ஶ்ரீமத் பாகவதம் - 121

ஐந்தாவது ஸ்கந்தம் – பதின்மூன்றாவது அத்தியாயம்

(விரக்தி உண்டாகும் பொருட்டு ரஹோகணனுக்கு ஜடபரதன் ஸம்ஸாரத்தின் கொடுமையைக் கூறுதல்)

ப்ராஹ்மணர் சொல்லுகிறார்:- பகவானுடைய அனுக்ரஹத்தையொழிய மற்ற எவ்வகையிலும் கடக்க முடியாத கர்ம மார்க்கத்தில் ப்ரக்ருதியால் நுழைக்கப்பட்டு ஸத்வ ரஜஸ் தமோ குணங்களால் பிரிந்திருக்கிற கர்மங்களில் கண் வைத்து, வர்த்தகர் பணம் ஸம்பாதிக்கும் பொருட்டுக் காடு மேடெல்லாம் திரிவதுபோல், தர்ம அர்த்த காமங்களில் மனம் சென்ற ஜீவாத்மாக்கள் ஸம்ஸாரமாகிற அடவியில் (காட்டில்) அகப்பட்டு ஸுகத்தை அடையமாட்டார்கள். ஓ மன்னவனே! இவ்வடவியில் (இக்காட்டில்) ஆறு திருடர்கள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நல்வழி தெரியாத ஒருவனைத் தலைவனாகக்கொண்டு திரிகின்ற வர்த்தகர்களைத் தடுத்து மேல்விழுந்து அவரிடத்தினின்று பணத்தைப் பறிக்கின்றார்கள். இதில் நரிகள் பல உண்டு. செந்நாய்கள் ஆட்டை இழுத்துக்கொண்டு போவது போல், அவை மன ஆக்கமற்றிருக்கிற அவ்வர்த்தகர்களின் கூட்டத்தை இழுத்துக்கொண்டு போகின்றன. பல கொடிகளும் புற்களும் புதர்களும் நிறைந்த ஓரிடத்தில் கொடிய காட்டீக்களாலும் கொசுக்களாலும் கடியுண்டு வருந்துவார்கள். ஒருகால் கந்தர்வ நகரத்தைக் கண்டு இது நிலையென்று நினைப்பார்கள். சிற்சில இடங்களில் பெரு வேகமுடைய கொள்ளிவாய்ப் பிசாசத்தைக் (வாயில் நெருப்பைக் கக்கும் பிசாசு) காண்பார்கள். கானல்போன்ற தனத்தில் புத்தி சென்று அவ்வடவியில் (அக்காட்டில்) இங்குமங்கும் திரிவார்கள். சில இடங்களில் சுழற்காற்றால் மேற்கிளம்பின தூள்களால் கண்கள் நிரம்பப் பெற்றுத் திக்கு (திசை) தெரியாதிருப்பார்கள். சில இடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் ஒலிக்கின்ற சுவர்க்கோழிகளின் த்வனியினால் (சப்தத்தால்) காது நோவெடுக்கப் பெறுவார்கள். கோட்டான்களின் கூக்குரல்களால் மன வருத்தமுறுவார்கள். சில இடங்களில் பசியால் வருந்தி எட்டி (கசப்பான விஷமுடைய கனி) முதலிய விஷ வ்ருக்ஷங்களைப் பற்றுவார்கள். சில இடங்களில் கானலைத் தண்ணீரென்று ப்ரமித்து ஓடுவார்கள். சில இடங்களில் ஜலமில்லாத நதிகளைத் தேடிக்கொண்டு சென்று தண்ணீர் காணாமல் தடுக்கிப் பள்ளங்களில் விழுந்து கைகால் ஒடிந்து வருந்துவார்கள். ஒருகால் ஆஹாரமின்றிப் பிறருடைய தனத்தைப் பெற விரும்புவார்கள். ஒருகால் காட்டுத் தீயில் அகப்பட்டு அந்த தீயினால் கொளுத்தப்பட்டு வருந்துவார்கள். ஒருகால் யக்ஷர்களால் ப்ராணன்கள் (உயிர்) பறியுண்டு வருந்துவார்கள். 


மன்னனனே! ஒருகால் சூரர்களான ராஜபடர்களால் (ராஜாங்க சேவகர்களால்) பணம் பிடுங்கப்பெற்றுத் துக்கிப்பார்கள். ஒருகால் சோகித்து மோஹித்து மூர்ச்சை அடைவார்கள். ஒருகால் கந்தர்வ நகரத்தில் நுழைந்து ஸுகித்தவர்போல் முஹூர்த்த காலம் ஸந்தோஷிப்பார்கள். ஒருகால் ஏறமுடியாத மலையின் மேல் ஏறத்தொடங்கி முட்களாலும் பரல் கற்களாலும் பாதங்கள் நோவப்பெற்று வாடி வருந்துவார்கள். குடும்ப போஷணத்திற்கு முயன்று அடிக்கடி ஜாடராக்னியால் (நம் வயிற்றில் உள்ள அக்னி) வருந்திப் பெண்டிர் பிள்ளை முதலியவர் மேல் கோபித்துக் கொள்வார்கள். ஒருகால் இவர்கள் மலைப்பாம்பினால் விழுங்கப்பெற்று அரண்யத்தில் (காட்டில்) விழுபிணம்போல் (விழுந்து கிடக்கும் பிணம் போல்) ஒன்றும் அறியாதிருப்பார்கள். ஒருகால் ஸர்ப்பங்களால் கடியுண்டு கண் தெரியாமல் பாழுங்கிணற்றில் விழுந்து இருட்டில் படுத்திருப்பார்கள். ஒரு கால் (சிறிய தேன்கூடுகளை) அற்பரஸங்களை விரும்பித் தேடிக்கொண்டு சென்று ஆங்குள்ள ஈக்களால் அடியுண்டு அவமதிக்கப்பட்டு வருந்துவார்கள்; கடைசியில் பெரு வருத்தத்துடன் அந்தத் தேன் துளிகளைப் பெறினும் அவரை வஞ்சித்து மற்றவர் அதைப் பறித்துக் கொண்டு போவார்கள். அவரையும் வஞ்சித்து வேறு சிலர் பறிப்பார்கள். ஒருகால் குளிர் வெய்யில் மழை காற்று முதலியவற்றிற்குப் பரிஹாரம் செய்ய முடியாமல் அவற்றால் வருந்துவார்கள். ஒரு கால் ஒருவர்க்கொருவர் அற்பமான வஸ்துவை விற்பதும் வாங்குவதுமாய் பேரம் (கொடுக்கல் வாங்கல் பற்றிய ஒப்பந்தம்) செய்யத் தொடங்கிப் பணத்திலாசையால் த்வேஷத்தை அடைவார்கள். ஒருகால் கையிலிருந்த பணமெல்லாம் செலவழியப் பெற்று அவ்வடவியில் (அக்காட்டில்) படுக்கை ஆஸனம் இருப்பிடம் வாஹனம் முதலிய கருவிகள் எவையுமின்றிப் பிறரிடத்தில் வேண்டியும் அவை நேரப்பெறாமல் பிறருடைய சொத்துக்களில் விருப்பங்கொண்டு அவமானத்தை அடைவார்கள். ஒருவர்க்கொருவர் பணத்தை ஏமாற்றுதலால் ஒருவர்மேல் ஒருவர்க்கு த்வேஷம் (வெறுப்பு) தொடர்ந்து வளர்ந்து விவாதப்பட்டுக் கடக்கமுடியாத இவ்வரண்ய மார்க்கத்தில் மிகப்பெரிய வருத்தங்களாலும் பண அழிவுகளாலும் த்வேஷாதிகளாலும் வருந்திச் செத்தாற்போல் இருப்பார்கள். தந்தை தாய் பிள்ளை பெண்டிர் முதலியவர் மரணம் அடைகையில் அவர்களை ஆங்காங்குத் துறந்து மேல் பிறக்கும் பிள்ளை பெண் முதலியவர்களை எடுத்துக்கொண்டு இன்னும் இம்மார்க்கத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்களேயன்றி, இவ்வர்த்தகர்களில் ஒருவராவது இந்த அரண்ய (காடு) மார்க்கத்தைக் கடக்கும் உபாயமாகிய யோகத்தைக் கைப்பற்றவில்லை. சூரர்களும் திக்கஜங்களை வெல்லும் திறமை உடையவர்களுமான மன்னவர்கள் அனைவரும் பூமியை “என்னுடையது: என்னுடையது” என்று அபிமானித்து அதற்காக ஒருவர் மேல் ஒருவர் மாறாத வைரங்கொண்டு (விரோதம் கொண்டு) யுத்தத்தில் கேவலம் ப்ராணன்களை இழந்தார்களேயன்றித் தண்டனாதிகாரத்தைத் துறந்து ப்ராணிகளிடத்தில் வைரத்தை வேரோடறுத்துக் கொண்ட யோகிகள் பெறும்படியான விஷ்ணுவின் ஸ்தானத்தை அடையவில்லை. ஒருகால் அழகிய கொடிகளின் கிளைகளைப் பற்றி அங்குள்ள பக்ஷிகளின் இனிய குரலைக் கேட்டு அதில் விருப்புற்று அங்குக் கால் தாழ்ந்திருப்பார்கள். ஒருகால் ஓரிடத்தில் ஸிம்ஹக் கூட்டத்தினின்று பயந்து கொக்கு, பருந்து, கழுகு முதலியவற்றோடு ஸ்நேஹம் செய்வார்கள்; கடைசியில் அவற்றால் வஞ்சிக்கப்பட்டுத் தாமும் அவற்றை வஞ்சித்து ஹம்ஸக்கூட்டத்தில் புகுந்து அவற்றின் ஸ்வபாவம் தமக்கு ருசிக்காமல் வானரங்களைப் பற்றுவார்கள். அந்த வானர ஜாதியோடு விளையாடி இந்த்ரியங்களின் திருப்தியை அடைந்து அவற்றைத் தாமும் தம்மை அவையுமாகப் பார்த்துக்கொண்டு மரண காலம் ஸமீபித்து வருவதையும் அறியாதிருப்பார்கள். கேவலம் ஐஹிக (இவ்வுலக) ஸுகங்களுக்கிடமான க்ருஹஸ்தாச்ரமத்தில் ஸுகங்களை அனுபவிக்க விரும்பி ஸ்த்ரீகளைப் புணரவேண்டுமென்னும் ஆசையால் வருந்திப் பிள்ளைகளிடத்திலும் பெண்டிர்களிடத்திலும் வாத்ஸல்யமுடையவராகி அங்கனம் தனக்கு நேரிட்ட ஸம்ஸார பந்தத்தில் அகப்பட்டு அதைப் பரிஹரிக்க முடியாதிருப்பார்கள். ஒருகால் மனவூக்கமற்றுப் பர்வத குஹையில் விழுந்து அங்கு யானையைக் கண்டு பயந்து கொடியைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள். பிறகு பெரிய வருத்தத்துடன் அந்த ஆபத்தினின்று மீண்டு மீளவும் தன் இனத்தாருடன் கலந்து முன்போலவே இந்த ஸம்ஸாரமாகிற அரண்யத்தில் பகவானுடைய மாயையால் நுழைக்கப்பட்டுக் கரையேறாதிருக்கிறார்கள். 

ரஹோகணனே! ஆகையால் நீயும் ப்ராணிகளைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் துறத்து ஸமஸ்த பூதங்களிடத்திலும் நட்புடையவனாகிச் சப்தாதி விஷயங்களில் மனத்தைச் செலுத்தாமல் வர்ணாச்ரம தர்மங்களால் பகவானை ஆராதித்து அதனால் வளர்ந்த கூரிய அறிவாகிற கத்தியைக்கொண்டு ப்ரக்ருதி ஸம்பந்தமாகிற வ்ருக்ஷத்தை (மரத்தை) வேருடன் அறுத்து இந்த ஸம்ஸார மார்க்கத்தின் அக்கரையாகிய விஷ்ணுவின் ஸ்தானத்தை அடைவாயாக.

ரஹோகண மன்னவன் சொல்லுகிறான்:- பிறவிகளுக்குள் மானிடப்பிறவியே சிறப்புடையது. பரலோகத்தில் தேவாதிகளாகப் பிறந்தும் என்ன ப்ரயோஜனம்? அந்தத் தேவாதி ஜன்மங்களில் பகவானுடைய புகழால் பரிசுத்தமான மனமுடைய உம்மைப்போன்ற பெரியோர்களின் ஸஹவாஸம் பெரும்பாலும் நேராதல்லவா? உம்மைப்போன்ற பெரியோர்களின் பாதாரவிந்தங்களை இடைவீடின்றிப் பணிந்து அவற்றின் தூள்களால் (தூசிகளால்) பாபங்களெல்லாம் தொலையப்பெற்ற மனிதனுக்குப் பகவானிடத்தில் நிர்மலமான பக்தி உண்டாவது ஓர் ஆச்சர்யமன்று. ஒரு முஹூர்த்தகாலம் உம்மோடு ஸஹவாஸம் செய்ததால் குயுக்திகளால் (கெட்ட வழிகளால்) வேரூன்றியிருந்த என்னுடைய அவிவேகமெல்லாம் (பகுத்தறிவு இல்லாததெல்லாம்) பறந்து போயிற்று. வயது சென்றவர்களும் சிசுக்களும் யௌவனப் (இளமை)  பருவம் உடையவர்களும் சிறுவர்களுமாகித் தமது பெருமையை மறைத்துக்கொண்டு திரியும் பெரியோர்கள் அனைவர்க்கும் நமஸ்காரம். மஹானுபாவர்களாயினும் தமது மஹிமையை வெளிப்படுத்தாமல் அனைவரும் அவமதிக்கும்படியான வேஷத்துடன் பூமியில் ஸஞ்சரிக்கின்ற ப்ராஹ்மணர்களிடத்தினின்று என்னைப்போல் அபராதப்படும் தன்மையான ராஜாக்களுக்கு க்ஷேமம் உண்டாகுக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- உத்தரையின் புதல்வனே! அளவிட முடியாத மஹத்தான வைபவமுடையவரும் ப்ரஹ்ம ரிஷியின் புதல்வருமாகிய அந்த ப்ராஹ்மணர் ஸிந்து ஸௌவீர தேசங்களுக்கு ப்ரபுவாகிய ரஹோகண மன்னவன் தன்னை அவமதிக்கினும் பரம காருணிகராகையால் அதைப் பொருள் செய்யாமல் அவனுடைய அவிவேகத்தைப் (பகுத்தறிவு இல்லாமையைப்) பொறுக்க முடியாமல் இங்கனம் ஆத்ம தத்வத்தை உபதேசித்து அம்மன்னவனால் ஸ்நேஹத்துடன் பாதவந்தனம் செய்யப்பெற்று (திருவடி வணங்கப் பெற்று) இந்திரியங்களும் பசி தாஹம் முதலிய ஊர்மிகளும் மனமும் வாஸனையும் சாந்தமாயிருக்கப் பெற்றுப் பூர்ண ஸமுத்ரம்போன்று இப்பூமியெல்லாம் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தார். ஸௌவீர தேசாதிபதியாகிய ரஹோகணனும் ஸத்புருஷராகிய அந்த ப்ரஹ்மரிஷியின் குமாரரிடத்தினின்று பரமாத்மாவின் உண்மையை நன்றாக அறிந்து தான் நெடுநாளாய் அஜ்ஞானத்தினால் தேஹத்தையே ஆத்மாவாக நினைத்திருந்த எண்ணத்தை அப்பொழுதே துறந்தான். 

மன்னவனே! பாகவதர்களைப் பணிந்த பெரியோர்களின் ப்ரபாவம் இத்தகையதல்லவா?

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- பாகவதர்களிற் சிறந்தவரே! பலபேரிடத்தில் பலபலவும் கேட்டுணர்ந்த மஹா ஜ்ஞானியாகிய நீர் ஜீவலோகத்தினுடைய ஸம்ஸார மார்க்கத்தை மறைத்து மொழிந்தீர். அதன் பொருள் விவேகிகளின் புத்தியால் அறியக்கூடியதாய் இருக்கின்றதேயன்றி அவிவேகிகளான (பகுத்தறிவு இல்லாதவர்களான) என்னைப் போன்றவர்க்கு எளிதில் அறியக்கூடியதாயில்லை. ஆகையால் தேவரீர் மறைத்து மொழிந்த வாக்யங்களின் பொருளை ஸ்பஷ்டமாய் எடுத்து மொழிவீராக. 

பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை