சனி, 5 அக்டோபர், 2024

6. 'வசிஷ்டர் வாயால்' (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

கோபத்திலும் சாபத்திலும் தம் தபோபலம் செலவழிந்து போனதைக் கண்டு விசுவாமித்திரர் மறுபடியும் கோரமான தவஞ் செய்வதற்காக மேற்கே புஷ்கர தீர்த்தத்துக்குச் சென்றார்.

அவ்விடத்திலும், பல ஆண்டுகள் செய்த தவம் நன்றாக முற்றிப் பயன் தரும் சமயத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்து, மறுபடியும் கோபத்தால் சமநிலை இழந்து விட்டார். தம் புத்திரர்களையே சபித்துவிட்டார். அதன் பின், இனிக் கோபத்துக்கு இடம் தரக்கூடாது என்று சங்கற்பம் செய்து கொண்டு மறுபடியும் தவஞ் செய்ய ஆரம்பித்தார். பல்லாண்டுகளுக்குப் பின் பிரம்மனும் தேவர்களும் அவருக்குத் தரிசனம் தந்தார்கள்.


“கௌசிகரே! நீர் செய்த தவம் பலித்தது. நீர் இனி அரசர் கணக்கில் இல்லை. பூரண ரிஷியாகி விட்டீர்” என்று சொல்லிக் கௌரவித்துவிட்டு நான்முகன் திரும்பினான்.


அதனால் விசுவாமித்திரர் எப்படித் திருப்தியடைவார்? பரமசிவனிடம் பெற்றது அஸ்திரங்கள். இப்போது பெற்றது ரிஷி பதவி. அவர் விரும்பியதோ வசிஷ்டருக்குச் சமானமான சக்தி. ஆனபடியால் இன்னும் பல்லாண்டு கடுந்தவஞ் செய்ய நிச்சயித்தார்.


தேவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று புஷ்கர தீர்த்தத்துக்கு மேனகையை அனுப்பினார்கள். புஷ்கர தீர்த்தத்தில் அந்த அப்ஸர ஸ்திரீ ஸ்நானம் செய்ய வந்தாள். அவளுடைய அழகினால் விசுவாமித்திரர் வஞ்சிக்கப்பட்டார். தம் தவத்தை நிறுத்திவிட்டு, சுகமாகப் பத்து ஆண்டுகள் கழித்தார். பத்து ஆண்டுகளும் ஒரு பகல் ஒரு இரவு போல் கழிந்து விட்டன.


பிறகு விழித்துக் கொண்டார். “ஐயோ, இப்படியாயிற்றே?” என்று வருந்தித் துக்கப்பட்டார்.


மேனகைக்கு நடுக்கம். சாபத்துக்குத் தயாராகக் கை கூப்பி நின்றாள். முனிவர் தம் கோபத்தை அடக்கிக் கொண்டு, “இது என்னுடைய மடமை; உன் குற்றமல்ல!” என்று மதுரமாகப் பேசி அனுப்பிவிட்டு, இமாலயம் சென்றார். மறுபடி ஆயிரம் வருஷங்கள் இந்திரியங்களை அடக்கி உக்கிர தபசு செய்தார்.


தேவர்கள் சூழ நான்முகன் பிரசன்னமாகி, “விசுவாமித்திரரே! நீர் மேனகையைச் சபிக்காமல் பொறுத்து மறுபடியும் கடுந்தவம் ஆரம்பித்து முடித்தீர். நீர் மகரிஷி பதவியை அடைந்துவிட்டீர்” என்று ஆசீர்வதித்தான்.


விசுவாமித்திரர் மகிழ்ந்தார். ஆயினும் அவருடைய எண்ணம் அப்போதும் நிறைவேறவில்லை. மறுபடி அற்புதமானதும் அதுவரை யாருமே செய்யாததுமான தவம் ஆரம்பித்தார். ஆயிரம் வருஷம் செய்தார்.


தேவர்கள் மிகவும் கவலை கொண்டார்கள். மறுபடி ஓர் அப்ஸர ஸ்திரீயை அனுப்பி வைத்தார்கள்.


“ரம்பையே! உன்னுடைய தயவு வேண்டும். நீ எப்படியாவது விசுவாமித்திர ரிஷியை ஏமாற்றி அவருடைய தவத்தை நிறுத்த வேண்டும்” என்று இந்திரன் கேட்டுக்கொண்டான். அவள் பயப்பட்டாள். ஆயினும் இந்திரனுடைய ஏவலை ஒப்புக் கொண்டு போய் விசுவாமித்திரருடைய மனத்தைக் கலைத்தாள். கிளம்பிய காமத்தை அடக்கிக் கொண்டாராயினும் இப்படி மோசம் செய்ய வந்தாளே என்று கோபங் கொண்டு, “நீ கல்லாகப் போவாய்” என்று சாபமிட்டார். ரிஷிகளுடைய சாபம் அவர்கள் மனத்தில் எழும் கோபமே. எண்ணிய எண்ணம் தபோ பலத்தால் உடனே சாபமாகி நிறைவேறி விடுகிறது. தவம் நஷ்டமாகி விடுகிறது.


மறுபடி உறுதியான தீர்மானம் செய்து கொண்டு அன்னபானம், பேச்சு மூச்சு எல்லாம் அடக்கி விட்டு, அதுவரையில் ஒருவரும் செய்யாத மகாதபஸை ஆரம்பித்து முடித்தார்.


இதுவும் ஆயிரம் வருடங்கள் நடந்தது. தேவர்கள் பலவித இடையூறுகள் செய்து பார்த்தார்கள்; தவத்தைக் கலைக்க முடியவில்லை. விசுவாமித்திரருடைய உடல் ஒரு மரக்கட்டை போல் ஆயிற்று. இந்திரியச் செயல்கள் எல்லாம் நின்றுபோய் உயிர்மட்டும் இருந்தது.


தேவர்கள் அனைவரும் விசுவாமித்திரர் செய்த தவத்தின் உக்கிரத்தால் தவித்தார்கள். அந்த வேதனை தாங்க முடியாமல் அவர்கள் பிரம்மனிடம் சென்று கை கூப்பி, “நாதனே! எங்களால் கௌசிக மகரிஷியினுடைய தவத்தை இனிப் பொறுக்க முடியாது. இடையூறு செய்ய நாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஒன்றும் பயன்படவில்லை. அவருடைய தவத்தின் வெப்பத்தால் நாம் அழிந்து போவோம் போலிருக்கிறது. அவர் விரும்பிய வரத்தைத் தந்துவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.


அப்படியே தேவர்கள் சூழ நான்முகன் விசுவாமித்திரரிடம் சென்று தரிசனம் தந்து, “நீர் பிரம்ம ரிஷியாகி விட்டீர். உமக்கு எல்லா மங்களமும் ஆகுக” என்று ஆசீர்வதித்தான். விசுவாமித்திரர் மகிழ்ந்தார். ஆயினும், “இந்தப் பதவி வசிஷ்டர் வாயால் வந்தால் அல்லவோ நான் பூரண திருப்தியடையலாம்?” என்று மிக வினயமாகச் சொன்னார்.


வசிஷ்டரும் பழைய சண்டையை நினைத்துப் புன்னகை செய்து, “நீர் செய்த கடுந்தவங்களின் பயனை நீர் அடைந்தீர். நீர் பிரம்மரிஷி என்பதைப் பற்றி ஒரு சந்தேகமுமில்லை” என்றார். எல்லோரும் மகிழ்ந்தார்கள்.


இவ்வாறு அற்புத தவங்கள் அற்புத முறையில் விடா முயற்சியுடன் செய்து வெற்றி பெற்ற மாமுனிவர் தசரதன் சபைக்கு எதிர்பாராமல் திடீர் என்று வந்தார்.


இந்திரனுடைய சபைக்கு நான்முகன் வந்தால் தேவராஜன் எவ்வாறு வரவேற்பானோ அதுபோல் தசரதன் எழுந்து முனிவரை வரவேற்று, முனிவருடைய பாதங்களைத் தொழுது, “இன்றே என் வினைத் தொடர்பு தீர்ந்துவிட்டது. இது என் முன்னோர் செய்த தவப்பயனே. இரவு தீர்ந்து சூரியோதயமானது போல் தங்களுடைய திருமுகம் கண்டேன். இனி எனக்கென்ன குறை? அரசனாக ராஜ்யத்தை ஆண்டு தவத்தினால் பிரம்ம ரிஷியான தாங்கள் என்னைத் தேடி வந்தீர்களே! என்னால் என்ன காரியம் ஆக வேண்டும்? சொல்லி அருளவேண்டும்! அதைச் செய்யக் கடமைப் பட்டவன் நான். எதை விரும்புகிறீரோ அதைச் செய்வேன்” என்றான்.


தசரதன் சொன்ன சொல்லைக் கேட்டு விசுவாமித்திரர் மிக மகிழ்ந்தார். அவருடைய தேஜசு இன்னும் அதிகமாகப் பிரகாசித்தது.


“அரசனே! உம்முடைய பொன் மொழிகள் உமக்கே தகும். உம்மைத் தவிர வேறு யார் இப்படிப் பேசுவார்கள்? நீர் பிறந்த குலம் இக்ஷ்வாகு குலம். நீர் அடைந்திருக்கும் குருவோ வசிஷ்ட முனிவர். வேறு எவ்வாறு நீர் பேசுவீர்? நான் கேளாமலேயே நீர் வாக்குத் தந்து விட்டீர். அது என் இதயத்தைத் திருப்தி செய்துவிட்டது. நான் வந்த காரியத்தைப் பூர்த்தி செய்து தருவீராக” என்று கூறித் தாம் வந்த காரியத்தை உடனே சொல்ல ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக