செவ்வாய், 12 மே, 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி – 31 – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் – 19

இதே விஷயத்தை ஆர்த்திப்ரபந்தத்தில் கடைசி பாசுரத்தில் மணவாள மாமுனிகள் விண்ணப்பிக்கிறார். ராமானுஜர் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டார். “கமலாரமணே அர்த்திதா” என்று உள்ளது. அந்த ஒரு நாள்தான் ஸ்ரீரங்க நாச்சியார் பெருமாளோடு சேர்த்தி கண்டருளுகிறார். ஸ்ரீ ரங்கநாச்சியார் அமர்ந்த திருக்கோலம். நம்பெருமாள் நின்ற திருக்கோலம். உட்கார்ந்திருந்தால் வேலை சொல்கிறாள் என்று அர்த்தம், நின்று கொண்டிருக்கிறார் என்றால் வேலை பார்க்கப் போகிறார் என்று பொருள் என்று வேடிக்கையாகச் சொல்லுவர் பெரியோர். முதலில் பிராட்டி திருவடிகளில் சரணாகதி பண்ணி, உமது கணவரை உபாயமாகப் பற்றப் போகிறேன். அதில் உறுதியை எனக்குக் கொடுக்கவேண்டும். பகவானே உபாயம் என்பதில் அடியேனுக்கு நிஷ்டையைக் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறார். பட்டர் ஸாதிக்கிறார், “யாருடைய புருவ நெறிப்புக்கு பகவான் ஓடி ஓடி எனக்கு மோக்ஷம் கொடுப்பாரோ அந்தப் பெரிய பிராட்டியாரோட திருவடியைப் பற்றுகிறேன்” என்றார். அதைத்தான் ஸ்ரீ ராமானுஜர் செய்துள்ளார். சரணாகதி செய்தவுடன் பகவான் உமக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். “நமக்கு மோக்ஷம் வேண்டும்” என்றார். போறுமோ? என்றார் பகவான். “நம் ஸம்பந்தி, ஸம்பந்தி, ஸம்பந்தி அடைவில் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்க பகவான் கொடுத்தோம் என்றார். அதன் பிறகும் பிரார்த்திக்கிறார், “ மனோ வாக் காயை: ..... க்ஷமஸ்வ”

இந்தஅரங்கத்திலினிதிரு நீ யென்றரங்கர்*
ஏந்தை யெதிராசர்க் கீந்தவரம்* சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே! நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாய்முறை தான். ஆர்த்திப்பிரபந்தம் 60

பிரார்த்தனை செய்த பிறகு இனி நான் என்ன செய்யவேண்டும் என்று ராமானுஜர் பெருமாளிடம் கேட்கிறார். இந்த அரங்கத்தில் இரும், துவயம் அர்த்தானுஸந்தானம் செய்துகொண்டிரும் என்று பெருமாள் சொல்லிவிட்டார். உமது பக்தர்களுக்கு உபதேசம் பண்ணிக் கொண்டிரும் என்றார். அந்த சொத்தில் எனக்கும் பங்கிருக்கிறது என்று நல்ல பிள்ளை தெரிந்துகொண்டால் போதும் என்று மணவாள மாமுனி ஸாதிக்கிறார்.


நாம் செய்ய வேண்டியது எல்லாம் வாரிசு சான்றிதழ் வாங்கவேண்டும். அப்பாவுடைய சொத்து பிள்ளைக்கு வரவேண்டும் அல்லவா? வாரிசு சான்றிதழ் வாங்குவதற்குத்தான் ஆசார்யரை அணுகி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்கிறோம். அடியேன் ராமானுஜர் ஸம்பந்தி, வாரிசு நான்தான் என்று பெருமாள் முன் போய் நின்றால், ஒரு நிமிஷம் பார்ப்பார். ‘அடியேன் ராமானுஜ தாஸன்’ என்று சொல்கிறானா? திருமந்திரம் துவயம், சரம ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறானா? ஆத்ம குணம் வந்துள்ளதா என்று பார்த்துவிட்டு போ உள்ளே என்று அருள்வார். 

19 & 20 வது ஸ்லோகங்களில் தன்னுடைய தாழ்ச்சியைச் சொல்லி கடைசியாக பிரார்த்தித்து தலைக் கட்டுகிறார்.

मन्यतीन्द्र! तव दिव्यपदाब्जसेवां श्रीशैलनाथकरुणापरिणामदत्ताम् ।
तामन्वहं मम विवर्धय नाथ! तस्याः कामं विरुद्धमखिलञ्च निवर्तय त्वम् ॥ (19)

ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் 
ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தயநாத!தஸ்யா:       
காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (19)

தேவரீரிடத்தில் எந்த அநிஷ்டத்தைப் போக்கணும், இஷ்டத்தைக் கொடுக்கணும் என்று கேட்டுக் கொண்டு வந்திருக்கின்றேன். கடைசியாக இப்பொழுது முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்துவிடுகிறேன். பகவத் ப்ரீதி, பகவத் ப்ரேமம் எல்லாம் அடியேனுக்கு இப்ப முக்யம் இல்லை. பாகவத ப்ரீதி, பாகவதப் ப்ரேமம், ஆசார்ய ப்ரேமம், ஆசார்ய கைங்கர்யமே முக்யம். அதுக்குத் தடங்கலா என்ன என்ன இருக்கணுமோ அவ்வளவும் என்னிடம் இருக்கிறது. அவைகளை ஒழித்துவிடும். 

ஸ்ரீமந் யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய சிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற என்றும் அழியாத கைங்கர்ய செல்வமுடைய யதிராஜரே, இந்த்ரியங்களை எல்லாம் ஜயித்து இருக்கிறவரே, (அதனால் என்னுடைய இந்த்ரியங்கள் எல்லாம் வேறு எங்கும் போகாமல் உம்மிடமே நிலைக்கப்பண்ணும்) உடையவருக்குச் கைங்கர்யம் செய்யப்போகும் பொழுது இந்திரியங்கள் எல்லாம் தன் ஆனந்தத்துக்காக என்று நினைக்கும். என் ஆனந்தத்துக்கு என்று இருக்கக் கூடாது. உம் ஆனந்தத்துக்கு என்று இருக்கவேண்டும்.

“மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்” கைங்கர்யம் என்ற உயர்ந்த நிலைக்கு வந்தவன் கூட என் ஆனந்தத்துக்கு என்று இருக்கக் கூடாது. ஆசார்யருடைய ஆனந்தத்துக்காக கைங்கர்யம் செய்கிறேன் என்ற உணர்வு வேண்டும்.

தவ திவ்யபதாப்ஜஸேவாம் - தேவரீருடைய திவ்யமான திருவடித் தாமரைகளில் பண்ணும் கைங்கர்யம் செய்வது.

ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் - அடியேனுக்கு இந்த மாஹாத்ம்யம் எல்லாம் எங்கே இருந்து வந்தது. இந்த ஸ்தோத்திரம் பாடுவதும் சரி, கைங்கர்யத்தில் ருசி வந்ததும் சரி மற்றது தொலையணும் தேவரீரின் திருவடியில் தஞ்சமென்றிருக்கவேணும் என்றதெல்லாம், அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும் திருவாய்மொழிப்பிள்ளையின் நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே, மிக்க கருணையினாலே கிடைத்தது. அதை வளர்க்கவேண்டியது தேவரீரே. உபகாரக ஆசார்யர் ஒருத்தர் திருவாய்மொழிப் பிள்ளை. இவர் கொண்டுபோய் ராமானுஜரின் திருவடிகளில் சேர்த்துவிடுகிறார். நம் உத்தாரக ஆசார்யர் ஸ்ரீ ராமானுஜர் நன்றாக வளர்த்து விடுபவராகும்.

தாம் த்வம் மே – மிகச்சிறந்த, – மொழியைக்கடக்கும் பெரும் புகழுடைய தேவரீருடைய திவ்யமான திருவடித்தாமரைகளுக்குக் கைங்கர்யம் பண்ணக் கூடிய அந்த ஆசையை அடியேனுக்கு, (என்னிடம்)

அந்வஹம் விவர்த்தய – நாள் தோறும் விஶேஷமாக வளர்த்து அருளவேணும், (அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி அதை விருத்தி செய்விக்க வேணுமென்றபடி)

நாத தஸ்யா: விருத்தம் அகிலம் காமம் நிவர்த்தய – ஸ்வாமியான யதிராஜரே அத்தகைய கைங்கர்யத்துக்கு தடையாகிய எல்லாவற்றையும் அடியோடு போக்கியருளவேணும். திருவாதிரை கைங்கர்யத்துக்குச் செல்ல வேண்டும் எனும்பொழுது வேறு ஒருவர் வந்து முஹூர்த்த நாள் அங்கு வாரும் என்று கூப்பிடுகிறாரே. இது ஒரு ஆசையைத் தூண்டும் அல்லவா? தடை தானே. இதைப் போல என்னென்ன விருப்பம் தடையாகத் தோன்றுமோ அவை எல்லாவற்றையும் அடியோடு நீக்கியருள்வீராக. மற்ற விஷயத்தில் இருக்கிற ப்ராவண்யத்தை தொலையும். உம்மிடம் கைங்கர்யத்தையே கொடும். என்னிடம் இருக்கிற யோக்யதையைப் பாராமல் உம்மைப் பார்த்துக் கொடும்.

“இராமானுஜன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ” என்றும், “நம் தலைமிசையே பொங்கிய கீர்த்தி இராமனுசனடிப் பூமன்னவே” என்றும், இராமானுசருடைய திருவடியைத் தலையால் தரிக்கவேண்டும், இராமானுசரின் சரணாரவிந்தத்தை மன்னி வாழவேண்டும் இது ஒன்று தான் தலை சிறந்த புருஷார்த்தம் என்பதை திருவரங்கத்தமுதனார் இராமானுஜ நூற்றந்தாதியில் ஸாதித்துள்ளார். அதுபோல பெரிய ஜீயரும் பிரார்த்தித்து நிறைவேற்றுகிறார். 

ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் 
ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தயநாத!தஸ்யா:       
காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (19)

ஆசார்ய கைங்கர்யம், பாகவத கைங்கர்யம், பகவத் கைங்கர்யத்தில் இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து என்ன ஆசை இருந்தாலும் அதை தேவரீரே தொலைக்கவேண்டும். யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்துமுடிக்கிறார். 19 வது ஸ்லோகம் முற்றுப் பெற்றது. 

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 

நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக