5. திரிசங்கு (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

5. திரிசங்கு (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

விசுவாமித்திரர் இவ்வாறு தவம் செய்துகொண்டிருந்த காலத்தில் சூரிய குல அரசன் திரிசங்கு என்பவன் பெரும் புகழுடன் அனேக ஆண்டுகள் அரசு புரிந்து தேகத்துடன் சுவர்க்கம் போக வேண்டும் என்று ஆசை கொண்டான். அதற்காக வசிஷ்டரிடம் சென்றான். வசிஷ்டர் அவனுடைய குல குரு.

அவர், “உம்மால் இது இயலாது. வேண்டாம். இந்த யோசனையை விட்டுவிடுவீராக" என்றார்.


திரிசங்குவுக்கு இது பிடிக்கவில்லை. வசிஷ்டருடைய புத்திரர்களிடம் போய், "உங்களுடைய தகப்பனார், என்னுடைய குருவானவர், முடியாது என்று சொல்லி விட்ட இந்த யாகத்தை நீங்கள் நடத்தித் தாருங்கள். என்னுடைய குரு என்னைக் கை விட்டு விட்டார். நீங்கள் என் வேள்வியை நடத்தித் தர வேண்டும்” என்றான்.


வசிஷ்ட குமாரர்களுக்கு மிகுந்த கோபம் வந்தது.


“ஏன் உமக்கு இந்தத் துர்ப்புத்தி பிடித்தது? உம்முடைய குருவும் எங்கள் பிதாவும் சொன்ன சொல்லுக்குக் கட்டுப்படாமல் எங்களிடம் வந்திருக்கிறீர். திரும்பிப் போவீராக” என்றார்கள். திரிசங்கு அதைக் கேட்காமல், மீண்டும் மீண்டும் வற்புறுத்திக்கொண்டே நின்றான்.


“மூர்க்க அரசனே! எங்கள் பிதாவை அவமதிக்க எங்களை நீர் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீர்; திரும்பிப் போவீராக!” என்றார்கள்.


“உங்களால் முடியாவிட்டால் வேறு யாரையாவது நான் தேடியடைந்து என் காரியத்தை முடித்தே தீருவேன்” என்று திரிசங்கு அவர்களுக்குக் கோபம் அதிகரிக்கும் முறையில் சொன்னான்.


அவர்கள் அதைப் பொறுக்காமல் அரசனை, “குருவை அவமதித்த அரசனே! நீ சண்டாளன்” என்று சபித்து விட்டு, அவனை அனுப்பிவிட்டார்கள்.


அன்றிரவு தூங்கினவன் காலையில், தன் அழகிய உருவமும் காந்தியும் நிறமும் இழந்து, அவலட்சண வடிவத்தோடு, பீதாம்பரத்துக்குப் பதில் அழுக்குத் துணியோடு எழுந்தான். அவன் அணிந்திருந்த ஆபரணங்கள் எல்லாம் மாறிவிட்டன. மந்திரிகளும் பரிவாரமும் நகரத்து ஜனங்களும் அரசனுடைய சாப உருவத்தைப் பார்த்துத் தூர விலகி ஓடினார்கள். எல்லாரும் அவனைக் கண்டு வெறுத்தார்கள். வெட்கமும் துக்கமும் மேலிட்டு அரசன் தன்னந்தனியாக ஊரை விட்டு விலகி ஊண் உறக்கமின்றி இரவும் பகலும் திரிந்தான்.


சண்டாள வேஷத்தோடு திரிசங்கு ராஜன் தபோதனராகிய விசுவாமித்திரர் ஆசிரமத்துக்குச் சென்றான். அவர் இவனைக் கண்டதும் கருணை மேலிட்டு, "நீ திரிசங்கு ராஜா அல்லவா? ஏன் இந்த வடிவம் அடைந்தாய்? யாருடைய சாபம்?" என்று கேட்டார்.


திரிசங்கு நடந்த விஷயம் எல்லாம் சொல்லி, “நான் என் ராஜ்யத்தைத் தருமம் தவறாமல் பரிபாலித்தேன். சத்திய வாழ்க்கை நடத்தினேன். நான் ஒரு பாபமும் செய்ததில்லை. எந்த விதத்திலும் யாருக்கும் தீங்கு செய்தது கிடையாது. என் குருவும் அவருடைய குமாரர்களும் என்னைக் கைவிட்டு, என்னை இந்த நிலை அடையச் சாபமிட்டு விட்டார்கள். நீர்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கூறி அவர் காலில் விழுந்தான்.


சாபத்தின் பயனாகச் சண்டாளனாகி விட்ட அரசனிடம் விசுவாமித்திரருக்கு அனுதாபம் பொங்கி வந்தது. விசுவாமித்திரருடைய கஷ்டம் இதுவே. அவருடைய இரக்கம், அன்பு, கோபம், முதலிய உணர்ச்சி வேகங்கள் அதிக தீவிரம்.


அவனைப் பார்த்து மதுரமான மொழியில் சொன்னார்: “அப்பனே! இக்ஷ்வாகு குலத்தரசனே! உனக்கு நல்வரவு. உன் தரும வாழ்க்கையைப் பற்றி நான் நன்றாக அறிந்தவன். உனக்கு நான் அபயம் தந்தேன். ரிஷிகள் உள்பட எல்லோரையும் அழைத்து, நீ நடத்த வேண்டும் என்று விரும்பிய வேள்வியை நான் நடத்தித் தருவேன். குருவின் கோபத்தால் நீ அடைந்த இந்தச் சண்டாள வடிவத்தோடேயே நீ சுவர்க்கம் சேருவாய். இது நிச்சயம்” என்று வாக்களித்து விட்டார்.


யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டு. “உன் குருவால் உனக்கு நேர்ந்த இந்தச் சண்டாள தேகத்தோடே நீ சுவர்க்கம் அடைவாய். எப்போது நீ கௌசிகனிடம் சரணமடைந்தாயோ அப்போதே நீ கோரிய எண்ணம் நிறைவேறினதாக வைத்துக்கொள்” என்று திரிசங்கு மகாராஜனுக்கு மறுபடியும் தைரியம் சொன்னார்.


சொல்லி விட்டுத் தம் சீடர்களுக்கு உத்தரவிட்டார் : “நீங்கள் போய் எல்லா ரிஷிகளையும் சிஷ்யர்களோடு வேள்விக்கு வரும்படி நான் அழைத்ததாகச் சொல்லுங்கள்” என்றார்.


சீடர்களும் அவ்விதமே எல்லாப் பெரியோர்களிடமும் சென்று விசுவாமித்திரருடைய அழைப்பைத் தெரிவித்தார்கள். அநேகமாக எல்லோரும் வருவதற்குச் சம்மதித்தார்கள். மகாதபஸ்வியான விசுவாமித்திரரின் அழைப்பை நிராகரிக்க அவர்களுக்குத் தைரியமில்லை.

ஆனால் வசிஷ்டரின் குமாரர்களை அழைத்தபோது அவர்கள், “நாங்கள் வரமாட்டோம் என்று ரிஷியிடம் சொல்லுங்கள். ரிஷி எவ்வளவு தபஸ்வியாயிருந்தாலும் க்ஷத்திரியரான ஒருவர் எப்படி இவ்விதமான மந்திரச் சடங்குகளை நடத்தக் கூடும்? அதிலும் சண்டாளனுக்காக எப்படி யாகம் நடத்தலாம்?” என்று ஆட்சேபித்து மறுத்து விட்டார்கள்.


இதைக் கேட்டதும் விசுவாமித்திர ரிஷி கடுங்கோபங்கொண்டு, “நான் செய்யும் காரியத்தில் ஒரு தவறுமில்லை. கர்வங்கொண்ட இந்த வசிஷ்ட குமாரர்கள் இறந்து சாம்பலாகக் கடவார்கள். அவர்கள் ஏழு ஜன்மம் வரையில் நாய் தின்னும் ஜாதியாகக் கடவார்கள்” என்று சபித்து விட்டு, நிச்சயித்தபடி யாகத்தைச் செய்ய ஆரம்பித்தார்.


கூடியிருந்த பெரியோர்களுக்கெல்லாம் காரியத்தை எடுத்துச் சொன்னார்.


“மகா தர்மவான், சத்யவான், இக்ஷ்வாகு குலத்தரசன், இவன் சரீரத்தோடு சுவர்க்கம் செல்லவேண்டுமென்று இந்த வேள்வியைச் செய்ய நான் நிச்சயித்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு காரியத்தை நிறைவேற்றித் தரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.


இவர் மகாபலம் பெற்ற தபஸ்வி, இவருடைய கோபத்தை நாம் தாங்க முடியாது என்று பயந்து எல்லாரும் வேள்வியில் கலந்து கொண்டார்கள். எல்லாச் சடங்குகளையும் கௌசிகருடைய தலைமையில் கிரமப்படி நடத்தினார்கள்.


வேள்வியின் முடிவில் தேவர்களை அழைத்து, “அவியைக் கொள்ளுங்கள்” என்று சொல்லவேண்டிய காலம் வந்தது. அப்படியே விசுவாமித்திரர் தேவர்களை மந்திரம் சொல்லி அழைத்தார். ஆனால் யாரும் வரவில்லை! வேள்வி வீணாயிற்று. அழைப்புக்குப் பயந்து வந்த ரிஷிகள் மனத்துக்குள் விசுவாமித்திரரைப் பரிகசித்தார்கள்.


விசுவாமித்திரருக்குக் கடுங்கோபம் வந்து, தன் கையில் வைத்திருந்த நெய்க் கரண்டியை உயரத் தூக்கித் திரிசங்கு ராஜனை நோக்கி, “என் தவத்தின் வலிமையைப் பார்ப்பாய், திரிசங்குவே! என் முயற்சியும் தவமும் சக்தி அவ்வளவும் உனக்குப் பயன்படுவதாக. என் தவத்துக்குச் சிறிதளவேனும் சக்தி உண்டாயின் நீ உன் சரீரத்துடன் இப்போதே சுவர்க்கம் ஏறுவாய்! தேவர்கள் அவி எடுத்துக் கொள்ளாதது பற்றி எனக்குக் கவலையில்லை. அரசனே, செல் மேலே!” என்றார்.


அப்போது ஓர் அற்புதம் நடந்தது. அங்கே கூடியிருந்த ரிஷிகள், பிராமணர்கள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கச் சண்டாளனான ராஜா அப்படியே ஆகாயத்தில் கிளம்பினான். விசுவாமித்திரருடைய தவ வலிமையை அப்போது உலகம் கண்டது.


திரிசங்கு சுவர்க்கத்தை அடைந்தான். உடனே இந்திரன் பார்த்தான். “சண்டாள சரீரத்துடன் எவன் இங்கே வருகிறான்? குருவினிடம் சாபம் பெற்ற மூடனே, போ!” என்று கீழே தள்ளிவிட்டான். சுவர்க்கத்திலிருந்து திரிசங்கு கதறிக்கொண்டு தலைகீழாக விழுந்தான். கீழே விழவிழ, “ஐயோ, என்னைக் காப்பாற்றுவீர்! காப்பாற்றுவீர்!” என்று திரிசங்கு கதறினான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த விசுவாமித்திரர் தம் தபோ பலத்தைத் தேவர்கள் இப்படியா இகழ்கிறார்கள் என்று கோபாவேசங் கொண்டு, "நில்! நில்!" என்று சொல்லி அத்தனை ரிஷிகளுக்குமிடையில் ஒரு புது சதுர்முகப் பிரம்மாவைப் போல் ஜொலித்தார். தலைகீழாக விழுந்த திரிசங்கு, விசுவாமித்திரர் 'நில்' என்றதும் நடு ஆகாயத்தில் ஒரு நட்சத்திரமாகப் பிரகாசித்துக் கொண்டு அப்படியே நின்றான். அந்தக் கணமே ஆகாயத்தில் திரிசங்கு நின்ற தென் திசையில் புதிய துருவம், புதிய சப்த ரிஷிகள் இன்னும் பல நட்சத்திரங்களையும் சிருஷ்டித்து நிறைத்துவிட்டார்.


“புது இந்திரனையும் உண்டாக்கி நிலை பெறச் செய்வேன். புதிய தேவர்களையும் உண்டாக்குவேன்” என்று சொல்லிச் சொன்னபடியே செய்ய ஆயத்தமானார்.


இது என்ன! விபரீதமாக முடியும் போலிருக்கிறதே என்று எண்ணித் தேவர்களும், ரிஷிகளும் விசுவாமித்திரரிடம் வந்தார்கள்.


விசுவாமித்திரரிடம் நயமாகப் பேசி, “இந்தக் காரியம் வேண்டாம், திரிசங்கு முதலிய எல்லா நட்சத்திரங்களும் தாங்கள் நிர்ணயித்தபடியே சாசுவதமாக இருக்கட்டும். தங்களுடைய புகழுக்குக் குறைவு வேண்டாம். கோபத்தைத் தணித்துக் கொண்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள்.


இப்படி விசுவாமித்திரரை ஒருவாறு சமாதானப்படுத்தி விட்டுத் திரும்பினார்கள். அது வரை விசுவாமித்திரர் செய்த தவம் இவ்வாறு செலவழிந்து போய்விட்டது.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை