7. “ராமனைத் தருவீர்” (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

“நான் நியமம் பூண்டு ஒரு வேள்வி நடத்துகிறேன். ஆரம்பித்து முடியும் தறுவாயில் மாரீசன், சுபாஹு என்ற இரண்டு அரக்கர்கள் அதைக்கெடுத்து வருகிறார்கள். அவர்கள் தேக பலமும் வீரியமும் யுத்தப் பயிற்சியும் பெற்ற அரக்கர்கள். சாபமிட்டு அவர்களை நானும் மற்ற ரிஷிகளும் அடக்க முடியும். ஆனால் நியமமும் தவமும் கெடாமல் நடந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. இந்தச் சங்கடத்தில் நானும் மற்ற ரிஷிகளும் கஷ்டப்படுகிறோம். மாமிசமும் ரத்தமும் யாக வேதிகை பேரில் எறிந்து வேள்வி நடைபெறாமல் செய்து வருகிறார்கள். உம்முடைய வீர குமாரர்களில் மூத்தவனான ராமனை என்னுடன் அனுப்பினீரானால் எங்களுடைய கஷ்டம் நீங்கும். என் பாதுகாப்பில் அவனுடைய வீரமும் திவ்விய பலமும் வளர்ந்து இந்த அரக்கர்களை எதிர்த்து வெற்றியோடு பெரும் புகழ் அடைவான். இது நிச்சயம். ராஜகுமாரனைச் சில நாட்களுக்கு என்னிடம் ஒப்புவிப்பீராக. நான் கேட்டதை மறுக்க வேண்டாம். நான் கேட்பதற்கு முன்பே நீர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீராக. குமாரனுடைய க்ஷேமத்தைப் பற்றிச் சந்தேகப்பட வேண்டாம். இந்தக் காரியத்தை நீர் செய்தால் மூவுலகத்திலும் என்றென்றைக்கும் புகழடைவீர். வசிஷ்டரும் மந்திரிகளும் நான் சொல்வதை அங்கீகரிப்பார்கள்” என்றார் விசுவாமித்திரர்.

முனிவர் சபைக்கு வந்தபொழுது பெரு மகிழ்ச்சியடைந்த அரசன், இதைக்கேட்டதும் சொல்லொணாத பயமும் கவலையும் உண்டாகி நடுங்கினான். எவ்வளவோ ஆசைப்பட்டுப் பெற்ற அருமைப் புத்திரனை அரக்கர்களுக்குப் பலி கொடுக்க வேண்டியதாயிற்றே, இல்லையெனில், விசுவாமித்திரருடைய பெரும் கோபத்துக்கு ஆளாக வேண்டுமே, இதற்கென்ன செய்வது என்று ஒன்றும் தோன்றாமல் திகைத்தான். கொஞ்ச நேரங்கழித்துத் திகைப்பிலிருந்து புத்தியைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு சொன்னான்.


“பதினாறு வயது பூர்த்தியாகாத ராமனுக்கு ராக்ஷசர்களோடு யுத்தம் செய்யும் தகுதியை நான் காணவில்லையே! அவனை அனுப்பச் சொல்லுகிறீரே, இது என்ன பயன் தரும்? யுத்தங்களிலுள்ள மோசடிகள் ஒன்றைப்பற்றியும் அவனுக்குத் தெரியாதே? ராக்ஷசர்கள் எப்போதும் மோச யுத்தம் தானே செய்வார்கள்? அந்த அரக்கர்களை எதிர்ப்பதற்குச் சின்னஞ் சிறுவனை அனுப்புவது சரியான யோசனையல்ல. நான் இருக்கிறேன்; என்னுடைய சதுரங்க சேனை இருக்கிறது, அதையெல்லாம் விட்டுவிட்டுக் குழந்தையைக் கேட்கிறீரே! அரக்கர்கள் எங்கே, இவன் எங்கே? இவனா அவர்களை எதிர்த்து உம்முடைய வேள்வியைக் காக்கப் போகிறான்? எனக்கு உம்முடைய எதிரிகளைப் பற்றி எல்லா விஷயமும் சொல்லுவீர். நான் உம்முடன் என் சேனையைக் கூட்டிக்கொண்டு சென்று வேண்டியதையெல்லாம் செய்வேன். அது இருக்கட்டும். அந்த அரக்கர்களைப் பற்றியும் அவர்கள் பலத்தைப் பற்றியும் விவரமாகச் சொல்லவும்” என்று பேச்சை மாற்றுவதற்காகக் கேட்டான்.


விசுவாமித்திரர் மாரீசனைப் பற்றியும் சுபாஹு வைப் பற்றியும் அவர்களுடைய எஜமானன் ராவணனைப் பற்றியும் விவரமாகச் சொல்லி ராமனை அனுப்ப வேண்டும் என்று மறுபடியும் வற்புறுத்தினார்.


“தவமிருந்து பெற்ற என் அருமை ராமனை விட்டுப் பிரிந்தால் என் உயிரே போய்விடும். வேண்டுமானால் நான் சேனையுடன் வருவேன். நீர் சொல்வதைப் பார்த்தால் என்னாலுங்கூட இந்த வேலையை முடிப்பது கடினமாக இருக்கும் போல் தோன்றுகிறது! அப்படியிருக்க என் மகனை அனுப்பவாவது! முடியாது!” என்றான்.


திடீர் என்று ஏற்பட்ட திகைப்பினால் முன்னுக்கும் பின்னுக்கும் முரணாகப் பலவிதமாகப் பேச ஆரம்பித்தான் தசரதன். அப்படி அவன் பேசி, ராமனை அனுப்ப மறுத்ததைக் கண்டு விசுவாமித்திரருக்குக் கோபம் நெய்விட்ட வேள்வித் தீ போல் பொங்கிற்று.


விசுவாமித்திரர் சொன்னார்: “முதலில் கேட்டதையெல்லாம் தருகிறேன் என்று தாராளமாகச் சொல்லிவிட்டு இப்போது அதைப் பொய்யாக்கினீர். இந்த நடவடிக்கை இக்ஷ்வாகு குலத்துக்குத் தகுந்ததல்ல. நீர் பிறந்த சிறந்த வம்சத்துக்குத் துரோகம் செய்கிறீர். இதுவே உம்முடைய முடிவாயின், நான் வந்த வழி திரும்புகிறேன். சத்தியம் தவறிப் பந்து மித்திரர்களுடன் சுகமாக இருப்பீராக.”


முனிவருடைய கோபத்தால் பூதேவி நடுங்கினாள். தேவர்களும் பயந்தார்கள். வசிஷ்டர் அரசனை நோக்கி மெதுவாகச் சொன்னார்.


“தருமமே மானிட உருவம் எடுத்தது போல் இக்ஷ்வாகு வம்சத்தில் உதித்துப் புகழும் திருவும் பெற்ற நீர் சத்தியத்தினின்று பிறழ்தல் தகாது. உம்முடைய வாயினின்று ‘செய்கிறேன்’ என்று ஒரு தடவை வார்த்தை வெளியான பின் அதைப் பிறகு செய்யாமலிருத்தல் தகாது. உம்முடைய தான தரும் வேள்விகளையெல்லாம் ஒரேயடியாக அது அழித்து விடும். ராமனை முனிவருடன் அனுப்புவீராக, லக்ஷ்மணனையும் சேர்த்து அனுப்புவீராக. யுத்தப் பயிற்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். குசிக புத்திரருடைய பாதுகாப்பிலுள்ள உம் குமாரர்களை ராக்ஷசர்கள் தீண்ட முடியாது. அமிருதத்தை அக்னி சக்கரம் காப்பதுபோல் இவர் ராமனைக் காப்பார். இவருடைய பூரண மகிமை உமக்குத் தெரியவில்லை. தவமே உடல் கொண்டு நிற்கிறவர். வீரர்களுள் வீரர். அறிவுக்கும் தவத்துக்கும் இவரே எல்லை. இவருக்குத் தெரியாத அஸ்திரமில்லை. அந்த விஷயத்தில் மூன்று உலகங்களிலும் இவருக்குச் சமானமானவன் ஒருவன் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை. இவர் அரசனாக இருந்த காலத்தில் எல்லா அஸ்திர வித்தைகளையும் வரமாகப் பெற்றிருக்கிறார். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் இவர் அறியாதது இந்த உலகத்தில் ஒன்றுமில்லை. இத்தகைய மகா வீரமும் தேஜசும் பொருந்திய விசுவாமித்திர முனிவருடன் உம் குமாரன் ராமனை அனுப்புவதைப் பற்றிச் சந்தேகமே வேண்டாம். முனிவருடைய காரியத்தை முனிவரே பார்த்துக் கொள்ளுவதற்கு வேண்டிய சக்தி அவருக்கு உண்டு. உம்முடைய குமாரனுடைய நன்மைக்காகவே அல்லவோ அவர் இங்கே வந்து உம்மைக் கேட்கிறார்! தயங்காமல் உம் குமாரனை அவர் கேட்கிறபடி அவருடன் அனுப்புவீராக.”


இவ்வாறு மகாஞானி வசிஷ்டர் சொன்னதைக் கேட்டதும் அரசனுடைய புத்தி தெளிந்தது. ராம லக்ஷ்மணர்கள் இருவரையும் அனுப்புவதென்று நிச்சயம் செய்தான்.


ராம லக்ஷ்மணர்கள் முனிவர் முன் வந்து நின்றார்கள். அரசனும் தாய்மார்களும் வசிஷ்டரும் மங்கள மந்திரம் சொல்லியான பின் உச்சி மோந்து "முனிவருடன் செல்லுங்கள்" என்று வழி அனுப்பி வைத்தார்கள்.


அச்சமயம் சுகமாகக் காற்று வீசிற்று. ஆகாயத்தினின்று பூமாரி பொழிந்தது. அசரீரி ஒலித்தது. கையில் வில் பிடித்து இரு யுவர்களும் முனிவருடன் கம்பீரமாகச் சென்றார்கள்.


ரிஷியுலகத்துக்கே சிகரமாக விளங்கிய விசுவாமித்திரரும், அழகே தேகமெடுத்தாற் போன்ற ராஜகுமாரர்களும் தசரதனிடம் விடைபெற்றுக் கொண்டு போகும் மங்களக் காட்சியை வால்மீகியும் கம்பரும் மிகவும் அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள்.


தம்முடைய தவ வலிமையால் ஒரு புது உலகத்தையே சிருஷ்டிக்கும் சக்தி வாய்ந்த உபாத்தியாயர்; அரக்கர்களை ஒழித்துக் கட்டவே அவதரித்தவர்கள் மாணவர்கள் - இத்தகைய குரு சிஷ்யச் சேர்க்கையின் அழகை வால்மீகி முனிவர் கம்பீர நாதம் பொருந்திய எட்டுச் சுலோகங்களில் வர்ணிக்கிறார். வெற்றி வாள் இடுப்பில் தொங்க, குன்றைப் போன்ற தோள்களின் மேல் ஒரு பக்கம் வில்லும் ஒரு பக்கம் தூணியும், மத்தியில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் தலையுமாக முத்தலை நாகங்கள் படமெடுத்துச் செல்வது போல் ராஜகுமாரர்கள் காட்சி தந்தார்கள்.


கம்பர் தமக்கே உரிய பாணியில் பாடுகிறார்:


வென்றி வாள்புடை விசித்து மெய்ம்மைபோல் 

என்றும் தேய்வுறாத் தூணி யாத்திரு

குன்று போன்றுயர் தோளிற் கொற்றவில்

ஒன்று தாங்கினான் உலகந் தாங்கினான்.


அன்ன தம்பியும் தானும் ஐயனாம்

மன்னன் இன்னுயிர் வழிக்கொண் டாலெனச் 

சொன்ன மாதவன் தொடர்ந்த சாயைபோல் 

பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்.



கருத்துரையிடுக (0)
புதியது பழையவை