விசுவாமித்திரருடைய உக்கிர தவத்தைக் கண்டு பரமசிவன் மகிழ்ந்து தரிசனம் தந்தான்.
“அரசனே! உனக்கு என்ன வேண்டும்? எதை விரும்பித் தவம் செய்தாய்?” என்று மகாதேவன் கேட்டான்.
விசுவாமித்திரர் கைகூப்பி வணங்கி, “சுவாமி, என் தபசு உமாபதிக்குத் திருப்தி தந்திருந்தால் தனுர் வேதத்தை எனக்குப் பூரணமாக அருள வேண்டும். சகல அஸ்திரங்களும் எனக்கு வசமாக்கித் தந்தருள வேண்டும்” என்றார்.
“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள் அனைவரும் அடைந்த எல்லா அஸ்திரங்களையும் விசுவாமித்திரருக்கு மகாதேவன் தந்தான்.
பரமேசுவரன் தந்த வரத்தைப் பெற்றுக்கொண்டு விசுவாமித்திரர் திரும்பினார். தவத்தால் தாம் அடைந்த சக்தியைக் குறித்துப் பருவகால சமுத்திரத்தைப்போல் அகங்காரம் பொங்கி, ‘வசிஷ்டரைத் தீர்த்து விட்டேன்’ என்று தமக்குள் எண்ணிக்கொண்டே திரும்பினார்.
நேரே வசிஷ்டர் ஆசிரமத்துக்குச் சென்றார். விசுவாமித்திரர் கோபத்தோடு யமனைப் போல் வருவதைக் கண்டு வசிஷ்டரின் ஆசிரமத்திலிருந்த சீடர்களும் பிராணிகளும் திகில் கொண்டு மூலைக்கு மூலை ஓடினார்கள்.
விசுவாமித்திரர் விட்ட ஆக்னேயாஸ்திரத்தின் வேகத்தால் ஆசிரமம் எரிந்து சாம்பலாயிற்று. “பயப்படவேண்டாம்” என்று வசிஷ்டர் எவ்வளவு சொன்னாலும் சிதறி ஓடுகிறவர்கள் பயம் தாங்காமல் ஓடிக் கொண்டேயிருந்தார்கள்.
வசிஷ்டர் இதைக் கண்டு வருத்தப்பட்டு ‘இந்தக் கௌசிகருடைய கர்வத்தை அடக்க வேண்டும்’ என்று காலாக்கினி போல் ஜொலிக்கும் தம் பிரம்ம தண்டத்தைக் கையில் எடுத்து, “மூடனே!” என்றார்.
விசுவாமித்திரர் ஆக்ரோஷங் கொண்டு “ஏய் வசிஷ்டரே! நில்லும், நில்லும்!” என்று அதட்டி, தாம் புதிதாகக் கற்ற ஆக்னேயாஸ்திரத்தை அவர்மேல் விட்டார்.
வசிஷ்ட மகா முனிவர், “இதோ நிற்கிறேன், நான் ஓடவில்லை” என்று கூறிப் பிரம்ம தண்டத்தைத் தமக்கு முன்னே நிறுத்தினார். விசுவாமித்திரருடைய அஸ்திரமெல்லாம் தண்ணீரைக் கண்ட நெருப்பைப் போல் அணைந்து நின்றன.
பிறகு விசுவாமித்திரர் தாம் அடைந்த அஸ்திரங்கள் அவ்வளவையும் பிரயோகித்தார். அவை அனைத்தையும் வசிஷ்டருடைய பிரம்ம தண்டம் விழுங்கிற்று முனிவர் சுகமாக நின்றார். இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்டு விசுவாமித்திரர் பிரம்மாஸ்திரத்தை விடுத்தார்.
'பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்து விட்டாரே, என்ன கதியாகுமோ' என்று ரிஷிகளும் தேவர்களும் கவலையுற்றார்கள். முனிவருடைய பிரம்ம தண்டம் அரசனுடைய பிரம்மாஸ்திரத்தையும் விழுங்கி விட்டது. அஸ்திரத்தை உட்கொண்ட வசிஷ்டரின் பிரம்ம தண்டத்தினின்று நெருப்புப்பொறிகள் சுற்றிலும் பறந்தன. தண்டத்தைப் பிடித்து நின்ற வசிஷ்டருடைய உடலும் நெருப்பாக ஜொலித்தது.
விசுவாமித்திரர் பிரமித்துப் போனார். பெருமூச்செறிந்து “நான் தோற்றேன். க்ஷத்திரிய பலம் என்னத்துக்காகும்? இந்த ரிஷி ஒரு கோலை வைத்து நான் விடுத்த அஸ்திரங்களையெல்லாம் விழுங்கித் தீர்த்தார். பரமசிவன் என்னை ஏமாற்றிவிட்டான். இவரைப்போல் நானும் பிரம்ம ரிஷியாக வேண்டுமேயொழிய வேறு வழியில்லை” என்று யுத்தத்தை நிறுத்தி மறுபடியும் கடுந்தவம் செய்வதற்காகத் தென்புறம் சென்றார்.
பிரம்மாவை உபாசித்து அனேக ஆண்டுகள் தவம் செய்தார். முடிவில் நான்முகன் பிரஸன்னமானான். “குசிக புத்திரனே! உன் தவத்தால் ராஜரிஷிப் பதவியை அடைந்தாய்” என்று விசுவாமித்திரரை ஆசீர்வதித்து விட்டு மறைந்தான்.
தாம் செய்த கோரமான தவமெல்லாம் ராஜரிஷிப் பதவியைத்தானே தந்தது என்று துக்கமடைந்து, இன்னும் மிகக் கோரமான தவங்களைச் செய்யலானார்.