அன்றிரவு சரயூ நதிக்கரையில் முனிவரும் ராஜ குமாரர்களும் தரையில் படுத்துத் தூங்கினார்கள். படுப்பதற்கு முன் இரண்டு மந்திரங்களை விசுவாமித்திரர் உபதேசித்தார். 'பலம்' 'அதிபலம்' என்ற இரண்டு ரகசிய மந்திரங்களை உபதேசம் செய்துவிட்டு, “இந்த மந்திரங்கள் ஜபித்தவனை எந்தத் தீங்கும் அண்டாது” என்று சொல்லி ராஜகுமாரர்களை ஆசீர்வதித்தார்.
அடுத்த நாள் காலை எழுந்து புறப்பட்டுப் போய் அங்க தேசத்தில் காமாசிரமத்தை அடைந்தார்கள். அங்கே தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகளுக்கு ராம லக்ஷ்மணர்களை அறிமுகம் செய்துவிட்டு, காமாசிரமக் கதையைச் சொன்னார்:
“இதுதான் சங்கர பகவான் நீண்ட காலம் தவம் செய்த இடம். மதியற்ற மன்மதன் சங்கரன் மேல் பாணம் விட்டு, பகவானுடைய கோபத்துக்கு ஆளாகி இந்த இடத்தில் எரிக்கப்பட்டான். அதனால் இந்த இடம் காமாசிரமம் என்று பெயர் அடைந்தது.”
அன்று இரவு காமாசிரம ரிஷிகளுடைய அதிதிகளாக முனிவரும் ராஜகுமாரர்களும் தங்கினார்கள்.
காலையில் நித்திய கர்மங்களை முடித்துவிட்டுப் புறப்பட்டார்கள். கங்கைக் கரையை அடைந்ததும் அவ்விடத்திலுள்ள ரிஷிகள் அமைத்துத் தந்த ஓர் ஓடத்தில் ஏறிக்கொண்டு கங்கையைத் தாண்டிச் சென்றார்கள்.
ஆற்றின் நடுவில் ஓடம் செல்லும்போது ஒரு விதப் பெருஞ்சத்தம் கேட்டு ராஜகுமாரர்கள் அது என்ன என்று கேட்டார்கள். அது சரயூ நதியானது கங்கையில் பாய்ந்து சேருவதினால் உண்டாகும் ஓசையென்று விளக்கினார். அவ்விடத்தில் ராஜகுமாரர்கள் இரு புண்ணிய நதிகளையும் தியானித்து வணக்கம் செலுத்தினார்கள். பரம்பொருளைத் தியானிக்க ஆறும் மலையும் மரமும் மேகமும் பயன்படும்; எந்தப் பொருளும் பயன்படும். ஆயினும் தலைமுறை தலைமுறையாக மக்கள் பக்தி செலுத்தின நதியும் மூர்த்தியும் கோயிலும் குளமும் நம்முடைய உள்ளத்தை எளிதில் கடவுள் வழியில் செல்லச் செய்யும்.
கங்கையைத் தாண்டி நடந்து சென்றார்கள். வழி ஒரு பயங்கரமான காட்டுக்குள் சென்றது. மரங்களும் புதர்களும் அடர்ந்து நுழைந்து போவதே மிகக் கஷ்டமாக இருந்தது. துஷ்ட மிருகங்களின் சத்தம் பயங்கரமாக இருந்தது.
ராம லக்ஷ்மணர்களுக்கு முனிவர் சொன்னார்: “இதுவே தாடகாவனம். இப்பொழுது பயங்கரக் காடாக இருக்கும் இந்த இடம் பூர்வத்தில் மிகச் செழிப்பும் செல்வமும் நிறைந்த தேசமாக இருந்தது. ஒரு காலத்தில் இந்திரன் விருத்திராசுரனைக் கொன்று பிரும்மஹத்தி தோஷம் அடைந்தான். அதனால் தகாதவனாகி மிக வருந்தினான். தேவராஜனாகிய இந்திரனுடைய பாபத்தைப் போக்க தேவர்கள் எல்லாரும் சேர்ந்து மிகவும் சிரமப்பட்டார்கள். புண்ணிய நதிகளிலிருந்து பெரிய பாத்திரங்களில் ஜலம் கொண்டு வந்து அவனை ஸ்நானம் செய்வித்து மந்திரங்களினால் பரிசுத்தப் படுத்தினார்கள். அந்த ஸ்நான நீரினால் அவனிடம் தங்கியிருந்த மாசு கழுவப்பட்டுப் பூமியில் சேர்ந்ததும் பூமியின் சக்தியால் அது ஜீரணிக்கப்பட்டு உரமாகி அந்தப் பிரதேசம் மிகச் செழிப்படைந்தது.”
எத்தகைய அழுகிப் போன, புழுத்துப் போன பொருளும் - பிரேதம், துர்க்கந்த மலம் உட்பட - பூமியில் புதைத்து விட்டால் மண்ணோடு மண்ணாகிப் போய்ப் பயன்பட்டு விடுகிறது. அதுவே புல்லும் செடியும் பழமும் கிழங்கும் அமிருதமும் போன்ற உணவுமாகிறது. இதுவே பூதேவியின் அருட்சக்தி.
“வெகு காலம் வரையில் இங்கே ஜனங்கள் சுகமாக இருந்தார்கள். பிறகு சுந்தன் என்கிற யக்ஷனுடைய மனைவியான தாடகையும் அவள் மகன் மாரீசனும் இந்தத் தேசத்தை நாசம் செய்து கோர வனமாக்கி விட்டார்கள். அவர்கள் இன்னும் இந்த வனத்தில் இருந்து கொண்டு வருகிறார்கள். உனக்கு மங்களம்.” “பத்ரம் தே!” - அதாவது “உனக்கு மங்களம்” என்று ராமாயணத்தில் அடிக்கடி வரும். இது ஆசீர்வாத மொழி. பயம் அல்லது துக்கம் தரக்கூடிய விஷயத்தைச் சொல்லும்போது அன்புடன் இவ்விதம் காப்பு மொழியைச் சேர்த்துச் சொல்வது மரபு.
“அந்தத் தாடகைக்குப் பயந்து இங்கே யாரும் வருவதில்லை. அவள் ஆயிரம் யானை பலம் கொண்டவள். அவளுடைய உபத்திரவத்தைப் போக்கவே உன்னை அழைத்து வந்தேன். ரிஷிகளைத் தொந்தரவு செய்யும் இந்த அரக்கி உன்னால் கொல்லப்படுவாள் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
தாடகையைப் பற்றி விசுவாமித்திரர் சொன்னதைக் கேட்ட ராமன், “சுவாமி! தாடகை யக்ஷ ஸ்திரீ என்று சொன்னீர். யக்ஷர்களைப் பற்றி அவர்கள் இவ்வளவு தேகபலம் கொண்டவர்கள் என்று நான் கேள்விப் படவில்லையே? - யக்ஷர்களுக்குத் தேகபலம் ராக்ஷசர்களைப் போல் இல்லை என்று நான் இதுவரை எண்ணி வந்தேன். அதிலும் ஸ்திரீ ஒருத்திக்கு எவ்வாறு இத்தகைய பலம் உண்டாயிற்று?” என்று கேட்டான்.
“நீ கேட்கும் கேள்வி பொருத்தமானதே. இதற்குக் காரணம் பிதாமகர் கொடுத்த வரமாகும். சுகேது என்ற ஒரு யக்ஷன் இருந்தான். அவனுக்குச் சந்தானம் உண்டாகாமல் தவமிருந்து பிரம்மா அவனுடைய நன்னடத்தையையும் தவத்தையும் கண்டு திருப்தியடைந்து வரம் தந்தார். ‘அழகான ஒரு பெண் குழந்தை உனக்கு உண்டாவாள். அவள் வளர்ந்து ஆயிரம் யானைகளின் தேகபலம் அடைவாள். ஆனால் உனக்கு ஆண் சந்தானம் உண்டாகாது' என்று வரம் தந்தார்.
அப்படியே அவனுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள்தான் தாடகை. மிக சௌந்தரிய ரூபவதியான அவளைச் சுந்தன் என்ற யக்ஷனுக்குக் கொடுத்து விவாகமாயிற்று. அவர்களுக்கு மாரீசன் பிறந்தான்.
ஒரு சமயம் அகஸ்தியருடைய கோபத்தினால் சாபம் அடைந்து சுந்தன் மரணமடைந்தான். இதனால் சுந்தனுடைய மனைவி தாடகையும் மகன் மாரீசனும் இருவரும் ரோஷம் கொண்டு, அகஸ்தியரை எதிர்த்தார்கள். தேக பலத்தைக் கொண்டு எதிர்க்க வந்த அவர்களை அகஸ்திய முனிவர் சாபமிட்டார். அதன் பயனாக அவர்கள் நரமாமிசம் தின்னும் ராக்ஷச பிராணிகளாகி விட்டார்கள். தாடகையின் அழகு தீர்ந்து போய்க் கோரமான ராக்ஷச உருவமடைந்து விட்டாள்.
தாடகையும் மாரீசனும் அகஸ்தியருடைய பிரதேசத்தில் இருக்கும் மக்களை அது முதற்கொண்டு இடை விடாமல் இம்சித்து வருகிறார்கள். பெண்ணைக் கொல்லுவது க்ஷத்திரிய தருமத்துக்கு விரோதம் என்று நீ தயங்க வேண்டாம். இவளுடைய அக்கிரமங்களைப் பொறுக்க முடியாது. மிகக் குரூரமான அரக்கி. இத்தகையோரை அவர்கள் ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தண்டிப்பது அரசர்களுடைய கடமை. அனைவருடைய க்ஷேமத்திற்காகக் காட்டு மிருகங்களைக் கொல்லுவதுபோல் இந்த அரக்கியைக் கொல்லுவது நியாயமேயாகும். ராஜ்ய பாரம் வகித்தவர்களுக்கு இது கடமையாகிறது. அதர்மத்தைச் செய்த பல மானிட ஸ்திரீகளுக்கும் இவ்வாறு மரணம் ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் நீ தயங்க வேண்டியதில்லை” என்றார்.
எல்லாத் தேசங்களிலும் பெண்களைத் தண்டிக்க வேண்டி நேரிட்டாலும் மரண தண்டனை விதிக்கக் கூடாது என்கிற பழைய வழக்கம் உண்டு. ஆனால் எந்தப் பொது விதிக்கும் விலக்குகள் இருந்தே தீரும். இல்லாவிடில் பொது நன்மை நிலைபெறாது.
“குருவே, சபையில் எங்கள் தந்தை தாங்கள் சொல்லும்படி நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறார். உங்களுடைய சொற்படி மக்கள் க்ஷேமத்துக்காக இந்தத் தாடகையைக் கொல்வேன்” என்று சொல்லிக் கோதண்டத்தை வளைத்து நாண் ஏற்றித் தோள்வரை நாணை இழுத்து ஒலி எழுப்பினான். அந்த ஒலி வனம் முழுதும் நிரம்பி, எட்டுத் திசைகளிலிருந்தும் எதிரொலி கிளம்பிற்று. வனத்திலுள்ள பிராணிகள் அனைத்தும் நடுங்கின.
தாடகை இந்தச் சப்தத்தைக் கேட்டு யாருக்கு இவ்வளவு தைரியம் என்று திகைத்தாள். பிறகு சப்தம் வந்த இடத்தைத் தேடி மகா கோபத்தோடு ராமன்மேல் பாய்ந்தாள்.
முதலில் கை கால்களை வெட்டிவிட்டு அங்கவீனம் செய்தால் போதும் என்று ராமன் எண்ணி அவ்விதம் செய்யப் பார்த்தான். ஆனால் தாடகையின் பாய்ச்சல் அதிகரித்தது. இங்கு மங்கும் சஞ்சரித்துக் கல்மாரி பொழிந்தாள். ராமனும் லக்ஷ்மணனும் அம்புகளைக் கொண்டு கல்மாரியைத் தடுத்து வந்தார்கள்.
யுத்தம் நடந்து கொண்டே இருந்தது. “இவ்விதம் இது முடியாது, இரக்கம் காட்ட வேண்டாம்! மாலையாகிவிட்டது; இருட்டின பின் அரக்கியின் பலம் அதிகமாகப் பெருகும், தாமதம் வேண்டாம்” என்று முனிவர் எச்சரித்தார்.
அதன்மேல் அரக்கியைக் கொல்லுவதே சரி என்று ஒரு கொல்லும் அம்பை எய்தான். அது அரக்கியின் மார்பைத் துளைத்தது. அவளுடைய கோரமான பெருந்தேகம் உயிரற்றுப் பூமியில் வீழ்ந்தது.
தேவர்கள் ஆரவாரித்தார்கள். முனிவரும் அடங்கா மகிழ்ச்சியடைந்து சக்கரவர்த்தித் திருமகனை உச்சிமோந்து ஆசீர்வதித்தார்.
தாடகை இறந்து வீழ்ந்ததும் அந்த வனம் உடனே சாபம் நீங்கினது போல் மிக ரமணீயமாய் விளங்கிற்று. இரவு அரச குமாரர்கள் அங்கேயே கழித்தார்கள். அதிகாலையில் எழுந்து அனுஷ்டானங்கள் முடித்துக் கொண்டு மூவரும் அங்கிருந்து விசுவாமித்திரருடைய ஆசிரமத்துக்குச் சென்றார்கள்.