செவ்வாய், 12 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 32 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 20

என்னோட ஆசையை எல்லாம் புலம்ப ஆரம்பித்தேன். நான் ஒன்றும் ஸ்லோகம் எல்லாம் எழுதவே வரவில்லை. எனக்குள்ள துன்பத்தை எல்லாம் உங்களிடம் புலம்பினேன். வேறு வழி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. அந்தப் புலம்பலும் உம் அனுக்ரஹத்தால் பிரபந்தம் ஆகிவிட்டது. உமக்கு வேணுமானால் எதையும் பிரபந்தமாக்குவீர் என்பதற்கு அடியேனே சாட்சி இப்பொழுது. குழந்தை உளறியது என்றாலும் எப்படித் தாய் அன்போட ஏற்றுக்கொள்கிறாளோ, அதைப் போல தேவரீர் இந்த விக்ஞாபனத்தை கேட்டுக் கொள்ளவேண்டும். தள்ளிவிட வேண்டாம். ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

विज्न्यपनं यदिदमद्द्य तु मामकीनम् अङ्गिकुरुष्व यतिराज! दयाम्बुराशे! ।
अग्न्योSयमात्मगुणलेशविवर्जितश्च तमादन्नयशरणो भवतीति मत्वा ॥ (20)

விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம்     
அங்கீகுருஷ்வ யதிராஜ! தயாம்புராஸே |
அஜ்ஞோSயமாத்மகுணலேஸவிவர்ஜிதஸ்ச     
தஸ்மாதநந்ய ஶரணோ பவதீதி மத்வா || (20)

அடியேனுக்கு வேறு புகலிடம் கிடையாது என்று தேவரீருக்குத் தெரிய வேண்டும். வேறு எங்கு நான் போவேன். 

விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ, புலம்பியது எது உண்டோ அது விண்ணப்பம் ஆகிவிட்டது. மனமும், சொல்லும் ஒன்றிணைந்து தெரிவித்து விட்டது. 

அத்ய மாமகீநமிதம் அங்கீகுருஷ்வ – இப்போது அடியேன் உடையதான, நீசனுடைய சொல் என்று பாரும், 

இளையபுன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே என்று 
வள எழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை 
துவளத் தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல்
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே ! திருமாலை 45. 

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளியது போல, தாய் தன் குழந்தையின் மழலை சொல்லை ஏற்றுக் கொள்வதுபோல அடியேனுடைய இந்த விண்ணப்பத்தை, பெற்ற தாய் நீர் அப்படித்தானே ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஒருவராவது நாம் எடுத்த முயற்சியைப் புரிந்துகொண்டு நம்மிடத்தில் வந்துவிட்டாரே என்று ராமானுஜர் சந்தோஷப் படவேண்டுமாம். ஆகவே உம் முயற்சி பலித்தது என்று ஏற்றுக் கொள்ளும். 

யத் தயா அம்புராஸே யதிராஜ – பிறர்துன்பம் கண்டு பொறுக்கமாட்டாத கடல் போன்ற தயை, தோஷமொன்றில்லாத தயையே உருவான ராமானுஜரே,

அஜ்ஞ அயம் – இவனுக்கு ஒன்றுமே தெரியாது. அஜ்ஞானி. கர்மயோகம், பக்தியோகம், ஞனயோகம் என்று எதுவும் தெரியாதவன். நம்மைத் தவிர இவனுக்கு வேறு புகலிடமே கிடையாது. என்பதை தேவரீர் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஞானமும் இல்லாததால் உம்மை விட்டுப் போகமாட்டேன். ஞானம் இல்லாததே அடியேனுக்கு நல்லதாகப் போய்விட்டது. 

ஆத்மகுணலேஸவிவர்ஜிதஸ் ச – இவருக்கு என்று தனித்து எந்த ஆத்ம குணமும் இல்லாதவர். மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன், ஒரு துளிக் கூட ஶாந்தி, க்ஷமம், தமம் என்னிடம் கிடையாது. நம் க்ருபையால்தான் இவரை தூக்கியாகணுமே தவிர இவருக்கு என எந்த ஆத்ம குணமும் இல்லை. நான் தான் ரக்ஷித்தாகவேண்டும் என்று புரிந்துகொள்ளும். ஆத்ம குணம் இல்லாமையை இங்கு ஒரு தகுதியாகச் சொல்லிக் கொள்கிறார். ஏனெனில் அதுவே ராமானுஜரின் க்ருபைக்கு இவரை பாத்திரமாக்கியது. ஆக இருந்தாலும் இல்லை என்று சொல்லிவிடவேண்டும். ஒன்றுமே வழியில்லை. தேவரீரே வழி என்று அடிபணிந்துவிடவேண்டும். 

தஸ்மாத் அநந்ய ஸரண: பவதி - ஆகையால் நம்மைத்தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான், 

இதி மத்வா – இவனுக்கு நம்மைத்தவிர வேறு புகலிடம் இல்லை என்று தேவரீர் புரிந்து கொள்ளவேண்டும். அடியேனை கொஞ்சம் திரும்பிப் பார்க்கவேண்டும். உமது பகவத் அனுபவத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளும். விட்டுவிடாதீரும்.

அடியேன் பண்ணியிருக்கிற விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த ஸ்தோத்திரமான யதிராஜ விம்ஶதியை ஏற்றுக் கொள்ளவேண்டும். அநிஷ்டத்தைத் தொலைத்து, இஷ்டத்தைக் கொடுக்கவேண்டும், உமது தாஸ தாஸ தாஸருக்கு தாஸனாக கைங்கர்யம் பண்ணுவதை ஏற்படுத்த வேண்டும். விஷயாந்தரத்தில் இருக்கும் ப்ராவண்யத்தைத் தொலைக்க வேண்டும். பகவத் விஷயத்திலும் உம் விஷயத்திலும் ஆசையை ஏற்படுத்த வேண்டும். நீர் விருப்பப் பட்டபடி கைங்கர்யத்தைக் கொடுக்க வேண்டும். உமக்கிருக்கிற அத்தாட்சியின் படி அடியேனுக்கும் மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இது தான் அடியேனுடைய விஜ்ஞாபனம். 

விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம்     
அங்கீகுருஷ்வ யதிராஜ! தயாம்புராஸே |
அஜ்ஞோSயமாத்மகுணலேஸவிவர்ஜிதஸ்ச     
தஸ்மாதநந்ய ஶரணோ பவதீதி மத்வா || (20)

யதிராஜ விம்ஶதி முற்றுபெற்றது. சுருக்கமாகப் பார்த்தோம். இதற்கு மூன்று வியாக்யானங்கள் உள்ளது. கண்டிப்பாக ஒவ்வொருவரும் இந்த 20 ஸ்லோகங்களை மனப்பாடமாக ஆக்கிக் கொண்டு, அர்த்தத்தையும் புரிந்து கொண்டு அன்றாடம் செப்பவேண்டும் என்று பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ர முனீந்த்ராய மஹாத்மநே।
ஸ்ரீரங்க வாஸநே பூயாத் நித்யஸ்ரீர் நித்ய மங்களம்॥. 

ஸ்ரீ யதிராஜரின் ஆசியோடு தொடங்கிய இந்த கைங்கர்யம் நிறைவுற்றது. 

துலா மூலவதீர்ணாய தோஷிதாகில ஸூரயே ।
சௌம்யஜாமாத்ரு முநயே ஶேஷாம்ஶாயாஸ்து மங்களம்॥

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக