதுபோல், இடையில் பலவகையான ஸாம்ஸாரிக துக்கங்களால் மனம் கலங்கப்பெற்று வருந்துவான். ஒருகால் ஜாடராக்னியால் (ஜடரம் – வயிறு, அக்னி – நெருப்பு) சரீரத்திலுள்ள பலமெல்லாம் ஒடுங்கப்பெற்று இளைத்துத் தனது குடும்பத்தின் மேல் கோபித்துக் கொள்வான். 


(வாழைப்பழம் அக்னிகுண்டத்தில் கூட வேகாது என்பார்கள், அப்படிப்பட்ட வாழைப்பழத்தையும் எரித்து பஸ்பமாக்கும் சக்தி கொண்ட நம் வயிறு மிகவும் சிறந்த சாதனம், ஜாடராக்னி என்பார்கள் அப்படிப்பட்ட ஜாடராக்னி கொண்ட நம் வயிற்றுக்கு வேளைக்கு தேவையான சரியான உணவை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஜாடராக்னி எரிக்க அல்லது செரிக்க உணவு இல்லாமையினால் இரைப்பையின் பக்கவாட்டுச் சுவர்களை எரிக்கிறது)


அவனே உறக்கமாகிற மலைப்பாம்பினால் பிடியுண்டு தன்னையும் பிறனையும் அறியமுடியாத அஜ்ஞானமாகிற பெரிய அந்தகாரத்தில் மூழ்கி ஜனஸஞ்சாரமில்லாத அரண்யத்தில் (காட்டில்) போல படுத்து விழுபிணம் (கிழே கிடக்கும் பிணம்) போலிருப்பான். ஒருகால் துர்ஜனங்களாகிற (கொடிய மக்களாகிற) ஸர்ப்பங்களால் கடியுண்டு கர்வமாகிற கோரைப்பல் ஒடியப்பெற்று உறங்குவதற்குச் சிறிதும் கிடைக்காமல் மனவருத்தமுற்று அதனால் ஜ்ஞான ஸங்கோசத்தை அடைந்து (அறிவு குறைந்து), குருடன் தெரியாமல் பாழுங்கிணற்றில் விழுவதுபோல், மஹத்தான துக்கத்தில் விழுவான். 


ஒருகால் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கையால் உண்டாகும் ஸுகமாகிற தேன் துளிகளைத் தேடிக்கொண்டு பரதாரங்களையும் (பிறர் மனைவிகளையும்) பரத்ரவ்யங்களையும் (பிறர் செல்வங்களையும்) மேல்விழுந்து பறிக்கத் தொடங்கி அரசனாலாவது அவற்றிற்கு உடையவர்களாலாவது அடிக்கப்பெற்றுப் பெரிய நரகம் போன்ற சிறைச்சாலையில் அடைப்புண்பான் (தள்ளப்படுவான்). ஆகையால் ஜீவன் ப்ரவ்ருத்தி மார்க்கத்தில் இழிந்து செய்யும் புண்ய பாப கர்மங்களெல்லாம் இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் அவனுக்கு ஸம்ஸாரத்தையே விளைக்குமென்று சொல்லுகிறார்கள். பரத்ரவ்ய (பிறர் செல்வம்) பரதாரங்களில் (பிறர் மனைவி இவைகளில்) கைவைத்து அதற்காகச் சிறைச்சாலையில் அடைப்புண்டவன் (தள்ளப்படுபவன்) அதினின்று விடுபடுவானாயின், அவனிடத்திலுள்ள த்ரவ்யத்தையும் மடந்தையர்களையும் தேவதத்தனும், அவனிடத்தினின்று யஜ்ஞமித்ரனும் பறித்துக்கொண்டு போவார்கள். இங்கனமே அந்யாயமாய் ஸம்பாதித்த சொத்து ஒருவனுக்கும் நிலை நிற்காது. ஒருவனை விட்டு மற்றொருவனிடம் போய்க்கொண்டே இருக்கும். சிறையிலிருந்து வருந்தியும் அதை அனுபவிக்கப் பெறமாட்டான். 


ஒரு கால் குளிர் வெய்யில் காற்று முதலிய பல ஆதிதெய்விக தாபங்களாலும் ஆதிபௌதிக தாபங்களாலும் ஆத்யாத்மிக தாபங்களாலும் வருந்தி அவற்றைத் தடுக்க விரும்பி அதற்கு வல்லமையற்று எல்லையில்லாத மனக்கவலையுடன் துக்கித்துக் கொண்டிருப்பான். ஒருகால் ஏதேனும் ஒரு தனத்தைக் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருந்து பணத்தாசையால் இருபது பணங்களுக்காவது அன்றி அவற்றிலும் குறைந்த அற்ப வஸ்துவுக்காவது த்வேஷத்தை ஏற்றுக்கொள்வான். ஒருக்கால் பணமெல்லாம் அழியப்பெற்றுப் படுக்கை ஆஸனம் இருப்பிடம் முதலிய போகத்திற்கு வேண்டிய கருவிகள் எவையுமின்றி மீளவும் அவற்றைப் பெற விரும்பி அதற்குப் பணம் வேண்டுமாகையால் முயற்சி செய்தும் அது கைகூடாமல் பிறருடைய சொத்தைப் பறிக்க மனத்தில் நிச்சயித்துக்கொண்டு முயன்று அவமானம் முதலியவற்றைப் பெறுவான். கொடுக்கல் வாங்கலின் மாறுபாட்டினால் ஒருவர்மேல் ஒருவர்க்கு வைரம் (பகை) வேரூன்றி அதன் தொடர்ச்சியால் அனிஷ்டங்களைச் (கெடுதல்களைச்) செய்து கொண்டிருப்பினும் முன்பு கலந்திருந்த அபிமானத்தின் வாஸனையால் அவர்களோடு விவாஹாதி (கல்யாணம் முதலிய) ஸம்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வான். இத்தகைய பல வருத்தங்களாலும் ஸுகம் துக்கம் ராகம் த்வேஷம் முதலியவைகளாலும் மிகவும் விஸ்தீர்ணமாயிருக்கிற இந்த ஸம்ஸார மார்க்கத்தில் ஆபத்தை அடைந்து மரணம் அடைகின்ற தந்தை பாட்டன் பிள்ளை பெண்டிர் முதலியவர்களைத் துறந்து மேன்மேல் நேரிடுகிற பிள்ளை பெண் முதலியவர்களை நம்முடையவர்களென்னும் அபிமானத்துடன் கைப்பற்றி அங்கனம் பிறந்த பிள்ளை முதலியவர் மரணம் அடைகையில் சோகிப்பதும் (வருந்துவதும்), மோஹிப்பதும் (மனக்கலக்கம் அடைவதும்), வருந்துவதும், வாயால் புலம்புவதும், கண்ணீர் பெருக்குவதுமாகி, மீளவும் பிள்ளை பெண் முதலியன உண்டாகும் பொழுது ஸந்தோஷிப்பதும் இடி இடியென்று (உரக்க) நகைப்பதும், ஒருகால் ஜீவித்திருக்கிற பிள்ளை பெண் முதலியவர்க்கு என்ன வருமோவென்று பயப்படுவதும், அவர்களுடைய குணங்களைப் பாடுவதுமாகி மோஹித்திருப்பான். இங்கனம் இவ்வுலகத்திலுள்ள ப்ராணி ஸமூஹமெல்லாம் நற்செயலேதுமின்றி ஸம்ஸார மார்க்கத்தின் அக்கரையாகிய ஆத்மயோகத்தில் இழியாமல் இதிலேயே உழல்கின்றன. சாந்தியே ஸ்வபாவமாய் இருக்கப்பெற்றவரும் மனத்தை அடக்கியாள்பவரும் பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை மனனம் செய்பவருமான முனிவர்கள் எத்தகைய பூதங்களுக்கும் த்ரோஹம் செய்யாமல் நண்பர்களாகி ஆவலுடன் அனுஷ்டித்து வருகிற ஆத்மயோகம் மிகவும் ஆநந்தமாயிருக்கும்; அது ஸம்ஸாரத்தினின்று கடத்திப் பரமாத்மானுபவத்தை விளைக்கும். 


மன்னவர்கள் தாம் திக்கஜங்களை (திசைகளைக் காக்கின்ற யானைகளை) வென்றவராயினும் மனத்தை வெல்ல முடியாமல் அத்தகைய ஆத்மயோகத்தைக் கைப்பற்றாமலே வருந்துகிறார்கள். மற்றும், அவ்வரசர்கள் இப்பூமண்டலமெல்லாம் என்னுடையதேயென்று அபிமானித்து அதற்காக ஒருவர்மேல் ஒருவர் வைரத்தை (பகைமையை) ஏற்றுக்கொண்டு அது மேன்மேலும் தொடர்ந்து வரப்பெற்று யுத்தத்தில் சத்ருக்களால் அடியுண்டு தாம் அபிமானித்திருந்த அப்பூமியைத் துறந்து யுத்த பூமியில் படுக்கின்றார்கள். இந்த ஸம்ஸார மார்க்கத்தில் இத்தகைய பெரிய வருத்தங்களும் பணத்தை இழக்கை முதலியவைகளும் ஸுகம், துக்கம், ராகம், த்வேஷம், பயம், அபிமானம், ஸந்தோஷம், மனவூக்கமின்மை, பித்துப்பிடித்தல், சோகம், மோஹம், பிறனுடைய நன்மையைக் கண்டு பொறாமை, பிறனுடைய குணங்களைப் பொறாமல் அவன்மேல் தோஷங்களை ஏறிடுகை, அவமானம், பசி, தாஹம், மனோ வ்யாதி, சரீர வ்யாதி, பிறவி, மூப்பு, மரணம் முதலிய பலவகை உபத்ரவங்களும் மாறாதிருக்கின்றன. 


ஒருகால் ஸ்த்ரீயென்னும் பேர் பூண்ட, பகவானுடைய மாயையால் இருகரங்களாலும் அணைக்கப்பெற்று விவேகம் கெட்டுத் தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறியப்பெறாமல் பகவானை உபாஸிக்க வேண்டுமென்னும் நினைவேயின்றி, அந்த ஸ்த்ரீயினுடைய லீலா க்ருஹத்தின் வாசற்படி நுழைய முயன்ற மாத்ரத்திலேயே மனம் கலங்க அவ்விடத்திலுள்ள பிள்ளை பெண் மனைவி முதலியவர்களின் பேச்சுக்களால் மனம்பறியுண்டு இந்திரியங்களை அடக்க முடியாமல் தன்னை எல்லையில்லாத பெரிய அந்தகாரம் (இருட்டு) போன்ற துக்கஸாகரத்தில் தள்ளிக்கொள்கிறான். பரமாணு (மிகச்சிறிய துகள் – ஜன்னல் வழியே வரும் ஸூர்ய கிரணங்களில் தெரியும் சிறு தூசியின் 30ல் ஒரு பங்கு பரமாணு) 


முதல் த்விபரர்த்தம் (ப்ரஹ்மாவின் ஆயுளின் அளவு த்விபரர்த்தம் எனப்படும். க்ருத யுகம் 1728000 மனித வருடங்கள் த்ரேதா யுகம் 1296000 மனித வருடங்கள் த்வாபர யுகம் 864000 மனித வருடங்கள் கலி யுகம் 432000 மனித வருடங்கள். ஆக இவை நான்கும் சேர்ந்த ஒரு சதுர் யுகம் 4320000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; அது போல் மற்றுமொரு 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு இரவு; ஆக 2000 சதுர்யுகங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். அதாவது 4320000 * 2000 = 864,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். 864,00,00,000 * 360 = 311040,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு வருடம். ப்ரஹ்மாவின் ஆயுள் 100 வருடங்கள்; அதாவது 3,11,04,000 கோடி மனித வருடங்கள். இதுவே த்விபரர்த்தம் எனப்படும்.) வரையிலுள்ள காலரூபமான பகவானுடைய சக்ராயுதம் பால்யம் முதலிய வயதை மிக்க விரைவுடன் நடத்திக்கொண்டு வந்து ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி புழு வரையிலுமுள்ள ஸமஸ்த ப்ராணிகளுடைய ஆயுளையும் கணக்கிடுகின்றது. காலசக்ரம் சிறிதும் மனவூக்கம் தவறாமல் ப்ராணிகளின் ஆயுளைப் பறிக்கின்றது. ப்ராணிகள் நெடுநாள் வரையிலும் தமது ஆயுள் க்ஷீணிப்பதை அறியாமலேயிருந்து கடைசியில் மரணம் வருவதை நினைத்து அந்தக்கால சக்ரத்தினின்று பயந்து என்றும் மரணமில்லாதிருக்க வேண்டுமென்று விரும்பி அக்கால சக்ரத்தையே ஆயுதமாகவுடைய யஜ்ஞபுருஷனான பகவானை உபேக்ஷித்து (பொருட்படுத்தாமல்) வைதிக ஸித்தாந்தத்தினின்று வெளிப்பட்டு, பருந்து கழுகு கொக்கு முதலிய பறவைகள் போல் நம்பினவர்களையும் வஞ்சிக்கும் தன்மையுடையவைகளும் சாஸ்த்ரங்களில் விதிக்கப்படுகையின்றிக் கேவல ஸங்கேதத்தினால் (குறிப்பு, ஜாடையினால்)  ஏற்பட்டவைகளுமான பாஷண்ட தேவதைகளை அடுத்துப் பாஷண்ட தர்மங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். தம்மைத் தாமே வஞ்சனை செய்கின்ற அப்பாஷண்ட தேவதைகளால் வஞ்சிக்கப்பட்டு, அதில் உபயோகமில்லையென்று அதினின்று ப்ராஹ்மண குலத்தில் புகுந்து, ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட உபாஸனம் முதலிய தர்மங்களால் யஜ்ஞபுருஷனை ஆராதிக்கையாகிற அந்த ப்ராஹ்மணர்களின் நடத்தை தனக்கு ருசிக்காமல், வைதிகமான ஆசாரத்தில் சக்தியில்லாமையால் வானர ஜாதிபோல் ஸம்போக ஸுகமும் குடும்ப போஷணமுமாகிய இவையே  புருஷார்த்தங்களாகப் பெற்று ஆத்ம விஷயத்தில் சிறிதும் கண் வையாத குலத்தை அடுக்கிறார்கள். அதிலும் தடையின்றித் தேச காலங்களின் உரிமையை எதிர்பாராமல் மனம் போனபடி க்ரீடித்துக் (விளையாடிக்) கொண்டு சப்தாதி விஷயங்களில் மிகவும் தாழ்ந்த மதியுடையவராகி ஸ்த்ரீயும் புருஷனும் ஒருவர்க்கொருவர் முகத்தைப்பார்ப்பது முதலிய க்ராம்ய போகத்திலேயே ( உடல் உறவு அனுபவத்திலேயே) அழுந்தி ஆயுள் முடிவையும் மறக்கின்றார்கள். ஒருகால் மரம்போல் கேவலம் ஐஹிக ஸுகத்தையே (இவ்வுலக சுகத்தையே) விளைப்பதான க்ருஹஸ்தாச்ரமத்தில் க்ரீடிக்க (விளையாட) முயன்று வானரம்போல் பிள்ளை பெண்டிர்களிடத்தில் மிகுந்த ப்ரீதிகொண்டு மைதுனத்தையே (ஆண் பெண் உடல் உறவையே) பெரிய உத்ஸவமாக நினைக்கின்றார்கள். 


இங்கனம் ஸம்ஸார மார்கத்தில் ஸுகம் துக்கம் முதலியவற்றை அனுபவித்துக்கொண்டு ம்ருத்யுவாகிற யானையிடத்தில் பயந்து, பர்வத குஹைபோல் எவ்விதத்திலும் கடக்கமுடியாத ரோகம் முதலிய ஆபத்தில் விழுந்து, மீளவும் ஜீவித்திருப்பதற்குக் காரணமான கர்மமாகிற கொடியைப் பிடித்துக்கொண்டு அவ்வாபத்தினின்று மிக்க ப்ரயாஸத்துடன் விடுபட்டு, மீளவும் கீழ்ச்சொன்னபடியே இந்த ஸம்ஸார மார்க்கத்தில் இருந்துகொண்டு தம்மைப்போன்ற ப்ராணி ஸமூஹத்தையே தொடர்கின்றார்கள். லோகாந்தரத்திலுள்ள ஜீவஸமூஹமும் இங்கனமே இந்திரியங்களை அடக்கியாள முடியாமல் சப்தாதி விஷயங்களில் விழுந்து வருந்துகின்றது. மன்னவனே! முன்பு மறைத்துச் சொன்ன ஸம்ஸாரத்தின் கொடுமையையே விவரித்துச்சொன்னேன். 


ரஹோகணனுக்குப் பரதன் இங்கனம் ஆத்ம பரமாத்ம ஸ்வரூபத்தையும் ஸம்ஸாரத்தின் இழிவையும் உபதேசித்தான். இப்பரதனுடைய மஹிமையைப்பற்றி இங்ஙனம் பாடுகிறார்கள்:-


“ருஷப மன்னவனுடைய குமாரனும் மஹானுபாவனுமாகிய பரதனென்னும் ராஜரிஷியின் மஹிமை இத்தகையது. கருடனுடைய வேகத்தை ஈ அனுஸரிக்க முடியாததுபோல், இம்மஹானுபாவனுடைய மஹிமையை மற்றொரு மன்னவன் நெஞ்சாலும் தொடர உரியவனல்லன். இந்த ருஷபகுமாரனாகிய ராஜர்ஷி பகவானிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவனாகி யௌவன (இளமை) வயதிலிருக்கும்பொழுதே மனத்திற்கினியர்களும் விட முடியாதவர்களுமான பெண்டிர்களையும் புதல்வர்களையும் நண்பர்களையும் ராஜ்யத்தையும் விஷ்டையைப் (மலம்) போல் துறந்தான். இம்மன்னவன் பூமண்டலத்தையும் பிள்ளைகளையும் பந்துக்களையும் பணத்தையும் பார்யையையும், தேவதைகளாலும் மனுஷ்யர்களாலும் ப்ரார்த்திக்கத் தகுந்தவளும் தன்னிடத்தில் கருணாகடாக்ஷமுடையவளும் தன் கருணாகடாக்ஷத்தை எதிர்பார்க்கின்றவளுமாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் துறந்து அவற்றில் சிறிதும் மன விருப்பமில்லாமலே இருந்தான். இது யுக்தமே (ஸரியே). ஏனென்னில் பகவானுடைய ஸேவையில் அனுராகம் நிறைந்த மனத்தரான பெரியோர்களுக்கு மோக்ஷமும் அற்பமாகவே தோன்றும். இனி இஹலோகபோகங்களை அவர்கள் ஒரு பொருளாக எப்படி நினைப்பார்கள்? இம்மன்னவன் மானாகப் பிறந்திருக்கையில் அந்த மான் சரீரத்தைத் துறக்க முயன்ற ஸமயத்திலும் “யஜ்ஞஸ்வரூபியும் ராமக்ருஷ்ணாதி அவதாரங்களால் வர்ணாச்ரம தர்மங்களைப் பாதுகாப்பவனும் தர்மத்தை அனுஸரிப்பவர்களைக் காப்பதில் வல்லமை அமைந்தவனும் ஆத்ம ஸ்வரூபத்தையும் தேஹஸ்வரூபத்தையும் முக்யமாக எடுத்துரைக்கிற ஸாங்க்ய சாஸ்த்ரத்தை வெளியிட்டவனும் பக்தியோகத்தினால் அறியத்தகுந்தவனும் ப்ரக்ருதிக்கு நியாமகனும் ஸமஸ்தசேதனாசேதனங்களைச் சரீரமாகவுடையவனும் தன்னைப்பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தைப் போக்கும் தன்மையனுமாகிய பரமபுருஷனுக்கு நமஸ்காரம்” என்று மனோபாவத்துடன் மொழிந்தார்கள். இந்தப் பரதனென்னும் ராஜரிஷி பரிசுத்தமான செயலுடையவன். இவனது செயல்களைப் பகவானிடத்தில் பக்தியுடைய பெரியோர்கள் கொண்டாடுவார்கள். இவனது குணங்களும் அப்படிப்பட்டவைகளே. இவனுடைய சரித்ரம் புகழையும் மங்களத்தையும் ஆயுஸ்ஸையும் தனத்தையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்கும். இதைக் கேட்கிறவனும் சொல்லுகிறவனும் இதைச் சொல்லுகிறவர்களையும் கேட்கிறவர்களையும் கண்டு ஸந்தோஷிக்கிறவனும் தாம் விரும்பும் விருப்பங்களையெல்லாம் தாமே பெறுவார்கள்; எதற்காகவும் பிறனை எதிர்பார்க்கமாட்டார்கள். 


பதினான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக